முகவரி 34

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் போக்கில் நகர... வீட்டை அழகாய் நிர்வகித்து, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள் அனு. இவளின் ஒத்துழைப்பில் மிருடன் இரண்டு முறை வெளியூர் சென்று வந்தான் என்றால் எண்ணி கொள்ளுங்களேன்! வீட்டு விஷயங்களில் அனுசரித்துப் போகத் தெரிந்த கணவன் மனைவிக்குள் தனிப்பட்ட முறையில் ஏனோ மெல்லிய பனிப்போர் நடந்து கொண்டு தான் இருந்தது. ஒருவித ஒதுக்கம், கோபம் இருக்கத் தான் செய்தது.

இதில் அனுவுக்கு… அன்று வெண்பா கேட்ட போது கணவன் தனக்கு மறுபடியும் தாலி கட்ட மறுத்ததில் கோபம்.
‘அப்போ என் தந்தையைப் பழிவாங்க நினைத்து தான் என்னை இன்னும் இங்கு அவர் வீட்டிலும் அவர் வாழ்வில் வைத்திருக்கிறாரா? அது தான் காரணமா… ஆனால் அவர் மனைவி என்ற அங்கீகாரத்தைக் கொடுக்க எனக்கு தாலி வேணும் தானே? பிறகு எதற்கு அன்று என்னிடமிருந்து மனைவி என்ற கடமையை மட்டும் எதிர்பார்த்தார்... அப்போ நான் அவர் மனைவி இல்லையா? வேறு... வேறு...’ மேற்கொண்டு அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

‘காலம் முழுக்க... என்னை அப்படி ஒருத்தியாகத் தான் பார்க்கவோ, நடத்தவோ இருக்கிறரா... ஏன்?... அதான் சொல்லிட்டாரே... என் தந்தையைப் பழிவாங்க என்று! அப்போ என் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா? என் கவுரவத்தைக் காக்க வேண்டிய அவரே அதை காலில் போட்டு மிதிக்கலாமா?’ அப்பப்பா... இப்படியான எண்ணங்கள் நாளுக்கு நாள் வேலைகளுக்கு நடுவே அனுவின் மனதில் சுழன்று கொண்டே தான் இருந்தது. அதன் பலன் கணவன் மேல் நாளுக்கு நாள் வன்மம் வளர்ந்து கொண்டே இருந்தது அவளுக்குள்.

ஆனால் இதே அனு தான் அன்று வெண்பா தாலியைப் பற்றி சொன்ன போது மறுக்க நினைத்தாள். அதாவது கணவன் தனக்கு செய்த துரோகத்திற்கு அவளாக மறுக்கலாம். ஆனால் கணவன் மட்டும் முடியாது என்று எப்படி சொல்லலாம்? அதுவும் நிர்தாட்சண்யமாக!

‘அப்படி சொல்பவர் என்னைத் தொடும் போது... நான் எப்படி மறுக்காமல்... தடுக்காமல்... இருந்தேன்? இப்போது நான் எதைத் தான் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்? இப்படியான ஒரு வாழ்வையா... ச்சீ! இது கேவலம் இல்லையா... அப்போ என் நிலை தான் என்ன?’ இப்படி எல்லாம் தனக்குள்ளேயே கேள்வி கேட்டு யோசித்ததின் பலனாக அவள் மேலேயே கோபம் எழ... தக்க தருணம் பார்த்து வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள் அனுதிஷிதா.

அவள் கணவனிடம் சண்டை போட்டது... அவனை விட்டுப் பிரிந்தது... மகளுக்காக இன்று சேர்ந்திருப்பது... இதெல்லாம் அவள் மனதிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதாய் ஆக... கணவன் மறுத்ததே அவளுள் முன் நின்றது.

சரி இவளுக்கு இவள் வேதனை... இவளின் மனநிலை இப்படி. ஆனால் மிருடனுக்கு அப்படி என்ன கோபம்? கோபம் என்பதை விட ஆற்றாமை! ‘இவள் என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டாளா? இவளுக்கு என்ன தான் பிரச்சனை? நான் எதை செய்தால் என்னிடம் நெருங்குவாள்?’ இப்படி தான் யோசித்தான் அவன். என்ன செய்தால் நெருங்குவாள் என்பதற்கு பதில் அவளிடம் பேசி… தான் நடந்து கொண்டதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் மன்னிப்பையாவது அவன் கேட்டிருக்கலாம். எங்கே... அவன் தான், தான் செய்யாத தவறைப் பற்றி யோசிக்கக் கூட தயாராக இல்லையே! பிறகு எங்கு அவளைப் போல் தாலியைப் பற்றி யோசித்திருப்பான்.

அன்று அவன் மறுத்தது கூட மனைவியின் தற்கொலை முடிவை நினைத்து தான். அதன் பிறகு அதை மறந்தே போனான். அப்படியே நினைவிருந்தாலும்... அதற்கு எல்லாம் அலட்டிக் கொள்பவன் மிருடன் இல்லை. அவனைப் பொறுத்தவரை ஷிதா அவன் விரும்பி தாலி கட்டிய மனைவி. மனதால்… உடலால்... அவன் நெருங்கிய ஒரே பெண் இந்தப் பிறவியில் அவள் மட்டும் தான். அப்படி என்னும் போது தாலியாவது மண்ணாங்கட்டியாவது! இது ஆண் மனம்... ஆனால் பெண் மனம் இப்படி நினைக்குமா... அல்லது நிம்மதியாகத் தான் இருக்குமா?

மிருடன் இயல்பாய் இருந்ததால் தான்... ஒரு நாள் காலை வேளையில், “ஷிதா... இன்று ஈவினிங் என் நண்பனோட வரவேற்பு இருக்கு... ஞாபகம் இருக்கு தானே? கிளம்பி இரு… போயிட்டு வந்திடலாம்” கண்ணாடி முன் நின்று தலை வாரியபடி இவன் சொல்ல… அனுவிடம் பதில் இல்லை. இவனோ கண்ணாடி வழியே மனைவியைக் காண, அவளோ கோர்த்திருந்த தன் கைகளில் பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருந்தாள்.

இவன், “என்ன டி?” கண்ணாடியில் பதிந்த பார்வையின் ஊடே... சற்றே குரலை உயர்த்தி கேட்க

“தலை வலி” ஒற்றை சொல் மட்டுமே பதிலாக வந்தது.

“டேப்லட் போட்டுட்டு ரெஸ்ட் எடு. ஈவினிங் தானே பார்ட்டி? அதற்குள்ளே சரியாகிடும். அவன் என் நண்பன் மட்டுமில்ல... நம் பிசினஸ்கும் அவன் நிறைய செய்திருக்கான். சோ, ரெடியா இரு” இவன் கட்டளையிட, அவளிடம் மவுனம் மட்டுமே.

அனுவுக்கு கணவனுடன் எங்கு செல்லவும் விருப்பம் இல்லை. அதை அவனிடம் சொல்லாமல்... தன் செயலின் மூலம் காட்டினாள் அவள். மாலை அவன் வீட்டிற்கு வரும் நேரம்... இவள் உடல்நிலை சரியில்லாதவள் போல் படுக்கையில் இருந்தவள்... கூட துணைக்கு வெண்பாவையும் இருத்திக் கொள்ள... கண் மூடி படுக்கையில் இருக்கும் மனைவியைக் கண்டவனுக்கு அவளின் செயல் புரிபடவும்... இவன் பல்லைக் கடிக்க

“மிருடா, காலையில் நீ ஆபிஸ் கிளம்பிய உடனே அனு எனக்கு போன் செய்து, அண்ணி உடம்பு முடியல... நீங்க இங்க வந்து கொஞ்சம் பசங்களைப் பார்த்துக்க முடியுமான்னு கேட்டா. சரின்னு வந்து பார்த்தா… என்னன்னு தெரியல… குழந்தை அப்போ இருந்தே படுத்துட்டே இருக்கா பாவம்” வெண்பா கவலையோடு சொல்லவும்

“உங்க குழந்தையை டாக்டர் வந்து பார்த்தாரா க்கா?” மிருடன் குரலில் கேலி வழிந்தது.

வெண்பா அதை அறியாமல், “வந்தாரே... செக் பண்ணிட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை... ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு சொல்லிட்டுப் போய்ட்டார். உன் கிட்ட சொல்றேன்னு சொன்னார்... அனு தான் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிட்டா” இவள் ஒப்புவிக்க

“அச்சோ பாவம்! உன் குழந்தை ரொம்ப கஷ்டப்படுறா போலவே... என்ன டா குழந்தை… உனக்கு என்ன செய்து?” என்றவன் பரிவாய் மனைவியின் நெற்றியை வருடிய படி அவள் புறம் குனிந்தவன்...

“ஷிதா, டோன்ட் பிஹேவ் லைக் எ சைல்ட்... எழுந்து பார்ட்டிக்கு கிளம்பு. பிகு செய்த… இப்படியே உன்னைத் தூக்கி காரில் போட்டுகிட்டு கிளம்பிடுவேன்” இவன் அடிக் குரலில் சன்னமாக அவளிடம் எச்சரிக்க…

உள்ளுக்குள் உதறினாலும், ஏதோ அப்போது தான் கண் விழிப்பவள் போல் விழித்தவள், “வந்துட்டீங்களா... ப்ச்சு! பார்ட்டிக்கு உங்க கூட வர ஆசையா இருந்தேங்க... கடைசியில் உடம்பு என்னை படுக்க வச்சிடுச்சி. நீங்க மட்டும் போயிட்டு வர முடியுமா மிரு?” இவள் அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு ஆசையாய் சிறு வருத்தமாய் கேட்க

மிருடன் ஏதோ சொல்ல வருவதற்குள்... வெண்பா, “ஆமா டா மிருடா.. குழந்தையால் எழுந்து கூட உட்கார முடியலை. நீ மட்டும் போயிட்டு வந்திடு டா... மான்வியையும், ஜீவாவையும் நான் பார்த்துக்கிறேன்”

“என்ன க்கா இப்படி சொல்கிற... இவன் எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா?”

கணவனின் பதிலில், “சரி... விடுங்க அண்ணி நான் கிளம்பறேன்” சற்றே தள்ளாடிய படி அனு எழுந்திருக்கவும்…

அவசரமாய் மனைவியைத் தன் தோளில் தாங்கியவன், “சும்மா நடிக்காத டி” அவளிடம் மட்டும் சொன்னவன்...

“அவ ரெஸ்ட் எடுக்கட்டும் க்கா... ஒரு முக்கியமான வேலை இருக்கு... அப்போ நான் ஆபிஸ் கிளம்பறேன்” என்று இவன் வெண்பாவிடம் முடிக்க

“பார்ட்டிக்குப் போகணும்னு சொன்னியே டா...”

“போகல..”

“வந்ததிலிருந்து போகணும் போகணும்னு அந்த குதி குதித்த!”

“இப்போ போகல… விடேன்” என்று அக்காவுக்கு பதில் தந்தவன்,

“நீ வராம இனி நான் எந்த பார்ட்டிக்கும் போக மாட்டேன் டி. ஆனா இதையே எப்போதும் செய்யணும்னு நினைத்த... உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” மனைவியிடம் மட்டும் சீற்றமாய் சொன்னவன் அங்கிருந்து விலகியிருக்க... வெண்பாவும் அங்கு இல்லை என்றதும்

அனு, “போங்களேன்... பெரிதா பயமுறுத்துறார்! இவர் எனக்கு தாலி கட்ட மாட்டாராம்... ஆனா இவர் அழைத்த உடனே நாய்க்குட்டி மாதிரி குடு குடுன்னு இவர் பின்னாடியே நான் ஓடி வந்திடனுமாம்! போங்களேன்...” என்றபடி தன் பிடிவாதத்தில் நின்றாள் அவள்.

ஆனால் இந்த பிடிவாதம் எல்லாம் ஒரு நாள் காணாமல் தான் போனது. வெண்பாவின் மூத்த மகளுக்கு பிறந்த நாள் வர... அவ்விழாவை சிறிய அளவில் தன் குடும்பத்தினர்களுடன் வெண்பா கஜேந்திரன் தம்பதினர் கொண்டாட இருக்க, அதில் மகிழ்ச்சியுடனே அனு கலந்து கொள்ள விழைய... பாவம்! உண்மையிலேயே உடல்நிலை சரியில்லாமல் படுத்து விட்டாள் அவள். கஜேந்திரனும், மிருடனும் எவ்வளவோ சொல்லித் தடுத்தும்.... பிடிவாதத்துடன் விழாவிற்கு வருவேன் என்று சொல்லிவிட்டாள் அவள்.

“போங்க ணா... ஸ்ரீ பிறந்தநாளுக்காக நான் இதைச் செய்யணும்... இப்படி எல்லாம் செய்யணும்னு... எவ்வளவு ஆசையா... அண்ணி கூட பிளான் எல்லாம் போட்டேன் தெரியுமா? டிரெஸ் கோட் எல்லாம் செலக்ட் செய்து வைத்திருந்த என்னை இப்ப வர வேணாம்னு சொன்னா எப்படி ணா?” என்று இவள் கஜேந்திரனிடம் கேட்க, அவரோ அதற்கு மேல் பிறகு மறுக்கவில்லை.

ஆனால் மிருடன் தான் விடுபவனாக இல்லை. “அதெல்லாம் நீ ஒன்றும் வர வேண்டாம்... நானே சும்மா கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்திடுறேன்... நீ வீட்டிலேயே இரு” மிருடன் தடுக்க…

“அதெல்லாம் முடியாது… நான் வருவேன்” அனு தன் பிடிவாதத்தில் நிற்க

பல்லைக் கடித்தவன், “சரி வா... ஆனா ஒரு இடமா உட்கார்ந்திரு... உடம்பைப் போட்டு ரொம்ப அலட்டிக்காத சொல்லிட்டேன்”

“ஸ்ஸ்ஷப்பா! முடியல… ஒரு ஜூரம் வந்ததற்கா குடும்பமே சேர்ந்து என்னை இந்த பாடு படுத்தறீங்க... அதெல்லாம் ஒன்றுமில்ல… நான் என்னைப் பார்த்துக்கிறேன்”

“பேசுவ டி... நீ இதுவும் பேசுவ... இன்னும் பேசுவ! நினைவு இல்லாம... என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு படுத்தே இருந்த இல்ல... அப்பவே நான் மேட்டரை முடித்திருக்கணும்... மான்வி, ஜீவாவுக்கு இந்நேரம் தம்பி பாப்பாவாது உருவாகி இருக்கும்”

கணவனின் பதிலில் சட்டென வாயைப் பிளந்தவள்... பின் முகத்தைச் சுளித்தவளாக, “ச்சீ! என்ன பேச்சு இது... என் கிட்ட போய் மேட்டர்னு எல்லாம் பேசிகிட்டு...” இவள் காட்டமாய் உரைக்க

மனைவியை இழுத்து அணைத்தவன், “என் பொண்டாட்டி கிட்ட தானே டி சொன்னேன்?”

“பெரிய பொண்டாட்டி..” இவள் நொடிக்க

“இல்ல… சின்ன பொண்டாட்டி தான்” இருவரின் உயரத்தை மனதில் வைத்து அதை அவன் கண்களால் சுட்டிக் காட்டி சொல்ல…

இவள் மனம் தான் சஞ்சலத்தில் இருந்ததே... கணவன் சுட்டிக் காட்டியதைக் கண்டு கொள்ளாமல், ‘அப்போ நான் சின்ன வீடா?’ என்று நினைத்தது பெண்ணவளின் மனம். இந்த மனநிலையின் ஊடே விழாவிற்கு கிளம்பிச் சென்றவளுக்கு... அங்கும் அவளுக்கு விழுந்தது பெருத்த அடியே!

கஜேந்திரனின் குடும்ப அங்கத்தினர்கள்... நண்பர்கள்... அவரின் அலுவலுக தோழர்கள் என்று விழா நடந்து என்னவோ வெண்பாவின் வீட்டிலே தான். விழா நல்ல முறையில் ஆரம்பித்து சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது. அனு, ஒரு அத்தையாய்... இங்கு அங்கும் ஓடி... வேலையாட்களை ஏவிக் கொண்டும்... சிரிப்பும் பேச்சுமாய் திரிந்து கொண்டிருந்தாள்.

முதலில் ஓரிடத்தில் அமரும் படி கண்களாலேயே மனைவியைக் கண்டித்துக் கொண்டிருந்த மிருடன்... அதை அவள் கேட்கவில்லை என்றதும்... தன்னவள் மேல் தன் பார்வையைப் பதித்த படியே இவனும் அங்கு சுற்றிக் கொண்டிருக்க...

வந்தவர்களில் பொறாமை பிடித்தவர்களும்… புரளி பேசுபவர்களும் இருப்பார்கள் தானே?... அதில் இருவர்,
“இவ தான் மிருடன் மனைவியா?”

“அப்படி தான் சொல்லிக்கிறா...”

“என்னது சொல்லிக்கிறாளா! என்ன சொல்ற?”

“என்னத்த சொல்ல? கலிகாலம்! இவ அவன் பொண்டாட்டி இல்ல... ஏதோ இந்த காலத்து கழிசடைகள் மாதிரி... லிவிங் டூ கெதர் முறையில் வாழ வந்தவ போல...”

“அய்ய... ச்சீ! குழந்தை வேற இருக்கு ப்பா... ஆமா, இது உனக்கு எப்படி தெரியும்?”

“எல்லாம் நல்லா தெரியும். ஒரு முறை... என் வீட்டு விழாவிற்கு வெண்பாவை அழைக்க இங்கே வந்திருந்தேன். அப்போ இந்த பொண்ணு இருந்தது... என் தம்பி மனைவினு அவ தான் சொன்னா... சரி தான், வந்ததற்கு… அவளுக்கும் குங்குமம் கொடுப்போம்னு இவளுக்கு கொடுத்தா... வாங்கி நெற்றியில் இட்டுகிட்டா.

நான் வயசுல பெரியவ.... அதனால் வெண்பா மாதிரி நீயும் குங்குமத்தை தாலியில் வைத்துக்கோன்னு நல்ல விதமா தான் சொன்னேன். அதற்கு இந்த பொண்ணு, பேய் அறைந்தவ மாதிரி முழிக்கறா... வெண்பா ஏதோ கதையை மாத்துறா. ச்சீ... த்தூ! அப்போ இவ வாழற வாழ்வை நான் என்னன்னு சொல்ல?” அழகாய் இட்டு கட்டி கதை சொல்ல

என்ன தான் இருவரும் மெல்லப் பேசினாலும்... ஏற்கனவே மனக் குழப்பத்தில் இருந்த அனு இவை எல்லாம் கேட்டு விட ஏதோ அந்த பெண்மணி தன் முகத்திலே துப்பியது போல் தோன்ற அதில் அவள் மயக்கத்திற்கு ஆளாக.. எங்கிருந்தோ வந்த மிருடன் மனைவியைத் தன் கைகளில் தாங்கியவன், “அதிகமா ஓடியாடி ஸ்ட்ரெயின் செய்யாதேன்னு சொன்னா கேட்கிறீயா?”

மனைவியை அணைத்த படி அவளைத் தன் கையில் ஏந்தியவன்... தமக்கையிடம் நெருங்கி, “அக்கா... குழந்தைகளை நீ பார்த்துக்கோ. இவளுக்கு முடியல… நாங்க கிளம்பறோம்... அத்தான் கிட்ட சொல்லிடு” என்றவன் தன்னவளைத் தன் கைகளில் ஏந்தியபடியே காருக்குச் செல்ல... அங்கு இருந்தவர்களில் பலர் இவனின் காதலைப் பார்த்து வியந்தார்கள் என்றால்... சிலர் முகம் சுளிக்கவும் செய்தார்கள்.

“சொன்னா கேட்கவே மாட்டியா டி? இப்போ பார்… உனக்கு தானே கஷ்டம்! உனக்கு ஏதாவது ஒன்றுனா என்னாலே எப்படி டி நிம்மதியா இருக்க முடியும்?” இவன் கண்டித்தபடி காரை எடுக்க

“ஏன், உங்க சின்ன வீட்டுக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படுறீங்களா?” இவள் காட்டமாய் கேட்க

“வாட்?” அவள் புறம் திரும்பியவன்... மனைவியின் சோர்ந்த முகத்தைப் பார்த்து மேற்கொண்டு விவாதிக்காமல் காரை எடுத்தவன் தங்கள் அறைக்குள் வந்ததும், “சொல்லு... என்ன பேச்சு அது? சம்மந்தம் இல்லாமல் யாரை சொல்கிற?” இவன் சீற்றமாய் கேட்க

“ஏன்.. உங்களுக்கு தெரியலையா? சும்மா நடிக்காதிங்க... ஊரே சொல்லுது… நான் உங்க சின்ன வீடுன்னு! அதாவது நான் உங்க வப்பா..”

சொல்ல வந்த வார்த்தையை அவள் முடிப்பதற்குள் விட்டான் ஒரு அறையை அவன். அதில் சுருண்டு விழுந்தவள்… அப்பவும் அடங்காமல், “நீங்க என்ன தான் என்னை அடித்தாலும்... இதுதான் உண்மை! இன்று வந்தவங்க எல்லாம் என் கழுத்திலே தாலி இல்லை... அப்போ நான் உங்க மனைவி இல்லைன்னு தான் பேசிக்கிறாங்க. இதற்க்கு எல்லாம் யார் காரணம்?” இவள் கணவனைக் குற்றவாளியாக்கி கேள்வி கேட்க

“நீ தான் டி காரணம்! நீ தான்... நான் ஒன்றும் உனக்கு தாலி கட்டாம உன்னுடன் குடும்பம் நடத்தல... அப்படி கட்டின தாலியையும் கழட்டவில்லை. உனக்கும் எனக்கும் தானே டி பிரச்சனை... எதற்க்கு டி தாலியைக் கழற்றி வீசி எறிந்த? நான் உண்மையா தப்பு செய்திருந்து… நீ அப்படி தூக்கி எறிந்திருந்தா கூட ஏற்றிருப்பேன். தாலியோட மகத்துவம் தெரியாம... அதோட புனிதம் தெரியாம கழற்றி வீசினவ நீ தானே ? அப்போ இந்த பேச்சு எல்லாம் நீ வாங்கித் தான் ஆகணும்! வாங்கு… வலிக்குதா? நல்லா வலிக்கட்டும் டி” கோபத்தில் என்ன சொல்கிறோம் என்பதை யோசிக்காமல் மிருடன் சொல்லிவிட…

உண்மையிலேயே அனுவுக்குள் வலிக்கத் தான் செய்தது. அந்த வலியில் கணவன் சொன்ன செய்யாத தப்புக்கு என்ற வார்த்தை அவள் மனதில் பதியாமல் தான் போனது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN