சிக்கிமுக்கி 62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு அறிவியல் ஆய்வகத்தை விட்டு வெளியே நடந்தான். அபிநயா தூரமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அவளை பின்தொடரலாம் என அவன் நினைத்த நேரத்தில் "அன்பு இந்த லேப்போட சாவியை கொண்டு போய் பிரின்சிபால்கிட்ட தந்துடு.." என அவனை நிறுத்திய பேராசிரியை ஆய்வகத்தை பூட்டி அவனிடம் சாவியை தந்தார்.

அன்பு அபிநயா சென்ற திசையை பார்த்தான். அவள் பார்வையை விட்டு மறைந்து போயிருந்தாள். பெருமூச்சோடு பிரின்சிபால் அறையை நோக்கி நடந்தான்.

அவன் வகுப்பிற்கு திரும்பி வந்தபோது வகுப்பிலிருந்தவர்கள் கல்லூரியை விட்டு சென்றிருந்தனர். குணா மட்டும் அன்புவின் பேக்கோடு அறை வாசலில் காத்திருந்தான். அவனிடமிருந்து தன் பேக்கை வாங்கி தோளில் மாட்டிக் கொண்ட அன்பு "அபி கிளம்பிட்டாளா.?" என்றான்.

"ம். போயிட்டா.." என்ற‌ குணா "நோட் தீர்ந்துடுச்சி.. கடைக்கு போகலாமா.?" என்றான்.

அன்புவிற்கு அபிநயாவின் கலங்கிய விழிகளே கண்களில் இருந்தன. "நாளைக்கு போகலாம்டா.." என்றான் நண்பனிடம்.

விடுதிக்கு வந்து சேர்ந்த பிறகு அபிநயாவின் அறையை கவனித்தான். அபிநயா ஜன்னல் பக்கம் வரவேயில்லை.

மனம் அடித்துக் கொண்டே இருந்தது. மாற்று உடையை உடுத்திக் கொண்டு வார்டனின் அறைக்கு வந்தவன் "அம்மாக்கிட்ட பேசணும் சார்.. போன் வேணும்.." என்றான். வார்டன் போனை தந்துவிட்டு தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

"அபி உனக்கு போன்.." விடுதி லீடர் ஒருத்தி கைபேசியை கொண்டு வந்து அபிநயாவிடம் தந்துவிட்டு சென்றாள்.

"அப்பாவா.?" என்று கேட்ட மீனாவிடம் போனை காட்டினாள்.

"இவன் ஏன் போன் பண்ணி இருக்கான்.?" மீனா சந்தேகமாக கேட்ட நேரத்தில் "நான் பாத்ரூம்ல போய் பேசிட்டு வரட்டா.?" என்றாள் அபிநயா.

மீனாவிற்கு அபிநயாவின் முகமும் குரலும் வித்தியாசமாக இருப்பதாக தென்பட்டது.

"மறுபடியும் சண்டை போட்டுக்கிட்டங்களா.?" சந்தேகமாக கேட்டாள் மீனா. இல்லையென தலையசைத்தவள் குளியலறையை நோக்கி நடந்தாள்.

குளியலறை கதவை தாழிட்டு விட்டு திரும்பிய அபிநயா கதவின் மீது சாய்ந்து நின்றாள். அன்பு இரண்டாம் முறையாக அழைத்திருந்தான்.

"ஹலோ.." என்றாள் அழைப்பை ஏற்ற பிறகு.

"அபி.. நான் மறுபடி சொதப்பிட்டனான்னு தெரியல. சாரி.." என்றான் அன்பு.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அன்பு. ஒரு முத்தம்தான். ஆனா ஓராயிரம் கேள்விகள்.. ஓராயிரம் சந்தேகங்கள்.. கோபத்துல நீ விட்ட வார்த்தைகள் என்னை வாழ விடாம கொல்லுது. வாழ்க்கையை கூட ரசிக்க விடாம துரத்துது. உன் முத்தத்தை ரசிச்சி ஏத்துக்கட்டுமா.? ஆனா அப்புறம் நீயே 'நான் முத்தம் தரும்போது நீ அமைதியாதானே இருந்த.. நீ யோக்கியமா?'ன்னு கேட்டுடுவியோன்னு பயமா இருக்கு. முத்தம் தந்த உன்னை கன்னத்துலயே பளீர்ன்னு அறைஞ்சிருந்தா நான் நல்லவளா இருந்திருப்பேனோன்னு இப்ப யோசிக்க தோணுது. ஆனா.." என்றவளுக்கு அதன் பிறகு பேச வார்த்தைகள் வராமல் தடுமாறியது.

அன்பு நெற்றியில் அடித்துக் கொண்டான். "சா.." அவன் பேசும் முன் அவளே "ஆனா.. நீ கிஸ் பண்ணும் போது உன்னை அறைய தோணல அன்பு.. நீ கிஸ் பண்ணது பிடிச்சிருந்தது.." என்றாள். சொல்லும்போதே கரகரத்து விட்ட குரல் சொல்லி முடித்ததும் அழுகையாய் மாறி விட்டது. அன்பு கண்களை இறுக்க மூடினான். அவளின் அழுகை குரல் விஷமாய் நெஞ்சில் இறங்கியது.

"நான் என் பீலிங்க்ஸ்க்கு துரோகம் செய்யணுமான்னு தெரியல அன்பு. நான் அவ்வளவா இன்னும் மெச்சூர் ஆகலன்னுதான் நினைக்கிறேன். நீ கிஸ் பண்ணும் போது பிடிச்சிருந்தது. ரசிக்க தோணுது. நீ கன்வர்ட் பண்ற லவ்வையும் மனசு நிறைய ஏத்துக்க தோணுது. ஆனா அதே சமயம் நீ என் பீலிங்க்ஸை எடை போட்டு தப்பா பேசிடுவியோன்னு பயமாவும் இருக்கு. நான் என்னதான் செய்யட்டும்.? எனக்கு பிடிச்சிருந்தாலும் கூட நியாயம் பார்த்து உன்னை விலக்கி தள்ளட்டுமா.? இல்ல என் காதலன்.. என் வருங்காலம்.. என்னவன் தர கிஸ்ன்னு அந்த கிஸ்ஸை நினைச்சி சந்தோசப்படட்டுமா.?" கண்ணீரோடு அவள் கேட்க அன்பு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் குழம்பி நின்றான்.

'எல்லாமே என் தப்புதான். நானேதான் கிஸ்ஸும் தரேன். நானேதான் அவ அமைதியா இருந்தா அதுக்கும் குறை சொல்றேன்..' என்றவனுக்கு அந்த சோகத்திலும் தன்னை இன்னும் அபிநயா காதலனாக பார்க்கிறாளே என்று சந்தோசமாகவும் இருந்தது.

"பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு அன்பு. உன்னை லவ் பண்ணாலும் தப்பு. விலக்கி நிறுத்தினாலும் தப்பு.. நான் என்ன செய்யட்டும்.? உன் நியாய தர்மத்தை பாலோ பண்ணட்டா.? இல்ல என் மனசுக்கு துரோகம் செய்யாம அதை லூஸ்ல விட்டட்டா.?" என்றாள்.

"அபி..‌‌ சாரி நான் இனி அப்படி பேச மாட்டேன். நம்பு.." என்றான் இவன் சில நொடிகள் தயங்கியபிறகு.

"இல்ல அன்பு..‌ எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கொடு.. மைன்ட் ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கா. சாதாரண பொண்ணுதானே நானும்.? இயல்புக்கு ஒத்து வராத என் மனசோட பேராசையோடும் எப்ப வேணாலும் வந்து செருப்பால அடிச்சிட்டு போற ரியாலிட்டியோடும் கலந்து உன்னை லவ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்றவள் "குட் நைட்.." என்றுவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

அன்பு சுவற்றில் நெற்றியை மோதி நின்றான். தனது சிறு கோபம் அவளை இந்த அளவுக்கு யோசிக்க வைத்து விட்டதே என்று வாடினான்.

மீனா அபிநயாவிற்காக அறையில் காத்திருந்தாள். அபிநயாவிற்கு அழுகையாக வந்தது. துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவே இல்லை. போனில் பாடலை இசைக்க விட்டவள் மனதின் போராட்டத்தை முடக்க இயலாமல் அழுது தீர்த்தாள். அழுகையே சோகத்தை தீர்க்கும் என நம்பி நெஞ்சில் வலி வரும் வரை அழுதாள். கண்ணீரே அவ்வளவுதான் என கண்களே உறுதிப்படுத்தும் அளவிற்கு அழுது தீர்த்தவள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக் கொண்டு வெளியே நடந்தாள்.

சிவந்து விட்டிருந்த கண்கள் இரண்டும் எரிந்தது அபிநயாவிற்கு.

"மறுபடியும் சண்டை போட்டுக்கிட்டிங்களா.?" தோழியை பார்த்ததும் புலம்பிய மீனா "காதல் ரொம்ப மோசம்.." என்றாள்.

அபிநயா சிரித்தாள். ஆமெனும் விதமாக தலையசைத்தாள். "தலைவலி மருந்து வச்சிருக்கியா.?" என்றாள்.

மீனா தன்னிடமிருந்த மருந்தை தந்தாள். நெற்றியில் மருந்தை அழுந்த தேய்த்து விட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்தாள் அபிநயா.

"நான் சும்மா கண்ணை மூடுறேன்.. சாப்பிட போகும்போது எழுப்பு.." தோழியிடம் சொல்லிவிட்டு கண்களை மூடினாள்.

மீனா அறையின் பேன் ஸ்விட்சை தட்டி விட்டாள். இருள் சூழும் வானத்தை ஜன்னல் வழியே பார்த்தாள்.

இரண்டு நாட்கள் கடந்தது. அபிநயா அன்புவின் திசைக்கு திரும்பவில்லை. அன்புவும் அவளுக்கான நேரத்தை கெடுக்கவில்லை.

வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் அன்பு தன் விடுதியை விட்டு வெளியே நடந்தபோது அவர்களின் விடுதி வாசலில் காத்திருந்தாள் அபிநயா. அன்பு ஆச்சரியத்தோடு அவளை நோக்கி எட்டி அடியெடுத்து வைத்தான்.

"அபி.." என்றான் அவளை நெருங்கி.

"உன்னோடு பேசலாமேன்னு வந்தேன்.. பேசிக்கிட்டே காலேஜ் போகலாமா.?" என்றாள்.

தன்னோடு வந்த நண்பன் எங்கே என்று திரும்பி பார்த்தான் அன்பு. குணா தூரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தான். நண்பனை நினைத்து மனம் மகிழ்ந்தது அவனுக்கு.

அபிநயாவோடு இணைந்து நடந்தான் அன்பு.

"நான் யோசிச்சி பார்த்தேன் அன்பு. நிறைய யோசிச்சேன். உன்னோட பழியிலிருந்தும் தப்பிக்கணும். என் மனசுக்கும் துரோகம் செய்ய கூடாது‌. அதுக்கு ஒரே வழி நீ என்னை தொடாம பேசுவதுதான்.." என்றாள்.

அன்பு நடப்பதை நிறுத்தினான். அவளை குழப்பமாக பார்த்தான்.

"நான் காலம் முழுக்க உன்னோடுதான் வாழ போறேன். ஆயிரம் சண்டைகள் வந்தாலும் கூட இதை மட்டும் அடிச்சி சொல்வேன் நானும். ஆனா நமக்கு இப்ப என்ன வயசு ஆயிடுச்சி.? நாளைக்கே நீயும் நானும் செத்துட போறதில்லன்னு இரண்டு பேருக்குமே நம்பிக்கை இருக்கும்போது ஏன் அவசரப்படணும்.? வாலிபம் ஒன்னும் காலேஜ்ல தர முத்தத்துலயே நிலைச்சி நின்னுட போறது இல்ல. கல்யாணம் பண்ண பிறகு நீ முத்தம் தரலாமே. அதுக்குள்ள முத்தத்தை நாட்டுல தடை பண்ண போறது இல்லையே.." என்றாள்.

அன்பு அவசரமாக மறுத்து தலையசைத்தான். "கோபத்துல எதையாவது பேசாத அபி.. நீ சொல்றதுல நியாயமே கிடையாது.." என்றவனின் முன்னே நடந்தவள் நின்றாள். அவன் பக்கம் திரும்பினாள். "இல்ல அன்பு.. நீ அன்னைக்கு சொன்னதுதான் உண்மை. உன் மேல எனக்கு கோபம் கிடையாது. இது எனக்கு நானே போட்டுக்கற பாதுகாப்பு வளையம். இந்த பாதுகாப்பு உன்கிட்டயிருந்து காப்பாத்திக்க இல்ல. என் மனசாட்சிக்கிட்ட இருந்து காப்பாத்திக்க. உன் கிஸ் பிடிச்சிருக்கு. ஆனா இப்ப அது தேவையில்ல எனக்கு. சின்ன பார்வைகள் சின்ன புன்னகைகள் போதும் நம்ம காதலுக்கு. ரியாலிட்டியோடு கொஞ்ச நேரம் வாழ்ந்து பார்த்தேன். வெறும் இரண்டு மூணு வருசம் கூட காத்திருக்க முடியலன்னா அப்புறம் அது என்ன காதல்.? நாளைக்கு நான் யாரையும் யாரோட கேரக்டரையும் ஜட்ச் பண்ண மாட்டேன். ஏனா அனுபவம் போதும். ஆனா என் கேரக்டரை நானே ஜட்ச் பண்ணிக்கற அளவுக்கு போக வேணாம்ன்னு நினைக்கிறேன்.." என்றவளை முறைத்தவன் "அப்படின்னா கல்யாணத்துக்கு முன்னாடி கிஸ் பண்றதும் செக்ஸ் வச்சிக்கறதும் தப்புன்னு சொல்றியா.?" என்றான் கோபத்தோடு.

அபிநயா சிரித்தபடியே மறுப்பாக தலையசைத்தாள். "கண்டிப்பா சேர்ந்து வாழ்வோம்ன்னு நம்பி காமத்துக்கு இடம் தருவது எப்படி தப்பாகும்.? காதலிக்கறவங்க நாம. எல்லாத்தையும் பண்றதும் நாம. கல்யாணம் ஆன பிறகு முன்னாடி நடந்த கூத்தையெல்லாம் நினைச்சி பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கறதும் நாம. ஒருவேளை காதல் தோத்தாலோ இல்ல காதல் இறந்தாலோ அதை கையாள்வதும் நாமளேதான். கல்யாணத்துக்கு அப்புறம் கூட எல்லாமே நடக்குது. ஆனா அதையும் தாண்டி கூட சிலர் பிரிஞ்சி போகதான் செய்றாங்க. இதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும்.? நாம செய்றது நமக்கு தப்பா தோணலன்னா அதை தப்புன்னு நினைச்சி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இதைதான் இந்த வாழ்க்கை நமக்கு சொல்லி தருது. ஆனா நான் சொல்றது வேற. என்னோட வாழ்க்கைக்கு ஒத்து வரதைதான் நான் பார்க்க முடியும். ஏனோதானோன்னு முடிவெடுக்க முடியாது நம்மால. நாளைக்கு சண்டை வந்து நீ மறுபடியும் ஏதாவது சொல்லிட்டா அது என்னை ரொம்ப பாதிக்கும். நான் ஒரு முட்டாள்ன்னு சொன்னா அது வேற. ஆனா அதுவே நீ 'உன்னை கிஸ் பண்ணேன் நான். நீ அமைதியாதான் இருந்த.. நீ யோக்கியமா.?'ன்னு கேட்ப. நான் நார்மல் பொண்ணா இருந்தா நீ கேட்பதை இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போயிடுவேன். நீயும் நார்மல் பையனா இருந்திருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் தர கிஸ்க்கும் கல்யாணத்துக்கு முன்னாடி தர கிஸ்க்கும் இடையில் வித்தியாசம் பார்க்க மாட்ட. இரண்டுமே காதலோடு தந்ததுன்னுதான் நினைப்ப. ஆனா நீ வித்தியாசம். நீயே முத்தம் தந்துட்டு என்னை யோக்கியமான்னு கேட்ப. நானும் வித்தியாசம்.. நீ வாய் தவறி ஏதாவது கேள்வி கேட்டா கூட அது நேரா என்னை தாக்கிடும். என்னால அதை ஹேண்டில் பண்ண முடியாது.." என்றாள். அன்பு அவளின் விழியசைவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீயும் நானும் நார்மல் கிடையாது அன்பு. இதை நீயும் உணர்ந்திருப்பன்னு நினைக்கிறேன்‌. கோபம் வந்தா அடிச்சி கொல்ல சொல்லுது உன்னை. நேசிக்கும் நேரத்துல உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சி பூட்டணும் போல இயல்புக்கு மீறி தோணுது. இதுதான் நாம. நம்மோட லவ் வித்தியாசம். இதை காப்பாத்திக்கறதே நமக்கு பெரிய விசயமா இருக்கும்போது அதை ஏன் சின்ன சின்ன சபலத்துக்கு பழி தந்து அழிக்கணும்.? கொஞ்சம் வருசம் போகட்டும். நல்ல வேலைக்கு போன பிறகு இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். இந்த இடைப்பட்ட கேப்ல உனக்கு வேற ஏதாவது பொண்ணை பிடிச்சி போச்சின்னா அந்த செகண்டே‌ செத்துடு. இல்லன்னா நானே உன்னை கொன்னுடுவேன்.." என்றவள் திரும்பி நடந்தாள். அன்புவிற்கு அவள் சொன்னது முழுதும் புரியவேயில்லை. அவளின் உரையாடலை மீண்டும் மனதில் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டிருந்தான்.

நான்கடி நடந்த அபிநயா மீண்டும் இவனிடம் திரும்பி வந்தாள். "கல்யாணத்துக்கு அப்புறம் அப்ப நிறைய முத்தம் கொடு.. இல்லன்னா‌ ஏன்டா முத்தம் தரலன்னு கேட்டு உன் வாயை உடைச்சி வச்சிடுவேன்.." என்றாள். அன்புவிற்கு இதுவும் புரியவில்லை. அவள் பேசியது அனைத்தையும் மனதுக்குள் சேமித்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அர்த்தம் தேடி பிடித்தான். அவளின் கடைசி வாக்கியங்கள் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தன. புன்னகை முகத்தோடு அன்பு நிமிர்ந்த போது அபிநயா தூரமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN