காதல் கடன்காரா 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தறி கெட்டு துடிக்கும் இதயம், எப்போதும் வேண்டுமானாலும் பாய்ந்து வெளி வர முயற்சிக்கும் கண்ணீர் என்று கார்த்திக்கின் பைக்கில் பயணித்த அபிராமி பைக் நின்றதும் இறங்கினாள்.

முத்தமிழின் நண்பர்கள் சிலர் அங்கே நின்றிருந்தனர். அண்ணனின் நண்பர்கள் பலரும் அவனுக்கு துரோகம் செய்கிறார்கள் என்ற விசயம் அபிராமிக்கு வருத்தத்தை தந்தது‌. அண்ணன் பாவம் என்று நினைத்தாள்.

ராசு தன் கையிலிருந்த கவரை அபிராமியிடம் நீட்டினான். "இதுல கூரை புடவை இருக்கு பாப்பா.. அந்த கோவில் குளத்துல குளிச்சிட்டு கட்டிக்க.." என்றான்.

அபிராமி உதட்டை கடித்தபடி அந்த கவரை கையில் வாங்கினாள். அவர்களை அந்த கோவில் குளத்தில் கல்லை கட்டி தள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

கவரை பிரித்து பார்த்தாள். சிகப்பு வண்ண கூரை புடவை மட்டும் இருந்தது. "இதுக்கு இன்னர் ஸ்கர்டும் பிளவுஸ்ம் இல்லாம எப்படி கட்ட முடியும்.?" என கேட்டவளுக்கு இதை சாக்கிட்டாவது திருமணம் நின்று போக கூடாதா என்று தோன்றியது.

"இங்கே இருக்கு பாப்பா.." என்ற ராகுல் அவசரமாக சென்று தனது பைக் கவரில் இருந்த துணி பையை எடுத்து வந்து தந்தான்.

'எத்தனை நாளா பிளான் பண்ணியிருந்திங்கடா.?' என்று கேட்க தோன்றியது அவளுக்கு. எல்லாமே திட்டமிட்டு செய்கிறார்கள். 'அச்சோ அண்ணா.. இவங்களை போய் உன் பிரெண்ட்ஸ்ன்னு நம்பிட்டியே..!?'

உடைகளை வாங்கி கொண்டு குளத்தை நோக்கி நடந்தாள் அபிராமி.

"இந்தாடா மாப்பிள்ளை வேட்டி சட்டை.." என்று குமரன் தன்னிடமிருந்த கவரை கார்த்திக்கிடம் நீட்டினான்.

"இது ஒன்னுதான் குறைச்சலா.? இப்படியே பேண்ட் சர்டோடு தாலி கட்டினா ஏத்துக்க மாட்டாங்களோ.?" என்று எரிச்சலாக கார்த்திக் கேட்கவும் படிகளில் இறங்கி கொண்டிருந்த அபிராமியின் கால்கள் தானாக நின்றது. இந்த திருமணம் நிச்சயம் நடைபெற வேண்டுமா என்று தோன்றியது அவளுக்கு.

குளத்தில் இறங்கி தலையோடு மூழ்கியவளின் மனம் முழுக்க பாரமாகவே இருந்தது. மீண்டும் கரை ஏற கூடாது என்று தோன்றியது.

நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த கார்த்திக்கின் கவனம் எப்போது குளத்தின் பக்கம் சென்றது என்று தெரியவில்லை. ஆனால் அபிராமி தண்ணீர் மூழ்கி அரை நிமிடங்கள் கடந்தவுடனேயே குளத்தை நோக்கி ஓடினான்.

"கார்த்திக் என்ன ஆச்சி.?" நண்பர்களின் குரலை காதில் வாங்காமல் குளத்தில் குதித்தான். நண்பர்கள் அவனின் அவசரம் கண்டு பயந்து போய் குளத்தை நோக்கி ஓடினார்கள்.

தனது பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்து மூழ்கியவளை பாதி வழி கூட செல்ல விடாமல் மீண்டும் கரைக்கே தூக்கி வந்து விட்டான் கார்த்திக். குளத்தங்கரை படிக்கட்டில் அவளை அமர வைத்தான்.

அபிராமி தண்ணீருக்கு மேலே வந்தவுடனே இரும்பினாள். அவளின் அருகில் அமர்ந்த கார்த்திக் தலையில் இரண்டு தட்டு தட்டினான். கொஞ்சம் பலமான தட்டுகள் அவை.

"கார்த்தி.. என்னடா ஆச்சி‌.?" என்றான் ஒருவன்.

"எல்லாம் மேலே இருங்கடா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.." கார்த்திக் குரலில் இருந்த கோபம் கண்டு நண்பர்கள் அமைதியாக மேலே கிளம்பினார்கள்.

கார்த்திக்கின் கையை தூர தள்ளி விட்டாள் அபிராமி.

"என்னை தொடதே.." என்றாள் கோபத்தோடு.

அவளின் பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடியை விட்டான் கார்த்திக். அபிராமி நீர் நிறைந்த தன் செந்நிற விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். உண்மையில் அடிப்பட்டு விட்டது. அண்ணன் கூட அவளை அடித்ததே இல்லை. இவனோ பலமான அடியை தந்து விட்டான்.

"சாகணும்ன்னு அவ்வளவு ஆசையா.?" என்றான் பற்களை கடித்தபடி. அபிராமி அவனை முறைப்போடு பார்த்தாள்.

"ஏன்‌.. நீயும் உன் சாவை வச்சிதானே என்னை கடத்தி கூட்டி வந்த.?" என்றவளின் தைரியம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவளை ஆச்சரியம் தீராமல் பார்த்தான்.

அபிராமி தன் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். "என்னை பத்தி உனக்கு சரியா தெரியல.. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை அதோடு நரகம்தான். என் கழுத்துல நீ கட்ட போற தாலி உனக்கு நீயே தயார் பண்ற தூக்கு கயிறு. என்னை கல்யாணம் பண்ணதுக்கு பதிலா செத்தே போயிருக்கலாம்ன்னு நினைக்க போற நீ‌‌.." என்றாள். இந்த திடீர் தைரியத்துக்கு தன்னையே பாராட்டிக் கொண்டாள்.

அவளை சில நொடிகள் குறுகுறுவென பார்த்த கார்த்திக் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

"அண்ணனை மாதிரிதானே தங்கச்சியும் இருப்ப‌.? அப்படி இருந்தாதானே நியாயமும்‌‌.!" சிரிப்பினைடையே சொன்னவனை தயக்கமாக பார்த்தாள் அவள்.

"என் வாழ்க்கையை உன்னால எதுவும் செய்ய முடியாது. நீ எனக்கு ஒரு பங்கா செய்ய நினைக்கிறதை நான் உன் அண்ணனுக்கு பத்து மடங்கா திருப்பி தருவேன்.." என்றான். அபிராமிக்கு கண்களில் கட்டிய குளம் அணையை தாண்டியது. அண்ணா என்று கத்தியழ தோன்றியது.

"நடக்காத விசயத்தை நினைக்கிறதுக்கு பதிலா சீக்கிரம் ரெடியாகிட்டு வா.. முகூர்த்தத்துக்கு டைம் ஆச்சி.. இல்லன்னா உன் அண்ணன் வந்து சேர்ந்துட போறான்.‌." என்ற கார்த்திக் மேலே நடந்தான்.

'பன்னாடை பரதேசி.. அம்மா என்னை தேடுவாங்கடா.. அப்பாவும் தாத்தாவும் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வாங்க.? எல்லாரும் அண்ணனை திட்டுவாங்களே..' என்று நினைத்தவளுக்கு கார்த்திக்கை கொல்ல வேண்டும் என்றிருந்தது.

மன போராட்டத்தோடு அபிராமி குளித்து உடை மாற்றி வந்தாள். ராசு அவளிடம் சீப்பையும் இதர பொருட்களையும் தந்தாள். வெட்ட வெளியில் நின்று தலையை சீவிக் கொண்டாள்‌. கையிலிருந்த திருமண வளையல் குலுங்கி சத்தமிடும் போதெல்லாம் அண்ணனின் நினைவு வந்தது அவளுக்கு. "டைட்டா போட்டு விட்டுடாதிங்க. போடும் போது பாப்பா கை வலிக்கும். லூசா போட்டு விடுங்க‌.." என்று வளையலுக்கு கூட பார்த்து பார்த்து பாதுகாத்தவனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய போகிறோமே என நினைத்து வெம்பினாள்.

கோவில் பூட்டியிருந்தது. கதவின் வெளியே நின்றபடியே தன்னிடம் தரப்பட்ட மாலையை அபிராமியின் கழுத்தில் போட்டான் கார்த்திக். 'அண்ணா இந்த செகண்டாவது வந்துட கூடாதா நீ.?' என்று மனதுக்குள் அண்ணனை அழைத்தபடியே அவனுக்கு மாலையிட்டாள். 'அண்ணா.. அண்ணா..' என்று மனம் அரற்றியது. சுற்றும் முற்றும் அடிக்கடி பார்த்தாள். தெரிந்தவர்கள் யாராவது வர கூடாதா.? அண்ணன் தன் பைக்கில் வந்து இவனை மிதித்துவிட்டு தன்னை அழைத்துச் செல்ல கூடாதா என்று யோசித்தாள்.

"டைம் ஆச்சி.. தாலி கட்டுடா.." என்று நண்பர்கள் பூவிதழ்களை அர்ச்சதையாக தூவ காத்து நின்றனர்.

அந்த அதிகாலை நேரத்தில் அபிராமியின் கழுத்தில் தாலியை கட்டினான் கார்த்திக். அவளுக்கு அவனை பிடிக்கவில்லை‌. அந்த தாலியும் பிடிக்கவில்லை. அவனை சாகவே விட்டிருக்கலாமோ என்று அந்த கடைசி நொடியில் நினைத்தாள்.

சுற்றி நின்றிருந்தவர்கள் பூக்களை அவர்கள் மீது வீசினர். அது ஆசிர்வாதம் போலவே தோன்றவில்லை அவளுக்கு. அவனின் மனதிலும் காதல் இல்லை. தன் மனதிலும் அமைதி இல்லை என அறிந்தவளின் கண்களில் கலங்கிக் கொண்டே இருந்தன.

"வா.. வந்து பைக்ல ஏறு.." கார்த்திக் சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். அபிராமி விம்மும் நெஞ்சோடு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

முத்தமிழின் மற்ற நண்பர்கள் தங்களின் வீடு நோக்கி கிளம்பினார்கள்.

பகல் விடிந்துக் கொண்டிருந்தது. கார்த்திக்கின் அம்மா யமுனா அப்போதுதான் எழுந்து வாசல் பெருக்க வந்தாள். அவள் கதவை திறந்து கைகளை நெட்டி முறித்த நேரத்தில் வீட்டு வாசலில் வந்து நின்றது பைக்.

"கல்யாணத்துக்கு போனவன் அதுக்குள்ள வந்துட்டானா.?" என்றபடி வாசற்படியின் அருகே இருந்த விளக்கின் ஸ்விட்சை போட்டாள். வாசலின் விளக்கு பளிச்சென்று எரிந்தது. அபிராமி கண்களை சுருக்கினாள். கார்த்திக்கின் பின்னால் நின்றிருந்த அபிராமியை அதன் பிறகுதான் பார்த்தாள் யமுனா.

"டேய் என்னடா பண்ணிட்டு வந்திருக்க.?" கேட்கும்போதே அவளின் கண்கள் கலங்கி விட்டது. வாசற்படிகளை விட்டு இறங்கினாள். அபிராமி குனிந்த தலையோடு நின்றாள்.

"உங்க அண்ணனுக்கு ஏன்டா துரோகம் பண்ண.? அவனுக்கே இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா நீ.." அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.

அவளின் அண்ணன் என்ற வார்த்தை அபிராமியின் கண்களில் கண்ணீரை சிந்த வைத்தது.

"எனக்கு கல்யாணம் ஆனா அவனுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்களா.?" என்றவன் வீட்டை நோக்கி நடந்தான். இரண்டடி நடந்தவன் "உனக்கு தனியா அழைக்கணுமா.?" என்றான். அபிராமி முன்னால் நடந்தாள்.

"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னே போட்டுடுவாருடா.." என்று புலம்பிய அம்மா அவர்களை தாண்டி கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.

"என்னங்க.. மூர்த்தி.. புவனா.." என்று அழைத்தாள்.

கார்த்திக் வீட்டுக்குள் நுழைந்தான். "கொஞ்ச நேரம் வெளியவே இருடா.. அப்பா சம்மதம் சொன்னவுடனே ஆரத்தி எடுக்கறேன்.." என்ற அம்மாவை ஆச்சரியமாக பார்த்தான். அம்மாவிற்கு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் கஷ்டத்தையும் தந்து விட்டோம் என்பதை புரிந்துக் கொண்டான்.

அம்மாவின் குரலுக்கு முதலில் புவனாதான் வந்தாள். "ஏன்ம்மா காலையிலயே கத்துற.?" என கேட்டபடி வந்தவள் கார்த்திக்கை கண்டு அதிர்ந்து போனாள். "அடப்பாவி என்னடா பண்ணியிருக்க‌.? கல்யாண வீட்டுல இருந்து பொண்ணை இழுத்துட்டு வந்திருக்கியே.." என்றாள் கோபத்தோடு.

"அப்பா.. சீக்கிரம் வாங்களேன்.. இந்த கழுதை என்ன பண்ணிட்டு வந்திருக்குன்னு வந்து பாருங்க.." என்று உள்ளே பார்த்து கத்தினாள்.

வாசல் தெளிக்க வந்த பெண்கள் ஒவ்வொருவரும் இவர்களின் வாசலை பார்த்துவிட்டு இவர்களின் வீட்டை நோக்கி படையெடுத்தனர்.

மூர்த்தியும் அவனின் பின்னால் அப்பாவும் வந்தார். அம்மா மேஜை மேல் இருந்த தன் கண் கண்ணாடியை எடுத்து மூக்கின் மீது மாட்டிக் கொண்டாள்.

மூர்த்தி ஆச்சரியத்தில் வாய் பிளந்தான். "மேரேஜ் பண்ணிக்கிட்டியாடா.?" என்றான் அதிர்ச்சியாக. ஆமென தலையசைத்தான் கார்த்திக்.

"அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் அண்ணா.." மூர்த்தியிடம் சொன்னாள் புவனா.

"நான் கட்டிக்கிட்டேன். இப்ப அதுக்கு என்ன.?" என்றவனை கோபமாக பார்த்த அப்பா "இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.?" என்றார்.

"எல்லோரும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க போறிங்களா‌.? எனக்கு தூக்கம் வருது.. தூங்கி எழுந்து உங்களுக்கு பதில் சொல்றேன்.." என்ற கார்த்திக் உள்ளே நடந்தான். அபிராமி கலங்கும் விழிகளோடு தரை பார்த்து நின்றிருந்தாள்.

"இவ ஒருத்தி.. அங்கங்க ஸ்டக் ஆகி நின்னுடுறா.." சலித்துக் கொண்ட கார்த்திக் திரும்பி சென்று அவளின் கை பிடித்து உள்ளே இழுத்து வந்தான்.

அதுவரையிலும் அபிராமியின் முகம் நிமிரவேயில்லை. அவன் கை பிடித்து இழுக்கவும் அதிர்ச்சியில் நிமிர்ந்தாள்‌. அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் கண்டு புவனாவும் மற்றவர்களும் அதிகமாகவே அதிர்ந்து போயினர்.

"அழறாடா அவ.." என்று அம்மா சொல்லவும் நிமிர்ந்து தன் புது மனைவியை பார்த்தவன் "கட்டாய கல்யாணம்மா.." என்றான்.

யமுனா அதிர்ச்சியோடு தன் கணவனை பார்த்தாள். புவனாவும் மூர்த்தியும் காலை நேரத்திலேயே இப்படி வம்பை இழுத்து வந்துள்ளானே என்று சகோதரனை பார்த்தனர்.

திருமண மண்டபத்தில் மணமகளை காணவில்லை என்று உண்டான சலசலப்பு சற்று நேரத்திலேயே பெரும் பரபரப்பை உருவாக்கி விட்டது. முத்தமிழ் நடு கூடத்தில் அமர்ந்திருந்தான். யார் சொல்வதையும் அவன் நம்பவில்லை. தன் தங்கையை உயிராய் நம்பினான். அந்த நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் மாறாது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN