குறிப்பேடு 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முஸ்தபா டைரியை படித்தார். சில நிமிடங்கள் படித்தவர் சதாசிவத்தையும் யாழினியையும் மருண்டு போய் பார்த்தார். "இதுல என்ன எழுதிருக்குன்னு நீங்களே படிக்க வேண்டியதுதானே.? என்கிட்ட ஏன் தரிங்க.?" என்றார்.

"இதை நான் படிக்கும் போது என் கண் கொண்டு பார்க்கற மாதிரி இருந்தது.‌ என்னால என் முன்னாடி நடப்பதை மட்டும்தான் பார்க்க முடிஞ்சது. படிக்க முடிஞ்சது. நீங்க இதுல என்ன பார்த்திங்க.?" என்று கேட்டாள் யாழினி.

"எ.. எனக்கு எதுவும் தெரியல. வெள்ளையாதான் தெரிஞ்சது.." என்றவர் டைரியை அவளிடமே திருப்பி தந்தார்.

சிவா குளியலறையிலிருந்து வெளியே வந்தான். இவர்களின் அருகே வந்தான். காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"என்ன.?" என்றான் யாழினியிடம்.

"இந்த டைரி வித்தியாசமா இருக்கு சிவா. இதுல நான் என்னோட கண்ணோட்டத்தை மட்டும்தான் பார்க்க முடியுது. சாந்தவின்னு எல்லோரும் என்னை கூப்பிட்டாங்க.." யாழினி இதை சொன்னதும் முஸ்தபாவின் முகம் மாறி போனது.

"என்னை அமுதன்னு கூப்பிட்டாங்க.." என்ற சிவா தன் கீழ் உதட்டை கடித்தபடி யாழினியை பார்த்தான். "இதை படிச்சா மூணு நாள்ல செத்துடுவோம்ன்னு போட்டிருக்கு. அப்படின்னா நாமளும் இன்னும் மூணு நாள்ல செத்துடுவோமா.?" என்றான்.

"உனக்கு இந்த டைரி எங்கே கிடைச்சது.?" என்று கேட்டார் சதாசிவம்.

"தினேஷ் இதை கொண்டு வந்து வீட்டுல வச்சிருந்தான் சார். இதை படிச்சவுடனே ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிட்டான். என் கழுத்தை கூட நெரிக்க வந்தான்.."

யாழினியின் முகம் கலவரமானது. "அடுத்து என்ன ஆச்சி.?" என்றாள் கவலையோடு.

"ஏதும் இல்ல. அவனே என்னை விட்டுட்டான்.." என்ற சிவாவை பரிதாபமாக பார்த்தாள். இருவரும் பரிமாறிக் கொள்ள வேண்டிய விசயம் இருந்தது. ஆனால் முஸ்தபா மற்றும் சதாசிவத்தின் காரணமாக அமைதியாக இருந்தனர்.

"இதை நம்புவது முட்டாள்தனம். தினேஷோட சாவுக்கு என்ன காரணம்ன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும்.." என்றுவிட்டு எழுந்த சதாசிவம் முஸ்தபாவை பார்த்தார். "வாங்க நாம போகலாம்.." என்றார்.

முஸ்தபா சிவாவையும் யாழினியையும் மீண்டும் மீண்டும் பார்த்தார். பிறகு எழுந்து சதாசிவத்தோடு நடந்தார்.

"அவங்க இதை நம்பல.." சோகமாக சொன்னாள் யாழினி.

"அதை விடு.. அவங்க போலிஸ். அப்படிதான் இருப்பாங்க.. நீ ஏன் அவங்களையெல்லாம் இதுல இழுத்து விட்ட.?"

"தனியா சாக பயமா இருந்தது சிவா.." தயக்கமாக சொன்னவளின் கையை பற்றியவன் "உனக்கு ஒன்னும் ஆகாது.. நான் பார்த்துக்கறேன்.." என்றான்.

"உனக்கு என்ன விசயம் தெரியும் சிவா.? இந்த டைரியில் நீ எது வரைக்கும் படிச்ச.? உன் பதில் எனக்கு ரொம்ப முக்கியம்.." என்றவளிடம் "நான் இதுல ஒரு படைவீரனா இருந்தேன். உன்னை பார்த்தேன். போர்ல கலந்துக்கிட்டேன். அவ்வளவுதான் தெரியும்.." என்றான்.

யாழினி யோசித்து விட்டு பெருமூச்சு விட்டாள். "நீ தினேஷை அதுல பார்த்தியா.?" என்றாள்.

இல்லையென தலையசைத்தான் சிவா.

"அவன் இளவரசனா இருந்தான். ஒரு பேட் கேரக்டரா‌..!" என்று யாழினி சொன்னதும் சிரித்த சிவா "அவன் கெட்டவனா.?" என்றான்.

யாழினி டைரியை எடுத்தாள். "வா இரண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்.." என்றாள்.

"வேணாம். தேவையில்லாத எதையும் இழுத்து விட வேண்டாம் நாம.." என்ற சிவா டைரியை பிடுங்கி மீண்டும் மேஜையின் மீது வைத்தான்.

"எனக்கு தாகமா இருக்கு. தண்ணீர் கொண்டு வரியா.?" என்றான்.

யாழினி சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து சென்றாள். சிவா தாடையை பற்றியபடி சில நொடிகள் யோசித்தான். பின்னர் டைரியை கையில் எடுத்துக் கொண்டு வெளியே‌ நடந்தான். வசந்தனை எங்கும் பார்க்க முடியவில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறியவன் சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றை கை காட்டி நிறுத்தினான்.

தன் வீடு இருந்த அட்ரஸை சொன்னான். ஆட்டோவில் சாய்ந்து அமர்ந்தபடி டைரியை பிரித்தான்.

அந்த கோமணம் அணிந்த கிழவன் அரண்மனைக்குள் சென்றதால்தான் மன்னர் இறந்தார் என்று சக வீரர்கள் பேசிக் கொண்டனர். அதில் சிவாவிற்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மன்னர் மீது அதிக பாசம் வைத்திருந்தான் அவன். மன்னரின் இழப்பு அவனுக்கு மன வருத்தத்தை தந்து விட்டது. மன்னனின் மூத்த மகன்தான் அடுத்த மன்னனாக முடி சூடுவான் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் திடீரென்று நாடே கலவரமானது. இளவரசர்களுக்குள் சண்டை என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். ஒற்றுமையாக இருந்த சகோதரர்களுக்கு என்ன வந்தது என்று அனைவரும் கவலைப்பட்டனர்.

"சார் நீங்க சொன்ன அட்ரஸ் வந்துடுச்சி.." ஆட்டோ டிரைவர் சொன்னது கேட்டு நிமிர்ந்த சிவா டைரியை மூடி கையில் எடுத்துக் கொண்டான். ஆட்டோவை விட்டு கீழே இறங்கினான்.

சிவாவையும் டைரியையும் காணாததால் நடந்ததை யூகித்துக் கொண்ட யாழினிக்கு சிவா மேல் கோபமாக வந்தது.

முஸ்தபாவும் சதாசிவமும் குருதி நதிக்கரைக்கு வந்தனர். அந்த புல்வெளிக்கு எதிர் திசையில் இருந்த ஒத்தயடி பாதையில் நடந்தனர். சிறு கிராமம் வந்தது. அனைத்தும் ஓட்டு வீடுகளாக இருந்தது. ஐம்பது வருடங்கள் பின்தங்கிய கிராமம் போல இருந்தது‌. மின்சாரம் இல்லாத கிராமம்.

கிழவி ஒருத்தி திண்ணையில் அமர்ந்திருந்தாள். சதாசிவம் அவளின் முன்னால் வந்து நின்றார். "பாட்டி சந்தேகப்படுற மாதிரி யாராவது இந்த ஊருக்கு வந்துட்டு போனாங்களா.?" என்றார்.

கிழவி முஸ்தபாவை பார்த்தாள். "ஏன்டா முஸ்தபா.. சந்தேகப்படுற மாதிரி ஆள்ன்னு யாருடா.?" என்றாள்.

சதாசிவம் நெற்றியை கீறிக் கொண்டார்.

"உங்க‌ ஊர் பக்கத்துலதான் கொலை நடந்திருக்கு பாட்டி. நீங்க எனக்கு சரியான தகவலை தரலன்னா உங்க மொத்த பேரையும் கூட அரெஸ்ட் பண்ணுவேன் நான்.." என்றார்.

முஸ்தபா கண்களை சுழற்றினார். இன்ஸ்பெக்டர் எப்போது தன் பேச்சை கேட்பார் என்று யோசித்தார்.

"சார்.. நான் மறுபடியும் சொல்றேன்.. இந்த கொலை மனிதர்களால நடக்கல.." என்ற முஸ்தபாவை கோபத்தோடு திரும்பி பார்த்தவர் அதிர்ந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்தார். முஸ்தபாவின் பின்னால் இருந்த அந்த பாதையில் ரத்தத்தால் நனைந்த ஒருவன் நடந்து வந்துக் கொண்டிருந்தான். மிகவும் உயரமாக இருந்தான். இரு ஆள் உயரம் இருந்தான். அவரின் பய பார்வை கண்டுவிட்டு திரும்பி பார்த்த முஸ்தபா சட்டென்று அவரை தன்னோடு இழுத்துக் கொண்டு அந்த வீட்டின் திண்ணையோரம் வந்து நின்றார்.

அந்த இரண்டாள் உயர மனிதன் அவர்களை தாண்டி நடந்தான்.

"எ.. ன்ன இது.?" அதிர்ச்சியோடு கேட்டார் சதாசிவம்.

"இது இரண்டாம் இளவரசன் சார். போன பௌர்ணமியில் வெளியே வந்திருப்பாங்க. ஏழு நாட்கள் முடிஞ்சதும் திரும்பி போயிடுவாங்க‌.." என்றார் முஸ்தபா.

சதாசிவம் அவர் சொன்னதே நம்ப இயலாமல் தூரத்தில் சென்ற அந்த மாபெரும் மனிதனை பயத்தோடு பார்த்தார். "கனவாயா இது.?" என்றார்.

"உண்மை சார்.. மொத்தம் நாலு இளவரசர்கள்.. நாலு பேரும் இப்படிதான் இருப்பாங்க. எங்களை எதுவும் செய்யமாட்டாங்க. ஆனா அவங்க நடந்து போற வழியில் குறுக்கே நின்னா அப்பதான் அடிச்சி கொன்னுடுவாங்க.. எங்க அப்பாவும் கூட அப்படிதான் செத்து போனாரு.." என்று முஸ்தபா சொன்ன விசயம் அவருக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை தந்தது.

"இன்னும் அஞ்சி நாள் இருக்கு. அது வரைக்கும் சூதானமா இருங்க.. இந்த ஊர்ல கண்டமேனிக்கு திரியாதிங்க.." என்ற கிழவி தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

சிலையாக நின்றிருந்த சதாசிவத்தின் கையை பற்றினார் முஸ்தபா.

"வேற எங்கே சார் போகலாம்.?" என்றார்.

அவர் பதில் சொல்ல இருந்த நேரத்தில் அவரின் போன் அடித்தது. அழைப்பேற்று போனை காதில் வைத்தார்.

"சார் நாங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம். நீங்க போஸ்ட்மார்ட்டத்துக்காக அனுப்பி வச்ச பாடி காணாம போயிடுச்சி.." என்றான் ஒருவன் எதிர் முனையில்.

"என்ன சொல்றிங்க.?" குழப்பத்தோடு கேட்டவரிடம் "எப்படி காணாம போச்சின்னு தெரியல சார்.. பிணவறை பூட்டு போட்டுதான் இருந்தது. வாசல்ல கூட செக்யூரிட்டு நின்னுட்டேதான் இருந்தார். ஆனா டாக்டர் போஸ்ட் மார்ட்டம் செய்யலாம்ன்னு நினைச்ச போது பாடி அங்கே இல்ல. தேடி பார்த்துட்டோம். சிசிடிவியை கூட செக் பண்ணோம். தகவல் கிடைக்கல.." என்றான்.

"நாங்க நேர்ல வரோம்.." என்று போன் இணைப்பை துண்டித்து பாக்கெட்டில் போட்டுக் கொண்ட சதாசிவம் தனக்கு வந்த தகவலை முஸ்தபாவிடம் சொன்னார்.

"இளவரசங்க தூக்கிட்டு வந்துட்டாங்களோ என்னவோ.?" என்றார் இவர் சந்தேகமாக.

சதாசிவத்திற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நடந்த எதையும் நம்பவும் முடியவில்லை. அதே சமயம் நேரில் பார்த்த காட்சிகளை விலக்கி தள்ளவும் முடியவில்லை.

சிவா தன் வீட்டின் உள்ளே வந்தான். வீடு இருட்டாக கிடந்தது. லைட் ஸ்விட்சை அழுத்தினான். "அம்மா.." என்று கத்தினான்.

"ஏன் கத்துற சிவா.?" நாற்காலியில் அமர்ந்திருந்த தினேஷ் தலையை சாய்த்து நண்பனை பார்த்தான். நெஞ்சின் மீது கை வைத்து பெருமூச்சி விட்டுக் கொண்டான். பயத்தில் கால்கள் இரண்டும் நடுங்கின.

நாற்காலியில் அமர்ந்திருந்த தினேஷின் நெற்றியில் ஆழ காயம் அப்படியே இருந்தது. உடைகளும் அதே போல ரத்த பிசுபிசுப்போடு இருந்தது.

"தினே‌ஷ்.." தயக்கமாக அழைத்தான் சிவா. அவனின் குரலே அவனுக்கு அந்நியமாக தெரிந்தது.

"கையில ஏன் அந்த டைரியை வச்சிருக்க சிவா.? அந்த டைரிதான் என்னை கொன்னது.. அதை எங்கிட்ட தந்துடு.." என்றான்.

சிவா டைரியை இறுக்கமாக பற்றினான். "நீ யார்.?" என்றான்.

"நானா.? உன் பிரெண்ட்.." என்றவனின் உதட்டில் இருந்த காயம் உலர்ந்து போய் வெள்ளை நிறத்தில் பூஞ்சை போல ஏதோ படர்ந்திருந்தது.

"நீ செத்துட்ட தினேஷ்.. ஆனா எப்படி.." என்றவனை பார்த்து சிரித்தான் அவன். உடனே அழுதான்.

"ஆமா சிவா.. நான் செத்துட்டேன். ஆனா சாக விரும்பல நான்.. என்னை காப்பாத்து.." என்றவன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான். சிவா ஓரடி பின்னால் நகர்ந்தான். கதவு முதுகில் இடித்தது.

"என்னை பார்த்து பயப்படுறியா சிவா.? நான் உன் நண்பன் என்னை மறந்துட்டியா.? என்னை உயிரோடு திருப்பி கொண்டு வா.." என்று பிணாத்தினான்.

சிவாவிற்கு அவன் முன் நிற்பதற்கே உயிர் போய் வந்தது. "நான் போய் யாரையாவது கூட்டி வரேன்.." என்று திரும்பினான்.

"அந்த டைரியை தந்துட்டு போ சிவா.." என்றான்.

சிவா டைரியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். "இல்ல வேணாம்.. நீ இங்கேயே இரு. நான் போய் உனக்கு உதவி செய்ய யாரையாவது கூட்டி வரேன்.." என்றான். கதவின் தாழ்ப்பாளை திறக்க முயன்றான். வெளியே இருந்து வரும்போது திறந்துக் கொண்ட தாழ்ப்பாள் இப்போது திறக்க மறுத்தது. பயத்தை மறைத்துக் கொண்டு தினேஷை திரும்பி பார்த்தான். அதே சமயத்தில் சிவாவை தூக்கி தூரமாக வீசினான் தினேஷ்.

சுவற்றில் மோதி தரையில் விழுந்த சிவா முதுகை பிடித்தபடி எழுந்து நின்றான். சிவாவின் கழுத்தை பற்றி நெருக்கினான் தினேஷ்.

"நான் சொன்னேன் இல்லையா என் சாந்தவியை தொடாதன்னு.. ஏன் என் சாந்தவியை தொட்ட.? அவ எனக்கானவ.. சாந்தவி என் ஜீவன்.. சாந்தவி என் வாழ்க்கை.." என்று கத்தினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN