முகவரி 35

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
‘என்னது?... நான் தாலியின் புனிதம் தெரியாமல் நடந்துகிட்டேனா? அப்படி நடக்க நான் மட்டுமா காரணம்? வலிக்குதா... நல்லா வலிக்கட்டும்… அப்போ இவருக்கு வலிக்கலையா? இதற்கு என்ன அர்த்தம்… நான் குணநாதன் பொண்ணுங்கிறதாலே எனக்கு வலிக்கட்டும்னு சொல்கிறாரா?’ உள்ளம் குமுற…

“ஏன் மிரு… அப்போ நான் வெறும் குணநாதன் மகளா தான் எப்போதும் உங்க கண்களுக்குத் தெரிகிறேனா... அதற்காக தான் எனக்கு வலிக்கட்டும்னு சொல்றிங்களா... ஒரு வினாடி ஒரு நிமிடம் கூடவா நான் உங்க மனைவியா உங்க மனதில் பதியலை... என்னைப் பழிவாங்க வந்த உங்களை என் காதல் கொஞ்சம் கூடவா மாற்றவில்லை...

ச்சே! நான் ஒரு முட்டாள்... பைத்தியம்... கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? அதான் என் காதல் உங்களைக் கொஞ்சமும் மாற்றவில்லைன்னு தெரியுதே... அப்படி மாறியிருந்தால் என் வாழ்க்கையை சீரழித்து இருப்பிங்களா... ஒரு சாதாரண பொண்ணா நினைத்து அன்று என் மேலே ஈவு இறக்கம் இல்ல பட்டு இருப்பீங்க... சொல்லுங்க மிரு... ஏன் என் வாழ்க்கையை அழித்தீங்க? ஏன் என்னை அப்படி ஒரு இடத்தில் நிற்க வைத்தீங்க... ஏன் காதல் என்ற பெயரில் என்னைப் பழி வாங்கினீங்க... எனக்கு இன்று தெரிந்தே ஆகணும் சொல்லுங்க மிரு... எனக்கு சொல்லப் போறீங்களா இல்லையா?” ஆங்காரமாய் இவள் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கவும்

மனைவியின் எந்த கேள்விக்கும் எந்த ஒரு உலுக்களுக்கும் கொஞ்சமும் அசையாமல் மலை போல் நின்றிருந்தவன், “சபாஷ்! ஏன் அப்படி செய்தீங்க? இதை நீ எப்போ கேட்பேன்னு தான் டி நானும் காத்துகிட்டு இருந்தேன். இன்று என் சட்டையைப் பிடித்து இவ்வளவு உரிமையா கேட்கிறவ... அன்று என்னை ஒரு துரோகியா கூட நினைத்து ஏன் டி கேட்கலை? அன்று பதினேழு வயதுப் பெண்ணான நீ என்ன கேட்டிருந்தாலும் பதில் தந்திருப்பேன்.

ஆனா இன்று நீ கேட்ட எதற்கும் நான் பதில் சொல்ல மாட்டேன். பதில் சொல்லி விளக்கம் தந்து தான் நான் உன்னை என் வாழ்வில் நிறுத்தி வைத்துக்கணும்னா அப்படிப் பட்ட நீ எனக்கு தேவையில்லை டி! என்ன கேட்ட... நான் இன்னும் குணநாதன் பொண்ணா... இந்த கேள்வியை நீயே உன்னைப் பார்த்து நிதானமா கேட்டுப் பாரு... பதில் கிடைத்தாலும் கிடைக்கும். அப்போ நீ கேட்ட கேள்விக்கும் பதில் கிடைக்கும். ஆனா நிச்சயம் என் கிட்டயிருந்து பதில் வராது” என்று நிதானமாக சொன்னவன் அவளின் கைகளை விலக்க எத்தனிக்க... ஊஹும்... அவளின் பிடியோ இறுக்கமாக இருந்தது.

“எனக்கு இந்த சாக்கு போக்கான பதில் எல்லாம் வேண்டாம்... நேரடியான பதில் தான் வேண்டும்… சொல்லுங்க” இவள் விடுவதாக இல்லை.

“நெவெர்... பதில் தர முடியாது” அவனிடம் அழுத்தம் திருத்தமாக பதில் வரவும்

கணவனின் பதிலில் ஒரு நிமிடம் திகைத்தவள், “அப்போ என்னாலேயும் தாலி இல்லாமல் உங்க கூட உங்க வீட்டில் இருக்க முடியாது” இவள் முடிவாக சொல்ல

“ஒஹ்! ஆனா எனக்குப் புரியலை ஷிதா... கொஞ்சம் தெளிவு படுத்தேன். இப்போ உனக்கு தாலி இல்லாம இருக்கிறது பிரச்சனையா... இல்லை நான் செய்ததை பற்றி தெரிஞ்சிக்கணுமா?” அவனிடம் அதே நிதானம்

பெண்ணவள் என்ன சொல்லுவாள்... அவளுக்கு எது வேண்டும்... எதைப் பற்றி கேட்கிறாள்... என்ன நினைக்கிறாள்... அவளுக்கே ஒன்றும் புரியாத நிலை. அப்படி இருக்க அதை அறிந்தவனோ அவளின் கையை விலக்கி... அதே நிதானமிட்ட நடையுடன் அங்கிருந்த திவானில் அமர்ந்தவன், “நீ என் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு…”

அவன் முடிப்பதற்குள், “குற்றச்சாட்டு எல்லாம் வைக்கலை... என் விஷயத்தில் நீங்க தான் குற்றவாளின்னு சொல்கிறேன்…” இவள் உறுதியாய் மொழிய

ஒரு விளங்கா பார்வையுடன் தன்னவளை நோக்கியவன், “குட்...” என்று அழுத்தமாய் தலை அசைத்தவன், “உன் பார்வையில் நான் குற்றவாளி என்றால் அப்போ அதை நிரூபி”

“அது எப்படி?” இவள் புரியாமல் கேட்க

“நான் குற்றம் செய்தேன் என்பதை போதிய ஆதாரங்களோடு... சாட்சிகளோடு என் குற்றத்தை நீ நிரூபிக்கலாமே! அதாவது அப்படி ஒன்று நடந்திருக்கும் பட்சத்தில்...”

அவளுக்குப் புரிந்தது… கணவன் ஏதோ தன்னை வலைக்குள் சிக்க வைக்கிறான் என்று. “உங்க பண பலத்தால் தடயங்களை எல்லாம் அழித்து விட்டோம் என்ற மமதையில் பேசுறீங்களா?” இவள் கேட்க

“உன் சம்மந்தப்பட்ட எதையுமே... நான் என் வாழ்விலிருந்து அழிக்க மாட்டேன் ஷிதா... நீ எனக்கு அவ்வளவு முக்கியமானவள்! அதனால் நீ என்னை நம்பலாம்”

அவன் குரலில் உறுதியைக் கண்டவள், “ஓஹ்! குணநாதன் பொண்ணை எப்படி எல்லாம் பழிவாங்கினோம்னு... நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வீங்க போல” இவள் குத்தலாய் பதில் தர, அதே விளங்கா பார்வையுடன் தன்னவளை வெறித்து இருந்தான் மிருடன்.

“சரி… அப்படி நான் நிரூபிச்சிட்டா உங்களுக்கு என்ன தண்டனை தரலாம்?” அப்படி ஒன்றைக் கொடுத்தால் தான் அவள் மனது சமாதானம் ஆகும் என்ற எண்ணம் அவளுக்கு.

கண்கள் பளிச்சிட, “தங்கள் சித்தம் என் பாக்கியம் மகாராணி...” இதைச் சொல்லும்போது அவனையும் மீறி அவன் உதட்டோரம் துடிக்கத் தான் செய்தது.

“அதே உன்னால் நிரூபிக்க முடியலனா?” இவன் ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க

“உங்களை போலவே... தங்கள் சித்தம் மகராஜான்னு... சொல்வேன்னு எதிர்பார்க்கறீங்களோ...”

“ஹா... ஹா...” இறுக்கம் தளர வாய்விட்டே சிரித்தவன்…

“தாங்கள் குணநாதன் சாம்ராஜ்யத்திற்கே மகாராணி! நான் சாதாரண பிரஜை... அப்படி எல்லாம் தங்கள் அடியேன் எதிர்பார்க்க முடியுமா மகாராணி?” இவனிடம் கேலி இழையோடியது.

இவள் பல்லைக் கடிக்க, “ஆனால் குற்றம் சாட்டப்பட்டவன், குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆகும் போது... தண்டனை கொடுக்கலாம் தானே ஷிதா?”

இவள் ஆமாம் என்பதாய் தலை அசைக்க, “அப்போ என்னுடைய தண்டனையை இப்பவே சொல்லிடவா?” என்றவன் எதிரில் நின்றவளை நிமிர்ந்து நிதானமாய் காண

கணவனின் பார்வை வீச்சால்... அனுவுக்குள் ஏதோ செய்தது. ‘என்ன சொல்லப் போகிறார்?’ இவள் நிமிர்ந்தே நிற்க…

“இன்று நீ கேட்ட தாலியை உனக்கு நான் கொடுக்க மாட்டேன்... அதனால் கடைசி வரை நீ என் மனைவியா என்னுடன் இருந்தாலும் சரி... இல்லைனா... நீ சொன்ன மாதிரி அந்த டேஷ்... டேஷ்... என்ற உறவில் எப்படி வாழ்ந்தாலும் சரி... ஆகமொத்தம் நீ என் கூடத்தான் இருப்ப” இவன் தெளிவாய் முடிக்க

கோபத்தில் உடம்பெல்லாம் உதற... “ச்சே! உங்க புத்தி தெரிந்தும் நின்று பேசிட்டு இருக்கேன் பாரு... என்னை சொல்லணும். அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. என்னாலே நிரூபிக்க முடியாம போனால் தானே... சீக்கிரம் ஆதாரத்தோட வரேன். அதுவரை நீங்க யாரோ நான் யாரோ”

“அதாவது இந்த அறைக்குள் மட்டும்...” மிருடன் திருத்தி சொல்ல, இவள் ஆமாம் என்பதாய் தலை அசைத்து விட்டு வெளியே செல்ல திரும்ப

சொடக்கிட்டு தன்னவளை நிறுத்தியவன் எழுந்து அவள் முன் வந்து நின்று, “எண்ணி நாலு நாள் தான் உனக்கு டைம் மேடம்... அதற்குள்ள கண்டுபிடிங்க... Your time start now... all the best Mrs. மிருடவாமணன்” என்றவன் கை குலுக்க அவள் முன் தன் கையை நீட்ட

அவளோ அதற்கு இடம் கொடுக்காமல் நிற்க,“கைய கொடு டி...” என்றவன் தானே அவள் கை பற்றி குலுக்கியவன் பின் ஒரு அழுத்தத்தோடு அவளின் விரலில் இருந்த மோதிரத்தை உருவ இவன் எத்தனிக்க… அதை கண்டு கொண்டவள்... தன் விரலை மடக்கி அவனின் முயற்சியைத் தடுத்தவள் நிமிர்ந்து அவன் முகம் காண, அவனோ கேலியாய் ஒற்றைப் புருவம் உயர்த்தி... மர்மமாய் புன்னகைக்கவும்... முகம் சிவந்தாள் அனு.

அவள் விரலில் இருக்கும் மோதிரம் மிருடன் அவளின் பிறந்த நாள் அன்று தன் காதலை முதன் முதலில் சொன்ன போது அவளுக்கு அவன் அணிவித்த மோதிரம் அது. தாலியைக் கழற்றினாலும்... இதை மட்டும் கழற்றாமல் தன் விரலிலேயே அணிந்திருந்தாள் அனு. முகம் சிவந்து நிற்கும் மனைவியை நோக்கியவனின் முகம் மென்மையாக தன்னவளை இழுத்து அணைத்து... நெற்றியில் இதழ் பதித்தவன்,

“உன் முயற்சியில் நீ வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் ஷிதா” என்று இவன் வாழ்த்த, பெண்ணவளுக்கோ விழிகள் கலங்கியது.

தாம் என்ன உணர்கிறோம் என்பதை பிரித்து அறிய முடியாத மனநிலையில் அன்றைய இரவைக் கழித்தாள் அனு. ஐந்து வருடத்திற்கு முன்பே உறுதியாய் தெரிந்த ஒரு விஷயத்தை நோக்கி திரும்பச் செல்ல இவளுக்குள் ஏன் இத்தனை... தயக்கம்... பயம் என்று தெரியவில்லை. கணவன் நிரபராதி என்றால்... அவனை நம்பாமல் போனதற்கு அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் இவள் தயார் தான். அதே அவன் தான் குற்றவாளி என்று உறுதியானால்... மேற்கொண்டு அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மொத்தத்தில் திரிசங்கு சொர்க்கமாய் இருந்தது அவளின் மனநிலை.

இரவு முழுவதும் உறங்காமல் தவித்தவள் அதிகாலை வேளையில் உறங்கியதால், காலையில் பதினோரு மணிக்கு தான் கண்விழித்தாள் அனு. இவள் அடித்துப் பிடித்து எழுந்திருக்கவும்... கட்டிலில் அவள் பக்கத்தில் இருந்தது ஒரு லெட்டர் பேட். இவள் எடுத்துப் பார்க்க, ‘குழந்தைகள் அக்கா வீட்டில் இருக்கட்டும். மதியம் உனக்கு அக்கா வீட்டிலிருந்து சாப்பாடு வரும்... சாப்பிட்டு ரெஸ்ட் எடு. ஈவினிங் பிள்ளைகளோட வரேன்… அப்போது சந்திப்போம்’ என்று மிருடன் எழுதியிருக்க, கணவன் ஆபிஸ் கிளம்பி விட்டான் என்பதில் ஆசுவாசமாக மூச்சை வெளியிட்டவள்

பின் நிதானமாக எழுந்து குளித்து உணவு அருந்தியவள்... மேற்கொண்டு நேற்று கணவன் சொன்னதைப் பற்றி யோசித்தவள்... அதை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று இவள் யோசிக்க... அதில் பதில் கிடைக்காமல் சற்று நேரம் சுற்றியவள்... பின் தீவிரமாக யோசித்ததில் அவள் பற்றுக்கோளாய் நினைத்ததில்.... அவள் முன் வந்து நின்ற உருவம் பரணியாகத் தான் இருந்தான்.

‘அவரிடம் கேட்டால் நிச்சயம் இதற்கான உதவியை செய்வார்’ இப்படி நினைத்ததும் அவள் மனது லேசானது. அப்படி அவள் மனம் லேசான பிறகு தான் அவளே உணர்ந்தாள்... அவளுக்கு இப்படி ஒரு தனிமையைக் கொடுத்து... அவள் மனம் லேசாக உதவியது கணவன் தான் என்று. ‘இன்று என்ன செய்து என்ன... அன்று செய்யக் கூடாததை எல்லாம் செய்துட்டாரே...’ அதன் பின் சிறிதும் தாமதிக்காமல் இவள் பரணிதரனை அழைத்துப் பேச வேண்டும் என்று சொல்ல.... மாலை வீட்டுக்கே வந்து சந்திப்பதாக சொன்னான் அவன்.

புதுக்கோட்டையை விட்டுக் கிளம்பும் போது அனு இரண்டொரு வார்த்தை அவனிடம் பேசியது... அதன் பிறகு இன்று தான் அழைத்துப் பேசுகிறாள். பரணி தான் சொன்ன நேரத்திற்கு வீட்டிற்குள் நுழைய

அனு, “வாங்க... வாங்க… எப்படி இருக்கீங்க...” வரவேற்க

பரணி, “வந்தேன்... வந்தேன்... நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...” பதிலுக்கு கேட்கவும்

அதேநேரம் வாசலில் கார் வந்து நிற்க… அதிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார்கள் மான்வியும், ஜீவாவும். உடனே பரணி வெளி வாசலுக்கு விறைய...

இவனைக் கண்டதும் இன்னும் துள்ளலுடன் “பரணீஈஈஈஈ.... அங்கிள்...” குழந்தைகள் இருவரும் ஒரு சேர கூச்சலுடன் இவனிடம் நெருங்கி காலைக் கட்டிக் கொள்ள...

அதில், “தங்கங்களா...” என்றபடி தன் தோளுக்கு ஒருவராய்... இருவரையும் தூக்கி அமர வைத்துக் கொண்டான் அவன். அவன் முகத்திலும் பிள்ளைகள் முகத்திலும் அப்படி ஒரு ஆனந்தம்.

‘இவருக்கு மான்வியைத் தெரியும். ஜீவாவை எப்படி தெரியும்?’ என்பதாக அனு பார்த்துக் கொண்டிருக்க

அப்போது உள்ளே நுழைந்த மிருடன், “வா டா... மாப்பிள்ளை...” என்று வந்தவனை வரவேற்க...

“வந்தேன் டா... மச்சான்...” என்று பரணியும் ஆர்ப்பரிக்க... ஒரு துள்ளலுடன் தாவிச் சென்று... அவனை பிள்ளைகளுடன் தோள் அணைத்தான் மிருடன். இதையும் அனு ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்க... பின் மனைவியிடம் நெருங்கியவன், “ஷிதா... பரணியை கெஸ்ட் ரூமில் அமர வைத்து ஜுஸ் கொடு... இதோ நான் பிரெஷ்ஷாகி வரேன்” என்றவன் மேலே தங்கள் அறைக்குச் செல்ல...

“நாங்க... நாங்க... கூட்டிட்டுப் போறோம்” என்ற படி பிள்ளைகள் இருவரும் அவனை அந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அனு குளிர்பானத்துடன் வர, குழந்தைகள் இருவரும் அவன் மேல் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“ஜீவா... மான்வி... என்ன இது... அங்கிள் கிட்ட இப்படி சேட்ட பண்றீங்க?” வந்தவள் கண்டிக்க

“அம்மா... அங்கிள் இவ்வளவு நாள் எங்களை வந்து பார்க்கலை இல்ல? அதற்கு பனிஷ்மென்ட்” என்று இருவரும் கோரசாகச் சொன்னவர்கள் அவன் தலை முடியை பிடித்துக் கொண்டு... அவனின் தலை மேலேயே ஏறி அமர எத்தனிக்க...

“ஒஹ்... என்ன பழக்கம் இது!” குளிர்பானத்தை டீபாய் மேல் வைத்து விட்டு பிள்ளைகள் முதுகில் இவள் இரண்டு அடி கொடுக்க

ஸோஃபாவில் பிள்ளைகளிடம் தலையைக் கொடுத்து விட்டு... அவர்களைப் பிடித்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த பரணி... அனு குழந்தைகளை அடிக்கவும்,
“விடுங்க அனு... குழந்தைங்க தானே... என்னை பார்த்த சந்தோஷத்தில் இப்படி நடந்துக்கிறாங்க... எனக்கும் சந்தோஷம் தான்...” அவன் விளக்க

“இல்ல... இல்ல... இது தப்பு. ஜீவா மான்வி... இப்போ நீங்க அம்மா பேச்சைக் கேட்கல... பிறகு இந்த வீக் என்ட் உங்களை நான் எங்கேயும் அழைச்சிட்டுப் போக மாட்டேன்...” இவள் மிரட்ட

அது என்னமோ நன்றாகவே வேலை செய்தது. இருவரும் இறங்க, “அங்கிள் இப்போ தானே வந்திருக்கார்... பிறகு விளையாடலாம். அப்பவும் இப்படி எல்லாம் சேட்ட பண்ணக் கூடாது. போங்க… போய் டிராயிங் ரூம்ல போய் டிராயிங் பண்ணுங்க. பிறகு வந்து அங்கிள் உங்களைப் பார்ப்பார்...”

தாய் கொஞ்சம் கோபமாய் சொல்லவும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே நடந்த இருவரும் கதவிடம் போனதும்… மான்வி, “அங்கிள்… அம்மா ரொம்ப மிரட்றா... இவங்கள பிடித்து ஜெயிலில் போடுங்க” என்று சொல்ல...

“ஆமாம் ஜெயிலில் போடுங்க..” ஜீவாவும் ஒத்து ஊத...

“அப்படியா.. அதற்கு முன்னாடி... உங்க இருவரையும் அடிக்க இங்கு பிரம்பு வச்சிருந்தனே... அதை தேடி எடுக்கிறேன்...” இவள் பாவ்லா காட்ட…

“வெவ்வவெவவ்வா....” இரு பிள்ளைகளும் தாய்க்கு பழிப்பு காட்டி விட்டு ஓடி மறைந்தனர். பிள்ளைகளின் சேட்டையில் பரணி வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்க, அவனிடம் குளிர்பானத்தைக் கொடுத்தவள்...

“உங்களுக்கு ஜீவாவைத் தெரியுமா?” என்று கேட்க

பரணி, “ஜீவாவை மட்டும் இல்ல… மிருடனும் எனக்கு பழக்கம் தான்”

இவள் எப்படி என்பது போல் காண… “நான், மிருடன், சக்தி... அதான் ஜீவா அப்பா... எல்லோரும் அநாதை இல்லத்தில் வளர்ந்தவங்க. எங்களோட பார்கவியும் வளர்ந்தவ தான். நாங்க நான்கு பேரும் நல்ல பிரெண்ட்ஸ்” என்றவன் “அதனால் தான் நீங்க மான்வியோட தனியா புதுக்கோட்டையில் இருந்தப்போ... என்னை உங்களுக்கு பாதுகாப்பா பார்த்துக்கச் சொல்லி... மிருடன் பொறுப்பைக் கொடுத்திருந்தான்” அவன் மேலும் விளக்க... அனுவுக்கு முன்பு நடந்தது எல்லாம் புரிந்தது.

“நான் அவனுக்கு தெரிந்தவன்னு காட்டிக்க கூடாதுன்னு தான்... அன்று உங்க கூட வந்து அவனை மிரட்டினேன்” இதை அவன் சங்கடமாய் சொல்ல

அதேநேரம் உள்ளே நுழைந்தான் மிருடன். “என்ன மாப்பிள்ள... என்ன உன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டு இருக்க... கல்யாண சாப்பாடு எப்போ போடப் போறேங்கிறதை பற்றியா?” இவன் கேட்டுக் கொண்டே வந்து அமரவும்

பரணியின் முகமோ வெட்கத்தைத் தத்து எடுக்கவும்… அவனை ஆச்சரியமாய் பார்த்தவள், “என்னங்க போலீஸ்காரர் வெட்கம் எல்லாம் படுகிறார்! அப்போ காதலா?” என்று இவள் கணவனிடம் கேட்க

“உன் காதல் என் காதல் இல்லை மா... ஊர்ப்பட்ட காதல் அந்த பார்கவி பொண்ணு மேலே...” மிருடன் சொல்ல... அவனின் விலாவில் பரணி குத்த… நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொள்ள... இருவரையும் அப்படி பார்க்கவே அனுவுக்கு சந்தோஷமாக இருந்தது.

“எனக்கும் அந்த காதல் கதையை சொல்லுங்களேன். ப்ளீஸ்... ப்ளீஸ்...” இவள் ஆர்வமாய் கணவனிடம் கெஞ்ச...

“அது ஒன்னும் பெரிய கதை இல்லம்மா... அந்த பார்கவி பிள்ளை எப்ப பாரு துப்பாக்கியை வச்சிகிட்டு சின்ன வயசுலே சுற்றிட்டு இருக்கும். அதுக்கு துப்பாக்கியால் யாரையாவது சுடறது ரொம்ப பிடிக்கும். மரத்திற்கு பின்னால்... கிணற்று பின்னால்... சுவர் பின்னால்ன்னு மறைந்திருந்து சுடும்.

அப்போ எல்லாம் இவன் தான் அது முன்னாடி போய் நின்று குண்டடி வாங்குவான்... நான் கூட ஏதோ அந்த பிள்ளைக்கு விளையாட்டு காட்டுறான்னு நினைத்தேன். கடைசியில் இவன் காலம் முழுக்க அந்த பிள்ளை கையால் அடிவாங்க தயார் ஆகிட்டான்... அந்த பிள்ளையோட ஆம்பிஷன் தான் போலீஸ் வேலை... அது தான் ஐயாவும் போலீஸில் இருக்கார்...” என்று மிருடன் சொல்லி முடிக்கவும்...

“நீங்க சொன்ன பார்கவியா?” என்று அனு பரணியிடம் கேட்க...

அவன் ஆமாம் என்பதாய் தலை அசைக்கவும், “வந்ததும் சொல்லிட்டானா... என்ன டா... இவ்வளவு வேகமா இருக்க...” மிருடன் நண்பனிடம் வம்பிழுக்க, பரணி சிரிக்க... அனு முகத்திலும் புன்னகை.

மிருடன், “எப்போ டா கல்யாணம்...”

“அதை நீ தான் சொல்லணும்...” இவ்வளவு நேரம் இருந்த உற்சாக குரல் பரணியிடம் இல்லாமல் போகவும்

“என்னங்க... ஏதாவது பிரச்சனையா?” அனு கணவனிடம் கவலையாய் கேட்க

மனைவியின் கையைப் பற்றி தன் எதிரில் அமர வைத்தவன், “அது ஒன்னும் இல்ல ஷிதா... பார்கவியை ஒரு கான்ஸ்டபிள் ஐயா தத்து எடுத்துகிட்டார். அவங்க ஏழையா இருந்தாலும், பார்கவியை இன்று வரை அவங்க நல்லா பார்த்துக்கிறாங்க. கல்யாணத்திற்கு பார்கவி சார்பா அவளை வளர்த்த அப்பா அம்மா நிற்பாங்க. இவனுக்கு தான் நாம இரண்டு பேரும் நிற்கணும். அதைச் சொல்லத் தான் தயங்குகிறான் இவன்” என்க

“ப்பூ... இவ்வளவு தானா? நாம இரண்டு பேரும் ஜமாய்ச்சிட மாட்டோம்... அதிலும் நான் தங்கையா இருந்து ஒரு வழி செய்திட மாட்டேன்...” அனுவின் பதிலில் பளீர் என்று மலர்ந்தது பரணியின் முகம்.

நண்பர்கள் நான்கு பேரில் இவனை மட்டும் யாரும் தத்து எடுத்து கொள்ளவில்லை... அந்த வலி அவனுக்கு எப்போதுமே உண்டு. எங்கே யாரும் இல்லாமல் கடைசிவரை போய் விடுவோமோ என்று கூட அவன் நினைத்திருக்கிறான். அதை அவன் மிருடனிடம் சொல்ல... அவன் தான் இவனைத் தேற்றுவான்... இன்று அனுவும் அவனை ஏற்றுக் கொள்ள.. அவனுக்குள் சந்தோஷம்... “தேங்க்ஸ் அனு...” அவன் உணர்ந்து சொல்ல

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்... அறுபதாயிரத்தில்... பெரிய பார்டர் வைத்த புடவை தான் வேணும்... அப்போ தான் நாத்தனார் முடிச்சு போடுவேன்...” இவள் அவன் மனதை மாற்ற... அவன் முகம் இன்னும் மலர்ந்தது.. கூடவே மிருடனின் முகமும் தான்.

கொஞ்ச நேரம் பேசி இருந்தவன் பின் குழந்தைகளைக் காண பரணி சென்று விட...

மிருடன், “ஷிதா.. பரணி என் நண்பன்... நீ என் விஷயமா அவனை வரச் சொல்லி இருக்க”

அவன் முடிப்பதற்குள், “எனக்கு நம்பிக்கை இருக்கு... அவர் தங்கைக்கு துரோகம் செய்ய மாட்டார்...” இவள் உடனடியாய் பதில் தர, அங்கு இதுவரை இருந்த சூழ்நிலையே மாறியது.

“ஹப்பா... என்ன ஒரு வேகம்... அண்ணன் மேல் நம்பிக்கை.. அதே புருஷன் மேல் மட்டும் நம்பிக்கை இல்ல... அப்படி தானே?”

“துரோகின்னு தெரிந்த பிறகு எப்படி நம்பிக்கை வரும்...” இவள் பட்டென்று பதில் தர

சட்டென மனைவியின் முன்னே குனிந்து அவள் முகத்தருகே நெருங்கியவன், “என்னை துரோகி துரோகின்னு... சொல்ற இந்த உதட்டுக்கு ஒரு நாள் தண்டனை கொடுக்கணும் டி...” மனைவியின் கீழ் இதழை இரு விரலால் பிடித்துக் கொண்டு அவன் சுவாரசியமாய் சொல்ல

இதை எதிர்பார்க்காததால் பெண்ணவள் விழி இரண்டையும் விரிக்க... அதில் சட்டென குனிந்து பட்டும் படாமலும் அவள் இதழில்... தன் உதட்டை ஒற்றி எடுத்தவன்... அதை அவள் உணர்வதற்குள் “நாளைக்கு காலையில் டெல்லி போகிறேன்... திரும்ப வர நாலு நாள் ஆகும். அதற்குள்ள உன் விசாரணை எல்லாம் முடித்து ஆதாரம் எல்லாம் கண்டு பிடித்து வை... வந்து உனக்கு தண்டனை தரேன்...” என்றவன் மனைவியை சிறிதே அணைத்து விடுவித்து விட்டு அங்கிருந்து விலகி இருந்தான் மிருடவாமணன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN