குறிப்பேடு 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நடு இரவு. வானில் நிலா உலா போய் கொண்டிருந்தது. வசந்தன் தன்னிடமிருந்த டைரியை பிரித்தார். உண்மை பொய் என்பது இரண்டாம் பட்சம். முழுமையாக எதையும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார் அவர்.

சங்கீதவரன் தனது குடிலின் வாசலில் அமர்ந்து காத்திருந்தார். வழக்கம் போல கடவுளை வணங்க சென்ற மகள் இன்னும் வீடு வந்து சேரவில்லை. என்ன ஆகியிருக்கும் என்று யோசித்து காத்திருந்தார். யார் கூடவேனும் பேசிக் கொண்டு நின்றிருக்கிறாளா என்று யோசித்தார்.

குடிலை சுற்றி இருந்த வேலியை தாண்டி வெளியே வந்தார். இரு பக்க பாதையையும் மாறி மாறி பார்த்தார். காலையிலிருந்து அவருக்கு மனமே சரியில்லை‌. சற்று நாட்களுக்கு முன்பு மன்னர் இறந்ததே அபச குணம் போலதான் இருந்தது அவருக்கு. அடுத்ததாக மூத்த இளவரசர்கள் நால்வரும் நாட்டை பிரித்துக் கொண்டது அவருக்கு மேலும் மன வருத்தத்தையே தந்தது.

ஏதேதோ நினைவுகளோடு இருந்தவர் தூரத்தில் இருந்து ஒருவர் கூன் முதுகோடு வரவும் தன் சிந்தனையிலிருந்து விடுப்பட்டு அவரை கவனித்தார்.

அருகில் வந்தபிறகே அது அந்த கோமண சாமியார் என்பதை அறிந்தார் சங்கீதவரன்.

அவரை பார்க்க பிடிக்காமல் தன் ஆசிரமத்தை நோக்கி திரும்பினார்.

"எங்கே கிளம்பிட்ட சங்கீதா.? நான் உன்னைதான் பார்க்க வந்திருக்கேன்.." என்ற கோமண சாமியாரை திரும்பி பார்த்து வெறித்தவர் "என்னோடு பேச என்ன இருக்கு.?" என்றார் கோபமாக.

"நான்தான் இந்த நாட்டையே அழிச்சிட்டு இருக்கேன். இது உனக்கும் தெரியும்தானே.?" என்றார் சங்கீதவரனின் அருகே வந்து நின்றபடி.

சங்கீதவரனுக்கு கோபம் அதிகமானது. கோமண சாமியார் வேலியின் கதவு மீது சாய்ந்து நின்றார். சங்கீதவரனை கேலியாக பார்த்தார். உன் கோபம் என்னை என்ன செய்துவிடும் என கேட்கும் நக்கல் அவரின் பார்வையில் இருந்தது.

"மன்னரின் சாவுக்கு காரணமும் நீங்கள்தானா.?" சங்கீதவரன் தன் கடைசி சந்தேகத்தை கேட்டார். கோமண சாமியார் ஆமென தலையசைத்தார். சங்கீதவரனுக்கு கோபத்தில் இவரின் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க வேண்டும் போல இருந்தது.

"இந்த நாடு மொத்தமாக அழியணும். அதை நான் ஆசை தீர பார்க்கணும்.." என்று சிரிப்போடு சொன்னவர் சுற்றும் முற்றும் பார்த்தார். "சாந்தவி எங்கே.?" என்றார்.

சங்கீதவரன் பதில் சொல்லும் முன் அவரின் கையை பற்றினார் அவரே. "உனக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. உன் மகளை போலவே வளர்த்தி விட்டாய் சாந்தவியை. அவளின் வாழ்வு ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க படும் தருணத்தில் நீயும் நானும் இன்னும் அதிக நிம்மதியை அடைவோம்.." என்றார்.

சங்கீதவரன் தன் கையை உருவிக் கொண்டார். "அவள் என் மகள்தான். பெற்றதால் உங்கள் மகளாக ஆக மாட்டாள். உங்களின் சொந்த பகைக்காக இந்த நாட்டையே அழிக்கிறீரே.. உங்களுக்கு ஏன் எந்த ஆண்டவனும் நல் புத்தியை தரவில்லை.?" என்றார்.

கோமண சாமியார் சிரித்தார். "இந்த நாட்டை ஆண்ட அரசனுக்கே நல்புத்தி தராத கடவுள் எனக்கு நல்புத்தி தந்து என்ன செய்ய போகிறார்.? என் மனைவியை கொன்றான் வேல்விழியான். நானோ அவனின் சுவடுகளையும் சேர்த்து அழிக்கிறேன்.." என்றார்.

அதே வேளையில் ஐந்தாறு வீரர்கள் ஈட்டியும் கயிறுமாக இவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்தனர். "உங்களை கைது செய்கிறோம் முனிவரே.." என்ற ஒரு வீரன் சங்கீதவரனின் கையில் கயிற்றை கட்டினான்.

"ஏன் எதற்கு.?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் சங்கீதவரன். கோமண சாமியாரும் கூட அதிர்ச்சியோடுதான் அவர்களை பார்த்தார்.

"இவரை ஏன் கைது செய்றிங்க.?" என்றார். அவருக்கு தன் மகளின் வாழ்வு என்ன ஆகுமோ என்ற கவலை‌. சங்கீதவரனையே தன் சொந்த தந்தையாக நினைத்து வருகிறாள் அவள். இப்போது தந்தை கைது செய்யப்பட்டார் என்ற விசயம் அறிந்தால் மனம் வாடுவாளே என்று கவலை கொண்டார்.

"உங்க பொண்ணு எங்க வீரன் ஒருத்தனை கொன்னுட்டா.. அதுக்காகதான் உங்களையும் சேர்த்து கைது செய்கிறோம்.." என்றான் ஒரு வீரன்.

சங்கீதவரனுக்கு தலை சுத்துவது போல இருந்தது. பின்னால் சாய்ந்து அங்கிருந்த வேலியை பாதுகாப்புக்கென பிடித்தார். தனது மகள் கொலைக்காரியா.? பூவை கூட காம்பு வலிக்காமல் பறிப்பாளே அவளா கொலைக்காரி.? ஈயையும் எறும்பையும் கூட துன்புறுத்த கூடாது என்று நினைப்பாளே.. என்ற எண்ணத்தில் இருந்தவரின் கைகள் இரண்டையும் கயிற்றால் இறுக்க கட்டினார்கள் வீரர்கள்.

"அவரை விடுங்களடா பாவிகளா.." என்று அவர்களை தூர தள்ள முயன்றார் கோமண சாமியார்.

"நீங்க அமைதியா போங்க சாமி.. இவரை கைது செய்ய சொல்லி எங்களின் இளவரசர் மரகதன் கட்டளையிட்டு உள்ளார்.." என்றவர்கள் சங்கீதவரனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

"சாந்தவி எந்த கொலையும் செய்திருக்க மாட்டாள்.. குருவே நீங்களாவது சாந்தவியை நம்புங்கள்.." என்று கோமண சாமியாரிடம் கெஞ்சியபடியே அங்கிருந்து சென்றார் சங்கீதவரன்.

கோமண சாமியார் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். தன் மகள் சிறையில் இருக்கிறாள் என்ற விசயமே அவரை சிந்திக்கவும் விடவில்லை. நாட்டை நோக்கி நடந்தார். அந்த நாட்டையே நெருப்பில் இட வேண்டும் போல கோபம் வந்தது. கடைசி இளவரசன் மரகதனை உயிரோடு கொளுத்த ஆசைக் கொண்டார்.

இவருக்கும் வேல் விழியானுக்கும் ஆரம்ப பகையே இன்னும் தீராமல்தான் இருந்தது. சாந்தவியின் தாயார் முழு கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் குருடன் போல விலங்கின் மீது எறிவதாக நினைத்து இந்த கர்ப்பவதியின் மீது ஈட்டியை எறிந்து விட்டான் வேல் விழியான். அவளை காப்பாற்ற கூட முயலாமல் காட்டை விட்டு ஓடியும் வந்து விட்டான். தாயின் உயிர் போன பிறகு பிறந்தவள்தான் சாந்தவி. தன் மனைவிக்கு நடந்த துரோகம் அறிந்த கோமண சாமியார் அப்போதே அந்த நாட்டை அழித்திருப்பார். ஆனால் சங்கீதவரனின் பேச்சுகளால் மனம் மாறினார். நாட்டை அழிப்பதை விட குழந்தையின் நலனிலேயே இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் அவரும் அப்போதைக்கு தன் கோபத்தை கை விட்டார்.

மனைவியை அதிகம் நேசித்தார் கோமண சாமியார். அதனால் இறந்தவளின் நினைவோடு ஒன்றி வாழ்ந்தார். அவரிடமிருந்து குழந்தையை மட்டும் தனியே வாங்கி வந்து விட்டார் சங்கீதவரன். அவரே அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கவும் ஆரம்பித்து விட்டார்.

சாந்தவியை அவளின் பெற்ற தந்தையின் சம்மதத்தோடுதான் கடவுள் பணிக்கு நேர்ந்து விட்டார் சங்கீதவரன். சாந்தவிக்கு தன் சொந்த தகப்பன் தேவை இல்லை. அவளின் ஒரே கவனம் கடவுள் மட்டும்தான். ஆனால் இப்போது இந்த மரகதன் இடைப்புகுந்து இம்சித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN