குறிப்பேடு 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"இன்னைக்கு என் பர்த்டே. என்னை விட உனக்கு வேற என்ன முக்கியம் இருக்கு.?" வருத்தம் பாதியும் கோபம் பாதியுமாக கேட்டாள் யாழினி.

தினேஷ்‌ அந்த டைரியின் நினைவிலேயே இருந்தான். "அது ஒரு வேலை யாழினி. உனக்கு சொன்னா புரியாது.." என்றவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

"சொன்னா புரியாத வேலையா.? இன்னைக்கு எந்த சுடுகாட்டுக்கு போக போற.? எந்த பிணக்குழி மேல உட்கார்ந்திருக்க போற.?" என்றவளுக்கு நன்றாக தெரியும் இதை தவிர அவனுக்கு வேறு வேலைகள் இல்லை என்று.

"பழங்கால டைரி ஒன்னு கிடைச்சிருக்கு. அதை படிக்கணும் யாழினி.."

யாழினி அவனை முறைத்தாள். "பைத்தியக்காரன் பரவாயில்ல உனக்கு பதிலா.. இனி எப்பவும் என் கூட பேசாதே.." என்றவள் கோபத்தோடு அங்கிருந்து சென்றாள்.

தினேஷ் நெற்றியை பிடித்தான். அவளுக்கு எப்படி தன் உணர்வை புரிய வைப்பதென்று தெரியவில்லை. அவளை பின்தொடர சொல்லி மனம் சத்தமிட்டது. ஆனால் அந்த டைரியில் உள்ளதை படிக்க சொல்லிய ஆர்வம் அவனை அதிகமாக தூண்டியது. பெருமூச்சி விட்டான்.

அலமாரியிலிருந்து துண்டு ஒன்றை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு குளிக்க கிளம்பினான். குளித்து முடித்து வந்ததும் முக்கால் பேண்ட் ஒன்றையும் கையற்ற பனியன் ஒன்றையும் அணிந்துக் கொண்டான்.

சமையலறையில் உணவு இருந்தது. உணவை தட்டில் போட்டு பசியாறும் வரை உண்டான்.

தட்டை சுத்தம் செய்து கவிழ்த்து வைத்து விட்டு மீண்டும் படுக்கையறைக்கு வந்தான். அலமாரியில் இருந்த டைரியை கையில் எடுத்தான். அவனின் ஆராய்ச்சி அறைக்கு நடந்தான். அறைக்குள் வந்ததும் கதவை சாத்திக் கொண்டான்.

அறையின் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அவன் ஒட்டி வைத்திருந்த செய்தித்தாள் செய்திகள் நான்கு பக்க சுவர்களையும் நிறைத்திருந்தது. அனைத்தும் பேய் பிசாசு சம்மந்தமான செய்திகள். ஆக்ஸிடென்ட் ஆகியோ அல்லது விபத்தினால் இறந்து போனவர்களையோ பற்றிய செய்திகள். கோரமாக இறந்தவர்களின் புகைப்படங்கள் கூட நடுநடுவே இருந்தது. யாராவது திடீரென அவற்றை பார்த்தால் பயந்து விடுவார்கள்.

ஜன்னலும் திறந்திருந்தது. சென்று அதை இழுத்து சாத்தினான். அறை விளக்கை அணைத்தான். மேஜை விளக்கை ஒளிர விட்டான். நாற்காலியில் அமர்ந்து டைரியை மேஜை மேல் வைத்தான். முதல் பக்கத்தை புரட்டினான்.

"இந்த ஏட்டை திறந்தவன் எவனாகிலும் எழுபது மணி நேரத்திற்குள் இறந்து போவான்.." என்று இருந்தது முதல் பக்கத்திலேயே. தினேஷ் ஒரு நொடி பயந்து விட்டான் என்பது உண்மையே. ஆனால் உடனடியாக சிரித்து விட்டான்.

"நல்ல பயமுறுத்தல்.." என்றான் கிண்டலாக.

டைரியின் அடுத்த பக்கத்தை திறந்தான்.

"நவரத்தினாபுரம் அழகான குறுநிலம். இருபதாயிரத்து எழுநூறு மக்கள் வசித்த ஊர் அது. அதன் மன்னன் வேல்விழியான் இறந்திருக்க கூடாது. அவரின் நான்கு மகன்களும் அந்த நாட்டையே அழித்திருக்க கூடாது.." தினேஷ்க்கு சலித்து விட்டது. "ஏதோ வரலாற்று ஏடு. இதுல பேயை பத்திய எந்த குறிப்பும் இல்ல.." சோகத்தோடு தலையை பின்னால் சாய்த்து கூரையை பார்த்தான்.

முகத்தை உள்ளங்கையால் துடைத்தான். சலிப்போடு நேராக அமர்ந்தான். அவனின் காலடியில் இருந்த குப்பை கூடை அவனை பரிதாபமாக பார்த்தது. பேயை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுகிறேன் என்ற பெயரில் எழுதி ஓரிரு வரிகளிலேயே பிடிக்காமல் கசக்கி எறிந்த காகித தாள்கள் அந்த குப்பை கூடையில் நிறைந்து போயிருந்தது. கூடையிலிருந்து வழிந்த கசங்கிய தாள்கள் தரையிலும் சிந்தி கிடந்தன.

'முதல் பக்கத்துலேயே பேய் இருக்குமா.? கடைசி வரை படிச்சி பாரு. அப்பதான் க்ளூ கிடைக்கும்..' மனதுக்குள் குரல் ஒன்று கேட்கவும் மீண்டும் அந்த டைரியை பார்த்தான். படிக்க ஆரம்பித்தான். அவனை சுற்றி இருந்த நேரங்கள் கடந்துக் கொண்டிருந்தது.

நந்தவனத்தின் நடுவே அழகிய மாடம் ஒன்று இருந்தது. மாடத்தின் நிழல் விழும் இடத்தில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தாள் சாந்தவி.

இளைஞன் ஒருவன் அவளை நோக்கி வந்தான். அவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தான்.

"சாந்தவி என் அந்தப்புரத்திற்கு நீ வேண்டும்.." என்றான். 'உன் குரலில் இருந்த காதலுக்கும் ஆசைக்கும் கல்லும் பெண் உருவம் கொள்ளும். இவள் சம்மதிக்க மாட்டாளா.?' என்று எண்ணி நம்பிக்கையோடு அவளின் முகம் பார்த்தான்.

சாந்தவி நிமிரவில்லை. பூ தொடுப்பதையும் நிறுத்தவில்லை. "மன்னிக்கவும். நான் உங்களின் ஆசைக்கு இணங்க இயலாது.." என்றாள் மென்மையாக.

எதிரில் இருந்தவனின் முகத்தில் இருந்த உயிர்க்கலை இறந்து விட்டது.

"நான் யாரென்று அறிந்துதான் இந்த பதிலை சொல்கிறாயா.?" என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீங்கள் யாரென்று தெரியும். ஆனால் உங்களின் அன்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.." என்றவள் எழுந்தாள். பூ மாலையோடு அவனை தாண்டி நடந்தாள். மண்டியிட்டிருந்தவன் அவளின் கால் தடம் பதிந்த இடத்தில் உள்ளங்கையை பதித்தான். அவளின் கால் பதிந்த இடமே அவனுக்குள் பேராசையை தூண்டியது. "சாந்தவி.." கடித்த பற்களிடையே முனங்கியவன் கையால் தரையை குத்தினான். சாந்தவி தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தாள். தலையை தூக்கி அவளின் உருவத்தை பார்த்தான். அசைந்து நடந்துக் கொண்டிருந்தவளை களவாட வேண்டும் என்று ஆத்திரம் தோன்றியது.

மாலை வேளை. சிவா தன் வேலையில் மூழ்கி போயிருந்தான். அவனது போனுக்கு அழைத்தாள் யாழினி.

"சிவா.. தினேஷ்க்கு என்னை பிடிக்கலையா.?" என்றாள்.

அவர்களுக்குள் மீண்டும் ஏதோ சண்டை என்பதை யூகித்துக் கொண்டான் சிவா. "இல்ல யாழினி. அவனுக்கு நீதான் உயிர்.." என்றான் அவளுக்கு சமாதானம் சொல்லும் விதமாக.

"இன்னைக்கு என் பர்த்டே பார்ட்டி சிவா. இன்னைக்கு அவன் எங்க வீட்டுக்கு வரலன்னா அப்புறம் நான் செய்வேன்னே தெரியாது.." என்றாள்.

"பார்ட்டிக்கு நாங்க வருவோம் யாழினி.." என்றவனிடம் தினேஷ் தன்னிடம் சொன்னதை சொன்னாள்.

"அவன் கிடக்கறான் பைத்தியக்காரன். நான் அவனை கூட்டி வரேன். நீ எதுக்கும் பீல் பண்ணாத.." என்றவன் இணைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்தான். கணினியை அணைத்தான். தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அவனுக்கு வணக்கத்தை வைத்தனர். அவர்களுக்கு பதில் வணக்கத்தை வைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். காரை ஸ்டார்ட் செய்து மெயின் ரோட்டுக்குள் நுழைந்தான். பாதி வழியிலேயே காரை நிறுத்தி கடை ஒன்றினுள் நுழைந்து இரண்டு கிப்ட்களை வாங்கிக் கொண்டு திரும்பினான்.

அவன் வீட்டிற்கு வந்தபோது வீடு அவன் விட்டு சென்றது போலவேதான் இருந்தது. யாழினியின் பெர்ப்யூம் வாசம் கொஞ்சமாக வீசியது. கிச்சன் மேடையில் தட்டு ஒன்று தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. பாத்ரூம் கதவு திறந்தே இருந்தது. ஹால் சோபாவில் ஈர துண்டு ஒன்று கிடந்தது.‌

தான் எடுத்து வந்திருந்த பைல்களை மேஜை ஒன்றின் மீது வைத்துவிட்டு தினேஷ் இருந்த அறையை நோக்கி நடந்தான். கதவை சத்தமில்லாமல் திறந்து உள்ளே சென்றான்.

இருண்டு கிடந்தது அந்த அறை. சாந்தவி தன் கண்களை விழித்து பார்த்தாள். எழுந்து அமர்ந்தாள். பட்டு துணி ஒன்று அவளின் கைகள் இரண்டையும் ஒன்றாய் இணைத்து கட்டி வைத்திருந்தது.

"யார் என்னை கடத்தி வந்தது.?" என்று சத்தமிட்டவளின் கால்களும் கட்டப்பட்டுதான் இருந்தது.

"நான்தான்.." அவளின் பின்னாலிருந்து குரல் வந்தது. திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த கட்டிலின் மேல் ஓரத்தில் அமர்ந்திருந்தான் அவன். அவனை கோபத்தோடு முறைத்தவள் "என்னை விட்டுவிடு. இல்லையேல் இறந்து போவாய்.." என்றாள்.

அவளின் மீது பாய்ந்தான் அவன். அவள் பின்னால் விழுந்தாள். மெத்தென்ற பட்டுத் துணியில் தலை பொதிந்தது. அவளுக்கு மேலே இருந்தான் அவன். வலது கையை கட்டிலின் மீது ஊன்றியிருந்தான். அதனால் அவளை மோதாமல் இருந்தான். ஆழ்ந்து மூச்சு விட்டதன் காரணமாக அவளின் நெஞ்சம் மேலேறி தாழ்ந்தது.

அவளின் கழுத்தில் சுட்டு விரல் பதித்தான். சாந்தவி நெருப்பு தீண்டியது போல துள்ளி விழுந்தாள். "என்னை தீண்டாதே.." என்றாள் கத்தலாக.

தினேஷ் திரும்பி பார்த்தான்.‌ மேஜை விளக்கின் அரைகுறை ஒளியோடு தன் தோளில் கை வைத்திருந்தவனின் முகத்தை பார்த்தான். பாய்ந்து எழுந்தவன் அவனை பின்னால் தள்ளினான். அவன் தள்ளிய தள்ளலில் ஐந்தாறு அடிகள் பின்னால் வந்து நின்றான் சிவா.

"தினேஷ்.." என்றான் குழப்பத்தோடு. தினேஷ் வித்தியாசமாக தெரிந்தான். சிவாவின் அருகே வந்து அவனின் கழுத்தை பற்றினான். "என் சாந்தவியை தொடாதே.." என்றான் ஆக்ரோசமாக.

சிவா குழம்பி போனான். அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ள முயன்றான். "டேய் மெண்டல்.. உனக்கு என்னடா ஆச்சி.?" தினேஷை தூர தள்ளி விட்டுவிட்டு இரும்பியபடியே கேட்டான்.

தினேஷ் மீண்டும் அவனின் கழுத்தை நெறிக்க வந்தான். அவனின் கன்னத்தில் பளீரென்று அறையை தந்தான் சிவா. தினேஷ் சட்டென்று நின்றான். கண்களை மூடித் திறந்தான். எதிரில் இருந்த சிவாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"அடிச்சியாடா என்னை.?" என்றான் சிவாவிடம்.

"போடா புண்ணாக்கு.. கழுத்தை நெறிக்க வந்தா கொஞ்சுவங்களா உன்னை.? மண்ணாங்கட்டி கொஞ்ச நேரத்துல கொன்னிருப்ப.." என்றவன் தன் தொண்டை பகுதியை தடவி விட்டுக் கொண்டான்.

தினேஷிற்கு குழப்பமாக இருந்தது. தான் எப்போது அவனின் கழுத்தை நெறிக்க சென்றோம் என்று யோசித்தான். எதுவும் நினைவிற்கு வரவில்லை. டைரியை படித்ததுதான் கடைசி நினைவாக இருந்தது.

"பேய் பேய்ன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்த. கடைசியில அந்த பேய் உன்னையே பிடிச்சிடுச்சி போல‌.." என திட்டிக் கொண்டே சென்று கதவை திறந்து வெளியே நடந்தான் சிவா.

"சாரிடா.. மிஸ்டேக்கா எதையோ பண்ணிட்டேன் போல.." என்றபடி அவனை தொடர்ந்து பின்னால் வந்தான் தினேஷ்.

சிவா நின்றான். அவனை திரும்பி பார்த்து முறைத்தான். "பேய் ஆவியெல்லாம் உனக்கெதுக்கு.? யாழினிக்கு இன்னைக்கு பர்த்டே. ஆனா நீ இன்னைக்கும் அவளை அழ வச்சிருக்க. கொஞ்சம் போய் கண்ணாடியை பாரு. பைத்தியம் போல இருக்க நீ. அந்த தாடியை ஷேவ் பண்ணலாம். இந்த தலை முடியை கட் பண்ணலாம். ஆனா நீ இந்த ரூமை விட்டு வெளியே வர மாட்டேன்னு இருக்க.." கத்தியவனை விழியசைக்காமல் பார்த்த தினேஷ் "இன்னைக்கு அவளுக்கு பர்த்டே பார்ட்டியாம். நீ போய் எதையாவது சொல்லி சமாளிச்சிக்கிறியா.?" என்றான்.

சிவா அதிர்ச்சியடைந்தான். இடம் வலமாக தலையசைத்தான். "உன்னை திருத்தவே முடியாது. இத்தனை திட்டு திட்டுறேன் நான். ஆனா நீ உன் மைண்ட் செட்டை விட்டு வெளியே வர கூட டிரை பண்ணல. நீ எப்பவும் இப்படிதான் இருப்பியா.?" என்று திட்டி தீர்த்தான். பத்து நிமிடத்திற்கு தொடர்ந்தது அவனின் திட்டல். அவனின் திட்டை வாங்க முடியாமலேயே தினேஷ் அவனோடு பார்ட்டிக்கு கிளம்பினான்.

"உன் ஆளுக்கு பர்த்டே. ஆனா நான் உன்னை கம்பல் பண்ணி கூட்டிட்டு போறேன். ‌உனக்கே மனசாட்சி இல்லையா.?" என்று திட்டிய சிவா காரிலிருந்து இறங்கும் முன்பே அவனின் கையில் கிப்ட் பாக்ஸை திணித்தான். "இதை யாழினிக்கு பிரசெண்ட் பண்ணு.." என்றான். தன் கையில் மற்றொரு கிப்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN