குறிப்பேடு 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாந்தவி யோசனையில் நின்றிருந்த நேரத்தில் அவளின் கைப்பறி அழைத்துக் கொண்டு மன்னர் இருந்த அந்தப்புரத்திற்குள் நுழைந்தார் சங்கீதவரன்.

மன்னர் கண்களை மூடி படுத்திருந்தார். பாதியாக இளைத்து விட்டிருந்தார். வருடங்கள் கடந்து பார்ப்போருக்கு அடையாளம் கூட தெரியாது.

"மன்னா.." வருத்தமாக அழைத்தபடி சென்று அவரின் அருகே அமர்ந்தார் சங்கீதவரன். மன்னர் சில நொடி அசைவுகளுக்கு பிறகு கண்களை திறந்தார். முனிவரை பார்த்து புன்னகைக்க முயன்றார். சாந்தவி மன்னரின் காலோரத்தில் நின்றிருந்தாள். முனிவரிடமிருந்து விடைபெற்று அலை பாய்ந்த மன்னரின் பார்வை சாந்தவியின் முகத்தில் வந்து நின்றது. அவளை கண்கள் சிமிட்டாமல் பார்த்தார்.

"சாந்தவி அல்லவா.?" என்றார் முனிவரிடம் திரும்பி. சங்கீதவரன் ஆமென தலையசைத்தார்.

"இன்றைக்கேதான் அரண்மனைக்கு வந்துள்ளாள். ஆனால் அவளை அன்போடு வரவேற்க கூட சக்தியில்லாமல் படுத்திருக்கிறேன் நான்.." வருத்தமாக சொன்னார் மன்னர். மன்னருக்கு தன் மேல் இவ்வளவு பாசம் உள்ளது என்பதையே சாந்தவி இப்போதுதான் அறிந்தாள்.

"இவளுக்கு வேண்டிய மரியாதைகளை நான் செய்கிறேன் அப்பா.." என்றான் அவர்களை உள்ளே அழைத்து வந்த இளவரன். அதே நேரத்தில் பக்கவாயிலிலிருந்த மற்ற இளவரசர்களும் உள்ளே வந்தார்கள். அவர்களின் இடையே மரகதனும் நின்றிருந்தான். சாந்தவியை ஆச்சரியமாக பார்த்தான். அவனின் பார்வையை கண்டதும் சாந்தவி முகத்தை திருப்பிக் கொண்டாள். சாந்தவியின் முக கோணலை உடனடியாக பார்த்துவிட்ட முதல் இளவரசன் கடைசி தம்பியை குழப்பமாக பார்த்தான்.

"நீங்கள் நல்லபடியா குணமாகணும்ன்னு ஆசைப்படுறேன் மகாராஜா.." என்றார் சங்கீதவரன்.

மன்னர் மறுப்பாக தலையசைத்தார். "நான் பிழைக்க மாட்டேன் முனிவரே.. எமன் அறை வாயிலில் எனக்காக காத்திருக்கிறான். பாச கயிறை எப்போது வேண்டுமானாலும் வீசி விடுவான். எனக்கு பிறகு மூத்தவன் அரியணை ஏற இருக்கிறான். அவனுக்கு நீங்களும் பக்க பலமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் நான். நாட்டை நல்வழிப்படுத்த இளவரசர்களுக்கு துணையாக இருங்கள். காடு மலை செழிக்க மழை தேவை மழைக்கான யாகத்தை அவ்வப்போது நடத்துங்கள்.." என்றவர் மூத்தவனின் பக்கம் திரும்பினார். "முனிவர் நமது நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். கடவுளை தவிர வேறு எண்ணம் இல்லாதவர். இவரின் மகளும் அவளின் வாழ்வை சன்னியாசத்திற்கே அர்ப்பணித்தவள். அவளுக்கு எந்த குறையும் வராதபடி பார்த்துக் கொள்.." என்றார்.

இதை கேட்டு மரகதனின் முகம் மாறியது. சாந்தவியை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"சாந்தவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம் தந்தையே.. நீங்கள் இதை நினைத்துக் கவலைக் கொள்ளாதீர்கள்.." என்றான் இரண்டாமவன்.

மன்னர் சரியென்று தலையசைத்தார்.

சாந்தவியும் அவளின் தந்தையும் அரண்மனையை விட்டு புறப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நடந்தான் மரகதன்.

ஊரின் எல்லையோரம் இருந்த ஆசிரம குடிலுக்கு வந்தனர் முனிவரும் சாந்தவியும். முனிவர் குடிலுக்குள் புகுந்தார். சாந்தவியின் பின்னால் தொடர்ந்து வந்திருந்த மரகதன் "சாந்தவி.." என்று அழைத்தான்.

சாந்தவி தன் தந்தையை பார்த்தாள். அவர் குடிலுக்குள் புகுந்து விட்டதால் இவர்களை பார்க்கவில்லை. சாந்தவி இளவரசனின் புறம் திரும்பினாள்.

"என்ன வேண்டும் இளவரசே.?" என்றாள்.

"உன் வாழ்வை சன்னியாசத்திற்கு அர்ப்பணித்துள்ளது உண்மையா.?" என்றான் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தபடி.

"ஆமாம் இளவரசே.. ஆண்டவனை தவிர வேறு யாரையும் மனதில் நினைக்க இயலாது என்னால்.." என்றவளின் கையை பற்றியவன் "அப்படி சொல்லாதே.. நீ இல்லாத வாழ்வு எனக்கு கசப்பானது. நீ எனக்கு உயிராக வேண்டும். என் உடலாகவும் நீயே வேண்டும்.. உன் மனதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்.. இந்த நாட்டையே கூட தலைகீழாக புரட்டுகிறேன்.. ஆனால் என்னை மட்டும் மறுத்து விடாதே.." என்றான் கெஞ்சலாக.

சாந்தவி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள். தனது கையை விலக்கி கொண்டாள். "என்னால் முடியாது இளவரசே.. நீங்கள் இந்த நாட்டையே நிர்வகிக்க கூடியவர். பெண் மீது பித்து கொள்வது நல்லதல்ல. அப்படி பித்து ஏற்பட்டால் அதற்கு வேறு ஆயிரம் பெண்கள் உள்ளார்கள். அவர்களை பாருங்கள். என்னை விட்டு விடுங்கள்.." என்றவள் 'நானே என் மனதில் உள்ளவரை விரட்டும் வழி தெரியாமல் வாடி கொண்டிருக்கிறேன்..' என்று புலம்பலாக நினைத்தபடி குடிலை நோக்கி திரும்பினாள்.

"என் அன்பை தவறாக எடை போடாதே சாந்தவி.. உன் அன்பை பெற நான் எதுவும் செய்வேன்.." என்றவனை கோபத்தோடு பார்த்தவள் "கட்டாயத்தால் ஒரு பெண்ணை பணிய வைப்பதே தவறு. இதில் கடவுளுக்கு அர்ப்பணிக்கபட்ட பெண்ணை சொந்தம் கொண்டாட நினைப்பது மாபெரும் தவறு.." என்று கடுமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

வீட்டின் காலிங்பெல் சத்தமாக ஒலித்ததில் மூவரும் டைரியை கீழே விட்டனர். ஒருவரையொருவர் முகம் பார்த்தனர்.

"ஐந்தாம் இளவரசன் தினேஷ்.. சரியா.?" என்றார் வசந்தன்.

ஆமென தலையசைத்த சிவா "ஆனா கடவுளுக்கு நேர்ந்து விட்ட பெண் ஏன் என்னை விரும்பினாள்.?" என்றான் யாழினியை பார்த்து.

யாழினி தலை குனிந்தாள். இறந்த காலத்தில் வாழ்வது போலவே இருந்தது. "தெரியல.." என்றாள் சிறு குரலில்.

"சரி விடுங்க அதை.. இப்ப யார் வந்திருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்.." என்ற வசந்தன் அறையை விட்டு வெளியே நடந்தார்.

வாசலில் சதாசிவம் நின்றிருந்தார்.

"வாங்க சார்.." என்று உள்ளே அழைத்து வந்தார் வசந்தன்.

யாழினியையும் சிவாவையும் பார்த்தவர் "தினேஷோட பாடியை காணோம்.. உங்களுக்கு தெரியுமா.?" என்றார்.

சிவா நடந்ததை சொன்னான்.

"ஏன் என்கிட்ட சொல்லல.?" கோபத்தோடு கேட்டார் சதாசிவம். "பயமா இருந்தது சார்.. ஜோம்பி மாதிரி இருந்தான் அவன். அவனை பார்த்த செகண்டே இன்னும் கொஞ்ச நேரத்துல நாம சாக போறோம்ன்னு நினைச்சிட்டேன்.." என்று தன் பயத்தை விளக்கி சொன்னான் சிவா.

"உங்க வீட்டுல பாடி இருக்கா.?" என்று கேட்டவரிடம் ஆமென தலையசைத்து உறுதிப்படுத்தினான். சதாசிவம் தன் போனை எடுத்து கான்ஸ்டபிள் ஒருவருக்கு அழைத்தார். "சிவாவோட வீட்டுல தினேஷோட பாடி இருக்கான்னு செக் பண்ணி பாருங்க.. அப்படி இருந்தா உடனே அந்த பாடியை கொண்டு போய் மார்ச்சுவரியில சேர்த்துடுங்க.." என்றார்.

அவர் போனை வைத்த நேரத்தில் முஸ்தபா போன் செய்தார். "சார் அந்த பையனோட பாடி இங்கே பிரேத மலையில் இருக்கு.." என்றார்.

"நாங்க உடனே வரோம் முஸ்தபா.." என்றுவிட்டு போனை வைத்த சதாசிவம் மீண்டும் அந்த கான்ஸ்டபிளுக்கு போன் செய்து தான் வைத்த வேலையை செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

"அந்த பாடி இப்ப பிரேத மலையில் இருக்கு. நாம என்ன செய்றது.? நீ சொன்ன மாதிரி அவன் ஜோம்பியா மாறி இருந்தா நம்ம உலகமே தலைகீழா மாறிடும். அதனால நீ சொன்னது பொய்யாவே இருக்கட்டும்.." என்றவரை கோபமாக பார்த்த சிவா தன் கழுத்து பகுதியையும் கை பகுதியையும் காட்டினான். "அவன் என்னை தூக்கி வீசிட்டான் சார்.. அதனால உண்டான காயம்தான் இதெல்லாம்.." என்றவனிடம் "நீங்க சொல்ற அத்தனையும் கேட்க நல்லாருக்கு சிவா.. இந்த டைரியை படிக்க கூட நல்லாருக்கு. ஆனா நம்பதான் மனசு வரல.. நான் பக்கா பகுத்தறிவுவாதிப்பா.." என்றார்.

"அப்படின்னா போஸ்ட்மார்ட்டம் ரூம்ல இருந்த பாடி எப்படி எங்க வீட்டுக்கு வந்தது.? இப்ப எப்படி அது பிரேத மலையில் இருக்கு.?" என்றான் சிவா.

"இங்கேதான் யாரோ குறுக்கே புகுந்து விளையாடுறாங்கன்னு நினைக்கிறேன்.. தினேஷோட பாடியை கொண்டு வந்து உன் வீட்டுல போட்டவங்களேதான் இப்ப அந்த பாடியை கொண்டு போய் பிரேத மலையில் போட்டிருக்கணும்.. இது எல்லாமே கண்கட்டி வித்தை.. நான் குருதி நதிக்கரையில் இருந்த போது கூட ஒருத்தன் பன்னிரெண்டு அடி உயரத்துல ரத்தம் வழிய நடந்து போனான்.. நானே இங்கே வரும் வரைக்கும் அதை நினைச்சிதான் பயந்துட்டு இருந்தேன். ஆனா யோசிச்சி பார்த்தபிறகுதான் இது எல்லாமே கண்கட்டி வித்தையா இருக்க சான்ஸ் இருக்குன்னு புரியுது.." என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தனர் மற்ற மூவரும்.

"சரி நியாயமா பதில் சொல்லுங்க.. நானும் எங்க அப்பாவும் அரண்மனையை விட்டு வந்த கொஞ்ச நேரத்துலயே நீங்க செத்துட்டிங்க.. அப்ப என்னதான் ஆச்சி.?" என்றாள் யாழினி.

"இந்த டைரியே கண்கட்டி வித்தைதான்ம்மா.. இது நம்ம மனசை ஏமாத்துது.. நேத்து வரை நீங்க யாரோ நான் யாரோ.. ஆனா இன்னைக்கு நான் மன்னன்.. இவர் முனிவர்.. இவர் படைவீரன்.. நீ என்.." என்றவர் அத்தோடு நிறுத்திவிட்டு அவர்களை பார்த்தார். "ஒன்னு கூட நம்பும் படியாக இல்ல.." என்றார் சலிப்போடு.

அவர் எதையோ மறைத்ததை வசந்தன் மட்டுமே அறிந்திருந்தார்.

யாழினி தரையில் இருந்த டைரியை கையில் எடுத்தாள். "உண்மையோ பொய்யா.. கற்பனையோ கண்கட்டி வித்தையோ.. நாம இதுல இருந்து தப்பிச்சாகணும்.. எனக்கு அது மட்டும்தான் சொல்ல தோணுது.. தினேஷை போல சாக நினைக்கல நான்.." என்றாள்.

அவளை தன் பக்கம் திருப்பினான் சிவா. "இந்த டைரியை வச்சி தினேஷை உயிரோடு கொண்டு வந்துடலாம்.." என்று மென்மையாக சொன்னான்.

"முட்டாளா நீ.? செத்தவன் எப்போதாவது உயிரோடு வந்திருக்கானா.?" என்று திட்டினார் வசந்தன். அவருக்கு ஏன் தினேஷ் மீது இவ்வளவு வெறுப்பு என்று சதாசிவத்திற்கு புரியவில்லை.

"முஸ்தபாவை குருதி நதிக் கரையில் விட்டுட்டு நான் மட்டும் இங்கே ஓடி வர காரணமே தினேஷோட பாடியை கண்டுபிடிக்கதான்.. இப்ப பாடியே அங்கே இருக்கு.. அதனால நான் அங்கே திரும்ப போறேன்.. நீங்க எல்லோருமே காத்திருங்க.. தினேஷோட கொலையில் சம்பந்தப்பட்டவங்க உங்க மூணு பேர்ல ஒருத்தரா இருக்கும்ன்னுதான் எனக்கு தோணுது.." என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

"இவர் என்ன லூசா.? அவனை ஏன் நாம கொல்ல போறோம்.?" என்று திட்டிய வசந்தன் மகளை முறைத்தார். "கண்ட கழிச்சடையையும் லவ் பண்ண போய்தான் இன்னைக்கு இந்த நிலமை.." என்று திட்டினார்.

அவர் சொன்னது சிவாவிற்கு நெருப்பாக சுட்டது. "அந்தஸ்தை காரணம் காட்டி திட்டாதிங்க சார்.. அவன் மனசுக்கு முன்னால உங்க பணமெல்லாம் குப்பை.." என்றான்.

"உன்னையே கொல்ல வந்தானே கொஞ்ச நேரம் முன்னாடி.. அப்படிதானே.?" என கேட்டவர் "நான் மந்திரவாதி யாரையாவது வர வைக்கிறேன்.. நீ அதுவரைக்கும் வீட்டை விட்டே வெளியே போக கூடாது.." என்று மகளுக்கு கட்டளையிட்டார்.

சிவா யாழினியை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வெளியே நடந்தான். தன் வீட்டிற்கு வந்தான். அவன் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. கதவை திறந்தான். இருட்டாக இருந்த ஹாலில் விளக்கு எரிய விட்டான். அவன் சில மணி நேரங்கள் முன்பு அடி வாங்கிய இடம் பழைய படி இருந்தது. அந்த இடத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை. 'இது எப்படி.? அவனை அங்கிள் சுட்ட போது கூட ரத்தம் சிந்தியிருந்ததே..' குழம்பினான்.

யாழினி அந்த டைரியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் காப்பி கோப்பைகளோடு உள்ளே வந்த வசந்தன் மகளிடம் காப்பியை நீட்டினார். "கடவுளுக்கு அர்ப்பணிச்ச மனசால அன்னிய ஆடவனை காதலிச்சிருக்க.." என்றார். அவரின் குரல் ஒரு மாதிரி வில்லத்தனத்தோடு இருப்பது போலிருந்தது யாழினிக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN