குறிப்பேடு 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாந்தவி அந்த கல் சிலையை பூக்களால் அர்ச்சித்தாள்.

"பூவே பூக்களை அள்ளி இறைக்கிறதே.." தன் பின்னால் வந்த வீரன் சொன்னதை கேட்டு திரும்பினாள் சாந்தவி.

"வீரரென்று நினைத்தேன். கவி பாடும் புலவரா தாங்கள்.?" என்ற சாந்தவியின் குரலில் எள்ளல் சற்று இருந்ததை அறிந்து அந்த வீரன் கலகலவென்று சிரித்தான். சாந்தவி அர்ச்சனையை நிறுத்துவிட்டு அவனை அகல விழிகளோடு பார்த்தாள்.

சிரிப்பு நின்ற பிறகு அவளை பார்த்தவன் அவளின் பார்வையை கண்டு குழம்பி "ஏன் இந்த பார்வை.?" என்றான்.

"வீரர் ஒருவர் சிரிப்பதை பார்ப்பது இதுவே முதல் தரம்.." என்றாள். அவ்வீரனின் இதழ்கள் இறுக்க மூடிக் கொண்டது.

"மன்னிக்கவும். நான் சொன்னது தவறாக இருந்தால் அதை மறந்து விடுங்கள்.." என்றாள் அவசரமாக.

வீரனின் இதழ்கள் எதையோ சொல்ல முற்பட்டன.

"அமுதா.. படைகள் கிளம்பி கொண்டிருக்கிறது.." தூரத்திலிருந்து கத்தினான் ஒரு வீரன். பணி மறந்து பாவையை பார்த்து நின்றிருந்தவன் குரல் வந்ததும் சாந்தவியை ஒரு கணம் பார்த்துவிட்டு திரும்பி ஓடினான்.

"மங்கையை கண்டு மதி மயங்கி விட்டாயா.?"என்றான் நண்பன்.

"இல்லையப்பா.. அழகாய் இருந்தாளென்று ஒரு கணம் திகைத்து நின்று விட்டேன். அவ்வளவே.." என்றவன் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த படையோடு இணைந்துக் கொண்டான்.

"மன்னர் வேல்விழியான் மீண்டும் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்.." என்றான் அமுதனின் முன்னால் நடந்தவன்.

"வீரர்களின் மதிப்பை உணர்ந்தவர் அவர்.." என்றான் மற்றொருவன்.

அமுதனுக்கு இந்த ஊதியம் பற்றி நினைக்க தோன்றவில்லை. தாய் தந்தையற்றவன் அவன். சிற்றப்பனின் வீட்டில் வளர்ந்தவன் பருவம் வந்த உடனே வீட்டை விட்டு வெளியேறி படை வீரனாய் வந்து சேர்ந்து விட்டான். ஊதியமாய் கிடைக்கும் பணத்தில் செலவு போக மீதியை தான் அடிக்கடி உணவு உண்ணும் அன்ன சத்திரத்திற்கே தானமாக அளித்து விடுவான்.

அரண்மனையின் பின்னால் இருந்த படைக்களத்திற்கு வந்து நின்றார்கள் வீரர்கள் அனைவரும். அடுத்த போர் எந்த நாட்டுடன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் படை தளபதி. வீரர்கள் அவரின் பேச்சை கூர்ந்துக் கவனித்துக் கொண்டிருந்தனர். படையின் கடைசி வரிசையில் நின்றிருந்த அமுதன் எதேச்சையாக திரும்பியபோது தோல் சுருங்கிய கிழவன் ஒருவன் அரண்மனைக்குள் நுழைந்தான். கையில் தடி ஒன்றை ஊன்றி நடந்தவன் பார்ப்பதற்கு சாமியார் போல தோற்றமளித்தான். இடுப்பில் மட்டும் கோமணம் ஒன்றை கட்டியிருந்தான். யார் இந்த கிழவன் என்று யோசித்த அமுதன் உடனடியாகவே தனக்கு எதுக்கு இந்த விவரம் என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

படைகள் அடுத்த வாரத்திலேயே பக்கத்து நாட்டை படையெடுத்து சென்றது‌. வெற்றியை பெற்றது நவரத்தினாபுரத்து படைகள்.

அந்த படைகள் திரும்பி வந்தபோது அவர்களின் அரசன் வேல்விழியான் நெஞ்சடைத்து இறந்து போனான் என்ற செய்தி கிடைத்தது. மன்னன் மீது அதிக பாசம் வைத்திருந்த வீரரர்களுக்கு இந்த திடீர் இழப்பு சோகத்தை தந்து விட்டது. அனைவருமே துக்கம் அனுசரித்தனர்.

"அமுதன்.." சாந்தவியின் குரல் கேட்டு திரும்பினான் அவன்.

"உன்னை அரெஸ்ட் பண்றேன் சிவா.." என்று அவனின் கையில் விலங்கை பூட்டினார் சதாசிவம்.

சிவா அதிர்ந்துபோய் தன் கரங்களை பார்த்தான்.

"ஏன் சார்.?" என்றான்.

"உங்க மேல யாழினி கம்ப்ளைண்ட் தந்திருக்காங்க. நீங்கதான் உங்க பிரெண்டை கொன்னிருப்பிங்களோன்னு சந்தேகப்படுறாங்க அவங்க. சந்தேகத்தின் அடிப்படையில் உங்களை அரெஸ்ட் பண்றேன்.." என்றவர் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஓரமாக இருந்த யாழினி கண்ணீர் வழிய நின்றிருந்தாள்.

"என்னை சந்தேகப்படுறியா யாழினி.?" நம்ப இயலாமல் கேட்டவனை நேர் கொண்டு பார்க்காமல் தலை குனிந்துக் கொண்டவள் தன் கண்ணீரை புறங்கையால் துடைத்தாள். அவளின் முகத்தை சில நொடிகள் பார்த்த சிவா மௌனமாக நடந்தான்.

சதாசிவம் சிவாவோடு அங்கிருந்து சென்று சில நிமிடங்களுக்கு நிமிர்ந்தாள் யாழினி. தினேஷின் இறந்த உடல் கண்களிலேயே இருந்தது. விழியிலிருந்து சிந்தும் கண்ணீர் ஓயவேயில்லை.

வனத்தின் உட்பகுதியை விட்டு வெளியேற நினைத்து திரும்பிய யாழினி நின்றாள். மீண்டும் திரும்பி பார்த்தாள். சிவா நின்றிருந்த இடத்தில் டைரி ஒன்று தரையில் கிடந்தது. குழப்பத்தோடு அதை நெருங்கினாள்.

தோலால் ஆன அந்த டைரியை கையில் எடுத்தாள். பிண வாடை வீசியது டைரியில். திறந்தாள் அதை.

"இந்த ஏட்டை திறந்தவன் எவனாகிலும் எழுபது மணி நேரத்திற்குள் இறந்து போவான்.." என்று முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை படித்தவளுக்கு அதிர்ச்சியில் இதயம் நின்று போனது.

"என்ன கன்றாவி இது.?" நெஞ்சத்தின் மீது ஒரு கையை வைத்தபடி கேட்டவள் அந்த வனத்தில் இருக்க பயந்து வெளியே இருக்கும் பாதையை நோக்கி நடந்தாள்.

சிவா அந்த வனத்தை தாண்டி நடக்கும்போது தினேஷின் உடல் இருந்த இடத்தை பார்த்தான். இடம் வெள்ளை கோடுகளால் வரையப்பட்டிருந்தது. தினேஷ் அங்கிருக்கவில்லை. பிணத்தை எடுத்துச் சென்று விட்டார்கள் என்பதை அறிந்துக் கொண்டான்.

விசாரணை அறையில் இருந்த நாற்காலியின் மீது அமர்ந்திருந்தான் சிவா. மேஜைக்கு அந்த புறம் அமர்ந்திருந்தார் சதாசிவம். முஸ்தபா வீடியோ கேமராவோடு ஒரு ஓரமாக நின்றிருந்தார்.

"உனக்கும் தினேஷுக்கும் இடையில் என்ன உறவு.? எப்படி பழக்கம் வந்தது.?" என்றார் சதாசிவம்.

"காலேஜ்மேட் சார். அவனுக்குன்னு பேரண்ட்ஸ் கிடையாது. அத்தை வீட்டுல இருந்துதான் காலேஜ் வருவான். காலேஜ் முடிச்சதும் நான் எங்க அப்பாவோட பிசினஸை ரன் பண்ண ஆரம்பிச்சேன். வேலை தேடிட்டு இருந்தான் தினேஷ். அவன் தங்க வீடு கிடைக்கலன்னு ஒருநாள் புலம்பினான். என்னோடு தங்கிக்கன்னு சொல்லிட்டேன் நான். அஞ்சி வருசம் ஆயிடுச்சி அவனும் நானும் வீட்டை ஷேர் பண்ணிக்க ஆரம்பிச்சி. க்ளோஸ் பிரெண்டாகிட்டான் சார். ரொம்ப நல்லவன். அவனுக்கு எழுத்தாளரா சாதிக்க ஆசை. அதிலேயும் பேய் மர்மம் இந்த ஜானர்லதான் எழுத ஆசைப்பட்டான். அவனோட ஆசையை பார்த்துட்டு நான்தான் அவனை அதுலயே முழுசா இறங்க சொன்னேன். கிடைச்ச வேலையை கூட என்னை நம்பி விட்டுட்டான். கற்பனையா எழுத பிடிக்காம பேயை தேடி கிளம்பியவன் இப்படி பிணமா ஆவான்னு நினைக்கவே இல்ல.."

சிவா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த சதாசிவம் "ரொம்ப இடிக்குது சிவா. காலேஜ்ல பார்த்து பழகிய நண்பனுக்கு நீங்களை முழு செலவு பண்ணியிருக்கிங்க. நார்மலா யாரும் இப்படி செய்ய மாட்டாங்க.." என்றார்.

"குளோஸ் பிரெண்ட் சார்.." என்றவனை சதாசிவம் நம்பவில்லை என்பது அவரின் முகத்தை பார்க்கும்போதே தெரிந்தது.

தலையோடு குளித்து வந்த யாழினி கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தாள். கண்கள் சிவந்து போயிருந்தது. தினேஷ் இனி இல்லை என்ற விசயம் அவளை வெகுவாக பாதித்து விட்டது‌.

தலை முடியை ஓரம் ஒதுக்கி விட்டுக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தவள் மேஜை மேல் இருந்த டைரியை பெருமூச்சோடு பார்த்தாள். மனதை உறுதி படுத்திக் கொண்டு டைரியை கையில் எடுத்தாள்.

கல் சாமிக்கு அர்ச்சனை செய்துக் கொண்டிருந்த சாந்தவி தூரத்தில் ஓடியவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். மென்மையாக பேசும் வீரனான அவன் கண பொழுதில் அவளின் உள்ளம் பறித்து விட்டான் என்பது உண்மையே.

பூக்கள் முழுவதையும் கடவுளுக்கு அர்ச்சித்து விட்டு அந்த கல் மண்டபத்தை விட்டு கீழே இறங்கினாள். அவளின் கால் பதிந்த இடத்தில் எதுவோ நெருடியது. காலை தள்ளி வைத்தாள். தரையை பார்த்தாள். சூரிய வடிவிலான பதக்கத்தோடு கழுத்து ஆபரணம் ஒன்று தரையில் கிடந்தது. அமுதனுக்கு சொந்தமானது அது என்று நொடியில் புரிந்துக் கொண்டாள். அதை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.

தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

சாந்தவி முனிவன் சங்கீதவரனின் மகள். காடு ஒன்றில் அவளை பச்சிளம் குழந்தையாக கண்டெடுத்தார் அவர். குழந்தையிலிருந்து அவரின் ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு சொந்த தகப்பனை போல பாசத்தை காட்டினார் சங்கீதவரன்.

தந்தையை போலவே இவளுக்கும் கடவுள் மீது பக்தி அதிகம்‌. மலர்களின் அர்ச்சனையை போன்று உயர்ந்த சேவையை கடவுளுக்கு செய்ய முடியாது என்று நம்புபவள். கடவுளை மட்டுமே காதலித்து கொண்டிருந்தவளின் மனதில் முதல் ஆச்சரியமாக பதிந்தவன் அமுதன்தான்.

தான் சந்தித்த வீரனை பற்றி நினைத்துக் கொண்டு நடந்தவள் தன் மீது ஒருவன் வந்து மோதியது கண்டு பதறி பின்னால் விலகி நின்றாள். எதிரில் இருந்தவனை கண்டவள் அதிர்ந்து போனாள். "இளவரசர் மரகதன்.." இவளின் உதடு அசைவதை அபூர்வம் போல பார்த்தான் அவன்.

"குருடாய் பிறந்தாயா பெண்ணே.? இளவரசர் வருவது கூடவா தெரியவில்லை.?" மரகதனின் பின்னால் நின்றிருந்த காவல் வீரன் கோபத்தோடு கேட்டான்.

பயத்தில் சாந்தவியின் கால்கள் நடுங்கியது. காவலுக்கு வந்த வீரன் அவளை நோக்கி நடந்தான். மரகதன் கையை நீட்டி அவனை தடுத்தான்.

"உன் பெயர் என்ன பெண்ணே.?" என்றான்.

"சாந்தவி இளவரசே.." தயக்கமாக சொன்னவளின் முகத்தை வெகு நேரம் பார்த்தான் அவன்.

அவனின் வெறிப்பு கண்டு நெளிந்தவள் அவன் முன் நிற்க பிடிக்காமல் அவனை தாண்டி நடந்தாள். அவளின் கையை பிடித்தான் மரகதன். நெருப்பை தொட்டது போல பதறி சட்டென்று தன் கையை உருவிக் கொண்டவள் இரண்டடி ஒதுங்கி நின்றாள். மன்னன் வேல்விழியானின் கடைசி மகனின் சபல புத்தியை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாள் சாந்தவி. எப்போதேனும் தூரத்தில் இருந்து பார்க்க நேரிட்டால் கூட சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவாள். அவனை இப்போது அருகிலேயே பார்க்கவும் மனம் முழுக்க வெறுப்புதான் நிரம்பி நின்றது.

"உனது வீடு எங்கே உள்ளது பெண்ணே.?" என்றான் மரகதன்.

"எனது வீடு இல்லை இளவரசே. சங்கீதவரனின் மகள் நான்.." என்றவள் "நேரம் கடந்து விட்டது இளவரசே. என் தந்தை என்னை தேடுவார். நான் செல்கிறேன்.." என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

சாந்தவி வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தாள். அவளின் அசைந்த இடுப்பையே வெறித்து பார்த்து நின்ற மரகதன் அவள் தன் கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்வையை திருப்பவில்லை அவன்.

"இப்படி ஒரு மங்கை நம் நாட்டில் இருப்பதை அறியாமல் போனேனே.." வருத்தத்தில் சொன்னான் மரகதன்.

"சங்கீதவரன் தன் மகளை மிகவும் நேசிக்கிறார் இளவரசே.." அருகில் நின்றிருந்த வீரர்களில் ஒருவன் சொன்னான்.

மரகதன் கேலியாக சிரித்தான். "இந்த மரகதனுக்கு இல்லாத பெண்ணா‌.?" என்றான்.

சங்கீதவரன் தன் புலி தோல் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றார். மகள் குடிலின் வேலிக்குள் நுழைந்ததை கண்டு அவளை நோக்கி நடந்தார்.

"ஏன் மகளே இன்று தாமதம்.?" என்றார் மென்மையாக.

"கடை வீதியில் இருந்த சிவலிங்கங்களை வேடிக்கை பார்த்தபடி வந்தேன் தந்தையே. அதனால்தான் இந்த தாமதம்.." என்றவளின் கண்களே சொன்னது அவளின் பொய்களை பற்றி.

"சரி நீ சென்று ஓய்வெடும்மா.." என்றார்.

மகள் குடிலுக்குள் நுழைந்த நேரத்தில் சங்கீதவரன் தூரத்தில் இருந்த சாலையை எதேச்சையாக கவனித்தார். துறவியை போன்ற ஒருவன் அரண்மனை இருந்த திசை சென்றுக் கொண்டிருந்தான். சங்கீதவரனின் மனதுக்குள் என்னவோ உறுத்தியது. புயல் போல சுழன்று அடித்தது காற்று. வானின் மேகங்கள் அடர் கருப்பில் தென்பட்டது.

எந்த ஆபத்தாக இருந்தாலும் அது நாட்டை தாக்காமல் வெளியேற வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்.

சாந்தவி இரவில் உறங்க முயன்றாள். ஆனால் அமுதனின் முகம் கனவுகளில் துரத்தி வந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN