முகவரி 38

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“ஷிதா... ரெடியா?” தங்கள் அறை வெளியே உள்ள ஹாலில் அமர்ந்து மடிக்கணினியை இயக்கிய படி இருந்தவன் கேட்க

“இதோ... இதோங்க..” உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் அனு.

சற்று நேரம் பொறுத்தவன், “ஷிதா... என்ன டா...” இவன் மறுபடியும் கேட்க

“இதோ... இதோங்க...” என்ற குரல் மட்டும் தான் வெளியே வந்தது… மனையாள் வெளியே வரவில்லை.

பொறுமை இழந்தவன்.. மடிக்கணினியை அணைத்து விட்டு, “செல்லம்மா, இன்னும் என்ன டா...” என்றபடி இவன் அறைக்குள் நுழைய

“மிரு… இதோ வந்துட்டேன்” என்றவள் வெளியே வர, இருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டார்கள். அதில் அவள் சற்றே தடுமாற... மனைவியின் இடையில் கை கொடுத்து தன்னவளை நிறுத்தியவன், “ஏன் டி, நான் இன்றைக்கு நாள் முழுக்க உன் கூட இருக்கணும்னு சொல்லி என் புரோகிராம் எல்லாம் கேன்சல் செய்ய வச்சவ... இப்போ இப்படி ரூமுக்குள்ளேயே இருந்தா எப்படி டி?”

“வந்துடங்க.. உங்க கூட வெளியே வரேன்... பார்க்க அழகா இருக்க வேண்டாமா... அதான் கொஞ்சம் லேட்...”

மனைவியை ஏற இறங்கப் பார்த்தவன், “நீ சாதாரணமாவே அழகு... இதில் இப்படி எல்லாம் செய்து என்னை சோதிக்காதே. பேசாமல் இன்றைய நாளை... நாம் அறையிலேயே கொண்டாடுவோமா ஷிதா?” என்றவன் கணவன் பார்வை பார்க்க

“ஹேய்... அதெல்லாம் முடியாது... இன்றைக்கு வெளியே தான் போகிறோம். ப்ளீஸ்... ப்ளீஸ் ங்க...” இவள் நாணத்தோடு விழி சுருக்கி கெஞ்ச...

“இப்படி எல்லாம் செய்தால் நான் டோட்டல் ஃப்ளாட் டி உன் கிட்ட...” என்றவன் “எல்லாம் சரி… ஒன்று மட்டும் மிஸ்ஸிங்... வா...” அவள் கை பிடித்து அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிற்க வைத்தவன்... பின் அங்கிருந்த குங்குமச் சிமிழில் இருந்த குங்குமத்தை எடுத்து... அவள் நெற்றி வகிட்டில் வைத்து விட்டவன்... “இப்போ சரி… வா போகலாம்” என்க

“அவசரத்தில் வைக்க மறந்திட்டேன் போல ங்க...” என்றவள் கணவனுடன் கை கோர்த்த படி மகிழ்ச்சியுடனே கிளம்பினாள் அனு.

முதலில் கோவில் சென்று விட்டு... பின் இருவரும் ஹோட்டல் சென்றார்கள்... அதன் பிறகு மனைவியை மாலுக்கு அழைத்துச் சென்றவன்... அவளுக்கு, பிள்ளைகளுக்கு, அக்கா, மாமா என்று அவனும், அவளும் சேர்த்து ஆடைகளைக் குவிக்க... இறுதியில் கணவனுக்கும் சில ஆடைகளைத் தேர்வு செய்தாள் அனு. எல்லாம் முடிய மதியம் நெருங்கி விட... அங்கேயே உணவை முடித்துக் கொண்டு சினிமாவுக்குப் போனார்கள் இருவரும். பாதி படத்திலேயே அனு தூங்கி விட...

“இவளை... வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தாலும்... அடம்பிடித்து இங்கே படம் பார்க்கனும் சொல்லி வந்துட்டு தூங்கிறா பார்” என்று வாய்விட்டே சலித்துக் கொண்டாலும்... ஏனோ அவள் தூங்கி எழும் வரை கடனே என்று படத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் மிருடன்.

படம் முடிய, அப்போது தான் சற்றே அசைந்தாள் அனு. “என்னங்க எல்லோரும் எழுந்து நிற்கிறாங்க?” இவள் இன்னும் தூக்கம் விலகா குரலில் கேட்க

“அது இன்டர்வெல் டைம் செல்லம்மா... அதான்...” இவன் பொய்யுரைக்க...

“ஒஹ்... அப்ப போய் எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க” இவள் கேட்க

“எதுக்கு… சாப்பிட்டு மறுபடியும் தூங்கவா?” அவன் கேலி செய்யவும், கணவன் முகத்தை இவள் நிமிர்ந்து பார்க்க “போச்சுடா... இன்னும் உனக்கு தூக்கம் கலையலயா... இங்கே பாரு செல்லம்மா.. இதுவே இது நம்ம சொந்த தியேட்டரா இருந்தா... உன்னை தூங்க விட்டு நான் எவ்வளவு நேரம் ஆனாலும் உன் அழகை ரசிச்சிகிட்டு இருக்கலாம். ஆனா பாரு இது நம்ம தியேட்டர் இல்லையே! நான் என்ன செய்ய?” இவன் போலியாய் வருத்தப்பட...

அப்போது தான் அனுவுக்குள் பல்பு எரிந்தது.. “அச்சோ! அப்போ படம் முடிஞ்சிடுச்சா?” கேட்டவள் பதறி கணவனை விட்டு விலக...

“ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிகிட்ட டி...”

“ஹி... ஹி... படம் பார்த்தா எனக்கு தூக்கம் வந்துடுங்க... அது சின்ன வயசிலிருந்தே எனக்குப் பழக்கம்” இவள் அசடு வழிய சொல்ல

“ஆமா இப்போ தான் நமக்கு புதுசா கல்யாணம் நடந்து... இன்று தான் நாம் சினிமா பார்க்க வந்தோம் பாரு... எனக்கு தெரியாததை சொல்லிட்டா...” கணவன் கேலியில் மறுபடியும் அசடு வழிந்தாள் அனு.

பின் ஒரு ரெஸ்டாரெண்ட் அழைத்துச் சென்று மனைவியை சிறிதே டச் அப் செய்யச் சொன்னவன் பிறகு அவளை அழைத்துச் சென்றது... வைர நகைகள் அணிவகுத்திருக்கும் கண்காட்சி இடத்திற்கு.

பெரிய பெரிய ஸ்டார்கள், வி.ஐ.பிகளை மட்டுமே அன்றைய தினம் அங்கு அனுமதித்தார்கள். கணவன் மனைவி இருவரும் நகைகளைப் பார்வையிடும் போது மிருடன் போனுக்கு அழைப்பு வர, “ஷிதா… இந்தப் பக்கம் இருக்கிற நகைகளை எல்லாம் பார்த்துட்டு இரு... இதோ நான் பேசிட்டு வரேன்” என்றவன் விலகியதும்...

இவள் நகைகளைப் பார்வையிட...

ஓரிடத்தில் ஒரு வயதான பெரியவரை லேசாய் இடித்து விட்டாள் அனு. அவர் தடுமாற… “சாரி.. சாரி அங்கிள். நான் இங்கே பார்த்திட்டு வந்த ஆர்வத்தில் உங்களைத் தெரியாமல் இடிச்சிட்டேன்” இவள் மன்னிப்பு கேட்க

“புரியுது ம்மா... இந்த மாதிரி இடத்திற்கு வந்தா இதெல்லாம் சகஜம் தான்...” என்றவர் பின் அவளைக் கூர்ந்து பார்த்து “ஆமா... உன்னை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே... எனக்குத் தெரிந்த முகமா நீ இருக்கியே...” அந்தப் பெரியவர் சொல்ல

அவரின் வெள்ளை உடையே அவர் யார் என்பதை அனுவுக்கு எடுத்துக் காட்ட... “நான் எக்ஸ் M.P குணநாதனோட பொண்ணு அங்கிள். நீங்க கட்சியிலே இருக்கீங்கனா… அப்பாவைப் பார்க்க வரும்போது என்னையும் பார்த்திருப்பீங்க” இவள் இயல்பாய் தன்னை அறிமுகப்படுத்த...

“ஓ... குணநாதன் பொண்ணா நீ! நல்லா இருக்கியா?” என்று இன்னும் சில விசாரிப்புடன் அவர் விலகி விட

இவள் கணவன் வந்துவிட்டானா என்று தேட, அவள் பின்னே கோப முகத்துடன் நின்றிருந்தான் மிருடன். அவனைக் கண்டதும், ‘இப்போ என்ன ஆச்சோ?’ என்பது போல் இவள் முழிக்க

“கிளம்பு போகலாம்...” என்றவன் ஒரு வேகத்துடன் முன்னே நடக்க...

“இவருக்கு இதே வேலை… கோபம் வந்தா பொசுக்கு பொசுக்குன்னு விட்டுட்டுப் போறது...” என்று முணுமுணுத்தவள் பின் கணவன் பின்னே சென்றாள் அனு.

காரில் இருவரும் பேசவில்லை. சரி வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் என்று இவள் நினைத்திருக்க, மனைவியை வீட்டு வாசலில் இறக்கி விட்டவன்... பின் எதுவும் பேசாமல் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் மிருடன். நாள் முழுக்க இருந்த இணக்கங்கள் மறைய, அனுவுக்குள் கோபம் குமிழ்ந்தாலும் அமைதியே காத்தாள் இவள்.

அன்று அனுவை விட்டுச் சென்றவன் பின் இரண்டு தினங்கள் சென்றும் வீடு வரவில்லை மிருடன். ஏன், அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பிள்ளைகள் ஒரு நேரம் தந்தையைத் தேடினாலும் பிறகு விளையாடுவதில் ஐக்கியமாகி விடுகிறார்கள். ஆனால் அனு தான் சதா எந்நேரமும்... ஒரு வித யோசனையிலேயே... கணவனைக் காண வேண்டும் என்ற தவிப்பிலேயே இருந்தாள்.

அதைக் கண்டு கொண்ட வெண்பா, “மருமகளே... இங்கே வா. உன் அப்பனுக்குப் போன் போட்டுத் தரேன்... எங்கே இருக்கான்... எப்போ வீட்டுக்கு வரான்னு கேளு” என்றவள் அவனுக்கு போன் செய்ய, தொடர்பு கொள்ளும் தூரத்தில் அவன் இல்லை என்பதை அப்போது தான் தெரிந்து கொண்ட வெண்பா… பின் ஆதியிடம் அவன் தொலைபேசி எண் வாங்கி மீண்டும் முயற்சிக்க

வீட்டு லேண்ட் லைன் என்றதும் அழைப்பை ஏற்று மிருடன் ஹலோ சொல்ல, “டேய் அப்பா... எங்க டா இருக்க... எப்போ டா வீட்டுக்கு வருவ... அத்தை தான் இப்படி கேட்க சொன்னா” மான்வி அச்சு பிசகாமல் அப்படியே ஒப்புவிக்க…

மகள் தன்னை அதிகாரம் செய்ததில் புன்னகைத்தவன், “பேபி... அப்பா ஆபீஸில் இருக்கேன் டா... நிறைய வேலை இருக்கே... இப்போ அப்பா வர முடியாதே” அவன் மகளிடம் கொஞ்சலாய் மொழிய

போன் ஸ்பீக்கர் மோடில் தான் இருந்தது. “அத்தை.. அப்பாவுக்கு வேலை அதிகம் இருக்காம். ஏன்.. சும்மா சும்மா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணுற?” இவள் அத்தையிடம் திரும்பி அதிகாரம் செய்ய

மிருடனுக்கு இன்னும் புன்னகை விரிந்தது. “போதும் டி... உன் அப்பனுக்கு சப்போர்ட் செய்தது.. பெருசா பாட்டி மாதிரி பேச வந்துட்டா... கிளம்பு டி நீ” வெண்பா மருமகளை விரட்டியவள், “எங்கே தான் டா இருக்க... எப்போ தான் டா வீட்டுக்கு வருவ? எப்போ பாரு உன் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டுப் போகிறதையே வேலையா வைத்திருக்கீயா?” இவள் தம்பியிடம் சத்தம் போட, இவ்வளவு நேரம் இருந்த இனிமை மறைய, அக்கா சொன்ன வார்த்தைகளில் கோபம் கொண்டவன்…

“ராமர் இருக்கிற இடம் தானே க்கா சீதைக்கு அயோத்தி?” இவன் பட்டென்று சொல்ல...

“டேய்... உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. அனு உன்னைக் காணாமல் மந்திரித்து விட்டவ மாதிரி சுற்றிட்டு இருந்தா. அதான்... உனக்கு அழைச்சேன்... நீ என்ன டா ஏதேதோ சொல்கிற... எனக்கு ஒன்னும் புரியல டா” வெண்பா சலித்துக் கொள்ள

போன் ஸ்பீக்கர் மோடில் இருப்பதை அறிந்தவன், “அங்கு இருப்பவளுக்கு புரியும் க்கா..” என்றவன் “எனக்கு வேலை இருக்கு க்கா… நான் பிறகு பேசறேன்” என்ற சொல்லுடன் அழைப்பைத் துண்டித்து விட

“என்ன அனு... அவன் ஏதோ சொல்கிறான்”

அனு, “விடுங்க அண்ணி… நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அவன் சொன்ன மாதிரியே இவள் ஆதியிடம் கணவன் இருப்பிடம் கேட்டு அங்கு செல்ல எத்தனிக்க

அடுத்த நொடியே அவளுக்கு அழைத்த மிருடன், “நீ இங்கே வருவதா இருந்தால்... என் மனைவியா மட்டும் தான் வரணும். திரும்பிப் போக உனக்கு வாய்ப்பு இருக்காது. Even பசங்களைக் கூட பார்க்க அனுப்ப மாட்டேன். இப்படியான என் தண்டனைக்கு சம்மதம்னா வா” உத்தரவாய் சொல்ல

“சரி சம்மதம்” பிசிறற்ற குரலில் இவள் அறிவிக்க

அழைப்பைத் துண்டித்தவன், இவள் சுவிட்சர்லாந்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, இதோ கனத்த மனதுடன்... கணவன் இருப்பிடம் செல்ல தனியே விமானத்தில் பயணமாகிறாள் அனு. அன்று அவளை விட்ட பிறகு ஆபீஸ் விஷயமாய் சுவிட்சர்லாந்தில் தற்போது இருக்கிறான் அவன். அவள் இறங்கியதும் மிருடன் பேரைச் சொல்லி ஒரு பணியாளர் வந்து அவளை அழைத்துச் செல்ல.. காரில் பயணித்தவளுக்குப் புரிந்தது… அன்று கணவன் சொன்ன தண்டனை என்ற வார்த்தையை இன்று நிறைவேற்ற இருக்கிறான் என்று.

ஹோட்டலில் கார் நிற்க... அங்கிருக்கும் சகல வசதிளுடன் கூடிய வி.ஐ.பி அறையை அவளுக்காய் ஒருவர் திறந்து விட... மவுனமாய் உள்ளே நுழைந்து தன் சிரம பரிகாரங்களை முடித்தாள் அனு. அவளைத் தவிர அங்கு வேறு ஆட்கள் இல்லை. கணவன் இடம் என்பதால் அவளுக்கு பயம் இல்லை. ஆனால் நேரத்தைத் தான் அவள் நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது.

நேரத்திற்கு உணவு வந்தது.. சிறிது நேரம் தூங்கியும் எழுந்தாள். இதே தொடரவும் அவளுக்கு சலிப்பைத் தர... இது ஹனி மூன் தம்பதியருக்கான அறை என்பதால்... இந்த அறையை ஒட்டியே தனி மனிதர்கள் உபயோகத்திற்காக நீச்சல் குளம் இருக்க... அங்கு சென்றவள் தன் சிந்தனைகளின் ஊடே நீரில் கால்கள் நனைய இவள் அமர்ந்து விட... இரவு நேர உணவின் போது தான் வந்தான் மிருடன். அதுவரை அவள் அங்கு தான் அமர்ந்து இருந்தாள்.

உள்ளே நுழைந்தவன் தான் கட்டியிருந்த டையை இடது கையால் தளர்த்தி விட்ட படியே “வெல்கம் மிஸஸ் மிருடவாமணன்.. நான் கொடுக்க போகும் எல்லா தண்டனைக்கும் தயாரா தான் வந்திருக்கீங்க போல” மிருடன் நக்கலாய் மொழிந்தபடி உள்ளே வர

கணவனின் திடீர் குரலில் இவள் அவசரமாய் எழ... இவ்வளவு நேரம் நீரில் இருந்த அவளின் பாதங்கள் தற்போது சில்லிப்போடு அவள் நிற்க பலம் இல்லாமல் வழுக்க, “அஹ்.... அம்மா!” இவள் விழ இருந்த நேரம்

“ஹேய் ஷிதா... பார்த்து மெதுவா டி” என்றவன் தாவிச் சென்று மனைவியைத் தன் கைகளில் ஏந்தியவன்… கட்டிலில் அவளை அமரவைத்து அவள் கால்களைக் காண... அது சில்லிட்டுப் போய் இருந்தது.

“உனக்கு அறிவு இருக்கா டி? இப்படியா சின்னபிள்ளை மாதிரி
நீரில் ஆட்டம் போடுவ!” என்று கடித்து கொண்டவன்... அறையில் உள்ள கணப்பை அதிகப் படுத்தி விட்டு... யூகலிப்டஸ் தைலத்தால் அவளின் பாதங்களை இவன் தேய்த்து விட...

கணவனின் முகத்தில் அன்றைய வேலைக்கான சோர்வு இருந்தாலும்… உடையை கூட மாற்றாமல் குனிந்து மும்முரமாய் மனைவிக்கு சேவகம் செய்யும் அவனின் கேசத்தை இவள் கலைக்க… அதில் அவன் நிமிர்ந்து பார்க்கவும், “நீங்க எனக்கு கொடுக்கும் தண்டனையை... நான் மனதால் அனுபவிக்கிறதை விடவா இது எனக்கு பெரிது மிரு?” இவள் மொழிய

“ஓஹ்... இப்படி எல்லாம் சொன்னா மேடமுக்கு தண்டனை கிடைக்காதுன்னு நினைக்கறீங்களோ!”

“இல்லை... இல்லை.. அப்படி இல்லை...”

“என்ன இல்லை... உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் டி? உன் அப்பன் என் விரோதின்னு தெரிந்திருந்தும்… நான் குணநாதன் பொண்ணுன்னு எல்லோரிடமும் இளிச்சிகிட்டே சொல்லுவ! அது எப்படி டி நீ சொல்லலாம்?” இவன் கோபமாய் கேட்க, அனுவிடம் மவுனம் மட்டுமே.

“மகள் மட்டும் போதும் நான் வேண்டாம்னு போன இல்லை… இனி நீ எப்போதுமே உன் மகன், மகளைப் பார்க்க கூடாது. கடைசி வரை நீ இங்கே தான்” இவன் உத்தரவாய் சொல்லிக் கொண்டிருந்த நேரம், அழைப்பு மணி ஒலிக்க… இரவு உணவுடன் உள்ளே வந்தார்கள் பணியாளர்கள். உணவை வைத்து விட்டு அவர்கள் விலகியதும், “சாப்பிடலாம் வா...” இவன் அவளை அழைக்க

“எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க” இவள் மறுக்க

“திமிராடி... நான் என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லி தான் இங்கே வந்திருக்க.. வந்து சாப்பிடு...”

“எனக்கு வேண்டாங்க... கலையிலிருந்து சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கி எழுந்ததுன்னு... இதே அறையில் உட்கார்ந்துட்டு தான் இருக்கேன். இப்போ சாப்பிட்டா நிச்சயம் குமட்டத் தான் செய்யும்... வேண்டாம்...” இவள் மறுத்ததிற்கான விளக்கத்தை கொடுக்க

அவனுக்குள் கோபம் எழந்தது, “பரவாயில்லை.. சாப்பிட்டே வாமிட் எடு.. நான் சுத்தம் செய்துக்கிறேன்” இவனும் பிடிவாத்திலே நிற்க...

வேறு வழியில்லாமல் சிறிதே உண்டாள் அனு. இரவு படுக்கையின் போது… மறுபடியும் ஆரம்பித்தான் அவன் “இங்கே பார்... ஒரு மனைவிக்கான எல்லா கடமையையும் செய்யத் தான் நீ இங்கே வந்திருக்க… என்ன புரிந்ததா?” என்றவன் படுக்கையில் விழ… மனைவியிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்றதும் கோபம் எழ, “நான் என்ன டி சொன்னேன்?” என்று இவன் கேட்க

“என்னங்க… என்ன ஆச்சு?” இவள் புரியாமல் கேட்க

தலைக்கு கீழே இரண்டு கைகளையும் கோர்த்து… கண்கள் மூடி கால்களை நீட்டி அண்ணாந்து படுத்து இருந்தவன் “கிஸ் பண்ணு டி...” என்று கட்டளையாய் சொல்ல.. கணவனின் பதிலில் முதலில் விழித்தவள் பின்…

“கிஸ் மட்டும் கொடுத்தா போதுமா... இல்லை வேற ஏதாவது செய்யணுமா?” இவள் மிக மிக நிதானமாய்... அதைவிட சாதரணமாய் கேட்க... பட்டென இமை திறந்தவனின் விழிகளில் கோபம் படர்ந்து இருக்க… இப்போது கொதி நிலைக்குப் போனவன்.

“ச்சே! இனி மனுஷன் உன் கிட்ட வருவானா.. பேசாமல் தூங்கு டி” என்று கடித்த பற்களுக்கு இடையே சீறியவன் கோப மிகுதியில் தானும் ஒரு புறம் படுத்து கொண்டான் அவன்...

ஆனால் நடு ஜாமத்தில் தான் சொன்னதை மறந்தவனாக… ரோஷத்தை துறந்தவனாக மனைவியை அணைத்துக் கொண்டு தூங்கினான் தி கிரேட் மிருடவாமணன்.

காலையில் இவன் எழ... அப்போது தான் தான் எங்கு இருக்கோம்… நேற்று நடந்தது என்ன என்பது வரை அவன் முன் விரியவும்… திரும்பி பார்த்தவன் படுக்கையில் மனைவி இல்லை என்பதை கண்டவன் அவளைத் தேட.. நேற்று மாதிரியே நீச்சல் குளத்தின் அருகில் இருந்தாள் அனு. என்ன… இன்று அங்கு போட பட்டிருந்த மர நாற்காலியில் மிக இயல்பாய் முகத்தில் ஒரு வித அமைதியுடன் அமர்ந்து இருந்தாள். மனைவியின் முகத்தில் அமைதியை கண்டவனுக்குள்… நேற்றைய கோபம் அவனுள் மறுபடியும் வந்து அமர்ந்து விட… அதில் இவன் வேகமாய் தன் காலைக்கடன்களை எல்லாம் முடித்து மனைவிடம் வந்தவன்...

“ஷிதா... டிபன் வரும் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பு” என்க

அவ்வார்தையில் கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் போகலைங்க” இவள் உறுதியாய் மறுக்க

“இங்கே பார்... என்னைவிட என்னை காதலிக்கிறவளைத் தான் நான் எதிர்பார்த்தேன். அட்லீஸ்ட் என் காதலுக்கு ஈடாக கூட உன் காதல் இல்லை... இப்படி கடமைக்குன்னு என் கூட இருக்கிறவ எனக்கு வேண்டாம்… நீ கிளம்பு” அவன் இவளை விரட்டுவதிலே குறியாக இருக்க

கணவன் வைத்த குற்றச்சாட்டில் இவளுக்குள் கோபம் எழுந்தாலும் அமைதி காத்தவள் “அதாவது உங்க காதல் தான் உசத்தின்னு சொல்றீங்க... அப்படி தானே?” இவள் நிதானமாய் கேட்க

“ஆமாம்...” அவன் கர்வமாய் சொல்ல

‘என்ன ஒரு கர்வம்!’ இவள் தன்னுள் முணுமுணுத்த நேரம்

“நீ கிளம்பு டி...” அவன் அதிலேயே நிற்க

அவ்வளவு தான்… “என்ன… சும்மா சும்மா… கிளம்பு கிளம்புன்னு எண்ணையில் போட்ட அப்பளம் மாதிரி குதிக்கிறீங்க… நீங்க வான்னா வரவும்... போன்னா போகவும்… நான் என்ன நீங்க வளர்க்கிற நாயா? நானும் பேசக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்… நீங்க என்ன பேச வைக்கறீங்க” இவள் கோபத்துடன் சேரை விட்டு எழுந்திருக்கவும்

“என்ன டி.. ரொம்ப பேசற!” இவனும் எகிற

“அப்படி தான் பேசுவேன்... எனக்கு இப்படி சும்மா சும்மா சண்டை போடுறது பிடிக்கலை மிரு. உங்க பக்கத்தை நீங்க சொல்லிட்டீங்க இல்ல… இப்போ என் பக்கத்தையும் சொல்கிறேன்... கேளுங்க இதோ கொஞ்சம் இப்படி சேரில் உட்காருங்க” இவள் மென்மையாகச் சொல்ல

அவனோ வீம்பு பிடித்து நின்றிருந்தான். அதை ஒரு தோள் குலுக்கலுடன் அலட்சியம் செய்தவள்...
“எனக்கு பிடிக்கலை மிரு... நீங்க என் மேலே வைத்திருக்கிற காதல் பிடிச்சிருக்கு. ஆனா அதை இப்படி கர்வத்தோட ஒவ்வோர் செயலிலும் சொல்லிலும் காட்டுறீங்களே… அது தான் எனக்கு பிடிக்கலை. ஐந்து வருடம் என்னையும்.. நம் மகளையும் பிரிந்திருந்து உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்தால் உங்க காதல் உசத்தி சரி... அதை நான் ஏத்துக்கிறேன்... ஆனா எனக்கும் என் மகளுக்கும் நீங்க எப்படி தண்டனை கொடுக்கலாம்? அதை எங்களுக்கு கொடுக்க நீங்க யார்?”

மனைவியின் கேள்வியில், “என்னது! நான் உங்களுக்கு தண்டனை கொடுத்தேனா?” அதிர்ச்சியுடன் அவன் வாய் விட்டே கேட்க

“ஆமா... என்ன விடுங்க.. ஐந்து வயது வரை அந்தக் குழந்தை, அப்பா முகம் பார்க்காமல்... அவருடைய அரவணைப்பும்... பாசமும் அறியாமல் வளர்ந்திருக்கே.. அது மான்விக்கு தண்டனை இல்லையா? இதற்கு எல்லாம் நான் தான் காரணம்னு நீங்க சொல்லலாம்.
சரி… என் தப்பு தான். பதினேழு வயதிலே யோசிக்காமல் என் அவசரத்தால் புத்தி கெட்டு போய்… அன்று தப்பான முடிவு எடுத்துட்டேன். நீங்க என் கணவர் தானே என்னை திருத்தி… புரிய வைத்து வழி நடத்தி இருக்கலாமே… அதனால் நான் அனுபவித்தது கொஞ்சமா... நஞ்சமா... பெத்த அப்பாவே என்னை நம்பலை. சித்தியோ இன்னும் கேவலமா… அங்கு இருந்தவனுங்களை.. எத்தனை பேரோ...” இவ்வளவு நேரம் நிமிர்வாய் பேசியவள் தற்போது மேற்கொண்டு சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க அவள் கண்ணீர் சிந்த

“ஷிதா...” அடுத்த நொடி இவன் மனைவியை அணைக்க

“போ யா...” இவள் திமிர... அவன் பிடி இரும்பாய் இருக்கவும் அனு அடங்கி போனவளாக அவன் நெஞ்சில் தலை சாய்த்தவள் “அந்த நேரம் நான் மனசு ஒடிந்து தற்கொலை செய்திருந்தா... என்ன செய்து இருப்பீங்க மிரு.. இன்று நீங்க எனக்கான தண்டனை பற்றி யார் கிட்ட பேசி இருப்பீங்க... இல்லை உங்க காதல் தான் உசந்ததுன்னு மார் தட்டி இருப்பீங்களா?”

“ஏய்... என்ன டி... இப்படி எல்லாம் பேசுற?” அவள் சாவை பற்றி சொல்லவும் இவனுக்குள் பதறியது

“உண்மை தான் மிரு... அந்த இடத்தில் எந்தப் பெண்ணா இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பா... ஆனா நான் அப்படி செய்யலை. அது மட்டுமா? கழுத்தில் தாலி இல்லாமல் எத்தனை பேரோட குத்தல் பேச்சுக்கும்... கேலி பேச்சுக்கும் ஆளாகி இருப்பேன்? எல்லாவற்றையும் விட மசக்கை நேரத்திலே எனக்கு உடம்பு படுத்தும்... அந்த நேரம் என்னை மடி தாங்க என் தாய் தான் எனக்கு இருந்தாங்களா... இல்லை தாய் போல மடி தாங்குவேன்னு சொன்ன என் புருஷன் தான் இருந்தாரா?” இவள் கேவ

அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டை அடியாய் அவனுக்குள் விழவும்... “ஐயோ! செல்லம்மா... என்னை கொல்லாதே டி..” இவன் அரற்ற

“இவ்வளவையும் தண்டனையா அனுபவித்த எனக்கு தண்டனை பத்தாது தான் இன்னும் தாங்க.. திரும்ப தண்டனை கொடுங்க.. இவ்வளவு எனக்கு நடந்தும் உங்க மேலே நான் வைத்த காதலையே பற்றுக்கோளா எடுத்துகிட்டு... உங்க நிழல் உருவத்துடனேயே வாழ்ந்து காலம் தள்ளினேன் பாருங்க... அப்போ என் காதல் உசத்தி இல்ல தான்...

எனக்கு புரியலைங்க... கணவன் மனைவி மேல் வைக்கிற காதலும்... மனைவி கணவன் மேல் வைக்கிற காதலும் இரண்டுமே உசத்தி தாங்க! இதில் பிரித்துப் பார்த்துப் பேசினா என்ன அர்த்தம்?” இவள் அழுகையின் ஊடே கேள்வி கேட்க… இவனுக்கு சுருக் சுருக் என்று தைத்தது.

இதுவரை மிருடனிடம் யாரும் இப்படி எல்லாம் கேள்வி கேட்டதே இல்லை... எங்குமே அவன் பேச்சு தான் ஓங்கி நிற்கும். இன்று மனைவி அவன் யோசிக்காததை எல்லாம் எடுத்துச் சொல்ல... இவனோ உள்ளுக்குள் குமைந்தான். அவனுடைய கர்வம்… திமிர்... இதெல்லாம் அவனிடமிருந்து இதை எல்லாம் மறைத்து வைத்திருந்தது.

“என்ன செய்திட்டேன்... சுயநலமா என் காதல் தான் பெரிதுனு நினைத்து... என்னையும் என் குடும்பத்தை மட்டுமே பார்த்தேனே தவிர... என் காதலை மட்டுமே நம்பி வந்தவளை.. இப்படி தவிக்க விட்டுட்டேனே... என் செல்லம்மாவை நான் எப்படி எல்லாம் தவிக்க விட்டுட்டேன்” இவன் உள்ளுக்குள் குமுற

“எனக்கு உங்க காதல் வேணும் மிரு... இழந்த கடந்த காலங்களை... உங்க காதலோட நூறு வருஷம் நான் வாழணும்னு நினைக்கிறேன். ஆனா இப்படி கர்வத்தோட வெளிப்படுகிற உங்க காதல் எனக்கு வேண்டாம். அப்புறம் என்ன கேட்டீங்க… குணநாதன் என் விரோதின்னு தெரிந்திருந்தும் எப்படி அவர் பெயரை சொல்லலாம்னா.. நான் குணநாதன் பொண்ணுன்னு தெரிந்து தானே என்னை விரும்பி கட்டிகிட்டீங்க? அப்ப அவர் என் அப்பா தானே? பிறகு அவர் பெயரை சொல்லக் கூடாதுன்னு சொன்னா எப்படி?

அவர் செய்தது மகா பாவம் தான்... அநியாயம் தான். உங்களுக்கு மட்டுமில்லை… பல பேருக்கு துரோகி தான். நான் அது எதிலுமே மாற்றுக் கருத்து சொல்ல வரலை. ஆனா எனக்கு அவர் அப்பா... அதிலும் பதினேழு வயது வரை என்னை பாசமா வளர்த்த அப்பா அவர். ஐந்து வயது வரை முகம் பார்க்காத உங்க மகளை நீங்க விட்டுக் கொடுக்க மாட்டீங்க.... உங்க பாசமே அறியாம வளர்ந்த அவளும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்றா. ஆனா நான் மட்டும் பதினேழு வயது வரை வளர்த்த என் அப்பாவை விட்டுக் கொடுக்கணும்! அது எப்படி மிரு?”

மனைவி கேள்வியில்...
“செல்லம்மா… போதும் டி” இவன் மனைவியை இறுக்க அணைத்துக் கொள்ள

அவன் அணைப்பில் அடங்கினாலும், “உங்க உண்மை எல்லாம் தெரிகிற வரை... என் அப்பா என்னை தப்பா நினைத்தாரேன்னு தினந்தினம் துடித்து இருக்கேன். அந்த உண்மையை எல்லாம் நீங்க முன்னமே சொல்லி இருக்கலாமே மிரு. அப்பாவை விடுங்க… என் மனக் குமுறலாவது அடங்கி இருக்கும் தானே?”

“அய்யோ! செல்லம்மா… போதும் டி... என்னை மன்னிச்சிடு டி. சாரி டி... சாரி டி... என் செல்லம்மாவை நான் எப்படி எல்லாம் துடிக்க விட்டிருக்கேன்... என்னை மன்னிச்சிடு செல்லம்மா” இவன் உளமார மன்னிப்பு கேட்க...

என் அவசரத்தால் நான் இழந்தது அதிகம் மிரு... அப்படி இழந்த பிறகும் எனக்கு பக்குவம் வரலனா.. எப்படி... அந்த பக்குவம் தான் இவ்வளவு தெளிவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் உங்களிடம் பேச வைக்குது...
போங்க… செய்யறதை எல்லாம் செய்துட்டு மன்னிப்பாம்... விடு யா” என்று திமிறியவளின் மனதில் ஏனோ முன்பிருந்த கோபம் இல்லை.

அதை அறிந்தவன், “ஆனாலும் நீ இவ்வளவு அறிவாளியா இருக்கக் கூடாது டி. எனக்கு இந்த அறிவாளி பொண்டாட்டி வேண்டாம்… மக்கு பொண்டாட்டி தான் வேணும்” அவனும் இலகுவாய் சொல்ல…

இது தான் மிருடவாமணன் அவனுக்குள் வருத்தம் இருக்கு... வேதனை இருக்கு… வலி இருக்கு… கஷ்டம் இருக்கு... துயரம் இருக்கு... செய்த தவறால் குற்ற உணர்ச்சியும் இருக்கு... அதற்காக அழுது கரைந்து உருக எல்லாம் மாட்டான்... இவ்வளவு தான் இவன்...

கணவன் அசந்த நேரம் பார்த்து அவனை நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டவள், “நீங்க மட்டும் இல்லை... உலகத்தில் எல்லா ஆண்களும் இப்படி தான் இருக்கீங்க... கேள்வி கேட்கிற மனைவி எல்லாம் அடங்காப் பிடாரி! அமைதியா போறவ எல்லாம் நல்லவ! கூடவே மக்கு பொண்டாட்டி என்ற பட்டம் வேற கொடுப்பீங்க... நான் எல்லாம் கேள்வி கேட்பேன் தான்... போங்க”

“அடி ஏய்... ஒரு நாளே மனுஷனுக்குத் தாங்கலை டி. வேண்டாம் டி... நீ மக்கு பொண்டாட்டியாவே இரு டி” இவன் நீரில் நீச்சல் அடித்த படியே சொல்ல

“முடியாது” இவள் தலையை சிலுப்பிக் கொண்டு முன்னே நடக்க

“மக்கு பொண்டாட்டி... ஐ லவ் யூ.. ஐ லவ் யூ... ஐ லவ் யூ டி… எனக்கு இந்த மக்கு பொண்டாட்டி தான் வேணும்…” இவன் சமாதானத்தில் இறங்க


“நீங்க என்ன சொன்னாலும் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்... போ யா...” என்றவள் இந்தியாவிற்கு கிளம்ப தன் பெட்டிகளை கட்டினாள் அனுதிஷிதா.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN