காதல் கடன்காரா 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாத்தா தன் மீது கொண்டுள்ள அக்கறை அபிராமிக்கும் புரிந்தது. ஆனால் அவள் தன் அண்ணனின் மீது இதை விடவும் அதிக பாசம் கொண்டிருந்தாள். அமைதியாக வீட்டில் இருக்க முடியவில்லை அவளால். "இனி இப்படி தப்பை செய்ய மாட்டேன்.." என்றாள்.

தாத்தா அவளுக்கென்று நிறைய அறிவுரைகளை சொன்ன பிறகு அவளது அறைக்கு செல்ல அனுமதி தந்தார். பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி மனைவியிடமும் மருமகளிடமும் அறிவுறுத்திருத்தினார்.

அபிராமியின் தாத்தாவும் அப்பாவும் மறுநாளும் நிறைய அலைந்தார்கள். ஆனால் முத்தமிழை வெளியே கொண்டு வர முடியவில்லை.

அபிராமி தனியாக இருக்கும் நேரங்களில் மூர்த்தியின் சொற்களே அவளை சுற்றி சுற்றி வந்தது. நிறைய முறை ரகசியமாக அழுதாள். அண்ணனுக்கு என்னவாவது ஆகி விடுமோ என்ற பயம் அவளை தூங்க விடவில்லை. 'இந்த வீணாய் போன கார்த்திக் எந்த நேரத்தில் இம்சையாக வந்து சேர்ந்தானோ.. இன்னமும் பிரச்சனை ஓயவில்லை' என்று நினைத்து கவலைக்கொண்டாள்.

மறுநாள் மாலை வேளையில் அவளின் போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேசினாள்.

"நான் புவனா.." என்றாள் எதிரில் இருந்தவள்.

அந்த பெயர் அவளுக்கு பரிட்சயம் இல்லை. ஆனால் குரல் அவள் யாரென்று உடனடியாக சொல்லியது.

"சொல்லுங்க.." என்றாள் தயக்கமாக.

"எங்க அண்ணனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சி. பைத்தியக்காரன் உன்னை பார்க்கணும்ன்னு அடம் பிடிக்கிறான். அதனாலதான் போன் பண்ணேன்.." என்றவள் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டாள். அபிராமிக்கு குழப்பமாக இருந்தது. விசயம் தெரிந்தால் தாத்தா அறைந்தாலும் அறைந்து விடுவார். நேற்றைய நாள் மன்னித்து விட்டு விட்டதே பெரிய விசயம். யோசித்து பார்த்தவள் நிலைக்கொள்ள முடியாமல் ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கிளம்பினாள்.

எவனோ ஒருவன் சாக கூடாது என்பதற்காக தன் திருமணத்தையே நிறுத்திவிட்டு சென்றவள் இப்போது அண்ணனுக்கு ஆபத்து நீங்க வேண்டும் என்பதற்காக செல்லாமலா இருப்பாள்.?

"தாத்தா.. நான் சுவாதி வீடு வரை போய்ட்டு வரேன்.." என்றவள் தாத்தா கேள்வி கேட்கும் முன்பே வாசலுக்கு வந்து விட்டாள். அவசரமாக அங்கிருந்து கிளம்பினாள்.

ஜன்னல் கம்பியின் மீது பறந்து வந்து அமர்ந்தது ஒரு சிட்டுக்குருவி. அழகாக இருந்தது. மறையும் சூரியனின் கதிர் பட்டு அதன் சிறகுகளும் அதன் குட்டி உருவமும் ஓவியம் போல காட்சியளித்தது‌. அந்த குருவியையே இமை அசைக்காமல் பார்த்துக் கொண்டுப் படுத்திருந்தான் கார்த்திக். அவனின் கையிலும் காலிலும் முன் நெஞ்சிலும் கட்டுப் போட்டிருந்தார்கள். பழையபடி எழுந்து நடமாட பலநாட்கள் ஆகலாம். சுயேச்சையாக கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. இந்த உடல்வலி இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தான்.

அந்த குருவியை அவன் வியந்து பார்த்துக் கொண்டிருப்பதை தடுக்கும் விதமாக அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது‌. ஜன்னலை விட்டு பார்வையை திருப்பினான். அபிராமி கதவருகே தயக்கத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள். அடுத்த அடி எடுத்து வைக்க அதிகம் யோசித்தாள். அவள் அந்த அறைக்குள் நுழைந்தால் நிச்சயம் அவளின் வாழ்வில் வேறு ஏதாவது மாற்றம் வரும் என்று மனம் சொல்லியது. படுக்கையில் படுத்திருப்பவன் தன்னை அவனோடு வர சொல்லி கூட அழைத்தாலும் அழைப்பான் என்று பயந்தாள்.

"நீ உள்ளே வந்தா நான் உன்னை கடிச்சி தின்னுட மாட்டேன்.." என்றான் கார்த்திக்.

'அண்ணன் இவன் எலும்பை உடைச்சதுக்கு பதிலா வாயை உடைச்சி வச்சிருக்கலாம்..' என நினைத்தவள் மெதுவாக அடியெடுத்து உள்ளே வந்தாள். சிங்கத்தின் குகைக்குள் உணவாக செல்லும் மான் குட்டியை போலிருந்தது அவளின் நிலை.

பெட்டில் கட்டுக்களோடு படுத்திருந்தவனை நிறைய வொயர்கள் அருகே இருந்த மானிட்டரோடு இணைத்திருந்தன. அடி கொஞ்சம் அதிகம்தான் என்பது இப்போது நேரில் பார்க்கும்போதுதான் அபிராமிக்கு புரிந்தது. அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றது அவளின் எதார்த்த மனம்.

அவனின் சோர்விழந்த முகத்தில் இவளை கண்டதால் கண்கள் மட்டும் அநியாயத்திற்கு மின்னின. இடுப்புக்கு கீழே பெட்சீட்டை போர்த்தியிருந்தான். நெஞ்சின் மீது ஒற்றை வெள்ளை கட்டு இருந்தது. ஆயினும் கூட சட்டையில்லாத அவனின் மேனியை பார்க்க தடுமாற்றமாகதான் இருந்தது அவளுக்கு. முத்தமிழ் உள்ளாடையோடு கிணற்றில் குளிக்கையில் கிணற்று மேட்டில் அமர்ந்து அவன் மீது தண்ணீரை அள்ளி தெளிப்பவளுக்கு இவனின் அரைகுறை நெஞ்சத்தை பார்க்க கூட உள்ளம் தடுமாறியது. என்ன இருந்தாலும் அந்நியம் அந்நியமேதான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவனின் முகத்தில் கொஞ்சமாக தாடியிருந்தது. மீசை அடர்த்தியாக இருந்தது. முறுக்கி விட்டால் அந்த மீசை சிறு குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று யூகித்தாள். தலை கலைந்திருந்தது அவனுக்கு. ஆனாலும் அதுவுமே கவர்ச்சியாகதான் தெரிந்தது. தனக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்தாள் அபிராமி.

கார்த்திக் கண் விழித்ததுமே முத்தமிழ் ஜெயிலில் இருக்கும் விசயத்தையும் அபிராமி இங்கே வந்து போனதையும் பற்றிச் சொல்லி விட்டாள் புவனா. அபிராமி இங்கே வந்து சென்றது அவனுக்கு அளவில்லா ஆச்சரியத்தையும் அவனுக்கே புரியாத ஒரு வித நம்பிக்கையையும் தந்தது. அதனால்தான் புவனாவிடம் சொல்லி இவளை வர சொன்னான்.

அபிராமி அவனை பார்த்தபடி நடந்து வந்தாள். கார்த்திக் அவளின் முகத்தை குறுகுறுவென பார்த்தான். அழகான வட்ட முகம். நெற்றியில் குட்டியாக ஸ்டிக்கர் வைத்திருந்தாள். கன்னங்களின் மேடுகள் மேக்கப் இல்லாமலேயே சிவந்து போயிருந்தது. தன்னை கண்டதால்தான் இந்த சிவப்பா என்று சந்தேகித்தான் அவன்.

வருடங்கள் நேரமெடுத்து கைத்தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போல இருந்தது அவளின் உருவம். அணிந்திருந்த சுடிதாரை அதற்காகவாவது கொஞ்சம் தாராளமாக தைத்துப் போட்டிருக்கலாம் என்று நினைத்தான். அவளின் அழகை மற்றவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை அவன் மனம். துப்பட்டாவின் முனையை கை விரல்களில் சுற்றியபடி அவனை நோக்கி வந்தாள். பதட்டமாக இருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனாலும் கூட அன்றைக்கு அணிந்திருந்த கூரைப்புடவையை விட இந்த சுடிதாரில் அழகு சற்று குறைவுதான் என்று நினைத்தான். தலைமுடியை விரித்துப் போட்டிருந்தாள். அவனுக்கு பெண்கள் தங்களின் கூந்தலை ஃப்ரீ ஹேராக விட்டால் பிடிக்காது. இதற்காக பலமுறை புவனாவிடம் கூட சண்டைக்கு போயிருக்கிறான்.

ஜன்னல் வழி அடித்த காற்றில் லேசாக பறந்தது அவளின் கூந்தல். பார்க்க அனைத்துமே அழகாக இருந்தது‌. அவளின் முகம், உருவம், அவள் நடந்து வரும் தோரணை.. ஆபரேசனுக்கு போட்டிருக்கும் மயக்க ஊசியின் விளைவு இந்த எண்ணங்கள் என நினைத்து தன்னையே திட்டிக் கொண்டான்.

அபிராமி அவனின் அருகே வந்து நின்றாள். "என் அண்ண.."

"உட்காரு.. பேசலாம்.." என்றான். அவனின் குரலில் இருந்த அழுத்தம் அவளுக்கு ஆச்சரியத்தை தந்தது‌. உடல்நிலை சரியில்லாதவன் போலில்லாமல் பலமுள்ள ஆணின் அதே குரலில் பேசுகிறானே என்று சந்தேகித்தாள். அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக அவன் தன் பலத்தை முழுதாக உபயோகித்துக் கொண்டிருந்தான் என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.

"என் அண்ண.."

"அடிப்பட்டு ஆபரேசன் பண்ணி படுத்திருக்கேன்.. எப்படி இருக்கன்னு கேட்க மாட்டியா.? என்ன இருந்தாலும் ஒரு மணி நேர புருசன் இல்லையா நான்.?" என்றான்.

"இ.. இப்ப எ.. எப்படி இருக்கிங்க.?" தடுமாற்றமாக கேட்டாள். ஏனோ அவனோடு ஒட்ட வரவில்லை. அந்நியன் அவன். தாலியே கட்டினாலும் அந்நியன்தான்.

"எப்படி இருக்கேன்னு நீயே பாரேன்.. எழுந்து கூட நிற்க முடியாத அளவுக்கு இருக்கேன்.." என்று அவன் சொல்லவும் 'அதுதான் பார்த்தாலே தெரியுதே..' என்றது அவளின் மனம்.

அமர்ந்த வண்ணமே கையை பிசைந்தாள். "என்.."

"ஒரு மாசத்துக்காவது பெட் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க.. லாரி இடிச்சா என்ன சேதாரம் ஆகுமோ அந்த சேதாரத்தை உன் அண்ணன் எனக்கு பண்ணி விட்டிருப்பதா டாக்டர் சொல்றாரு.." என்றான் அவனே. தன்னை பேசவே விடமாட்டானா என்று எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

"சாரி.." என்றாள் அண்ணனுக்கு பதிலாக.

"இல்ல பரவால்ல.." என்று அவன் சொன்னதும்தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு விடவே தோன்றியது.

"என் அண்ணனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. அவனை வெளியே விட சொல்லுங்க.." என்றாள் அவசர அவசரமாக எங்கே அவன் மீண்டும் இடை புகுந்து விடுவானோ என்று பயந்து.

கார்த்திக் தன் உதட்டை கடித்தபடி அவளை பார்த்தான். 'என்ன யோசிக்கறானோ தெரியலையே..!' என்று கவலைக் கொண்டாள் அவள்.

"உன் அண்ணனை அவ்வளவு பிடிக்குமா.?" என்றான் சந்தேகமாக.

"யாருக்குதான் அவங்கவங்க அண்ணனை பிடிக்காது. உங்க அண்ணன் கூட உங்களை பிடிச்சதாலதானே எங்க அண்ணனை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காரு.." என்றாள் எரிச்சலாக.

அவளின் உதட்டசைவையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்னவோ போலிருந்தது. அவள் மீது காதல் வந்ததோ இல்லையோ நூறு சதவீதம் நிச்சயமாக காமம் வந்து விட்டது.

"உன் அண்ணனை வெளியே விட சொல்லணுமா.?" என்றவனிடம் ஆமென தலையசைத்தாள்.

"அப்படின்னா நான் கட்டிய தாலியை மதிச்சி எங்க வீட்டுக்கு என் பொண்டாட்டியா வா.‌." என்றான்.

அவன் அதைதான் சொல்வான் என்று ஏற்கனவே யூகித்து விட்டவளுக்கு அவன் அதை சொல்லுக்கையில்தான் கஷ்டமாக இருந்தது. தன்னால் முடியாத ஒரு விசயத்தை வலுக்கட்டாயாக செய்ய வைக்க முயல்கிறான் என்பதை அறிந்தவளுக்கு அவன் மீதிருந்த வெறுப்பு அதிகரித்தது. அண்ணன் மீதுதான் கோபம் வந்தது இப்படி ஒருத்தனை நண்பனாக வைத்திருந்ததற்கு.

"உங்க அண்ணாவுக்கு கூட இன்னும் கல்யாணம் ஆகல இல்லையா.? நாம ஏன் இதை பத்தி பொறுமையா பேசி முடிவெடுக்க கூடாது.?" என்றாள் தயக்கமாக.

அவளின் பேச்சு திறமை கண்டு கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"நீ எங்க வீட்டுக்கு வந்துடு. தினம் பேசி பொறுமையா முடிவெடுக்கலாம்.." என்றான்.

"நீங்க என்னை லவ் பண்றிங்களா.?" கேள்வியை கேட்டு பிறகு 'சம்பந்தமே இல்லாமல் ஏன் இந்த கேள்வி' என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

"இல்ல.." என்று பூம் பூம் மாடாக தலையசைத்தான்.

காதல் இல்லை.. பெற்றோர்களின் விருப்பம் இல்லை.. மனைவியாக வருபவளின் மனதில் பிடிப்பு இல்லை.. கணவான இருப்பவன் மனதில் குறைந்தபட்ச காதல் கூட இல்லை. பிறகு ஏன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்று அபிராமிக்கு சுத்தமாக புரியவில்லை.

"நான் அன்னைக்கு சொன்னது பொய். இந்த கல்யாணம் உன் அண்ணனை பழிவாங்க இல்ல ஈஸ்வரை பழிவாங்க.! ஆனா இப்ப உன் அண்ணனுக்கு மன்னிப்பு வழங்கவும்.! நீ என் மனைவியா என் வீட்டுக்கு வா.. நான் உன் அண்ணன் மேல இருக்கும் கேஸை வாபஸ் வாங்க வைக்கிறேன்.." என்றான்.

"நான் அவ்வளவு நல்லவ கிடையாது.." தரை பார்த்தபடி முணுமுணுத்தாள் அபிராமி.

கார்த்திக் சிரித்தான். "நானும் நல்லவன் கிடையாது.." என்றான்.

மேஜை மேல் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவனின் நெஞ்சிலேயே குத்த வேண்டும் போல இருந்தது அபிராமிக்கு. அண்ணனை நினைத்துப் பார்த்தவள் "சரி வரேன்.. உங்க மனைவியா வரேன்.." என்றாள் கண்களை மூடிக்கொண்டு. எவ்வளவோ முயற்சித்தும் கூட அவளின் குரல் இந்த வார்த்தைகளுக்கு உடைந்து விட்டது. கண்களில் கண்ணீர் வராவிட்டாலும் கூட அழுகையை அடக்கியதன் காரணமாக நெஞ்சம் ரணமாக வலித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN