காதல் கடன்காரா 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்றைய இரவு முழுவதையும் உறங்காமலேயே கடத்தினாள் அபிராமி.

இரவில் கார்த்திக்கும் உறங்கவில்லை. அவனுக்கு அபிராமியின் முகம் கண்களிலேயே நின்றது. அவள் என்னவோ செய்தாள் இவனை. அந்த முகமும் கண்களும் உதடுகளும் காதும் சுடிதாரால் இறுக்கி பிடிக்கப்பட்டிருந்த இடுப்பும் என அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

நடு இரவில் இவனை கவனிக்க வந்த மூர்த்தி "தண்ணி, பால், மாத்திரை எதாவது வேணுமாடா.?" என்றான்.

"வேணாம்.." என்றவன் 'எனக்கு அவ வேணும்..' என்றான் மனதுக்குள்.

"பகல் முழுக்க விழிச்சிட்டு தூக்கம் வரலையா.? நான் வேணா நர்ஸை வர சொல்லட்டா.? மயக்க ஊசி போட்டு விடுவாங்க.." என்றான்.

"இல்லண்ணா வேணாம்.." என்றவன் "இப்படி உட்காரேன்.. கொஞ்சம் பேசலாம்.." என்றான்.

அப்படி என்ன பேச போகிறான் என நினைத்தபடி அமர்ந்தான் அவன்.

"அவளை பத்தி நினைச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குதுடா அண்ணா.. அவ முகத்தை பார்த்தியா நீ.? செம.! அவளை மாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே இல்ல. என்னமோ பண்றா அண்ணா என்னை அவ.! இதயம் வேற மாதிரி துடிக்குது அவளை பார்க்கும்போது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்க மாட்டேங்குது. அவளை பத்தி எவ்வளவு நேரம் நினைச்சாலும் அப்படியே நினைச்சிட்டு இருக்க தோணுது. தேவதைக்கு சாபம் தந்து இங்கே அனுப்பி இருப்பாங்களோ.?" என்றான்.

மூர்த்திக்கு தலையெழுத்தே என்றிருந்தது. நடு இரவில்‌ இவனின் உளறலை கேட்கவா வந்தோம் என்று நினைத்தான்.

"அவ செம.. அவளோட புருவம் கூட பாரேன்.. எவ்வளவு அழகா இருக்கு. இந்த வில் அம்புன்னு கவிஞர்கள் என்னவோ வர்ணிப்பாங்களே அதே மாதிரி இருக்குடா அவ புருவம். அந்த மூக்கு கூட பாரேன்.. அப்படியே.."

"யப்பா சாமி ஆளை விடுடா.. தெரியாம உள்ளே வந்துட்டேன்.. நடு ராத்திரியில ஒரு பேச்சிலரை மொக்கை போட்டே கொல்லாத.! நீ அவளை நினைச்சே கனவு காணு. நான் போறேன்.." என்ற மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே கிளம்பினான்.

கார்த்திக்கிற்கு அண்ணன் மீது கோபமாக வந்தது. தனது ஆசையை அவன் புரிந்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டான். தன் மனதில் இருப்பது காதல் இல்லை என்று அவனுக்கே தெரியும். ஆனால் அதுதான் காமம் என்று அவனால் அந்த நேரத்தில் கண்டறிய முடியவில்லை.

"செமையோ செமடி நீ.!" என்றவனுக்கு புரள வேண்டும் போல இருந்தது‌. ஆனால் அசைய கூட முடியாத அளவிற்கு இருந்தது உடலின் நிலை.

மறுநாள் கார்த்திக்கை பார்க்க ஈஸ்வரின் குடும்பம் வந்தது. இதுவரை மறைமுகமாக மட்டுமே சண்டை போட்டுக் கொண்ட பங்காளிகள் சண்டை அது‌. முதல் முறையாக கார்த்திக்தான் நேரடியாக மோதி விட்டிருந்தான். அதற்கு அவனை நேரடியாக தாக்காமல் இப்போது இவனின் உடல் நலம் பற்றி விசாரிக்க வந்திருந்தது அந்த குடும்பம்.

"எப்படி இருக்க தம்பி.?" என்றாள் அவனின் அம்மா‌. எத்தனையோ விசயங்களில் அந்த குடும்பத்திற்கு கேடி யோசனை சொல்பவளே அவள்தான் என்று கார்த்திக்கிற்கு ஏற்கனவே தெரியும்.

"ஏதோ ஒரு மாதிரி இருக்கேன் பெரியம்மா.." என்றான் கார்த்திக்.

"இந்த வெங்காயத்துக்குதான் சொல்றது அடுத்த வீட்டு பொண்ணையெல்லாம் தேவையில்லாம தொட கூடாதுன்னு.!" என்றார் பெரியப்பா.

கார்த்திக் தனக்கு வர இருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"அடுத்த வீட்டு பொண்ணு பிடிச்சிருந்தா அவளைதானே தொட முடியும்.?" என்றவனை குழப்பமாக பார்த்தான் ஈஸ்வர்.

"நீ அவளை லவ் பண்றியா.?" என்றான்.

ஆமென தலையசைத்தான் கார்த்திக். "அஞ்சி வருச லவ்.!" என்றான் கூசாமல்.

அவனின் பொய் ஈஸ்வருக்கு புரிந்துதான் இருந்தது. ஆனால் பிரச்சனைகள் முடிந்த பிறகும் இவன் ஏன் இதை சொல்கிறான் என்றுதான் புரியவில்லை. 'அண்ணா.. தெரியாமல் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடு..' என்று சொல்வான் என்று எதிர்ப்பார்த்தால் இவன் புதிதாக என்னவோ கதை விட்டுக் கொண்டிருக்கிறானே என்று குழம்பினான்.

"அஞ்சி வருச லவ்வா இருந்தா முன்னயே சொல்ல உனக்கு என்ன கேடு.? நாங்க பொண்ணு கேட்டு போய்.. ஊரறிய நிச்சயம் பண்ணி.. உறவுகளை கூப்பிட்டு கல்யாணம் செய்யும்போதா உனக்கு அவளை இழுத்துட்டு போகணும்ன்னு தோணுது.?" என்றார் பெரியப்பா.

கார்த்திக் மனதுக்குள் சிரித்தான். 'நீங்க எந்த பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாலும் அவளை கடைசி நேரத்துலதான் இழுத்துட்டுதான் ஓடி இருப்பேன் லூசு பெரியப்பா..' என்று சொல்ல நினைத்தான்.

"அடிகிடி பட்டிருக்க.. இனியாவது புத்தியோடு இரு.." என்ற பெரியப்பா இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அவனின் அருகே வைத்தார். "பழம் காய் எதுவும் வாங்கிட்டு வரல‌. இதுக்கு நல்ல ஆப்பிள் ஆரஞ்சா வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்டு தேறு.." என்றார்.

'போன முறை நடந்த சொத்து பிரிப்பில் பத்து லட்ச ரூபாய் சொத்தை கூடுதலாக எடுத்துக் கொண்டு விட்டு இன்று வந்து இரண்டாயிரம் ரூபாய் தருகிறாயா சொட்டை பெரியப்பா.?' என்று கேட்க துடித்தது அவனின் நாக்கு.

முதல் சொத்து பிரிப்பிற்கு பிறகிலிருந்தே முருகன் தன் பெரியப்பா மகனோடு பழகுவதை நிறுத்திக் கொண்டார். அவர்கள் வீட்டிற்கு இவர்கள் செல்வதில்லை. ஆனால் இவர்கள் வீட்டிற்கு அவர்கள் அவ்வப்போது வருவார்கள்.

பல்லில் விஷம் தடவிய பாம்பாக இருந்தது அவர்களின் குணம். முருகனுக்கு பொறுமை. "சொத்துபத்தை போற காலத்துக்கு கொண்டுக்கிட்டா போக போறோம்.? என் பெரியப்பன் மகன் பொழைக்கட்டுமே.!" என்றார் தன் வீட்டில் இருந்தவர்களிடம். என்னதான் இப்படி சொல்லிவிட்டாலும் கூட அண்ணன் மீது இருந்த மன வருத்தம் தீரவில்லை அவருக்கு. அதனால்தான் ஈஸ்வரின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை அவர்.

ஆனால் அந்த விசயத்தை அப்படியே விட கார்த்திக்கிற்கு மனம் வரவில்லை. இதே போல பல ஓரவஞ்சனை ஏற்கனவே நடந்த சொத்து பிரிப்புகளிலும் நடந்திருந்தது. இனியும் அதுவேதான் தொடரும். ஆனால் ஏன் இப்படி இருக்க வேண்டும்.? வாரிசுகள் சமமாய் வாழதானே பெரியவர்கள் சொத்தை சேர்த்து வைத்திருந்தார்கள் என்று தன் அண்ணனிடமும் கூட சண்டையிட்டான் கார்த்திக். ஊரிலேயே பணக்கார குடும்பம் ஈஸ்வருடையது. பிரிக்காத சொத்துக்களை கூட அவர்களேதான் பண்ணையம் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கார்த்திக்கின் குடும்பமோ நடுத்தரமாகவேதான் இருந்தது. சொத்துக்களை பிரிக்க பிரிக்க இன்னும் ஏழ்மையாகி கொண்டிருந்தது. போன முறைக்கும் முந்திய முறை பத்து ஏக்கர் காட்டில் இரண்டு ஏக்கரை இவர்களுக்கு தந்து விட்டு எட்டு ஏக்கரை எடுத்துக் கொண்டார் இந்த நியாயவான் பெரியப்பா. ''ஏன் எட்டு ஏக்கர்.?'' என்று கேட்டான் மூர்த்தி.

''இத்தனை வருசமா மண்ணை பாதுகாத்து வச்சது நாங்கதான். இதுக்கு எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம் தெரியுமா.? போன வருசம் கூட காட்டை சமம் செய்யும் போது ஜே.சி.பிக்கே ஐம்பதாயிரம் ஆச்சி..'' என்றான் ஈஸ்வர்.

''அட பரதேசி.. அதுக்கு பதிலா இன்னும் கொஞ்சம் காசு போட்டு புது ஜே‌.சி.பியே வாங்கி இருக்கலாமேடா..'' என்றான் கார்த்திக்.

இவனை அவன் முறைத்தானே தவிர பதில் சொல்லவில்லை.

"நாங்களா காடு சமம் செய்ய சொன்னோம்.?" என கேட்டான் மூர்த்தி.

"இந்த வெங்காயத்தை அன்னைக்கே வந்து கேட்டிருக்க வேண்டியதுதானே.?" என்றார் பெரியப்பா.

அவர்கள் எதுவுமே சொல்வதில்லை. இதான் உண்மை. காடு அனைத்தும் முருகனின் பெரியப்பா பேரில் இருந்தது. முருகனின் அப்பா சிறு பையனாக இருக்கும்போதே அவரின் அண்ணன் சாக கிடந்த தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் தன் பேருக்கு மாற்றிக் கொண்டார். தம்பி பெரியவனாக வளர்ந்ததும் சொத்துக்களை பிரித்து தந்து விடுவதாக தந்தைக்கு சத்தியமும் செய்தார். ஆனால் எங்கே.? இரண்டாவதே தலைமுறையிலும் அதே பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த காடு பிரிப்பிலும் நேர்மை இல்லை. இவர்களுக்கு பிரித்து விட்ட நிலத்தில் வெறும் பாறைகள் மட்டும்தான் இருந்தது. விவசாயம் செய்யவும் வழியில்லை. அதை பட்டா செய்யவே முருகன் கடன்தான் வாங்கினார். இதற்கு முன் பிரித்து விட்ட நிலங்களுக்கும் பட்டா பண்ணி விட்டார்கள். பட்டா பண்ணாமல் இருக்க பயமாக இருந்தது அவர்களுக்கு. ஊர்க்காரர்கள் பஞ்சாயத்து கோர்ட் கேஸ் என்று போக மனம் வரவில்லை முருகனுக்கு. பெரியப்பன் மகன் சற்று சேர்ந்து வாழட்டும், நாம் கூலி செய்தே வாழ்ந்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.

"அப்பா அம்மாவும் ஆண்டவனும் தந்த கை கால் இருக்கு எனக்கு.. நான் உழைப்பாளி. என் குடும்பத்தை வாட விட மாட்டேன்.." என்றார் முருகன்.

தந்தையின் கருத்தில் கார்த்திக்கிற்கு உடன்பாடில்லை. ஒரு வீட்டில் இருவர் பட்டினி என்றால், இரு தோசை கிடைத்தால் ஆளுக்கு ஒன்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஒன்றே முக்கால் ஒருவருக்கும் கால் தோசை ஒருவருக்கும் என்று பிரிக்கப்பட கூடாது என்பது அவன் எண்ணம்.

இவர்களின் பிரச்சனையில் அபிராமி வந்து சிக்கியதுதான் புது விதி.

"எப்படிப்பட்ட வம்சத்துல இப்படி ஒரு புள்ளை பிறந்திருக்கு பாரு.! எல்லாம் உங்க அப்பன் செஞ்ச பாவம்.! அடுத்தவங்க கையில அடிப்பட்டு சாகாம இனியாவது புத்தியோடு இரு.. அந்த பொண்ணுக்கும் உங்க அண்ணனுக்கும் மறுபடியும் பேசலாம்ன்னு இருக்கோம். திரும்பவும் வந்து குறுக்கு சால் ஓட்டாத.. அப்புறம் அவங்களுக்கு பதிலா நாங்களே கையை காலை முறிக்க மாட்டோம். கதையவே முடிச்சிடுவோம்.." என்ற பெரியப்பா தனது நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

"வாடி போகலாம்.." என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தார்.

"இந்த குட்டி நாய் மறுபடியும் எழுந்து நடக்கும் முன்னாடி பையனுக்கு கல்யாணத்தை முடிக்கணும்.." அவர் சென்றபடியே சொன்னது கார்த்திக்கிற்கு நன்றாகவே காதில் விழுந்தது.

ஈஸ்வர் தன் தாயும் தந்தையும் அந்த அறையை விட்டு சென்ற பிறகு கார்த்திக்கின் அருகே வந்தான்.

"டேய் *** என் ஆளை கடத்துறியா நீ.? உன்னை கொல்லலாம்ன்னு இருந்தேன் நான். அதுக்குள்ள முத்தமிழ் கை வச்சிட்டான். நான் எந்த அளவுக்கு கெட்டவன்னு உனக்கு தெரியல.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"தலையணை அமுக்கி கொல்ல போறியா.? இல்ல விஷ ஊசி ஏதும் கையோடு கொண்டு வந்திருக்கியா.?" சந்தேகமாக கேட்டான் கார்த்திக்.

அவனை குழப்பமாக பார்த்தான் ஈஸ்வர். "அது எதுவும் இல்ல.." என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து விஷ பாட்டிலை கையில் எடுத்தான்.

"இது நம்ம காட்டுக்கு அடிக்கற விஷம்தான். செம வீரியம். கால் பாட்டில் குடிச்சாலே பத்து நிமிசத்துல நீ காலி. அதுதான் அபிராமிக்கிட்ட சொன்னியாமே அவ உன்னை கட்டிக்கலன்னா விஷம் குடிச்சி செத்துருவேன்னு! அந்த லெட்டர் இன்னமும் உன் வீட்டுலதான் இருக்கும். அவ வேற உன்னை பிரிஞ்சிட்டாளே! அதனால இதை குடிச்சிட்டு சாவு.." என்றவன் பாட்டிலின் மூடியை திறந்தான்.

"டேய் டுபாக்கூர்.." என்று அவனை அழைத்தான் கார்த்திக்.

என்ன என்பது போல பார்த்தான் இவன்.

"இது ஐ.சி.யூ.. இதோட வாசல்ல சி.சி‌.டி.வி கேமரா இருக்கு. நானும் இந்த அடிப்பட்ட கையை வச்சி என் அண்ணனுக்கு போன் பண்ணி நீ பேசிய எல்லாத்தையும் அவனையும் கேட்க வச்சிட்டேன். உன் குடும்பம் உள்ளே வந்த போதே போன் பண்ணிட்டேன்டா நான்.. எல்லாத்தையும் அவன் பதிவு பண்ணி வச்சிருப்பான் இன்னேரம். நீ என்னை கொன்னா அவன் உன்னை ஆதாரத்தோடு அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்புவான். உன்னை பழி வாங்கிய சந்தோஷத்தோடு நானும் சாவேன்.." என்றான் கார்த்திக்.

ஈஸ்வர் சந்தேகமாக அவனின் கையை பார்த்தான். கட்டுப்போட்ட கையின் கீழே போன் தெரிந்தது. அதே நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு ஓடி வந்தாள் புவனா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

இன்னைக்கு மதியம் ஒரு மணிக்கு மேலிருந்து மூன்று நாட்களுக்கு அமேசான் கிண்டிலில் கை பிடித்த கண்ணாலா நாவலை ப்ரீ டவுண்லோட் தந்திருக்கேன் நட்புக்களே.. படிக்காமல் இருந்தவர்கள் யாரேனும் இப்போது படிக்க விரும்பினால் கதையை டவுண்லோட் செஞ்சிகங்க நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN