சிக்கிமுக்கி 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு அபிநயாவின் கையை பற்றினான். "தனியா பேசலாம் வா.." என்றான்.

"நான்‌ வரல.." என்று சுவரை வெறித்தாள் அவள்.

"ப்ளீஸ்.. இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் எனக்கு வாய்ப்பு கொடு.." என்றவனை சில நொடிகள் கவனித்தவள் பின்னர் வாசலை நோக்கி நடந்தாள்.

மீனாவும் சுவேதாவும் அன்புவை முறைத்தனர். "அவளை ஏதாவது மன கஷ்டப்படுத்தி வச்சா அப்புறம் நான் உன்னை கை காலை கட்டி கொண்டு போய் டிரெயின் ட்ராக்ல போட்டுடுவேன்.." என்று பொய்யாய் எச்சரித்தாள் மீனா.

அன்பு அபிநயாவை தொடர்ந்து சென்ற பிறகு மீனாவிடம் வந்த குணா "இவன் கை காலை கூட கட்டலாம். ஆனா எப்படி நீ ஒருத்தியும் தூக்கிட்டு போய் இவனை டிராக்ல போடுவ.?" என்றான் சந்தேகமாக.

"நான் வேணா முதல்ல உன்னை கொண்டு போய் டிரெயின் முன்னாடி உருட்டி விட்டுட்டு வரட்டா.?" புருவம் உயர்த்தி கேட்டாள் மீனா‌. வேண்டாமென்று தலையசைத்தவன் "இன்னைக்கு இவன் சாப்பிட வருவான்னு நம்பிக்கை இல்ல. நானாவது கிளம்பறேன்.." என்றுவிட்டு உணவு உண்பதற்காக விடுதிக்கு கிளம்பினான்.

மொட்டை மாடியில் நல்ல வெயிலில் வந்து நின்றாள் அபிநயா. அவளை தொடர்ந்து வந்த அன்பு "மரத்தடிக்கு போகலாமா.?" என்றான்.

அபிநயா அவன் பக்கம் திரும்பினாள். தோளை விட்டு நழுவ இருந்த துப்பட்டாவை சரி செய்துக் கொண்டாள்.

"இங்கே பேச கூடாதுன்னு சட்டம் இருக்கா.?" என்று கேட்டவளை வருத்தமாக பார்த்தவன் "பேசலாம்.." என்றான் எச்சிலை விழுங்கியபடி.

அபிநயா அவனை தாண்டி இருந்த வானத்தை வெறித்தாள். "சொல்லு.." என்றாள்.

"அஞ்சனாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதும் எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சி. அவளோட ஆக்ஸிடென்ட்க்கு முழு காரணமும் நான்தான்னு மனசுல ஒரு குற்ற உணர்வு. என்னை என்னால திட்டிக்க முடியல. திட்டிக்க வழியும் தெரியல. அதனாலதான் அந்த நேரத்துல உன்னை திட்டிட்டேன். சாரி. உன்னை திட்டியதுக்கு பிறகும் என்னால நார்மலா இருக்க முடியல. உன்னை திட்டியதும் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சி. அந்த குற்ற உணர்வால மன்னிப்பு கேட்க கூட முடியல. அப்படியே விலகி இருந்துட்டேன். அன்னைக்கு நான் உன்னை திட்டியது உன்னை இல்ல. என்னை. என் மறு பாதியா உன்னை நினைச்சதாலதான் திட்டினேன். சாரி.." என்றான்.‌

அபிநயா தன் உணர்வுகளை வெளிக்காட்ட கூடாதென்று வீராப்பாக இருந்தாள்.

அவளின் இறுகிய முகம் அவனுக்கு வேதனையையே தந்தது. "என் மேல உனக்கு கோபம் இருக்கும். உன் கோபம் தீரும் வரை என்னை அடிச்சிக்க.. திட்டிக்க.. ஆனா மறுபடியும் என்னோடு‌ பழையபடி பேசு.." என்றான்.

அபிநயா பெருமூச்சி விட்டாள். அவளின் கழுத்தில் உருவான வியர்வை ஓடி வந்து சுடிதார் டாப்பின் ஓரங்களை நனைத்தது.

"நீ என்னை ஏமாத்திடுவ அன்பு. எனக்கு நீ வேணாம்.." என்றாள் மென்மையான குரலில்.

"நான் ஏன் ஏமாத்த போறேன் அபி.? அன்னைக்கு திட்டியதுக்குதான் சாரி கேட்கறேனே.?" என்றவனை பார்த்து கசப்பாக சிரித்தவள் "நானும் கூட சாரி கேட்கறேன்.. என்னை விட்டுடு.." என்றாள்.

"ப்ளீஸ் அபி.." கெஞ்சியவனை நிமிர்ந்து பார்த்தாள். சூரிய ஒளி அவனின் முகத்தில் நேராக விழுந்துக் கொண்டிருந்தது. நெற்றி வியர்வையில் ஒட்டிக் கொண்டிருந்தன கற்றை முடிகள். அவனின் மூக்கின் முனையில் சூரிய ஒளி பிரதிபலிப்பது போல இருந்தது அவளுக்கு. அடிக்கடி தன் உதட்டை நாக்கால் தடவிக் கொண்டிருந்தான். தாகமாக இருக்கிறானோ என்று சந்தேகித்தாள்.

"ஒரு பொறுக்கியை, ஒரு ஏமாத்துக்காரனை, ஒரு சேடிஸ்டை என்னால லவ் பண்ணி ஏமாற முடியாது.." அவனின் கண்களை பார்த்தபடி சொன்னாள் அபிநயா.

"நா.. நான் ஏமாத்துவேனா.? நான் சேடிஸ்டா.?" என்று குழம்பியவனிடம் "சாரின்னு சுலபமா முடிச்சிட்ட நீ.. அன்னைக்கு உன்னை திட்டிக்க முடியலன்னு என்னை திட்டிட்ட.‌ இதை நான் ஏத்துக்கறேன். ஆனா நான் எப்படி உன்னை லவ் பண்ண முடியும்.? நானும் அஞ்சனாவும் ஒன்னு. அவளோட கேரக்டரை பத்தி பேச எனக்கு தகுதி கிடையாது. அதை நான் முழுசா ஏத்துக்கறேன். ஆனா நான் ஏன் உன்னை மறுபடியும் லவ் பண்ணனும்.? விகேஷை போல கேரக்டரை கொண்ட உன்னை நான் ஏன் திரும்பவும் லவ் பண்ணனும்.?" என்றாள்.

"விகேஷ்.."

"நீதானே சொன்ன‌ நீயும் விகேஷும் ஒன்னுன்னு. ஆமா நீயும் அவனும் ஒன்னேதான். நான்தான் உன்னை முதல்ல நம்பிட்டேன். ஆனா மறுபடியும் ஏன் நம்பணும்.? முதல்ல சின்ன ஒரு விசயத்துக்காக சண்டை போட்டவன் மறுபடியும் பிரச்சனை வந்தாலும் அதே போலதான் சண்டை போட்டு பிரிஞ்சி போவ. லைப்ங்கறது ஒரு நம்பிக்கை, நாளைக்கு சாக மாட்டோம்ன்னு நம்புற அளவுக்கு. காதல்ங்கறதும் அப்படிதான். நாளைக்கும் சேர்ந்தே வாழ்வோம்ன்னு நம்பிக்கை வரணும். எப்ப எந்த பிரச்சனை வந்து நம்மை பிரிச்சி வைக்குமோன்னு பயப்படுறதுக்கு ஏன் லவ் பண்ணி நேரத்தை வீணடிக்கணும்.? நாளைக்கு உன் வீட்டுல என்னை ஏத்துக்க மாட்டாங்க. என் வீட்டுல உன்னை ஏத்துக்க மாட்டாங்க. அன்னைக்கும் நீ ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லிட்டு பிரிஞ்சிடுவ. கல்யாணமே ஆன பிறகு கூட உன்னை பார்த்து எவளாவது கண்ணடிச்சா அப்பவும் நீ உன் மனசை கட்டுப்படுத்தாம என்னை விட்டுதான் பிரிஞ்சி போவ. இதுதான் நீ எனக்கு தந்த நம்பிக்கை.‌." என்றவள் "நம்ம காதல் போதும் அன்பு.. என்னாலயும் உன்னை தவிர வேற யாரையும் லவ் பண்ண முடியாதுதான். ஆனா உன்னோடவும் லவ்வுல இருக்க முடியாது. நாம இப்படியே இருந்திடலாம். இதான் நம்ம இரண்டு பேருக்குமே நல்லது.." என்றுவிட்டு அவனை தாண்டி நடந்தாள்.

படிகளின் அருகே சென்ற பிறகு அன்புவை திரும்பி பார்த்தாள். அவன் அப்படியே நின்றிருந்தான். "நீ என்னை ரொம்ப லவ் பண்ற அபி.. நானும்தான். நீ என்னை கண்ணை மூடிக்கிட்டு நம்புன‌. நான்தான் அந்த நம்பிக்கையை உடைச்சிட்டேன். நீ அந்த வலியில் இருக்கன்னு நான் புரிஞ்சிக்கறேன். உன் கோபம் தீர்ந்ததும் வந்துடு அபி.. உடனே வந்துடு. இந்த ஒரு வருசமும் உன்னை பிரிஞ்சி இருக்க நான் என்ன பாடு பட்டேன்னு எனக்குதான் தெரியும். கோபத்துல விடுற ஒரு வார்த்தை வாழ்க்கையையே அழிச்சிடும். அது உண்மைதான். ஆனா உன்னை மறக்க சொல்லி என்கிட்ட நானே போட்டுக்கிட்ட கட்டுப்பாடு என்னை இத்தனை நாளும் உயிரோடு உருக்கிடுச்சி. ரொம்ப கஷ்டம். உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டும் பார்க்கவே கூடாதுன்னு கண்ணுக்கு கட்டளை போட்டுட்டு ஓரக்கண்ணால உன் முகத்தை பார்த்து பார்த்து கண்கள் இரண்டும் வலிக்குது அபி. உன் பேரை சொல்லவே கூடாதுன்னு நாக்கை கடிச்சிட்டே இருந்தாலும் என் மூளை முழுக்க உன் பேர் மட்டும்தான் ரிப்பீட் மோட்ல கேட்டுட்டு இருக்கு. படிக்க முடியல. யாரோடும் பேச முடியல. வீட்டுல கூட நிம்மதியா தூங்க முடியல. உன்னை நினைக்கவே கூடாதுன்னு போராடியதுல நெஞ்சம் வலிக்குதுப்பா. யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுப்பது போல நானே என் லைப்பை சொதப்பி வச்சிட்டேன். சாரி.. மன்னிக்க தோணும்போது திரும்பி வா.. இல்லன்னா.." என்று கண்களை மூடியவன் இடம் வலமாக தலையசைத்தான். "நம்பிக்கை இருக்கு அபி.." என்றான்.

அபிநயாவின் இமைகளை தாண்டி வழிந்தது கண்ணீர் துளிகள். புறங்கையால் அவள் தன் கன்னத்தை துடைத்துக் கொண்ட போது அன்பு அவள் பக்கம் பார்த்தான். அபிநயா அவன் பார்ப்பதை கண்டு திரும்பி படிகளில் இறங்கினாள்.

அபிநயா வகுப்பறைக்கு வந்த போது வகுப்பறையில் யாரும் இல்லை. தன் இருக்கையில் சென்று அமர்ந்தவள் தலையை மேஜையில் சாய்த்தாள். ஒரு நிமிடம் கடந்த வேளையில் அன்பு வகுப்பறைக்குள் வந்தான். அவனது இருக்கையில் சென்று அமர்ந்தான். அபிநயாவை பார்த்தபடி தன் முன் இருந்த மேஜையில் தலை சாய்த்தான். அபிநயா அவனின் கண்களை பார்த்தாள். அவனும் அவளையே விழியசைக்காமல் பார்த்தான். நொடிகள் சென்றுக் கொண்டிருந்தன.

இருவரின் கலங்கும் விழிகளிலும் கண்ணீர் பிரதிபலிப்பில் மின்னின.

மாணவர்களின் சத்தங்கள் அவர்களின் காதுகளில் விழவேயில்லை. அவனை பார்த்துக் கொண்டிருந்தால் தனது மூளை வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது என்பது புரிந்து தன்னையே திட்டிக் கொண்டாள் அபிநயா.

மாணவர்கள் வகுப்புகள் வந்த பிறகும் மேஜையிலிருந்த தலையை நிமிர்த்தவில்லை இருவரும். அபிநயாவின் அருகே வந்து அமர்ந்த மீனா "இதை சாப்பிடு அபி.." என்று கொய்யாப்பழம் ஒன்றை நீட்டினாள்.

"நானும் என் ஸ்நாக்ஸ்ல கை வைக்கவே இல்ல. உனக்காக கொண்டு வந்தேன்.." என்று தனது தின்பண்ட பாக்ஸை நீட்டினாள் சுவேதா.

இரு தோழிகளின் பாசம் கண்டு புன்னைகைத்தாள் அபிநயா. "தேங்க்ஸ்.." என்றாள்.

அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்த குணாவின் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பினான் அன்பு. "எனக்கும் பசிக்கும்டா.." என்றான்.

"அந்த புள்ளைக்கு ஒரு கொய்யாப்பழமும் ஒரு கொத்து திராட்சையும் வயிறு நிரம்பிடும்ன்னு அவங்க பிரெண்ட்ஸ் தராங்க. உனக்கு ஒரு மரத்து கொய்யாப்பழத்தையே இல்ல உலுக்கணும்.?" என்று குணா கேட்டதும் அவர்களின் முன்னாலும் பின்னாலும் அமர்ந்திருந்த மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அன்பு குணாவின் தாடையை விட்டுவிட்டு மீண்டும் மேஜை மீது தலை சாய்த்தான். தன் பாக்கெட்டிலிருந்து அரை மூடி தேங்காயையும் இரண்டு கேரட்டையும் எடுத்து மேஜை மேல் வைத்தான் குணா. அன்பு அவனை விசித்திரமாக பார்த்தான்.

"பொம்பள புள்ளைங்கதான்டா ஸ்நேக்ஸ் இருந்தா சாப்பிடுவாங்க. நமக்கு ஏது அதெல்லாம்.? தேடி பார்க்கும்போது இதுதான் நம்ம ஹாஸ்டல் கிச்சன்ல இருந்தது‌. சரி நண்பன் சாப்பிடட்டுமேன்னு எடுத்துட்டு வந்தேன். அதுவும் சமைக்கிற அண்ணாக்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்டா.." என்றான். நேராய் எழுந்து அமர்ந்த அன்பு நண்பனின் முன்னந்தலையை கலைத்து விட்டான். கேரட்டை எடுத்து கடித்தான்.

தன் மனதில் உள்ளதை அபிநயாவிடம் சொன்னதால் அன்புவிற்கு பாரம் பாதியாய் குறைந்து போனது. ஆனால் அபிநயாவிற்குதான் மன பாரம் இரு மடங்காக கூடியது. மாலையில் தோழிகள் இருவரும் விசாரித்தபோது அன்பு சொன்னதை மேலோட்டமாக இருவரிடம் சொன்னாள்.

அபிநயாவை தன்னோடு அணைத்துக் கொண்டாள் சுவேதா. "பொறுமையா யோசி அபி. ஒன்னும் அவசரம் இல்ல. நாளைக்குன்னு இல்ல இன்னும் நாலு வருசம் கழிச்சி பதில் சொல்லு. ஏனா அவன் உன் காதலன். விதியே அவன்தான்னு இருந்தா நாற்பது வருசம் கழிச்சி சொன்னா கூட போதும்.." என்றாள்.

அபிநயா சுவேதாவிடம் என்ன நேரத்தில் சரியென தலையசைத்தாளோ நான்கு வருடங்கள் கழிந்த பிறகும் கூட அன்புவிடம் மறுப்பாகவே தலையசைத்துக் கொண்டிருந்தாள்.

"என்னை லவ் பண்றியா இல்லையா.? உண்மையை சொல்லு. லாஸ்ட் டைம்மா கேட்கிறேன்.." என்றான் அன்பு. அவசரத்தில் இருந்தவனிடம் இல்லையென்று தலையசைத்தாள் அபிநயா.

"டேய் மாப்பிள்ளை சீக்கிரம் வாடா.. முகூர்த்த மேடைக்கு கூப்பிடுறாங்க.." என்று அந்த அறையின் வாசலில் வந்து நின்று கத்தினான் குணா‌.

அபிநயாவின் பக்கம் திரும்பிய அன்பு கோபத்தோடு "ஐ ஹேட் யூ.." என்றான். பின்னர் வெள்ளை வேட்டியை தூக்கி பிடித்துக் கொண்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

அபிநயா திரும்பினாள். அவளின் தோழிகள் மூவரும் அவளை பார்த்து கண்ணடித்தனர். அவர்களை பார்த்து சிரித்தவள் நிலைக்கண்ணாடியை பார்த்தாள். பட்டு புடவை தரையோடு தவழ்ந்தது. தலையில் இருந்த பூக்கள் அவளின் முகத்தை போலவே புன்னகைத்தன.

அதுக்குள்ள கிளைமேக்ஸ் வந்துடுச்சின்னு நினைக்காதிங்க நட்புக்களே. விட்ட இடத்துல இருந்து இன்னும் சீன்ஸ் நிறைய இருக்கு.😜

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN