குறிப்பேடு 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டில் இருந்த கடிகாரத்தின் நொடி முள் நொடிக்கொரு முறை நகர்ந்துக் கொண்டிருந்தது. தினேஷ் தனது அலமாரியை பார்த்தான். நேற்றைய நினைவோடு அதில் இருந்த டைரியை கை தொட்டான்.

அவன் டைரியை மூடியவுடன் அந்த வனத்தில் இருந்த ஆலமரம் மறைந்து போனது. குழப்பத்தோடு டைரியை பார்த்தான். டைரி மங்கலாக தெரிந்தது. மீண்டும் நிமிர்ந்தான். அவனை சுற்றி இருந்த வெளிச்சம் மங்கி போயிருந்தது. அண்ணாந்து பார்த்தான். உச்சியில் இருந்த சூரியனை காணவில்லை. அவன் திரும்பி பார்த்தபோது மேற்கில் மறைந்துக் கொண்டிருந்தது.

இந்த கால மாற்றம் அவனுக்கு குழப்பத்தையே தந்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை அவனால். அருகில் இருந்த மரத்தை பார்த்தான். அரை இருளில் இறந்த பறவைகளின் உடலோடு இன்னும் பயங்கரமாக தெரிந்தது அந்த மரம். பின்னோக்கி நடந்தான். தலையை உதறிக் கொண்டு திரும்பியவன் அந்த வனத்திற்கு எந்த வழியில் வந்தானோ அந்த வழியிலேயே வேகமாக நடந்தான்.

ஆனால் நடு இரவுக்கு மேல் எப்படி வீடு வந்தோம் என்று அவனுக்கே தெரியவில்லை.

அந்த டைரியில்தான் மர்மம் இருக்கிறதா என்ற யோசனையோடு அதை உற்று பார்த்தான்.

"மரணத்தை வெல்லணும்.. அதுக்காக மரணங்களை மரணத்திற்கு பரிசளிக்கணும்.." என்று யாரோ சொல்லி சிரித்தது அந்த அறை முழுக்க ஒலித்தது. தினேஷ் பயத்தோடு எச்சில் விழுங்கினான். பேய்கள் இருக்குமா என்று தேடி தேடி சென்று ஆராய்ந்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த கண்கட்டி வித்தை லேசான பயத்தை தந்தது.

"யார் நீ.?" என்றான் திரும்பி பார்த்து.

திடீரென்று அந்த அறையின் நடுவில் தோன்றிய ராஜ உடை அணிந்த நால்வர் ரத்தம் சொட்டும் வாளோடு அவனை நோக்கி வந்தனர்.

"அம்மா.." அவர்களை கண்டதும் கத்தி விட்டான் தினேஷ்.

அந்த நால்வரும் காற்றோடு மறைந்து போனார்கள். அவனின் கால் பக்கத்தில் தரையில் ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்தன. பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தான். அந்த அறை முழுக்க பிணங்களால் நிறைந்தது. தினேஷிற்கு வாய் பேச வரவில்லை. எச்சில் கூட விழுங்க முடியவில்லை அவனால்.

சிலையாய் நின்றிருந்தவனின் பாதங்களில் ரத்தத்தின் ஈரம் படருவது போல இருந்தது.

அறையின் மையத்தில் இருந்த பிணக்குவியலுக்குள் இருந்து ரத்தத்தால் நனைந்தபடி மங்கை ஒருத்தி வெளி வந்தாள். தினேஷிற்கு அதிர்ச்சியில் இதயம் சில நொடிகள் நின்று துடித்தது.

முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியபடி இவனை நோக்கி வந்தவள் "இந்த சாந்தவியை நெருங்க உன்னால் என்றுமே முடியாது.." என்றாள். அவளின் காதுகளில் பெரிய காதணிகள் ஆடிக் கொண்டிருந்தது. ரத்தத்தை தாண்டி அந்த காதணியின் அழகிய உருவத்தை அவனால் பார்க்க முடிந்தது. நாகம் ஒன்று அந்த கம்மலில் தலை தூக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அது நிஜமா உருவமா என்று ஒரு நொடி தடுமாறினான் தினேஷ்.

அவளின் உடை வித்தியாசமாக இருந்தது. அரையடி அகலமே உள்ள மேல் கச்சையும் இடுப்பிற்கு தரை தொடும் உடையும் அணிந்திருந்தாள். ரத்தம் எங்கிருந்து வழிகிறது என்றே தெரியவில்லை. வானிலிருந்து கொட்டும் ரத்த மழையில் நனைந்துக் கொண்டிருப்பவளை போல நனைந்துக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அந்த கோரத்திலும் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். அழகா அல்லது கவர்ச்சியா என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவளை பார்த்த பிறகும் அடையாமல் விடுபவன் பைத்தியக்காரன் என்று தோன்றியது.

வழிந்தோடிக் கொண்டிருந்த ரத்தத்தின் இடையே அவளின் வலது புருவத்து ஓரத்தில் இருந்த மச்சம் தெரிந்தது. பின்னலிடப்பட்ட அவளின் கூந்தல் வலது பக்க தோள்பட்டையின் மீது படிந்தபடி அவளின் இடுப்பு வரை நீண்டிருந்தது. கழுத்திலும் தோள்பட்டையிலும் தெரிந்த எலும்புகளும் கூட அவளை அதிக கவர்ச்சியாக மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தது. கழுத்தில் நகை போல ஏதோ ஆபரணம் அணிந்திருந்தாள். அவளின் மார்பு கச்சையை தாண்டி ஓர் அங்குலம் கீழே இருந்தது அதன் பதக்கம். சூரிய பதக்கம் அது. ரத்தத்தின் குளியலில் மெருகேறி தெரிந்தது. அவளின் இடுப்பில் உரசிக் கொண்டிருந்த ரத்தத்தில் நனைந்த அரைஞாண் கொடியை கண்டவன் பெரியதாக மூச்சு ஒன்றை இழுத்து விட்டான். இவளை அடைய ஆசைக் கொண்டு இறந்தாலும் தவறேயில்லை என்று தோன்றியது. பிரம்மனே படைத்தானா இல்லை மன்மதனே பார்த்து பார்த்து செதுக்கினானா என்று எண்ணினான்.

அவனை நெருங்கினாள் அவள். அதே நேரத்தில் அவனை இடித்து தள்ளிக் கொண்டு பின்னாலிருந்து முன் நகர்ந்து வந்தான் ஒருவன். அவன் இடித்த இடியில் தினேஷ்க்கு தோள்பட்டை வலிப்பது போல இருந்தது. நேராய் சாந்தவியை நோக்கி நடந்தான் அவன்.

"இறந்தாலும் தொடர்வேனடி நான். நீ கரைந்தாலும் காற்றாகி உன்னை கவர்வேனடி. நீ ஓடி ஒளிய இடம் இல்லை. என் கை சேர்ந்து விடு. உன்னை என் கண்மணியில் வைத்து பார்த்துக் கொள்கிறேன்.." என்றான் அவன். தினேஷ் அவனின் முகத்தை பார்க்க முடியுமா என்று முயற்சித்தான். ஆனால் முதுகு மட்டும்தான் அவனின் பார்வைக்கு தென்பட்டது. இடுப்பில் வாள் இருந்தது. முதுகில் கேடயம் இருந்தது. கையற்ற மேலங்கி அணிந்திருந்தான் அவன். அவனின் பாதம் தொட்டிருந்த தோல் காலணி இதுவரை தினேஷ் பார்த்திடாத ஒன்று. அவனின் குரலில் இருந்த அதிகாரம் யாரையும் பணிய வைக்கும் சக்தி கொண்டது. தினேஷை விட உயரமாக இருந்தான். அவனின் கைகளில் பின்னியோடிக் கொண்டிருந்த நரம்புகள் தினேஷை ஆச்சரியப்படுத்தியது. அவனின் தோளை பார்க்கும்போதே அவனின் உடல் வலுவை கணக்கிட முடிந்தது. பாய வரும் எருமைகளையும் முட்ட வரும் காளைகளையும் ஒற்றை கையால் அடக்கி விடுவான் என்று தோன்றியது.

"நெருப்பில் வீழ்வதையும் ஆழ காவிரியில் மூழ்கி இறப்பதையும் வரமென்று எண்ணுவேன் உன் ஆசைக்கு இணங்குவதை காட்டிலும்.. ஆண்டுகள் அல்ல.. யுகங்களே கடந்தாலும் என் நிழலையும் அடைய முடியாது உன்னால்.‌." என்றாள் அவள்.

அவர்களின் உரையாடலில் ஏதோ சுவாரசியம் இருப்பது போல தோன்றியது தினேஷ்க்கு. தன் சிந்தையை ஓரம் கட்டிவிட்டு அவர்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

சாந்தவியின் முன்னால் நின்றிருந்தவன் தன் வாளை உருவினான். அவன் உருவிய வேகம் தினேஷை வியப்பில் ஆழ்த்தியது. அவன் மாவீரன் என்பதில் துளியும் சந்தேகமில்லை தினேஷிற்கு.

அவளின் நெஞ்சின் மீது கத்தியின் முனையை பதித்தான் அவன். "உன்னை களவாடுவதற்காக அந்த நெருப்பாகவும் நானே மாறுவேன். ஆழ காவிரியின் குளிர் நீராகவும் நானே மாறுவேன். இறந்தாலும் உன்னை என்னிலேயே இருத்தி இறக்க செய்வேன்.." என்றவன் அவளின் மார்பு கச்சையின் மீது அந்த வாளை நேர் கோடிட்டான். கச்சை அற்றுப்போய் விழுமோ என்று அல்ப ஆசை கொண்டான் தினேஷ். ஆனால் அவனின் ஆசை ஆசையாகவே போய் விட்டது. மார்பு கச்சை தாண்டி கீழிறிங்கிய வாள் அந்த பதக்கத்தின் மீது வந்து நிலைக் கொண்டது. அந்த பதக்கத்தின் மையத்தை தன் வாளால் குத்தினான். சாந்தவியின் கண்கள் ஆங்காரமாய் மாறியது. சிவந்த கண்களை கண்டு தினேஷும் பயந்து போனான்.

"உன்னோட விதியை முடிக்க எதுவும் செய்வேன் நான்.." என்று கர்ஜித்தவள் தன் இடுப்பிலிருந்த குறுவாளை எடுத்து அவனின் நெஞ்சை நோக்கி குத்தினாள். தனது மற்றொரு கரத்தால் அந்த கத்தியை பற்றினான் அந்த வீரன். "இந்த கள்வனின் மனதில் காதலியாய் இடம் பிடித்து விட்ட கன்னிகைக்கு கத்தி அவசியமில்லை.." என்றான். அவளின் கத்தியை பிடுங்கி பின்னால் எறிந்தான். அந்த கத்தி நேராய் வந்து தினேஷின் கழுத்தில் பாய்ந்தது. "அம்மா.." என அலறியபடியே அதிர்ந்து போய் கழுத்தை பற்றினான் தினேஷ்.

"குக்கூ.. குக்கூ.." என்று ஏதோ சத்தம் கேட்டது. கழுத்தில் வழிந்த ரத்தத்தை கண்டு மயங்கி விழ இருந்த தினேஷ் "எவ்வளவு நேரமா காலிங்பெல் அடிக்கிறேன். அந்த அலமாரியை வெறிச்சிட்டு இருக்கறதுக்கு பதிலா வந்து கதவை திறந்திருக்க கூடாதா.?" என்று எரிச்சலோடு கத்திய யாழினியின் குரலில் அதிர்ச்சியானான். கழுத்தை இறுக்கி பிடித்திருந்த கையை கீழிறக்கினான். மீண்டும் சந்தேகமாக கழுத்தை தொட்டான். கத்தி கழுத்தில் இல்லை‌.

தான் அறையின் மைய பகுதியின் பக்கம் திரும்பி நின்றது நன்றாக நினைவிருந்தது அவனுக்கு. ஆனால் இப்போது எப்படி அந்த அலமாரியில் உள்ள டைரியை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

"நாட்டுல பசங்களே இல்லாத மாதிரி போயும் போயும் உன்னை லவ் பண்ணேன் பாரு.. என்னைதான் சொல்லணும்.." என்று புலம்பல் பாதியும் கத்தல் பாதியுமாக தன் வருத்தத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் யாழினி. தினேஷ் அணுவளவு கூட அசையாமல் அந்த டைரியை மட்டுமே பார்த்தான். நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தான். சில நொடிகள் முன்பு வரை தான் அனுபவித்தது கனவா என்று குழம்பினான். சாந்தவியின் முகம் அவனின் நினைவில் முழுதாக நிறைந்திருந்தது.

"நான் உன்கிட்டதான் கத்திட்டு இருக்கேன் தினேஷ்.." என்று அவனின் கையை பற்றி தன் பக்கம் திருப்பினாள் யாழினி. "ஆ.." அவளை பார்த்ததும் பயத்தோடு கத்தினான் அவன். சற்று முன் அவன் பார்த்த சாந்தவி யாழினியின் இடத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். அதே ரத்த குளியலோடு.

"ம்மா.." அவன் கத்தியது கண்டு யாழினியும் கத்தி விட்டாள்.

அவளின் கத்தலில் உடல் சிலிர்த்தவன் இமைகளை மூடி திறந்தபோது அவன் முன் அவனின் யாழினி நின்றுக் கொண்டிருந்தாள். தரை தொடும் சுடிதார் அணிந்திருந்தாள். வளையல்களா அல்லது வளையங்களா என்று வித்தியாசம் காண இயலாததை காதில் மாட்டியிருந்தாள். 'ரப்பர் பேண்ட் வாங்க கூட பணம் தர மாட்டானா உங்கப்பன்.?' என கேட்பவனை அடிவாங்க வைக்கும் கூந்தல் இன்றும் காற்றில்தான் பறந்துக் கொண்டிருந்தது. சிறு ஸ்டிக்கரை நெற்றியின் நடுவே ஒட்டியிருந்தாள். வலது பக்க தோளின் வழியே குறுக்காக மாட்டிக் கொண்டிருந்த கைப்பை அவளின் இடதுப்பக்க இடுப்பை உரசிக் கொண்டிருந்தது. லிப்ஸ்டிக் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது இன்று. முகம் மட்டும் எப்போதும் போல கோடி மின்னல்கள் கூடி வெளிச்சம் தந்தது போல பளிச்சென்று இருந்தது.

"உனக்கு என்ன கேடு வந்ததுன்னு இப்படி கத்தி தொலையுற.?" என கேட்டு அவனின் தோள்பட்டையில் அறைந்தாள் யாழினி. அவளின் கையில் இருந்த உலோக வளையல் மோதி தோள்பட்டை சுளீரென வலித்தது. வலித்த இடத்தை தடவி விட்டுக் கொண்டான்.

"காலையிலிருந்து ஓயாம போன் பண்றேன். அந்த காலை எடுக்க மனசு வரல உனக்கு. காலிங்பெல் அடிச்சாலும் கதவு திறக்க மனசு வரல. நேர்லயே வந்து நின்னாலும் வாய் திறந்து பேச தோணல.." என்றவளின் குரலில் அழுகை லேசாக தென்பட்டது.

"ஐ ஹேட் யூ.." கலங்கும் விழிகளோடு சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள். தினேஷ் தன் பின் மண்டையில் ஒரு அடியை விட்டுக் கொண்டான். அவளின் பின்னால் ஓடியவன் யாழினியின் கையை பற்றி நிறுத்தினான். "சாரி.. மைன்ட் டிஸ்டர்ப்பா இருந்தது.. சாரி.." என்றான்.

யாழினி கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு இவன் பக்கம் திரும்பினாள். அவனின் கழுத்தில் கையை மாட்டி அவனை அணைத்துக் கொண்டாள். "ஐ லவ் யூ.." என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

தினேஷ் அவளின் முதுகில் தன் கைகளை வளையமாக்கி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். "ரியலி சாரி.. ஹேப்பி பர்த்டே.." அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

"என் அப்பா உன்னை டின்னருக்கு கூட்டிட்டு வர சொன்னாரு.." என்றவளை விலக்கி நிறுத்தினான். பெருமூச்சி விட்டான். "இந்த டின்னரை நாலஞ்சி நாள் கழிச்சி பார்த்துக்க கூடாதா.?" என்றான். அவனின் நெஞ்சில் கை வைத்திருந்தவள் அவனை பின்னால் தள்ளினாள்.

"இன்னைக்கு எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் வர போறாங்க. அவங்ககிட்ட உன்னை அறிமுகப்படுத்த நினைக்கிறார் எங்க அப்பா‌. இன்னைக்கு நைட் என் பர்த்டே பார்ட்டி நடக்க போகுது தினேஷ்.‌." என்றாள் அவனுக்கு இப்போதாவது நிலமை புரியும் என்றெண்ணி.

தினேஷ் கண்களை மூடி தலையை அசைத்தான். "எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN