குறிப்பேடு 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த நடு இரவில் வெகு நேரம் யோசித்தாள் யாழினி.

"அப்பா எனக்கு பயமா இருக்கு. தினேஷ் மாதிரியே சிவாவும் செத்துட்டா என்ன செய்றது.?" என்றாள் கவலையோடு.

"போலிஸ்ல கம்ப்ளைண்ட் தரலாம்தான்.. ஆனா இங்கே போலிசும் இல்ல சேர்ந்து காணாம போயிருக்காங்க.." என்றார் வசந்தன் கவலையோடு.

"எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா.. ஒருவேளை நான்தான் அந்த சாந்தவின்னா என்னாலதான் இவ்வளவு பிரச்சனையும். சிவாவை மீட்கற பொறுப்பு எனக்கு இருக்கு.." என்றவள் கையிலிருந்த டிரிப்ஸ் ஊசியை கழட்டி எறிந்து விட்டு எழுந்து நின்றாள்.

"அதுக்காக என்ன பண்ணலாம்ங்கற.?" என்றவரை பார்த்தவள் "அந்த இடத்துக்கு போகலாம்.. எல்லா பிரச்சனைகளும் அங்கேதான் ஆரம்பிக்குது. ஏற்கனவே தினேஷோட உடலையும் அங்கேதான் கண்டுப்பிடிச்சாங்க. நாம அங்கே போகலாம்.." என்றாள்.

"உனக்கென்ன பைத்தியமா.?" என்று கோபத்தோடு கேட்டார் அப்பா.

"ப்ளீஸ்ப்பா.. இப்ப நீங்க வரலன்னா நான் தனியே போவேன்.. சிவா எனக்கும் தினேஷ்க்கும் நல்ல நண்பன். அவனை இழக்க விரும்பல நான்.." என்றவள் அவரை தாண்டிக் கொண்டு வெளியே நடந்தாள்.

"யாழினி நில்லு.." ஓடி வந்து அவளை பிடித்து நிறுத்தினார் வசந்தன். "நான் உன்னை வெளியே போக விட மாட்டேன்.." என்றார்.

"இந்த டைரியை படிச்சதுல ரொம்ப குற்ற உணர்வுல இருக்கேன்ப்பா நான். ஒருவேளை நீங்க என்னை அங்கே அனுப்பலன்னா சூஸைட் பண்ணிப்பேன். மைண்ட் அந்த அளவுக்கு மோசமா இருக்கு எனக்கு.." என்றவளை வருத்தமாக பார்த்தார். அவள் சொல்ல வருவது புரிந்தது. ஆனால் தெரிந்தே பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர். மகள் அந்த வெறும் வனத்தை பார்த்தவுடன் திரும்பி வந்து விடுவாள் என்று நம்பியவர் "நானே கூட்டிப் போறேன் வா.." என்று அழைத்துச் சென்றார்.

பிரேத மலைக்கு அவர்கள் இருவரும் வந்தபோது மணி நள்ளிரவு ஒன்று. வனத்தின் ஆரம்ப எல்லையில் நின்றிருந்த ஆயா மரத்தின் மீது அமர்ந்திருந்த கோட்டான் ஒன்று இவர்களை கண்டதும் கத்தியது. பயத்தில் தந்தையின் அருகே ஒட்டி நின்றுக் கொண்டாள் யாழினி.

"பயப்படுறவளுக்கு இந்த நேரத்துக்கு இங்கே என்ன வேலை.? ஏற்கனவே ஒருத்தன் செத்து போன இடம் வேற.." என்றவர் மூக்கை துளைக்கும் நாற்றம் கண்டு கர்ச்சீப்பை எடுத்து மூக்கை பொத்திக் கொண்டார்.

யாழினி தன் கையிலிருந்த டார்ச்சை சுற்றிலும் அடித்தாள். வெறும் மரங்களும் கற்களும்தான் நின்றுக் கொண்டிருந்தன. மரத்தில் படுத்துறங்கிக் கொண்டிருந்த பறவைகள் சில தன் சிறகுகளை அடித்துக் கொண்ட சத்தம் கேட்டு உடல் சிலிர்த்தாள் யாழினி. வண்டுகளின் ரீங்காரமும் தூரத்து மரத்தில் அழுகிக் கொண்டிருந்த பறவைகளில் இறந்த உடல்களின் நாற்றமும் யாழினியை இன்னும் பலவீனமாக்கியது. சிவாவும் காவலர்களும் இங்கேதான் வந்திருப்பார்கள் என்று நம்பினாள் அவள். அவளின் உள்ளுணர்வு அப்படிதான் சொல்லியது. ஆனால் அங்கே எதையும் அவளால் கண்டறிய முடியவில்லை.

"இந்த காட்டுல ஒன்னும் இல்ல.. பார்த்துட்டியா.. வா போகலாம்.." என்று வசந்தன் சொன்ன நேரத்தில் தூரத்தில் சிறு வெளிச்சம் தெரிந்தது. யாழினி டார்ச்சை அணைத்தாள். இப்போது வெளிச்சம் தெளிவாக தெரிந்தது. "அங்கே யாரோ இருக்காங்க.. சிவாவும் போலிஸும்தான் தினேஷ் சாவுக்கான ஆதாரம் தேடுறாங்கன்னு நினைக்கிறேன்.." என்றவள் அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தாள்.

வசந்தன் மகளுக்காக பின்னால் தொடர்ந்தார். இந்த ஆதாரம் தேடும் வேலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டவருக்கு அந்த மர்மத்தின் காரணம் தன் மகள் என்று நம்ப மனம் வரவில்லை.

வெளிச்சம் நெருங்கியது. யாழினி மீண்டும் டார்ச்சை அணைத்தாள். ஏதோ கதவு போல தெரிந்தது.

"இந்த இடம் வித்தியாசமா தெரியுது யாழினி..நாம திரும்பி போயிடலாம்.." என்றவரின் பேச்சை கேட்காமல் உள்ளே நுழைந்தாள். வசந்தனும் வேறு வழியில்லாமல் அந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தார்.

"ஏதோ நாத்தம்.." என்றவர் மீண்டும் கர்ச்சீப்பை தேடியெடுத்து மூக்கை பொத்தினார்.

"பழங்கால பங்களாவா.? ஆனா காட்டுக்குள்ள எப்படி.?" குழப்பமாக கேட்டாள் யாழினி.

"எனக்கும் ஒன்னும் புரியல.." என்றவர் தன் மகளை அந்த பங்களா அதை நோக்கி ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்போது வரையிலுமே அறியவில்லை.

பங்களாவுக்குள் வந்த பிறகே அதன் சுவர்களை பார்த்தாள் யாழினி.

"அப்பா.." பயந்து கத்தியபடி பின்னால் விழுந்தவளை தாங்கி பிடித்தது ஒரு கரம். அவளின் முன்னால் நின்றுக் கொண்டிருந்த வசந்தனின் முகம் அதிர்ச்சியில் உறைந்துப் போனது. அந்த பங்களாவில் இருந்த பிணங்களை விடவும் அதிக அதிர்ச்சி.

"இதுக்கு முன்னாடி மனிதர்களை பார்த்ததே இல்லையா நீங்க.?" என்று தன்னை பிடித்திருந்தவன் கேட்கவும் குழப்பத்தோடு திரும்பினாள் யாழினி. இரண்டாம் இளவரசன் யாழினியை பார்த்து புன்னகைத்தான். யாழினி பயந்துப் போய் மீண்டும் பின்னால் நகர்ந்தாள். தந்தையின் நெஞ்சில் வந்து சாய்ந்து நின்றவளுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

"இது டைரியில் பார்த்த அதே இளவரசன்தானே.?" என்றாள் தடுமாற்றமாக.

ஆமென்று தலையசைத்த வசந்தனின் முகம் குழம்பிப் போய் இருந்தது. "இவனால எப்படி நம்ம இடத்துக்கு வர முடிஞ்சது.?" என கேட்டவர் சந்தேகத்தோடு "ஒருவேளை நாமதான் இவங்க காலத்துக்கு வந்துட்டமா.?" என்றார். அந்த டைரியின் மீது கோபமாக வந்தது அவருக்கு.

"ஆனா நாம காட்டுக்குள்ளதானே இருந்தோம்.?" குழப்பத்தோடு அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்ற இளவரசர்களும் அங்கே வந்தார்கள்.

"இந்த பிரேத மாளிகைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.." என்றான் பெரியவன். இடதுப் பக்க அறை ஒன்றிலிருந்து வந்த தினேஷை கண்டு மயங்கி விழ இருந்தாள் யாழினி. அவனின் முகம் முதல் கால் வரை கறுத்துப் போய் இருந்தது. கண்கள் இரண்டும் இமைகளை விட்டு வெளியே வந்திருந்ததால் விழிகள் குண்டாக தெரிந்தன. "என் சாந்தவி என்கிட்ட வந்துட்டா.. என்னை தேடி வந்துட்டா.." என்றவன் முன்னால் வந்தான். பயந்துப் போயிருந்த யாழினி தன்னை மீறி தன் தந்தையை ஒட்டி நின்றாள். அவளின் இதயம் தறிக் கெட்டு துடித்தது.

"அப்பா பயமிருக்கு.." என்றாள் நடுங்கும் குரலோடு.

மகளை தன்னோடு அணைத்துக் கொண்ட வசந்தன் எதிரில் இருந்தவர்களை கோபத்தோடு பார்த்தார். "அந்த டைரியை திருப்பி தந்துடுறோம்.. தயவு செஞ்சி எங்களை விட்டு போயிடுங்க.." என்றார்.

"டைரி.." குழப்பமாக கேட்டான் பெரியவன்.

"யாரோ நம்மை பத்தி ஒரு குறிப்பேட்டுல எழுதி வச்சிருக்காங்க.." என்றான் தினேஷ்.

"உண்மையிலேயே தினேஷ்தான் மரகதனா.?" கிசுகிசுப்பாக கேட்டாள் யாழினி.

"எனக்கு மட்டும் என்ன தெரியும்.. கண்ட நாயையும் நீதான் லவ் பண்ற.. கண்ட டைரியையும் நீதான் வீட்டுக்கு கொண்டு வர.." என்று திட்டினார் அவர். அந்த பிரேத மாளிகையின் சுவரை பார்த்தே அரை மணி நேரத்திற்கு பயந்து அழுதிருக்க வேண்டியவள் அவள். இந்த இளவரசர்களின் திடீர் வருகையால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்து பயத்தையே மறந்து விட்டிருந்தாள். ஆனால் தந்தையின் திட்டு அந்த நேரத்திலும் அந்த செல்ல இளவரசிக்கு சிறு கோபத்தை தந்தது. தன் கழுத்தில் கை போட்டபடி அணைத்திருந்தவரின் கையை கிள்ளினாள். வசந்தன் பற்களை கடித்தது அவளின் செவிகளிலும் விழுந்தது.

"என் மகாராணி வந்துட்டா.. எனக்கான திருமணம் எப்போது.?" என்றான் தினேஷ்.

யாழினி பயத்தில் எச்சில் விழுங்கிய நேரத்தில் "இப்போதே கூட நடத்தலாம்.." என்றான் பெரிய இளவரசன்.

"இவன் உனக்காக வெகு நாட்களாக காத்திருக்கிறான். உன் மீது அதிக ஆசை இவனுக்கு. உனக்காக எதையும் செய்வான்.." என்றான் இரண்டாமவன்.

அவர்கள் யாரையும் யாழினிக்கு பிடிக்கவேயில்லை.

"என் தந்தைதான் உன் தாயாரை கொன்றார் என்று எங்களுக்கும் தெரியும் சாந்தவி. அவர் உன்னை எங்களின் சகோதரியை போல பார்த்தார். அவர் உன் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவர் உன் தாய்க்கு செய்த துரோகம் கேட்டு நாங்களும் உன்னை சகோதரி போலவேதான் நினைத்தோம். நீ துறவியானால் உனக்காக மாபெரும் ஆஸ்ரமம் ஒன்றுயும் கட்டி தரலாம் என்று இருந்தோம். ஆனால் எங்களின் இளையவன் உன் மீது நேசம் கொண்டு விட்டான். துறவை விடவும் உனக்கு பொறுத்தமானவன் இவன்தான்.." என்று சொன்னான் மூன்றாமவன்.

"அன்று நீ இறந்ததும் உன் நினைவில் பைத்தியமாகி விட்டான் இவன். இவனை போல் ஒருவனை திருமணம் செய்துக் கொள்ள கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீ.." என்ற நான்காமவன் "அடிமை ஆன்மாக்களே.. உடனே இந்த மாளிகையை விழா கோலத்திற்கு மாற்றுங்கள்.." என்றான் தன் வாளால் காற்றில் கோடு கிழித்தபடி.

நொடியில் அந்த பிண பங்களா வாசனையால் நிரம்பியது. பிணங்கள் ஒன்று கூட தென்படவில்லை. அனைத்து சுவர்களும் பூக்களால் செய்யப்பட்டது போல இருந்தது. கூரையும் அப்படிதான் இருந்தது. அவர்கள் நின்றுக் கொண்டிருந்த தரையும் அப்படிதான் இருந்தது. இந்த திடீர் மாற்றம் கண்டு பயந்துப் போனாள் யாழினி. அங்கே என்ன நடந்தாலும் அவளுக்கு பயமாக மட்டும்தான் இருந்தது.

பழ தட்டுகள் அந்த பூ மெத்தையின் மீது வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. சீர் வரிசை தட்டுகளும் வரிசையில் இருந்தன. அதனிடையே அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் இரண்டும் இருந்தன. நாற்காலிகளின் முன்னால் இருந்த ஒரு தட்டில் தங்க நாண் மாங்கல்யம் ஒன்றும் இருந்தது. "யாகம்.." என்றான் தினேஷ் தயக்கமாக.

நாற்காலிகளின் முன்னால் இருந்த இடத்தில் யாகம் ஒன்று உருவானது.

"திருமணம் செய்துக் கொள்ளலாமா ராணியாரே.?" என்றுக் கேட்டான் தினேஷ் அவளை பார்த்து.

அவசரமாக மறுத்து தலையசைத்தாள் யாழினி. அவனின் அழுகும் உடலை கண்டு மறுக்கவில்லை அவள். அவன் மரகதன் என அறிந்தே மறுத்தாள்.

தாங்கள் இருந்த அறை திடீரென்று பூக்களால் சூழப்படவும் குழம்பிப் போனார்கள் சதாசிவமும் முஸ்தபாவும். "எப்படி இந்த மாற்றம்.?" என்றார் முஸ்தபா குழப்பத்தோடு.

படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருந்த சிவா வாசம் வந்த பிறகே கண்களை திறந்தான். கூரையில் இருந்து கொட்டியது மஞ்சள் சாமந்தி. குழப்பத்தோடு எழுந்து அமர்ந்தான். அந்த அறை முழுக்க பூக்கள். கட்டில் அருகே இருந்த மேஜையின் மீது தட்டில் பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

"பிணங்கள் பூவாகிடுச்சா.?" என கேட்டவன் ஆச்சரியத்தோடு அந்த கட்டிலில் இருந்து இறங்கி நின்றான். அந்த கட்டில் கூட இப்போது வெகு சுத்தமாக இருந்தது. பட்டு மெத்தை பளபளத்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று குழப்பத்தோடு திரும்பி பார்த்தான். ஒரு மூலையில் பூக்களின் இடையே இருந்த மிக பெரிய குத்து விளக்கிலிருந்து வந்துக் கொண்டிருந்தது அந்த வெளிச்சம்.

"இதுவும் எனக்கு பயமாதான் இருக்கு.." என்று சிவா சொன்ன நேரத்தில் அங்கே கதவு ஒன்று தோன்றியது. அந்த கதவின் அந்த பக்கமிருந்து வந்தார் ஒரு கூன் தாத்தா.

"யார் இது.?" எந்த வில்லங்கமோ என்று நினைத்தபடி கேட்டான் சிவா.

கூன் கிழவன் நிமிர்ந்தார். "கோமண சாமியார்.." ஆச்சரியமாக இருந்தது சதாசிவத்திற்கு. டைரியில் சந்தித்த மற்றொரு மனிதன் என்று அவர் நினைத்த வேளையில் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தார் அவர்.

"சிறையும் சுதந்திரமும் ஒன்றே. மரணமும் வாழ்வும் ஒன்றே.." என்றார். அவர் சொன்னது யாருக்கும் புரியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMET

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN