காதல் கடன்காரா 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எனதருமை நட்புக்களே.. இது ஒரு ஆன்டி ஹீரோ ப்ளஸ் ஆன்டி ஹீரோயின் ஸ்டோரின்னு சொல்லிதான் கதையை ஆரம்பிச்சேன் நான். ஆரம்பத்துல சில அத்தியாயங்களை பார்த்து கதையை கணக்கு போடாதிங்க. இன்னும் சில எபி வாங்க. ஆன்டி ஹீரோ ஸ்டோரின்னா ஆரம்பத்திலேயே சில பல பதில்களை சொல்ல வேண்டி வரும்ன்னு தெரிஞ்சிதான் கதையை எழுத தொடங்கினேன். பொழுதுபோக்கு கதைதான் எப்படி வேணாலும் எழுதுவேன்னு சொல்ல மாட்டேன் நான். கதையில கூட வாங்க.. கதை முழுமையான பிறகு உங்க மனம் நிறையும்ன்னு நம்புறேன். நன்றிகள்..

புவனா மூர்த்திக்கு போன் செய்தாள். கார்த்திக் அபிராமியை வரவைத்து அவளோடு பேசிக் கொண்டிருப்பதை பற்றி சொன்னாள்.

"ஹாஹா.. அவனை பத்தி தெரியும் புவி. அதனாலதான் நானே முத்தமிழை அரெஸ்ட் பண்ணேன். அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. விடு வாழ்ந்துட்டு போகட்டும்.." என்றான்.

"அண்ணா.. விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி வாழ வைக்கிறதுல என்ன இருக்கு.? இது காலம் முழுக்க சண்டையில்தான் கொண்டுப்போய் விடும்.." என்றாள் புவனா சலிப்போடு.

"எனக்கென்னவோ விருப்பம் இல்லாத மாதிரி தெரியல. கார்த்திக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. அதனாலதான் கிறுக்குதனமா பண்ணிட்டு இருக்கான். அவனோட காதல் அவளையும் காதலிக்க வைக்கும். கூட பிறந்ததுக்கு என்னால முடிஞ்ச உதவியை நான் பண்ணிட்டு இருக்கேன். நீ அவனுக்கு உதவி செய்யலனாலும் பரவால்ல அவன் லவ்வுக்கு டிஸ்டர்பா இல்லாம இரு.." என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

புவனாவிற்கு இருவர் மீதுமே கோபமாக வந்தது. அவளுக்கும் கார்த்திக் மீது பாசம்தான். ஆனால் ஒரு பெண்ணை வலுக்காட்டாயப்படுத்துவது சரியென்று தோணவேயில்லை.. இது தவறு. இதற்கான தண்டனை அவர்களுக்கு மிக மோசமாக கூட அமையலாம். கார்த்திக் அபிராமியை தன்னோடு அழைத்துக் கொண்டால் இந்த பிரச்சனை முடியாமல் நீண்டுக் கொண்டே போகும். தாலி கட்டியதற்கே உயிர் போகும் அளவிற்கு அடித்துப்போட்ட முத்தமிழ் மறுபடியும் பிரச்சனை வந்தால் இவனை கொன்றே விடுவான். கார்த்திக்கிற்கும் மூர்த்திக்கும் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் தெரியவில்லை என்று கவலைப்பட புவனாவிற்கு மனம் அடித்துக் கொண்டது.

யமுனாவும் கார்த்திக்கின் அப்பா முருகனும் ஐசியூ வராந்தாவில் அமர்ந்திருந்தனர்.

"உன் பையன் தேவையில்லம பண்ணிட்டு இருக்கான்.." என்ற முருகனுக்கும் கார்த்திக்கின் செயலில் வெறுப்புதான்.

"வருசம் முழுக்க அவன்தானே வாழ போறான்.? நீங்களா அவனுக்கு பதிலா வாழ போறிங்க.? அவன் அவனுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போறான். உங்களுக்கு என்ன போகுது.?" என்று கணவனிடம் எரிந்து விழுந்தாள் யமுனா.

"ஒரு பொண்ணை கண்ணீரோடு வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கறது நல்லது இல்லடி. அது பாவம். அந்த பொண்ணு வயிறு எரிஞ்சா நம்ம பொண்ணுக்கு பாதிக்கும்.." என்றவரை முறைத்தவள் "நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா.? பாவம் புண்ணியம்ன்னு சொல்லிக்கிட்டு.? நீங்க என்ன என்னை கேட்டுட்டா என்னை கட்டிக்கிட்டிங்க.? எங்க அப்பா அம்மா கட்டி தந்தாங்கன்னுதானே கட்டிக்கிட்டேன். எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும்.." என்றவளை பரிதாபமாக பார்த்தார் அவர். தன் மனைவிக்கு இனி எந்த வயதில் அறிவு வருமோ என்று கவலைக் கொண்டார்.

சற்று நேரத்தில் அபிராமி ஜ.சி.யூ அறையிலிருந்து வெளியே வந்தாள். முகம் வாடிப் போயிருந்தது. அவளை பார்க்கையில் முருகனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தன் மகனை இன்னும் நன்றாக அடித்து மிரட்டி வளர்த்தியிருக்க வேண்டுமோ என்று நினைத்தார்.

இருள் சூழ ஆரம்பித்தது. அபிராமி அந்த மருத்துவமனையை விட்டு வெளியே நடந்தாள். தன்னை தாண்டி சென்றவளிடம் பேச முயன்றாள் யமுனா. அவளோடு பேச முயற்சித்தாள். ஆனால் அபிராமி தான் இருந்த சோகத்தில் இவளை கண்டுக் கொள்ளாமல் சென்று விட்டாள். மருமகள் வீட்டிற்கு வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அமைதியாகிக் கொண்டாள் யமுனா.

அபிராமி மருத்துவமனை வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். சுய சிந்தனை ஐம்பது சதவீதம் கூட வேலை செய்யவில்லை. திருமணநாளில் குளத்தில் மூழ்குகையில் இருந்த அதே உணர்வு மீண்டும் பிடித்துக் கொண்டது. ஸ்கூட்டி அதன் பாட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தது போலிருந்தது.

சில கிலோமீட்டர்கள் தாண்டி வந்திருப்பாள். "ஏய் பாப்பா.." என்று யாரோ கத்தினார்கள். ஆனால் அது சரியாக இவளின் மூளையில் பதியவில்லை. நொடியில் என்னவோ வந்து அவளின் ஸ்கூட்டியின் மீது மோதியது. ஸ்கூட்டி தரையில் சாய்ந்தது. இவளும் ஸ்கூட்டியோடு கீழே விழுந்தாள். என்ன நடந்தது என்று புரியாமல் நிமிர்ந்தபோது அவளுக்கு முன்னால் கார் ஒன்று இருந்தது.

"கண்ணை என்ன முதுகுலயா வச்சிட்டு வர.?" என்று யாரோ திட்டிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.

அவள்தான் பாதை மாறி விதிமுறையை மீறி எதிர் திசை வண்டிகள் வருவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சாலையில் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு சென்றிருக்கிறாள். சுற்றி இருந்தவர்கள் ஓடி வந்து ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தினார்கள். வயதான மனிதர் ஒருவர் அபிராமியை எழுப்பி நிறுத்தி எங்கோ சென்று தண்ணீர் வாங்கி வந்து தந்தார். தாகம் இல்லை. ஆனால் பயந்திருப்பாளோ என்னவோ என்று அனைவரும் தண்ணீர் அருந்த சொன்னார்கள். அழுகையை அடக்கிய தொண்டை இப்போது தண்ணீர் அருந்தும் போதும் நெருப்பாக எரிந்தது.

"உனக்கொன்னும் அடிப்படலையே பாப்பா.?" என்று அவளை திருப்பி நிறுத்தி மேலிருந்து கீழாக பார்த்தாள் ஒரு பெண்மணி. பெரியதாக அடிப்படவில்லை. இல்லையேல் வலித்திருக்குமே என்று நினைத்தாள். கை முட்டியில் மட்டும் கொஞ்சமாக எரிந்தது. சந்தேகமாக கையை திருப்பி பார்த்தாள். தார் ரோடு சும்மா விழுந்ததற்கே கை முட்டியை பதம் பார்த்து விட்டது.

"ஹாஸ்ப்பிட்டல் போலாமா.?" என்றான் அந்த காரின் டிரைவர். சற்று முன் திட்டியவன் இவளின் காயம் கண்டதாலோ இல்லை அழகு முகம் கண்டதாலோ இப்போது கொஞ்சம் பரிதாபப்பட்டான்.

"தேங்க்ஸ்.. ஆனா ஹாஸ்ப்பிடல் வேண்டாம்.." என்றவள் தனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த கூட்டத்தில் இருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளையாக எந்த முகமும் தெரிந்த முகமாக இல்லை.

"சாரி கார் மேல வந்து இடிச்சதுக்கு.." என்றாள் காருக்கு சொந்தக்காரனிடம்.

அவன் முகத்தில் பழைய சிடுசிடுப்பு வந்து விட்டது. "இனியாவது கவனமா ஸ்கூட்டி ஓட்டுங்க. மறக்காம ஒரு ஹெல்மெட் வாங்கி மாட்டுங்க.." என்றவன் ஸ்கூட்டியை கவனித்தான். முன்னால் இருந்த வண்டி பாகங்கள் சில நெளிந்து கிடந்தன. ஒரு பக்கத்து இன்டிகேட்டர் லைட் சுத்தமாக நொறுங்கி விட்டது. முன் பக்க விளக்கு கண்ணாடியும் நிறைய கீறல்களோடு இருந்தது. நம்பர் ப்ளேட் ஒடுங்கிப் போயிருந்தது.

"ராங் சைடா வந்து இடிச்சது நீங்கதான். உங்க ஸ்கூட்டியை ரெடி பண்ண என்கிட்ட பணம் கலெக்ட் பண்ண நினைக்காதிங்க. அப்புறம் நான் ஸ்டேசன் போக வேண்டி வரும்.." என்றான் அவன்.

அவன் மரியாதை தந்ததே போதுமென்று இருந்தது அபிராமிக்கு.

"இல்ல சார். தப்பு என் மேலதான்னு தெரியும். சாரி.." என்றவள் காரை பார்த்தாள். முன்பக்கம் ரொம்ப சின்னதாக ஒரு இடத்தில் ஒடுங்கியிருந்தது.

"உங்க காரை சரி செய்ய பணம் தரணுமா சார்.?" என்றாள் தயக்கமாக. அவன் காரை திரும்பி பார்த்துவிட்டு பின்னர் இவள் பக்கம் திரும்பினான். வேண்டாமென்று தலையசைத்தான். அந்த முகத்தில் கொஞ்சம் புன்னகையை வைத்தபடி தலையாட்டி இருக்கலாம் என நினைத்தாள் அபிராமி.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது. அபிராமி கடவுளை வேண்டிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். பழுதில்லாமல் ஸ்டார்ட் ஆனது. கார்க்காரனை பார்த்தாள். அவனும் காரில் அமர்ந்தான். அவனின் சிடுசிடுப்பு நிறைந்த முகத்தை பார்க்க பயந்த அபிராமி ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தாள்.

இருள் அதிகமாவதை கண்டு ஸ்கூட்டியின் முன் பக்க விளக்கை ஒளிர விட்டாள். லைட் எரியவில்லை. கீழே விழுந்ததில் ஒயர் கனெக்சன் கட் ஆகி விட்டது என்பதை புரிந்துக் கொண்டவள் பொறுமையாக அந்த இருளில் வீடு போய் சேர்ந்தாள்.

இவள் வீட்டுக்குள் நுழைந்தபோது பாட்டி டிவியில் ஏதோ சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். அபிராமி பாட்டியின் கண்களில் படாமல் அறைக்கு சென்று விடலாம் என நினைத்து பூனை நடை நடந்தாள்.

"சுவாதிக்கு போன் பண்ணேன். ஆனா நீ அங்கே வரலன்னு சொன்னாளே.." என்றாள் அம்மா சமையலறை வாசலில் நின்றபடி. நடப்பதை நிறுத்திவிட்ட அபிராமி முக சுளிப்பை மறைத்தபடி அம்மாவை திரும்பி பர்த்தாள்.

"கையில என்ன காயம்.?" தனது அறையிலிருந்து வந்தபடி கேட்டார் அப்பா.

"காயமா.?" என்ற பாட்டி அவசரமாக எழுந்து வந்தாள். தாத்தாவும் எங்கோ இருந்து ஓடி வந்தார். "என்ன காயம்.?" என்றவரின் குரலில் பதட்டம் நிரம்பியிருந்தது.

அபிராமியின் கை முட்டியை பார்த்த பாட்டி "இவ்வளவு பெரிய அடியா.? எங்கேடி போய் விழுந்த அறிவுக் கெட்டவளே.." என திட்டியபடி தன் முந்தானையை எடுத்து காயத்தின் மீது ஒற்றினாள். அபிராமியின் துப்பட்டா அவளின் கையோரத்தில்தான் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

"நீதான்டி அறிவு கெட்டவ.. யாராவது காயத்து மேல துணியை வைப்பாங்களா.? பாப்பாவுக்கு எரியுமில்ல.?" என திட்டிய தாத்தாவை உற்று பார்கையில் அவரின் கைகள் லேசாக நடுங்கியது நன்றாக தெரிந்தது.

"வா பாப்பா ஹாஸ்ப்பிட்டல் போகலாம்.." என்ற அப்பா காரின் சாவியை கையில் எடுத்தார்.

"இல்லப்பா.. சின்ன காயம்தான். ஹாஸ்பிட்டல் வேணாம். நான் இங்கேயே ஆயிண்மெண்ட் போட்டுக்கறேன்.." என்றவளின் பேச்சை கேட்காதவர்கள் அவர்களின் குடும்ப மருத்துவருக்கு போன் செய்து வர வைத்தார்கள். மருத்துவர் வரும் வரை அபிராமியின் காயத்தை ஊதி விட்டுக் கொண்டிருந்தாள் பாட்டி.

"எவ்வளவு பெரிய காயம்.." என்று நொடிக்கொரு முறை பிணாத்தினார் தாத்தா. மருத்துவர் அந்த சிறு காயத்திற்கே செப்டிக் ஆகாமல் இருக்க என்று சொல்லி ஊசி ஒன்றை போட்டு விட்டார். அபிராமிக்கு ஊசி போடுகையில் மொத்த குடும்பமும் அந்த வலியை உணர்ந்ததன் அடையாளமாக அனைவரின் முகமுமே வாடிப் போய் இருந்தது.

மருத்துவர் சென்ற பிறகு சூடான பாலோடு அருகே வந்து அமர்ந்த பாட்டி "இந்த பாலை குடி. மாத்திரை போட்டுப்ப.." என்றாள். அவள் மாத்திரை விழுங்கும்போது தேவைப்படும் என்று கற்கண்டை எடுத்து வந்து தன் கையில் வைத்திருந்தார் தாத்தா.

அவள் பாலை குடித்து மாத்திரையை போட்டுக் கொண்ட பிறகுதான் "எப்படி காயம் ஆச்சி.?" என்று கேட்டார் தாத்தா.

"ஸ்கூட்டி கூட அடிப்பட்டு இருக்கு.? எங்கே விழுந்த.. எப்படி விழுந்த.?" என கேட்டார் அப்பா.

அபிராமி யோசித்தாள். "சிந்து வீட்டுக்கு போய்ட்டு வரும்போது அவங்க தெரு முனையில் இருந்த போஸ்ட் கம்பத்துல இடிச்சி விழுந்துட்டேன். ஸ்கூட்டியில லைட் எரியல. அதனாலதான் விழுந்துட்டேன்.." என்றவள் மனதுக்குள் ஸ்கூட்டிக்கு சாரி சொன்னாள்.

"சிந்துவா.? சுவாதி வீட்டுக்குதானே போறேன்ன.." என்றாள் அம்மா.

"சிந்து வீட்டுக்கு போறேன்னு சொல்றதுக்கு பதிலாதான் சுவாதி வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டேன். நாளைக்கு மகாலட்சுமிக்கு பர்த்டே. அதனாலதான் பார்டி ப்ளான் பண்ணலாம்ன்னு போனேன். ஆனா வரும்போது இப்படி ஆயிடுச்சி.." என்றவள் அப்பாவின் பக்கம் திரும்பி "ஸ்கூட்டியை ரெடி பண்ணனும்ப்பா.. லைட்டே எரியல.." என்றாள்.

தாத்தா அவளின் தலையை வருடி விட்டார். "அந்த ஸ்கூட்டி வேணாம். நான் உனக்கு புதுசு வாங்கி தரேன். ராசி இல்லாதது உன்னை கீழே தள்ளி விட்டுட்டுச்சி.." என்றார்.

இல்லையென தலையசைத்தவள் "இல்ல என் ஸ்கூட்டி நல்ல ஸ்கூட்டி. கீழே விழுந்தும் எனக்கு அடிப்பட விடல.." என்றவள் "எனக்கு தூக்கம் வருது.." என்றபடி எழுந்து நின்றாள்.

ஆனால் அம்மாவும் பாட்டியும் கட்டாயப்படுத்தி இரவு உணவை உண்ண வைத்த பிறகே தூங்க அனுப்பினார்கள். படுக்கையில் படுத்த பத்தாம் நிமிடத்தில் உப்புக்கல்லும் காய்ந்த மிளகாயும் கொண்டு வந்து அவளின் தலையை சுற்றி திருஷ்டி கழித்தாள் பாட்டி.

பாட்டி கதவை சாத்தி விட்டு சென்ற பிறகு தலையணையில் முகம் புதைத்தவளுக்கு இதுவரை அடக்கியிருந்த கண்ணீர் ஆர்ப்பரித்து வெளி வந்தது.

இது போன்ற ஒரு குடும்பத்தை தனக்கு தந்த இறைவனுக்கு நன்றி சொன்னாள். இதுவரை சிறு பொய்கள் கூட சொன்னதில்லை. இப்போது பெரிய துரோகம் செய்ய போகிறோம் என்ற எண்ணம் அவளை நெருப்பாக சுட்டது. தாத்தாவிற்கு அண்ணனை விட தன்னைதான் அதிகம் பிடிக்கும் என்ற விசயம் எப்போதும் அவளுக்கு பெருமையைதான் தரும். ஆனால் இப்போதோ குற்ற உணர்வை தந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN