குறிப்பேடு 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாந்தவி தங்களின் ஆசிரமத்தின் பின்னால் இருந்த பூந்தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள். சாமிக்கு பூக்களை அர்ச்சிக்க செல்லும்போது நேற்று போல இன்றும் அமுதனை பார்க்க முடியுமா என்று யோசித்தாள். அவனின் முகம் அவளை கவர்ந்து விட்டது.

"நீ ஆசைப்பட்டால் இந்த நாடு முழுவதையும் நந்தவனம் ஆக்குகிறேன் நங்கையே.." என்ற திடீர் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். மரகதன் நின்றிருந்தான்.

இவனின் கண் பார்வையில் தான் ஏன் பட்டோம் என்று சோகமாக நினைத்தவள் "மன்னிக்கவும் இளவரசே.. எனக்கு இந்த பூந்தோட்டமே போதுமானது.." என்றாள்.

அவள் தன் பதிலை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை அவன்.

"நான் இந்நாட்டின் இளவரசன்‌. நான் நினைத்தால் உன்னை இப்போதே என் அந்தப்புர பணிப்பெண்களில் ஒருத்தியாக மாற்ற முடியும். அறியாயா இதை.?" என்றான்.

சாந்தவி தன் கழுத்தில் இருந்த ஆபரணத்தை தொட்டு பார்த்தாள்‌. "நீங்கள் இளவரசராக இருக்கலாம். ஆனால்‌ ஒருபோதும் மக்களை அடிமை செய்ய முடியாது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் விலகி செல்லுங்கள் இளவரசே.." என்றாள்.

"நேர் நின்று தைரியத்தோடு என்னிடம் பேசிய முதல் பெண் நீதான்.." என்றவன் அவளின் கழுத்திலிருந்த ஆபரணத்தை வித்தியாசமாக பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சாந்தவி தன் கழுத்திலிருந்த ஆபரணத்தை கையில் எடுத்து பார்த்தாள். சூரியனின் கதிர்கள் அந்த பதக்கத்தை சுற்றி இருந்தது. மாலை வெயிலின் ஒளிக்கதிர் பட்டு மின்னியது ஆபரணம்.

"யாழினி இதை கொஞ்சம் பாரு.." வசந்தனின் குரலில் நிமிர்ந்த யாழினி டைரியை மூடி தன்னருகில் வைத்தாள். தந்தையின் கையிலிருந்ததை பார்த்தாள். அதே ஆபரணம். சூரியனின் கதிர்களோடு தந்தையின் கரங்களில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

எச்சில் விழுங்கியபடி தந்தையை பார்த்தாள். "இது ஏதுப்பா.?" என்றாள்.

"இது நம்ம பரம்பரை நகைம்மா.. ரொம்ப நாளா பேங்க் லாக்கர்லயே இருந்தது. நீதான் வளர்ந்துட்ட இல்லையா.? இனியாவது கழுத்துல போட்டுப்பன்னு எடுத்துட்டு வந்தேன்.." என்றவர் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பே அந்த நகையை அவளின் கழுத்தில் அணிவித்தார்.

யாழினி கழுத்திலிருந்த நகையை பார்த்தாள். ஜன்னல் வழி வந்த சூரியனின் ஒளிக்கதிர் பட்டு மஞ்சளாக மின்னியது.

"தினேஷ் இறந்துட்டான்னு கேள்விப்பட்டேன்.." என்றவர் யாழினியின் முகம் பார்த்தார். அவளின் சிவந்த கண்கள் மீண்டும் கலங்கியது.

தூரத்திலிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தவர் "அவன் உனக்கு பொறுத்தமானவன் கிடையாது யாழினி. அவனை மறந்துடு.." என்றார்.

யாழினி சிந்திவிட்ட கண்ணீரை சட்டென்று துடைத்துக் கொண்டாள்.

"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்ப்பா.." என்றவள் எழுந்து நடந்தாள்.

போலிஸ் ஸ்டேசனின் வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவள் சதாசிவம் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி நடந்தாள்.

"யாழினி.." சிவா அவளை நிறுத்தினான். திரும்பி பார்த்தாள். கம்பி கதவுகளின் பின்னால் நின்றிருந்தவனின் முகம் சோர்ந்து போய் இருந்தது. அவன் பக்கம் திரும்பி நடந்தாள். கதவின் அருகே சென்று நின்றவள் "நீ அந்த டைரியை படிச்சியா.?" என்றாள்.

உள்ளே இருந்தவன் குழப்பத்தோடு ஆமென தலையசைத்தான். அவளை சந்தேகமாக பார்த்தான். "நீயும் படிச்சியா.?" என்றான்.

ஆமென்றவள் "அதை படிக்கும்போது அதுல உள்ள சாந்தவிங்கற கதாப்பாத்திரமா என் முகம் தெரிஞ்சது.." என்றாள்.

சிவா எச்சில் விழுங்கினான். அவள் அடுத்து என்ன சொல்வாளோ என்று காத்திருந்தான். "அதுல அமுதனா நீ இருந்த.." என்றாள்.

சிவா தன் கீழ் உதட்டை அழுந்த கடித்தான். பின்னர் அவளை பார்த்தான். "உன் கழுத்துல உள்ள நகையை கூட நான் அந்த டைரியை படிக்கும்போது பார்த்தேன். அப்படியே கண் எதிரே நடந்த மாதிரி இருந்தது எல்லாம். படிச்சதும் பைத்தியம் பிடிச்சது போல ஆயிடுச்சி. அதனாலதான் அந்த காட்டுல கூட நான் உன்கிட்ட சண்டை போடல.. ஆனா யாழினி அதோட முதல் பக்கத்துல என்ன எழுதியிருந்ததுன்னு படிச்சியா.?" என்றான் சந்தேகத்தோடு.

யாழினியின் கண்களில் லேசாக கலவரம் தெரிந்தது. "அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு.." என்றாள் தயக்கமாக.

"தினேஷ் இந்த காரணத்தாலதான் செத்திருப்பானா.?" சந்தேகமாக கேட்டான் சிவா.

யாழினி தரையை பார்த்தாள். "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சிவா. நான் கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கிட்டு வரேன்.." என்றவள் திரும்பினாள். கதவின் வழியே அவளின் கையை எட்டி பிடித்தான் சிவா. "ஏன் வாபஸ் வாங்கற.? அந்த டைரியில் நான் இருந்தேன்ங்கற காரணத்தாலா.?" என்றான்.

யாழினி மறுப்பாக தலையசைத்தாள். "வீட்டுக்கு போனதும் சொல்றேன்.." என்றவள் சதாசிவத்தின் அருகே வந்தாள்.

"சார்.. நான் சிவா மேல தந்த கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்.." என்றாள்.

சதாசிவம் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றார். "ஏன்.?" என்றார்.

"தினேஷ் சாவுக்கு சிவா காரணமா இருக்க மாட்டான்னு நம்புறேன் சார்.. நீங்க எப்ப விசாரணைக்கு கூப்பிட்டாலும் அவன் வருவான். அவனை இப்ப விடுதலை பண்ணுங்க சார். ப்ளீஸ்.." என்றாள் கெஞ்சலாக.

சதாசிவம் யோசித்தார். சிவாவை தனிப்பட்ட முறையில் சில வருடங்களாகவே தெரியும். அவன் கொலையை செய்தான் என்பதை அவரே நம்பவில்லை. நண்பன் மீது அவன் வைத்திருந்த பாசத்தை அறிந்த பிறகு அவன் மீதிருந்த நம்பிக்கை அதிகரிக்கதான் செய்தது. ஆனாலும் யாழினியின் புகாருக்காக அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது.

யோசனையோடு இருந்தவரின் அருகில் இன்னும் ஒரு அடி நெருங்கினாள். "உங்க உதவி எங்களுக்கு கொஞ்சம் தேவைப்படுது சார்.. சிவாவை விடுவிச்ச உடனே எங்களோடு வரிங்களா.? என் வீடு வரை.." என்றாள்.

இவள் என்ன பைத்தியமா என்று யோசித்த சதாசிவம் சிவா இருந்த லாக்அப்பை பார்த்தார். சிவா கவலை நிறைந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தான்.

"இது அந்த பையனோட தப்பு இல்லன்னு நான் முன்னாடியே சொன்னேன் சார். இப்பவும் கூட சொல்றேன். இது பிரேத மலையோட காவு. எத்தனை பேரை வேணாலும் அது காவு வாங்கும்.." தூரத்து மேஜை மேல் அமர்ந்திருந்த முஸ்தபா இதை சொன்னதும் சதாசிவம் அவரை முறைத்தார்.

"நீங்க உங்களோட மூட நம்பிக்கையை உங்களோடவே வச்சிக்கிறிங்களா.?" என்றார்‌ எரிச்சலாக.

முஸ்தபா கேலி சிரிப்போடு தன் மேஜை‌ மீதிருந்த நோட்டின் பக்கங்களை புரட்டினார்.

சதாசிவம் நெற்றியை தேய்த்தார். "அந்த பையனை ரிலீஸ் பண்ணுங்க.." என்றார்.

முஸ்தபா லாக்அப் சாவியோடு எழுந்து நின்றார். சென்று கதவை திறந்து விட்டார். சிவா வெளியே நடந்தான்.

"சார் ப்ளீஸ் எங்களோடு வாங்களேன்.." கெஞ்சிய யாழினியை குழப்பமாக பார்த்தவர் அவளுக்கு பதில் சொல்ல இருந்த நேரத்தில் "போகலாம் சார்.. காரணமில்லாம இருக்காது.." என்றார் முஸ்தபா.

முஸ்தபாவின் அதிகப்பிரசங்கித்தனம் சதாசிவத்திற்கு கோபத்தை தந்தது. இருந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு அமைதி காத்தவர் "போகலாம்.." என்று முன்னால் நடந்தார்.

"இவரை ஏன் கூட்டி போற.?" சந்தேகமாக கேட்டான் சிவா.

"ஏனா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.." என்றவள் சிவாவை தனது காரிலேயே ஏற்றிக் கொண்டாள்.

யாழினியின் வீட்டின் முன் ஜீப் நின்றதும் இறங்கி நின்ற சதாசிவம் அவளின் வீட்டை ஆச்சரியமாக பார்த்தார். பணக்கார பெண்ணாய் இருப்பவள் வேலை கூட இல்லாத தினேஷை ஏன் விரும்பினாள் என்று யோசித்தார்.

"உள்ளே வாங்க சார்.." என்ற யாழினி தன் அறையை நோக்கி நடந்தாள். கட்டிலின் மீது அவள் விட்டுச் சென்ற டைரி அதே இடத்தில் இருந்தது.

சிவா வியர்வை படிந்த சட்டையோடு அவளை பின்தொடர்ந்து வந்தான். தனது அலமாரியை திறந்த யாழினி தினேஷின் உடைகளை எடுத்து வந்து சிவாவிடம் நீட்டினாள்.

சிவா குழப்பமாக அவளை பார்த்தான். "குளிச்சிட்டு வா சிவா.." என்றாள்.

"பரவால்ல.. நான் என் வீட்டுக்கே போறேன்.." என்றவனின் கையில் உடைகளை திணித்தவள் "சீக்கிரம் வா.. பேச வேண்டி இருக்கு.." என்றாள் அடிக்குரலில். அவன் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். "பாத்ரூம் அது.." என்று குளியலறை கதவை கை காட்டினாள். சிவா குளியறைக்கு சென்றான்.

சதாசிவமும் முஸ்தபாவும் உள்ளே வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த வசந்தன் "யாழினி போலிஸ் ஏன் வீட்டிற்கு வந்திருக்கு.?" என்றார். அவரின் குரலில் பதட்டம் இருந்தது. "சும்மாதான்ப்பா.. கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. நீங்க போய் உங்க வேலையை பாருங்க.." என்றவள் அவர் அங்கிருந்து நகர்ந்ததும் கதவை தாழிட்டு விட்டு வந்தாள்.

முஸ்தபாவும் சதாசிவமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இருக்கைகளை கை காட்டிய யாழினி "உட்காருங்க சார்.." என்றாள்.

"என்ன விசயம்ன்னு இப்போதாவது சொல்லும்மா.." என்றார் சதாசிவம்.

யாழினி படுக்கையின் மீது இருந்த டைரியை கையில் எடுத்தாள். அவர்கள் இருவரிடமும் வந்தாள். டைரியை சதாசிவம் கையில் தந்தாள். "பிரிச்சி படிங்க சார்.." என்றாள்.

டைரியை பிரித்த சதாசிவம் அதிர்ந்து போய் அவளை பார்த்தார். "என்ன முட்டாள்தனம் இது.?" என்றார்.

"இதை நான் அந்த வனத்துல இருந்து எடுத்தேன் சார்.. இந்த டைரியை தினேஷும் படிச்சிருக்கான்.." என்றவள் தன் கழுத்து ஆபரணத்தை நகத்தால் கிள்ளினாள்.

"இதனால்தான் தினேஷ் இறந்தான்னு சொல்றியா நீ.?" என்றவரிடம் மறுத்து தலையசைத்தவள் "அந்த டைரியை படிங்க சார்.. உங்களுக்கு ஏதாவது தெரியுதான்னு சொல்லுங்க.." என்றாள்.

சதாசிவம் பக்கங்களை திருப்பினார். பிணவாடை காற்றில் நன்றாக வீசியது. சுற்றும் முற்றும் பார்த்தபடி மூக்கை பிசைந்தார். பின்னர் மீண்டும் டைரியை பார்த்தார்.

மன்னன் வேல்விழியான் தன் அருகே அமர்ந்திருந்த தன் மகன்களை பார்த்தார்.

"தந்தையே.! உங்கள் உடல் நலத்திற்கு ஒன்றும் ஆகாது.. கவலைக் கொள்ளாதீர்கள்.." என்றான் இரண்டாம் மகன்.

"செல்வங்களே.. இறப்பை கண்டு கலங்கவில்லை நான்.. ஆனால் நான் இறந்த பிறகும் என் மக்கள் இதே நல்வாழ்வு வாழ நீங்கள்தான் துணை நிற்க வேண்டும்.." என்றார் அவர் படுக்கையில் படுத்தபடி.

"மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள் உங்கள் பிள்ளைகள். நீங்கள் இதை குறித்து வருத்தம் கொள்ளாதீர்கள் தந்தையே.." என்ற மூன்றாவது மகன் தந்தையின் கரத்தை வருடினான்.

"மக்களின் நிம்மதியில்தான் மன்னர்களின் நிம்மதி உள்ளது. அதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் நீங்கள்.. மூத்தவன் சிறப்பாக நாட்டை ஆளுகையில் மற்றவர்கள் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.." என்றவர் அத்தோடு கண்களை மூடி விட்டார்.

சதாசிவம் டைரியை கை தவற விட்டார். யாழினியை கலவரமாக பார்த்தார்.

"நீ இதை படிச்சியா.? நான் ராஜாவா இருந்து இதுல செத்து போவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா.?" என்றார் அவசரமாக.

இல்லையென தலையசைத்த யாழினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. "இதுல என்னை பத்தி மட்டும்தான் படிக்க முடிஞ்சது.." என்றாள்.

குழப்பமாக அவளை பார்த்தவர் சந்தேகத்தோடு டைரியை எடுத்து முஸ்தபாவின் கையில் திணித்தார்.

"நீங்க திறந்து படிச்சி பாருங்க முஸ்தபா.." என்றார்.

முஸ்தபாவுக்கு தலையை கீறிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஏன் இவர்கள் வித்தியாசமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று குழப்பத்தோடு யோசித்தவர் டைரியை பிரித்தார்.

முதல் பக்கத்து வாசகம் அவரை அச்சமடைய செய்தது. "இந்த முறை பிரேத மலை என்னையும் உயிர் பலி வாங்க போகுது.." என்றார் நடுங்கும் குரலில்.

"அதுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சி சொல்லுங்க முஸ்தபா.." என்று அவசரப்படுத்தினார் சதாசிவம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN