குறிப்பேடு 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஐந்து நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும் நட்புக்களே. காத்திருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்..

சிவா தரையில் கிடந்த ரத்த துளிகளை வியப்போடு பார்த்தான்.

"இது என்ன ரத்தமா.?" என்று குழம்பியவன் அந்த சிவப்பு நிற புள்ளிகளின் மீது கை வைத்து பார்த்தான். ஈரமாக இருந்தது. ரத்தம் என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு. அந்த ரத்தத்தை தொட கீழே குனிந்தவன் மேஜையின் கீழ் கிடந்த காகிதத்தை கண்டான். அதை கையில் எடுத்தான்.

'அவசர வேலை.. குருதி நதி கரை போறேன்..' என்று அவசர கையெழுத்தில் எழுதி வைத்திருந்தான் தினேஷ்‌.

"பத்து மணி வரைக்கும் என்னோடு இருந்தான். அதுக்கு மேல அங்கே என்ன அவனுக்கு அவசர வேலை இருந்திருக்கும்.? மறுபடியும் பேயை தேடிதான் போயிருக்கான் போல. அதுவும் குருதி நதிக் கரையாம். கேள்விப்படாத பேரு. அதுக்காகதான் ரத்தமெல்லாம் சிந்தியிருப்பான் போல. முட்டாள். சுத்த முட்டாள். இவனையெல்லாம் திருத்தவே முடியாது. யாழினி தேவையில்லாம என்னை வேற இழுத்து விட்டுட்டா.. இவன் வந்தா என்கிட்ட சண்டை கட்ட போறான்.." என்று புலம்பியவன் தினேஷின் போனை எடுத்துக் கொண்டு படுக்கையறைக்கு வந்தான்.

அவனும் தினேஷூம் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் போனில் நிறைய இருந்தது. அந்த புகைப்படங்களை மனம் மகிழ பார்த்தான். அவர்களின் நட்பு எந்த அளவிற்கானது என்பதை நினைத்து பெருமைப்பட்டான். யாழினியும் தினேஷும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கண்டவன் பெருமூச்சு விட்டான். யாழினி ஏன் இப்படி செய்தாள் என்று அவளை மனதுக்குள் திட்டி தீர்த்தான். அவளின் அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் தினேஷ் தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்று கவலைப்பட்டான்.

மணி ஒன்று என்று மணியடித்தது. சிவா போனை வைத்துவிட்டு கவிழ்ந்து படுத்தான்.

மறுநாள் வீட்டின் காலிங்பெல் சத்தத்தில் எழுந்தான் சிவா. மணி ஏழு என்றது கடிகாரம். நிறைய நேரம் தூங்கிவிட்டதை கண்டு தன்னையே திட்டிக் கொண்டு கதவை திறக்க சென்றான்.

தினேஷ்தான் வந்திருப்பான் போல, வீட்டின் சாவியை எடுத்து செல்லாமல் விட்டு விட்டான் போல என நினைத்தபடி கதவை திறந்தவன் வாசலில் யாழினி நிற்கவும் ஏமாற்றமடைந்தான்.

யாழினி அவனை பார்க்கவில்லை. தலை குனிந்து இருந்தவள் அவன் கதவை திறந்துவிட்டு ஓரம் நின்றதும் உள்ளே நுழைந்தாள்.

ஹாலின் சோபாவில் வந்து அமர்ந்தாள் அவள். சிவா அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சென்று தேனீரை தயாரிக்க ஆரம்பித்தான்.

"தினேஷ் எங்கே.?" என்றாள் மெல்லிய குரலில்.

"நைட் கிளம்பி போனவன் இன்னும் வீட்டுக்கு வரல.."

"சாரி சிவா.. நேத்து நான் ஏதோ கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன். முட்டாள்தனம் பண்ணிட்டேன். தினேஷ் வந்தா அவன்கிட்ட நீ எனக்காக பேசுறியா.?"

சிவா தேனீர் கோப்பைகளோடு வந்து அவளெதிரே அமர்ந்தான். அவளிடம் ஒரு கோப்பையை நீட்டினான். அவனின் கண்களை பார்க்காமலேயே கோப்பையை வாங்கிக் கொண்டாள் அவள்.

"என்னை சைட் அடிக்கிறியா நீ.?" என்றான் திடீரென.

யாழினியின் கையிலிருந்த கோப்பை தரையில் விழுந்தது. அதிர்ச்சியில் கை நழுவ விட்டிருந்தாள். அவளின் கால்களிலும் தொடைகளிலும் சுடு தேனீர் சிந்தியிருந்தது.

"சாரி.." என்று பதறியபடி அவளருகே வந்த சிவா அவளை எழுப்பி நிறுத்தினான். "பாத்ரூம் போய் சீக்கிரம் வாஷ் பண்ணிட்டு வா.. இல்லன்னா காயம் ஆகிடும்.." என்று அவசரப்படுத்தினான்.

யாழின் மறுப்பாக தலையசைத்தாள். "நான் தினேஷை லவ் பண்றேன்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் சிவா.. நேத்து நடந்தது முழு விபத்து. என் கோபத்துல என்னவோ அப்படி பண்ணிட்டேன். அதை நீ பெருசா எடுத்துக்காத. நான் உன்னை சைட் அடிக்கல. எப்போதுமே.!" என்றவள் வாசலை நோக்கி நடந்தாள்.

சிவா நெற்றியில் அறைந்துக் கொண்டான். "என்னை நீ சைட் அடிக்கலன்னாலும் பரவால்ல.. உன் மேல சிந்திய டீயை சுத்தம் பண்ணிட்டு போ.. இப்பவே டீ பட்டு சுட்ட இடமெல்லாம் சிவந்து போயிருக்கும்.." என்றான்.

"உன் அக்கறைக்கு தேங்க்ஸ் சிவா.. ஆனா இந்த காயம் பரவால்ல.." என்றவளின் குரலில் தினேஷை காணாத ஏமாற்றம் அப்பட்டமாக இருந்தது.

"நீ என்னை கிஸ் பண்ணது தினேஷ்க்கு தெரியாது யாழினி. அவன் அப்ப அங்கு இல்ல. நீ பயப்பட தேவையில்ல. நான் அதை பத்தி எதுவும் அவன்கிட்ட சொல்ல மாட்டேன்.." என்றான் சிவா.

"தேங்க்ஸ் சிவா.. நான் அவனை ரொம்ப லவ் பண்றேன். அவன் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லு. அவன்கிட்ட முக்கியமான சில விசயங்கள் பேச வேண்டி இருக்கு.." என்றவள் அவனை திரும்பி பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள். தான்தான் வாயை அமைதியாக வைத்திருக்கவில்லை என்று தன்னை அந்த நாளில் இரண்டாம் முறையாக திட்டிக் கொண்டான்.

அன்றைய நாள் அவன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது தினேஷ் வந்திருக்கவில்லை.

"இவனெல்லாம் ஒரு எழுத்தாளன்.. கற்பனையில் எதையாவது எழுதுடான்னா நிஜ பேயைதான் இன்டர்வியூ எடுப்பேன்னுட்டு திரியறான்.." என்று சலித்துக் கொண்டான்.

ஒரு நாள் மாலை இரண்டாம் நாள் மாலையான போது சிவாவிற்கு நண்பனின் பொறுப்பற்றத்தனம் கண்டு கோபம் வந்தது.

யாழினி முதல் நாளே தினேஷிற்கு போன் செய்திருந்தாள். போன் தன்னிடம் இருப்பதாக சிவா சொல்லி விடவும் 'அவன் வந்தால் மறக்காமல் போன் செய்ய சொல்' என்று சொல்லி விட்டு போனை வைத்தாள். ஆனால் அடுத்த நாளும் தினேஷ் வீடு வந்து சேராதது யாழினிக்கு சந்தேகத்தை தந்தது.

"நான் உன்னை கிஸ் பண்ணதை அவன்கிட்ட சொல்லிட்டியா நீ.?" என்று சிவாவின் அலுவலகத்திற்கு வந்து அவனோடு சண்டையிட்டாள் யாழினி.

"முட்டாளா நீ.? அவன் என் பிரெண்ட். எனக்கு மட்டும் அவன் மேல அக்கறை இல்லையா.? இன்னைக்கு இந்த யோசனை செய்றவ அன்னைக்கு ஏன் கிஸ் பண்ண.? அன்னைக்கே அவன் பார்த்திருக்க கூட நூறு பர்சன்ட் சான்ஸ் இருக்கும்போது என்கிட்ட வந்து ஏன் சண்டை போடுற.?" என்றான் கோபமாக.

"அவனை காணோம் சிவா.." என்று இழுத்தவளை வெறித்து பார்த்தவன் "நான்தான் அவனை ஒளிய வச்சிட்டு உன்கிட்ட அவனை காணம்ன்னு சொல்லிட்டு இருக்கற மாதிரி தெரியுதா உனக்கு.?" என்றான் கோபத்தோடு.

யாழினியின் முகத்தில் இருந்த கவலை அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. ஆனால் போனை வீட்டிலேயே வைத்து விட்டு போனவனை எப்படி கண்டுபிடிப்பது என்றுதான் தெரியவில்லை அவனுக்கு.

"இன்னைக்கு ஒரு நாளைக்கு வெயிட் பண்ணலாம். நாளைக்கும் அவனை வரலன்னா போலிஸ்ல கம்ப்ளைண்ட் தரலாம்.." என்ற சிவா அவளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அன்றைய நாள் இரவெல்லாம் சிவாவிற்கு உறக்கம் கூட வரவில்லை. நண்பன் இந்த இரவாவது வந்து விட கூடாதா என்று விழிப்போடு காத்திருந்தான். ஆனால் நண்பன் திரும்பி வரவேயில்லை.

மறுநாள் அருகே இருந்த காவல் நிலையத்திற்கு சென்றான். அந்த ஸ்டேசனின் இன்ஸ்பெக்டர் சதாசிவம் சிவாவிற்கு பழக்கப்பட்டவர். இவனை கண்டதும் புன்னகைத்து விட்டு அமர சொல்லி சைகை காட்டினார்.

"சொல்லுப்பா என்ன விசயம்.? மறுபடியும் கிளையண்ட் பிரச்சனையா.?" என்றார்.

"இல்ல சார்.. என் பிரெண்டை மூணு நாளா காணோம். என் ரூம் மேட் அவன். மூணு நாளைக்கு முன்னாடி குருதி நதிக்கரைக்கு போறதா லெட்டர் எழுதி வச்சிட்டு போனான். இன்னும் திரும்பல.." என்றவன் கடிதத்தை அவரிடம் நீட்டினான்.

"இதுல மூணு வார்த்தைகள்தான் இருக்கு.." என்றவரிடம் "ஆமா சார். ஆனா இந்த குருதி நதிக்கரை எங்கே இருக்குன்னு என்னால கண்டுபிடிக்க முடியல.." என்றான்.

"இப்படி ஒரு பேரை நானும் கூட கேள்விப்பட்டது இல்ல சிவா.." என்றவர் தன் முன் இருந்த கணினியில் குருதி நதிக்கரை என்று பெயர் பதிந்து தேடினார். "நெட்ல கூட இல்ல. குருதி நதிக்கரைன்னு சர்ச் பண்ணா ஒரு வார்த்தை கூட வரல.." என்றார்.

'அதைதானே நானே சர்ச் பண்ணி பார்த்துட்டேனே..' என்று சலிப்போடு எண்ணியவன்‌ "அவனை கண்டுபிடிச்சி கொடுங்க சார்.." என்றான்.

"முஸ்தப்பா.." சதாசிவம் அழைத்ததும் அந்த அறைக்குள் வந்தார் ஹெட் கான்ஸ்டபிள்.

"இவருக்கிட்ட ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதி வாங்குங்க.." என்றார். அவரின் மேஜை மேல் இருந்த போன் ரிங்கானது. எடுத்து பேச ஆரம்பித்தார்.

சிவா அவரின் மேஜைக்கு சென்று நண்பன் காணாமல் போனதை பற்றி கடிதம் எழுதி தந்தான். தினேஷின் புகைப்படத்தையும் அவரிடம் நீட்டினான்.

அவன் எழுதி தந்த கடிதத்தை படித்துக் கொண்டிருந்த முஸ்தபா "குருதி நதிக்கரைக்கு ஏன் உங்க பிரெண்ட் போனாரு.?" என்றார்.

"உங்களுக்கு அந்த இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா.?" அவசரமாக கேட்டவனிடம் ஆமென தலையசைத்தவர் "அது ஒரு மர்ம பிரதேசம்.." என்றார்.

"நீங்க பூச்சாண்டி காட்டியது போதும். இடம் எங்கே இருக்குன்னு சொல்லுங்க. நான் போய் அவனை தேடி கண்டுப்பிடிச்சிக்கிறேன்.." என்று எழுந்து நின்றான் சிவா. அதே நேரத்தில் சதாசிவமும் தன் அறையை விட்டு வெளியே வந்தார்.

"சிவா உன் பிரெண்ட் எந்த ஊருக்கு கிளம்பி போனான்.?" என்றார் அவசரமாக.

"குருதி நதிக்கரை சார்.." என்றவனின் அருகே வந்தவர் "போன் ஒன்னு வந்தது சிவா. அடையாளம் தெரியாத பிணம் ஒன்னை பார்த்திருக்கோம். நாங்க குருதி நதிக்கரையிலிருந்து பேசுறோம்ன்னு சொன்னாங்க. இள வயசு பையன் கொடூரமா இறந்து போயிருப்பதா சொன்னாங்க.." என்றார்.

"குருதி நதிக்கரையே அப்படிதான் சார்.. அடிக்கடி கொலை விழும்.." என்றார் முஸ்தபா.

"உங்களுக்கு அந்த ஊரை தெரியுமா.?" என்று கேட்ட இன்ஸ்பெக்டரிடம் "தெரியும் சார்.. உங்களுக்கு தெரியாத பல விசயங்கள் எனக்கு தெரியும். ஆனா நான் சொன்னா நீங்க நம்பதான் மாட்டிங்க.." என்றார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சிவா இடம் வலமாக தலையசைத்தான். "என் பிரெண்ட் செத்திருக்க மாட்டான் சார்.." என்றான்.

"உன் நண்பன்னு நானும் சொல்லல சிவா. அந்த பிணத்தை பத்தி விசாரணை செய்ய கிளம்பறேன் நான். நீயும் கூட வரியா.?" என்றார்.

சிவா யோசித்தான். அந்த பிணம் நண்பனுடையது என்று நம்ப அவனுக்கும் மனம் வரவில்லை. ஆனால் அந்த ஊருக்கு சென்றால் நண்பனை பற்றிய சிறு தகவலேனும் கிடைக்கும் என்று நம்பினான்.

சதாசிவமும் முஸ்தபாவும் அவர்களின் ஜீப்பில் கிளம்பினார்கள். சிவா அவர்களை தன் காரில் பின் தொடர்ந்தான்.

முஸ்தபா குருதி நதிக்கரைக்கு ஜீப்பை ஓட்டினார்.

"இங்கேயேதான் நானும் இருக்கேன். எனக்கு தெரியாத விசயமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது முஸ்தபா.?" செல்லும் வழியில் கேட்டார் சதாசிவம்.

"அதுதான் சார் வயசு. அனுபவம். சில விசயங்கள் அனுபவம் சம்பந்தப்பட்டது சார்.." என்றவர் தனக்கு முன் இருந்த பாதையை கை காட்டினார். "பாருங்க. நாம குருதி நதிக்கரைக்குள்ள நுழைஞ்சிட்டோம்.." என்றார்.

சதாசிவம் பாதையை பார்த்தார். வானின் அடர்ந்த கரு மேகங்கள் அங்கே குறைந்த தூரத்திலேயே தெரிந்தன.‌ காற்றின் குளிர்ச்சியை‌ உணர்ந்தனர் இருவரும். அங்கிருந்த சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. இடமே சாம்பல் பூசியது போல இருந்தது.

புற்கள் ஆளுயரம் வளர்ந்திருந்த பாதை ஒன்றின் ஓரம் மனிதர்கள் சிலர் இருந்தனர். அவர்களை கண்டதும் காரை நிறுத்தினார் முஸ்தபா.

சிவாவும் தன் காரை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கினான்.

"வணக்கம் சார்.." என்றான் ஒருவன் சதாசிவத்தின் உடையை பார்த்துவிட்டு.

சதாசிவம் தலையை அசைத்தார்.

"நான்தான் சார் உங்களுக்கு போன் பண்ணேன்.‌ சிறு வயசு பையன் சார். காட்டுக்கு புல் அறுக்க போன ஒரு கிழவன்தான் முதல்ல பார்த்தாரு.." என்றவன் அந்த ஆளுயற புல்வெளியின் இடையே இருந்த ஒத்தையடி பாதையில் இறங்கி நடந்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்தனர். சிவா துடிக்கும் இதயத்தோடு நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN