சிக்கிமுக்கி 64

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு வீட்டிற்கு வந்ததும் அவனை தன்னோடு தனியே இழுத்து சென்றாள் அர்ச்சனா.

"என்னம்மா.?" என்றவனிடம் "நீயும் அந்த குட்டச்சியும் காதலிக்கிறிங்களா.?" என்றாள் அம்மா.

அன்பு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

"திருட்டு முழி முழிக்காம உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு சொல்றா.." என்ற அம்மாவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவன் "உங்களுக்கு யார் சொன்னாங்க இப்படின்னு.?" என்றான்.

"போட்டு வாங்கறியா.? இந்த மொத்த தெருவுலயும் இந்த ஒரு வாரமா உங்க கதைதான் ஓடிட்டு இருக்குடா.. நீயும் அந்த பொண்ணும் ரொம்ப டீப்பா லவ் பண்றதா பேசிக்கறாங்க.. இது கூட பரவால்ல. எதிர் வீட்டு மேகலா உனக்கும் குட்டச்சிக்கும் கல்யாணமாகி இரண்டு வருசம் ஆச்சின்னும் அதை ஏன் எங்ககிட்ட சொல்லல அக்கான்னு என்கிட்டயே வந்து கேட்கறா.." என்றாள் அம்மா.

அன்பு மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"அவங்க வதந்தி பரப்புறாங்கம்மா.." என்றான்.

"சரி விடு. அது வதந்தியாவே இருக்கட்டும். நீ அவளை லவ் பண்றியா இல்லையா அதை மட்டும் சொல்லு.. உங்க அப்பாவும் வினோத் அண்ணாவும் ரகசியமா பேசிக்கறதா தகவல் வருது. நான் கேட்டதுக்கு அவர் பதில் சொல்லல. நீயாவது சொல்லு.." என்றாள்.

'தனியா பேசிக்கறாங்களா.? இது தப்பாச்சே..' என நினைத்தவன் தன் பதிலை எதிர்ப்பார்த்து நின்ற அம்மாவிடம் "அந்த புள்ளையை பிடிச்சிருக்கும்மா.. இதுக்கு முன்னாடி உனக்கும் எனக்கும் நடுவுல எத்தனையோ சண்டை வந்திருக்கும். ஆனா அது எதையும் மனசுல வச்சிக்காத. அப்பா கோபத்துல என்னை பெல்ட்ல அடிக்க வந்தார்ன்னா என் மேலயும் இரக்கம் காட்டி வந்து அவரை தடும்மா.." என்றான்.

அம்மா அவனை சிரிப்போடு பார்த்தாள். "பெரிய பையனை போல பேசுடா.." என்றாள்.

"உன் புருசன் எதுக்கெடுத்தாலும் என்னை முறைச்சிட்டே இருந்தா நான் என்னைக்கு பெரிய பையனாகுறது.?" சோம்பலாக கேட்டுவிட்டு தனது அறையை நோக்கி நடந்தான். அப்பா மனதில் என்ன ஓடுகிறதோ என்ற எண்ணம் அவனை பரபரப்பிலேயே வைத்திருந்தது.

இரவு உண்ணும் வரை அன்பு தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. அம்மா அழைக்காமல் இருந்திருந்தால் உண்ண கூட வந்திருக்க மாட்டான். அப்பா என்ன கேள்வி கேட்க போகிறாரோ என்று மருகியபடியே வந்து சாப்பிட அமர்ந்தான்.

"பக்கத்து வீட்டு புள்ளையை பார்த்துட்டு இருக்கியா அன்பு.?" என்று பாட்டிதான் ஆரம்பித்து வைத்தாள். அன்புவிற்கு பாட்டியின் மீது கோபமாக வந்தது.

"சாப்பிடும்போதா இதையெல்லாம் கேட்பிங்க.?" பாட்டியின் கேள்வியை திசை திருப்ப முயன்றாள் அம்மா.

அன்பு தட்டில் பரிமாறிய உணவை அவசரமாக உண்டு முடித்தான்‌. அவன் எழுந்து செல்ல இருந்த நேரத்தில் "பாட்டி கேள்விக்கு பதில் சொல்லிட்டு போடா.." என்றார் ஆறுமுகம்.

"ஏன் அவளை லவ் பண்ண கூடாதா.?" உள்ளுக்குள் உதறலோடு இதை கேட்டான் அன்பு.

அப்பா உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மகனை திரும்பி பார்த்தார்.

"தலைக்கு மேல வளர்ந்துட்ட இல்ல.? அதான் எதிர்த்து கேள்வி கேட்கற.." என்றார்.

"அப்படியில்லப்பா. அவளை பிடிச்சிருக்கு. அவளே அவங்க வீட்டுல சொல்லிட்டா. நான் இதை உங்ககிட்ட சொல்லாம இருக்க கூடாது.." என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவர் "இப்ப நாங்க கேட்டுதானே சொன்ன.? நீயா ஒன்னும் சொல்லலியே..!" என்றார்.

"அ.. அப்பா அது.. நான் சொல்லலாம்ன்னுதான் இருந்தேன். ஆனா அதுக்குள்ள பாட்டி கேட்டுட்டாங்க. பிடிச்சிருக்கு. உங்களுக்கும் அவளை பிடிக்கும்ன்னு தெரியும். அவளை போல மருமகளை நீங்க எங்கே போய் தேட போறிங்க.? நல்ல பொண்ணுப்பா.. உங்களை நல்லா கவனிச்சிப்பா.." என்றவனுக்கு அரைகுறை பயத்தில் என்ன சொல்கிறோம் என்றே சரியாக தெரியவில்லை.

"அவ எங்களையெல்லாம் நல்லாதான் கவனிச்சிப்பா.. ஆனா நீயும் அவளும் இல்ல சண்டை போட்டு உருண்டுட்டு கிடப்பிங்க. உங்களை யாரு விலக்கி வச்சிக்கிட்டே இருக்கறது.?" பாட்டி தன் சந்தேகத்தை கேட்டாள்.

"இனி சண்டை போட்டுக்க மாட்டோம் பாட்டி.." என்று அவன் சொன்ன நேரத்தில் அப்பா உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றார்.

"பிடிச்சிருக்குன்னா அதை மனசோடு வச்சிக்க. பார்க்கற இடத்துல எல்லாம் சேர்ந்து சுத்துறது.. கண்டமேனிக்கு திரியறதுன்னு இருக்காதிங்க. நாங்களா யோசிச்சிட்டு எங்களுக்கு ஒத்து வந்தா பேசுறோம். இல்லன்னா அத்தோடு விட்டுடுங்க.." என்றார்.

"அவளை விடவெல்லாம் முடியாதுப்பா.." அன்பு சட்டென்று மறுமொழி கூறவும் நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்த அப்பா "திமிரை கொஞ்சம் அடக்கு.." என்றார். அன்பு மீண்டும் பேசும் முன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

மகனின் அருகே வந்த அர்ச்சனா "அதுதான் அவங்களே பேசுறதா சொல்றாங்க இல்ல. அப்புறம் என்னடா.? நீயும் அப்பா மேல நம்பிக்கை வைடா‌‌.." என்றாள்.

"இவர் மேலயா.? அவங்க அப்பா ஒத்துக்கிட்டாலும் இவர்தானே குட்டையவே குழப்பி விடுவாரு.!" புலம்பியபடி தன் அறையை நோக்கி நடந்தான்.

"அவங்க இரண்டு பேரும் நேசிக்கறாங்கறதை என்னாலதான் நம்பவே முடியல.." பாட்டி தன் சந்தேகத்தை புலம்பலாக சொன்னாள்.

"இரண்டும் பேருமே நல்ல பசங்கதான்ம்மா.." என்ற அர்ச்சனா உணவு பாத்திரங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

இரவெல்லாம் அன்புவும் அபிநயாவும் மாற்றி மாற்றி சேதி அனுப்பிக் கொண்டனர். இரு தந்தையரும் என்ன பேசியிருப்பார்கள் என்று யூகித்து பார்த்தனர். பதில்தான் கிடைக்கவில்லை.

மறுநாள் தீபக்கிடம் உதவி வேண்டினாள் அபிநயா. அவனுக்குமே கூட தந்தைகள் பேசி கொண்டது பற்றி எதுவும் தெரியவில்லை. அபிநயாவிற்கு தன் தந்தையின் மீது நம்பிக்கை இருந்தது. அவர் தன் மகளின் மனம் வாட விடமாட்டார் என்று நம்பினாள்.

அபிநயாவின் பிறந்தநாளுக்கு இரு வாரங்களே இருந்தது. அதனால் அப்பா அன்றைய மாலை வேளையில் அவளுக்கு புது உடை எடுக்க கடைக்கு அழைத்துச் சென்றார்.

அதே கடையில் அன்புவும் குணாவும் சட்டைகள் எடுக்க வந்திருந்தனர். குணா அபிநயாவை கண்டுவிட்டு கையை அசைத்தான். அபிநயாவும் கையசைத்தாள். அப்பா அன்புவை பார்த்து முறைத்தார். "பொறுக்கி பாலோவ் பண்ணிட்டு வந்திருக்கான்.." என்று முனகினார்.

அவருக்கு அன்புவை மருமகனாக ஏற்றுக் கொள்ள சம்மதம்தான். அதற்கு காரணம் அவர் தன் மகள் மீது வைத்திருந்த பாசமும் பக்கத்து வீட்டு பையன் மேல் வைத்திருந்த அரைகுறை நம்பிக்கையும்தான். ஆனாலும் கூட அவரால் அன்புவை‌ பார்க்கும் நேரங்களில் திட்டாமல் இருக்க முடியவில்லை. அவன் தன் மகளை தன்னிடமிருந்து பிரிப்பதாக நினைத்து பயந்தார்.

அப்பா திட்டியது கேட்டு உதட்டை கடித்தபடி தலையை குனிந்தாள் அபிநயா. எதேச்சையாக நடப்பதற்கு கூட இப்படி கோபப்படுகிறாரே என்று எண்ணினாள்.

அபிநயா அங்கிருந்து விற்பனை பெண்ணிடம் சுடிதாரை எடுத்து காட்ட சொன்னாள். விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடைகளை எடுத்து மேஜை மேல் அடுக்க ஆரம்பித்தாள் அந்த பெண்.

அதே நேரத்தில் அந்த துணிக்கடையின் அருகில் இருந்த ஒயின்ஷாப்பின் பின் வாசலருகே வந்து நின்றார் அரை போதையிலிருந்த மது பிரியர் ஒருவர். "எனக்காடா கடனுக்கு சரக்கு தர மாட்டேங்கற.? எனக்கு விக்காத சரக்க இனி நீ யாருக்கும் விற்க கூடாது.." என்றார்.

வினோத்தின் பார்வை அந்த கடையிலிருந்த உடைகளின் மீது சுழன்றது. அந்த வரிசையின் கடைசியில் இருந்தது புடவைகளின் தொகுதி. வந்திருந்த பெண்மணி ஒருத்திக்கு புடவைகளை பிரித்து காட்டிக் கொண்டிருந்தார் கடையின் விற்பனையாளன். வினோத் புடவைகள் இருந்த இடத்திற்கு நடந்தார். இளம் பச்சையில் அழகாய் இருந்தது ஒரு புடவை. அதை தனக்கு தர சொல்லி வாங்கி கொண்டார். மகளிடம் திரும்பி வந்தார்.

"இது உங்க அம்மாவுக்கு நல்லாருக்கும்தானே.?" என்றார் புடவையை காட்டி.

அபிநயா புன்னகையோடு புடவையை தொட்டு பார்த்தாள். அழகாக இருந்தது. அதைவிட தந்தை அதை தேர்ந்தெடுத்தில் இன்னும் அதிக அழகாக தோன்றியது.

"சூப்பரா இருக்குப்பா.." என்றாள். தன் கையிலிருந்த சுடிதாரை தந்தையிடம் காட்டினாள். "இது ஓகேவாப்பா.?" என்றாள்.

"செமையா இருக்கு.." என்றவர் அவள் கையிலிருந்த சுடிதாரை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தார்.

மதுபிரியர் தன் முதுகு பக்கம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கையில் எடுத்தார். அதன் மூடியில் மீது இருந்த திரியில் நெருப்பை பற்ற வைத்தார். கடையின் ஜன்னலுக்குள் அந்த பாட்டிலை விட்டெரிந்தார். அவர் வீசிய வீசலில் ஜன்னலுக்கு நேராக இருந்த பத்து இருபது மதுபாட்டில்களும் தரையில் விழுந்து உடைந்தன. மண்ணெண்ணெய் பாட்டில் உடைந்த அதே கணத்தில் தரையில் பரவிய மதுவிலும் நெருப்பு பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறை முழுக்க நெருப்பு பரவியது. சூட்டின் காரணமாக மற்ற மது பாட்டில்களும் படீர் படீரென வெடித்து சிதறின. மதுவின் துளிகள் சிந்திய இடமெல்லாம் நெருப்பு பிடித்தது.

கேஷ் கவுண்டர் அருகே நின்றிருந்த அன்பு அபிநயாவை பார்த்து புன்னகைத்தான். அபிநயாவின் இதழ்கள் விரிந்தன. அன்புவின் பார்வை அடுத்ததாக அவளுக்கு முன்னால் வந்துக் கொண்டிருந்த வினோத்திடம் வந்தது. வேட்டையாடும் சிங்கத்தை போல இருந்தது அவரின் முகம். குளிர்ந்த தண்ணீரில் தலையோடு மூழ்கியது போல உணர்ந்தவன் சட்டென திரும்பி கொண்டான்.

அன்புவின் முகத்தை கண்டு அபிநயாவிற்கு சிரிப்பு வந்தது. வந்த சிரிப்பை அடக்க வாயை பொத்திக் கொண்டாள்.

எங்கோ யாரோ கத்தினார்கள். அபிநயா பின்னால் திரும்பி பார்த்தாள். துணிக்கடையின் ஒரு ஓரத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. உள்ளிருந்தும் மாடியிலிருந்தும் ஓடி வந்த ஆட்கள் அவளை இடித்து தள்ளிக் கொண்டு வெளியே ஓடினர். அபிநயா பயத்தோடு தந்தையை தேடினாள். சட்டென்று பரவி விட்ட புகையில் தந்தையை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அப்பா.." என்று அழைத்தவளின் சுவாசத்தில் புகை நிரம்பியது.

தூரத்தில் யாரோ கத்தும் குரல் கேட்டு நிமிர்ந்தான் அன்பு. அவனருகே நின்றிருந்த குணா "கடையில நெருப்பு பிடிச்சிருக்குடா.. வா வெளியே போகலாம்.." என்று அவனின் கையை பிடித்து இழுத்தான்.

அன்பு அபிநயாவை தேடினான். அவன் பார்க்கும்போது அபிநயாவின் பின்னால் இருந்த துணி அடுக்குகள் நெருப்பால் எரிந்தன. அபிநயா அவளை தாண்டி ஓடியவர்களை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்‌.

நண்பனின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டான் அன்பு. வெளியே ஓடி வந்த கூட்டத்தில் புகுந்து உள்ளே ஓடினான்.

அபிநயா "அப்பா.." என்றாள். முன்னால் செல்ல முயன்றாள். அவளின் முன்னால் இருந்த மர நாற்காலியில் தடுக்கி தரையில் விழுந்தாள்.

கூட்டத்தின் இடையில் மகளை காணாமல் தவித்துக் கொண்டிருந்த வினோத்தை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் ஒரு சிப்பந்தி. அவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினார் வினோத். ஆனால் அவனின் கை கடையின் வெளியே வந்தபிறகுதான் அவரை விட்டது.

"ஏன்டா டேய்.. பாருக்குள்ளயா நெருப்பு திரியோடு மண்ணெண்ணெய் பாட்டில் வீசுற.?" என கேட்டு மதுக்கடைக்கு தீ வைத்த மது பிரியரை அடித்துக் கொண்டிருந்தார் அந்த கடையின் சிப்பந்தி ஒருவர். மதுபான கடையை சுற்றி இருந்த மற்ற கடைகள் அனைத்தும் நெருப்பிற்கு இரையாகி கொண்டிருந்தன.

அன்பு தன் கண்களை மறைத்த புகையின் இடை புகுந்து ஓடினான். "அபி.." என்று கத்தினான்.

"அன்பு.." அபிநயாவின் பயகுரல் வந்த திசையில் ஓடியவன் அவனும் அதே நாற்காலி தடுக்கி தரையில் விழுந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN