குறிப்பேடு 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாழினியின் பங்களா குட்டி குட்டி சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேற்கத்திய பாடல் ஒன்றின் மெல்லிய இசை காற்றில் மிதந்துக் கொண்டிருந்தது.

யாழினியின் வீட்டின் ஓரத்தில் இருந்த தோட்டத்தில் பப்பே முறையில் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. கோட் சூட்டில் இருந்த ஆட்கள் பலர் கையில் தட்டை பிடித்தபடி ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

காரிலிருந்து இறங்கிய சிவா தினேஷை சாடையாக பார்த்தான். தினேஷ் பெருமூச்சோடு இறங்கினான்.

"இவங்க வீட்டு பார்ட்டிகள் ஏன் எப்பவும் ஒரே மாதிரி இருக்கு.?" சலிப்பாக கேட்டபடி சிவாவோடு இணைந்து நடந்தான்.

"பார்ட்டியில் குழப்பம் பண்ணி வச்சிடாத.. அப்புறம் உன்னை கொன்னுடுவேன் நான்.." என்று எச்சரித்தான் சிவா‌.

தோட்டத்தின் நுழைவாயிலில் நின்றிருந்தார் யாழினியின் தந்தை வசந்தன். நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தவர் சிவாவை கண்டதும் புன்னகைத்து கையசைத்தார். சிவா நண்பனை இழுத்துக் கொண்டு அவரருகே சென்றான்.

"ஹாய் அங்கிள்.. ஹவர் யூ.?" என கேட்டு அவரை அணைத்தான்.

"பைன்ம்மா.. உன் பிரெண்ட் பார்ட்டியில் கூட உம்முன்னுதான் இருப்பாரா.?" சிவாவின் பின்னால் நின்றிருந்த தினேஷை குறிப்பிட்டு கேட்டார்.

"அவனுக்கு லேசா தலைவலி அங்கிள்.." என்று சமாளித்தான் சிவா.

பெண்கள் கூட்டம் நின்றிருந்த இடத்தில் யாழினி இருந்தாள். மாடர்ன் டைப் தாவணியை அணிந்திருந்தாள். திருமண பெண்ணை போல அலங்காரம் செய்திருந்தாள். தலை நிறைய பூக்களை சூடியிருந்தாள். கை கழுத்து காதுகளில் நகைகளை அணிந்துக் கொண்டிருந்தாள்.

"யாழினியை பார்த்துட்டு வரோம் அங்கிள்.." என்று சொல்லிவிட்டு நண்பனை இழுத்துக் கொண்டு சென்றான் சிவா.

யாழினி தினேஷை கண்டதும் ஆச்சரியம் அடைந்தது அவளின் விழிகளில் தெளிவாக தெரிந்தது. தனது தோழிகளிடமிருந்து விலகி வந்து நின்றாள்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.." என்று அவளிடம் தன் கிப்டை நீட்டினான்.‌ "தேங்க் யூ சிவா.." யாழினி நன்றியை சொல்லிவிட்டு கிப்டை வாங்கிக் கொண்டாள்.

தினேஷை இழுத்து அவளருகே நிறுத்தினான் சிவா. "நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் அங்கிளை பார்த்துட்டு வரேன்.." என்றுவிட்டு திரும்பினான்.

சிவா தூரமாக சென்றபிறகு தினேஷை பார்த்தவள் "பிடிக்காம வந்தியா.?" என்றாள். நிமிர்ந்து பார்த்த தினேஷ் இல்லையென தலையசைத்தான்.‌

"பின்ன ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க.? சிவா உன்னை கட்டாயப்படுத்தி கூட்டி வந்தானா என்ன.?" என்றவளின் குரலில் சிறு எரிச்சல் இருந்தது.

வசந்தனின் அருகே நின்றிருந்த சிவாவிடம் குளிர்பானத்தை நீட்டினான் ஒருவன். அவனுக்கு நன்றியை சொல்லிவிட்டு குளிர்பானத்தை பெற்றுக் கொண்டவன் வசந்தனோடு உரையாடியபடியே பருக ஆரம்பித்தான்.

தினேஷ் தன்னிடமிருந்த கிப்டை அவளிடம் நீட்டினான். "உனக்கு ஒரு விசயம் கிளியரா தெரிஞ்ச பிறகும் அதை பத்தி கேட்காதே யாழினி. எனக்கு என் வேலை எவ்வளவு முக்கியம்ன்னு உங்க யாருக்குமே புரியல. என்னை அவன்தான் இழுத்துட்டு வந்தான். இந்த கிப்ட் கூட அவன்தான் வாங்கிட்டு வந்தான்.. சாரி.. ஆனா லவ் பண்ற பொண்ணுக்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.." என்றவன் அவளின் கையில் கிப்ட் பாக்ஸை திணித்து விட்டு உணவு பரிமாறும் இடம் நோக்கி நகர்ந்தான்.

யாழினியின் கண்களில் கண்ணீர் திரை கட்டியது. அவளை கவனித்துக் கொண்டிருந்த சிவாவிற்கு நண்பனின் மீது கோபமாக வந்தது.

உணவு தட்டோடு வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான் தினேஷ். அவனுக்கு முன்னால் இருந்த மேஜையில்‌ பெண் சிலை ஒன்று இருந்தது. அதை பார்த்தவனுக்கு சாந்தவியின் நினைவு வந்தது. தினேஷிற்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் யாழினி.

"உன்னை நான் வற்புறுத்துறேனா.? காதலியோட பர்த்டேக்காக ஒரு சில மணி நேரங்களை உன்னால செலவு பண்ண முடியாதா.? இந்த கிப்ட் யார் வாங்கியதா இருந்தா என்ன.? நீ வாங்கியதுன்னு சொல்லியிருந்தா என் மனசு நிறைஞ்சிருக்காதா.? காதலிக்கிட்ட பொய் சொல்ல கூடாதுன்னு நேர்மையா இருப்பவன் அவளோட மனசுலயும் என்ன இருக்குன்னு புரிஞ்சிக்க டிரை பண்ணி இருக்கலாம்.." என்றாள் மெல்லிய குரலில். குரலின் சத்தம் குறைவாக கேட்டாலும் கூட அவளின் கோபம் தெளிவாக இருந்தது வார்த்தைகளில்.

"சாப்பிடுறேன் யாழினி.. அப்புறம் பேசலாம்.." என்றவன் உணவு உண்பதில் கவனமானான். யாழினிக்கு அடக்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. அவளின் கண்களிருந்து குண்டு குண்டாக வழிந்த கண்ணீர் முத்துகள் கன்னத்தில் உருண்டன.

"யாழினி.." யாரோ அழைத்தார்கள். யாழினி அசையாமல் அமர்ந்திருந்தாள். தினேஷ் அவளை பார்த்தான். அவளின் கண்ணீரை கண்டுவிட்டு பெருமூச்சி விட்டான். "சொந்தக்காரங்க பிரெண்ட்ஸ் கூடியிருக்காங்க. சீன் கிரியேட் பண்ணாம அமைதியா எழுந்து போ.." என்றான்.

யாழினி தன் கன்னத்தினை துடைத்துக் கொண்டாள். எழுந்தாள். அவனை வெறுப்பாக பார்த்துவிட்டு நடந்தாள்.

தினேஷ் அவளின் முதுகை வெறித்தான். "என்னை மாதிரி ஒரு ரைட்டரோட மைன்ட் செட்டை யாராலும் புரிஞ்சிக்க முடியாது. இவங்களுக்கு எப்போதும் கூடவே உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருக்கணும்.." என்று முணுமுணுத்தான்.

வசந்தன் தன்னிடம் தரப்பட்ட மைக்கின் மேல் முனையை தட்டினார். "என் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். யாழினி என் ஒரே வாரிசுன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். அவளுக்கு இன்னைக்கு இருபது வருசம் நிறைவடையுது. அவளுக்கான எதிர்கால மணாளனை இந்த நாளில் அறிமுகப்படுத்தும் கடமை உள்ளது எனக்கு.." என்றவர் தன் அருகே நின்றிருந்த சில நண்பர்களின் முணுமுணுத்தளை கவனித்து விட்டு அவர்களின் பார்வை சென்ற திசையில் பார்த்தார்.

தினேஷை விட்டு விலகி எழுந்து வந்த யாழினி நேராக சிவாவிடம் சென்றாள். அவனின் உதட்டில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.

தன் உதடுகளில் முத்தம் தந்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான் சிவா. அவளின் கரங்கள் அவனின் பின்னந்தலை முடிகளை பற்றிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியில் இருந்த சிவா‌ சில நொடிகளிலேயே விசயத்தின் பின்விளைவை உணர்ந்து அவளை தூர விலக்கி தள்ளினான். "யாழினி.. ஆர் யூ கிரேஸி.?" என்றான் கோபத்தோடு.

தன் நண்பன் அமர்ந்திருந்த இடத்தை அவசரமாக பார்த்தான். தினேஷின் கரங்களில் இருந்த உணவு தட்டு தரையில் கிடந்தது. அவன் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அங்கே ஓடி வந்தான் சிவா. "இங்கே என் பிரெண்ட் இருந்தான். பார்த்திங்களா.?" என்றான் அங்கிருந்தவர்களிடம்.

"அவர் ரொம்ப நேரம் முன்னாடியே கிளம்பி போயிட்டார் மாப்பிள்ளை.." என்றான் ஒருவன்.

"மாப்பிள்ளையா.?" என குழம்பியவன் யாழினி தனக்கு முத்தம் தரும் முன் வசந்தன் என்ன பேசிக் கொண்டிருந்தார் என்று யோசித்தான். யாழினி முத்தம் தந்து விடவும் தன்னைதான் அவளின் எதிர்கால கணவன் என அனைவரும் எண்ணி விட்டார்கள் என்பதை புரிந்துக் கொண்டான். நண்பனை பழி வாங்கவே யாழினி இதை செய்தாள் என்பதை அறிந்திருந்தவனுக்கு இப்போது நண்பன் எங்கே என்ற விசயம்தான் முக்கிய கவலையாக இருந்தது‌.

யாழினியின் செயல் வசந்தனை திடுக்கிட வைத்துவிட்டது. ஆனாலும் அவளுக்கு இப்போதாவது புத்தி வந்ததே என்று எண்ணியும் சந்தோசப்பட்டார்.

மைக்கின் மேல் முனையை மீண்டும் தட்டினார். யாழினியை நம்பி யாரை மாப்பிள்ளை என்று சொல்வது என்று குழப்பமாக இருந்தது அவருக்கு. அவருக்கு தினேஷை விட சிவாவைதான் அதிகம் பிடித்திருந்தது. ஆனால் அதை மகளிடம் தெரிவிக்கவில்லை அவர். மனைவியற்றவர் அவர். மகளையே உலகம் என நினைத்து வாழ்பவர். அதனாலேயே மகளின் ஆசையை மறுத்து சொல்ல முடியாமல் தினேஷை தன் மருமகனாகவே எண்ண ஆரம்பித்து விட்டார் அவர்.

"சிவா.. நாம கொஞ்சம் பேசலாம்.." என்றாள் அவனருகே வந்த யாழினி. சிவா அவளை கண்டுக் கொள்ளாமல் அவசரமாக தன் போனை எடுத்து நண்பனுக்கு அழைத்தான். மூன்றாவது ரிங்கில் அழைப்பை ஏற்றான் தினேஷ்‌.

"எங்கடா இருக்க.?" பயமும் கவலையுமாக கேட்டான் சிவா.

"நான் ஆட்டோல இருக்கேன்டா.. எனக்கு வீட்டுல வேலை இருக்கு‌. நீயே பார்ட்டியை கவனிச்சிட்டு வா.." என்றான்.

சிவாவிற்கு ஆத்திரமாக வந்தது. "உனக்கு என்னடா வந்தது.?" எரிச்சலோடு கேட்டான். இங்கே இப்படி ஒரு விசயம் நடக்கும் போது அதை கூட கவனிக்காமல் வீட்டிற்கு ஓட வேண்டிய அவசியம் என்ன என்று அவனுக்கு கோபமாக வந்தது. நண்பன் இந்த முத்த காட்சியை பார்த்துவிட்டு சோகத்தில்தான் இங்கிருந்து போயிருப்பான் என்று பயந்திருந்தான் சிவா. ஆனால் அவனோ இவனின் பயத்திற்கு துளி கூட சம்பந்தபடாமல் அதற்கும் முன்பே கிளம்பி விட்டது சிவாவிற்கு கோபத்தையும் நிம்மதியையும் ஒருசேர தந்தது.

"காலை கட் பண்ணிரு சிவா. ப்ளீஸ்.." என்ற யாழினியை குழப்பமாக பார்த்தவனின் போன் அதற்கும் முன்பே கட்டாகியிருந்தது.

"தினேஷோடு லாஸ்ட் வரை ரிலேசன்ஷிப்ல இருப்பேன்னு நம்பிக்கை வரல எனக்கு. நான் அவனோடு பிரேக்அப் பண்ணிக்க போறேன்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியல. உன்னை கிஸ் பண்ணதுக்கு சாரி. ஆனா இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் என் லவ்வரா என் ரிலேடிவ்ஸ் முன்னாடி நின்னுட்டு கிளம்பு. ப்ளீஸ். உன் நண்பனை தெரிஞ்சோ தெரியாமலேயோ காதலிச்சிட்டதுக்கு இந்த உதவியை மட்டுமாவது செய்.." என்றாள்.

சிவா அவளை முறைக்கத்தான் நினைத்தான். ஆனால் அவளின் நிலை அவனை பரிதாபப்பட வைத்தது.

இரவு பன்னிரெண்டுக்குதான் யாழினியின் பர்த்டே பார்ட்டி முடிந்தது. அதுவரையிலும் அவளோடு இருக்க வேண்டியதாகி விட்டது சிவாவிற்கு. அவளின் உறவினர்கள் வரிசை கட்டா வந்து சிவாவிற்கு வாழ்த்து சொன்னார்கள். யாழினியை மணக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்கள்‌. அதை மட்டும் சிவா மனதுக்குள்ளாவது ஒத்துக் கொண்டான். யாழினியை போல ஒரு பெண்ணை கை தவற விட்டு விட்டால் அதை போல முட்டாள்தனம் ஏதுமில்லை என்று எண்ணினான். யாழினி இப்போதும் கூட தினேஷின் கவனத்தை பெறவே தனக்கு முத்தமிட்டாள் என்பதை அவன் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தான்.

யாழினிக்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டி விடும்படி உறவினர்கள் கூட்டம் நச்சரித்தபோது மலர்ந்த முகத்தோடே அவளுக்கு கேக்கை ஊட்டினான் சிவா.

இரவு பன்னிரெண்டைரைக்குதான் வீட்டிற்கு வந்தான் சிவா. வீட்டின் கதவுகள் இரண்டும் முழுதாக திறந்திருந்தது. தினேஷை மனதுக்குள் திட்டியபடி உள்ளே நடந்தவன் வீடு இருட்டில் கிடப்பதை கண்டுவிட்டு விளக்குகளின் சுவிட்ச்களை இயக்கினான்.

"தினேஷ்.." என்று அழைத்துக் கொண்டே இருவரும் சேர்ந்து உறங்கும் படுக்கையறைக்கு சென்றான். அறை காலியாக இருந்தது. கிச்சனையும் பாத்ரூமை பார்த்துவிட்டு வந்தவன் தினேஷின் பேய் ஆராய்ச்சி அறையை திறந்தான். அறைக்குள் புயல் வந்து ஓய்ந்தது போல இருந்தது. சுவரில் ஒட்டியிருந்த காகித தாள்கள் அனைத்தும் தரையில் கிடந்தது.

"எங்கே போனான் இவன்.? ஏன் இந்த ரூம் இப்படி இருக்கு.?" சந்தேகத்தோடு தன் போனை எடுத்தான். தினேஷின் போனிற்கு அழைத்தான்.

தினேஷின் போன் அந்த அறையிலேயேதான் இருந்தது‌. "போனை வச்சிட்டு எங்கே போனான்.?" குழப்பத்தோடு அவனின் போனை கையில் எடுத்தான். போனின் திரையில் மேப் செயலி இருந்தது. பிரேத மலை என்ற பெயரை சர்ச் செய்து வைத்திருந்தான் தினேஷ்‌. கேள்விப்படாத பேரா இருக்கே.." என்ற தினேஷ் எதேச்சையாக தரையை பார்த்தபோது தரையில் ரத்த துளிகள் சில கிடந்தன.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
பிரதிலிபியில் நானும் எனது கதைகளும் சப்ஸ்கிரைப் ஆப்சன் கீழ் வருவதால் என்னால் இங்கே அடுத்த ஐந்து நாட்களுக்கு அத்தியாயங்களை அப்டேட் செய்ய முடியாது நட்புள்ளங்களே. ஐந்து நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN