காதல் கடன்காரா 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிகாலை நேரம். மணி மூன்று. பனித்துளிகள் புற்களின் நுனிகளில் உருண்டு திரண்டுக் கொண்டிருந்தன. சிலுசிலுவென்று வீசிய காற்று வண்ண பூக்களின் இதழ்களை மென்மையாக வருடிக் கொண்டிருந்தன. அந்த மண்டபத்தின் அருகே இருந்த வீடுகளின் கூரைகளிலும் மரக்கிளைகளிலும் ஏறி படுத்திருந்த சேவல்கள் சில சீரான இடைவெளியோடு கூவிக் கொண்டிருந்தன.

மண்டபங்கள் சீரியல் பல்புகளின் வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மண்டப வாசலில் நின்றிருந்த வாழை மரங்கள் இரண்டும் அபிராமியின் திருமண விசேச சேதியை அந்த ஊருக்கு அறிவித்துக் கொண்டிருந்தன.

மண்டபத்தின் அறை ஒன்றில் அபிராமியின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு பக்கம் படுத்து தூங்கி கொண்டிருந்தார்கள்.

"இந்த விசேசத்துல கூட இவங்களுக்கு எப்படிதான் தூக்கம் வருதோ.?" என சலித்துக் கொண்ட பாட்டி பற்களின் இடையே பாக்கு ஒன்றை வைத்து கடித்தாள்.

அபிராமியை மட்டுமல்ல அபிராமியின் அப்பாவையும் அம்மாவையும் கூட பாட்டிதான் இன்று வரையிலுமே கவனித்துக் கொள்கிறாள். அபிராமி பிறந்த முதல் நாளில் இருந்து தன் கையால்தான் தூக்கி வளர்த்தாள் பாட்டி. அபிராமி தன் அம்மாவை அம்மா என அழைத்ததை விட பாட்டியைதான் அதிகம் அம்மாவென அழைத்துள்ளாள்.

நேற்று மாலையில் மண்டபத்திற்கு வந்த நேரத்தில் இருந்து அவள்தான் வாசலில் நின்று உறவினர்களை அழைத்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் வெற்றிலை மெல்லலாம் என்று அந்த அறைக்குள் வந்தாள்.

"அதுக்குள்ள இத்தனை வருசம் போயிடுச்சி.. நேத்துதான் அபிராமியை கையில தூக்கி கொஞ்சிய மாதிரி இருக்கு.. திடீர்ன்னு பார்த்தா இன்னைக்கு அவளுக்கு கல்யாணம்.." என்றார் தாத்தா.

"நேத்து கொஞ்சினிங்களா.? தாத்தா அந்த கழுதை பிறந்து இருபத்தியிரண்டு வருசத்துக்கும் மேல ஆகிடுச்சி.." என்று கிண்டலாக சொன்னான் முத்தமிழ்.

"எத்தனை வருசம் ஆனாலும் அவ எனக்கு குழந்தைதான்டா.." என்ற தாத்தாவின் மீசையை பிடித்து முறுக்கி விட்ட முத்தமிழ் "குழந்தைன்னு அவ முன்னாடி சொல்லாதிங்க. குட்டி பிசாசு ஓவரா பண்ணுவா.." என்றான். அவனின் தோளில் அடித்தாள் பாட்டி.

"கூட பிறந்தவளுக்கு விடிஞ்சதும் கல்யாணம். அவளை விட்டு பிரிய போறோமேன்னு கொஞ்சமாவது உனக்கு கவலை இருக்கா.?" என்ற பாட்டியை சிரிப்போடு பார்த்தவன் "பக்கத்து ஊர்லதானே கட்டிக்கிட்டி போக போறா.. அவளோடு சேர்ந்து நானும் போய் வீட்டோட மச்சினன்னா இருந்துக்கறேன்.." என்றான்.

முத்தமிழ் பிறந்து நான்கு வருடங்களுக்கு பிறகு அபிராமி அந்த வீட்டில் சின்ன மகாராணியாய் பிறந்தாள். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன் என அனைவருக்குமே செல்லம் அவள்.

காலை மணி நேரம் ஏழு முதல் எட்டரைக்குள் முகூர்த்தம் அவளுக்கு. மாப்பிள்ளை பக்கத்து ஊரை சேர்ந்த ஈஸ்வர். அந்த ஊரில் செல்வாக்கு உள்ள குடும்பம் அவனுடையது. அவனுடைய பெற்றோர் தங்களின் மகனுக்காக ஊரூராய் தேடி அலைந்து பிடித்த மணமகள்தான் அபிராமி. அதுவரை பார்த்த பெண்கள் அனைவருக்கும் இடம் வலமாக தலையசைத்துக் கொண்டிருந்தவன் முதல்முறையாக சம்மதமாக தலையசைத்தது அபிராமியின் புகைப்படத்தை கண்டுதான்.

அபிராமியின் குடும்பத்திற்கும் ஈஸ்வரை பிடித்திருந்தது. மகளோ பெற்றோர் சம்மதமே தனது சம்மதம் என்று சொல்லி விட்டாள்.

அனைத்து சம்பிரதாய சடங்குகளோடு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மண்டபத்தில் நிறைந்திருந்த உறவினர்கள் சிரித்து பேசி மகிழ்ந்தபடி அமர்ந்திருந்தனர்.

அபிராமி தன் முன் நின்றிருந்தவனை கலங்கும் விழிகளோடு பார்த்தாள். நேற்று இரவு கட்டியிருந்த பட்டு புடவை ஆங்காங்கே கசங்கிக் போயிருந்தது. உடம்பில் ஒரு நகை கூட இல்லை. அனைத்தையும் தூங்கும் முன் கழட்டி பாட்டியிடம் தந்து விட்டிருந்தாள். தலையும் கலைந்திருந்தது.

"எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம்.." என்றாள். மண்டபத்தினுள் சொந்தங்களும் பந்தங்களும் நிரம்பியிருந்த வேளையில் அபிராமியோ மண்டபத்தின் பின்னால் இருந்த குரோட்டன்ஸ் புதரின் அருகே நின்றபடி தன் எதிர் காலத்தையே மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தவனை கவலையோடு பார்த்தாள்.

"நான் உன்னை கட்டாயப்படுத்தல அபிராமி. என்னோட டிமான்ட் என்னன்னு நான் சொல்லிட்டேன். அதுக்கு மேல உன் இஷ்டம்ன்னும் சொல்லிட்டேன்.."

கார்த்திக் சொன்னது கேட்டு அபிராமிக்கு கண்கள் கலங்கியது. "நீங்க என்னை லவ் பண்றிங்களா.?" என்றாள் கடைசி சந்தேகமாக.

"இல்ல. துளி கூட இல்ல.." கார்த்திக் இதை சொல்லியதும் அவளின் கலங்கிய விழிகளில் இருந்து கண் மையோடு கலந்து கண்ணீர் துளிகள் வழிந்தது. கார்த்திக் சரியாக வெட்டப்படாத அந்த குரோட்டான்ஸ் செடிகளின் இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி எறிந்துக் கொண்டிருந்தான்.

'எதற்கு இந்த அலங்காரம்.? பராமரிக்க தெரியலன்னா குரோட்டான்ஸும் புதர் காடுதான். இதுக்கு பதிலா நாலு சாமந்தியை நட்டு வச்சிருக்கலாம்..' என்று நினைத்தவன் அந்த மண்டபத்தை சுற்றிலும் கவனித்தான். அவன் உள்ளே நுழைய காரணமாக இருந்த இடிந்த சுற்று சுவர் சற்று தூரத்தில் இருந்தது. இடையே நிறைய சீமை கருவேலங்கள் மண்டி கிடந்தன.

தனது புடவை இறுக்க பற்றினாள் அபிராமி. தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலமை என்று எண்ணினாள். கார்த்திக் தன் கை கடிகாரத்தை பார்த்தான். மண்டபத்தினுள் மெல்லிய சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த மேள தாளங்கள் அவனுக்கு எரிச்சலை தந்தன."சீக்கிரம் முடிவெடு‌‌. இல்லன்னா உன்னை தேடி யாராவது வந்துடுவாங்க.." என்றவனை கோபமும் சோகமுமாக பார்த்தவள் "நான் உங்களோடு வந்தா எங்க குடும்ப மானமே போயிடும்.." என்றாள்.

"அப்படின்னா நான் கிளம்பறேன்.." என்றவன் அங்கிருந்து திரும்பி நடந்தான். அவனின் ஒரு கையில் இருந்த கடிதமும் மறு கையில் இருந்த விஷமும் அபிராமியை நிலை கொள்ள விடவில்லை.

கார்த்திக்கும் முத்தமிழும் பல வருட நண்பர்கள். கார்த்திக் அபிராமிக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கமானவன்தான். பல நாட்கள் அபிராமியின் வீட்டில் உணவருந்தி அங்கேயே உறங்கியும் இருக்கிறான் அவன். அண்ணனின் நண்பர்களில் நல்லவன் இவன்தான் என்று அபிராமியிம் கூட பல நேரங்களில் எண்ணியுள்ளாள். ஆனால் அவன்தான் இன்று அபிராமி மேடை ஏற போகும் சமயத்தில் லெட்டரும் விஷ பாட்டிலுமாக வந்துள்ளான்.

சில வாரங்களுக்கு முன்பு அவனுக்கும் முத்தமிழுக்கும் இடையில் சண்டை வந்தது பற்றி அவளுக்குமே தெரியும்‌. ஆனால் அந்த விசயத்திற்காக அண்ணனை பழி வாங்க இவன் தன்னை பயன்படுத்துவான் என்று அபிராமி கனவில் கூட நினைக்கவில்லை.

அபிராமி அந்த திருமணத்தை அப்படியே விட்டுவிட்டு அவனோடு ஓடி வந்து அவனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இல்லையேல் தன் இறப்புக்கு காரணம் அவளின் அண்ணன்தான் என எழுதி வைத்துள்ள லெட்டரோடு விஷத்தை அருந்தி விடுவேன் என்று அவளை மிரட்டிக் கொண்டிருக்கிறான் கார்த்திக்.

இப்போது இவள் தயங்கியதும் அந்த கடிதத்தையும் விசத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் கார்த்திக்.

அபிராமி ஓடி சென்று அவனின் கையை பற்றி நிறுத்தினாள். "ப்ளீஸ் இப்படி செய்யாதிங்க. அண்ணாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவனோடு சண்டையை நான் சமாதானம் செஞ்சி வைக்கிறேன்.." என்றவளின் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டவன் "எனக்கு தேவை அவனோடு கூட்டு இல்ல. அவனை பழி வாங்கணும். அவ்வளவுதான். இப்ப நீ என்னோடு வந்தா அவன் வெளியில இருப்பான்‌. இல்லன்னா ஜெயில்லதான் காலம் முழுக்க இருப்பான்.." என்றான்.

சாதாரணமாக தெரியும் அவனின் குரல் இன்று ஏனோ அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கொடூரமாக இருப்பது போலவே இருந்தது அவளுக்கு.

"ஒரு சாதாரண லெட்டரை வச்சி யாரையும் அரெஸ்ட் பண்ண முடியாது.." என்றவளின் தாடையை பற்றியவன் "சவால் விடுறியா.? போ.. போய் உன் கழுத்துல தாலியை கட்டிக்க. நான் எங்கேயாவது போய் தற்கொலை பண்ணிக்கிறேன். உன் அண்ணன் கழுத்துல தூக்கு கயிறு ஏறுதா இல்லையான்னு பொறுத்திருந்து பாரு.." என்றான்.

அபிராமியின் மொத்த நம்பிக்கையும் உடைந்து விட்டது. அழுகையாக வந்தது. "ப்ளீஸ்ங்க. எங்க அண்ணன் பாவம்.. நான் வேணா அவனை மன்னிப்பு கேட்க சொல்றேன்.." என்றவளுக்கு அழுகையில் குரல் விக்கியது.

"உங்க கால்ல கூட நான் விழறேன்.. ப்ளீஸ் இப்படி செய்யாதிங்க.. உங்களை ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சிருந்தேன் நான்.." என்றவளுக்கு அழுகை அருவியாய் கொட்டியது.

கார்த்திக் செய்து வைத்த சிலையாக நின்றிருந்தான். அபிராமி தன் தயக்கத்தை களைந்து விட்டு அவனின் காலை பற்றினாள். "என்னையும் என் அண்ணனையும் விட்டுடுங்க.." என்றாள். பதட்டத்தில் வேறு என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவன் இறப்பது பற்றி மனிதாபிமான அடிப்படையில் இரக்கப்பட்டாள். ஆனால் அவன் தன் இறப்பையே காரணமாக வைத்து தன்னையும் தன் அண்ணனையும் பழி வாங்க பார்க்கிறான் என்ற விசயம் அவளுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் தந்தது. ஆனால் அதே நேரத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வதென்று யோசிக்கதான் பொறுமை இல்லாமல் போனது‌.

தன் காலை பிடித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனின் கரங்கள் கடிதத்தை இறுக்கியது. அவளின் கண்ணீருக்கு தன் உறுதியை பலி தர விரும்பவில்லை அவன்.

"அபிராமி.." பக்கத்து வீட்டு அக்காவின் குரல் அபிராமியின் காதில் விழுந்தது. அபிராமியின் கண்ணீர் சட்டென்று நின்று போனது.

"எங்கேதான் போனாளோ இவ.?" என்றபடி தூரத்தில் வந்துக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டு அக்கா.

அபிராமியை விட்டு பின்னால் நகர்ந்து நின்றான் கார்த்திக். "இப்ப என்னோடு வர முடியுமா.? முடியாதா.?" என்றவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை அவளால்‌.

கார்த்திக் நடந்தான். இரண்டடி நடந்ததும் நின்றான். "நீ மணவறையை விட்டு இறங்கிய உடனே நான் செத்த சேதி வரும். வந்து மறக்காம ஒரு துளி கண்ணீர் விட்டுட்டு போ.. என் ஆன்மாவும் சாந்தி அடையட்டும்.." என்றான்.

அந்த மண்டபத்தின் பின்பக்க புதரின் இடையே இருந்த உடைந்த சுற்று சுவரின் இடையில் புகுந்து நடந்தான் கார்த்திக்.

அவன் சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தபோது நிற்காத கண்ணீரோடு பைக்கின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் அபிராமி.

"ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னும் வராதே.." என்றான் அவன்.

"ப்ளீஸ்.. கிளம்புங்க. யாராவது பார்த்துட்டா இன்னும் பிரச்சனையாகும்.." அழுகையோடு சொன்னாள் அபிராமி.

கார்த்திக் வண்டியை இயக்கினான். "கெட்டியா பிடிச்சிக்க விழுந்துட போற.." எச்சரித்தவனின் சொற்கள் அவளுக்குள் தீயைதான் எரிய வைத்தது.

மண்டபத்தின் பின் பக்கம் இருந்த மண் பாதையில் இருளில் புகுந்தது சென்றது கார்த்திக்கின் பைக். சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது. வாகனத்தின் முன் பக்க வெளிச்சம் தெளிவாகதான் இருந்தது. இருந்தும் ஏன் இவன் குழிகளில் வண்டியை விடுகிறான் என்று அந்த கவலையிலும் அபிராமிக்குள் கேள்வி எழுந்தது.

அந்த அதிகாலை நேரத்தில் அபிராமி மணமகள் அறையில் இல்லாமல் போனதை மற்றவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என சொல்லி பின் வாசலுக்கு வந்தவள் ஏன் நேரம் கடந்தும் வந்து சேரவில்லை என்பதை பக்கத்து வீட்டுக்கார அக்காவும் கவனிக்கவில்லை.

கார்த்திக் தன் வாழ்க்கையை அழிக்க போகிறான் என்று அபிராமிக்கு தெளிவாக தெரிந்தது. இந்த முடிவை அவள் எடுத்திருக்க கூடாது. ஆனால் எடுத்து விட்ட சிறு தவறான முடிவு அவளை என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN