சிக்கிமுக்கி 65

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
துணிக்கடை நெருப்பில் எரிந்துக் கொண்டிருந்தது. கடையின் உள்ளே இருந்தவர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தனர். முண்டியடித்துக் கொண்டு அனைவருமே வந்து விட்டனர். ஆனால் அபியும் அன்புவும் மட்டும் உள்ளே சிக்கிக்கொண்டனர். இருவருமே ஒரே நாற்காலி தடுக்கி விட்டதன் காரணமாக தரையில் விழுந்து கிடந்தனர். அதற்குள் கடையை விட்டு வெளியே செல்லும் வழியெங்கும் நெருப்பால் சூழ்ந்து விட்டது.

கரும்புகை கடையெங்கும் பரவிக் கொண்டிருந்தது. அபிநயா இரும்பினாள். மூச்சையடைக்கும் போல இருந்தது அவளுக்கு.

அன்பு தான் விழுந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றான்.

"அபி.." என்றழைத்தான். அன்புவின் குரல் கேட்ட பிறகே அபிநயாவிற்கு உயிர் வந்தது போல இருந்தது.

"ஒரே நெருப்பா இருக்கு அன்பு.." புகையில் திணறலாக பேசியவளின் அருகே வந்தான் அன்பு.

விழுந்து கிடந்தவளை தூக்கி நிறுத்தினான். அவனின் கை பற்றி எழுந்து நின்றவள் புகையின் இடையே தெரிந்த அன்புவை கவலையோடு பார்த்தாள்.

"இந்த நெருப்புல செத்துடுவோமா.?" என்றாள்.

"பிழைச்சிடலாம் அபி.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். இரு புறமும் நெருப்பு தகதகவென எரிந்தது. துணிக்கடை என்பதால் நெருப்பு மளமளவென பிடித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அபிநயாவின் கைப்பிடித்தவன் கடையின் பின் பகுதியை நோக்கி ஓடினான்.

"எங்க அப்பாவை காணோம்.." என்றவள் அவனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள பார்த்தாள்.

"அவர் வெளியே போயிட்டாரு. என்னை நம்பு. என்னோடு வா.." என்றவன் பின் திசை நோக்கி ஓடினான்.

"அந்த சைட்ல வழி இல்ல அன்பு.." என்றவளை இழுத்துக் கொண்டு ஓடியவன் "வழி இருக்கு.. நான் பார்த்திருக்கேன்.." என்றான்.

கடையின் வெளியே வந்த பிறகே அபிநயா தன்னோடு இல்லை என்பதை அறிந்தார் வினோத். மகள் எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினார்.

"அபி.." என்று கத்தி அழைத்தவர் கடையினுள் பாய இருந்த நேரத்தில் அவரின் தோளை பற்றி நிறுத்தினார்கள் சுற்றி இருந்தவர்கள்.

"என் பொண்ணு உள்ளே ‌இருக்கா.. என்னை விடுங்க.." என கத்தியவர் அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க போராடினார்.

"கடை முழுக்க நெருப்பு. உள்ளே போனா நீங்களும் எரிஞ்சிடுவிங்க.. இங்கேயே இருங்க.." என்றனர் சுற்றி இருந்தவர்கள்.

அவர் எவ்வளவு முயற்சித்தும் கூட அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நான்கைந்து பேர் அவரை தங்களோடு பிடித்து நிறுத்தியிருந்தனர்.

வினோத்தின் மனதில் பரவிய பயம் அவரை முழுதாக ஆக்கிரமித்துவிட்டது. தன் மகள் இந்த நெருப்பில் என்ன செய்கிறாளோ என்ற எண்ணம் அவரை நெருப்பே இல்லாமல் வேக வைத்தது.

"அபி.. அபி.. மதியமே கடைக்கு கூப்பிட்டாளே.. நான்தான்னே எனக்கு வேலை இருக்குன்னு சொல்லி இந்த நேரத்துக்கு கூட்டி வந்தேன்.. வெளியே வந்துடு அபி.." என்றார் தலையில் அடித்தபடி. சுற்றியிருந்தவர்களின் பிடி இறுக்கமாக இல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் நெருப்பில் நிச்சயம் பாய்ந்திருப்பார் அவர்.

அவரின் கதறல் சுற்றியிருந்தவர்களை தாக்கவில்லை. அவர்களுக்கு நெருப்பை வேடிக்கை பார்ப்பதே முக்கிய வேலையாக இருந்தது.

கடையின் நெருப்பு கூரை வரை பற்றியது. சுற்றியிருந்த கடைகளும் கூட சேர்ந்து எரிந்தது. பக்கத்திலிருந்த மதுபான கடையிலிருந்துதான் நெருப்பு பரவியதாக அனைவரும் பேசிக் கொண்டார்கள். சந்தனக்கொடிக்கால் மக்கள் பலரும் அந்த கடை வீதியில் கூடி விட்டிருந்தனர்.

மக்களின் பேச்சு குரல்களை தாண்டி "அன்பு.." என கடையை பார்த்தபடி கத்திக் கொண்டிருந்த குணாவின் குரல் கேட்டது வினோத்திற்கு.

"அவனும் உள்ளே இருக்கானா.? ஆனா எப்படி..‌ அவன்தான் முதல்லயே வெளியே வந்துட்டானே. நான் பார்த்தேனே.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவர் அன்புவிற்கு என்ன ஆக போகிறதோ என்று அதற்கும் சேர்ந்து பயந்தார்.

நெருப்பின் காரணமாக அபிநயாவிற்கு மொத்த உடலும் வியர்வையானது. பயத்தின் காரணமாக நெஞ்சம் திக் திக்கென்றது.

புகையில் நெருப்பு எரியும் இடம் கூட சரியாக தெரியவில்லை அன்புவிற்கு. நெருப்பு இருவரையும் சுற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அபிநயாவின் துப்பட்டாவில் நெருப்பு பற்றியது கண்டு அதை பிடுங்கி தூர எறிந்தான் அன்பு.

நெருப்பின் இடையே புகுந்து பின் வாசலை நெருங்கியதும் சாத்தியிருந்த பின் கதவின் தாழ்ப்பாளை பற்றியவன் "அம்மா.." என்றபடி கையை பின்னால் இழுத்தான்.

"அன்பு என்ன ஆச்சி.?" அபிநயா பதட்டமாக கேட்டாள்.

"கை சுட்டுடுச்சி.." என்றவன் கடையை பார்த்தான். அவர்களின் அருகே கொஞ்சமாக எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு கடையின் பற்ற பகுதிகளில் நான்கு மடங்கு வேகத்தில் எரிந்துக் கொண்டிருந்தது. அந்த நெருப்பில் சிக்கினால் ஐந்தே நிமிடத்தில் ஆள் காலி என்று புரிந்துக் கொண்ட அன்புவிற்கு அந்த நெருப்பு தங்களின் அருகே வரும் முன் வெளியேற வேண்டிய அவசியம் இருந்தது. சுற்றி இருந்த நெருப்பின் வேகம் அதிகரிக்கும் முன் தான் வேகமாக செயல்பட வேண்டும் என்று நினைத்தவன் பற்களை கடித்துக்கொண்டு மீண்டும் தாழ்ப்பாளில் கையை வைத்தான்‌. சூடு உள்ளங்கையின் தோலை உருக்கியது. வேகமாக அந்த தாழ்ப்பாளை தள்ளி கதவை திறந்தான்.

"அபி.." என்றான் அவள் பக்கம் திரும்பி.

"அன்பு.." என்றபடி அவனின் கையை பற்றிக்கொண்டு வெளியே ஓடினாள்.

அது ஒரு குறுகலான சந்து. கடைக்கார சிப்பந்திகள் கடைக்கு வந்து செல்ல பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தின் வழியே இருவரும் வேகமாக ஓடினார்கள். அவர்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் பக்கத்து கடை நெருப்பின் காரணமாக நொருங்கி விழுந்தது. சற்று நேரத்தில் இந்த துணிக்கடையின் கூரையும் விழுந்தது.

சாலைக்கு வந்த பிறகு திரும்பி பார்த்த அபிநயா "கொஞ்சம் மிஸ்.." என்றாள்.

"ஆமா.." என்றவன் அவளின் கழுத்திலும் கையிலும் இருந்த நெருப்பு சூட்டை பார்த்து மனம் வாடினான். கண்ணீரின் காரணமாகவும் கரும்புகை காரணமாகவும் அவளின் முகம் அலங்கோலகமாக இருந்தது. அவளின் கண்கள் இரண்டும் புகையில் இருந்ததால் சிவந்துப்போய் இருந்தது.

கடையின் பின் பக்கம் நின்றிருந்த மக்கள் இவர்களை கண்டதும் அருகே ஓடி வந்தனர். "கடையில் சிக்கி இருந்திங்களா.? எப்படியோ உயிர் பிழைச்சி வந்துட்டிங்க போல.." என்றார்கள்.

அபிநயா அப்பா எங்கே என்று தேடினாள். கண்கள் கலங்கியது. "எங்க அப்பா நிஜமாவை கடையை விட்டு வெளியே போயிட்டாரா.?" என்றாள் அன்புவிடம்.

"முன்பக்கம் இருப்பாரு. வா அந்த பக்கம் போகலாம் வா.." என்றவன் அவளை அணைத்தபடி சாலையில் நடந்தான்.

அவர்கள் இருவருக்கும் தண்ணீரை கொண்டு வந்த பெரியவர் "எங்கடா தம்பிகளா கிளம்பிட்டிங்க.?" என்றார்.

"முன்னாடி போறோம் தாத்தா.. இவங்க அப்பா இவளை காணாம தேடிட்டு இருப்பாரு.." என்ற அன்பு எரிந்துக் கொண்டிருந்த கடைகளை பார்த்தான். நான்கைந்து கடைகள் எரிந்திருக்கும். சொத்து மதிப்பு பற்றி நாளைய செய்தித்தாளில் தகவல் வரும் என்று கணித்தான்.

கடையின் கூரை கீழே விழுந்ததுமே தரையில் மண்டியிட்டு விட்டார் வினோத். தன் மகளை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கை அந்த நொடியே இறந்து விட்டிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுதவரை சுற்றி இருந்தவர்கள் பரிதாபமாக பார்த்தனர்.

தீயணைப்பு வண்டியின் சத்தம் கேட்டதும் மண்டியிட்டு கிடந்தவரின் அருகே வந்து அவரின் தோளில் கை வைத்தான் குணா.

"நெருப்பை அணைக்க வண்டி வந்திருக்கு.. நீங்க ஓரமா எழுந்து வாங்க அங்கிள்.." என்றான்.

அவனை பார்த்தவருக்கு அழுகை அதிகமாகியது. "அபி.." என்றார் கடையை கை காட்டி.

"நீங்க அவங்க வழியில் இருந்தா அப்புறம் நெருப்பை அணைக்க டைம் ஆகிடும். அபியை காப்பாத்தவும் டைம் இல்லாம போயிடும்.." என்றவன் அவரை இழுத்துக் கொண்டு தூரமாக வந்தான். தீயணைப்பு வீரர்கள் கடையை நோக்கி நீரை பாய்ச்சி அடித்தனர். இரண்டு வண்டிகள்..‌ ஐந்தாறு தண்ணீர் பைப்புகள்.. நிறைய செல்போன்கள் கடைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

மாலை மங்கி கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ்களும் வந்து நின்றன. நெருப்பில் சுட்டுக் கொண்ட சிலர் ஆம்புலன்ஸை நோக்கி நடந்தனர். பக்கத்து மதுக்கடையில் நெருப்பால் உடலை தீய்த்துக் கொண்ட ஒருவன் தள்ளாடியபடி ஆம்புலன்ஸில் ஏறினான். அவனை கவனித்த வினோத்தின் இதயம் இரு மடங்காக துடித்தது. நெற்றியில் உருவான வியர்வையை துடைத்துக் கொண்டார். கண்களில் காய்ந்து போயிருந்த கண்ணீர் மீண்டும் ஈரமாக படர ஆரம்பித்தது.

இடிந்த கூரையும், தண்ணீரையும் மீறி எரியும் நெருப்பும் வினோத்தின் கவலையை அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் "அப்பா.." என்றாள் அபிநயா.

வினோத் அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தார். மகள் அவரின் பின்னால் நின்றுக் கொண்டிருந்தாள். அதிக சந்தோசத்தில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மகளின் தலை முதல் கால் வரை பார்த்தார். "அபி.. உனக்கு ஒன்னும் ஆகலையே.." என்றவர்‌ தன் நெஞ்சில் சாய்ந்த மகளை அணைத்துக் கொண்டார்.

"அன்பு கூட்டி வந்தான்ப்பா.." என்றவளின் தோளில் இருந்த நெருப்பு காயங்களை கவலையோடு பார்த்தார்.

"ஹாஸ்பிட்டல் போகலாம் வா.." என்றார்.

"இதான் உன் மகளாப்பா.?" என கேட்டார் ஒருவர். அபிநயா அவரை பார்த்தாள். "உங்க அப்பா உன்னை காணமேன்னு நெருப்புல பாய இருந்தாரு. பாசக்கார அப்பா.." என்றவர் வினோத்தை பார்த்து "அதுதான் உன் மக வந்துட்டாளே.. கண்ணை துடைச்சிக்கப்பா.." என்றார்.

வினோத் மகளை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸை நோக்கி நடந்தார்.

"சேர் ஒன்னு தடுக்கி விட்டுடுச்சிப்பா. நல்ல வேளையா அன்பு வந்தான். பின் வாசல் வழியா கூட்டி வந்தான்.." என்றவள் "கண்தான் லேசா எரியுது.." என்றாள்.

"டாக்டர் சரி பண்ணிடுவாரு. கொஞ்சம் நேரம் பொறுத்துக்க.." என்றவர் ஆம்புலன்ஸின் பின்னால் வந்து நின்றார்

ஆம்புலன்ஸில் அமர்ந்திருந்தனர் அன்புவும் குணாவும். அன்புவின் உள்ளங்கையில் இருந்த தோல் எரிந்து போயிருந்தது.

"உன் கைக்கு என்ன ஆச்சி.?" பதற்றமாக கேட்டபடி ஆம்புலன்ஸில் ஏறினாள் அபிநயா.

"தாழ்ப்பாள் சுட்டுடுச்சி.." என்றவன் கையின் வேதனையை முகத்தினில் காட்டாமல் அவளை பார்த்து புன்னகைத்தான்.

அபிநயாவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டது. அன்புவின் கையை கவனித்தபடியே ஆம்புலன்ஸில் ஏறினார் வினோத். ஆம்புலன்ஸ் கிளம்பியது. மகளை தன் தோளில் சாய்த்துக் கொண்டார் அவர்.

அபிநயாவின் பார்வை அன்புவின் கையிலேயே நிலைத்திருந்தது. அன்பு தன் கையை திருப்பிக் கொண்டான். அன்புவின் சட்டை ஆங்காங்கே கருகி போயிருந்தது.

"வேற எங்காவது காயம் ஆகியிருக்காடா.?" குணா நண்பனை கேட்டான். அன்பு தன் இடது கையால் அபிநயாவின் கால் பகுதியை சுட்டிக் காட்டினான்.

அபிநயா தன் காலை பார்த்தாள். பின் வாசல் வழியே கடையை விட்டு வெளியே வந்ததுமே உறுத்துகிறது என்று செருப்பை கழட்டி விட்டுவிட்டவள் ஏன் அந்த உறுத்தல் என்று அப்போது கவனிக்கவில்லை. இப்போது அன்பு கை காட்டிய பிறகே காலை பற்றிய நினைவு வந்தது.

அபிநயாவின் வலது கால் பாதத்தின் மேல் நெருப்பு காயம் இருந்தது. "அச்சோ.." என்ற வினோத் மகளின் காலை தூக்கி தன் மடியின் மீது வைத்தார். "வலிக்குதாம்மா.?" என்றார் கவலையோடு.

"அவர் கேட்காம இருந்திருந்தா கூட வலிச்சிருக்காது. இப்பதான் அதிகமா வலிக்கும்.." என்று அன்பு முனகியது குணாவிற்கு மட்டும்தான் கேட்டது.

மருத்துவமனையில் அன்புவிற்கும் அபிநயாவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு வீட்டாரும் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். அபிநயா ஒன்றிரண்டு மணி நேரத்தில் கிளம்பலாம் என்றும் அன்பு மறுநாள் காலையில் கிளம்பலாம் என்றும் சொன்னார் மருத்துவர்.

அன்புவின் கையில் இனி ரேகை இருக்காது என்று குணா சொன்னான். அபிநயாவிற்கு அழுகையாக வந்தது‌. தன்னால்தான் அவனுக்கு இப்படி ஆகி போனது என்று கலங்கினாள்.

மறுநாள் முற்பகல் வேளையில் அபிநயாவின் பாதத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி. "நேரம் காலம் எதுவுமே சரியில்ல. நான் சொல்வதை யார்தான் கேட்கறாங்க இந்த வீட்டுல.?" என்று புலம்பினாள்.

"நேரம் காலம் எதுவும் இல்ல.. எல்லாம் அவங்கவங்க மனசுதான்.." என்றபடி வீட்டுக்குள் வந்த வினோத் தன் கையிலிருந்த பழக்கூடையை மனைவியின் முன்னால் வைத்தார்.

"இதை கொண்டு போய் பக்கத்து வீட்டுல கொடுத்துட்டு அந்த பையனையும் பார்த்துட்டு வா.." என்றார். ஆனந்தி ஆச்சரியத்தோடு அவரை பார்த்தாள். தன் அறையை நோக்கி நடந்தவர் "அம்மாவோடு நீயும் கூட போயிட்டு வா அபி. அந்த பையனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வா.‌." என்றார்.

அபிநயாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தது. அம்மாவை பார்த்தாள். அவளின் முகத்தில் இருந்த சந்தோசம் கண்டு அம்மாவும் அவளின் கன்னம் கிள்ளி சிரித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN