காதல் கடன்காரா 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமியின் தாத்தா தன் கையில் இந்த கடிதத்தை கசக்கினார்.

"பாப்பா.. என்னவோ விளையாடுறா போல. இது உண்மை இல்ல.." என்றார்.

அபிராமியின் அம்மாவின் கண்களிலும் பாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

"என் பொண்ணு போயிருக்க மாட்டாப்பா.." என்றார் அபிராமியின் அப்பா.

சோகத்தோடு அமர்ந்திருந்த தாத்தா "அந்த வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டாளே.. எப்படிடா போய் அவக்கிட்ட கேட்கறது.? அந்த பையன் மேலயும் கை வைக்க கூடாதுன்னு சொல்லிட்டா.. இனி என்ன செய்றது.?" என்றார்.

"அவ இதுக்கு பதிலா நமக்கு விஷம் வச்சி கொன்னுட்டு போயிருக்கலாம்.." என்றார் அப்பா.

"தமிழுக்கு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவான்.." பாட்டி அழுகை குரலில் சொன்னாள்.

அந்த வீடே சோகத்தில் இருந்தது. அன்று இரவு யாருமே உணவு உண்ணவில்லை. கவலை மிகுதியோடு ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தவர்கள் நடு இரவுக்கு மேல்தான் உறங்க சென்றார்கள். அப்போதும் அவர்களுக்கு உறக்கம் வரவில்லை.

"அந்த வீட்டுல பாப்பா எப்படி இருப்பா.? அவங்க வீடு கூட ரொம்ப சின்னது.." என்று புலம்பினார் அப்பா.

அபிராமி நடு இரவில் வானம் பார்த்தபடி ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அந்த நாற்காலி அழுக்காய் தோன்றியது அவளுக்கு. அந்த அறையின் வாசம் அவளுக்கு குமட்டலை தந்தது. அது எதையும் பொருட்படுத்தும் நிலையில் இல்லை அவள். மனதின் வலி அதை விட அதிகமாக இருந்தது. அவளின் வேரை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டாள் இங்கே. புது மண் அவளுக்கானது அல்ல. இது அவளின் மென்மையான வேரை சிதைக்க கூடிய மண்ணாக இருந்தது.

'எனக்காக விஷம் குடிச்சேன்னு சொல்றான். இல்ல. இது அவனோட திமிருக்காக குடிச்சான். என் மனசை பாதியா உடைச்சான் இவன். இவன் மனசை முழுசா சிதைக்காம விட மாட்டேன் நான். என் அண்ணனை கஷ்டப்படுத்தியவன், என் குடும்பத்தோட பேரை கெடுத்தவன், என் நிம்மதியை அழிச்சவன் ரொம்ப வருத்தபட போறான். ஏன் இவளோட பாதையில் குறுக்கே புகுந்தோம்ன்னு அழ போறான்..' என்றது அவளின் மனம். அது தனக்கு தானே சொல்லிக் கொள்ளும் பொய்யான நம்பிக்கையா இல்லை மனதின் ரோசமா என்று அவளுக்கு புரியவில்லை.

மறுநாள் முற்பகல் வேளையில் கண் விழித்தான் கார்த்திக். உடம்பு ஜெல் போன்று தோன்றியது. கண்களை திறக்க கூட சிரமமாக இருந்தது.

"புவி.." அரை கண்களை திறந்தபடி தேடினான்.

"அண்ணா.." என்றாள் அவனின் அருகே அமர்ந்திருந்த புவனா.

"அபிராமி வந்தாளா.?" என்றான் மெல்லிய குரலில். இந்த முறை குரலின் சக்தியும் குறைந்து போய் விட்டிருந்தது.

"இருக்கா.." என்றவள் அபிராமியை கை காட்டினாள். கார்த்திக் கண்களை அலைபாய விட்டான். அந்த அறையின் ஜன்னலோரம் நின்றுக் கொண்டிருந்தாள் அபிராமி. வானம் பார்த்துக் கொண்டிருந்தாள். புவனாவின் பட்டுத் தாவணியை உடுத்தியிருந்தாள். கூந்தல் சுதந்திரமாக காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையிலும் கார்த்திக்கிற்கு சிறு எரிச்சலை தந்தது அந்த கூந்தலின் சுதந்திரம்.

"ஏன் மகாராணி என்னையெல்லாம் பார்க்க மாட்டாளா.?" என்றான் தன்னால் முடிந்த அளவுக்கு குரலில் வலு சேர்த்து.

அபிராமியின் செவிகளிலும் விழுந்தது அவனது குரல். நொந்த மனதில் ஆயிரம் குண்டூசி போல் குத்தியது அவனின் குரலும் இளக்காரமும்.

திரும்பியவள் தரை பார்த்தபடி வந்து புவனாவின் அருகே நின்றாள்.

"என் முகம் அவ்வளவு அசிங்கமா.?" என்றான் கார்த்திக்.

அவளின் காயத்தை புரிந்துக் கொள்ள துளிக் கூட முயலவில்லை அவன். மாறாக அவளை குற்றம் மட்டுமே சாட்டினான்.

அபிராமி நிமிர்ந்து அவனை பார்த்தாள். உள்ளுக்குள் வெந்துக் கொண்டிருந்த நெருப்பை அவளின் முகம் வெளிக்காட்டவில்லை.

அழகாய்தான் இருந்தான் அவன். நல்ல லட்சணம். அடிப்பட்டு படுத்திருக்கையில் கூட கம்பீரம் கண்களை விட்டு செல்லவில்லை. ஆனால் அந்த கம்பீரத்தின் பின்னால் இருக்கும் குள்ள நரியின் சதி என்னவென்று இவளுக்கு மட்டும்தானே தெரியும்.!

"நான் ஒரு போன் பேசிட்டு வந்துடுறேன்.." என்று வெளியே கிளம்பினாள் புவனா. அவர்களுக்கு தனிமை தந்துச் செல்லவே இப்படி பொய் சொன்னாள்.

"உட்கார்.." என்றான்.

இயந்திர பொம்மையாக அமர்ந்தாள்.

"ஏன் நேத்து வரல.?" என்றான்.

அவனின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் இந்த கேள்வியில் கலங்கின. ஆனால் கலங்கிய கண்களை எச்சரித்து கண்ணீரை தடுத்து நிறுத்தினாள்.

"சாயங்காலம் வரலாம்ன்னு இருந்தேன்.." என்றாள்.

"நீ வர மாட்டியோன்னு நினைச்சிட்டேன்.. அதனாலதான் விஷத்தை.." என்று கலக்கமாக சொன்னான்.

அபிராமி பார்வையை சுவர் பக்கம் திருப்பினாள்.

"ஏன் அங்கே பார்க்கற.?" என்றான்.

புரியாமல் திரும்பியவளிடம் "என்னோடு இருக்கும்போது எப்போதும் என்னை மட்டும் பாரு.." என்றான்.

அபிராமியின் ரத்தம் கொதித்தது. அவனை கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போல இருந்தது.

"அந்த தண்ணியை எடு.." என்றான். அவள் மேஜை மேல் இருந்த தண்ணீரை டம்ளரை எடுத்தாள். அவன் கொஞ்சமாக வாயை திறந்தான். கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் அவனுக்கு தண்ணீரை தந்தாள். மறுபடி சாகடிக்க போகிறான் என நினைத்து தன் முந்தானையால் அவனின் தாடையிலிருந்த தண்ணீர் சிந்திய ஈரத்தை துடைத்து விட்டாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இதற்கு முன் பெண்களையே பார்த்திராதவன் போல. அவன் சொல்லிய வார்த்தைகளுக்காக அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அபிராமியின் உள்ளத்து வெறுப்பு உச்ச நிலைக்கு சென்றுக் கொண்டிருந்தது.

மூர்த்தி முத்தமிழை விடுதலை செய்தான். முத்தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. விசயம் புரியாமல் வீட்டிற்கு வந்தவன் அபிராமி அங்கே இல்லை என அறிந்து இடிந்துப் போய் விட்டான். தான் மீண்டும் மிக பெரிய தவறு செய்து விட்டதாக நினைத்தான். கார்த்திக்கை கொல்லாமல் போனதால்தான் அபிராமிக்கு இந்த நிலை என்று தன்னையே திட்டிக் கொண்டான். வந்த கோபத்தில் கார்த்திக்கின் குடும்பத்தையே வெட்டி வீச வேண்டும் போல இருந்தது. ஆனால் அபிராமி கடிதத்தில் எழுதிச் சென்ற வார்த்தைக்காக அமைதிக் காத்தான். அந்த அமைதிக்காக அவன் தன்னையே எவ்வளவு திட்டிக் கொண்டான் என்பது அவனின் மனதிற்கு மட்டும்தான் தெரியும்.

கார்த்திக் கண் விழித்ததும் மூர்த்தியும் இன்னும் இரு காவலர்களும் வந்து அவனை விசாரித்தார்கள்.

"நீங்க எப்படி விஷம் குடிச்சிங்க.? உங்க கை கால்கள் அசைக்க முடியாத நிலையில் இருந்ததாக டாக்டர் சொல்றாங்க.." என்றார் ஒரு காவலர்.

தன்னால் வாய் பேச முடியவில்லை என்று சைகை செய்தான் கார்த்திக். எழுதுவதற்கும் அவனின் கைகள் ஒத்து வரவில்லை என்பதால் "இன்னும் இரண்டு மூணு நாள் கழிச்சி வந்து விசாரிக்கிறோம் கார்த்திக்.. உங்களுக்கு உடல்நிலை நல்லானதும் மறக்காம தகவல் கொடுங்க.." என்று சொல்லிவிட்டு மற்ற காவலர்களோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் மூர்த்தி.

அந்த அறையின் வாசலில் கவலையோடு நின்றுக் கொண்டிருந்த அபிராமி காவலர்களை தயக்கமாக பார்த்தாள். அவன் விஷம் அருந்தியதற்கு தன்னை வந்து கைது செய்ய மாட்டார்கள் என்று தெரியும் அவளுக்கு. ஆனால் இந்த சதிக்காரன் அண்ணன் மீது பழி போட்டு விடுவானோ என்று பயந்தாள்.

காவலர்கள் அவளை கடந்துச் சென்றார்கள்.

அன்று மாலையில் வீட்டிற்கு வந்ததும் மூர்த்தியிடம் வந்த புவனா "ஈஸ்வர் அண்ணாவை பார்த்தியா.?" என்றாள்.

"காலையில போனேன் அம்மு.. கார்த்திக் விஷம் குடிச்சிருக்கான். அவனால் செயல்பட முடியாத நிலமையில இருந்தான்.. நீங்கதான் கடைசியா அவனை பார்த்துட்டு வந்திருக்கிங்கன்னு சொன்னேன்.. ஈஸ்வர் முகம் பயத்துல உறைஞ்சி போச்சி. 'நாங்க என்ன விஷத்தை அவனுக்கு வித்துட்டா வந்தோம்.? உன் பைத்தியக்கார தம்பிக்கிட்டயே போய் விசாரணை செய்'யுன்னு சொல்லிட்டாரு பெரியப்பா. இன்னும் ஒரு வாரம் போகட்டும்.. ஆதாரத்தை காட்டி அண்ணன்காரனை அரெஸ்ட் பண்ணிடலாம்.." என்றான் அவன்.

"விஷம் ஈஸ் அண்ணாவோடு சம்பந்தப்பட்டதுன்னு தெரிஞ்சதுன்னா அபிராமி என்ன செய்வா.?" தன் சந்தேகத்தை கேட்டாள் புவனா.

"அதெல்லாம் கார்த்திக் ஏதாவது ப்ளான் பண்ணிடுவான்.." என்றவன் "அபிராமியையே ஹாஸ்ப்பிட்டல்ல விட்டு வந்திருக்கலாமே.." என்றான்.

"சின்ன அண்ணாதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டான். நைட்ல இவ தலையணையை அழுத்தி கூட கொன்னுடுவா.. இவ முத்தமிழோட தங்கச்சின்னு சொல்லிட்டான்.. அதுவும் அவ முன்னாடியே இதை சொன்னான்.." என்று சொன்னாள்.

அந்த ஜோடி காதல் பறவைகளாக மாற இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ என்று கவலைப்பட்டான் மூர்த்தி.

இரண்டு நாட்கள் கடந்தது. இந்த இரண்டு நாட்களும் பகலெல்லாம் மருத்துவமனையில்தான் இருந்தாள் அபிராமி. வெளியே அமர்ந்திருந்த நேரத்தை விட கார்த்தியின் அருகே அமர்ந்திருந்த நேரம்தான் அதிகம். அதுவும் அங்கே அமர்ந்திருந்த போதும் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதை விட பெரிய தண்டனையை அந்த எம தர்மனால் கூட தனக்கு தர முடியாது என்று நினைத்தாள்.

இரண்டாம் நாளிலிருந்து சாய்ந்து அமரும் அளவுக்கு உடல் தேறி விட்டது. அதற்கும் அபிராமியேதான் அவனை தாங்கிப் பிடித்து அமர வைத்தாள். அவனால் தன் கைகளை இப்போது ஓரளவுக்கு அசைக்க முடிந்தது. அந்த கைகள் முடமாகி இருக்க கூடாதா என்று ஆசைப்பட்டாள் அபிராமி. ஏனெனில் அவன் அமர அவள் உதவி செய்த நேரங்களிலெல்லாம் வேண்டுமென்றே அவளை தொட்டான். அதுவும் அறியாதது போல கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கை பட்டது. அபிராமிக்கு அவனை தோலை உரித்துக் கொல்ல வேண்டும் போல இருந்தது.

"இந்த தலைமுடியை ஏன் விரிச்சி போட்டிருக்க.? இதென்ன இழவு வீடா.?" என்றான்.

தனது பொறுமை எந்த அளவிற்கானது என்பதை இந்த நேரங்களில்தான் அறிந்தாள் அபிராமி. கூந்தலை அமைதியாக முடிந்துக் கொண்டாள். அந்த முடிந்த கூந்தலில் சிக்காமல் வெளியே பறந்த கற்றை முடிகளை மட்டும் தனியொரு விருப்பமாக கார்த்திக்கிற்கு பிடித்திருந்தது. சிகைக்கு ஒரு முத்தமும் இந்த சிலைக்கு ஒரு முத்தமும் தாராளமாக தரலாம் என்றது அவனின் மனம்.

"பொட்டு ரொம்ப சின்னதா இருக்கு. நாளையிலிருந்து கொஞ்சம் பெருசா வச்சிக்க.." என்றான்.

அடுத்த நாள் யமுனாவின் பெரிய சைஸ் ஸ்டிக்கரை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டு கண்ணாடி பார்த்தவள் "வேணாம்.. அப்புறம் அவன் இதுக்கும் நொட்டை சொல் சொல்வான்.." என்றபடி அதை எடுத்து விட்டு சாதாரண அளவிலான ஸ்டிக்கரை வைத்துக் கொண்டாள்.

அந்த வீட்டில் அவளை நன்றாகதான் கவனித்துக் கொண்டார்கள். யமுனா மட்டும்தான் சரியாக பேசவில்லை. புவனா நெடுநாள் தோழியை போல பழகினாள். மூர்த்தி அக்கறையாகதான் பேசினான் ஒவ்வொரு முறையும். ஆனால் அந்த அக்கறையும் ஆதாயத்திற்காக்கவே என்று தெளிவாக அறிந்து வைத்திருந்தாள் அபிராமி.

அந்த வாரத்தின் கடைசி நாளில் ஈஸ்வரை கைது செய்தான் மூர்த்தி. தடுக்க வந்த தன் பெரியப்பாவிடம் ஆடியோ ரெக்கார்ட்டிங்கை போட்டுக் காட்டினான்.

"உங்க மகனை காப்பாத்த நினைச்சா வக்கீலை பாருங்க.." என்றான்.

"என்னையோ என் அண்ணனையோ காரணமா வச்சி விஷம் குடிக்கல நீ.." என்றாள் அபிராமி கார்த்திக்கிடம்.

"அந்த ரெக்கார்டிங் உண்மை.. ஆனா விஷத்தை நான்தான் குடிச்சேன். அவன் விட்டுப் போன விஷ பாட்டிலை ரொம்ப சிரமப்பட்டு கை வலியோடு எடுத்துக் கஷ்டப்பட்டு குடிச்சேன். உனக்காகதான்!. ஆனா அவனை பழி வாங்கணுமே அதுக்காக பழியை மாத்தி போட்டுட்டேன்.." என்றான்.

"குள்ள நரி.." என்று முணுமுணுத்தாள் அபிராமி. உலகின் மிக சிறந்த காமெடியை கேட்டவன் போல சிரித்தான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN