காதல் கடன்காரா 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக்கை ஆச்சரியத்தோடு பார்த்தாள் அபிராமி. 'இவன் பிடிக்காமதானே கல்யாணம் பண்ணான்.? பிறகெதுக்கு இப்ப ஓவரா பண்றான்.?' என்று நினைத்தாள்.

"திருட்டுதனமா கூட்டி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை நாங்க ஏத்துக்கணுமோ.? இப்ப நீ குறுக்க நின்னா உன்னை கொன்னுட்டு என் தங்கச்சியை விதவையா இங்கிருந்து கூட்டி போவேன்டா.." என்ற முத்தமிழை அதிர்ச்சியோடு பார்த்தனர் அனைவரும்.

"இருப்பா தம்பி பெரியவங்களை வச்சி பொறுமையா பேசி முடிவு பண்ணிக்கலாம்.." என்றார் கார்த்திக்கின் அப்பா. மூர்த்தியும் ஆமென்று தலையசைத்தான்.

"நீங்க யாரும் இதுல குறுக்க வராதிங்க. இவன் மேல நான் கொலை காண்டுல இருக்கேன். இவனை இன்னும் உயிரோடு விட காரணமே நான் உங்க மேல வச்சிருக்கும் மதிப்பும் மரியாதையும்தான்.." என்ற முத்தமிழ் தன் கையை பற்றியிருந்த கார்த்திக்கின் கையை தள்ளி விட்டான். அபிராமியின் கழுத்திலிருந்த தாலியை கழட்டி நண்பனின் முகத்தில் விசிறியடித்தான்.

கார்த்திக்கின் முகம் கோபத்தில் செவ்வானமாக சிவந்து கிடந்தது. அவனின் முகத்தில் வந்து விழுந்த தாலி அவனின் காலடியில் விழுந்தது. பற்களை கடித்தபடி நண்பனை நிமிர்ந்து பார்த்தான்.

"ரொம்ப தப்பு பண்ற நீ.." என்றவன் அபிராமியை கை பிடித்து தன் அருகே இழுத்துக் கொண்டான். முத்தமிழின் ஆத்திரம் அதிகமாகியது.

"இப்ப இவ என் பொண்டாட்டி.. நீ வாயை மூடிக்கிட்டு என் வீட்டை விட்டு கிளம்பு.." என்ற கார்த்திக் அபிராமியின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே இருந்த அறையை நோக்கி கிளம்பினான். அபிராமியின் மற்றொரு கையை பிடித்த முத்தமிழ் "என் தங்கச்சியை நான் கூட்டி போக போறேன்.. உன்னையும் சாகடிக்க போறேன்.." என்றான்.

அபிராமி அண்ணனின் கையை பார்த்தாள். கணவனின் கரத்தையும் பார்த்தாள். கார்த்திக் அவளின் கையை இறுக்கமாக பற்றியிருந்தான். அவனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டாள். சிரமமாக இருந்தது. அவளின் மணிக்கட்டு லேசாக சிவந்து போய் விட்டது அதற்குள்ளாகவே.

அபிராமியை முறைத்தான் கார்த்திக். முத்தமிழ் அவளை தன் அருகே நெருக்கமாக நிறுத்திக் கொண்டான். நண்பனை தெனாவட்டு பார்வை பார்த்தான். இவ என் தங்கைடா என்ற கர்வம் இருந்தது அந்த பார்வையில்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. இப்படி வா.." அபிராமியை தன்னருகே இழுக்க முயன்றான் கார்த்திக். அபிராமி அண்ணனின் பக்கம் நெருங்கி நின்றுக் கொண்டாள். மறுப்பாக தலையசைத்தாள். கண்களில் இருந்த ஈரம் காய்ந்து போயிருந்தது. ஆனாலும் கன்னத்தின் மீது இருந்த கண்ணீர் கரைகள் அப்பட்டமாக தெரிந்தது.

"நான் வர மாட்டேன்.." என்றவள் அண்ணனின் முதுகின் பின்னால் சென்று நின்றுக் கொண்டாள்.

முத்தமிழுக்கு தங்கையை பார்த்து பரிதாபமாக இருந்தது. கார்த்திக்கிற்கு அந்த கோபத்திலும் சிரிப்பு வந்தது.

"நான் உன் புருசன். என்னோடு வா.." என்றான்.

அபிராமி அண்ணனின் முதுகில் முகம் புதைத்துக் கொண்டாள்.

"லெட்டர் இன்னமும் என் பாக்கெட்ல இருக்கு அபிராமி.." என்ற கார்த்திக்கின் முதுகில் ஓங்கி அறைந்தாள் புவனா. "சின்ன பையனாட்டம் நடந்துக்காத அண்ணா.." என்றாள் கோபத்தோடு.

"என்ன லெட்டர்.?" தங்கையின் புறம் திரும்பி பார்த்து கேட்டான் முத்தமிழ்.

அபிராமிக்கு அழுகையாக வந்தது. "கூட வரலன்னா விஷம் குடிச்சி செத்துடுவேன்னு சொன்னார் அண்ணா.." என்றாள் விம்மலாக.

முத்தமிழ் நண்பனை அதிர்ச்சியோடு பார்த்தான். ஏதேனும் ஒரு வில்லங்கம் இல்லாமல் தங்கை வந்திருக்க மாட்டாள் என்பதை ஏற்கனவே யூகித்து வைத்திருந்த முத்தமிழுக்கு நண்பனின் இந்த செயல் கோபத்தை அதிகமாக தந்தது.

கார்த்திக்கின் அம்மாவும் அப்பாவும் அங்கே நடப்பதை கண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.

"அவன் செத்தா என்ன போகுது.? நீ ஏன் இவன் கூடவெல்லாம் வந்த.?" என்று தங்கையை திட்டினான் முத்தமிழ்.

"இப்ப நீ அவனோடு போனா நான் நிஜமாவே செத்துடுவேன் அபிராமி.." என்று கார்த்திக் சொல்லவும் அபிராமிக்கு கலக்கமாக இருந்தது. முன்பே இருந்த பயம் இல்லையென்றாலும் கூட இறந்து விடுவானோ என்று கவலைப்பட்டாள்.

"அவனோடு தங்கிடலாம்ன்னு கனவுல கூட நினைக்காத. நான் அவனை கொன்னு போட்டுட்டு உன்னை கூட்டி போவேன்.." எச்சரிக்கும் விதமாக முத்தமிழ் சொன்னான். இது அவனது தங்கைக்கான எச்சரிக்கை அல்ல. நண்பனுக்கானது.

அபிராமி வர முடியாதென்று கார்த்திக்கிடம் தலையசைத்தாள். தான் போட்ட திட்டம் அனைத்தும் வீணாக போனதே என்று வருத்தமாக இருந்தது கார்த்திக்கிற்கு. ஆனாலும் கூட ஈஸ்வரை பழி வாங்கியதே பெரிய சாதனையாக தோன்றியது.

அபிராமியை தன்னோடு அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் முத்தமிழ். கார்த்திக் அவர்களை பின்தொடர முயன்றான். அவனின் கையை பற்றி நிறுத்தினான் மூர்த்தி.

"லூசு மாதிரி பண்ணாம இருடா.." என்றான். அண்ணனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்ட கார்த்திக் "அவன் கூட்டி போறது என் பொண்டாட்டியை.." என்றான்.

"கட்டாய தாலிக்கு ஓவர் பில்டப் வேணாம்.. இத்தோடு அடங்கு.." என்றாள் புவனா. அவளை முறைத்தான் கார்த்திக். ஈஸ்வரின் திருமணத்தை நல்லபடியாக தடுத்து நிறுத்தியாயிற்று. இதன் பிறகு அபிராமி எதற்கு என்று மனம் கேட்டது. ஆனால் தாலி கட்டி விட்ட பொண்டாட்டி என்பதால் உள்ளுக்குள் என்னவோ அரித்தது. காதல் இல்லை. ஆனால் புதிதாய் ஒரு பிடிப்பு உருவாகி இருந்தது.

மூர்த்தி தம்பியை இடுப்போடு இறுக்கி பிடித்திருந்தான். கார்த்திக் வாசலை பார்த்தான். முத்தமிழ் பைக்கை ஸ்டார்ட் செய்தான். அபிராமி வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் கட்டியிருந்த கூரை புடவை லேசாக கசங்கி இருந்தது. இவன் வேண்டா வெறுப்பாக வைத்த செந்தூரம் அவளின் நெற்றியில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது. வண்டியில் அமர்ந்தபடி இவனை திரும்பி பார்த்தாள். கார்த்திக்கின் கண்களில் கோபம் இருந்தது. விட்டுச் செல்கிறாளே என்ற கோபம்.

அபிராமி உணர்ச்சிகளற்று இவனை பார்த்தாள். இவனின் காலடியில் விழுந்து கிடந்த தாலியையும் கடைசி தடவையாக பார்த்தாள். அதற்குள் முத்தமிழ் பைக்கை கிளப்பி விட்டான்.

அபிராமியின் மின்னும் விழிகள் கார்த்திக்கின் முகத்தை விட்டு அகன்றது.

கார்த்திக் கோபத்தோடு தன் அம்மாவை பார்த்தான். "நீயெல்லாம் என்ன அம்மா.? மஞ்ச தாலி, புருசன், பொண்டாட்டின்னு எதையாவது சொல்லி அவளை நிறுத்த மாட்டியா‌.? உங்களை நம்பி ஒரு கல்யாணம் கூட பண்ண முடியாது போல.. இதே வேற ஒருத்தரா இருந்திருந்தா என் வீட்டு மருமகளை எங்கேயும் அனுப்ப மாட்டோம்ன்னு சொல்லி குறுக்க நின்னிருப்பாங்க.." என்றான்.

புவனா தன் செவிகளை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டாள்.

அப்பா அருகே இருந்த ஒட்டடை குச்சியை கையில் எடுத்தார். கார்த்திக்கின் தோளில் ஒரு அடியை தந்தார். கார்த்திக் அடி வாங்கிய தோளை தேய்த்து விட்டபடி அப்பாவை முறைத்தான்.

"இந்த வயசுல.. அதுவும் உன் அண்ணனே இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கும்போது, கட்டிக் கொடுக்கற வயசுல தங்கச்சியை வீட்டுல வச்சிக்கிட்டு வேற ஒருத்தனுக்கு பார்த்து வச்ச பொண்ணை கல்யாண மேடையில் இருந்து இழுத்துட்டு வந்து கட்டாய தாலி கட்டுனதுக்கு உன்னை போலிஸ்லதான்டா பிடிச்சி கொடுக்கணும்.." என்றார் அப்பா.

கார்த்திக் அம்மாவை பார்த்தான். "வர வர ரொம்ப மோசமா போற கார்த்தி நீ.. உன் கல்யாணத்தை பத்தி எவ்வளவு கற்பனை பண்ணி வச்சிருந்தேன் நான். நீ விளையாட்டா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கற.." என்றாள் அம்மா.

கார்த்திக்கிற்கு அவர்கள் அனைவர் மீதும் கோபம் வந்தது. விளையாட்டு கல்யாணம் அல்ல அது என்று மனம் கூப்பாடு போட்டது. ஆனாலும் கார்த்திக் அபிராமி திருமணம் அந்த நேரத்தில் விளையாட்டாகதான் போனது.

முத்தமிழ் நேராக வீட்டிற்கே வந்து விட்டான். அம்மாவும் பாட்டியும் வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர். இவளை கண்டதும் கோபத்தில் அடிக்க வந்தாள் அம்மா. "எங்கடி போய் தொலைஞ்ச.? குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டியே.." என்றாள்.

அம்மாவை தடுத்து நிறுத்தினான் முத்தமிழ். "நீ கொஞ்ச நேரம் சும்மா இரும்மா.." என்றவன் தங்கையை தன் புறம் திருப்பினான். "உனக்கு ஏதாவது ஆச்சா என்ன.? அந்த பன்னாடை அடிச்சிட்டானா.? உன்னை ஏதாவது பண்ணிட்டானா.?" என கேட்டவன் அபிராமியை மேலும் கீழும் பார்த்தான்.

இல்லையெனும் விதமாக தலையசைத்தவள் "அவன் விஷத்தை குடிச்சிடுவானா.?" என்றாள் சந்தேகத்தோடு.

"அவன் செத்தா ஊர் முனியப்பனுக்கு நான் கிடாய் வெட்டுறேன்.. நீ கவலைப்படாத.." என்ற முத்தமிழை பாட்டி குழப்பமாக பார்த்தாள். பேத்தியின் நெற்றியில் இருந்த குங்குமமும் கழுத்தில் இல்லாத தாலியும் அவளுக்கு சந்தேகங்களை தந்தது.

"என்ன அபிராமி ஆச்சி.?" என்று விசாரித்தாள் பேத்தியிடம்.

அபிராமி நடந்ததை சொன்னாள். முத்தமிழ் அவளின் நெற்றியில் அடித்தான். "அப்பவே வந்து எங்ககிட்ட சொல்லாம அவனோடு கிளம்பி போயிருக்க. சுத்தமான முட்டாள் நீ.. அவன் அதே லெட்டரையும் விஷத்தையும் வச்சி உன்னை வேற எதுக்காகவாவது யூஸ் பண்ணியிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.? இத்தனை வருசம் சோத்துல உப்பு காரம் போட்டு ஊட்டுனதுக்கு ஒரு உபயோகமும் இல்ல.." என்றான் கோபத்தோடு.

அபிராமி கலங்கும் கண்களோடு பாட்டியை பார்த்தாள். "நீ போடா அந்த பக்கம்.. கண்டவனையும் பிரெண்டுன்னு வீட்டுக்கு கூட்டி வந்துட்டு பாப்பாவை திட்டுறியா.?" என்ற பாட்டி பேத்தியை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். அம்மா அபிராமியை கவலையோடு பார்த்தாள்.

"தாலி எங்கடி.?" என்றாள் தயக்கமாக.

முத்தமிழ் அம்மாவை முறைத்தான். "நான்தான் கழட்டி வீசிட்டு வந்தேன். அந்த நாயை கை காலை உடைக்காம விட்டதே பெருசு.." என்றான்.

"பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு தோணுச்சா உனக்கு.?" என்று திட்டினாள் பாட்டி.

"அவன் என்ன பெரியவங்ககிட்ட கேட்டுட்டா என் தங்கச்சியை இழுத்துட்டு போனான்‌.?" முத்தமிழும் திருப்பிக் கேட்டான்.

"போய் இந்த சேலையை கழட்டி எறிஞ்சிட்டு குளிச்சிட்டு வா.." என்றான். தங்கை கட்டியிருந்த கூரை புடவை அவனை உறுத்தியது. செல்வ சீமாட்டிக்கு இந்த பழங்கால கூரை புடவையா என்று மனம் அடித்துக் கொண்டது.

அபிராமி தன் அறையை நோக்கி நடந்தாள்.

தாத்தாவும் அப்பாவும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். "சொந்த பந்தங்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வச்சிட்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சி.. ஊர்ல இருக்கற எல்லார் வீட்டிலும் நம்ம வீட்டு சம்பவம்தான் பேசு பொருளா ஓடிட்டு இருக்கு.." என்று கவலையோடு சொன்னார் அப்பா.

முத்தமிழின் முகம் பார்த்த தாத்தா "பாப்பா எங்கே.?" என்றார்.

"குளிக்க சொல்லி அனுப்பி இருக்கேன்.." என்றுவிட்டு நடந்ததை சொன்னான்.

"நானா இருந்திருந்தா குடிடா நீ.. பார்க்கறேன்னு நானுன்னு நின்னிருப்பேன். இவ அவன் பேச்சுக்கெல்லாம் பயந்து கூட போயிருக்கா.." ஆதங்கம் தீராமல் சொன்னான் முத்தமிழ்.

"முடிஞ்சதை விடுடா.. அவன் மேல போலிஸ் கம்ப்ளைண்ட் தரலாமா.? இல்ல ஆள் வச்சி தீர்த்துடலாமா.?" என்று கேட்டார் தாத்தா.

குளித்து முடித்து வந்த அபிராமி தாத்தாவின் கேள்வியால் அதிர்ந்து நின்றாள்.

"போலிஸ் கம்ப்ளைண்ட் தந்தா நம்ம குடும்ப மானம்தான் போகும்.. ஆள் வச்சி செய்ற அளவுக்கு அவனுக்கு அவ்வளவு சீன் கிடையாது. நானே இரண்டு பசங்களை கூட்டி போய் ஒரு கை பார்த்துட்டு வந்துடுறேன்.." என்றான் முத்தமிழ்.

கார்த்திக் தன் அறையில் சோகமாக அமர்ந்திருந்தான். வெற்றி பெற்ற அதே நேரத்தில் தோல்வியுற்றது போலிருந்தது. அபிராமியின் முகம் கண்களில் வந்து நின்று போனது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN