காதல் கடன்காரா 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு ஆரம்பித்த வேளை. அபிராமி அரக்க பரக்க அந்த போலிஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்தாள். ஸ்டேசனுக்குள் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த முத்தமிழ் இவளை கண்டதும் எழுந்து நின்றான்.

"இங்கே ஏன் பாப்பா வந்த.?" என்றான் கோபமாக.

"இன்னும் இரண்டு மூணு நாளைக்கு உன்னை வெளியே விட மாட்டாங்கன்னு தாத்தா சொன்னாரு அண்ணா.." என்றபடி அண்ணனின் அருகே வந்தவள் அவனை மேலோட்டமாக சோதித்தாள்.

கையில் மட்டும் சிறு கீறல் இருந்தது. அது முன்பே இருந்த காயம் என்று யூகித்தாள். தலை கூட கலையவில்லை‌. தன் அண்ணன் நல்லபடியாகதான் இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு அதன் பிறகே நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

"நீயெல்லாம் இங்கே வர கூடாது பாப்பா.. வீட்டுக்கு போ.. அண்ணன் சீக்கிரம் வந்துடுறேன்.." அவளை அங்கிருந்து அனுப்ப முயன்றான் முத்தமிழ்.

"நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு வரேன்.." என்றவள் அங்கிருந்த அறையை நோக்கி நடந்தாள். முத்தமிழ் அவளை பிடித்து நிறுத்தினான்.

"அண்ணன் சொன்னா அதை கேட்டு நட. நீ இருக்க வேண்டிய இடம் இது இல்ல.. நைட் டைம்ல நீ வெளியே இருக்க கூடாது. தாத்தாவுக்கு தெரிஞ்சா உன் தோலை உரிச்சிடுவாரு.. எதுவா இருந்தாலும் தாத்தாவும் அப்பாவும் பார்த்துப்பாக்க.. நீ உடனே வீட்டுக்கு போ.." என்று எச்சரித்தான்.

"நான் போக மாட்டேன்.. எல்லா தப்பும் அந்த கார்த்திக் மேலதான் இருக்கு. அவனைதான் நியாயப்படி ஜெயில்ல போடணும். நாம ஏமாந்தவங்கங்கறதாலதானே உன்னை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க.? நான் இவங்களை சும்மா விட போறது இல்ல.." என்றவள் அண்ணனிடமிருந்து கையை உருவிக் கொண்டு முன்னே இருந்த அறைக்குள் நுழைந்தாள். அவளை பின்தொடர முயன்ற முத்தமிழை அங்கேயே பிடித்து நிறுத்தினார் ஒரு காவலர்.

கோபத்தோடு அந்த அறைக்குள் நுழைந்தாள் அபிராமி. பெரிய அளவிலான நோட் ஒன்றில் எதையோ எழுதிக் கொண்டிருந்த மூர்த்தி இவளின் அரவம் கேட்டு நிமிர்ந்தான். பேனாவை ஓரம் வைத்து விட்டு எழுந்து நின்றான்.

"இந்த நேரத்துக்கு போலிஸ் ஸ்டேசன் வந்திருக்கிங்க.. ஏதாவது புகார் எடுத்துக்கணுமா.?" என்றான் விழிகளை சுற்றியபடி. அவனின் குரலில் நூறு சதவீத நக்கல் இருப்பது போலிருந்தது அபிராமிக்கு.

"என் அண்ணனை ரிலீஸ் பண்ணுங்க.." என்றாள் கோபத்தோடு.

"கொலைக்காரனை கோர்ட்டுல நிறுத்துவாங்களே தவிர ரிலீஸ் பண்ண மாட்டாங்க.." இரும்பு குரலில் சொன்னவனின் கண்கள் இரண்டும் சிவந்து போயிருந்தது.

அவனது குரலே அவளுக்குள் பயத்தை தந்து விட்டது. கை விரல்களை இறுக்கி பிடித்தபடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"உங்களுக்கு நியாயமே தெரியாதா.? உங்க தம்பிதான் தப்பு செஞ்சாரு.." என்றவளை முறைத்தவன் "அவன் கட்டிய தாலியால கால் கிலோ குறைஞ்சிட்டியா நீ.?" என்றான்.

அபிராமி அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். உணர்வு என்ற ஒன்றை பற்றி யோசிக்கவே மாட்டார்களா என்று ஆதங்கப்பட்டாள்.

"என் தம்பியோடு நீதானே வந்த.? அவன் என்ன மயக்க மருந்து அடிச்சா உன்னை கடத்தி வந்து கல்யாணம் செஞ்சான்.? நீயா வந்த. நீயா போன.. இதுக்கு எதுக்கு அவனை அடிக்கணும்.? இப்ப அவன் சாக பிழைக்க கிடக்கறான்.. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சின்னா உங்க மொத்த குடும்பத்தையும் கொளுத்தாம விட மாட்டேன் நான்.. என் தம்பியை நானே திட்டியது கிடையாது. ஆனா உங்க அண்ணன்காரன் அடிச்சி அஞ்சாறு எலும்பையே நொறுக்கி விட்டிருக்கான். பணம்தானே உங்களை இந்த அளவுக்கு ஆட வைக்குது.? அதான் நான் என் பதவியை வச்சி ஆடுறேன்.." என்றவனின் வெறுப்பு அவளுக்குள் கலவரத்தை உண்டு பண்ணியது.

"ஆனா எங்க அண்ணன்.." என்றவள் முழுதாக சொல்லும் முன்பு அவனே "உனக்கு உங்க அண்ணன் பத்திரமா வேணும்ன்னா போய் என் தம்பியை பாரு. சாக கிடப்பவனை உயிரோடு எழ வை. அப்புறம் நான் உன் அண்ணனை ரிலீஸ் பண்றதை பத்தி யோசிக்கிறேன். தப்பி தவறி என் தம்பிக்கு மட்டும் ஏதாவது ஆச்சி சத்தியமா நான் உன் அண்ணனை கொன்னுடுவேன். நீ என்னை பத்தி எப்படி நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. ஆனா என் தம்பியை இந்த நிலமைக்கு கொண்டு வந்த உன் அண்ணனை பொய் கேஸ்லயாவது என்கவுண்டரோ இல்ல லாக்கப் மர்டரோ பண்ணாம விட மாட்டேன். எனக்கு வேலை போறதை பத்தியும் கவலை இல்ல. நானே தூக்குக்கு போறது பத்தியும் கவலையில்லை.." என்றான் அடிக்குரலில்.

இதற்கு அவனது தம்பியே பரவாயில்லை என்று தோன்றியது அபிராமிக்கு. தன் வாழ்க்கை ஏன் தினம் தினம் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது என்று யோசித்தாள்.

நின்று யோசிப்பதில் பலன் இல்லை. இந்த பைத்தியக்காரன் கோபத்தில் எதையாவது செய்யும் முன் அண்ணனை காப்பாற்ற வேண்டும் என்று நினைந்தவள் "உங்க தம்பி எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்காரு.?" என்றாள். இதை கேட்கும்போதே தான் தோற்றுப் போனது போல இருந்தது அவளுக்கு.

"ரேகா ஹாஸ்பிட்டல்.." என்று அவன் சொன்னதும் அவசரமாக வெளியே ஓடினாள்.

"அபிராமி.." என்று அழைத்தான் முத்தமிழ். அவள் அண்ணனை கண்டுக் கொள்ளாமல் ஓடினாள். ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக கிளம்பினாள்.

"அபிராமி.." என்று மீண்டும் கத்திய முத்தமிழை நகர விடாமல் மறித்து நின்றார் காவலர் ஒருவர்.

"ஸ்டேசன்குள்ள என்ன சத்தம்.?" என கேட்டபடி வெளியே வந்தான் மூர்த்தி‌. முத்தமிழ் அவனை முறைத்தான்‌. சந்தர்ப்பம் கிடைக்கும்போது இவனையும் இவனது தம்பியை போலவே அடித்து நொறுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

"ஸ்டேசன்குள்ள சத்தம் போட்டு தகராறு செஞ்சா அதுக்கும் தனி கேஸ் பைல் பண்ணுவேன். ஜெயிலுக்கு போகும் வரை அமைதியா இரு.." என்று எச்சரித்து விட்டு உள்ளே சென்றான் மூர்த்தி.

முத்தமிழுக்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது. அவர்களின் குடும்பத்தையே அடித்துக் கொல்ல வேண்டும் போல இருந்தது.

அபிராமி ரேகா மருத்துவமனைக்கு வந்தபோது மணி எட்டை தாண்டி விட்டது. அவசரமாக உள்ளே ஓடினாள். மருத்துவமனை வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் விசாரித்து ஆபரேசன் நடந்துக் கொண்டிருந்த மூன்றாம் மாடிக்கு ஓடி வந்தாள். ஆபரேசன் தியேட்டர் வாசலில் புவனாவும் யமுனாவும் நின்றிருந்தார்கள். இருவருமே அழுதுக் கொண்டிருந்தார்கள். புவனாவின் அப்பா கவலையோடு நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார்.

அபிராமி தயக்கமாக அவர்களை நோக்கி நடந்தாள். புவனாதான் அவளை முதலில் பார்த்தாள். கண்களை துடைத்துக் கொண்டு இவளை நோக்கி வந்தாள்.

"என் அண்ணன்.." இவள் தன் சூழ்நிலையை சொல்ல ஆரம்பித்த அதே நேரத்தில் "உன் அண்ணனுக்கு மனசாட்சியே இல்லையா.?" என்றாள் அவள்‌.

இவள் அண்ணனுக்கு இருப்பதை விட தன் அண்ணனுக்கு அதிகளவு மனசாட்சி இருப்பதாக தோன்றியது அபிராமிக்கு. ஆனால் அதை அந்த நேரத்தில் வெளியே சொல்லவில்லை.

"என் அண்ணன் எவ்வளவு கிரிட்டிக்கல் கன்டிசன்ல இருக்கான் தெரியுமா.? அஞ்சி நிமிசம் லேட்டா கொண்டு வந்திருந்தா கூட அவனை உயிரோடு பார்த்திருக்க முடியாதுன்னா சொல்றாரு டாக்டரு. என் அண்ணனை கொல்லணும்ன்னு உங்களுக்கு என்ற அவ்வளவு பேராசை.?" என்றாள் அவள் அழுதபடியே.

அபிராமி உதட்டை கடித்தாள். ஆபரேசன் தியேட்டருக்குள் இருக்கும் கார்த்திக்கிற்காக இப்போதும் வருந்தினாள். ஆனால் ஸ்டேசனுக்குள் இருக்கும் தன் அண்ணனை நினைத்து அதிகம் கவலைக் கொண்டாள். மூர்த்தியின் மிரட்டல் மனதுக்குள்ளேயே சுழன்றது.

"என் அண்ணனை உன் பெரிய அண்ணா அரெஸ்ட் பண்ணிட்டாரு. என் அண்ணாவை வெளியே விட சொல்லுங்க.." என்றவளை விசித்திரமாக பார்த்தாள் புவனா.

"ஏம்மா உனக்கு மனசாட்சியே இல்லையா.? என் பையன் இங்கே சாக பிழைக்க இருக்கான். நீ உன் அண்ணனை வெளியே விடுங்கன்னு வந்து சொல்ற.." என்று கோபப்பட்டாள் யமுனா.

"நீங்க ஒருத்தர் சொல்றதுல கூட நியாயமே இல்ல. இந்த பிரச்சனையை முதல்ல ஆரம்பிச்சது உங்க பையன்தான். அப்புறம் ஏன் என் அண்ணன் ஜெயில்ல இருக்கணும்.? உங்க சின்ன மகன் என் வாழ்க்கையை கெடுத்தாரு. இப்ப உங்க பெரிய பையன் என் அண்ணன் லைப்பை ஸ்பாயில் பண்ண நினைக்கிறாரு.." என்றவளின் கையை பற்றி தன் பக்கம் திருப்பினாள் புவனா.

"இதான் விசயமா.? போலிஸ் அவங்க கடமையை செய்யுது. அந்த போலிஸ் என் அண்ணனா இருப்பதுதான் உனக்கு உறுத்தல். ஆனா பாரு.‌. நீ என்ன டிரை பண்ணாலும் உன் அண்ணனுக்கான சரியான தண்டனை கிடைக்காம இருக்காது. என் அண்ணன் எப்படி இருப்பானோன்னு பதறியடிச்சி பார்க்க வந்தியோன்னு நினைச்சேன். ஆனா உன் கொலைக்கார அண்ணனுக்கு வக்காலத்து வாங்கத்தான் வந்திருக்கன்னு தெரியாம போச்சி. தயவு செஞ்சி இங்கிருந்து போயிடு. உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ண நல்ல வக்கீலா பாரு. எங்களால எதுவும் செய்ய முடியாது.." என்று கையெடுத்து கும்பிட்டாள்.

அபிராமிக்கு இதயம் அடித்துக் கொண்டது. மூர்த்தி எனும் பைத்தியம் தனது துப்பாக்கியை எடுத்து தன் அண்ணனை சுட்டு விடுவானோ என்று பயந்தாள்.

கார்த்தியின் அப்பா இவளை வெற்று பார்வை பார்த்தார். இவளை வெறுப்போடு பார்த்த யமுனா ஐசியூ கதவின் அருகே சென்று நின்றபடி கண்ணீர் சிந்தினாள். புவனா அபிராமியை முறைத்தாள்.

அபிராமி கொஞ்ச நேரம் அங்கேயே நின்றாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. அழையா இடத்தில் விருந்தாளியாக நிற்பது போலிருந்தது. சிறிது நேரம் தயங்கி தயங்கி நின்றுவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினாள். தன் அண்ணன் ஜெயிலுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஐசியூவில் இருப்பவன் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்தபோது மணி ஒன்பதரையை தாண்டி விட்டது. ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தபோது வெளியே இருந்த இருள் பயமுறுத்தியது. வரும்போது தேவை இருந்தது. அதனால் பயம் இல்லை. இப்போது மனம் சோர்ந்து விட்டது. எந்த பக்கமும் வழியில்லாத உணர்வு வேறு மனதில் அண்டிக் கொண்டது. அதனாலேயே என்னவோ இருள் சற்று பயமுறுத்தியது.

மருத்துவமனை வாசலில் நின்று சாலையை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்து நின்றது கார். திருப்பி பார்த்தாள். அப்பா காரிலிருந்து இறங்கி வந்தார்.

"இங்கே என்ன பண்ற.? உன்னை எங்கேயெல்லாம் தேடினேன் தெரியுமா.?" என கோபமாக கேட்டவர் மகளை முறைத்துவிட்டு அந்த ஹாஸ்பிட்டலை திரும்பி பார்த்தார்.

"அந்த நாய் இந்த ஹாஸ்பிட்டலதான் இருக்கா.?" என்றார். அபிராமி ஆமென தலையசைத்தாள்.

பற்களை கடித்தார் அப்பா. டிரைவரை பார்த்து கையசைத்தார். கீழே இறங்கி வர சொன்னார். "இந்த ஸ்கூட்டியை எடுத்துட்டு வா.." என்றவர் மகளிடம் காரை நோக்கி கை காட்டினார்.

ஜன்னல் வழி விளக்கு வெளிச்சத்தை வெறித்தபடி காரிலிருந்து இறங்கினாள். அவளின் வீடு மறுபக்கத்தில் இருந்தது. இரண்டடுக்கு மாடி வீடு. கொஞ்சம் பெரிய வீடு. வீட்டை சுற்றி இருந்த‌ தோட்டத்தில் அலங்கார செடிகள்தான் அதிகம் இருந்தது.

கார் வந்து நின்றதும் அபிராமியின் அம்மா ஓடி வந்தாள். மகளை கோபத்தோடு பார்த்தாள். இவர்கள் ஹாலுக்குள் நுழைந்ததும் தாத்தா இருக்கையிலிருந்து எழுந்து பேத்தியின் அருகே வந்தார்.

"ரேகா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கற உன் நரேன் சித்தப்பா போன் பண்ணி கேட்கறான்.. நம்ம அபிராமி எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கான்னு.? உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை.? நானும் உங்க அப்பாவும் எதுக்கு இருக்கோம்.?" என்றார் கோபத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN