சிக்கிமுக்கி 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயாவின் முகத்தில் மீண்டும் பழைய சந்தோசம் திரும்பியது.

"அவனோடு சண்டை தீர்ந்ததா.?" என்று அவள் வகுப்புக்கு வந்ததும் தோழிகள் கேட்டனர்.

"தீர்ந்துடுச்சி. அவன் என்னை புரிஞ்சுப்பான்னு நம்புறேன்.." என அவள் தோழிகளுக்கு பதில் தந்த வேளையில் அன்பு அவர்களை கடந்து தனது இருக்கைக்கு சென்றான். புரிந்துக் கொண்டதாக அபிநயாவிற்கு சைகை காட்டினான்.

"சிரிப்புக்கான காரணம்.?" குணா நண்பனிடம் சந்தேகமாக கேட்டான்.

"சோகத்தில் ஒரு இன்பம். இன்பத்தில் ஒரு சோகம்.." என்றான். "தெளிவா சொல்லுடா.." என்ற குணாவிடம் "சில விசயங்களை நண்பர்கள்கிட்ட கூட சொல்ல கூடாதுடா.." என்றான் அன்பு.

"பிகர் செட் ஆனதும் பிரெண்டை கழட்டி விடுற.. நல்லாருந்தா சரி.." என்ற குணா வகுப்பிற்குள் பேராசிரியை வந்ததும் அமைதியாகி கொண்டான்.

அபிநயா அன்புவிடம் அதிகம் பேசவில்லை. காரணம் இருந்தால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். ஊருக்கு செல்ல ஒன்றாய் பேருந்து ஏறினால் கூட அன்பு குணாவோடுதான் அமர்ந்தான். அபிநயா அவனை தன் அருகில் அமர விடவில்லை. ஆனால் அவர்களுக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொள்வாள்.

"இது கொஞ்சம் ஓவர்தான்.." என்று ஆரம்பத்தில் சொன்ன அன்புவிற்கு நாட்கள் செல்ல செல்ல இந்த வகை காதலும் பிடித்துதான் போனது. காதலிக்க காதலி உண்டெனும்போது காத்திருந்து கை பிடிப்பதில் என்ன தவறு என்று எண்ணினான்.

சில மாதங்கள் கடந்த பின் அபிநயா தன் தந்தையிடம் வந்தாள்.

"அப்பா.. உங்ககிட்ட ஒரு விசயம் பேசணும்.." என்றாள்.

"என்னம்மா.?" என்றார். "அன்புவை எனக்கு.." அவள் முழுமையாக முடிக்கும் முன்பே அவளை முறைத்தார் அவர். அபிநயா தந்தையின் கோப முகம் கண்டு பயந்து பேச்சை நிறுத்தினாள்.

"என்ன சொல்ல வந்தியோ அதை முழுசா சொல்லு.." என்றார் மிரட்டலாக.

அபிநயாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. "நான் எதுவும் சொல்லல. போங்க.." என்றவள் அவரிடமிருந்து செல்ல முயன்றாள்.

மகளை கைப்பிடித்து நிறுத்தினார் வினோத். "நான் என்ன சொன்னேன்னு கோவிச்சிக்கற.? சொல்ல வந்ததை அப்பாக்கிட்ட சொல்லு.." என்றார்.

"நான் அவனை லவ் பண்றேன்.." தயக்கமாக தரை பார்த்து சொன்னவள் நிமிர்ந்தபோது அப்பா பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தார்.

"அப்பா.. அவன்.." அபிநயாவின் கன்னத்தில் பளீரென அறை விழுந்தது. உதட்டை கடித்துக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு தந்தையை பார்த்தாள்.

"பிச்சிடுவேன். சின்ன புள்ளை மாதிரி நடந்துக்க. அந்த பொறுக்கியை லவ் பண்றியா நீ.? நானென்ன செத்தா போயிட்டேன்.? நான் உனக்கு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்க மாட்டேனா.?" என ஆத்திரத்தோடு அவர் கத்தியதில் வீட்டிலிருந்த மற்ற இருவரும் அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர். அபிநயாவின் சிவந்த கன்னம் கண்டு அதிர்ந்தாள் ஆனந்தி.

"என்னாச்சிங்க.?" என்று கேட்ட ஆனந்தியை முறைத்தவர் "உன் பொண்ணு பக்கத்து வீட்டு பொறுக்கியை லவ் பண்றாளாம். அதுவும் அதை என்கிட்டயே வந்து தைரியமா சொல்றா.. என்னடி புள்ளையை வளத்தற.?" என்று கத்தினார்.

"பாராட்டும்போதும் பாசம் காட்டும்போதும் மட்டும் அவ உங்க புள்ளை. தப்பு செய்யும்போது என் புள்ளையா.? அவளை நான் நல்லாதான் வளர்த்தினேன். நீங்கதான் செல்லம் கொடுத்து கெடுத்துட்டிங்க. அவ இன்னைக்கு இப்படி இருக்கான்னா அதுக்கு முழு காரணமும் நீங்க மட்டும்தான்.." என்று திட்டிய ஆனந்தி மகளையும் கணவனையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"அம்மா ஏன் வந்துட்ட.? அப்பா அக்காவை மறுபடியும் அடிச்சிட போறாரு. வாங்க வந்து தடுங்க.." என்று தாயின் பின்னால் ஓடி வந்தான் தீபக்.

"உங்கப்பா அவளை மறுபடியெல்லாம் அடிக்க மாட்டாரு. ஏற்கனவே அடிச்ச அடிக்கே நெஞ்சுல ரத்தம் வழிஞ்சிருக்கும். அங்கே அவ அழுதா இல்லையா.? அதை தன்னால தாங்கிக்க முடியலன்னுதான் அந்த கோபத்தை என்கிட்ட காட்டியிருக்காரு. அவங்க இன்னைக்கு சண்டை போட்டுப்பாங்க. சாயங்காலமே கூடிப்பாங்க. நடுவுல நாம ஏன் போய் பழியாகணும்.? நான் அவ காதலை வேண்டாம்ன்னு சொன்னாலும் அவர் விட போறது இல்ல. ஏத்துக்கலாம்ன்னு சொன்னாலும் ஏத்துக்க போறது இல்ல. அப்புறம் ஏன் வீணா போய் நாம நாலு கருத்தை சொல்லி நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும்.?" என்றாள்.

தீபக் அம்மைவை ஆச்சரியத்தோடு பார்த்தான். அப்பாவை இந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளாளே என எண்ணியவன் "நானும் போய் படிக்கறேன்ம்மா.. அவங்க எப்பவோ பேசி சமாதானம் ஆகட்டும்.." என்று சொல்லி விட்டு படிக்க கிளம்பினான். ஆனாலும் கூட பக்கத்து வீட்டு கோணக்காலனை மச்சானாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்று மனதில் கேள்வி ஒன்று நெருடியது.

அபிநயா கலங்கிய கண்களோடு சுவரோரம் நின்றுக் கொண்டிருந்தாள்.

"அந்த பையனை எனக்கு பிடிக்கல. அவனுக்கும் உனக்கும் உனக்கும் எப்பவும் சண்டைதான் வரும். வயசு கோளாறுல பார்க்கற பையன் மேலயெல்லாம் ஆசை வரத்தான் செய்யும். அதையெல்லாம் பெருசு பண்ணாம கடந்து போயிட்டே இருக்கணும்.." என்றவர் "அவனுக்கு பதிலா நீ ரோட்டுல போற ஒரு நாயை காட்டி காதலிக்கறதா சொல்லியிருந்தா கூட ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன். அவனை எப்படி ஏத்துப்பேன்.?" என்று ஒரு புது ரீல் ஓட்டினார்.

அபிநயா பதிலே பேசவில்லை. தந்தையின் கோபம் அடங்கட்டும் என நினைத்தோ என்னவோ அமைதியாகவே நின்றிருந்தாள்.

"அவன் எந்த அளவுக்கு பொறுக்கின்னு உனக்கு தெரியாது. உன்னை லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டு இருக்கான். அவனை நம்பி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்காத.." என்றவர் இதை அவளுக்கு சொன்னாரா இல்லை தனக்கு தானே சொல்லிக் கொண்டாரா என்று தெரியவில்லை.

"உன்னை நம்பி படிக்க காலேஜ்க்கு அனுப்புனா கண்ட நாயையெல்லாம் காதலிக்கறதா சொல்ற. உன் மேல நான் வச்சிருந்த மொத்த நம்பிக்கையையும் கெடுத்துட்ட.." என்றார். அவரே சமாதானம் ஆகட்டும் என நினைத்த அபிநயா அங்கிருந்து வெளியே நடந்தாள்.

"இப்ப கூட பாரு. நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு என்னை மதிக்காம கிளம்பற. இதை கூட அந்த நாய்தான் சொல்லி கொடுத்துச்சா.?" என்றார் கோபத்தோடு.

அபிநயா பெருமூச்சோடு தந்தையை திரும்பி பார்த்தாள். "ஏன்ப்பா இப்படி பண்றிங்க.? நான் என்ன குழந்தையா.? அவனை பிடிச்சிருக்கு. உண்மையாவே பிடிச்சிருக்கு. இல்லன்னா உங்ககிட்ட வந்து சொல்லியிருக்க கூட மாட்டேன். உங்ககிட்ட இதை மறைக்கறது தப்போன்னு தோணுச்சி. அதான் வந்து சொன்னேன். கோபத்துல எப்படி வேணாலும் கத்தாதிங்க. இந்த உலகத்துல எங்கேயும் நல்ல மாப்பிள்ளை இல்ல. நாம செய்ற செயலுக்கு பதில் தர எதிர்வினைதான் அவன் நல்லவனா கெட்டவனான்னு தீர்மானிக்கும். வாழ்க்கை முழுக்க அவனோடு பயணம் பண்றதா இருந்தா லைப் நல்லாயிருக்குமேன்னு யோசிச்சேன். அவனை பிடிக்கலையா. விட்டுடுங்க. நான் இந்த வீட்டுலயே சாகும் வரை இருந்துட்டு போறேன். ஆனா இன்னொருத்தனை மட்டும் கட்டிக்க சொல்லாதிங்க.." என்றவள் தனது அறையை நோக்கி நடந்தாள்.

"அவ்வளவுதான். அதுக்குள்ள அவன் என் பொண்ணை மயக்கிட்டான். பெத்த அப்பாவையே எதிர்த்து பேசுறா.." என்று புலம்பியவர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார்.

அபிநயா வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து அன்புவிற்கு போன் செய்தாள். தான் தன் காதலை தந்தையிடம் சொல்லி விட்டதாக கூறினாள்.

"அச்சோ.. உங்க அப்பா என்ன சொன்னாரு.?" அன்பு கவலையோடு கேட்டான்.

"என்ன சொல்வாரு.? உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாரு. நான் இன்னும் வளரலன்னு திட்டினாரு. கோபத்துல இருக்காரு.." என்றவள் தான் அறை வாங்கியதை மட்டும் சொல்லவில்லை.

"கொடுமை உன்னோடு. உன்னை யாரு அதுக்குள்ள சொல்ல சொன்னது.? அவர் மறுபடியும் வந்து என்னை மிரட்டுவாரு.." என அன்பு புலம்ப, "அப்படின்னா இதுக்கு முன்னாடியே எங்க அப்பாக்கிட்ட வாங்கி கட்டிருக்கியா.?" என்று சந்தேகமாக கேட்டாள் அபிநயா.

தான் அவரிடம் திட்டு வாங்கியதையும் தீபக்கிடம் அடி வாங்கியதையும் விவரமாக சொன்னான் அன்பு. அபிநயாவிற்கு சிரிப்பாக வந்தது. "என்னை அழ வச்சா என்ன நடக்கும்ன்னு முன்னாடியே டெமோ கொடுத்துருக்காங்கன்னு நினைச்சிக்க.." என்றாள் சிரிப்போடு.

"ஓவரா சிரிக்காதே.. நான் உங்க அப்பாவை விட கோபக்காரன். பெரியவங்களுக்கு மரியாதை தரணுமேன்னு அமைதியா இருக்கேன். இல்லன்னா வேற மாதிரி நடந்துடும்.." என்றான்.

"உன்னோட இந்த வாயாலதான் எங்க அப்பாவுக்கு உன்னை சுத்தமா பிடிக்கல.." எரிச்சலோடு அபிநயா சொல்ல இந்த முறை அவன் சிரித்தான். "வாயெல்லாம் கூடவே பிறந்தது. மாமனாருக்காக மௌன சாமியாராவா ஆக முடியும்.?" என்றவன் தன் வீட்டில் காதலை எப்போது சொல்வதென யோசித்தான்.

அந்த வாரம் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு கிளம்பினாள் அபிநயா. கடந்த இரு நாட்களாவே அவளும் அப்பாவும் பேசிக்கொள்ளவில்லை. பார்க்க நேரும் போதெல்லாம் மகளை முறைத்துக் கொண்டே இருந்தார் வினோத்.

மகள் கல்லூரி கிளம்பியது அறிந்ததும் "நம்பிக்கையா படிக்க அனுப்புறேன். மாலையும் கழுத்துமா வந்து நின்னா அப்புறம் எனக்கு மாலை போட்டு பார்க்க வேண்டி வரும்ன்னு உன் மகக்கிட்ட சொல்லுடி.." என்று மனைவின் மூலம் மகளுக்கு தூது விட்டார்.

அபிநயாவிற்கே சலித்து விட்டது தந்தையின் குணத்தை கண்டு.

"சீரியல் கதாப்பாத்திரங்கை விடவும் மோசம்ப்பா நீங்க.. உங்களுக்கு பிடிக்கலன்னா நான்தான் வீட்டோடு இருந்திடுறேன்னு தெளிவா சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் ஏன் நீங்களே ஐடியா தர மாதிரி பேசுறிங்க.?" என்றாள். அப்பா அதிர்ச்சியோடு மகளை பார்த்தார். 'நான் ஐடியா தரேனே.?' என தன்னையே கேட்டுக் கொண்டார்.

"தூரத்துல எவனையாவது கட்டிக்கிட்டு போனா உங்க எல்லோரையும் பிரிஞ்சி போயிடுவேன் நான். இவனுக்கே கட்டி தந்திங்கன்னா மூணு வேளை சாப்பாட்டுக்கும் இங்கேயே வந்துடுவேன். தெரியாத ஒருத்தனுக்கு கட்டி தந்து மக எப்படி இருக்காளோன்னு பயந்துட்டு இருக்கறதுக்கு பதிலா இவனுக்கே கட்டி வைங்க. ஏதாவது சண்டை வந்தா நானும் உடனே புறப்பட்டு வந்துடுவேன். நீங்களும் பக்கத்து வீட்டு பையன்தானேன்னு நினைச்சி உரிமையோடு‌ அவனை நொங்கெடுக்கலாம்." என்றவள் பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே நடந்தாள்.

"மாலையும் கழுத்துமா வந்து நிற்க மாட்டேன். நம்பிக்கை வைங்க மக மேலேயும்.." என்றவள் வாசலை தாண்டி நடந்தாள்.

"நம்பிக்கை.? அதுதான் ஏற்கனவே அவனை லவ் பண்ணிட்டியே.. இனி என்ன நம்பிக்கை.?" என முனகினார்.

அபிநயாவிற்கு தினம் மாலையில் போன் செய்தாள் ஆனந்தி. கணவன் சொல்லிதான் செய்தாள். தன்னோடு சண்டை போட்டுக் கொண்டு சென்ற மகள் என்ன செய்கிறோளோ என்று வினோத்திற்கு மனம் அடித்துக் கொண்டது. ரோசத்தின் காரணமாக நேராக பேச மனம் வரவில்லை. மனைவியின் மூலம் மகள் என்ன நிலவரத்தில் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டார்.

"எங்க அப்பா உன்னை மருமகனா ஏத்துக்க ஒரு ஜென்மமே ஆகும்ன்னு நினைக்கிறேன்.." என்று அன்புவிடம் சொன்னாள் அபிநயா.

"பேமிலியே முசுடா இருந்தா நான் மட்டும் என்ன பண்றது.?" பெருமூச்சோடு அவன் கேட்க "உன்னைதான் திருத்தவே முடியாது.." என்று சலித்தபடி சொன்னாள் அபிநயா.

அபிநயா அந்த வார இறுதியில் வீட்டிற்கு கிளம்பினாள். அவள் பேருந்தை விட்டு இறங்கும்போதே பேருந்து நிலையத்தில் இருந்த தந்தையை கவனித்து விட்டாள். தந்தை மகளை நோட்டம் விட்டார். பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் இறங்கிய அன்புவை முறைத்தார்.

அபிநயா தந்தையின் அருகே வந்தாள்.

"போகலாமா.?" என்றாள்.

"நான் மளிகை பொருள் வாங்கதான் வந்தேன்.." என முனகியபடி பைக்கை ஸ்டார்ட் செய்தார் அவர்.

'ஆமா நம்பிட்டேன். கட்டை பைதான் கையில இல்ல. கடைக்காரன் தந்த ஒரு கவராவது இருக்கா.?' என கடுப்போடு நினைத்தவள் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

முன்னால் நடந்துக் கொண்டிருந்த அன்புவை தாண்டி சென்றது பைக். "ஆளையும் அவன் மூஞ்சியையும் பாரு. இவன் மூஞ்சிக்கெல்லாம் என் பொண்ணு கேட்குதா.?" என அவர் திட்டியது அபிநயாவின் காதுகளிலும் கேட்டது.

'நல்லவேளை அவன் காதுல விழல. இல்லன்னா நீங்க என்ன ரதியவா பெத்து வச்சிருக்கிங்கன்னு கேட்டிருப்பான்..' என்று கவலையோடு நினைத்தாள் அபிநயா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN