மௌனங்கள் 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நேத்து தலைவலி நட்புக்களே. அதான் நேத்து சாயங்காலமே அப்டேட் பண்ண முடியல. சாரி

புவினின் point of view

என் முன் நின்றிருந்தவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான். நான் அவன் பார்வைக்கு நாயகனாக தெரிவேன் போல.

"என் ரூம் எங்கே இருக்கு.?" எனது கேள்வி அவனை அவனின் கற்பனை உலகிலிருந்து வெளி கொண்டு வந்தது.

"உள்ளே வாங்க.." என்றவன் முன்னால் நடந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததும் ஏசியின் ஜில்லிப்பு காற்று முழுக்க பரவி இருந்தது. லிப்டில் நான் நுழைந்ததும் அவன் ஐந்தாவது தளத்திற்கான பட்டனை அழுத்தினான்.

ஐந்தாவது தளத்தில் ஒரு கடைகோடியில் இருந்தது அறை. அனைத்து வசதிகளோடும் வெள்ளை விரிப்புகளோடும் இருந்தது. அறையின் சுவர்கள் கூட வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது. ஏனோ எனக்கு கண் கூசியது. ஏசியின் ஜில்லிப்பு அறைக்குள் அதிகமாக இருந்தது.

"நீங்க இங்கே ரொம்ப பத்திரமா இருக்கலாம். போலிஸ் இந்த ஹோட்டல் பக்கம் எதுக்காகவும் வர மாட்டாங்க.." என்றான். எனக்கே தைரியம் சொல்லுகிறானாம் இவன். முட்டாள்.

"உங்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நேத்து சாயங்காலம் வந்துடுச்சி. எல்லாத்தையும் அந்த கப்போர்ட்லயும் கட்டில் அடியிலேயும் வச்சிருக்கேன்.." என்றவன் என்னை அதே ஆச்சரிய பார்வை பார்த்தான்.

"உன் வேலை முடிஞ்சது இல்லையா.?" என் கேள்விக்கு உடனடியாக ஆமென தலையசைத்தான்.

"அப்புறம் ஏன் இங்கே இருக்க. கிளம்பு.." என்றதும் விதிர்த்து போய் வெளியே நடந்தான். குரலில் அதட்டல் இருந்திருக்கும் போல.

"ஒரு நிமிசம்.." அழைத்ததும் நின்றான்.

"ஸ்பேர் கீ கொடு‌.." என்றேன்.

"மறந்துட்டேன்.." மழுப்பலாக சிரித்தபடி வந்தவன் சாவியை என் கையில் தந்துவிட்டு திரும்பி நடந்தான்.

அவன் சென்றதும் அறையின் கதவை உள்பக்கம் சாத்தினேன். கட்டிலின் ஓரத்தில் இருந்த மேஜையின் மீது பேக்கை வைத்தேன். ஏர்போர்ட் வாசலில் நிற்கையிலும் ஹோட்டல் வாசலில் நிற்கையில் அடித்த வெயிலால் கசகசப்பாக இருந்தது‌.

உடையை கழட்டி எறிந்துவிட்டு குளியறைக்குள் நுழைந்தேன். குளியலறையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. ஷவரின் கீழ் நின்று குளித்துவிட்டு டவலோடு வந்து அந்த கண்ணாடியே பார்த்தேன். சிறு வயதில் பசியால் ஒட்டிய வயிறு அதன் பிறகு நிறைக்க உணவு கிடைத்தும் கூட அப்படியேதான் இருந்தது. உங்களுக்கு என் சிக்ஸ் பேக்தான் தெரியும். அதையும் தாண்டி ஒட்டியிருக்கும் வயிறு எனக்கு மட்டும்தான் தெரியும்.

என் முகத்தில் கம்பீரம் கண்டால் அது உங்கள் குற்றம். ஆனால் எனக்கு என் முகத்தை பார்க்கையில் அந்த கண்களில் இருக்கும் வெறுப்பும் கோபமும்தான் தெரியும். உம்மணாமூஞ்சி என்று கூட நீங்கள் என்னை அழைத்துக் கொள்ளலாம். கவலைப்பட மாட்டேன் நான்.

க்ளீன் சேவ் பிடிக்காமல் கொஞ்சமாக தாடியை விட்டிருந்தேன். ஒட்ட வெட்டிய தலைமுடி இப்போதைய டிரெண்டிங்காக இருக்கிறது‌. கையில் மட்டும் பிரேஸ்லெட் ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தேன். பிரேஸ்லெட் சாதாரணமாகவே தெரியும். சதுரங்கள் சங்கிலி போல் இணைந்திருந்தது அதில். அந்த சங்கலியில் ஒற்றை இதயமும் இருந்தது. என்னால் மட்டும்தான் அதில் இருக்கும் இதயத்தை திறக்க முடியும். இதயத்தின் உள்ளே இருக்கும் உடனடி கொல்லும் விசம் எனது பாதுகாப்பிற்காக தங்சேயா தந்தது.

எனது குழுவில் உள்ள அனைவர் கையிலும் இது போன்ற பிரேஸ்லெட்கள் இருக்கும்.

கூரான முகம், ஒடுங்கிய கன்னங்கள், வலுவான தசைகள், நரம்புகள் புடைக்கும் கழுத்து, ஓரடிக்கே எதிரியை வீழ்த்தும் பலம்.. இது எல்லாம் ஒரு நாயகனுக்கு உரியதென்று பல இடங்களில் சொல்லப்பட்டு விட்டது. அப்படியானால் நானும் நாயகன்தான் மனதின் தூய்மைக்கு நீங்கள் மதிப்பு தராத வரை.!

தண்ணீர் துளிகள் சொட்டிய தலையின் முடிகளை கலைத்து விட்டபடி குளியலறையை விட்டு வெளியே வந்தேன். இடுப்பில் இருந்த டவலை அப்படியே விட்டுவிட்டேன். உடையை மாற்ற பிடிக்கவில்லை.

அலமாரியை திறந்தேன். துப்பாக்கிகளும் வெடிக்குண்டுகளும் டைம் பாம்களும் இருந்தது. நீங்கள் வாழும் அதே நகரத்தில் நானும் இந்த பொருட்களோடு தைரியமாக நிற்க காரணம் நீங்கள்தான். ஒருபோதும் என்னை குறை சொல்லி விடாதீர்கள்.

கட்டிலின் மீதிருந்த மெத்தையை தூக்கி பார்த்தேன். அனைத்துமே வெடிப்பொருள்கள். இந்த நாட்டையே சுடுகாடாக மாற்றும் அளவிற்கான ஆயுதங்கள் என்னிடம் இருக்கிறது. இது உங்களோடு வாழும் உம் மக்களில் சிலருக்கும் கூட தெரியும்.

மெத்தையை சரி செய்தேன். படுக்கையில் ஏறி படுத்தேன். கூரையில் இருந்த வண்ண நட்சத்திர ஓவியங்கள் என்னை பார்த்து கண்ணடித்தன. அந்த நட்சத்திரங்களை ரசிக்கும் அளவிற்கு நல்லவன்தான் நானும். விமானத்தில் வெகுதூரம் பயணித்தது உடல் வலியை தந்திருந்தது. கண்களை மூடி உறங்க முயன்றேன். வரும் வழியில் நான் பார்த்த அந்த பூக்கார பெண் நினைவில் வந்தாள். வித்தியாசமாக இருந்தது. அவளின் முகத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு உறக்கத்திற்குள் நுழைய முயன்றேன்.

மீண்டும் கண் விழித்த போது மணி மாலை ஐந்தை தாண்டி இருந்தது. இடுப்பில் கட்டியிருந்த டவல் அவிழ்ந்து கிடந்தது. அதை அப்படியே விட்டுவிட்டு சென்று வேற்று உடையை மாற்றிக் கொண்டேன். தூக்கம் ஒட்டிக் கொண்டிருந்த முகத்தை தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு தலையை கோதி விட்டுக் கொண்டேன்.

போன் ஒலித்தது. பேக்கை திறந்து எடுத்து பார்த்தேன். தம்பி அழைத்திருந்தான். "அண்ணா எக்ஸ் மினிஸ்டர் சங்கரன் இறந்தாச்சி.." என்றான்.

"ம்.." என்றுவிட்டு தொடர்பை துண்டித்தேன். அலமாரியில் இருந்த கட்டை விரல் அளவுடைய சிறு செல்போனை எடுத்தேன். அதில் சில மாற்றங்களை செய்துவிட்டு பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அது செல்போன் அல்ல. அது வெடிக்கும். நான் என் போனில் நான்கு இலக்கங்களை அழுத்தினால் போதும். அருமையாக வெடிக்கும். எக்ஸ் மினிஸ்டரின் உடல் கூட கிடைக்காத அளவிற்கு அவரின் உடலை சில்லு சில்லாக தெறிக்க விடும்.

ஹோட்டலில் வரவேற்பறைக்கு நான் வந்ததும் என்னை முன்பு வரவேற்றவனே மீண்டும் ஓடி வந்தான். "கார் ரெடியா இருக்கு.." என்றான். நான் நடந்தபோது எனக்கு முன்னால் ஓடி சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தான். என் மீது இவனுக்கு கொஞ்சமும் பயமே இல்லை.

குழலியின் POV

இந்த ஊருல என்னை போல ஒருத்தியை நீங்க தேடி பார்த்தா கூட கிடைக்க மாட்டாங்க. ஏனா நான் ஒரு பிரின்சஸ். எனக்கு நானே பிரின்சஸ். என்னோடு நட்புக் கொள்ள ஆண்டவன் படைத்ததுதான் இந்த பூக்கள்.

பூக்களோடு பூக்களாய் இணைந்திருந்து பாருங்கள். உங்கள் மனதின்‌ உற்சாகம் குறையவே குறையாது. வாசனைகளும் மகரந்த துகள்களும் அலர்ஜியாக இருந்தால் ஒதுங்கியே நில்லுங்கள். என்னால் நீங்கள் தும்ப வேண்டாம்.

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில் உள்ளது எங்களது பூக்கடை. பிளவர் ஷாப் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். எனது தோழி நிஷாவோடு இணைந்து இந்த கடையை வைத்துள்ளேன்.

பல வண்ண ரோஜாக்கள் எப்போதும் காற்றில் அசைந்துக் கொண்டிருக்கும் எனது கடையில். டெய்சி, லில்லி, காஷ்மீரி துலிப், சன்ப்ளவர் எல்லாமே இருக்கிறது. எனது வழக்கமான வாடிக்கையாளர்கள் சிலருக்காக மல்லிகையும் முல்லையும் கூட வாங்கி வைத்துள்ளேன். பூக்களை தேடி வரும் யாரும் வெறுங்கையோடு திரும்ப கூடாது.

சில திருமணங்களுக்கும் வேறு சில விழாக்களுக்கும் பூக்கள் ஒப்பனை செய்து தந்துள்ளோம் நாங்கள். நிஷாவுக்குதான் இந்த பூ அலங்காரத்தில் அதிக ஈடுப்பாடு. அவளின் தம்பிகள் மூவரும் விழா நாட்களில் அவளுக்காக உதவி செய்ய வருவார்கள். எங்களின் ஒப்பனை அனைத்து இடங்களிலும் அதீத பாராட்டுகளை பெற்றுள்ளது.

"அக்கா உன் கையால் ரோஜா வாங்கிட்டு போய் தந்தா லவ் சக்சஸ் ஆகுதுன்னு என் பிரெண்ட்ஸ் சிலர் சொல்றாங்க.." என்றான் நிஷாவின் பெரிய தம்பி மதி.

அவன் பொய் சொல்லவில்லை. நிறைய பேர் இதை என்னிடமே சொல்லியுள்ளார்கள். ராசியின் மீது எனக்கு அதிக நம்பிக்கை. என் கைகள் ராசியானவை என மற்றவர் பாராட்டுகையில் உள்ளம் அனிச்சையாக மகிழ்கிறது. இன்று கூட காலையில் தேதி கிழிக்கையில் எனது ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தது. நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டாகும்.

"நம்மூர்ல யாரோ ஒரு கட்சி தலைவர் இறந்துட்டாராம். மலர் வளையம் அதிகம் தேவைப்படும்ன்னு நினைக்கிறேன்.." நிஷா இதை சொன்னதுமே மலர் வளையங்களை எடுத்து வரிசையாக அடுக்க ஆரம்பித்தான் மதி. அவனுக்கு தினம் பொழுது போவதே இந்த கடையில்தான். பூங்கொத்துகள் வாங்க வரும் பெண்களை பார்த்து பல்லை காட்டிக் கொண்டும் அதற்காக நிஷாவிடம் திட்டு வாங்கிக் கொண்டும் இருப்பான்.

நேரம் கடந்தது. மலர் வளையம் வாங்க ஒரு சிலர் வந்தனர். யாரின் முகத்திலும் துக்கம் இல்லை. இறந்தவர் ஊழலிலேயே பிறந்து வளர்ந்து இறந்தவர் என்பது ஊர் அறியும். ஆனாலும் இறந்த மனிதனுக்கு தங்களின் மன வாட்டத்தை கூட தெரிவிக்க மாட்டேன் என்கிறார்களே என்று‌ எனக்கு வருத்தமாக இருந்தது.

பெண்மணி ஒருத்தி பூங்கொத்துகள் ஒன்றை வாங்க வந்தாள். அவளை கண்டதும் மனம் பாரமானது எனக்கு. அவள் கேட்ட பூங்கொத்தை எடுத்து நீட்டினேன். பணத்தை தந்துவிட்டு கிளம்பினாள். அந்த பூங்கொத்து அவளின் மகளுக்கானது. வாகன விபத்தில் ஆறு வயதில் இறந்த குழந்தை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது இப்போது. ஆனால் இந்த தாய் மனம் குழந்தையை எண்ணி தினம் வாடிக் கொண்டிருந்தது. தினமும் மாலையில் வேலையிலிருந்து வீடு திரும்பும்போது பூங்கொத்தை வாங்கி செல்வாள். குழந்தையின் அறையில் வைப்பதற்காக என்று ஒரு சில முறை சொல்லியுள்ளாள். அவளை பார்த்தாலே எனக்கு மனம் டன் கணக்கான பாரத்தை உணரும்.

"எக்ஸ்க்யூஸ்மீ.." யாரோ அழைத்தார்கள். முகமறியாத இறந்த குழந்தையின் நினைவிலிருந்து வெளி வந்தேன். எதிரில் ஒரு இளைஞன் நின்றிருந்தான். செதுக்கி வைத்த உருவம் போல இருந்தான். எனக்கும் கூட இதே உருவத்தில் ஒரு மணாளன் வேண்டுமென்றுதான் ஆசை.

"என்ன சார் வேணும்.?" என் அருகில் நின்றிருந்த மதி கேட்டான்.

"மலர் வளையம் ஒன்னு.." என்றவனின் கண்கள் என் முகத்தில் பதிந்தபடி இருந்தது. ஏன் இப்படி பார்த்தான் என்று தெரியவில்லை. ஆனால் என்னை அவன் பார்ப்பது எனக்கு பிடித்திருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்கள் இப்படியே நின்றிருந்தால் அவனை காதலிக்க ஆரம்பித்து விடுவேனோ என்று பயமாக இருந்தது. பொய் சொல்லவில்லை நான். முதல் பார்வையில் காதல் உண்டாவது பற்றி நானும் கூட நம்பியதில்லை. ஆனால் இவனை பார்க்கையில் நம்ப தோன்றியது. அழகன் என்பதால்தான் என்று பழி போடாதீர்கள். என் கடையில் உள்ள பூக்களை விட எந்த மனிதரும் அழகில்லை. ஆனால் இவன் தன் கண்களில் ஏதோ ஒரு வித சக்தியை வைத்திருக்கிறான். அவனின் கண்களின் கரு விழிகள் அசையாமல் என்னை பார்த்தன. அடர் கருப்பு விழிகள். அதை சுற்றி இருந்த வளையம் காப்பி நிறத்தில் இருந்தது. வெள்ளை பகுதிகளில் சிகப்பில் சிறு கோடுகள் ஓடிக் கொண்டிருந்தன.

"இந்தாங்க சார்.." மலர் வளையத்தை மதி நீட்டியதும் அதை வாங்கிக் கொண்டு பணத்தை நீட்டினான். அப்போதும் என்னையேதான் பார்த்தான்.

மீதி சில்லறையை மதி தந்ததும் திரும்பி நடந்தான். என்னை திரும்பி பார்க்கவில்லை. நேராக சென்று காரில் ஏறினான். கார் கிளம்பிய நேரத்தில் என் தோளில் தட்டினாள் நிஷா. "என்ன ஆச்சி.? அவன் முகத்தையே பார்த்துட்டு நிக்கற.!" என்றாள்.

அவன் என்னை பார்த்தான் என்பதை அறிந்திருந்த எனக்கு நானும் அவனை பார்த்துக் கொண்டு நின்றேன் என்பது தாமதமாகதான் புரிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN