குறிப்பேடு 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தினேஷின் பிரேத உடலை வெறுப்போடு பார்த்தான் சிவா.

"என் நண்பன் இறந்த பிறகு கூட நிம்மதி கிடைக்காம அலையுறான்.." என்று கவலைக் கொண்டான்.

"இவனோட உடலை சிதையில் வச்சி தீ மூட்டினா எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துடும்.." என்றார் முஸ்தபா.

அவர்கள் இருவரையும் முறைத்த தினேஷ் "நான்‌ சாகல.. இப்பதான் புதுசா பிறந்திருக்கேன்.." என்றான்.

சிவா நெற்றியில் அடித்துக் கொண்டான். "இன்ஸ்பெக்டர் சொல்றதுதான் உண்மை தினேஷ்.. இதெல்லாம் கண்கட்டி வித்தை.. செத்த பிறகும் கூட உன்னை நிம்மதியா விடாம வச்சிருக்காங்க இவங்க. இதெல்லாமே பொய்.. நீ செத்துட்ட.."

தினேஷ் சிவாவின் மீது பாய்ந்தான். சிவாவின் முகத்தில் குத்துக்களை விட்டான்.

"சாந்தவியை என்கிட்ட இருந்து பிரிக்கதான் நீ இப்படி டிராமா பண்ற.." என்றான்.

சிவா அவனை தூர தள்ளினான். "எல்லாமே உன் கற்பனை.." என்று திட்டினான்.

"எல்லாரும் நிறுத்துங்க.." என்று கர்ண கொடூரமாய் ஒலித்தது ஒரு குரல். சிவாவும் மற்றவர்களும் திரும்பி பார்த்தார்கள். மூத்த இளவரசன் உள்ளே இருந்து வந்தான்.

"இது பிரேத கோட்டை. இங்கே நீங்க யாரும் சண்டை போட கூடாது.." என்றான்.

"அந்த கதவை திறந்து விட்டா நாங்க போயிட போறோம். எதுக்கு சண்டை போட போறோம்.?" என்றான் சிவா.

"அதானே.." என்றார் சதாசிவமும்.

"இந்த கோட்டைக்குள்ள வந்த அன்னிய மனிதர்களை உயிரோடு திருப்பி அனுப்பிய வழக்கம் எங்களுக்கு இல்ல.." என்ற பெரிய இளவரசன் தனது இடையில் இருந்த கத்தியை கையில் எடுத்தான். சிவாவுக்கு சட்டென்று பயம் பிடித்துக் கொண்டது.

"செத்துருவோமா சார்.?" என்றான் சதாசிவத்திடம்.

"அல்லா என்ற ஒருவன் இருக்கும்வரை நாம சாக மாட்டோம்.." என்று தைரியம் சொன்னார் முஸ்தபா.

"ஹாஹா.." என்று சிரித்த இரண்டாமவன் "நாங்க இருக்கும் வரை நீங்க உயிரோடு போக முடியாது.." என்றான். பின்னர் தன் இரு கைகளையும் விரித்தான்.

"இது பிரேத கோட்டை.. இந்த கோட்டைக்குள்ள வாழும் வரை எங்க யாருக்கும் மரணம் வராது.." என்றான். அவனது குரல் பயங்கரமாக இருந்தது.

நாற்றம் பிடித்த அந்த அரண்மனையை சுற்றிலும் பார்த்தான் சிவா. ஒரு இடத்தில் ஒரு பிணத்தின் கைகள் மடங்கியபடியும் அதன் முகத்தில் இருந்து ஜெல் மாதிரி எதுவோ ஒழுகியபடியும் இருந்தது. சிதைந்துக் கொண்டிருந்தது பிணங்கள். அழுகிக் கொண்டிருந்தது அந்த உடல்கள். அவற்றை பத்து நொடிகள் பார்த்தது சிவாவின் தவறு. நின்ற இடத்திலேயே வாந்தி எடுத்தான். அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை.

சிவா வாந்தி எடுப்பதை கண்டு முகம் சுளித்தான் தினேஷ்.

"ச்சீ.." என்றான்.

"இந்த நாத்தம் பிடிச்ச பங்களாலவுல இருந்தா வாந்திதான்டா வரும் செத்தவனே.." எரிச்சலாக சொன்னார் சதாசிவம். அவருக்கும் ரொம்ப நேரமாக குடல் பிரட்டிக் கொண்டுதான் இருந்தது. சிவாவை பார்க்கையில் அவருக்கும் கூட வாந்தி வரும் போல இருந்தது. சிரமத்தோடு அந்த உணர்வை அடக்கிக் கொண்டிருந்த காரணத்தாலே எரிச்சல் அதிகமாக வந்தது.

"நாத்தம் பிடிச்ச பங்களாவா.? இது பிரேதங்களை கொண்டு கட்டி ஆன்மாக்களை காவலுக்கு வைத்த கோட்டைடா.." என்ற பெரியவன் தன் கத்தியை முன்னும் பின்னுமாக சுழற்றினான்.

"எனது அடிமைகள் உடனே வாருங்கள்.." என்றான். உடனே அந்த இடத்திற்கு சில ஆன்மாக்கள் வந்தன.

"இவர்களை கொண்டு போய் சிறையில் அடைத்து வை.. விரைவில் பலி பூஜை இடலாம்.." என்றான் பெரியவன்.

"பெற்ற தந்தையையே பலி பூஜை செய்றவன் நீதான்.‌." என்றார் சதாசிவம். அவனை குறுகுறுப்பாக பார்த்துவிட்டு ரகசியமாக சிரித்தான் இரண்டாமவன்.

சிவாவிற்க்கும், சதாசிவத்திற்கும், முஸ்தபாவிற்கும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு வேறு எங்கோ பயணப்பட்டது போல இருந்தது. உதட்டின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப் பருக்கையை புறங்கையால் துடைத்த சிவா "இப்ப நாம எங்கே இருக்கோம்.?" என்றான்.

முஸ்தபா தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்தார். அதே பிணங்கள்தான் சுவர்களில் சுற்றி சுற்றி இருந்தன. இந்த அறை சிறியதாக இருந்ததால் நாற்றம் முன்பை விட அதிகம் வந்தது. ஒரு ஓரத்தில் எலும்பு கூடாய் இருந்தவனின் திறந்த வாயில் சொருகி வைக்கப்பட்டிருந்த தீ பந்தம் அந்த காற்றில்லாத நாற்ற அறையிலும் எரிந்துக் கொண்டிருந்தது. தரையிலும் கூட அதே பிணங்கள்தான் மெழுகப்பட்டிருந்தது. சுற்றி இருந்த சுவர்களில் இருந்து வழிந்த பிணத்தின் அழுகிய தண்ணீராலும் ரத்தத்தாலும் அந்த தரை கறுத்துப்போய் இறுகி விட்டது. ஜன்னல் இல்லாத அந்த அறையில் இரண்டு பழங்கால கட்டில்கள் இருந்தன. அருகே இருந்த மேஜையின் மீது கருப்பு துகள்களால் நிரம்பிய தட்டு ஒன்று இருந்தது.

தன் மூக்கை விரல்களால் இறுக்கி பிடித்துக் கொண்டபடி "அதே நாத்தம் பிடிச்ச பிண பங்களாதான்.." என்றார் சதாசிவம். இந்த கோட்டையின் நாற்றம் அவருக்கு தலைவலியையும் எரிச்சலையும் அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது.

"இவங்களுக்கு இத்தனை பிணங்கள் எப்படி கிடைச்சது‌.? எல்லாரும் தலையில் கவசம் அணிஞ்சிருக்கும் பிணங்களா இருக்காங்க.. சிலரோட கையில் வேலும் வாளும் கூட இருக்கு.‌." என்றார் சதாசிவம் அந்த சுவர்களை சுற்றி பார்த்துவிட்டு.

"தெரியல.." என்ற சிவாவை தன் பக்கம் திருப்பினார் முஸ்தபா. "அந்த டைரியில் நீங்க என்ன படிச்சிங்க.?" என்றார்.

"சாந்தவின்னு ஒரு பொண்ணு.. ரொம்ப அழகான பொண்ணு.. ஆனா கண்டிப்பா அது யாழினி கிடையாது. அவளால எப்படி அந்த சாந்தவியோட பாயிண்ட் ஆஃப் வியூ பார்க்க முடிஞ்சதுன்னு தெரியல.! அந்த சாந்தவி என்னை அதாவது என் கணக்குப்படி அந்த அமுதனை லவ் பண்றா.. இல்ல. லவ் பண்ண ஆசைப்படுறான்னு வச்சிக்கலாம். அமுதன் அவக்கிட்ட இருக்கற இவனோட கழுத்து ஆபரணத்தை வாங்கிட்டு வர கோவிலுக்கு போனான். அவ லவ் பண்ணாளோ இல்லையோ இவன் லவ் பண்ணான். அது உண்மை. அவளுக்காக கோவில் பின்னாடி காத்திருந்தான். அப்ப யாரோ வந்து அவனை குத்தி கொன்னுட்டாங்க.." என்றவன் அந்த உணர்வை இப்போது அனுபவிப்பது போல உடல் சிலிர்த்தான்.

"கொன்னது யார்.?" என்றார் சதாசிவம்.

யோசித்துப் பார்த்தான் சிவா. "இல்ல அதை படிக்கல.. சாவை அரைகுறையாதான் படிச்சேன்.." என்றான்.

"அந்த மரகதன்தான் கொன்னிருக்கணும்.." என்றவன் வயிற்றை பிடித்தபடி சென்று அங்கிருந்த கட்டிலின் மீது படுத்தான்.

"இவங்க வாழ்ந்தது அரசர் காலம். அப்புறம் எப்படி இன்னமும் பிணங்கள் அழுகிட்டு இருக்கு.?" என்றான் சந்தேகமாக.

"இந்த கருமம் என்னன்னு எனக்கும் சரியா புரியல. இந்த கதையே ஒரு கட்டுக்கதைதான். இந்த கதையிலிருந்தும் இந்த பங்களாவிலிருந்தும் எப்படியாவது வெளியே போயாகணும்.." என்றார் சதாசிவம்.

கட்டிலில் சாய்ந்து படுத்தான் சிவா. அவனுக்கு குடல் மேலும் கீழும் போய் விட்டது வந்தது போல இருந்தது. கூரையை பார்த்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான். கூரையிலிருந்த பிணத்தின் முகங்கள் அவனுக்கு பயத்தை தந்து விட்டது. தரையை தவிர வேறு எங்கேயும் பார்க்க முடியவில்லை அவனால்.

"உங்களுக்கு பயமா இல்லையா சார்.?" என்றான் சிவா.

சதாசிவம் தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து மூக்கை சுற்றி கட்டிக் கொண்டார். நாற்றம் குறையவில்லை. ஆனாலும் இந்த கர்ச்சீப் தன் உயிரை பாதுகாக்கும் என்று நம்பினார். கர்ச்சீப்பை கட்டியபடி அந்த பிணங்களின் அருகே சென்றார்.

"இந்த போலில் வேலையில் நான் பார்க்காத பிணமே இல்லை. என்ன.. இங்கே கொஞ்சம் அதிகமா இருக்கு. அவ்வளவுதான்.! இதுக்கெல்லாம் நான் அசருற ஆள் இல்ல.." என்றவர் அந்த பிண சுவரை ஆராய்ந்தார். பிணங்கள் இப்போதுதான் அழுகிக் கொண்டிருந்தன. நல்லவேளையாக புழுக்கள் இல்லை. இல்லையென்றால் தாங்கள் இன்னேரம் இறந்திருப்போம் என்று நினைத்தார் அவர்.

"இந்த பிணங்கள் அழுகிய ரேஞ்சை பார்த்தா இந்த பங்களாவோட ஆயுள் மிஞ்சி போனா ஒரு மாசமாவோ இல்ல அதுக்கும் குறைவாவோ இருக்கலாம்.." என்றார்.

"ஆனா இது எல்லாமே ராஜா காலத்து உடல்கள்.." என்றார் முஸ்தபா.

"அதனால்தான் இதை கட்டுக்கதைன்னு சொல்றேன் நான். ஏதோ ஒன்னு நம்மை அதோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கு. நாம அதுல இருந்து தப்பிச்சி போகணும்.." என்றார் சதாசிவம்.

சிவாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை‌. அந்த அமுதன் தான்தான் என்று அவனால் முழுதாய் ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம் அந்த அமுதனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நினைக்கையில் மனம் இரண்டாய் பிளவுறவும் செய்தது.

கண்களை மூடியபடி கவிழ்ந்து படுத்தான். எல்லாமே கனவு போல் இருந்தது. இதுவும் கனவு போல. அமுதனாக வாழ்வதும் கனவு போலவே.

வசந்தன் வைத்திருந்த டைரியை எடுத்து வந்த யாழினி தனது அறையை தாழிட்டு விட்டு வந்து கட்டிலின் மீது அமர்ந்தாள். டைரியை பிரித்தாள்.

சாந்தவி தன் தந்தையை கண்ணீரோடு பார்த்தாள். "தந்தையே நான் யாரையும் கொல்லவில்லை.." என்றாள்.

யாழினிக்கு மரகதன் மீது கொலைவெறி வந்தது. ஒரு பெண்ணை அடைய இவ்வளவு கேவலமாக செயல்பட வேண்டுமா என்று நினைத்தாள்‌.

சாந்தவியை அறைக்கு இழுத்து வந்தான் மரகதன். "என் பதவி திமிரை நீ அடக்குறியா.? நான் என்னையே தர தயாரா இருக்கேன்.. உனக்கு ஏன் என் காதல் புரியல.. உன் அழகு என்னை உயிரோடு கொல்லுது. உன்னை இந்த நொடி எடுத்துக் கொள்ள முடியும் என்னால.! உன் சம்மதத்திற்காக நாயாக காத்து நிற்பது தவறா.?" என்றான். அவனின் குரலில் எவ்வளவு கோபம் இருந்தது என்று சாந்தவிக்கு மட்டும்தான் தெரியும்.

"என்னையும் என் தந்தையையும் விட்டுடு.." என்றாள் கடைசி முறையாக.

"என் ஆசைக்கு இணங்கு‌. உன் தந்தையை பத்திரமாக வெளியே விட்டுடுறேன்.." என்றான்.

"அப்படியானால் அமுதனை உன்னால் உயிரோடு கொண்டு வர முடியுமா.?" என்றாள் கோபத்தோடு.

பெருமூச்சு விட்டான் மரகதன். "இப்போது உனக்காக உண்மையை சொல்றேன் கேளு.. அமுதனை கொன்றது நான் இல்ல. உன் தந்தைதான்.." என்றான்.

யாழினி டைரியை மூடி வைத்தாள். மரகதன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை. அவள் தன் தந்தையின் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாள். தந்தையும் அவளின் மீது உயிரை வைத்திருந்தார். அவர் ஏன் அமுதனை கொல்ல வேண்டும்.? என்று யோசித்தாள்.

"யாழினி வந்து கதவை திற.." என்றார் வசந்தன்.

யாழினி தந்தையின் குரலில் திடுக்கிட்டு போய் விட்டாள். திரும்பி கதவை பார்த்தாள். அப்பா உண்மையில் அமுதனை கொன்றிருப்பாரா.? அப்படியானால் அவர் ஏன் அமுதனை விட கெட்டவனான மரகதனை கொல்லவில்லை என்று யோசித்தாள். அவளுக்கு குழப்பத்தில் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

"யாழினி.." என்று மீண்டும் கதவை ஓங்கி தட்டினார் வசந்தன்.

டைரியை கட்டில் மெத்தையின் இடையில் மறைத்து வைத்துவிட்டு எழுந்து சென்று கதவை திறந்தாள். வசந்தன் கோபத்தோடு நின்றிருந்தார்.

"கதவை திறக்க உனக்கு ஏன் இவ்வளவு நேரம்.? வா சாப்பிடுவ.." என்றார். அவர் டைரியை பற்றி கேட்காதது அவளுக்கு நிம்மதியை தந்தது. தன் தந்தையின் மீதே சந்தேகம் கொள்வது சரியென்று தோன்றவில்லை அவளுக்கு. எதையும் முழுதாக படித்துவிட்டு பிறகு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

இரவு உணவை அப்பாவும் மகளும் சேர்ந்து உண்டனர். "சிவாவை நேத்திருந்து காணோம்.. உனக்கு அது பத்தி தெரியுமா.?" என்று கேட்டார்.

அதிர்ச்சியோடு அவரை பார்த்தவள் தெரியாதென தலையசைத்தாள்.

"அவனோட அப்பா அவன் போன் ரீச்சாகலன்னு எனக்கு போன் பண்ணாரு. நேத்திருந்து அவன் போன் எடுக்கலையாம். அவனை அவன் வீட்டுப் பக்கத்துல இருந்தவங்களும் பார்க்கல. அவன் ஆபிஸ்க்கும் போகலயாம்.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN