குறிப்பேடு 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆளுயர புல்வெளியின் இடை புகுந்து நடந்தான் சிவா. இவ்வளவு உயர புற்கள் எப்படி முளைத்தது என்று ஆச்சரியப்பட்டான்.

வனத்தின் முன்னால் வந்து நின்றது அவனுக்கு முன்னால் நடந்துக் கொண்டிருந்த கூட்டம். அங்கிருந்த மரம் ஒன்றை கை காட்டினார் ஒரு கிழவர். சிவா தன் மனதை தேற்றிக் கொண்டு அந்த கிழவர் கை காட்டிய திசையை பார்த்தான்.

"தினேஷ்.." அதிர்ச்சியில் அரற்றியபடி அந்த மரத்தின் அருகே ஓடினான். உடன் இருந்தவர்கள் அவனை பாவமாக பார்த்தனர்.

"தினேஷ் உனக்கு என்னடா ஆச்சி.?" தினேஷின் உடலை அவன் தொடும் முன் அவனின் தோளை பற்றி நிறுத்தினார் சதாசிவம்.

"பாடி போஸ்ட்மார்டத்துக்கு போக போகுது. நீ தொடாதே.." என்றார் கண்டிப்போடு.

"என் பிரெண்ட் சார் இவன்.." குரல் உடைந்து சொன்னவனின் தோளை தட்டி தந்தார் அவர்.

"என்ன நடந்ததுன்னு நாங்க கண்டுபிடிக்கிறோம்ப்பா.." என்றார்.

சிவா கலங்கும் விழிகளோடு தினேஷின் உடலை பார்த்தான். உடல் முழுக்க ரத்த காயம் இருந்தது. அவனின் உடையை நனைத்திருந்த ரத்தம் உறைந்து போய் இருந்தது. நெற்றியிலும் இடது பக்க காதோரத்திலும் ஆழமாக வெட்டு காயம் இருந்தது. காயத்திலிருந்து வழிந்த ரத்தம் முகத்தில் கோடுகளை போட்டிருந்தது.

அவனின் ஷூவிலும் கூட ரத்த துளிகள் சிதறி கிடந்தது. கையை இறுக்கமாக மூடியிருந்தான் அவன்.

சிவா அவனின் முன் மண்டியிட்டான். நெற்றியில் அடித்துக் கொண்டான். "பேய் ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டியாடா.? கடைசியில இப்படி பண்ணிட்டியே.." என்றான் கதறலாக.

சதாசிவம் ஆம்புலன்ஸையும் தடயவியல் நிபுணர்கள் குழுவையும் வர சொல்லி போன் செய்தார்.

அவர்களுக்கு பிணத்தை இடம் காட்டிய கிழவர் அங்கிருந்து கிளம்பி போய் விட்டார்.

முஸ்தபா சிவாவின் அருகே வந்தார்.

"இவரோட விதி இதுதான்னா அதை யாராலயும் மாத்த முடியாது தம்பி. இந்த பிரேத மலை அதோட பசியை தீர்த்துக்க ஆரம்பிச்சிருக்கு. அதோட பசிக்கு பலியாகாம நாமதான் தப்பிக்கணும். சீக்கிரம் நீங்க இங்கிருந்து கிளம்பிடுங்க. நாங்களும் இந்த பிணத்தோடு இங்கிருந்து புறப்பட்டுடுறோம்.." என்றார்.

போன் இணைப்பை அணைத்து விட்டு வந்த சதாசிவம் "போலிஸ்தானே நீங்க.? ஏன் பூச்சாண்டி காட்டுறிங்க.?" என்றார் முஸ்தபாவிடம்.

"சார் நான் உண்மையைதான் சொல்றேன். இது ஒரு மர்ம பிரதேசம். இருபது வருசத்துக்கு ஒருமுறை இதோட கோர பசியை தீர்த்துக்க ஆரம்பிக்கும். பௌர்ணமியில் இருந்து தொடர்ந்து ஏழு நாளுக்கு ஏகப்பட்ட உயிர் போகும் இங்கே. நீங்க நம்பாம போகலாம். ஆனா நான் இதை மூணாவது தடவையா பார்க்கறேன்.. நான் குருதி நதிக்கரை கிராமத்தை சேர்ந்தவன்தான். ஏற்கனவே இரண்டு முறை இது கோர பசி தீர்க்கையில கூட அவங்க பிணங்களை பார்த்திருக்கேன் நான். போன முறை இந்த இடம் என் அப்பாவையும் சேர்த்து பலி வாங்குச்சி சார்.. என்னை நம்புங்க. இந்த இடத்தை விட்டு சீக்கிரமா கிளம்ப டிரை பண்ணுங்க.." என்றார்.

சதாசிவம் அவரை முறைத்தார். "உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் நான்.." வெறுப்பாக கூறியவர் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தார். சட்டென திடுக்கிட்டார். அவர் பார்த்த திசையை பார்த்தார் முஸ்தபா. பறவைகளின் அழுகிய உடல்கள் அந்த மரத்தில் நிறைந்து இருந்தது.

"இதெல்லாம் சாதாரணம் சார்.." என்ற முஸ்தபாவை முறைத்தவர் "மூட நம்பிக்கை அளவுக்கு அதிகமானா இப்படிதான். இதை மனுசன் பண்ணியிருக்க கூடாதா.? ஒரு மனுசன் நினைச்சா இந்த மொத்த உலகத்தையும் கூட அழிக்கலாம். நூறு பறவைகளை கொன்னு மரத்துல மேல நிரப்ப முடியாதா.?" என்றார் கோபத்தோடு.

முஸ்தபா அவருக்கு எப்படி விளக்கி சொல்வது என்று குழம்பினார்.

"இந்த பறவைகளை கொன்னவனையும் தினேஷை கொன்னவனையும் கண்டுபிடிச்சி அரெஸ்ட் பண்ணும் முயற்சி செய்யணுமே தவிர மர்மம் கிர்மம்ன்னு இருக்க கூடாது.." என்று முஸ்தபாவுக்கு அறிவுரை சொன்னவர் தடயவியல் நிபுணர்களுக்கு மீண்டும் போன் செய்தார்.

முஸ்தபா பெருமூச்சோடு அந்த வனத்தை பார்த்தார். கடந்த இரு முறையும் அவரின் கண் முன்னால் இறந்தவர்களின் முகங்கள் நினைவில் வந்தது. இந்த முறை முதல் பலியை கண்ணால் பார்த்த தான் கடைசி பலியையையும் பார்க்க உயிரோடு இருப்போமா என்று எண்ணினார்.

சிவா கலங்கும் விழிகளோடு மண்டியிட்ட வண்ணமே இருந்தான். தினேஷின் முகத்தை பார்க்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு மனம் உடைந்து போனது. தன்னோடு கூடவே இருந்தவன் திடீரென விட்டு சென்றது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்து விட்டது. அந்த ஏமாற்றத்திலிருந்து வெளிவர கூட முடியவில்லை அவனால். உறைந்து போயிருந்தவன் இது கனவாக இருக்க கூடாதா என்று எண்ணினான்.

தினேஷின் உடலின் மீது ஈக்கள் மொய்துக் கொண்டிருந்தன. "ஏன்டா இப்படி செத்து போன‌.?" வருத்தமாக கேட்டான். அவனின் பேண்ட் பாக்கெட்டிலிருந்த போன் ஒலித்தது. தினேஷின் போன்தான். எடுத்து பார்த்தான். யாழினிதான் அழைத்திருந்தாள். கன்னத்தின் ஈரங்களை துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தான்.

"ஹலோ.." என்றவனின் குரல் நடுங்கியது.

"தினேஷ் இன்னமும் வீட்டுக்கு வரலையா.?" ஏமாற்றமாக கேட்டாள்.

"யாழினி.. தினேஷ் செத்துட்டான்.." என்றவன் உடைந்து அழுதான்.

விளையாடுகிறாயா என்று கேட்க இருந்தவள் அவனின் கண்ணீர் கண்டு அதிர்ந்து போனாள். நா எழவில்லை சட்டென்று கேள்வியை கேட்க. தொண்டையில் எதுவோ பிடித்துக் கொண்டது போல இருந்தது அவளுக்கு. மேஜையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். ஒரு விழுங்கு குடிப்பதற்குள் பாதி ஜீவனே சென்று விட்டதை போல இருந்தது.

"எ.. என்ன உளறுர.?" என்றாள் அவன் இதை பொய் என்று சொல்ல கூடாதா என்ற நப்பாசையில்.

"செத்துட்டான் யாழினி. நிஜமா செத்துட்டான்.." கதறலாக சொன்னான். யாழினியிடமிருந்து சிறு சிறு விம்மல்கள் வெளி வந்தன.

"நீ எங்கே இருக்க.? தினேஷ் எங்கே.?" என்றாள் அழுகையோடு.

"இங்கே குருதி நதிக்கரை கிராமம் பக்கத்துல பிரேத மலைன்னு ஒரு இடம். அங்கேதான் அவன் பாடியை பார்த்திருக்காங்க. போலிஸ் ஆம்புலன்ஸ்க்கு சொல்லி இருக்காங்க.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே யாழினி தன் அறையை விட்டு வெளியே ஓடினாள். தன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஓடியவள் வேகமாக சென்று காரை இயக்கினாள்.

மின்னலாக சீறி பாய்ந்தது கார். ஒற்றை கையால் காரை செலுத்தியபடி மற்றொரு கரத்தால் தினேஷின் செல்போன் இருக்கும் இடத்தை பார்த்தாள். அவளும் அவனும் எப்போதும் தாங்கள் இருக்கும் இடத்தை ஷேர் செய்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து தங்களின் போன்களில் அப்படி செய்து வைத்திருந்தனர். அந்த விசயம் இப்படி ஒரு சூழ்நிலைக்கு தேவைப்படும் என்று அன்று அவள் நினைக்கவேயில்லை.

கண்களை மறைக்கும் கண்ணீரை சில நொடிகளுக்கு ஒருமுறை துடைத்துக் கொண்டாள். தினேஷ் இறந்திருக்க கூடாது இது விளையாட்டாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டினாள். அன்றைக்கு தான் சிவாவிற்கு முத்தம் தந்ததால்தான் தினேஷ் தன்னை பழி வாங்குகிறான் போல என்று கூட நினைத்தாள்.

ஆம்புலன்ஸ் வந்து சாலையில் நின்றது. ஸ்ட்ரெச்சரோடு உள்ளே நடந்தனர் இருவர்.

தினேஷின் உடலின் அருகே சோதித்துக் கொண்டிருந்தார்கள் தடவியல் நிபுணர்கள் சிலர். கொலைக்கான ஆதாரம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.

சிவாவை மரத்தடி ஒன்றின் கீழ் அமர வைத்திருந்தார் சதாசிவம். சிவா தலையை பிடித்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தான். இதயத்தின் நடுக்கம் நிற்கவேயில்லை அவனுக்கு.

யாழினி சுற்றும் முற்றும் பார்த்தபடி பிரேத மலைக்கு வந்து சேர்ந்தாள். தினேஷை கண்டதும் தூரத்திலேயே மண்டியிட்டு விட்டாள். அவளின் வெள்ளை நிற சுடிதாரின் முட்டி பகுதியில் மண்ணின் கரை படர்ந்தது.

"தினேஷ்.. சாரி தினேஷ்.. உன்னை தொல்லை பண்ண மாட்டேன். என்னோடு டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லி உன்னை கேட்க மாட்டேன்.. திரும்பி வந்துடு தினேஷ்.." என்று கண்ணீர் மல்க கத்தியழுதாள்.

அவளின் கதறலை கண் கொண்டு பார்க்க இயலாமல் எழுந்து நின்றான் சிவா. காட்டு திசையில் நடந்தான். முஸ்தபா சிவாவை நிறுத்த நினைத்தார். ஆனால் அங்கு வந்திருந்த தடவியல் நிபுணர்களுக்கு உதவி செய்ய வேண்டி இருந்தது.

சிவாவின் விழியோரத்தில் இருந்த ஈரம் எவ்வளவு காற்றடித்தும் உலர மறுத்தது.

கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தான் சிவா. மயான அமைதியில் இருந்தது அந்த வனம். அவனின் காலடியில் மிதிப்பட்டு உடைந்த சருகுகள் படபடவென்று சத்தத்தை தந்தன.

வனத்தின் உட்பகுதியில் நுழைந்து விட்டிருந்தான் அவன். நடந்துக் கொண்டிருந்தவனின் கால்களில் டைரி ஒன்று மிதிப்பட்டது. நடு வனத்தில் டைரி எப்படி வந்தது என்றபடி அதை உற்று பார்த்தவனுக்கு அது போன்ற ஒரு தோலாலான டைரியை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. யோசித்தான். அன்று தினேஷின் தனி அறையில் இருந்த மேஜையின் மீது இதை பார்த்த நினைவு வந்தது. டைரியை கையில் எடுத்தான். தினேஷ்தான் இதை இங்கே எடுத்து வந்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவன் நண்பனின் இறப்பை பற்றி ஏதேனும் குறிப்பு கிடைக்குமா என நினைத்து அதை திறந்தான்.

"இந்த ஏட்டை திறந்தவன் எவனாகிலும் எழுபது மணி நேரத்திற்குள் இறந்து போவான்.." என்று முதல் பக்கத்தில் இருந்ததை படித்தவன் டைரியை கை நழுவ விட்டான். இதன் காரணமாகதான் நண்பன் இறந்தான் என்பதை நம்ப மறுத்தது மனம்.

தரையில் தொப்பென்று விழுந்த டைரியின் விரிந்திருந்த இரு பக்கங்களை பார்த்தவன் அதிர்ந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்தான். அந்த டைரியையே சில நொடிகள் விழியசைக்காமல் பார்த்தவன் நடுங்கும் கரங்களோடு டைரியை எடுத்தான்.

"சாந்தவி.."

யாரோ யாரையோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பினான் அவன். தூரத்தில் இளம்பெண் ஒருத்தி அவனை நோக்கி ஓடி வந்தாள். அதே நேரத்தில் அவனின் பின் பக்கமிருந்து அவனை தாண்டிக் கொண்டு முன்னால் ஓடினாள் ஒருத்தி. அவள் ஓடியதில் காற்றில் பறந்த அவளின் கூந்தல் அவனின் தோளில் உரசியது. ஓடியவள் சட்டென்று நின்றாள். திரும்பி பார்த்தாள். தூரத்தில் இருந்து வந்த பெண்ணை பார்த்து நின்றவன் அதன் பிறகே தன்னை தாண்டிக் கொண்டு முன்னால் ஓடியவளை பார்த்தான். காற்றில் பறந்த அவளின் கேசம் தனது காதிலிருந்த குண்டலத்தில் மாட்டியிருப்பதை கவனித்தான். அவனுக்கு வலிக்கவில்லை. ஆனால் அவளுக்கு வலிக்கிறது என்பதை அவளின் முகத்தை பார்த்த உடனே புரிந்தது. இவனின் அருகே வந்தாள் அவள். இவன் அவளின் சுருங்கிய நெற்றியை பார்த்தபடியே தன் குண்டலத்தில் இருந்த அவளின் கேசத்தை விடுவித்து விட்டான்.

தன் எதிரில் நின்றிருந்தவனை தன் ஆழ விழிகளால் கவனித்தாள் சாந்தவி. அவனின் இடுப்பிலிருந்த வாளின் கைப்பிடி அவன் ஒரு சிறந்த மாவீரன் என்பதை சொன்னது. தோள் வரை நீண்டிருந்த அவனின் கேசமும், நெற்றியிலிருந்த பட்டையும், அவனின் கழுத்திலிருந்த சங்கிலி ஆபரணமும் அவனின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

"அவசரத்தில் ஓடியதால் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.." என்றாள் சாந்தவி. 'தேனினும் இனிய குரல்' என்றது அவனின் மனம்.

"சாந்தவி பூசை கூடையை விட்டு வந்து விட்டாய்.." தூரத்தில் இருந்து வந்தவள் இவளிடம் பூக்களால் நிரம்பிய கூடையை நீட்டினாள்.

"நான் பூசையை முடித்துக் கொண்டு விரைவில் திரும்பி வந்து விடுகிறேன் மருதாணி.." என்று சாந்தவி சொன்னதும் அவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

சாந்தவி தன் முன் நின்றிருந்தவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவனை தாண்டி நடந்தாள். அவளின் விழியசைவில் மந்திரக்கப்பட்டவன் போல உணர்ந்த இவன் அவளின் கால் சென்ற திசைக்கு திரும்பினான். தூரத்தில் ஒரு கல்லால் ஆன மண்டபம் இருந்தது. அதன் கீழ் கல் சாமி ஒன்றும் இருந்தது. அதை நோக்கிதான் நடந்துக் கொண்டிருந்தாள் அவள். இவனும் தான் வந்த வேலை மறந்து அவளின் பின்னால் நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

காதலிழையில், செங்காந்தள், காதல் சர்வாதிகாரி, எந்தன் நேசம் நாலு நாவல்களையும் இன்று 5.5.2021 மதியம் ஒரு மணியிலிருந்து இரு நாட்களுக்கு அமேசான் கிண்டிலில் இலவச தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் நட்புக்களே.. யாராவது அந்த கதைகளை படிக்காம விட்டிருந்தா இன்னைக்கு டவுண்லோட் செய்து கொள்ளும்படி கேட்டுக்கறேன்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN