குறிப்பேடு 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாழினி திடுக்கிடலோடு தந்தையை பார்த்தாள்.

"அப்பா.. அது.." என்றவளை முறைத்தவர் "இந்த டைரியில் இருப்பது உண்மைன்னா நீ எந்த அளவுக்கு மோசமானவன்னு யோசிச்சி பாரு.." என்றார்.

யாழினி நெற்றியை பிடித்தாள். "இப்ப இருக்கற பிரச்சனையை பேசலாம்ப்பா.." என்றாள்.

"பேச என்ன இருக்கு.? அந்த தினேஷை அப்போதிருந்தே எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்.. நீதான் கேட்கல.." என்றவர் அவளை முறைத்தார். காலி செய்து விட்ட காப்பி கோப்பையோடு அங்கிருந்து எழுந்து சென்றார்.

அப்பா சிறுபிள்ளைத்தனமாக நடந்துக் கொள்வது போலிருந்தது அவளுக்கு.

பிரேத மலைக்கு சதாசிவம் வந்தபோது முஸ்தபா அவருக்காக அங்கே காத்திருந்தார். சதாசிவத்தை கண்டதும் வணக்கம் வைத்தார். சதாசிவம் இந்த வணத்தை அடிக்கடி எதிர்பார்ப்பவர் இல்லை. ஆனாலும் முஸ்தபா அன்றைய கடுப்பை மறைக்கும் வழி தெரியாமல் இந்த வணக்கத்தை வைத்திருந்தார்.

முஸ்தபா தெளிவாக விளக்கி சொன்ன பிறகும் கூட சதாசிவம் அவரை நம்பவில்லை. இரண்டாம் இளவரசனை நேரடியாக பார்த்த பிறகும் கூட நம்பவில்லை. கண்கட்டி என்ற அவரின் வார்த்தை முஸ்தபாவின் மனதை காயப்படுத்தி விட்டது. அவர் இந்த மர்மத்திற்கு தன் தந்தையையே பலி தந்தவர். அப்படி இருக்கையில் அவரை இவர் நம்பவில்லை என்பது கஷ்டமாக இருந்தது.

"பிணம் எங்கே.?" என்றார்.

"முன்னே பார்த்த அதே இடத்துல இருக்கு சார்.." என்றவர் புல்வெளியின் இடை புகுந்து நடந்தார்.

வனத்தின் முன் எல்லையில் இருந்த இடத்தை பார்த்தார் சதாசிவம். பிணம் இல்லை. முஸ்தபாவை முறைத்தார். முஸ்தபா குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தார்.

"இங்கேதான் இருந்தது சார்.." என்றவரை கோபமாக பார்த்த சதாசிவம் "அதுக்குள்ள நரி இழுத்துட்டு போயிடுச்சா என்ன.? வர வர இப்பவெல்லாம் நீங்கதான் எனக்கு பெரும் தொல்லையா இருக்கிங்க.." என்று திட்டினார்.

முஸ்தபா தன் பணியை நினைத்தார்‌. அதனால் மௌனம் காத்தார். சதாசிவம் அங்கிருந்து கிளம்ப நினைத்தபோது வனத்தின் இடது பக்கமிருந்து இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களை திடீரென்று கண்டதும் பயந்து விட்டார் அவர். அதில் ஒருவனை முற்பகலில் பார்த்திருந்தார் சதாசிவம். குருதி நதிக்கரை கிராமத்தில் அவரை தாண்டி சென்றவன்தான் அவன். இப்போது சாதாரண மனிதனை போல இருந்தான். அதிக உயரம் இல்லை. இரத்த குளியலிலும் இல்லை. அவர்களின் அலங்காரமும் உடைகளும் மட்டும் வித்தியாசமாக இருந்தது.

"சாந்தவி சாந்தவி என்று பைத்தியம் போல் உளறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக எங்களுக்கு விடுதலை கொடு.." என்றான் அதில் ஒருவன். அவர்கள் இருவருக்கும் பின்னால் வந்த ஒருவனை இப்போதுதான் கவனித்தார் சதாசிவம். அது தினேஷ்தான். மிகவும் வித்தியாசமாக இருந்தான். முகத்தில் காயம் இல்லை. இறந்தவன் போன்று வெளுத்து போய் இல்லை. மன்னர் காலத்து உடை அணிந்திருந்தான். காதில் இருந்த கடுக்கன் மட்டுமே ஐந்தாறு பவுன்களுக்கு இருக்கும் போல இருந்தது.

"தினேஷ்.." என்றபடி அவனை நோக்கி செல்ல இருந்த சதாசிவத்தை கைப்பற்றி நிறுத்தினார். "வேண்டாம் சார்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. இவங்களை பார்த்தா பயமா இருக்கு.." என்றவரை முறைத்த சதாசிவம் "நீங்க அமைதியா நில்லுங்க.. உங்களை என்னோடு கூப்பிடல நான்.." என்றார்.

மூவரும் வனத்தின் உள்ளே நடந்தார்கள். சதாசிவம் அவர்களை தொடர்ந்து நடந்தார். முஸ்தபாவுக்கு வேறு வழி இல்லை. அதனால் அவரின் பின்னால் நடந்தார்.

தினேஷும் மற்ற இருவரும் வனத்துக்குள் நடந்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மறைந்து போனார்கள். சதாசிவம் அதிர்ந்தார். அவர்களை தேடினார்‌. அவர்கள் மறைந்து போன இடத்தை நோக்கி ஓடினார். ஓரிடத்தில் அவரும் மறைந்தார். "சார்.." என்றபடி ஓடிய முஸ்தபாவும்‌ அந்த வனத்தில் திடீரென்று மறைந்து போனதை வெளி உலகம் அறியவேயில்லை.

யாழினி சோர்வோடு அந்த டைரியை எடுத்தாள். அதை படிக்காமல் இருக்க முடியவில்லை அவளால். டைரியின் முதல் பக்கத்தை படித்து பெருமூச்சி விட்டாள். பின்னர் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

சாந்தவிக்கு மரகதனின் ஆணவத்தை பிடிக்கவில்லை. அவர்கள் வந்துவிட்ட சற்று நேரத்திலேயே மன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அதுதான் அந்த நாட்டிற்கு துக்கம் என்று நினைத்திருந்தார்கள் அனைவரும். ஆனால் அடுத்த வாரத்திலேயே இளவரசர்களில் மூத்தவர்கள் நால்வரும் அந்த நாட்டை நான்காக பிரித்து ஆள இருக்கிறார்கள் என்ற விசயம் கேள்விப்பட்டு நாட்டு மக்களின் நிம்மதியே குலைந்து போனது.

அந்த நாடு பெரிய நாடு ஒன்றும் கிடையாது. அப்படி இருக்கையில் இந்த குறு நிலத்தை நான்காக பிரிப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் என்று மக்களுக்கு சுத்தமாக புரியவில்லை.

சாந்தவியின் ஊர் இரண்டாம் இளவரசனின் ஆளுமையின் கீழ் வந்தது. ஐந்தாம் இளவரசன் மரகதன் இரண்டாம் இளவரசனின் அரண்மனையில் தங்கியிருக்கிறான் என்று அந்த ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். இரண்டாம் இளவரசன் தான் மன்னனாக பதவியேற்ற மறுநாளே பரிசு பொருட்கள் நிறைந்த தட்டோடு வந்து சங்கீதவரனை சந்தித்தான். சங்கீதவரனிடம் ஆசி கேட்டான். முனிவருக்கு இளவரசர்கள் நால்வர் மீதுமே கோபம்தான். ஆனாலும் தன் கோபத்தை நேரடியாக காட்டாமல் இளவரசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.

குடிலின் ஓரத்தில் நின்றிருந்த சாந்தவியிடம் பரிசு தட்டை நீட்டினார். "இதை கொண்டு சென்று அனாதைகளுக்கு தானம் தந்துவிடு.." என்றார். அவரின் கோபத்தை உணர்ந்திருந்த சாந்தவி பரிசு பொருளை வாங்கிக் கொண்டு வெளியே நடந்தாள். ஆசிரமத்தின் முன்னால் இருந்த பாதையில் வந்து நின்றாள். அந்த பக்கம் சென்ற ஒரு ஏழை மனிதனை நிறுத்தினாள்.

"ஐயா.. இதை என் தந்தை யாருக்காவது தானம் செய்து விடும் படி சொல்லி தந்தார்.. நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா.?" என்றாள்.

"தானம் வாங்கும் அளவிற்கு தரம் தாழாத வாழ்வை ஆண்டவன் தந்திருக்கிறான் மகளே.. இதை உரியவருக்கு கொடு.. அவர்களின் பசியை தீர்க்கட்டும் இது.." என்றவர் அவளை தாண்டி நடந்தார்.

சாந்தவி காத்திருந்தாள். பிச்சைக்காரன் ஒருவன் திருவோட்டோடு வந்தான். இவளின் அருகே வந்து தன் திருவோட்டை நீட்டினான். சாந்தவி தன் கையில் இருந்த பரிசு தட்டை அவனிடம் தந்தாள்.

"இதை வைத்துக் கொள்ளுங்கள் ஐயா.." என்றாள்.

"நன்றி மகளே.." என்றவர் அவளை பார்த்து கும்பிட்டு விட்டு சென்றார்.

ஒற்றை கையால் கோலை ஊன்றியபடி சென்றவரை பார்த்துக் கொண்டிருந்தவளை "மன்னனின் பரிசை பிச்சைக்காரனுக்கு தந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா.?" என்ற கேள்வி கவனமீர்த்தது. சாந்தவி திரும்பி பார்த்தாள். அமுதன் நின்றிருந்தான். இவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"மன்னர் எங்களுக்கு அதை தந்த கணமே அந்த பரிசு எங்களுக்கு சொந்தமாகி விட்டது. அதை நாங்கள் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு தருவதும் எங்களின் விருப்பம்.." என்றவளுக்கு தலையாட்டியவன் "உங்கள் பரிசை நீங்கள் மற்றவருக்கு தானமிடலாம். தவறில்லை. ஆனால் உங்களின் கழுத்தில் உள்ள சங்கிலி நான் தவற விட்டது. அதையாகிலும் தர இயலுமா.?" என்றான் கேலியாக.

சாந்தவி கழுத்து சங்கிலியை தொட்டு பார்த்தாள். "இது உங்களுடையது என்பதற்கு ஆதாரம் உள்ளதா.? இது என்னோடதாக கூட இருக்கலாம்.." என்றாள் கிண்டலாக.

அமுதன் சிரித்தான். "அது என் தந்தையார் எனக்காக தந்தது. இறப்பின் தருவாயில் இருந்தவாறு அவர் தந்த சங்கிலி. தங்களுக்கு அதன் மேல் பிடிப்பு இருந்தால் நீங்களே அதை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். என்னை விட உங்கள் கழுத்தில் அழகாய் உள்ளது அந்த ஆபரணம்.." என்றவன் திரும்பி நடந்தான்.

"இன்றைய நாள் வெள்ளிக்கிழமை என்பதால் என்னால் இந்த ஆபரணத்தை திருப்பி தர இயலாது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.. நான் நாளை உங்களின் இடத்திற்கு வந்து இதை தருகிறேன்.." என்றாள்.

அமுதன் நின்றான். அவளை திரும்பி பார்த்தான். "வீரர்களின் கூடாரத்தில் தங்கி இருக்கிறேன். ஆனால் அங்கே நீங்கள் வருவது சரியென்று தோன்றவில்லை. அன்று சந்தித்த அதே மண்டப கோவிலுக்கு நாளை மாலை வாருங்களேன். நானும் வருகிறேன்.." என்றான்.

சாந்தவி உடனே சரியென்று தலையசைத்தாள். "நிச்சயம் வருகிறேன்.." என்றாள்.

நான்கு இளவரசர்களும் நாட்டை பிரித்ததில் அமுதன் தங்களின் பாகத்திற்கே வீரனானது அவளுக்கு சிறு மகிழ்ச்சியை தந்தது. அவனை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு பிடித்திருந்தது. இரவுகளில் அவனின் முகத்தை பற்றி கனா கண்டு உறங்க பிடித்திருந்தது. கடவுளை பெயரை மட்டுமே முணுமுணுத்த வாயால் இன்று இவனின் பெயரையும் முணுமுணுக்க பிடித்திருந்தது.

சாந்தவி மீண்டும் குடிலுக்கு திரும்பி வந்தபோது சங்கீதவரன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சாந்தவி பழக்கூடையில் இருந்த பழங்களில் ஒரு கொய்யாவை மட்டும் எடுத்துக் கொண்டு குடிலின் திண்ணையில் வந்து அமர்ந்தாள். நாளை மாலையில் அமுதனை சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு குதூகலிப்பை தந்திருந்தது. அந்த ஆனந்ததோடே அந்த கொய்யாவை உண்ண ஆரம்பித்தாள்.

மறுநாள் மாலையில் அவளின் தோழி இவளை காண வந்தாள். இருவரும் இணைந்துதான் தினமும் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். தனது மலர் கூடையோடு அவளோடு இணைந்து நடந்த சாந்தவி "இப்போது கோவிலில் ஒருவரை சந்திக்க போகிறேன் நான்.. அவரை பற்றி என் தந்தையிடம் எதுவும் சொல்லிவிடாதே நீ.." என்றுக் கேட்டுக் கொண்டாள்.

தோழி அவளை ஆச்சரியமாக பார்த்தாள். சாந்தவிக்கு திடீரென்று என்ன ஆகிவிட்டது என்று யோசித்தாள். ஆனாலும் கூட "சரி.." என்றாள்.

மண்டப கோவிலுக்கு வந்தனர் இருவரும். தோழி மண்டபத்தில் இருந்த கடவுளுக்கு ஒரு கும்பிடை போட்டுவிட்டு அருகே இருந்த பாம்பு புத்திற்கு கிளம்பினாள். அவளின் இஷ்ட தெய்வம்‌ நாகேந்திரன்தான்.

சாந்தவி தன் வழக்கமான கல் தெய்வத்திற்கு பூக்களை எடுத்து அர்ச்சிக்க ஆரம்பித்தாள். கடவுளை நினைத்து அர்ச்சித்த மனதில் அமுதனின் முகம் பல முறை வந்து போனது‌. அவளுக்கே தன்னை நினைத்து கோபமாக இருந்தது. ஆனால் இயல்பாய் தோன்றிய பிடிப்பிற்கு மனதை எப்படி குறை சொல்வது என்று நினைத்தாள்.

கூடையில் இருந்த பூக்கள் தீர்ந்தது. சாந்தவி சாமியை வணங்கி விட்டு எழுந்து நின்றாள். சாலையை பார்த்தாள். அமுதனை காணவில்லை. அவன் விரைவில் வந்து விடுவானோ என்று அவசரமாக அர்ச்சனை செய்தவள் இப்போது அவனை காணாமல் மனம் வாடினாள்.

கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தாள். பாதையை பார்த்தாள். அமுதனை எதிர்நோக்கி காத்திருந்தாள். நேரம் கடந்தது. நாகேந்திரனை வணங்கி வந்த தோழி "போகலாமா சாந்தவி.?" என்றாள்.

"நீ புறப்படு.. நான் சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்.." என்றாள். தோழி அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு கிளம்பி சென்றாள். தோழியின் உருவம் அந்த பாதையின் வளைவில் மறைந்தது.

சாந்தவி கன்னத்தின் மீது கையை வைத்தபடி காத்திருந்தாள். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. மாலை மங்கியது. அமுதன் வரவேயில்லை. ஏமாற்றி விட்டானோ என்று நினைப்படி எழுந்தவள் அங்கிருந்து கிளம்ப எண்ணி படிகளில் இறங்கினாள். அமுதன் மீது கோபமாக வந்தது. அவனிடம் ஆபரணத்தை தந்த பிறகு அவனை சந்திக்கவே கூடாது என்று நினைத்துதான் கோவிலுக்கே வந்தாள் அவள். ஆனால் அவன் வராமல் போகவும் மாபெரும் ஏமாற்றத்தை சந்தித்தது போலாகிவிட்டது.

கடைசி படிக்கட்டில் இறங்கியவளின் கவனத்தை ஈர்த்தது ஒரு நாய்‌. மற்றொரு நாயோடு சண்டையிட்டபடி கல் கோவிலின் பின் பக்கத்தை நோக்கி ஓடியது. இந்த கோவிலில் அன்னதானம் தருவதில்லை. அப்படி இருக்கையில் நாய்கள் ஏன் குரைக்கின்றன என்ற குழப்பத்தோடு பக்கவாட்டில் எட்டிப் பார்த்தாள். வாள் ஒன்று தரையில் கிடந்தது. அமுதனின் வாளாக இருக்குமோ என்று நினைத்தபடி நடந்தவள் நாய்களின் குரைப்பு கோவிலின் பின்புறம் கேட்பதை அறிந்து சென்று பார்த்தாள். உடல் ஒன்று ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அருகே சென்று அதை திருப்பினாள். அமுதன்தான் இறந்து கிடந்தான். நெஞ்சிலிருந்து ஆறாக வழிந்த ரத்தம் தரை முழுக்க பரவி கிடந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN