காதல் கடன்காரா 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மணமகள் காணாமல் போனாள் என்ற சேதி ஐந்து மணி வாக்கில்தான் மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. அபிராமியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த பக்கத்து வீட்டு அக்கா ஐந்து மணி வரையிலுமே அபிராமியை அங்கும் இங்கும் தேடிக் கொண்டுதான் இருந்தாள். ஐந்து மணிக்கு மேல்தான் விசயத்தின் தீவிரம் புரிந்து தாத்தா பாட்டியிடம் ஓடி வந்து சொன்னாள். அபிராமி எங்காவது நின்றுக் கொண்டிருப்பாள், யாருடனாவது பேசிக் கொண்டிருப்பாள் என்று நினைத்திருந்தாள் அந்த அக்கா. அபிராமி யாரிடனும் எதிர்த்து கூட பேசாதவள். பெற்றோரின் பேச்சை கண்களை மூடிக் கொண்டு கேட்பவள். அதனாலயே அவள் மண்டபத்தை விட்டு போயிருப்பாள் என்பதை அந்த அக்கா கற்பனை கூட பண்ணவில்லை.

அபிராமி‌ மண்டபத்தில் இல்லை என்ற விசயம் அறிந்த பிறகும் கூட ஒருவரும் அவளை பற்றி தவறாக நினைக்கவில்லை. சிறிதளவு கூட சந்தேகப்படவில்லை. அந்த மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு அறையையும் தேடி பார்த்தார் அப்பா. மண்டபத்தின் மொட்டை மாடிக்கு சென்று தேடினான் முத்தமிழ்.

ஈஸ்வருக்கு என்னவோ சரியில்லை என்பது புரிந்து போனது. அவனின் நண்பர்கள் விசயத்தை அவனிடம் தெரிவித்ததும் அதிர்ந்து போனவன் முத்தமிழின் குடும்பத்திடம் வந்தான்.

"அபிராமி எங்கே போனா.?" என்றான்.

"எங்கே போனான்னு தெரியலப்பா.. மாப்பிள்ளை பிடிக்கலன்னா அதை எங்ககிட்ட கூட சொல்லாம இப்படி ஓடியா போவாங்க.?" என்று பாட்டி முனகவும் பாட்டியை முறைத்தான் ஈஸ்வர்.

"பாட்டி நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.. நம்ம அபிராமி நல்ல பொண்ணு.. அவ நம்மளை நட்டாத்துல விட்டுட்டு போக மாட்டா.. எங்கேயாவது பிரெண்ட்ஸை பார்க்க போயிருக்காளோ என்னவோ.. தேடி பார்க்கலாம்.." என்ற முத்தமிழ் மண்டபத்திலிருந்து திடீரென்று காணாமல் போன தன் நண்பர்களை பற்றி அந்த நேரத்தில் யோசிக்கவே இல்லை.

மண்டபத்தையே பல வட்டம் அடித்து தேடி பார்த்தும் அபிராமி இல்லை. அவள் இல்லை என்பது அவர்களுக்கு புரிந்தது. அதை நம்பதான் மனம் வரவில்லை.

"நம்ம அபிராமி இப்படி பண்ணியிருப்பாளா.?" என்று வருத்தமாக கேட்டார் அப்பா.

ஈஸ்வரின் குடும்பம் இவர்களது குடும்பத்தை ஏற இறங்க பார்த்தது. சண்டை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை.

"அபிராமிக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆயிடுச்சு தமிழு.." யாரோ மண்டப வாசலில் கத்திக் கொண்டு வந்து சொல்லவும் நாற்காலியில் அமர்ந்திருந்த முத்தமிழ் அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.

"கார்த்திக்.." ஈஸ்வர் பற்களை கடித்தான். "உன் தங்கச்சி என்னை சந்தி சிரிக்க வச்சிட்டா.." என்றபடி வந்து முத்தமிழின் சட்டையை பற்றினான். முத்தமிழ் ஈஸ்வரை தன்னிடமிருந்த விலக்கி தள்ளினான்.

"என் தங்கச்சியை பத்தி ஏதாவது தப்பா பேசினா உன் பல்லை முழுசா உடைச்சிடுவேன்.. மரியாதையா பேசு.." என்றவனின் கழுத்தில் குத்து விட்டான் ஈஸ்வர்.

"ஓடுகாலிக்கு சப்போர்ட் பண்றியா.?" என்றான். ஈஸ்வரின் வாயில் வந்து மோதியது முத்தமிழின் கை விரல் முட்டிகள். "என் தங்கச்சியை பத்தி தப்பா பேசாதான்னு சொல்றேன் இல்ல.. உனக்கு புரியலையா.?" என்றவன் சேதி சொன்னவனின் அருகே வந்தான்.

"கார்த்திக்கும் என் தங்கச்சியுமா.?" என்றான் நம்பிக்கை இல்லாமல். ஆமென தலையசைத்தான் சேதி சொன்னவன்.

முத்தமிழ் யோசனையோடு தலையை கீறினான். தங்கையும் கார்த்திக்கும் சாதாரணமாக கூட பேசிக் கொண்டது கிடையாது. அப்படி இருக்கையில் திருமண மண்டபத்திலிருந்து ஓடுவது எப்படி உண்மையாகும்.? அவனுக்கு கார்த்திக் மீதுதான் சந்தேகமாகவே இருந்தது. ஈஸ்வருக்கு அபிராமியை கட்டி தர கூடாது என்று சொல்லி இவனிடம் சண்டை கூட போட்டான் அவன்.

'பங்காளி பிரச்சனையை உங்களுக்குள்ள வச்சிகடா..' என்று சொல்லி அவன் சொல்ல வந்ததை அன்று தட்டி கழித்த முத்தமிழ் இன்றைக்கு நடந்ததோடு விசயத்தை கூட்டி கழித்து பார்த்தான். நண்பன் மீது கொலை வெறி வந்தது.

அம்மா ஒரு பக்கமாக அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். பாட்டி ஊராரின் வாயை மூட என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தாள்.

"நம்ப வச்சி கழுத்தை அறுத்த உங்க குடும்பத்தை சும்மா விட போறதில்ல நான்.." என்ற ஈஸ்வர் மண்டபத்தின் நடுவே இருந்த சிலை ஒன்றை உதைத்து தள்ளி விட்டு வெளியே சென்றான். அவனின் குடும்பமும் அவனின் சொந்த பந்தங்களும் அவனை பின்தொடர்ந்து சென்றது.

"உன் தங்கச்சி இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்பா.." என்று சாபம் தந்து விட்டு சென்றாள் மாப்பிள்ளையின் அம்மா.

"என்ன இருந்தாலும் கார்த்திக் பண்ணது ரொம்ப தப்பு. இரண்டு வீட்டோட மானம் போயிடுச்சி இன்னைக்கு. இரண்டு ஊர் பார்த்திருக்க சபையில வச்சி நம்ம மூக்கை அறுத்துட்டான் அவன்.." என்று திட்டினார் அப்பா.

"நான் என்னன்னு பார்த்துட்டு வரேன்ப்பா.. நீங்களும் மத்தவங்களும் வீட்டுக்கு போங்க.." என்ற முத்தமிழ் தனது வேட்டியை தூக்கி கட்டிக் கொண்டு வெளியே நடந்தான்.

"என்னடா சாதாரணமா கிளம்பிட்ட.. நம்ம ஆளுங்க பத்து பதினைஞ்சி பேர் ஒன்னா போய் அவங்க வீட்டை பிரிச்சி மேஞ்சிட்டு நம்ம பொண்ணை தூக்கிட்டு வந்துடலாம்டா.." என்றான் பெரியப்பா மகன் ஒருவன்.

பைக் சாவியை உள்ளாடை பாக்கெட்டிலிருந்து தேடி எடுத்தபடி அவனை பார்த்த முத்தமிழ் "சின்னதா முடியற விசயத்தை சின்னதாவே முடிச்சிடலாம். பத்து பேரும் வேணாம். பந்தாவும் வேணாம். நம்ம வீட்டு பொண்ணு மானமும் இதுக்கு மேல போக வேணாம்.." என்றான். மண்டப வாசலில் ஒரு ஓரமாக நின்றிருந்த தன் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

முத்தமிழுக்கு மலையளவு கோபம் வந்தது கார்த்திக்கின் மீது.

கார்த்திக்கின் வீட்டு வாசலில் கூடியிருந்த கூட்டம் அபிராமியை பரிதாபமாக பார்த்தது.

"கல்யாண பொண்ணு அழறா.. அப்படின்னா இவன்தான் கட்டாயப்படுத்தி இழுத்துட்டு வந்திருக்கான்.." என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"ராக்காயி அத்தை.. முத்தம்மா சித்தி.‌. நீங்கயெல்லாம் போய் உங்க வேலையை பார்க்கறிங்களா.? காலங்காத்தால வீட்டு வாசல்ல வந்து கூட்டம் போட்டுட்டு இருக்காதிங்க.." என்றாள் புவனா. அங்கே நின்றிருந்த பெண்கள் அவளை முறைப்போடு பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

"பிரெண்டோட தங்கச்சியை மண்டபத்துல இருந்து இழுத்துட்டு ஓடி வந்ததும் இல்லாம அதையும் கட்டாய கல்யாணமா பண்ணிட்டு வந்திருக்கியே.. உருப்படியா நீயெல்லாம்.?" என்று இப்போது சகோதரனை திட்டினாள் புவனா.

அபிராமி அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் கரை புரண்டு கொண்டு வந்தது. விக்கி விக்கி அழுதவளை விசித்திரமாக பார்த்த கார்த்திக் "அழுகையை அப்படியே நிறுத்திடு.. இல்லன்னா நான் பொல்லாதவனா மாறிடுவேன்.." என்று அதட்டினான். அபிராமி விதிர்த்து போய் அழுகையை அடக்கினாள். அப்போதும் கூட கண்களில் இருந்து பொங்கிய கண்ணீர் நிற்கவேயில்லை.

"சின்ன புள்ளையை ஏன்டா மிரட்டுற.?" என கேட்ட அம்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு துடைப்பத்தை கையில் எடுத்தாள்.

மூர்த்தி அம்மாவின் கையிலிருந்த துடைப்பத்தை வாங்கி தூர எறிந்தான். "விடும்மா.. அவன்தான் லூசுதனமா பண்றான்.. நீயும் ஏன்.?" என்றவன் தம்பியை முறைப்பாக பார்த்தான்.

"கல்யாணம்ங்கறது பெரிய விசயம்டா.. ஏன்டா இப்படி எல்லோர் உயிரையும் வாங்கற.?" சலிப்பாக கேட்டவன் தந்தையின் பதிலை எதிர்பார்த்து அவர் பக்கம் திரும்பினான். தம்பியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவாரோ என்று கவலையாக இருந்தது.

"இந்த பொறுக்கி கூட ஏன்ம்மா வந்த.?" என்றார் அப்பா. மூர்த்திக்கு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. தன் தம்பியை விட்டுக் கொடுத்து பேசுகிறாரே என்று கவலைப்பட்டான் அவன்.

"நான் வரலன்னா விஷம் குடிச்சி செத்துருவேன்னு சொன்னாரு.." அழுகை குரலில் அவள் சொன்னது கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அம்மாவுக்கு கோபத்தில் ரத்தம் எரிமலையாக கொதித்தது. மகனை இன்றைக்கு பின்னியெடுத்து விட வேண்டும் என்று நினைத்து துடைப்பத்தை பார்த்தாள்.

கார்த்திக் விசயத்தை விளக்கிச் சொல்ல இருந்த நேரத்தில் வாசலில் பைக் ஒன்று வந்து நின்றது.

முத்தமிழ் தன் பைக்கிலிருந்து இறங்கி வந்தான். புவனா தன்னை மறந்து அவனின் அழகை ரசித்தாள். அவ்வப்போது தூரத்திலிருந்து பார்த்தாலே அழகில் அள்ளுவான். இன்று வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என்று மணமகன் போல கோலம் கொண்டிருந்ததால் தனி பேரழகாக தெரிந்தான். அவன் தன் வீட்டிற்கு சண்டை செய்ய வந்துள்ளான் என்பதை கூட கவனிக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள் புவனா. முத்தமிழ் அண்ணியின் அண்ணன் ஆகி விட்டான். அப்படியானால் இனி தைரியமாக சைட் அடிக்கலாம் என்று அவளுக்கு மனதுக்குள் எண்ணம் தோன்றியது.

"டேய் பன்னாடை.." என்று வரும்போதே கத்திக் கொண்டு வந்த முத்தமிழ் அருகே வந்ததும் கார்த்திக்கின் வயிற்றிலேயே ஒரு குத்து விட்டான்.

"அச்சோ அண்ணா.." என்று கத்திய புவனா மூர்த்தியை முன்னால் தள்ளி விட்டாள். மூர்த்தி சகோதரனை காப்பாற்ற நினைத்து அருகே நெருங்கினான்.

கார்த்திக்கின் சட்டை காலரை இறுக்க பற்றியபடி மூர்த்தியை பார்த்தான் முத்தமிழ். "நீங்க இதுல நடுவுல வராதிங்க.. இவனால எங்க குடும்ப மானமே போயிடுச்சி.." என்றான் கோபமாக.

"நடந்தது நடந்து போச்சி.. மன்னிச்சி விட்டுட்டுப்பா.." தனது வார்த்தையில் எந்த வித நியாயம் இருக்கிறது என்று சொல்லி விட்டு யோசித்தாள் அம்மா.

"நீங்களும் பொம்பள புள்ளையை வச்சிருக்கிங்க. பார்த்து பேசுங்க.. கல்யாணத்துக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. இவன் இப்படி பண்ணி வச்சிருக்கான். இவனை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா.? நண்பன்னு மதிச்சி வீட்டுல விட்டதுக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்ய சொல்லுதா இவனை.?" என்று கோபத்தோடு கேட்டான்.

முத்தமிழின் கையை தன் சட்டை காலரிலிருந்து விலக்கி தள்ளினான் கார்த்திக். "ஈஸ்வர் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஆகாது.. அவன் வீட்டுக்கு பொண்ணு தராதன்னு நான் முன்னாடியே சொன்னேன். நீதான் கேட்கல.." என்றான். அவன் சொல்லி முடித்த நேரத்தில் அவன் வாயிலேயே நச்சென்று ஒரு குத்து விட்டான் முத்தமிழ்.

"உன் பங்காளி பிரச்சனைன்னா அது உங்க பிரச்சனை. என்ன வெங்காயத்துக்கு நீ இதுல என் குடும்பத்தை இழுத்து விடுற.? என் தங்கச்சி கல்யாணத்துக்கு ஒவ்வொன்னையும் எப்படி பார்த்து பார்த்து செஞ்சேன் தெரியுமா.? அத்தனையையும் நாசம் பண்ணிட்டு கருத்து பேசுறியா நீ.?" என்றவன் அவனின் வயிற்றிலேயே மீண்டும் ஒரு குத்து விட்டான்.

அதற்கு மேல் பார்க்க சகிக்காமல் ஓடி வந்து தம்பியை தன் அருகே இழுத்துக் கொண்டான் மூர்த்தி. "போதும் விடு தமிழ்.. அடிச்சே கொன்னுடாத இவனை.." என்றான். "பங்காளி சண்டைக்கு சம்பந்தமே இல்லாம இந்த புள்ளை வாழ்க்கையை ஏன்டா கெடுத்து வச்சிருக்க.?" என கேட்டான்.

கார்த்திக் பதில் சொல்லாமல் நண்பனை பார்த்தான்.

முத்தமிழ் அழுதுக் கொண்டிருந்த தன் தங்கையின் அருகே வந்தான். "இவனெல்லாம் ஒரு ஆள் வெங்காயம்ன்னு இவனை நம்பி வந்திருக்க.." என்று திட்டியவன் அவளின் கழுத்திலிருந்த மாலையை கழட்டி கார்த்திக்கின் காலடியில் வீசினான். அபிராமியின் தாலியை பற்றியவன் அதை கழட்ட இருந்த நேரத்தில் அவனின் கையை பற்றினான் கார்த்திக்.

"ஓவரா பண்ணாத தமிழு.. அவ இப்ப என் பொண்டாட்டி.. அவ கழுத்துல இருந்த மாலையை கழட்டியதுக்கே உன்னை கொல்லணும் நான்.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN