காதல் கடன்காரா 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாம்தான் ஒருவனை கொன்று விட்டோமோ என்று மன கவலையில் இருந்தாள் அபிராமி. கார்த்திக் நினைத்தது சரிதான். அவன் விஷம் குடிக்க காரணம் இவள்தான் என்ற காரணம் இவளின் மனதை சிதைத்து விட்டது.

அபிராமிக்கு மனம் விரிசலோடி விட்டது. தன் மீதே கோபம் அவளுக்கு. இன்றைக்கு காலையிலேயே சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் வீட்டில் இருந்த சொந்தத்தை நினைக்கையில் ஆறாய் பெருகியது கண்ணீர். தன்னை எவ்வளவு ஆசையாக வளர்த்த குடும்பம், எப்படி துரோகம் செய்வது என்று இப்போதும் கூட உள்ளம் அரித்தது. அதே வேளையில் இறப்பின் பிடியில் இருந்தவன் மீது ஆத்திரம் வந்தது. ஒருநாள் கூட நேரம் தர தோணவில்லை அவனுக்கு என்று நொந்து போனாள். அடுத்த வீட்டு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க முடிவெடுத்த பிறகும் கூட குடும்பத்தோடு ஒரே ஒரு நாள் சேர்ந்து வாழ அனுமதி தராமல் போய் விட்டானே என்று மனம் வாடினாள்.

துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை அடிக்கடி துப்பட்டாவால் துடைத்தபடி சென்று அலமாரியை திறந்தாள். வரிசையாக இருந்த உடைகளில் சுடிதார் ஒன்றை தேர்வு செய்து எடுத்தாள். அது அவளின் அண்ணன் வெளியூர் சென்று வருகையில் வாங்கி வந்தது. தங்கையின் நிறத்திற்கும் உருவத்திற்கும் உயரத்திற்கும் பொருந்தும் என்று அவனே பார்த்து பார்த்து எடுத்து வந்தது. அவன் நினைத்தது போலவே சுடிதார் அவளுக்கு மிக சரியாக இருந்தது. அவன் அதை சொல்லி பெருமைப்பட்டுக் கொண்ட வேளைகளில் இவளுக்குமே கர்வமாகதான் இருந்தது. மீண்டும் ஒரு தண்ணீர் அருவியை அழுது ஓய்ந்து விட்டு குளியலறைக்கு கிளம்பினாள்.

குளித்து உடைமாற்றி வந்து தலை வாரிக் கொண்டாள். அலமாரியில் இருந்த பர்ஸை எடுத்தாள். அவ்வப்போது அப்பா.. தாத்தா.. அண்ணன் தந்த பணம் அதில் இருந்தது. அவளுக்கு செலவே இருந்தது இல்லை இது வரை. சில நூறு ரூபாய்களை எடுத்துக் கொண்டவள் பர்ஸை அங்கேயே வைத்து அலமாரியை பூட்டினாள்.

நோட் ஒன்றை எடுத்து விசயத்தை சில வரிகளில் எழுதியவள் பேப்பரை கிழித்து நான்காய் மடக்கி மேஜையின் மீது வைத்தாள். அந்த பேப்பர் பறக்காமல் இருக்க அந்த நோட்டையே ஓரமாக வைத்துவிட்டு அந்த அறையை விட்டு கிளம்பினாள்.

ஹாலுக்குள் இவள் நுழைந்ததும் அனைவரின் கண்களும் திரும்பியது‌. "சுவாதி பர்த்டேக்கு போறேன்.." என்றாள். உண்மையை சொல்லி, அனுப்ப சொல்லி கேட்டால் நிச்சயம் விட மாட்டார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை இவர்களே கொண்டு சென்று சுடுக்காட்டில் வைத்து எரித்து விடுவார்கள். அதுவும் இல்லாமல் இவளுக்கும் பயம். அதனாலேயே சொல்லாமல் கிளம்பினாள்.

"பூ வச்சிட்டு போடி.." என்ற அம்மா ஃப்ரிட்ஜில் இருந்த பூவை கொண்டு வந்து மகளின் கூந்தலில் சூடினாள்.

"இந்த காசை நான் தந்தேன்னு சுவாதி கையில தந்துடு.." என்று பணத்தை தந்தார் அப்பா.

எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவள் "போய்ட்டு வரேன்.." என்று வெளியே நடந்தாள்.

"பாப்பா முகம் சிவந்து போன மாதிரி இல்ல.?" என்றார் தாத்தா தன் மகனிடம்.

"ஆமாப்பா.. கண்ணு கூட சிவந்து இருந்துச்சி.. வெளியே கிளம்புற பொண்ணுகிட்ட கேட்க வேண்டாமேன்னு இருந்தேன் நான்.." என்றார் அவர்.

"ஹாஸ்பிட்டல்ல செத்தவனை நினைச்சி அழுதிருப்பாளோ.?" என்றாள் பாட்டி.

"அவ தமிழை நினைச்சி அழுதிருப்பா. இரண்டு நாளா இப்படிதான் அழுதுட்டு இருக்கா.. அண்ணன் பத்திரமா இருப்பானா அம்மான்னு இரண்டு நாளா நிமிசத்துக்கு ஒரு முறை கேட்டுட்டே இருந்தா.." என்றாள் அபிராமியின் அம்மா.

அபிராமி ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்ததும் வீட்டை கண் கலங்க பார்த்தாள். இந்த வீட்டிற்கு திரும்பவும் வர எத்தனை நாட்கள் ஆகுமோ என்று கலங்கினாள். வர முடியாமலேயே கூட போய் விடலாம் என நினைக்கையில் உள்ளமும் சேர்ந்து அழுதது. அனைவருக்கும் மனதுக்குள் சாரி சொன்னாள். வீட்டிற்கும் தோட்டத்திற்கும் கூட சாரி சொன்னாள். ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.

மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை தரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். முருகன் முன்னே வந்தார். "எப்படி இருக்கான் சார்.?" என்று கேட்டார்.

"ஜஸ்ட் மிஸ்ன்னு சொல்லலாம். ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்தியிருக்கோம்.. ஒரு மாசத்துல குணமாக வேண்டிய உடம்பு இது. ஆனா இப்ப லேட்டாகும்.. இனியாவது பத்திரமா பார்த்துக்கங்க.." என்ற தலைமை மருத்துவர் மற்றவர்களோடு சேர்ந்து அங்கிருந்து சென்றார்.

புவனா அம்மாவின் தலையை வருடி விட்டுக் கொண்டிருந்தாள். மகளின் நெஞ்சில் தலை சாய்த்துப் படுத்திருந்த யமுனா இன்னமும் அழுதுக் கொண்டே இருந்தாள். டாக்டர் சொல்லி சென்றது காதில் விழுந்தாலும் கூட அவளால் அந்த முந்தைய அதிர்ச்சியிலிருந்தே இன்னும் வெளி வர முடியவில்லை. மகனுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது என்ற எண்ணமே அவள் அழுததற்கு போதுமான காரணமாக இருந்தது.

மாலை வந்தது. பணியிலிருந்து திரும்பிய மூர்த்தி தம்பியை பார்க்க வந்தான். அம்மா இப்போது ஓரளவிற்கு இருந்தாள். மயங்கி கிடந்த தம்பியை பார்த்துவிட்டு அம்மா அப்பாவோடு பேசினான். தம்பிக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியம் சொன்னான்.

பின்னர் தங்கையை அழைத்துக் கொண்டு தூரமாக இருந்த காலி அறை ஒன்றிற்கு வந்தான். "விஷம் ரொம்ப தந்துட்டியா.?" என்றான் நெற்றியை பிடித்தபடி.

"பாதி கூட தரல.." என்றவளுக்கு அழுகையாக வந்தது. "எல்லாம் உங்களாலதான்.." என்றாள்.

அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "அழாத பப்பும்மா.. அவனுக்கு ஒன்னும் ஆகாது.." என்றான்.

"நான் எப்படி தெரியுமா பயந்து போனேன்.?" அழுகையின் இடையே கேட்டவளின் தலையை வருடி விட்டவன் "அந்த நாய் நல்லானதும் உன் சார்ப்பா நான் மிதிக்கிறேன்.." என்றான்.

தங்கைக்கு தேறுதல் வார்த்தைகள் நிறைய சொல்லி விட்டு மருத்துவர் அறை நோக்கி சென்றான் மூர்த்தி. இவனை வரவேற்று அமர வைத்தார் மருத்துவர்.

"என்ன ஆச்சி டாக்டர்.?" என்றான்.

"விஷ பாட்டிலை பரிசோதனைக்கு தந்திருக்கோம்.." என்றவர் பேப்பர் ஒன்றை எடுத்து அவன் முன் வைத்தார்.

"விஷம் நம்மூர்ல அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியாது. அதிலேயும் இது ரொம்ப பவர்ஃபுல். காட்டுக்குன்னு சொல்லிதான் யாராவது வாங்கி இருக்கணும்.. சுத்து வட்டார கடைகள்ல விசாரிச்சி பாருங்க.." என்றவர் சிறிது நேரம் தயங்கி விட்டு "உங்க தம்பியை பார்க்க உங்க பெரியப்பா வீட்டுல இருந்துதான் வந்தாங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்களையும் கொஞ்சம் விசாரிச்சி பாருங்க. ஏனா நாங்க பிழைக்கிற மருந்துகளை மட்டும்தான் இங்கே விக்கிறோம். சாகற மருந்து இல்ல.." என்றார்.

"தேங்க்ஸ் டாக்டர்.. நான் பார்த்துக்கறேன்.." என்று எழுந்தான் மூர்த்தி. 'ஈஸ்ஸு.. மாட்டினடா நீ..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது மருத்துவமனையின் வெளியே இருந்த பெஞ்ச்சின் மீது அமர்ந்திருந்த அபிராமியை பார்த்தான். மாலை வெயிலில் அழகு சிலை போல் அமர்ந்திருந்தாள். அவளை பார்க்கையில் சற்று பரிதாபமாக இருந்தது அவனுக்கு. புவனாவை அவள் இடத்தில் பொருத்தி பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஆனால் அதே சமயம் செல்ல தம்பியின் காதலையும் மறுக்க முடியவில்லை. உறவை பிரிவதின் வேதனை அவனுக்கும் தெரியும். ஆனால் தம்பியின் மீதான சுயநல பாசம் அவனை ஓரவஞ்சனையோடு சிந்திக்கவும் செயல்படவும் வைத்தது.

வீட்டில் இந்நேரம் விசயம் தெரிந்திருக்குமோ என்று யோசித்தாள் அபிராமி. அம்மா லெட்டரை பார்த்து அழுவதும் தாத்தா இடிந்து போய் அமர்வதுமாக கற்பனை மனதில் ஓடியது. அழுகை மட்டும் ஓயவே இல்லை. கண்ணீரும் குறையவே இல்லை.

"ஏன் அழற.?" என்றான் அவளருகே வந்து அமர்ந்த மூர்த்தி.

கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் "இல்ல.." என்றாள். "உங்க தம்பி எப்படி இருக்காரு.?" என்றாள்.

"ம்.. பிழைச்சிட்டான்.. ஆனா ரொம்ப கிரிட்டிக்கல்தான்.. நீ ஏன் காலையிலேயே வரல.?" என்றான்.

அபிராமியின் இடது கண்ணிலிருந்து துளி கண்ணீர் சிந்தியது.

"யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.." என்றாள்.

"ஓ.. ஓகே.." என்றவனுக்கு அவளை பார்க்கையில் மனம் வலித்தது. எழுந்தவன் அங்கிருந்து நடந்தான்.

"நிஜமா எங்க அண்ணாவை விட்டுடுவிங்கதானே.?" என்று கேட்டாள் அவனை நிமிர்ந்து பார்த்து.

நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்தவன் "ப்ராமிஸ்.." என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

அபிராமி இருள் சூழும் வரை அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள். அவளை கடந்தவர்கள் அவளை குறுகுறுவென பார்த்தார்கள்.

"யாரோ பார்க்கட்டும் தாத்தாக்கிட்ட கூட சொல்லட்டும்.. தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு என்ன.?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

கார்த்திக் காலையில்தான் கண் விழிப்பான் என்று சொல்லியிருந்தார்கள் டாக்டர். முருகன் அவனுக்கு பாதுகாப்பாக இங்கேயே இருப்பதாக சொன்னார். புவனாவும் யமுனாவும் சற்று நேரத்தில் வீட்டிற்கு கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் புவனாவுக்கு போன் செய்தான் மூர்த்தி.

"அபிராமி என்ன செய்றா.?" என கேட்டான்.

அண்ணனின் கேள்வியால் குழம்பியவள் அண்ணன் விவரித்த பிறகு அபிராமி மருத்துவமனை வாசலில் இருக்கிறாள் என்று அறிந்து வெளியே ஓடினாள்‌.

"அவனை பார்க்க வரலையா.?" என்றாள்.

அபிராமி அமைதியாக எழுந்து நின்றாள். பிடிக்காமல் வருபவள் அண்ணனுக்காக கதறி அழுவாள் என்று எதிர்ப்பார்க்க கூடாது என்பதை கடைசியாகதான் புரிந்துக் கொண்டாள் புவனா.

யமுனா அபிராமியை முறைத்தாள். "இங்கே ஏன் வந்தா இவ‌.? என் புள்ளையை கொன்னுட்டுதான் போவாளா.?" என்று கேட்டாள்.

'ஆமா..' என்றது அபிராமியின் வீராப்பு மனம்.

"அம்மா.. நீ கொஞ்சம் சும்மா இரு.. அண்ணன்தான் இவளை வர சொல்லி இருக்கான்.. இவ அண்ணனுக்காக வந்துட்டா.. கஷ்டப்படுத்தாத.." என்றாள். ஆனாலும் யமுனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

முருகன் கையாளாக நிலையில் இருந்தாள். அவரின் வாரிசு அவரின் பேச்சை கேட்க மறுத்தான். இனி இவர் என்ன செய்வார்.?

அபிராமிக்கு கார்த்திக்கின் முகம் பார்க்க விருப்பம் இல்லை. அவன் முகம் பார்க்க நல்ல காரணமும் இல்லை அவளிடம். நின்ற இடத்திலேயே சிலையாக இருந்தாள். புவனா சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தாள். தன் மனம் எதிர்பார்ப்பது அதிகப்படி.. ஆனால் அவள் நடந்துக் கொள்வது நேர்மை என்று புரிந்தது அவளுக்கு‌. ஆனால் யாருக்கு வேண்டும் அடுத்தவரின் நேர்மை. அவளின் மனமும் கூட நேர்மைக்கும் அதிகப்படிக்கும் இடையில் நின்றுதான் அபிராமியை எடை போட்டது.

"டைம் ஆச்சி.. நீங்க கிளம்புங்க.." என்றார் முருகன்.

புவனாவும் யமுனாவும் கிளம்பினார்கள். அபிராமி யோசனையோடு நின்றாள். புவனாவிற்கு பிறந்த வீட்டை உதறி விட்டு வந்தவளின் மனநிலை புரிந்தது.

"வா அபிராமி கிளம்பலாம்.." என்று அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தாள். யமுனா மருமகளின் முகத்தை பார்க்கவில்லை.

மூவரும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்த மூர்த்தி இவர்கள் வந்ததும் சமையலறை வாசலில் வந்து நின்றான்.

அபிராமி குனிந்த தலையோடு நின்றுக் கொண்டிருந்தாள்.

"என் ரூம் அது.. நீ என்னோடவே இருக்கலாம்.." என்றாள் புவனா.

"இல்ல.. உன் அண்ணன் ரூமை காட்டு.. அங்கேயே தங்கிக்கிறேன்.." என்றாள். இந்த முடிவை எடுக்க அவள் எவ்வளவு மனம் வருந்தினாள் என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும். முழுதாய் நனைந்த பிறகு குடை தேடுவது எதற்கு என்று யோசித்தாள்.

அவளின் பதில் புவனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது எனலாம்.

அந்த வீடு அபிராமி வீடு போல பெரியது அல்ல. மூன்று படுக்கையறையுமே சற்று சிறியதுதான். சமையலறையும் சிறியதுதான். ஹாலும் வாசலும் மட்டுமே சற்று விசாலமானது.

"அம்மா இனி உன்னோடு தூங்குவாங்க பப்பிம்மா.. நான் அப்பாவோடு தங்கிக்கறேன். சீக்கிரமா தனி ரூம் கட்டிக்கலாம்.." என்றான் மூர்த்தி. இதுநாள் வரை அவனும் கார்த்தியும்தான் அறையை பங்கிட்டுக் கொண்டு இருந்தனர் அந்த வீட்டில். இன்று அபிராமி வந்துவிடவும் கார்த்திக் குடும்பஸ்தன் ஆகிவிட்டதால் வீடு வந்த உடனே தன் பொருட்களை கொண்டு சென்று அப்பாவின் அறையிலும் அங்கிருந்த அம்மாவின் பொருட்களை கொண்டு வந்து தங்கையின் அறையிலும் வைத்து விட்டான் மூர்த்தி. ஏதோ அவனால் முடிந்த உதவி சகோதரனுக்கு.

கார்த்திக்கின் அறையை கை காட்டினான் மூர்த்தி. அபிராமி அறையை நோக்கி செல்கையில் "கோபத்துல எதையாவது உடைச்சி வச்சிடாத.. அவன் வந்தா கத்துவான்.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

அபிராமிக்கு இதை கேட்ட பிறகுதான் அனைத்தையும் உடைக்கவே தோன்றியது. ஆனால் அண்ணனை மனதில் வைத்து பல்லை கடித்து அமைதியாக முயற்சித்தாள்.

கார்த்திக்கின் அறை சின்னதாகதான் இருந்தது. அவளின் அறையை விட இரண்டு மடங்கு சிறியது. சுவரில் இருந்த வண்ணம் மங்கலாகி போய் இருந்தது. வண்ணமடித்து எத்தனை வருடங்கள் ஆனதோ என்று நினைத்தாள்.

மூன்று ஆண்கள் உழைக்கும் வீடு போலவே தோன்றவில்லை அவளுக்கு. அவர்களின் சம்பாதியம் முழுக்க கடன் அடைக்கவே போதவில்லை என்பது அவளுக்கு தெரியவில்லை.

அந்த அறையிலிருந்த கட்டிலில் தயக்கமாக அமர்ந்தாள். அந்த அறையில் மூச்சு முட்டியது அவளுக்கு. கூரையில் இருந்த பேன் துருப்பிடித்து இருப்பது போலவே தெரிந்தது அவளுக்கு.

சுவரில் இருந்த கார்த்திக்கின் புகைப்படத்தை பார்க்கையில் கொதித்தது நெஞ்சம். அந்த புகைப்படத்தை எடுத்து உடைக்க வேண்டும் போல இருந்தது.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

"பாப்பா இன்னும் ஏன் வரல.?" என்று வாசல் பார்த்தார் அபிராமியின் தாத்தா.

"இப்பதான்ப்பா சுவாதியோட அப்பாவுக்கு போன் பண்ணேன். சுவாதிக்கு அடுத்த வாரம்தான் பிறந்தநாள்ன்னு சொல்றாரு அவர்.." என்றார் அப்பா குழப்பத்தோடு.

அபிராமியின் துவைத்த உடைகளை அவளது அறையில் வைத்து விட்டு வர சென்ற அவளின் அம்மா சற்று நேரத்தில் கடிதம் ஒன்றோடு ஓடி வந்தாள்.

"பாப்பா.. என்னவோ எழுதி வச்சிருக்கா.." என்றாள் கலங்கும் விழிகளோடு.

தாத்தா கடிதத்தை பிடுங்கி படித்தார்.

"தாத்தா.. அப்பா.. பாட்டி.. அம்மா.. அண்ணா.. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு கார்த்திக்கை ரொம்ப பிடிச்சிருக்கு. இதை நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரியும். ஆனா உண்மை. அவன் எனக்காக இன்னைக்கு விஷம் குடிச்சதை என்னால தாங்கிக்க முடியல. அதனாலதான் அவன்கிட்டயே போறேன் நான். என் காதலை மதிச்சி அவனையோ அவன் குடும்பத்தையோ நீங்க எந்த தொந்தரவும் செய்ய மாட்டிங்கன்னு நம்புறேன்.. சொல்லாம போனதுக்கு சாரி.. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நான். என் மேல் எவ்வளவு பாசம் இருந்தாலும் சரி என்னை எவ்வளவு மிஸ் பண்ணாலும் சரி தயவுசெய்து அந்த வீட்டுக்கு மட்டும் வந்துடாதிங்க.." என்று எழுதியிருந்ததை படித்தவர் நொடியில் உடல் சோர்ந்து சோபாவில் விழுந்தார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN