முகவரி 33

P Bargavi

New member
காலையிலேயே பிள்ளைகளுடன் பூஜை அறையில் இருந்தாள் அனு.

“ம்மா... இவங்க யாரு?” அங்கிருந்த சக்தி, பிரேமியின் புகைப்படங்களைக் காட்டி ஜீவா கேட்க

அனு, “இவங்க தான் உன் பெரியம்மா... பெரியப்பா தங்கம். இனிமே தினமும் காலையில் இவங்க இருவரையும் நீங்க இரண்டு பேரும் வணங்கிட்டு தான் வெளியே போகணும்... சரியா?”

“ஹ்ம்ம்... எனக்கு பெரியப்பாவை பிடித்திருக்கு...” சந்தன பொட்டிட்டு பூ மாலைக்குள் இருந்த சக்தியின் புகைப்படத்தைத் தொட்டு மான்வி முத்தம் வைத்த படி சொல்ல

“எனக்கு பெரியம்மா... பெரியப்பா ரெண்டு பேரையும் பிடித்திருக்கு” என்ற ஜீவா அவளைப் பின்பற்றி அதையே செய்ய...

“டேய்... எனக்கும் தான் டா ரெண்டு பேரையும் பிடித்திருக்கு...” சிறு குழந்தைக்கே உள்ள குணத்தால் மான்வி அவனிடம் மல்லுக்கு நிற்க...

“மான்வி, போதும்... இதென்ன எப்ப பாரு அவனை டேய் டேய் சொல்றது... ஒழுங்கா தம்பினு கூப்பிட்டு பழகு. ஜீவா, நீயும் தான் அவளை அக்கானு கூப்பிடு” தாய்க்கே உள்ள குணத்தில் இவள் இரு பிள்ளைகளையும் கண்டிக்க

“முடியாது” இது மான்வி.

“நோ” இது ஜீவா. இருவரும் ஆளுக்கொரு பக்கம் கையைக் கட்டிக் கொண்டு திரும்பி நிற்க…

அனு, “ஸ்ஸ்ஷப்பா.... முடியலை... எது இருக்கோ இல்லையோ... அப்பாவை மாதிரியே இரண்டுக்கும் பிடிவாத குணம் மட்டும் இருக்கு”
தங்கள் ஹீரோவான அப்பாவைப் பற்றி சொன்னதும் இருவரும் “களுக்” என்று சிரிக்க

மான்வி, “அப்போ அப்பா மாதிரி இவனை நான் தங்கம்னு கூப்பிடுறேன்”

“அப்போ நானும் இவளை டாடி மாதிரி பேபினு கூப்பிடுறேன்” ஜீவா அவன் பங்குக்கு சொல்ல

‘அந்த மனுஷன் மாதிரியே... காலம் முழுக்க என் பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு இதுங்களை இப்பவே உருவாக்குகிறார் பாரு’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவள்...

“ஏன்... ஏன்.. அப்போ இருவரும் அம்மா பேச்சைக் கேட்க மாட்டேன்னு சொல்றீங்க… அப்படி தானே?” அனு சற்றே கோபமான குரலில் கேட்க

அதில், “ம்மா...” என்ற படி இரண்டு கன்றுகளும் தாயின் காலைக் கட்டிக் கொள்ள... அவர்களின் சமாதான செயலில் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டவள்,

“அம்மா சொன்னா கேட்பீங்க தானே?” என்றபடி இருவரின் நெற்றியிலும் இவள் விபூதி குங்குமத்தை பூசி விட... இருவரும் ஆமாம் என்பதாய் தலையை ஆட்டியவர்கள்...

“வா தம்பி நாம போலாம்” என்று மான்வியும்...

“வா அக்கா... போலாம்” என்று ஜீவாவும் ஒரு சேர சொல்லிய படி.. இருவரின் தோள்களின் மேலும் கையைப் படர விட்டபடி இருவரும் செல்ல... இதையெல்லாம் அறை வாயிலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த மிருடனின் நெஞ்சமோ... சொல்லொனாத நிம்மதியில் ஆழ்ந்தது.

ஏற்கனவே மனைவியின் குணம் பற்றி அறிந்திருந்தவன் என்பதால்... இன்று பூஜை அறையில் தோழனின் புகைப்படத்தைக் கண்டவனால்... நமக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை என்பது தான் முதலில் அவனுள் உதயமானது. இவன் உள்ளே வர... கணவனைக் கண்டவள் புன்னகை முகமாக தன்னவனின் நெற்றியில் இவள் விபூதி குங்குமத்தை பூச... அந்த உரிமை கலந்த செயலில் தன்னவளை இழுத்து அணைத்தவன்…

“தேங்க்ஸ் டி” என்க, அவளும் இது என் கடமை என்பதாய் பாந்தமாய் கணவனின் நெஞ்சில் தலை சாய்த்து கொண்டவள்... பின் தாங்கள் இருக்கும் இடம் நினைவு வர... இவள் சற்றே விலக... “ஊஹும்... இப்படியே இருடி” என்றவன் தன் அணைப்பை இறுக்க...

“ப்ச்சு.... போதுமே... இடத்தைக் கொடுத்தா... நீங்க மடத்தைப் பிடிப்பீங்களே...” மனைவி சன்னக் குரலில் சொல்ல

“ஹேய்... முழுசும் எனக்கு தான் டி சொந்தம்... இதிலே இடம் என்ன மடம் என்ன?”

‘இடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது அவனின் விரல்கள் மனைவியின் இடையிலும்... அதே போல் மடம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, தன்னவளின் கழுத்திலும் விளையாடிய படி அவன் ஒருவித மயக்கத்தோடு சொல்ல...

அதில் இன்னும் புன்னகை விரிய, “அச்சோ! விடுங்க” இவள் சிணுங்க

அவனோ, “ம்ஹும்” என்ற படி தன் பிடிவாதத்தில் நிற்க

“இது சரி வராது... இருங்க பிள்ளைகளை கூப்பிடுறேன். ஜீவா.. மான்வி” இவள் போலியாய் மிரட்டிய படி சத்தமேயில்லாமல் குழந்தைகளை அழைக்க

அதற்கெல்லாம் அசருபவனா மிருடன்... “அது அப்படி இல்லை ஷிதா... இப்படி சத்தமா கூப்பிடணும்... ஜீவ்...” அவன் கத்தலில் சட்டென கணவனின் வாயைத் தன் கை கொண்டு அடைத்தவள்,

“ஹேய் திருடா... என்ன இது... நாம எங்கே இருக்கோம்... இப்போ குழந்தைங்களை கூப்பிட்டு அலப்பறை பண்றீங்க... விடுங்க...” அனு கோபமாய் சொல்வது போல் கெஞ்ச...

மனைவியின் திருடன் என்ற அழைப்பில் கண்கள் மின்ன... இதழ் குவித்து சத்தமில்லாமல் தன்னவளின் உள்ளங்கைக்கு மிருடன் முத்தமிட... அதில் நாணத்தோடு இவள் அவசரமாய் கையை விலக்க... “ரொம்ப நாள் கழித்து... இன்று என்னை திருடன்னு அழைத்து இருக்க டி....” என்று காதலோடு சொல்லியவன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதிக்க

இத்தனை நாள் ஏன் அந்த அழைப்பு இல்லை என்ற கேள்வியில்... அனுவுக்குள்... பழைய விஷயங்கள் சரம் தொடுக்க... உடனே முகம் கசங்க விழிகளில் தவிப்புடன் இவள் கணவனைக் காணவும்... “ஷிதா...” அவன் ஏதோ சொல்ல முற்படும் நேரம்…

“அனு... எங்கே இருக்க?” என்ற படி வெண்பா குரல் கொடுக்க... அந்த அழைப்பில் மனமே இல்லாமல் விலகினார்கள் கணவன் மனைவி இருவரும்.

அன்று மாலை மாடி தோட்டத்தில் பிள்ளைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள் அனு. கண்களைக் கட்டிக் கொண்டு குழந்தைகளின் உயரத்திற்கு தோதாய் முட்டி போட்டு இவள் பிள்ளைகளைத் தேட... அவர்களோ தாய்க்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதில் சோர்ந்தவள், “ப்ச்சு... போங்கடா. தங்கங்களா... அம்மா ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். இனி நீங்க தான் அம்மா கிட்ட வந்து சேரணும்... யார் முதலில் வரப்போறீங்க?” முட்டி போட்ட நிலையில்... இரண்டு கைகளையும் சிறிதே விரித்து அணைத்தபடி இவள் கேட்க,

இரண்டு வாண்டுகளும் வாயே திறக்கவில்லை… ஏனோ தாயிடம் நெருங்கவும் இல்லை. ஆனால் சிரிப்பு சத்தம் மட்டும் அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது….

“தங்கங்களா வந்துடுங்க குட்டீஸ்… அம்மா பாவம் இல்லை...” இவள் கெஞ்ச… அதே நேரம் அங்கு குழந்தைகளின் சிரிப்பு சத்தம் மறைய... அங்கு வேறு எந்த சத்தமும் இல்லாமல் போக... அனுவுக்குள் ஒரு மாற்றம்! அவர்... அவர்... என் திருடன்... பின்னே? கணவனின் வாசம் அவளுக்குத் தெரியாதா என்ன... அவள் உள்ளுணர்வு அதையே சொல்ல... இவள் சுதாரிப்பதற்குள் அவளை மாதிரியே முட்டி போட்டு தன்னவளின் கைகளுக்குள் அடைக்கலம் ஆகியிருந்தான் மிருடன்.

பிள்ளைகளுக்காகத் தன் கைகளை இவள் சிறியதாய் விரித்திருக்க... அதில் தன் திமிறிய உடலை இவன் அடைக்க... இருவரின் உடல்களும் நெருப்பாய் உரசிக் கொண்டு அடைக்கலம் ஆனது.

“ஹேய்... யேய்... அப்பா தோற்றுட்டார்... அப்பா தோற்றுட்டார்” குழந்தைகள் இருவரும் ஆரவாரமிட்ட படி அவனிடம் நெருங்க... இரண்டு பக்கமும் தன் இரு பிள்ளைகளுடன் சேர்த்து... மனைவியை இன்னும் இறுக்க அணைத்துக் கொண்டவன்,

“உங்க அப்பா... உன் அம்மா கிட்ட தோற்று ரொம்ப நாளாச்சு தங்கங்களா” என்றவன்

“ஏன் ஷிதா... நான் உன் கிட்ட தோற்று தானே நிற்கிறேன்...” இவன் தன்னவளின் காதுமடலை உரசிய படி கேட்க, அனுவுக்குள் மின்சாரம் பாய்ந்தது.

“அப்பா எப்பவோ வந்துட்டாங் ம்மா... ஆனா எதுவும் சொல்லக் கூடாதுன்னு வாயில் விரல் வைத்து எங்களை தடுத்துட்டாங்க... ஆனாலும் அப்பா தோற்றுட்டார்... அப்படி தானே ப்பா...” மகள் ஆர்ப்பரிக்க....

“ஆமா டா.. பேபி” இவன் கொஞ்ச... இதில் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் கணவனின் கை அணைப்பிலேயே இதயம் படபடக்க ஒன்றி இருந்தாள் அனு.

அதில் மிருடன், “எனக்கும் இப்படியே இருக்க தான் ஆசை ஷிதா. ஆனா கால் வலிக்குது டி... பேசாம உன்னையை தூக்கிக்கவா?” சரசமாய் இவன் கேட்கவும், உடல் உதற... கண் கட்டை விலக்கியவள்... கணவனிடமிருந்து விடுபட்டவளாக கால்கள் பின்ன அங்கிருந்து ஓடினாள் அனு.

அவளின் இதயமோ அதன்பிறகு அன்று முழுக்க முரசு கொட்டிக் கொண்டே இருந்தது. எங்கே… அவளை மிருடன் விட்டால் தானே இதய முரசு அடங்கும்? வெளிப்படையாக சீண்டவில்லை என்றாலும் சின்னச் சின்ன உரசல்களுடன் கணவனின் நெருக்கம் அவளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

இரவு, பிள்ளைகள் சீக்கிரமே உறங்கி விட... மிருடன் அலுவலக அறையில் ஏதோ வேலையாய் இருக்கவும்... சற்று நேரம் கணவன் வரவுக்காக காத்திருந்த அனு... பின் படபடக்கும் நெஞ்சுடன் இவள் சற்றே கண்ணயர... ஆழ்ந்த உறக்கம் இல்லாத ஒருவித மோன நிலையில் படுத்திருந்த நேரம்… பூனை நடையிட்டு உள்ளே வந்த மிருடன்… மனைவியை நெருங்கி… அவள் முதுகில்... சூடான மூச்சுக் காற்றுடன் தன் இதழைப் பதிக்க. அதில், உடல் தூக்கி வாரிப் போட... வெளிப்படையாகவே அனுவின் உடல் உதறியது...

“கூல் செல்லம்மா... நான் தான் டி...” தன்னவளின் இடையில் கை கொடுத்து தன்னுள் அவள் முதுகை இறுக்கியவன்... அவள் கன்னம் உரசியபடி தாபத்தோடு சொல்ல...

அவளுக்கோ கணவனின் வார்த்தைகள் ‘நான் தான் டி’ என்பது... ‘வேணும் டி’ என்பதாக கேட்க, இன்னும் அவள் உடல் நடுங்கியது. அதைத் தன் தேடலின் வழியாக இவன் போக்க நினைக்க... அவளோ தடுக்க... முதலில் தன் பிடிவாதத்தைக் காட்டியவன்... பின் தன் காதலாலும், முத்தத்தாலும் தன்னவளிடம் அவன் போராட…


கணவனின் முத்தத்திற்கு அனு இளகினாளா என்று கேட்டால், அது தான் இல்லை. அவன் ஆயிரம் தான் தன் பிடிவாதத்தைத் தன் தேடலில் காட்ட முற்பட்டாலும்... அவனின் விரல்களோ ஒரு வித கெஞ்சலுடன் தான் தன்னவளின் மேனியில் பயணித்தது.

அதை உணர்ந்து கொண்டவளோ... ‘என் மிரு என்னிடம் கெஞ்சுவதா... இந்த நிலையிலும் என் மனம் முக்கியம் என்று யோசித்து மென்மையைக் கையாள்பவரின் தேவை எனக்கு முக்கியம் அல்லவா?’ இந்த எண்ணம் தான் அவளை அனைத்தையும் மறந்தவளாக தன் இறுக்கம் தளர்ந்தவளாக கணவனுடன் ஒன்ற வைத்தது... கணவன் மனைவி இருவரும் தங்கள் உலகத்தில் லயித்திருந்த நேரம்…

“டாடிஈஈஈ....” மகனின் அலறலில்... அடுத்த நொடி தன்னவளிடமிருந்து பிரிந்தவன்

“என்ன தங்கம்... இதோ அப்பா இங்கே தான் இருக்கேன் டா” என்ற படி இவன் மகனிடம் செல்ல

மகனின் அலறலில் அனுவுக்குள் இருந்த காதல் மயக்கம் சட்டென விலகி கோபம் விழித்துக் கொள்ளவும்... தன்னிலையை உணர்ந்தவளுக்குத் தன் மீதே கோபமும், வெறுப்பும் எழ... நடந்ததை நினைத்து விதிர்விதிர்த்துப் போனவளாக கண்ணீருடன் தன்னை சரி செய்தவள்... பின் கணவனைத் திரும்பியும் பார்க்காமல் பால்கனிக்குச் சென்று அடைக்கலம் ஆனாள் அனு.

‘கொஞ்ச நேரத்தில் என்ன செய்ய இருந்தேன்... அவர் எனக்கு செய்ததை மறந்திட்டேனா.. இல்லை அவரை மன்னித்துவிட்டேனா... ஆனால் மன்னிக்கக் கூடிய ஒன்றை அவர் எனக்கு செய்யவில்லையே! அதேபோல் மறப்பதா... அது எனக்கு மறக்குமா?’ கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்து... இவள் தன்னுள் கரைய…

உள்ளே... “ஏதோ கனவு கண்டிருப்பான் போல ஷிதா... அதான் கத்திட்டான். நான் பக்கத்திலிருந்து தட்டிக் கொடுத்ததும் இப்போ தூங்குகிறான் பாரு” இயல்பாய் மனைவியிடம் சொல்லியபடி இவன் திரும்ப... சற்று முன் இருவரும் சயனித்த இடத்தில் அவன் மனைவி இல்லை. ஏன், அந்த அறையிலேயே அவள் இல்லை என்பதை அறிந்தவன் பின் அவளைத் தேட...

பால்கனியில் அமர்ந்து முகத்தைக் கால்களில் புதைத்த படி இருக்கும் மனைவியைக் கண்டவனுக்கு, சிறிது நேரத்திற்கு முன் தாங்கள் இருவரும் இருந்த உலகம் அவனுக்குத் தெரிய வரவும்... ஒருவித இயலாமையுடன் கோபம் சூழ்ந்தது... ‘சாக துணிந்த உன்னை இதுவரை ஒன்றும் கேட்காமல் விட்டேன் இல்லை…. பின்னே நீ இதையும் தான் செய்வ….’ என்ற நினைவில் ஆத்திரத்துடன் தலையை அழுத்தமாக கோதியவனோ

“போடி...” என்ற உச்சரிப்புடன் கட்டிலில் படுத்து விட்டான் அவன். மனைவியைத் தேடிச் சென்று சமாதானம் செய்யவோ... கெஞ்சவோ அவனுக்குத் துளியும் விருப்பம் இல்லை. அப்படி செய்தால் அவன் மிருடன் அல்லவே! அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவாக கழிந்தது.

காலையில் உணவு நேரத்தில் தான் கணவன் மனைவி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அனு, தான் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள... மிருடனோ வெளிப்படையாக உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன்... எதிலோ தோற்ற மனநிலையுடன் அமர்ந்திருக்க... அனுவின் இதயத்திலோ வலித்தது.

கணவனின் சுளித்த புருவங்களை நீவி... அவன் முகத்தைத் தன் நெஞ்சில் பதித்து... ‘நீங்கள் என்னிடம் கூட தோற்கக் கூடாது’ என்ற சொல்லுடன் இந்த வினாடியே தன்னையே கணவனிடம் ஒப்புவிக்க அவள் தயார் தான். ஆனால், இதுவரை நடந்ததும்… இதற்கு பிறகு நடக்கப் போவதும்... அதை எப்படி அவள் தாங்குவாள்?

இப்படியான தன் சிந்தனையில் இருந்தவளை, “ஹான்! டேய் மிருடா… அனு, கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கா பார்... சுமங்கலிப் பொண்ணு அப்படி இருக்கக் கூடாது. ஒரு நல்ல நாள் பார்த்து கட்டிடு டா” இப்படியாக வெண்பாவின் குரல் இடைவெட்டவும்

அடுத்த நொடியே தயக்கமே இல்லாமல் “முடியாது...” என்று நிர்தாட்சண்யமாக மிருடன் மறுக்க...

“அண்ணி… அது வந்து...” என்று அனுவின் குரலும் ஒருசேர ஒலிக்கவும்...


இருவரின் முகங்களையும் பார்த்த வெண்பா, “எந்த நேரமும் முட்டிகிட்டே இருங்க. இனி இது தான் உங்க வாழ்க்கை... எப்படியோ சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க” என்றபடி விலகிச் செல்ல, அதன் பின்னர் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் காண விருப்பமில்லாதவர்களாக தவிர்த்தனர்.
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN