குறிப்பேடு 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிவா தினேஷை தூரமாக விலக்கி தள்ள முயன்றான்.

"எனக்கு சாந்தவின்னா யாருன்னு கூட தெரியாது.. என்னை விடு.." என்று கத்தினான்.

தினேஷின் பிடி இறுகி கொண்டே இருந்தது. "நீதான் என் சாந்தவியை என்கிட்ட இருந்து பிரிச்ச.. நான் உன்னை கொல்லாம விட மாட்டேன்.." என்று கர்ஜித்தான். அவன் மீதிருந்து வீசிய பிண வாடை சிவாவிற்கு குமட்டலை தந்தது.

சிவா கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் கதவை படாரென்று திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் வசந்தன். தன் கையிலிருந்த துப்பாக்கியால் தினேஷின் பின்னந்தலையில் சுட்டார்.

தினேஷின் தலையில் குண்டு பாய்ந்தது. ரத்தம் கசிந்தது. தினேஷ் அவரை திரும்பி பார்த்தான்.

"உன்னால என்னைக்கும் சாந்தவியை அடைய முடியாது.." என்ற வசந்தன் மீண்டும் தினேஷை சுட்டார்.

தினேஷின் முன் நெற்றி பொட்டில் பாய்ந்தது அந்த துப்பாக்கி குண்டு. தினேஷ் கவிழ்ந்து விழுந்தான் தரையில்.

பயந்து போய் நின்றிருந்த சிவாவின் கையை பற்றி தன்னருகே இழுத்தார் வசந்தன்.

"வா இங்கிருந்து போயிடலாம்.." என்றார்.

"என் பிரெண்ட் செத்துட்டான் அங்கிள்.." கவலையோடு சொன்ன சிவாவை அவர் கவனிக்கவில்லை. தரையில் விழுந்து கிடந்த டைரியை எடுத்துக் கொண்டார். சிவாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

சிவா பயத்திலும் குழப்பத்திலும் இருந்தான். "இவன் செத்துட்டான்தானே அங்கிள்.? அப்புறம் எப்படி இங்கே வந்தான்.? அதுவும் எப்படி உயிரோடு இருக்கான்.?" என்றான்.

"அவன் எப்படி உயிரோடு வந்தான்னு தெரியல சிவா.. எல்லாம் இந்த டைரியால வந்தது. இதை அழிச்சிட்டா எல்லாம் சரியா போயிடும்.." என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தவன் அவரின் கையில் இருந்த டைரியை பிடுங்கினான். "இதுல என்னோட வரலாறு இருக்கு.." என்றான்.

வசந்தன் அவனை முறைத்தார். "இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முட்டாளே..‌ இது எல்லாம் பொய்.. உன்னை மயக்குது இந்த வார்த்தைகள்.. உன் நிகழ் காலத்தை வாழவே நேரம் இல்லாத உனக்கு எதுக்கு கற்பனையான இறந்த காலம்.?" என்றார் கோபத்தோடு.

"அப்புறம் எப்படி நீங்க மட்டும் சாந்தவியை உன்னால அடைய முடியாதுன்னு அவன்கிட்ட சொன்னிங்க.?"

"அதுதான் சொன்னேனே.! இந்த டைரி நம்மளை மயக்குதுன்னு.!"

சிவாவிற்கு எதுவுமே சரியாக விளங்கவில்லை. "இது பொய்யுன்னு சொல்றிங்களா.?" என்றான்.

காரை வேகமாக ஓட்டிய வசந்தன் பெருமூச்சு விட்டார்.

"எனக்கும் சரியா தெரியல.. ஆனா விலகி இருக்கணும்ன்னு தெளிவா தெரியுது.‌." என்றார்.

"தினேஷ் இறந்துட்டான்.." என்றபடி சீட்டில் பின்னந்தலையை சாய்த்தவன் தன் கையில் இருந்த டைரியை வெறித்தான். "இந்த டைரிதான் எல்லாத்துக்கும் காரணம்.. இதை அவன் திறந்ததாலதான் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்கு.." சோர்ந்து போய் சொன்னான்.

"அவன் பேயா.? இல்ல ஜோம்பியா.?" குழப்பத்தோடு அவன் கேட்ட நேரத்தில் வீடு வந்து விட்டதால் காரை பிரேக்கடித்து நிறுத்தினார் வசந்தன்.

"எனக்கு மட்டும் எப்படி தெரியும்.? நான் வராம இருந்திருந்தா இன்னேரம் அவன் உன்னை கொன்னிருப்பான்னு மட்டும் தெரியும்.." என்றவர் காரை விட்டு கீழே இறங்கினார். சிவாவும் தொடர்ந்து இறங்கினான். கார் சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்த யாழினி சிவாவை முறைத்தாள்.

யாழினியை நிமிர்ந்து பார்த்திருந்த சிவா வசந்தனின் சொற்களால் மேலும் குழம்பினான். "அவன் என்னை கொல்ல போறான்னு உங்களுக்கு எப்படி தெரியும்.?" என்றான்.

வசந்தன் நின்றார். அவனை திரும்பி பார்த்தார். "தினேஷோட பாடியை ஹாஸ்பிட்டல்ல காணோம்ன்னு என்னோட டாக்டர் பிரெண்ட் போன் பண்ணியிருந்தாரு. என்னோட மைன்ட்ல அவன் உன்னை உன் வீட்டுல வச்சி கொல்லுவதை போல சீன் வந்துட்டு போச்சி.." என்றவர் சொன்னது இப்போதும் அவனுக்கு விளங்கவில்லை.

"ஆனா அவன் என்னை கொல்லுவான்னு நீங்க எப்படி நம்புனி.." சிவா முழுதாக சொல்லும் முன்பு "நானும் இந்த டைரியை படிச்சேன் சிவா.. யாழினி ரூம்க்குள்ள போன போது இந்த விளங்காத டைரியை ஆர்வ கோளாறுல திறந்து பார்த்தேன்‌. அதை வச்சிதான் உன்னை அவன் கொல்ல வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.." என்றார் அடிக்குரலில்.

சிவா எச்சில் விழுங்கினான். "சிவா.." என்றபடி ஓடி வந்தாள் யாழினி. "உன் நெத்தியில என்ன காயம்.?" என்றாள் பரிவோடு.

சிவா நெற்றியை தொட்டு பார்த்தான். நெற்றி எரிந்தது. தினேஷ் தூக்கி வீசுகையில் காயம் ஏற்பட்டிருக்கும் போல என்பதை புரிந்துக் கொண்டான்.

"கீழே விழுந்துட்டேன்.." என்று சமாளித்த சிவா வசந்தனை தொடர்ந்து நடந்தான். "இனி நாம என்ன பண்றது அங்கிள்.?" என்றான்.

"இந்த டைரியை எரிச்சிடலாம்.." என்றார் அவர். யாழினியும் சிவாவும் ஒரே நேரத்தில் மறுப்பாக தலையசைத்தனர். "இல்ல.. வேண்டாம்.." என்றார்கள்.

வசந்தன் அவர்கள் இருவரையும் முறைத்தார். "இந்த டைரி நம்ம மூணு பேரையும் பழி வாங்கிய பின்னாடிதான் உங்களுக்கு விசயத்தோட தீவிரம் புரியுமா.?" என்று திட்டினார்.

"இந்த டைரியை படிச்ச போது உங்களுக்கு என்ன தெரிஞ்சது.?" யாழினி சந்தேகத்தோடு கேட்டாள்.

வசந்தன் சில நொடிகள் மௌனம் காத்தார். "நான் உன்னோட அப்பாவா இருந்தேன் இந்த டைரியில.." என்றார் நிமிர்ந்து. யாழினிக்கு உடல் சிலிர்த்ததுக்கு அடையாளமாக கையிலிருந்த முடிகள் நேர் குத்தி நின்றன. இமைகளை மூடி திறந்தாள். தந்தையை அணைத்துக் கொண்டாள். "லவ் யூ டாடி.." என்றாள் பாச மிகுதியோடு.

"நீ எப்பவும்தான் என்னை லவ் பண்ற.. வா வீட்டுக்குள்ள போகலாம்.." என்றவர் வீட்டை நோக்கி நடந்தார். தன் அறைக்குள் வந்த பிறகு கதவை சாத்தி விட்டு மற்ற இருவரையும் பார்த்தார்.

"இந்த டைரி மாய சக்தி உள்ளதுதான். நான் அதை மறுக்கல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக காட்சியை காட்டுது. ஆனா இதை நம்மால கொண்டாட முடியாது. இதோட முதல் பக்கத்துல என்ன எழுதியிருந்ததுன்னு நீங்களும் படிச்சிதான் இருப்பிங்க. தினேஷை போல செத்துப்போய் ஜோம்பியா சுத்துவதை விட இதை எரிச்சிடுறது எவ்வளவோ மேல்.." என்று விளக்கினார்.

யாழினியின் முகம் கலவரமானது. "தினேஷ் ஜோம்பியா மாறிட்டானா.?" என்றாள்.

வசந்தன் ஆமென்று தலையசைத்தார். "நாம இந்த டைரியை வச்சிருக்க கூடாதுங்கறதுக்கு உதாரணம்தான் தினேஷ்.. இதை அழிச்சிடலாம்.." என்றார்.

"இல்ல வேணாம்.. இது அத்தனையும் மாயைன்னா நம்மால தினேஷை உயிரோடு கொண்டு வர முடியும்தானே.?" என்று சந்தேகத்தோடு கேட்டான் சிவா.

"ரிஸ்க் எடுக்க வேணாம். இது பர்ஸ்ட். செத்தவங்க எப்பவும் உயிரோடு வரவே மாட்டாங்க. இது செகண்ட் ரீசன்.." என்று வசந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டைரியை திறந்தாள் யாழினி.

"யாழினி.." அவளிடமிருந்து டைரியை பிடுங்க வந்த வசந்தன் அதில் இருந்ததை கண்டு அனிச்சை செயலாக படிக்க ஆரம்பித்தார். அந்த டைரியே அவரை படிக்க வைத்தது என்றும் சொல்லலாம். சிவாவும் அவர்களின் அருகே வந்து அவற்றில் இருந்ததை படிக்க ஆரம்பித்தான்.

சாந்தவி பெருமூச்சி வாங்கி கொண்டிருந்தாள். மாலை பொழுது மங்கி கொண்டிருந்தது. தன் முன் இருந்த மரத்தை வெறித்து பார்த்தாள். அவளின் அருகே இருந்த கூடையில் இருந்த கத்திகள் பாதி தீர்ந்து விட்டிருந்தன. கோபத்தோடு இன்னும் ஒரு கத்தியை எடுத்து மரத்தை நோக்கி விசிறினாள். ஏற்கனவே துளைத்திருந்த கத்திகளை போலவே இந்த கத்தியும் சென்று மரத்தை குத்தி நின்றது. பச்சை பாலை மரம் இவளின் ஒவ்வொரு கத்திக்கும் தன் பாலை கண்ணீரை வடித்தது.

'சாந்தவி உன்னை என் அரண்மனை ராணியாய் ஆக்க நினைக்கிறேன். நீ என் ஆசைக்கு இணங்க மறுத்தால் உன்னை என் அந்தபுர பணிப்பெண்ணாக மாற்றுவேன்‌‌..' என்று மிரட்டிய மரகதனின் குரல் இன்னும் ஒரு முறை நினைவிற்கு வந்தது.

சாந்தவி நினைவில் இருந்த அவனின் குரலை அழிக்க நினைத்து மீண்டும் கத்தியை எடுத்து எறிந்தாள். அவளின் மேனியை சுற்றியிருந்த சேலை காற்றில் அசைந்தது.

கோபத்தை அவளால் குறைக்க முடியவில்லை. அதற்காகதான் இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தாள். அந்த பாலை மரத்தை மரகதனின் உருவமாக நினைத்துதான் அந்த கத்திகளை எறிந்துக் கொண்டிருந்தாள்.

சாந்தவிக்கு எப்போதும் கர்வம் கிடையாது தன் அழகை நினைத்து‌. அவளின் வாழ்வு கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டிருந்தது. தந்தையை போலவே தானும் பெண் சித்தராக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவள். மனதில் புகுந்து விட்ட அமுதனையே எப்படி அந்த மனதிலிருந்து விரட்டுவது என்று யோசனையில் இருப்பவள். இந்த நிலையில் மரகதனின் தொல்லை அவளை அதிகமாகவே கோபப்படுத்தி விட்டது.

"சாந்தவி.." அவள் கத்தி எறிவதை நிறுத்துவது போல கேட்டது தந்தையின் குரல். திரும்பி பார்த்தாள். சங்கீதவரன் அவளை நோக்கி வந்தார். அவளின் கையில் இருந்த கத்தியை கண்டு வியந்தவர் எதிரே இருந்த பாலை மரத்தை கவனித்தார். மகளின் செயலுக்கான காரணத்தை அவரால் அறிய முடியவில்லை.

"என்ன மகளே செய்கிறாய்.?" என்றார்.

"ஆபத்திற்கு உதவுமென்று கத்தி வீச்சு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் தந்தையே.." என்றவளின் முன் தலையை வருடி விட்டார் அவர்.

"தற்காப்பு எப்போதும் முக்கியம் மகளே.." என்றார்.

"என்னை தேடினார்களா தந்தையே.? ஏன்.?" என்றவள் பாலை மரத்தின் அருகே சென்று அதில் பதிந்திருந்த கத்திகளை பிடுங்கி கத்திகள் இருந்த கூடையில் போட்டாள்.

"சாந்தவி.. நம்முடைய மன்னர் உடல் நலமில்லாமல் இருப்பதாக சேதி வந்துள்ளது. இந்நாட்டின் மூலையில் வாழும் முனிவனான எனக்கும் கூட அவர் தேவையான அனைத்தையும் வழங்கியுள்ளார். அவர் தந்த செல்வத்தால்தான் உன்னை நான் சிறப்போடு வளர்த்தினேன். அவருக்கு நாமிருவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அதனால் அவரின் இந்த கடைசி நாட்களில் நாமும் சென்று அவரின் முகம் பார்த்து வரலாமா.?" என்றார் சங்கீதவரன்

சாந்தவி கத்திகளை சேகரிப்பதை விட்டுவிட்டு தந்தையை பார்த்தாள். "உங்களின் மருத்துவதால் அவரை சரி செய்ய இயலாதா தந்தையே.?" என்றாள் சந்தேகத்தோடு. இறப்பின் பிடிக்கு சென்றவனை கூட திருப்பி கொண்டு வரும் சக்தி படைத்த தன் தந்தை ஏன் மன்னரை காப்பாற்ற முயலவில்லை என்று யோசித்தாள் அவள்.

சங்கீதவரன் முகம் வாடி போனது. "என்னை வைத்தியம் செய்ய விடவில்லை மகளே.. இளவரசர்கள் வெளிநாட்டு மருத்துவர்களை அரண்மனையில் குவித்துள்ளனர். நானாக சென்று கேட்டும் கூட மன்னருக்கு மருத்துவம் பார்க்க விடவில்லை.."

சாந்தவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அரண்மனையில் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.

இருள் கவிந்த வேளையில் சங்கீதவரனும் சாந்தவியும் அரண்மனைக்கு சென்றனர். அரண்மனை வாயிற் காப்பாளர்கள் சங்கீதவரனை பார்த்து தலை வணங்கினார்கள். இவர்கள் இருவரும் மன்னரை காண வந்துள்ளதை பற்றி இளவரசர்களிடம் சென்று தகவல் சொன்னார்கள்.

மூன்றாம் இளவரசர்‌ அரண்மனையின் வாயிலுக்கு ஓடி வந்தான். "வாருங்கள் முனிவரே.. வெகு நேரம் காத்திருக்க வைத்திருந்தால் மன்னியுங்கள் எங்களை.." என்றான் பணிவான குரலில். சாந்தவியை ஆச்சரியத்தோடு பார்த்தான். அரண்மனை பக்கம் வந்திராத முனிவனின் மகள் இன்று இங்கே வந்தது அதிசயம் போல இருந்தது அவனுக்கு.

'தந்தை மீதான பணிவு இன்னும் மாறவில்லை. பிறகு ஏன் மருத்துவம் பார்க்க மட்டும் தடை.?' என்று குழப்பத்தில் இருந்தாள் சாந்தவி.

இளவரசன் முன்னால் நடந்தான். அவனின் பின்னால் நடந்தனர் சங்கீதவரனும் சாந்தவியும்.

அரண்மனைக்குள் ஓரிடத்திற்கு வந்தவுடன் சாந்தவியை கை காட்டி நிறுத்தினான் அந்த அறையை பாதுகாத்து நின்ற சேவகன். "அன்னிய பெண்கள் அந்தப்புரத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.." என்றான்.

இளவரசன் திரும்பி வந்தான்‌. "இவர் முனிவரின் மகள். எதிர்கால முனியாக இருப்பவர். இவருக்கு அந்தப்புரத்திற்குள் நுழைய அனைத்து அதிகாரமும் உள்ளது.." என்ற இளவரசன் சாந்தவியை பார்த்து மன்னிப்பு கோரும் பார்வை பார்த்தான்.

'என்னை பற்றி இவருக்கு தெரிந்துள்ளது. பிறகேன் மரகதனுக்கு மட்டும் தெரியவில்லை. இல்லை அனைத்தும் தெரிந்துதான் என்னிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறானா.?' என்று குழம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN