மௌனங்கள் 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

குழலியின் வீட்டிற்கு நான் குடி வந்து ஒரு வாரம் ஓடி விட்டது. இரவுகளிலும் பகல்களிலும் வீட்டில்தான் இருந்தேன் நான். எனது மாடி வீட்டின் ஜன்னலை திறந்து வைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் மன அழுத்தத்தில் இருந்தாள். எப்போதாவது என்னை பார்க்கையில் கண்கள் எட்டா புன்னகையை தருவாள்.

அவள் அரைகுறையாக உண்டுக் கொண்டிருந்தாள். நேற்று மாலையில் சுத்தமாகவே உண்ணவில்லை. பார்க்க சகிக்கவில்லை என்பதால் கடைத்தெரு பக்கம் சென்று வருகையில் அவளுக்கும் நான்கு இட்லிகளை கட்டிக் கொண்டு வந்து தந்தேன். இட்லி பொட்டலத்தை குழப்பமாக பார்த்தாள்.

"எனக்காக வாங்கினேன். உன் நினைவு வந்ததேன்னு உனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தேன்.." என்றேன். "தேங்க்ஸ்.." என்றுவிட்டு வாங்கிக் கொண்டாள்.

தம்பி போன் செய்தான். "என்ன அண்ணா தனி வீட்டுக்கு குடி போயிருக்கியாம்.." என்றான் கிண்டலாக.

"சும்மா ஒரு மாற்றம்..?" என்று சொல்லி சமாளித்தேன். இன்னும் கொஞ்ச நாள். அதற்குள் இந்த நாட்டை அழித்துவிட்டு கிளம்ப போகிறேன். இருக்கும் வரை இவளோடு ஒரு விளையாட்டு. செல்லமாய், மர்ம விளையாட்டு.

மாலை பொழுதில் மாடிக்கு வந்தாள். அரை நிலவை பார்த்தபடி படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். நான் பொழுதை போக்கவெண்ணி அவளருகே சென்று அமர்ந்தேன். என்னை பார்த்தவள் உடனடியாக நிலவின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"என் பிரெண்ட் செத்துட்டா.." என்றாள் கரகரத்த குரலில்.

"தெரியும்.." என்றேன்.

"அவ ரொம்ப நல்லவ.." என்றாள் சோகமாக.

நிச்சயம் நல்லவள்தான். அனைவருமே நல்லவர்கள்தானே.?

"இந்த நாட்டுல குண்டு வெடிக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சி பார்த்ததே இல்ல.." என்றாள். எனக்கு சிரிப்பாக வந்தது. இதற்கு முன் குண்டு வெடித்தபோது வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருந்தாளோ என்னவோ.?

"இந்த பாம் வைக்கறவங்களுக்கு அறிவே இருக்காதா.? அப்பாவி மக்களையேதான் கொல்லுறாங்க.. அவங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தா அரசாங்கத்துக்கிட்ட நேரா நின்னு பேச வேண்டியதுதானே.?" என்றாள் கோபத்தோடு. சராசரி குடிமகளாய் கேட்கிறாள் போல.

அரசாங்கத்தை வைத்து என்ன செய்வது.? மனிதன் நினைத்தால் ஆயிரம் அரசாங்கங்களை உருவாக்க முடியும். ஆனால் எந்த அரசாங்கம் நினைத்தாலும் ஒற்றை குடியை கூட உருவாக்க முடியாது. இதான் உண்மை. அரசாங்கமே மக்கள்தான். இதை கூட புரியாமல் உளறிக் கொண்டிருக்கிறாள் இவள். அழிக்க அழிக்க அரசாங்கம் உருவாகும். ஆனால் குடியை அழித்து துடைத்து விட்டால் பிறகெப்படி புது குடி உருவாகும்.? நாங்கள் இந்த பூமியையே துடைத்தெடுக்க போகிறோம்.

"கடவுள் நிச்சயம் இவங்களை கேட்பாரு.. ஒவ்வொரு உயிருக்கும் பலி வாங்குவாரு.." என்றவள் கண்களின் கடைக்கோடியில் மின்னிய ஈரத்தை துடைத்துக் கொண்டாள். கடவுள் எந்த திசையிலிருந்து வருகிறார் என்று சுற்றும் முற்றும் தேடி பார்த்தேன். அந்த புண்ணியவானை எங்கும் காணவில்லை. எங்கேயாவது படுத்து தூங்கிக் கொண்டிருப்பார். நான் பசியில் வாடும்போது எப்படி தூங்கினாரோ அதே போல தூங்கிக் கொண்டிருப்பார்.

அந்த நாளுக்கு பிறகு என்னோடு அவ்வப்போது பேசுவாள். அதிகம் இல்லை. ஆனால் புன்னகையோடு பேசுவாள். அந்த புன்னகையின் ரகசியம்தான் என்னவென்று தெரியவில்லை.

நாட்டின் தலைவர்கள் கூடி பேசுவதாகவும், என்னை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்து சேர்ந்தது. நான் என் வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

இன்னும் ஒரு வாரம் நகர்ந்தது.

குழலி விரைவிலேயே என்னோடு நெருங்கி விட்டாள். நிறைய பேசினோம். அவளை பற்றி நிறைய சொன்னாள். அவள் அந்த வீட்டில் ஒரே குழந்தை. தாய் தந்தையர் இறந்த பிறகு பாட்டிதான் துணையாக இருந்திருக்கிறாள். அந்த பாட்டியும் ஒருநாள் இறந்து போய் விடவும் அனாதையாகி இருக்கிறாள்‌. என்னை போல சிறு வயது அனாதையாகாத காரணத்தால் இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ள சராசரி மனிதர்களில் ஒருத்தியாக வளர்ந்திருக்கிறாள்.

அவளுக்கு நாட்டுப்பற்று ரொம்ப அதிகம் என்பது அறிந்தபோது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு நேர் எதிர் இவள்.

நாட்டுக்காக உயிரை விடும் சாதாரண மனிதர்களில் ஒருத்தி இவள். எல்லையில் ராணுவத்தில் நிற்கிறானே அவனின் அதே மனம் இவளுக்கும்‌. நாட்டில் இதே போல நிறைய பேர் இருக்கிறார்கள்‌. ஆனால் ஆயிரம் பேரை அழிக்க ஒரு துரோகி போதும்‌. இந்த கணக்கு இவர்களுக்கு எப்போதும் புரிவதேயில்லை.

அவளோடு பழக ஆரம்பித்து சில நாட்கள் ஆகி விட்டது. இன்று காலையிலேயே தேனீரோடு வந்து என் வீட்டின் கதவை தட்டினாள். நான் கதவை திறந்தபோது அந்த தேனீரை விட அவள் மேனி அதிகம் மணந்தது போலிருந்தது. என் நாசிக்கு கோளாறு வந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். தேனீர் கோப்பையை என்னிடம் நீட்டினாள். "பால் இருந்தது‌. அதனாலதான் உங்களுக்கும் சேர்த்து டீ போட்டேன்.." என்றாள். அவளை பருக முடியுமா என்று மனம் குறுக்கு கேள்வி கேட்டது. பழக்கத்தில் இப்போதுதான் முக்கால் படியில் இருக்கிறோம்.. ஆமாம் ஒரு படி கூட இல்லை. அதனால் மனதின் கேள்வியை அவளிடம் கேட்க தைரியம் வரவில்லை. ஆனால் அவள் பழகும் வேகத்திற்கு விரைவில் என் ஜீவனை பருகி விடுவாள் என்றுதான் தோன்றியது.

காலை நேரத்திலேயே அவ்வளவு அழகாக இருந்தாள்‌. அதுதான் அன்றே சொன்னேனே இவளின் அருகில் மட்டும் எனக்கு தனியொரு மனக்கோளாறு என்று. அதனால் இப்படிதான் பிணாத்துவேன்‌‌. நீங்கள் கண்டுக்கொள்ளாதீர்கள்.

சில சினிமாவில் பார்த்தது போல காலை நேரத்திலேயே அலங்கரித்துக் கொண்டிருக்கவில்லை இவள். ஆனாலும் அம்சமாக இருந்தாள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை. கலைந்த தலையும் கசங்கிய சுடிதாருமாக இருந்தும் கூட அவ்வளவு அழகு.

துப்பட்டாவால் சுற்றப்பட்டிருந்த கழுத்தில் இருந்த எலும்புகள் என்னை வேட்டையாடும் மிருகமாக மாற்ற முயற்சித்தது என்றால் பொய்யே இல்லை. கதவருகே நின்றபடி தேனீரை பருகினாள். அவளின் கைகளில் ஓடிக் கொண்டிருந்த பச்சை நரம்புகள் நான் ஏன் ஒரு ரத்த காட்டேரியா இல்லை என்ற கவலையை தந்தது.

தேனீர் சுவைத்த அவளின் உதடுகளை இன்னும் ஐந்து நிமிடங்கள் உற்றுப்பார்த்தால் அவளின் சம்மதமே இல்லாமல் அவளை எடுத்துக் கொள்வேனோ என்று பயம் தோன்றியது.

சூடாக விழுங்கிய தேனீர் உள் நெஞ்சை சுட்டும் கூட தேனீரை ஊதிக் குடிக்க தோணவில்லை. காலையிலேயே நெஞ்சுக்குள் அவ்வளவு தீ இவளால். அந்த தீயை இந்த தேனீரின் சூட்டை கொண்டு தணிக்க பார்த்தேன் நான்.

என் வீட்டு கதவின் மீது சாய்ந்து நின்றபடி தேனீரை பருகியவள் எப்போது அங்கிருந்து கிளம்புவாள் என்று இருந்தது.

"டீ நல்லாருக்கா.?" என்றாள். சூடாக இருந்தது. மணமாக இருந்தது. இனித்தது‌. இதை தவிர வேறு ஒன்று வேண்டும் என்று தோன்றவில்லை.

"நல்லாருக்கு.." என்றேன். என் பதிலால் அவள் முகத்தில் எதையோ சாதித்த திருப்தி.

தேனீர் கோப்பையை தந்த பிறகாவது சென்று விடுவாளா என்று தேனீர் கோப்பையை திருப்பி தந்தேன். வாங்கிக் கொண்டு திரும்பி நடந்தாள். அந்த தேனீர் கோப்பையை தராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது இப்போது‌. என் மனம் ஆடிய சதிராட்டம் பற்றி சுத்தமாக புரியவில்லை.

அவள் அங்கிருந்த சென்ற பிறகு வீட்டிற்குள் திரும்பி வந்தேன். மறக்காமல் கதவை சாத்தி விட்டு வந்தேன்.

என் வீட்டு தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. இருக்கட்டுமே என்று ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய தொலைக்காட்சி‌.

"நேற்று வெடித்து சிதறிய கல்லூரி பேருந்தில் பயணித்த நாற்பத்தி இரண்டு மாணவிகள் உட்பட எழுபது பேர் சம்பவ இடத்திலேயே பலி.. பேருந்து வெடிக்கையில் அந்த பேருந்து நின்றிருந்த நிறுத்தத்தில் நின்றிருந்த பொது மக்கள் ஐவரும் அதே இடத்திலேயே பலி.." என்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

என் வேலை நூற்றி பத்து சதவீத வெற்றியாக அமைந்ததில் சந்தோசம் எனக்கு. ஆமாம். நான்தான் அந்த கல்லூரி பேருந்துக்கு குண்டு வைத்தேன். ஏனெனில் நாட்டில் நிறைய இடத்தில் குண்டு வெடித்தும் கூட யாருக்கும் அவ்வளவாக பயம் இல்லை. இன்று பயந்திருப்பார்கள்‌. இளைஞர்களான கல்லூரி மாணவர்கள் நாட்டின் அடித்தளங்கள். அடித்தளங்களை கொத்துக்கையில் மொத்த கட்டிடமும் நேரடியாக சாயாதுதான். ஆனால் அடித்தளத்தை முக்கால்வாசி சிதைக்கையில் மொத்த கட்டிடமுமே விழும். இதை இந்த நாட்டு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அறிந்தால் அவர்களின் செயல்பாடு வேறு விதமாக இருக்கும். பார்க்கலாம். இனியாவது மாறுகிறார்களா என்று.!

அந்த பேருந்து வெடிப்பு ஊடகவியலாளர்களுக்கு நல்ல தீனி என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் மற்ற குண்டு வெடிப்புகளை விடவும் இந்த குண்டு வெடிப்பு செய்தியை அடிக்கடி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த யோசனை முன்னயே வந்திருக்கலாம். கல்லூரி பேருந்தை விடவும் பள்ளிப் பேருந்து அதிக மதிப்புடையது. அதற்கு குண்டு வைத்திருப்பேன் யோசனை சரியாக இருந்திருந்தால். ஆனால் என் மனதை கீழ் வீட்டுக்காரி கரையானாக அரித்துக் கொண்டிருந்ததில் எனது யோசனைகளில் ஏகப்பட்ட பிழைகள்.

"இன்னும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளி கல்லூரிகள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். எந்த ஸ்பெஷல் கிளாஸும் நடத்த கூடாது என்றும் மீறி நடத்தும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.." என்றாள் அந்த செய்தி வாசிப்பாளினி.

இப்போதுதான் முதல் முறையாக ஒரு சரியான முடிவு எடுத்துள்ளார்கள் என்று நினைத்தேன். அடுத்து எங்கே குண்டு வைப்பது என்று யோசித்தேன். டேப்லெட்டில் நாட்டின் மேப்பை பெரிதுப்படுத்தி தேடினேன். லேப்டாப்பில் அதிக மக்கள் கூடும் இடங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தது. எங்கே குண்டு வைப்பது என்பது பற்றி நெடுநேரம் யோசித்தேன். காலை நேரத்திலேயே பணியை துவங்கியது உற்சாகத்தை தந்தது.

நான்கு இடங்களை தேர்ந்தெடுத்துக் கூட்டி கழித்து பார்த்ததில் ஒரு இடத்தை முடிவு செய்தேன். தெற்கே இருந்த வேற்று மாநில நகரம். நாளை மறுநாள் ஒரு மாபெரும் கட்சி கூட்டம் நடைபெறுவதாக தகவலில் இருந்தது. அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக இதுவரை இருபதாயிரத்து எழுநூறு பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். நாளை மறுநாளுக்குள் இது இரண்டு மடங்காகலாம். நாடு முழுக்க குண்டு வெடித்தாலும் கூட்டம் மட்டும் கூடுவதை நிறுத்தவில்லை. அவ்வளவு அலட்சியம். அந்த அலட்சியம்தானே எனக்கும் வேண்டும்!

எந்த வெடிப்பொருள் எந்த அளவிற்கு தேவைப்படும் என்று கணக்கிட்டு கொண்டிருந்த வேளையில் வீட்டின் கதவு தட்டப்பட்டது. எரிச்சலாக வந்தது என் வேலையில் குறுக்கிட்டவர்கள் மீது. லேப்டாப்பையும் டேப்பையும் அணைத்து வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். அறையின் கதவை வெளிப்பக்கம் சாத்திவிட்டு சென்று வீட்டின் கதவை திறந்தேன். எவ்வளவு கோபம் என்பதை வார்த்தையால் சொன்னால் உங்களுக்கு புரியாது. குறுக்கிட்டவர்களின் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் அளவிற்கு கோபம்.

குழலிதான் நின்றுக் கொண்டிருந்தாள். "சமைக்க போறேன். இட்லி பிடிக்குமா.? தோசை பிடிக்குமா.?" என்றாள். என் கோபம் அதிர்ச்சியாக மாறி விட்டது. உணவின் மீது நான் கொண்ட காதலை புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த அதிர்ச்சியை பற்றி முழுதாக புரியும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

வந்துட்டேன் மக்களே. தாமதத்திற்கு சாரி நட்புக்களே. முன்ன கதை எழுத மனசு கஷ்டமா இருந்தது‌. இப்ப கதை எழுதாம மனசு கஷ்டமா இருக்கு. அதான் ஓடி வந்துட்டேன். தினம் யூடி தர இயலாது நட்புக்களே‌. அதனால இது ஒருநாள் குறிப்பேடு ஒரு நாள்ன்னு மாத்தி மாத்தி எழுதலாம்ன்னு இருக்கேன். இனியாவது எந்த தடையும் வராமல் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN