காதல் கடன்காரா 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக்கின் திருமணம் விளையாட்டாய் போனது. ஆனால் முத்தமிழுக்குதான் நண்பன் மீது ஆத்திரம் வந்தது. அண்ணன் கோபத்தில் என்னவோ சொல்கிறான் என்று நினைத்திருந்தாள் அபிராமி. ஆனால் அடுத்த இரண்டாம் நாளே இரண்டு அடியாட்களை கூட்டிச் சென்று கார்த்திக்கை வழி மறித்தான் முத்தமிழ்.

ஊரின் எல்லை அது. மாலை வேளை. அங்கே யாரும் இல்லையென்பது முத்தமிழுக்கு வசதியாக போய் விட்டது. நண்பன்தானே என்ற அலட்சியம் கார்த்திக்கிற்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. நண்பனை கண்டதும் புன்னகையோடு பைக்கை நிறுத்தினான் கார்த்திக்.

"என்னடா மச்சான் மாப்பிள்ளையை பார்க்க வந்திருக்கியா.?" என கேட்டபடி பைக்கிலிருந்து இறங்கிய கார்த்திக்கின் தலையில் வந்து மோதியது முத்தமிழின் கையில் இருந்த உருட்டு கட்டை. கார்த்திக்கின் நெற்றி உடைந்தது. பைக்கை அவன் இன்னும் ஸ்டேன்ட் போடவே இல்லை. அதனால் பைக் தரையில் அப்படியே சாய்ந்தது.

"எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தமிழு.." என்றவனின் அருகே வந்த முத்தமிழ் அவனின் நெஞ்சில் உதைத்தான். நிலை தடுமாறி பின்னால் விழுந்தான் கார்த்திக்.

"பேச என்ன வெங்காயம்டா இருக்கு.? என் தங்கச்சி வாழ்க்கையையே நாசம் பண்ணிட்ட.. அவளை எவ்வளவு பாசமா வளர்த்துறோம் தெரியுமா.? உனக்கு அவளை பிடிச்சிருந்து நேரா வந்து வீட்டுல கேட்டிருந்தா கூட நாங்களே பார்த்துக் கட்டி வச்சிருப்போம்.. ஆனா கல்யாண மேடையில இருந்து அவளை கடத்திட்டு போயிருக்க.. அவளோட இன்னசெஸ்ன்ஸை தப்பா யூஸ் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது.?" என கேட்டவன் நண்பனின் முகத்தில் குத்து விட்டான்.

ரத்தம் கசிந்த நெற்றியை ஒரு கையால் பிடித்துக் கொண்டிருந்த கார்த்திக் இப்போதைய அடியால் ரத்தம் கசிந்த உதட்டை மற்றொரு கையால் துடைத்தான்.

"என் பொண்டாட்டியை விதவையாக்க டிரை பண்றியா.?" என்றான். அவனுக்கு வாய் நிற்கவில்லை என்பது மற்றொரு பலவீனம்.

"விதவையா.? அவ தலைமுடி கூட கலைய கூடாதுன்னு நினைக்கிறவன்டா நான்.. அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு சட்டம் பேசுறியா.?" என்று கோபத்தோடு கேட்ட முத்தமிழ் நண்பனின் வயிற்றில் ஓங்கி உதைத்தான்.

முத்தமிழின் உடன் வந்திருந்த இருவரும் கார்த்திக்கின் பைக்கை அடித்து நொறுக்கினர்.

"இரண்டு நாளா அவ சரியா சாப்பிட கூட இல்லடா.. ஊர் முழுக்க அவளை பத்திதான் பேசுறாங்க.. உன்னை நண்பன்னு நினைச்சதுக்கு நல்ல பரிசு தந்துட்ட நீ.." என்ற முத்தமிழ் கோபம் தீராமல் நண்பனை அடி புரட்டி எடுத்தான்.

ரத்தம் ஆங்காங்கே கசிந்த நிலையில், கார்த்திக்கின் உடம்பில் ஐந்தாறு எலும்புகளை நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றான் முத்தமிழ்.

அபிராமி தனது அறையில் இருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாளாக இப்படிதான் இருக்கிறாள். சரியாக சாப்பாடு இறங்கவில்லை. தூக்கமும் அவ்வளவாக வரவில்லை. மனதெல்லாம் ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு. நேற்று மாலையில் ஈஸ்வர் போன் செய்து இருந்தான்.

"என்ன நடந்துச்சின்னு கேள்விப்பட்டேன். அவன் செத்தா சாகட்டும்ன்னு விடாம ஏன் அவனோடு போன.?" என்றான் கோபத்தோடு. அபிராமிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

"அப்பா அம்மாக்கிட்ட நான் பேசுறேன்.. ஏதாவது நல்ல முடிவா சீக்கிரம் எடுக்கலாம்.." என்றான். அபிராமி மௌனம் மட்டுமே காத்தாள். அவன் பெருமூச்சு விட்டான். "உன் மேல எனக்கு கோபம் இல்ல அபிராமி.." என சொல்லி விட்டு போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

ஈஸ்வரின் நல்ல குணம் அபிராமிக்கு மெய்சிலிர்ப்பை தந்தது. அவனுக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற எண்ணம் அவளை சங்கடப்படுத்தியது.

அப்பாவும் தாத்தாவும் திருமணத்திற்கு செய்த செலவு அத்தனையும் வீணாக போனதே என்ற கவலையில் இருந்தனர். பாட்டி ஜோசியக்காரனை கூட்டி வந்து அபிராமியின் ஜாதகத்தை அவனிடம் தந்து பார்த்தாள். அபிராமிக்கு இந்த திடீர் திருமணம்தான் நிலைக்கும் என்று சொன்னான் அவன். 'இந்த திடீர் திருமணத்தை பற்றி ஏற்கனவே ஏன் கணித்து சொல்லவில்லை என்று ஜோசியக்காரனிடம் சண்டைக்கு போனாள் பாட்டி. அவன் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துவிட்டு "பரிகாரம் செய்யணும்.." என்றான் பொத்தம் பொதுவாக.

"இதுக்கு மேலயும் பொய்யா சொல்லிக்கிட்டு இருந்தா உனக்கு நான் சமாதி கட்டிடுவேன்.." என்று மிரட்டி அவனை வீட்டை விட்டு துரத்தினாள் பாட்டி.

அந்த வீடே சோகத்தில்தான் மூழ்கி போயிருந்தது. திருமண மண்டபத்தை விட்டு கிளம்பி சென்ற உறவுகள் ஒவ்வொருவராக வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். நிறைய உறவுகள் அபிராமியை திட்டினார்கள். அவர்கள் திட்டுவது தாத்தாவிற்கு கோபத்தை தந்தது.

"என் பேத்தியை குறை சொல்ல நீங்க யோக்கியமா.?" என கேட்டு எல்லோரிடமும் சண்டைக்கு சென்றார்.

அம்மா மூன்று வேளையும் அபிராமிக்கு சுற்றி போட்டாள். ஊராரின் கண்பட்டதால்தான் தன் மகளின் திருமணம் இடை நின்று போனது என்று புலம்பினாள் அவள். அவர்கள் அனைவருமே அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அபிராமியின் திருமணம் இடை நின்று போனது. ஆனால் அவளுக்கு நடந்த கட்டாய கல்யாணத்தை கணக்கில் சேர்க்கவும் மறுத்து விட்டனர்.

"எந்த நாயோ ஒரு கயித்தை எடுத்து என் மக கழுத்துல கட்டிட்டா அது கல்யாணம் ஆகிடுமா.?" என்றார் அப்பா.

கார்த்திக்கின் அப்பா இவர்கள் வீட்டில் வந்து பேசினார். 'நடந்தது நடந்துடுச்சி.." என்று அவர் ஆரம்பித்தபோதே "நடந்தது நடந்து முடிஞ்சி போச்சி.. அதை சாக்கா வச்சி என் பேத்தியை உங்க வீட்டுக்கு கூப்பிடுடாதிங்க. நாங்க அப்புறம் சும்மா இருக்க மாட்டோம்.. உங்க பையனை போலிஸ்ல பிடிச்சி தராம இருக்கறதுக்கு எங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருங்க. நாங்க நல்லவங்களாம் கிடையாது. எங்க பொண்ணு வாழ்க்கையை விடவும் வேற எதுவும் எங்களுக்கு முக்கியமும் கிடையாது.." என்றார் தாத்தா.

கார்த்திக்கின் அப்பாவிற்கு அதற்கு மேல் பேச கூட மனம் வரவில்லை. அப்படியே எழுந்து அமைதியாக கிளம்பி விட்டார். தன் மனைவியின் இடைவிடாத தொல்லையால்தான் இந்த வீடு வரை வந்தார் அவர். ஆனால் இவர்கள் இப்படி முகத்தில் அடித்தார் போல் பேசி விடவும் அவருக்கு அங்கே நிற்க கூட பிடிக்கவில்லை.

வீட்டின் ஹாலில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்கவும் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் அபிராமி.

ஹாலின் நடுவே நின்றிருந்த முத்தமிழை தாத்தா திட்டிக் கொண்டிருந்தார். "இருக்கற பிரச்சனை போதாதுன்னு நீ வேற ஏன்டா.?" என்றார் அப்பா.

"அதுக்காக அவனை அப்படியே விட சொல்றிங்களா.? இந்த முத்தமிழ் நட்புன்னு வந்துட்டா உயிரை கூட தருவான். ஆனா அதுவே தங்கச்சிக்கு ஒன்னுன்னா எத்தனை உயிரை வேணாலும் எடுப்பான்.." என்று வீர வசனம் பேசினான் முத்தமிழ். அம்மா சோகமாக நெற்றியை பிடித்தாள்.

"அவனை கொன்னுட்டியா.?" தாத்தா தயக்கமாக கேட்டார்.

"இல்ல.. சும்மா இரண்டு தட்டு தட்டினேன்.." என்றவன் பாட்டி கொண்டு வந்து தந்த தண்ணீரை ஒரே விழுங்கில் குடித்தான்.

அண்ணன் கார்த்திக்கைதான் அடித்து விட்டு வந்திருக்கிறான் என்பதை அபிராமியாலும் யூகிக்க முடிந்தது. அபிராமிக்கும் கார்த்திக்கின் மீது ஆத்திரங்கள் இருந்தது. ஆனால் அடிப்பது, உதைப்பது.. என்று அவன் அடிப்படுவதை விரும்பவில்லை.

முத்தமிழ் தங்கையை பார்த்தான். அழகாய் புன்னகைதான். அவளை பார்க்கும் போதெல்லாம் பூக்கும் அதே மென்மையான புன்னகை.

"இனி அவன் உன் ஏரியா இருக்கற பக்கம் கூட திரும்ப மாட்டான்.." என்றவன் அருகே வந்து தங்கையின் இரண்டு கன்னங்களிலும் தன் உள்ளங்கைகளை பதித்தான். அவளின் கன்னங்களை கிள்ளி கொஞ்சினான்.

"ரொம்ப அடிச்சிட்டியா அண்ணா.?" தயக்கமாக கேட்டாள் அபிராமி. முத்தமிழ் அவளை முறைத்தான். "உனக்கு கருணை காட்ட ஆசையா இருந்தா சொல்லு.. நாய்குட்டி வாங்கிட்டு வந்து தரேன். அதுக்கிட்ட கருணையை காட்டுவ.. ஆனா அவனுக்கு கருணை காட்டாதே.." என்றான் கோபத்தோடு.

அபிராமிக்கு காதில் இருந்து ரத்தம் வழிவதை போலிருந்தது. இரண்டு நாட்களாக இவன் திட்டிக் கொண்டே இருக்கிறான். கார்த்திக்கிற்கு எத்தனை முறை கார இருமல் வந்ததோ.? அத்தனை முறை திட்டல். சில முறை கெட்ட வார்த்தைகள் கூட கலந்து திட்டினான். தனக்கு தெரிந்த அத்தனை திட்டுதல் வார்த்தைகளையும் அவன் பயன்படுத்தி விட்டான் என்பது அபிராமியின் எண்ணம்.

"அதுதான் அடிச்சிட்ட இல்ல.. இத்தோடு விடுண்ணா.. திட்டாதே.. உன் கத்தலால இந்த வீடே சந்தைக்கடை மாதிரி இருக்கு.." என்று சொன்னாள் அபிராமி. அவளை செல்லமாக முறைத்தான் முத்தமிழ்.

"சரி விடு.. இனி உனக்காக அந்த நாயை திட்டாம இருக்கேன்.." என்றான். அவனின் நாய் என்ற சொல்லும் கூட அபிராமிக்கு நாராசமாகதான் இருந்தது.

அபிராமி தனது அறைக்கு செல்லலாம் என்று நினைத்த நேரத்தில் யாரோ வீட்டின் கதவை தட்டினார்கள். திரும்பி பார்த்தாள். காக்கி உடையில் காவலர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். கலவரமாக அண்ணனை நிமிர்ந்தது பார்த்தாள். அவள் பயப்பட்டது போலவே உள்ளே வந்த காவலர்கள் முத்தமிழிடம்தான் வந்தார்கள்.

"உங்க பிரெண்ட் கார்த்திக்கை அடிச்சிருக்கிங்க நீங்க.. அதுக்காக உங்களை அரெஸ்ட் பண்றோம்.." என்ற ஒரு காவலர் முத்தமிழின் கையில் விலங்கை பூட்டினார்.

"சார் விலங்கை பூட்டாதிங்க.. இருங்க.. பேசிக்கலாம்.." என்ற தாத்தாவை முறைத்த காவலர் "எது பேசுறதா இருந்தாலும் போலிஸ் ஸ்டேசன்ல வந்து வக்கீலோடு பேசுங்க.." என்றார். முத்தமிழை அங்கிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

அபிராமிக்கு கலங்கிய விழிகளிலிருந்து கசிந்த கண்ணீர் கன்னங்களை தாண்டியது. போலிஸ் வாகனம் அவர்களின் வாசலை தாண்டி சென்றது. தாத்தா தன் போனிலிருந்து வக்கீலுக்கு போன் செய்தார். வக்கீல் இந்த நேரத்திற்கு ஜாமின் எடுக்க இயலாது, சனி ஞாயிறு முடிந்து திங்கட்கிழமைதான் எதுவானாலும் முடியும் என்று விட்டார்.

தாத்தா தனக்கு தெரிந்த உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் போன் செய்து விசயத்தை சொன்னார். இதோ உடனே பார்க்கிறேன் என சொல்லி போனை வைத்தவர்கள் பிறகு போன் செய்யவேயில்லை. தாத்தா மீண்டும் அவர்களை தொடர்ப்பு கொண்டு கேட்டபோது புது இன்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று சொல்லி மழுப்பினார்கள். தாத்தாவும் அப்பாவும் ஸ்டேசனுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினார்கள்.

அபிராமி வாசலிலேயே காத்திருந்தாள். தாத்தா கண்டிப்பாக அண்ணனை அழைத்து வந்து விடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள். ஆனால் அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்த தாத்தா முத்தமிழை அழைத்து வரவில்லை.

"என்னாச்சி தாத்தா.?" கவலையோடு கேட்டாள் அபிராமி.

"அந்த பரதேசி கார்த்தியோட அண்ணன்தான் நம்ம ஸ்டேசனுக்கு புது இன்ஸ்பெக்டர்.. ஸ்டேசனுக்குள்ள நிற்க கூட விடாம துரத்தி விட்டுட்டான்.. அவங்களுக்கு நல்லா பாடம் கத்து தரணும்ன்னு நினைக்கிறேன்.." என்றவர் கோபத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

அபிராமிக்கு கவலையாக இருந்தது. கார்த்திக்கை அடித்து விட்ட கோபத்தில் அவனின் அண்ணன் தன் அண்ணனை ஏதாவது செய்து விடுவானோ என்று பயந்தாள். பயம் அவளை நிற்க விடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஸ்டேசனை நோக்கி கிளம்பினாள்.

"பாப்பா எங்கே போறா.?" என்று வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்து கேட்டாள் அம்மா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Last edited:
OP
Sevanthi durai

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Story nalla pogudhu..interesting.Aana oru dialogue"kanda theru nai kum irakkam kattadha"nu varadhu. Harsh ah iruku.. Theru naiku dhana irakame theva
நன்றிகள் சிஸ் ❤️ இனி எழுதும்போது கவனத்துல வச்சிக்கிறேன். இந்த டயலாக்கையும் மாத்திடுறேன். நன்றிகள்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN