முகவரி 37

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனுவின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் அத்தகைய கேள்விக்கு மிருடன் தானே பதில் சொல்ல வேண்டும்? கடற்கரையில் நின்று இதையே நினைத்த அனுவும் மேற்கொண்டு அங்கிருக்க பிடிக்காமல் காருக்கு வந்தவள், தாங்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலால் முகம் அலம்பியவள் பின் காரில் அமர... அவளின் தெளிவில்லாத முகத்தைப் பார்த்த பரணி “என்ன அனு, இன்னும் என்ன விஷயம் உன் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு?” என்று கேட்க

“அண்ணா... இப்போ போன இடத்தில் எங்குமே மிரு பெயர் வரலை. அவர் எனக்கு எந்த துரோகமும் செய்யலை… அது தெளிவாகுது. ஆனா அவர் நண்பர் பேசும்போது நான் கேட்டேனே... மிருவும் அதை மறுக்கலை. பிறகு நடந்த சந்திப்புகளில் கூட அவர், உன் அப்பா செய்த பாவத்திற்கு உன்னைப் பழி வாங்கத் தான் நான் வந்தேன்னு அவரே என்னிடம் சொல்லியிருக்கார். அப்படியென்றால் அந்த விஷயம் என்ன? நான் யோசிக்கிறது சரி தானா... இல்லை இங்கேயும் நான் தப்பு செய்கிறேனா? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு ணா” இவள் தன் மனதில் உள்ளதை மறைக்காமல் கேட்டு விட

“அது உண்மை தான் அனு… அவன் உன் வாழ்வில் வந்தது என்னமோ அதற்கு தான்”

இவள் கேள்வியாய் அவன் முகம் காண...

“அது… உன் அப்பா ஆட்சியில் இருந்த போது.. புதுக்கோட்டையில் அதாவது உங்கள் ஊரில்... காப்பர் தொழிற்சாலையை உருவாக்க முனைந்தார். அது உனக்கு தெரிந்திருக்கலாம். அதோட சாதக பாதகங்களை ஆராயும் போது... அதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு என்பது ஆய்வில் தெரியவந்தது. அதனால் பசுமை தீர்ப்பாயம் மூலம் அந்த தொழிற்சாலையை நடத்தக் கூடாதுன்னு ஸ்டே வாங்கினாங்க.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராஜெக்ட் அந்த தொழிற்சாலை. பினாமி பேரில் உன் அப்பாவுக்கு பெரிய சதவிகித பங்குகளும் அதன் மூலம் வர இருந்தது. இதையெல்லாம் ஒரு சுற்றுச் சுழல் ஆர்வலர் தடுத்து நிறுத்தவும்... மொத்த வன்மமும் அவங்க மேலே திரும்பியது உன் அப்பாவுக்கு”

சற்றே நிறுத்தியவன் பின், “அந்த சமுக ஆர்வலர் ஒரு பெண்... அவங்களைப் பழிவாங்க எடுத்துக் கொண்ட ஆயுதம்... காலம் காலமாய் நம் நாட்டு மக்கள் பயன்படுத்தும் ஆயுதம்... இதிகாசங்களில் இருந்து சங்ககாலம் தொட்டே இப்படி தானே மூளை மழுங்க... அதை துருபிடிக்க விட்டுட்டு கையில் எடுக்கும் ஆயுதம்... ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவது... அதைத் தான் உன் அப்பாவும் செய்தார். அதாவது உனக்கு என்ன நடந்ததோ அதேதான் அந்த பெண்மணிக்கும் நடந்தது.

ஒரு ஹோட்டல் அறையில் அவருடைய ஒழுக்கத்தை விலை பேச... என்ன தான் அவர் தைரியமான பெண்மணியாக இருந்தாலும் உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவர் தூக்கிப் போடலை அனு. தன்னை நிரூபிக்க அவர் எவ்வளவோ கத்தி கூச்சலிட்டார். அதன் விளைவு... அவருக்குப் பைத்தியம் பிடித்து அவர் மனநல ஆஸ்பிட்டலில் இருந்தது தான் மிச்சம்” அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தவன்

பின்… “அந்த சமூக ஆர்வலர் பேர் தான் சரளா. அவங்க வேறு யாரும் இல்ல... மிருவை வளர்த்த அம்மா. அதாவது... வெண்பாவோட அக்கா... இவனுக்கும் அவங்க அக்கா தான்” என்று சொல்லி நிறுத்த…

ஒருமுறை வெண்பா இவர்களைப் பற்றி சொல்லியது நினைவு வந்தது அனுவுக்கு. ‘என்ன ஒரு அநியாயம் நடந்திருக்கு அவங்களுக்கு! ஆனால் இப்படி நடந்தது வெண்பா அண்ணிக்கு தெரியாதோ? அந்த சரளா அவங்க இப்போ எங்கே இருக்காங்க? உயிரோடு தான் இருக்காங்களா?’ அவள் சிந்தனையைத் தடை செய்தது
“அவங்களுக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்கத் தான் மிருடன் உன்னை நெருங்கியது” பரணியின் குரல்.

“ஒஹ்! அவங்களுக்கு நடந்தது அநியாயம் தான்... இல்லைன்னு சொல்லலை… மகா பாவமும் கூட. இதில் என் அப்பா செய்ததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? ஆனா என்னைப் பழிவாங்க நினைத்து என்னிடம் பழகிய மிரு பிறகு ஏன் என்னைப் பழிவாங்கவில்லை?”

பரணி என்ன சொல்வான்... நேற்று தானே இருவரும் அன்னியோன்ய தம்பதிகள் என்று நினைத்தான்... இப்போது இவள் இப்படி ஒரு கேள்வி கேட்டால்…
“இதை நீ மிருடனிடம் தான் கேட்கனும் அனு. சரி கிளம்பலாம்” என்றவன் அதன் பின் மவுனமாகவே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தான் பரணி.

அனுவுக்குள் பெரும் வலியுடன் கூடிய அதிர்ச்சி. ‘என் அப்பா இப்படி செய்வாரா! நம்பிய மக்களை ஏமாற்றியதையே என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தேனே... இவரால் எப்படி ஒரு பெண்ணுக்கு அநியாயம் செய்ய முடிந்தது? ஆனால்… ஆனால் மிருவும் அதையே தானே எனக்கு செய்ய இருந்தார்? செய்யவில்லை… செய்ய நினைத்தார் தானே? இருந்தாலும் அனுவின் மனதில் சிறிதே நிம்மதி வந்து அமர்ந்தது. அவள் மிரு அவளுக்குத் துரோகம் செய்யவில்லையே! ஆனால் ஏன் அவர் அதைச் செய்யவில்லை? மறுபடியும் அதே கேள்வியில் வந்து நின்றாள் அவள்.

கணவனை நினைத்ததும் அவனை நம்பாமல் இவள் பேசிய பேச்சும்... நடந்து கொண்டதும் சரம் தொடுக்கவும்... ‘அவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்ற கோபம் தான் அவருக்கு இன்று வரை என்மேல் இருக்கிறதா? ஆனாலும் என்னுடைய அவசரத்தால் நான் செய்தது தப்பு தானே... அதை எப்படி சரி செய்வேன்?’ என்ற கலக்கத்துடன் இரண்டு தினங்களைக் கழித்தாள் அவள்.

அனு வீட்டு மாடித் தோட்டத்தில் ஓரிடத்தில்… நான்கு புறமும் நன்கு உயர்ந்த வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்க... அதைச் சுற்றி வட்ட வடிவமாய் பல வண்ண ரோஜா செடிகள் வீற்றிருக்க... அதன் நடுவே ஒரு ஊஞ்சல் இருக்கும். இதெல்லாம் அனுவின் கைவண்ணம் தான். மாலை மயங்கும் நேரத்தில் அந்த ஊஞ்சலில் அமர்ந்து அனு ஆடும் போது ஏதோ தேவலோகத்திலே இருப்பது போல் உணர்வாள் அவள்.

அப்படியான இடத்தில் தான்... இன்றும் மாலை மயங்கிய நேரத்தில் தான் அவள் அமர்ந்திருக்கிறாள். என்ன… அந்த இயற்கையோடு ஒன்றாமல். கணவனிடம் என்ன சொல்வது… என்ன பேசுவது என்பதாகவே அமர்ந்திருந்தாள். தன் போக்கில் அமர்ந்திருந்தவளின் பார்வையோ ஒரு இடத்தில் நிலைத்திருக்க... அங்கோ அவள் கணவனின் வரி வடிவம் மின்னியது.

முதலில் இரண்டு முறை கண்ணை கண்ணை சிமிட்டியவள் அந்த உருவம் மறையவில்லை என்றதும்... “ப்ச்சு... மனசுக்குள்ள அவரையே நினைத்திருந்தா... பார்க்கிற இடம் எல்லாம் அவரா தான் தெரிகிறார். போடா... திருடா... என்னை படுத்தற... எப்ப வருவ?” இவள் குரல் அவளையும் மீறி ஏக்கமாய் ஒலிக்கவும்...

“வந்தா உன் திருடனுக்கு நீ என்ன டி தருவ?” என்றபடி அவளை நோக்கி அந்த உருவம் முன்னோக்கி நகர்ந்து வரவும்...

அதில் விழி விரித்தவள், “ஹை... திருடா... திருடா... நீங்க வந்துட்டீகளா?” அவள் சிறு குழந்தை போல் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கவும்... இரண்டே எட்டில் தன்னவளை நெருங்கியவன்... அதே வேகத்தில் அவளைத் தூக்கி சுற்றியவன்... “ஹ்ம்ம்ம்... வந்துட்டேன் டி..” என்க...

அதில் அவள், “என் மிரு...” என்று அணைத்துக் கொள்ள...

“ஹ்ம்ம்ம்... உன் மிரு தான் டி” என்றவன் அவளின் வேகத்திற்கு தானும் தன்னவளை அணைத்துக் கொண்டான்.

இந்த இனிமை எல்லாம் சிறிது நேரம் தான்… பின் குற்ற உணர்ச்சியுடன்... சங்கடத்துடன்... பரிதவிப்புடன் விலகியவள், “சாரி மிரு... உங்க கிட்ட இதை கேட்கக் கூட எனக்கு அருகதை இல்ல” இவள் மருக

“என்ன இல்ல? என் கிட்ட எல்லாம் கேட்க உனக்கு மட்டும் தான் டி அதிகாரமும், உரிமையும், அருகதையும் இருக்கு” என்றவன் மறுபடியும் தன்னவளை அணைத்துக் கொண்டவனுக்கு சாரி என்ற வாக்கியத்தை விட அந்த அணைப்பு மட்டுமே போதுமானதாய் இருந்தது.

‘இதென்ன… புயலுக்கு முன் அமைதியா? எப்போது தண்டனைன்னு ஆரம்பிப்பார்னு தெரியலையே?’ என்று நினைத்தவளின் மனதிற்குள் வேறு ஒன்று தோன்ற... இவள் நிமிர்ந்து கணவன் முகம் பார்த்து ஏதோ கேட்க எத்தனித்தவள் பின் தலையைக் குனிந்து கொள்ள...

“என்ன ஷிதா... எதுவாக இருந்தாலும் கேளு”

“அது... உங்க அக்காவுக்கு நடந்த அநியாயத்திற்கு தான் என்னை பழிவாங்க வந்தீங்க... ஆனா… ஆனா அதை ஏன் நீங்க செய்யலை?” நிஜமாய் இந்த மக்கு சாம்பிராணி அனுவுக்கு தெரியவில்லை தான். அதை அவள் முகத்திலிருந்து உணர்ந்து கொண்டவன், உடல் இறுக... அவள் கேசத்திற்குள்... தன் இரு கை விரல்களையும் நுழைத்தவன்.... பின் ஒரு வித வேகத்துடன் அவளின் முகத்தை தன் நெஞ்சில் பதித்துக் கொள்ள...

கணவனே என்றாலும் முதலில் அவனின் வேகத்திற்கு சிறிதே அதிர்ந்த அனு... பின் பாந்தமாய் தன்னவனின் நெஞ்சில் இவள் முகத்தைப் புதைத்துக் கொண்டவள்... சில நொடிகளுக்கு பிறகு தான் உணர்ந்தாள்... கணவனிடம் வேறு எந்த ஒரு அசைவும் இல்லை. தன்னவன் உடல் எஃக்கென நிமிர்ந்து நிற்கிறது என்பதை. ‘ஏன்.. எதனால்?’ இவள் தலை நிமிர்த்தி கணவனைக் காண... அவள் கண்டதோ கண்களை மூடிய நிலையில்... ரத்தமென சிவந்திருந்த அவன் முகத்தைத் தான். ‘திடீர்னு இவருக்கு என்ன ஆச்சு?’ என்று நினைத்தவள்

“மிரு...” இவள் கணவனை உலுக்க... அப்போது தான் இவள் அதை உணர்ந்தாள்... கணவன் மூச்செடுக்காமல் மூச்சடக்கி நின்று கொண்டிருக்கிறான் என்பதை. உண்மையில் அவன் சுவாசிக்கவில்லை.

“மிரு… ஏன் இப்படி செய்றீங்க?” இவளுக்குள் பயபந்து கிளம்ப… இவள் திக்கித் திணறி கேட்க... அவனிடம் அதே நிலை தான். பெண்ணவள் நெற்றியை வருடுகிறாள்... கன்னத்தை இதமாய் தட்டுகிறாள்... நெஞ்சை நீவி விடுகிறாள்... எதற்கும் பலன் இல்லை. ஏன், அவனிடம் அசைவே இல்லை.

‘ஏன்... ஏன்.. எதற்கு இப்படி...’ என்று பரிதவித்தவளின் மூளைக்குள் சட்டென ஒன்று தோன்ற... உதடு துடிக்க...
“என் மிரு... என்ன காதலித்தார்... அதுவும் உயிருக்கு உயிரா காதலித்தார். அதனால் தான் எனக்கு துரோகம் செய்ய அவரால் முடியவில்லை” இவள் ஆங்காரமாய் விண்ணை முட்டும் குரலில் சொல்லி முடிக்க.. அப்போது தான் தான் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டான் அந்த அரக்கன்.

ஆனால் அதற்குள் பெண்ணவள் தான் தவித்து, துடித்துப் போனாள். விழிகளில் அருவியாய் கண்ணீர் ஊற்றெடுக்க... அவன் நெஞ்சில் அடித்தவள்… மறுபடியும் கணவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கேவ... அதற்குள் தன் சுவாசத்தை சீர்படுத்தி இருந்தவனோ... அவள் கேசத்திற்குள் இருந்த தன் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து... தன்னவளின் முகத்தை நிமிர்த்தியவன்...

அடுத்த நொடி ஒரு வேகத்துடன் அவளின் இதழை சிறைப்படுத்தி இருந்தான் மிருடன். மென்மையாய் அல்ல… வன்மையாய். அந்த வன்மை பெண்ணவளுக்கு தேவை என்பதாய் தான் இருந்தது. துரோகி... துரோகி... என்று பிதற்றிய தன்னவளின் இதழ்களுக்கு தண்டனை தர… தான் ஒரு அரசனாய் மாறி அங்கு தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தான் அவன்.
பின் நிமிர்ந்தவன்... மறுபடியும் அவளின் முகத்தை தன் நெஞ்சில் அழுந்த புதைத்தவன், “உன்னை முதன் முதலில் கண்ட அந்த நொடியிலிருந்து... இந்த முகம் எனக்கானவளாய்... என் உறவாய்... என் முகவரியாய்... என் காதலியாய்... என் மனைவியாய்... அன்றே இங்கு பதிந்து போனதுன்னு நான் சொன்னால் நீ நம்புவாயா ஷிதா? ஆனால் இது தான் டி உண்மை... அந்த நிமிடம் நீ இங்கு வந்துட்டடி...” அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல... பெண்ணவளோ தன் பலம் கொண்ட மட்டும் தன்னவனை இறுக்கிக் கொண்டாள்.

பின்னே… அவளைப் போலவே தன்னவனும் முதல் பார்வையிலேயே... காதல் கொண்டிருக்கிறான் என்றால் பெண்ணவளுக்கு சொல்லவா வேண்டும்? மனைவியைத் தன் கைகளில் ஏந்தியவன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அவளைத் தன் மடியில் இறுத்திக் கொண்டவன்... அவளின் கண்ணீர் நிற்க இவன் கன்னம் வருடி... தலை கோத... ம்ஹும்... பெண்ணவளின் கண்ணீரோ நின்ற பாடில்லை.

“ஷிதா... இப்போ நீ அழுகையை நிறுத்தலை.. பிறகு நான் எதையுமே சொல்ல மாட்டேன்” இவன் காட்டமாய் சொல்ல...

அதில் முகம் நிமிர்த்தி இவள் தன்னவனைக் காண... குரலில் இருந்த கோபம் அவன் முகத்தில் இல்லாமல் இருப்பதைக் கண்டவள் பேந்த பேந்த முழிக்க

“அப்போதிலிருந்து இப்ப வரை... என்னை படுத்துறதே உன்னோட வேலையா வச்சிருக்க டி...” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிய படி சொன்னவன்... பின் அவள் கன்னத்தில் ஓடிய கண்ணீர் கறைகளைத் துடைத்து விட்டவன், “அனாதையான எனக்கு அப்பா... அம்மா... எல்லாம் சரளா அக்காதான் ஷிதா...”என்றவன் “உனக்கு சரளா அக்கா யாருன்னு தெரியும் தானே?” இவன் கேட்க

அவள் ஆமாம் என்பதாய் தலை அசைக்கவும்... “எப்படி சொல்ல… ஒருத்தர் நல்லவங்களா இருக்க கூடாதா?... அதிலும் பெண் இருக்க கூடாதா?... அப்படி இருந்தா இந்த சமூகம் அந்த பெண்ணுக்கு என்ன எல்லாம் கொடுமை செய்ய துணிகிறது!”

கணவனின் வார்த்தையில் ‘நீங்களும் தானே எனக்கு செய்ய இருந்தீங்க?’ என்ற வாக்கியங்கள்.. அவள் தொண்டைவரை வர... அதை வெளியிடாமல் ஏனோ உதட்டை இறுக்க மூடிக் கொண்டாள் அனு.

“அக்காவுக்கு நடந்த கொடுமையில், அவங்க அதிலிருந்து மீண்டு வர முடியாத அளவுக்கு அதிலே புதைஞ்சிட்டாங்க. விளைவு… மனநலம் சரியில்லாதவங்களா மாறிட்டாங்க. தினந்தினம் அவங்க கஷ்டத்தை கூட இருந்து பார்ப்பேன். வீட்டில் தான் வெண்பா அக்கா அவங்களை வைத்து பார்த்துக்கிட்டாங்க. ஆனா அக்காவோட கூச்சலினால் அக்கம் பக்கத்தில் உள்ளவங்க பிரச்சனை செய்யவோ தான் பின் மருத்துவமனையில் சேர்த்துட்டோம்.

அக்காவுக்கு என்ன நடந்தது... ஏன் இப்படி இருக்காங்க... தினமும் இதை நினைத்து நினைத்து துடிப்பேன். சில நேரத்திலே அழக் கூட செய்வேன். அக்காவுக்கு நடந்த அநியாயம்... புரிந்தும் புரியாமலும் என் மனதில் பதிந்து போனது. ஆனா என்னன்னு சரியா தெரியலை... யார் செய்தாங்கன்னும் தெரியலை. அநியாயத்தை செய்த உன் அப்பா அதற்கான தடையத்தை வச்சிட்டு செய்வானா என்ன... அதிலும் பெரிய அரசியல்வாதி!” கடைசி வாக்கியத்தை இவன் சீற்றத்தோடு சொல்ல... அனு வாயே திறக்கவில்லை.

“பத்தொன்பது வயதில் தான்... அக்கா விஷயத்தில் இருந்து நான் மீண்டேன். அதன் பிறகு தான் அவங்க விஷயமா மேற்கொண்டு வெளியே தேட ஆரம்பித்தேன். அப்போ…. கூட்டு சேர்க்கையா உன் அப்பா எதிரிங்க கூட சேர்ந்தேன்... அவங்க சொன்ன பிறகு தான் என் அக்காவுக்கு நடந்த அநியாயத்திற்கு உன் அப்பா தான் முழு காரணம்னு தெளிவா உறுதியா தெரிந்தது. அப்பவே முடிவு செய்திட்டேன்... என் அக்கா மாதிரியே உன்னையும் நிறுத்தி... உன் அப்பாவைப் பழி தீர்த்துக்கணும்னு. இளம் ரத்தம் இல்லையா... அந்த நேரம் எனக்கு இப்படி தான் தோன்றியது.

உன்னை எப்படி எல்லாம் ஸ்கெட்ச் போட்டு தூக்கி... எப்படி எல்லாம் நிற்க வைப்பேன் என்பதை.. அன்று நீ பார்த்தியே… அந்த பையன் கிட்ட சொல்லிகிட்டே இருப்பேன். அவங்க டீம் பெருசு... உன் அப்பாவின் நடவடிக்கைகள் பற்றி சேகரித்து சொல்வதாகவும்... சில விஷயங்களில் எனக்கு உதவுவதாகவும் சொன்னாங்க. மூணு வருஷம் வெய்ட்செய்தேன்' அந்த நேரம் தான் நீ சென்னை வந்த... அப்போ நான் போகிற பாதை சரி... உன் அப்பாவைப் பழிவாங்க உன்னைத் தூக்கலாம்னு எனக்கு தோன்றியது… இது எல்லாம் உன்னை முதன் முதலா நேரில் காணும் வரை.

ஒரு போட்டோவில் கூட உன்னை நான் பார்த்தது இல்லை ஷிதா. பார்த்த நொடி என்னையும் மீறி ஏனோ நீ இங்க இருந்த!” தன் நெஞ்சைத் தொட்டு அவன் காட்ட... பெண்ணவளுக்குள் ஒரு மகிழ்வு. “அக்காவுக்கு நடந்த அநியாயத்தை மறந்து விட்டு... உன்னைப் பழிவாங்காமல்... உன் மேல் காதல் கொண்டதில்... என்னையே நான் வெறுத்தேன். அப்பவும் உன்னை வெறுக்க முடியலை. இனி உன்னை சந்திக்கவே கூடாதுன்னு தான் ஒதுங்கிப் போனேன்.

ஆனா அந்தக் குழந்தையோட விபத்து... நிச்சயமா நான் எதிர்பார்க்காதது... பின் உனக்கே தெரியாம உன்னை நான் தொடருவேன்.. அதில் உன் முன்னாடி வந்தது தான் அன்றைய மழை நாள்... அன்று உன் கண்ணிலும் காதலைப் பார்த்த பிறகு... என்னால் உன்னை விட்டு விலகி இருக்க முடியலை. சரி, உன்னை என்னை மாதிரி ஏழை காதலித்தாலும் அதுவும் உன் அப்பாவைப் பழிவாங்கின மாதிரி தான்னு... நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். அக்கா விஷயம் ஒரு பக்கம் ஓடினாலும் உன்னை என்னால் விட முடியல… அதான் உண்மை.

நாளுக்கு நாள் என் காதல் உன் மேலே அதிகமா தான் ஆனது... அப்போ தான் எனக்கு கொஞ்சம் பயம் வந்தது... இந்த அன்றாடங்காய்ச்சிக்கு உங்க அப்பா உன்னைக் கட்டித் தர மாட்டேன்னு சொல்லிட்டா? அவரை விடு அதைக் கேட்டு நீயும் மனசு மாறிட்டா?” இந்த வார்த்தையில் இவள் கணவனை முறைக்க

“எனக்கு அப்போ அப்படி தான் தோணுச்சு” என்றவன் “அதான் உன்னைக் கட்டிக்க பொய்யா ஒரு பிளான் போட்டேன். இது மூலமா என் காதல் ஜெயித்து... நீ என்னங விட்டுப் போகாம என்னுடனே இருக்கணும்னு தான் அதை செய்தேனே தவிர... நம் திருமணம் மூலம் உன் அப்பாவை நான் பழிவாங்க நினைக்கலை” அவன் குரலில் அப்பட்டமாய் உண்மை மிளிர்ந்தது.

“எந்த திருமணத்தால் உன்னை என்னுடன் பிணைத்து வைக்க நினைத்தேனோ அந்த திருமண பந்தமே நம் இருவரையும் பிரித்தது” அவன் வேதனையோடு முடிக்க

“இதை எல்லாம் நீங்க முன்னமே என் கிட்ட சொல்லி இருக்கலாமே மிரு?”

“என்ன சொல்லணும்?... இல்ல என்ன சொல்லணும்னு கேட்கிறேன்?” அவன் குரலில் அப்படி ஒரு வேகம். பின் தன்னை நிதானித்தவன், “என் அக்கா விஷயத்தை நான் மறக்கலை. அதற்கு இது தீர்வு இல்லைன்னு ஒதுக்கிட்டு... நான் உன்னை உண்மையா காதலித்த காதல் உனக்குப் புரியலை... என் காதல் உணர்த்தாத ஒன்ற... என் மேல் நீ வைக்காத நம்பிக்கையை... என் வார்த்தைகள் மூலமா நான் நிரூபிக்கணுமா? சொல்லு ஷிதா... நான் நிரூபித்து தான் என் காதலை உனக்கு உணர்த்தனுமா? முடியாது... முடியவே முடியாது” அழுத்தம் திருத்தமாய் அறிவித்தவன் பின் குரல் இறங்க...

“அது மட்டும் காரணம் இல்லை செல்லம்மா. உனக்கு நான் துரோகம் செய்யலை... உனக்கு நான் எந்த அநீதியும் செய்யலை. ஆனா செய்ய நினைத்தேன் இல்ல... உன்னை அப்படி நிற்க வைக்க நானும் ஒரு காலத்தில் திட்டம் எல்லாம் போட்டது என்னமோ உண்மை தானே... அதற்கு தண்டனை வேண்டாமா? இதிகாசத்தில் இருந்த ஸ்ரீராமன் தன் மனைவி சீதையைத் தீ குளிக்க வைத்ததற்கு அவன் தண்டனையை ஏற்றானா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனா இந்த ஷிதாவின் ராமன்... இந்த மிருடவாமணன் நிச்சயம் தண்டனை ஏற்றே தீருவான்.

அது தான்… உனக்கு வேண்டிய பாதுகாப்பை எல்லாம் செய்துட்டு... உன்னையும் என் மகளையும் விட்டு ஐந்து வருடம் பிரிந்தே இருந்தேன். அதாவது வனவாசம் இருந்தேன். அந்த ஐந்து வருடமும் எனக்கு நரகம் தான் டி... அந்த நரகத்திலிருந்து வெளியே வந்து எப்பொழுதடா உங்களைப் பார்பபேன் என்று நாட்களை எண்ணிகிட்டு இருப்பேன். அப்படிப் பட்ட என்னையும் என் காதலையும் மறந்திட்டு இருந்தவ தானே டி நீ?” இவன் அவளைக் குற்றவாளியாக்க...

கணவன் சொன்னதை கேட்டு பொண்ணவளால் மகிழ முடியவில்லை கணவனின் வார்த்தைகளை ஏற்க முடியாத நிலை. ‘அது எப்படி முழுக்க முழுக்க இவர் என்னை மட்டுமே குற்றம் சொல்லலாம்?’ ஆனால் அதைக் கேட்கும் சூழ்நிலை இது இல்லை என்பதை உணர்ந்தவளாக...

“சரி, என் மேல் தான் தப்பு... ஆனா இதை நான் கேட்டு தெரிந்துக்காமல் போயிருந்தா... அப்போ நீங்களா எதுவும் சொல்லியிருக்கவே மாட்டீங்களா?” அனுவின் குரல் ஆதங்கமாய் ஒலித்தது.

“நெவெர்... கடைசி வரை சொல்லியிருக்கவே மாட்டேன்” வில்லிருந்து சீறிப் பாய்ந்தன... அவன் சொல் அம்புகள்.

அந்த வார்த்தைகள் அனுவுக்குள் சுருக் என்று தைத்தது. “நான் ஏன் டி... சொல்லணும்... நீ என்னை நம்பாமல் போனதே தப்பு. ஒன்று நீ என் கிட்ட விளக்கம் கேட்டு சண்டையாவது போட்டிருக்கனும்...அதையும் செய்யலை. இன்றும் நீ என்னை துரோகின்னு தான் சொன்ன... நான் தான் நிரூபிக்க சொன்னேன். அதனால் தான் உனக்கு எல்லா உண்மையும் தெரிந்தது. அதற்கே உனக்கு தண்டனை தரணும் டி. வெயிட் பண்ணு… சீக்கிரம் என் தண்டனையை உனக்கு கொடுக்கிறேன்...” என்று கர்ஜித்தது மிருடவாமணின் குரல்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN