சிக்கிமுக்கி 61

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயாவிடம் அன்பு தன் மனதிலிருந்ததை சொல்லிய பிறகு அவன் தன் நம்பிக்கையை கை விடவில்லை. அவள் நிச்சயம் ஒருநாள் தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாள் என காத்திருந்தான்.

தினம் கல்லூரி சென்றான். அபிநயாவை ரகசியமாக ரசித்தான். அவள் நேரில் எதிர்ப்படும் வேளையில் அவளை பார்த்து புன்னகைத்தான். அபிநயா முறைத்து விட்டு நகர்ந்தாலும் அவளை பார்த்து புன்னகைப்பதை நிறுத்தவில்லை அவன்.

அவனாக அழைத்து பல முறை பேசினான். அவளோடு புதிதாக பழக முயன்றான். அபிநயா சில நேரங்களில் கோபத்தில் திட்டினாள். சில நேரங்களில் எரிந்து விழுந்தாள். அவள் திட்டுவது எல்லாம் அவனுக்கு காமெடி போல தோன்றியதோ என்னவோ மீண்டும் வந்து பேசுவதை நிறுத்தவேயில்லை.

மாதங்கள் சில கடந்தன. அபிநயாவும் அன்புவும் கல்லூரி மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தார்கள்.

அபிநயாவின் மாற்றம் வீட்டிலிருந்தவர்களுக்கு புதிதாக இருந்தது. ஆனால் அனைவருக்கும் பிடித்திருந்தது. அன்பு தன்னோடு பேச ஆரம்பித்த பிறகு அபிநயாவின் முகத்தில் மகிழ்ச்சி குறையவில்லை. முன்பை போல சோகமாக வானம் பார்க்கவில்லை அவள். அறையில் அடைந்துக் கிடக்கவில்லை. அனைவரிடமும் பேசும்போது அவளின் குரலில் கலகலப்பு கூடியிருந்தது.

தீபக் சந்தனக்கொடிகாலில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தான். அந்த கல்லூரியும் அவனுக்கு பிடித்திருந்தது.

அன்புவின் அப்பா மகனுக்காக புது இரு சக்கர வாகனம் வாங்கி வீட்டின் ஒரு ஓரத்தில் நிறுத்தினார். மகன் பெரியவனாகி விட்ட உணர்வு அவருக்கு. அவர்கள் மகனுக்கு வாகனம் வாங்கியது வினோத்திற்கு கண்களை உறுத்தியது. அவரும் தன் மகளுக்காக ஸ்கூட்டி ஒன்றை வாங்கி வாசலிலேயே நிறுத்தி வைத்தார். ஆனால் அவருக்கோ தன் மகள் குழந்தையாக உள்ளாள் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது.

சஞ்சய் வீட்டில் சுவேதாவை பற்றி பேசினார்கள். சுவேதா வீட்டோடு கலந்து பேசி இருவரும் வேலைக்கு சென்ற பிறகு திருமணம் பற்றி பேசலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் அப்போதும் கூட சஞ்சய்யும் சுவேதாவும் தாங்கள் இருவரும் காதலிப்பதாக வீட்டில் சொல்லவில்லை.

அஞ்சனா அவர்கள் ஊரிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்தாள். தினம் தூங்கி எழவே சோம்பல்பட்டுக் கொண்டிருந்தவளை பன்னீர்தான் கல்லூரிக்கு விரட்டிக் கொண்டிருந்தான்.

அபிநயாவின் விடுதி அறை ஜன்னல் இரவில் கூட திறந்தே இருந்தது. அன்புவின் போனில் அபிநயாவின் புகைப்படங்கள் எக்கச்சக்கமாக சேமிக்கப்பட்டது.

குணாவும் மீனாவும் கண்களால் பேசுவதில் இருந்து முன்னேறி இப்போது கைகளை கோர்த்துக் கொண்டு நடக்கும் அளவுக்கு நெருங்கியிருந்தனர்.

ஜீவா மட்டும் கொஞ்சமும் மாறாமல் சீனியர் என்றபடி தினமும் அபிநயாவை சுற்றினான். அவளை தன் வீட்டில் இருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். அவனுக்கு தத்து அக்காவாகவே மாறிவிட்டாள் அபிநயா.

மூன்றாம் வருடம் கல்லூரி வாழ்க்கை இனிப்பாகதான் சென்றது. ஆனால் பாடம்தான் அனைவருக்கும் வேலை தந்தது. கவனமெடுத்து படிக்கும் கட்டாயம் இருந்தது. குரூப் ஸ்டடி என்ற பெயரில் அபிநயாவின் தோழியர் வட்டத்தில் இணைந்து அமர்ந்து படித்தனர் அன்புவும் குணாவும்.

அபிநயாவும் அதுதான் சாக்கென்று தன் சந்தேகம் அனைத்தையும் அன்புவிடம் சாடையாக கேட்டு தெரிந்துக் கொண்டாள்.

அன்றும் கூட அப்படித்தான் அனைவரும் தங்கள் வகுப்பறையின் முன்னால் இருந்த வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

"இந்த கேள்வியை எப்படி சிம்பிளா படிக்கறதுன்னு அவன்கிட்ட கேளு.." என்று புத்தகத்தை சுவேதாவிடம் நீட்டினாள் அபிநயா.

சுவேதா புத்தகத்தை அன்புவிடம் தந்தாள். அவன் எப்படி சொல்லி தர போகிறான் என்ற ஆவலில் சுற்றி இருந்த அனைவரும் அவனையே பார்த்தனர்‌.

"எனக்கும் இதே கேள்விதான் சந்தேகம் அன்பு.." என்றான் குணா.

"சொல்லி தரேன்டா.." என்ற அன்பு அவர்களுக்கு புரியும்படி பதிலை சொல்லி தந்தான். அவன் சொன்னதை அபிநயாவும் மற்றவர்களும் தங்களது நோட்டுகளில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அடுத்த பாடவேளை வரும் நேரத்தில் புத்தகத்தை அபிநயாவிடம் நேராக நீட்டினான் அன்பு. அபிநயா அவனை பார்த்து உதட்டை சுழித்து காட்டிவிட்டு புத்தகத்தை பிடுங்கி கொண்டாள். மாலையில் விடுதி வந்து அவள் பிரித்து பார்த்த போது புத்தகத்தில் கேள்வி இருந்த பக்கத்தில் 'நேசத்தின் பதிலை தா' என்று அன்பு எழுதியிருந்ததை அறிந்தாள்.

"சரியான சில்லறை பையன்.." என்று முணுமுணுத்தவள் அவன் எழுதியதை ஒயிட்னரை கொண்டு அழித்தாள்.

"ஏன் சீனியர் அன்பு அண்ணாவை அலைய விடுறிங்க.?'' என்று மறுநாள் கல்லூரியில் மரத்தடி ஒன்றின் கீழ் நின்று கேட்டான் ஜீவா.

"ஏனா.? என் மனசுல உண்டான காயம் ஆற வேண்டாமா.? அவன் கேட்ட கேள்வி அத்தனையுமே தப்பானது. எத்தனை முறை டிரை பண்ணாலும் அதையெல்லாம் என்னால மறக்க முடியல. கொஞ்சம் வருசம் போகட்டும்.." என்றாள்.

"உங்க அப்பா உங்களை திட்டியதே இல்லையா.?" ஜீவா வாய் நிற்காமல் கேட்கவும் அவனை முறைத்தாள். "சாரி சீனியர். சும்மா சந்தேகம்ன்னுதான் கேட்டேன். லவ்வர் உங்க பேரண்ட்ஸ்க்கு ஈக்வெல் கிடையாதுதான். ஆனா நீங்க முயற்சி செஞ்சா அவரை மன்னிக்கலாம் இல்லையா.? இன்னைக்கு ஒரு சண்டை வந்ததும் இப்படி முறைக்கறவங்க நாளைக்கு ஒரு வேளை கல்யாணம் ஆன பிறகு சண்டை வந்தா என்ன பண்ணுவிங்க.? தூக்கி போட்டு மிதிச்சிட்டு மறுநாளே பேச ஆரம்பிக்க மாட்டிங்களா.?" என்றவன் "நீங்க எப்படியோ எனக்கு வர போறவ அப்படிதான் இருக்கணும். எவ்வளவு சண்டை வந்தாலும் உடனே பேசணும்.." என்றான் கனவுகளோடு.

அவனின் தலையில் கொட்டினாள் அபிநயா. தலையை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவனிடம் "கற்பனைக்கும் ரியாலிட்டிக்கும் இடையில நிறைய வித்தியாசம் இருக்கு. அதெல்லாம் ஏணி வச்சா கூட எட்டாது. பேன்டசியில் வாழ்வதா கற்பனை பண்ணிட்டு இருக்காத. பிடிக்காதவங்க திட்டுற வார்த்தைகளை விட பிடிச்சவங்க திட்டுற வார்த்தைகள்தான் மனசுல அதிக காயத்தை தரும். நான் அஞ்சுவோட கேரக்டரை ஜட்ச் பண்றதா சொல்லிட்டு அவன் என் கேரக்டரை ரொம்ப தப்பா ஜட்ச் பண்ணிட்டான். இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது. நெஞ்சுக்குள்ள எரியற நெருப்பை அணைக்கறது அவ்வளவு சுலபம் கிடையாது.." என்றவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.

அபிநயா ஜீவாவை விட்டு நகர்ந்ததும் அவனிடம் ஓடி வந்தான் அன்பு. "என்னடா சொன்னா.?" என்றான்.

"ஏன் அண்ணா அவங்க மனசை இப்படி உடைச்சிங்க.?" என்று அன்புவிடம் கேட்டான் குணா.

"அடேய்.. கொஞ்சம் முன்னாடி வரைக்கும் எனக்குதானடா சப்போர்ட் பண்ணிட்டு இருந்த நீ.?" என்று கேட்டவனிடம் அபிநயா சொன்னதை சொன்னான் ஜீவா. அவன் சொன்னதை கேட்டு அன்புவின் முகம் வாடி போனது. கோபத்தில் ஓவராக வாயை விட்டிருக்கிறோம் என்று புரிந்து தன்னையே திட்டிக் கொண்டான்.

"உங்க லவ்வை சேர்த்து வைக்க இன்னும் நூறு வருசம் ஆகும் போல.. இன்னைக்கு பேட்டா பைவ் ஸ்டாரை எடுங்க.." என்று கையை நீட்டினான். அன்பு தன் பாக்கெட்டில் இருந்த பைவ் ஸ்டாரை எடுத்து அவனின் கையில் வைத்தான்.

"எப்படியோ நீங்க பிரிஞ்சி இருக்கும் வரைக்கும் எனக்கு தினம் சாக்லேட் கிடைக்கும் போல.." என்று சாக்லேட்டை உண்டுக் கொண்டே சொன்னான் அவன்.

அன்பு பற்களை கடித்தான். ஜீவா சாக்லேட்டோடு அமைதியாக அங்கிருந்து நழுவினான்.

அன்றைய நாள் பிற்பகல் வேளையில் அன்புவின் வகுப்பிற்கு கெமிஸ்ட்ரி லேப்பில் அமில பரிசோதனை வகுப்பு நடந்தது. மாணவர்களை இருவர் இருவராக பிரிந்து பரிசோதனை செய்யும்படி சொன்னார் பேராசிரியை. அன்பு அபிநயாவின் அருகே வந்தான். அவளின் கையில் இருந்த சோதனை குழாயில் தன் கையில் இருந்த வேதி பொருளை கலந்தான்.

"நான் வேற பார்ட்னர் பார்த்துக்கறேன்.." என்று அங்கிருந்து நகர முயன்ற அபிநயாவின் கையை பிடித்தவன் "என்னோடு சேர்ந்து பரிசோதனை செஞ்சா உனக்குதான் நல்லது. நான் கிளாஸ் பர்ஸ்ட்.." என்று கிசுகிசுத்தான் அன்பு.

அவனை முறைத்தவள் தன் கையிலிருந்த கண்ணாடி குடுவையை கவனித்து விட்டு தன் நோட்டில் அதை குறிப்பெடுத்தாள்.

அன்பு மீண்டும் வேதி பொருளை அதில் கலந்தான். "போதும் நிறுத்து. கொஞ்சமா கலந்தா போதும்ன்னு நினைக்கிறேன்.." என்ற அபிநயா மற்ற மாணவர்களை கவனித்தாள்.

"என் மேல நம்பிக்கை இல்லையா.?" என கேட்டவன் வேதி பொருளை மீண்டும் கலந்தான். "இதையெல்லாம் நான் போன வருசமே படிச்சி முடிச்சிட்டேன். நீங்களாம்தான் ஸ்லோவ்.." என்றான்.

அபிநயா ஓரக்கண்ணால் அவனை முறைத்தாள். "ஓவரா அறிவு இருந்தா அதுவே ஹெட் வெயிட்டை தந்துடுது இல்ல.?" என்றாள்.

அன்புவின் முகம் கலை இழந்தது. "அப்படி இல்ல.." என்றான் மென்மையான குரலில்.

"தெரியும்.. உனக்கு ஓவரா அறிவு இருக்கு. நீ நினைக்கிறதும் நீ செய்றதும்தான் நூறு பர்சன்ட் கரெக்ட். நாங்க எல்லோரும் முட்டாள்.." கடித்த பற்களின் இடையே சொன்னவள் தன் கையிலிருந்த கண்ணாடி குடுவையை அவனிடமே தந்தாள். "இதை வச்சி நீயே எல்லா சோதனையையும் சொல்லு. நான் பத்தோடு பதினொன்னா நின்னு உன் முடிவை ஏத்துக்கறேன்.." என்றாள்‌.

அன்பு சிரமத்தோடு தன் பொறுமையை கடைப்பிடித்தபடி அவளை பார்த்தான். அபிநயா கைகளை கட்டியபடி தன் அருகே இருந்த மேஜை மேல் சாய்ந்து நின்றாள்.

"நான் எதுவும் செய்யல. சொல்லல.. நீயே வந்து எக்ஸ்பரிமென்ட் பண்ணு.." என்றான்.

அபிநயா நொடி நேரம் பொறுமை காத்துவிட்டு முன்னால் வந்தாள். அவனின் கையில் இருந்த கண்ணாடி குடுவையை வாங்கினாள்.

"ரொம்ப சில்லறையா இருக்கா.." என முனகியவன் அவளின் நோட்டை கையில் எடுத்து குறிப்பெழுத தொடங்கினான்.

அபிநயா அனைத்தையும் பொறுமையாக செய்தாள். அவனுக்கு போரடிப்பது போல இருந்தது. எதிரில் இருந்தவர்களையும் அருகில் இருந்தவர்களையும் கவனித்தான். அவர்கள் அபிநயாவை விடவும் மிக பொறுமையாக சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

அன்பு அபிநயாவின் முகத்தை பார்த்தவாறு நேரத்தை கடத்தினான். ஒவ்வொரு முறையும் வேதி பொருளை கலக்கும் போது அபிநயாவின் முகம் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியை போல ஆர்வத்தோடு ஒளிர்ந்தது. அன்புவிற்கு மனதுக்குள் சிரிப்பு வந்தாலும் கூட அவளின் சிறு பிள்ளை தனமான ஆவலை ரசித்துக் கொண்டுதான் இருந்தான். ஒவ்வொரு முறையும் சோதனை குடுவையை முகத்திற்கு அருகில் கொண்டு வந்து பார்த்தாள். அதையும் உற்று உற்று கவனித்தாள். வேதி பொருளை கலக்கும் போதெல்லாம் சொட்டு சொட்டாக கஞ்ச பிசினாரியை போல கலந்துக் கொண்டிருந்தாள். அன்பு குடுவையை பார்க்கவேயில்லை‌. அவளின் முகத்தில் உண்டான மாற்றங்கள் அவனுக்கு புது அறிவியலாய் தோன்றியது. அவளை பார்க்கையில் சொக்கி விழ தோன்றியது.

பேராசிரியை தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு "கிளாஸ் பினிஷ்ட்.." என்று சொன்னது கூட அவனின் காதில் விழவேயில்லை. அபிநயா பரிசோதனை குடுவையை மேஜை மேல் வைத்துவிட்டு தன் நோட்டை தேடி எடுத்தாள். அதில் பாதிதான் எழுதியிருந்தது. தான் பரிசோதித்து சொன்னது எதையும் அன்பு எழுதவில்லை என்று அறிந்ததும் அவளுக்கு கோபமாக வந்தது. "உன்னை நம்பினா இதான் கதி.." அவனை முறைத்தவள் மற்ற மாணவர்கள் அங்கிருந்து சென்றதை அறிந்து வெளியே நடந்தாள்.

"அன்பு வெளியே கிளம்பு.." சாவியை கையில் சுழற்றியபடி சொன்னார் பேராசிரியை.

"மேடம் ஒரு நிமிசம்.." வாசலில் ப்யூன் வந்து அழைக்கவும் தான் நின்றிருந்த இடத்திலிருந்து நடந்தார் பேராசிரியை. பேராசிரியை கண்களை விட்டு மறைந்ததும் தன் முன்னால் நடந்துக் கொண்டிருக்கிறது அபிநயாவை தொடர்ந்து ஓடியவன் அவளின் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான். "நீ அழகா இருக்க.." என்றான். அபிநயா குழப்பமாக அவனை பார்த்தாள். "உண்மையிலேயே செம அழகா இருக்க. ஒரு முத்தம் தரியா.?" என்றவனை முறைத்தவள் "சாவடிக்கணுமா உன்னை.?" என்றாள். அவள் இதை கேட்கும் முன்பே அவளின் உதட்டில் தன் உதடுகளைப் பதித்தான் அன்பு. கண்களை மூடிய அபிநயாவின் காதுகளில் வாசலில் நின்று பியூனோடு பேசிக் கொண்டிருக்கும் பேராசிரியையின் குரல் கேட்டது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

அன்பு இரண்டு நொடிகளுக்கு பிறகு பின் நகர்ந்தான். அபிநயாவின் இமைகள் மெல்ல திறந்தது. அவளின் இமை முடிகள் கண்ணீரின் ஈரத்தில் மின்னின.

"அ.." அன்பு சொல்ல வந்ததை கேட்க விரும்பவில்லை அவள். கலங்கிய கண்களை துடைக்க கூட தோன்றவில்லை. அவனை விட்டு விலகி பின் நோக்கி நடந்தவள் இரண்டடி நகர்ந்ததும் திரும்பினாள். அங்கிருந்து வேகமாக வெளியே நடந்தாள்.

"அபி.." அன்பு தலையை கோதி விட்டபடி அங்கிருந்து நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN