என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 1எப்போதும்பரபரப்பாகஇயங்கும்சென்னை, ஆனால் அன்று அதனை விட கூடுதல் பரபரப்புடன், அதனின் புறநகர் பகுதியான குன்றத்தூரில் அமைந்து இருக்கும், காந்தி நகரில் உள்ள, அசோகன் தெருவில் இருக்கும், அமுதவிலாஸ் காம்பவுண்டுக்குள், குடியிருக்கும் பச்சையப்பன் வீட்டில் உள்ள குடும்பத்தினர் இருந்தார்கள்.கடந்த முப்பது வருடங்களாக தனித்தனியே நான்கைந்து வீடுகளைக் கொண்டு, மத்தியவர்க்கத்தினர் ஆட்சி செய்யும் அபார்ட்மெண்ட் அது. அங்கே வீட்டுவாசலிலே நின்றபடி அடிக்கு ஒருமுறை வீட்டின் உள்ளே பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தலைவரான பச்சையப்பனோ பொறுமை இழந்தவராக“ஏம்மா விஜி!இன்னுமா ரெடி ஆகிட்டு இருக்கீங்க?” என்று நின்ற இடத்தில் இருந்தபடியே உள்ளே குரல் கொடுக்க,

அவர் அழைத்த விஜிக்குப் பதில் வெளியே வந்த அந்த வீட்டின் மூத்தமருமகளான சந்தியா“இதோ நாங்க கிளம்பிட்டோம் மாமா..” என்றவள், தன் பின்னே வந்த கணவன் கிருஷ்ணனைப் பார்த்து “சீக்கிரம் வாங்க.. மாமா கூப்பிடுறாங்க” என்று அவசரப்படுத்த தங்கள் பிள்ளைகளான ஏழுவயது மகன் சபரிபையும் மூன்றே வயதான சிந்துஜாவையும் தன் கைக்கு ஒன்றாக பிடித்தபடி அழைத்து வந்தவன்“இதோ வந்துட்டேன்டி” என்று மனைவிக்கும் “நாங்க ரெடிபா” என்று தன் அப்பாவுக்கும் பதில்தர“சரிசரி..,ரெடியாகி வந்த நீங்களாவது வேன்ல போய் உட்காருங்க” என்று அவசரப்படுத்தியவர்மறுபடியும், பொறுமை இழந்து உள்ளே குரல் கொடுக்கயிருந்த நேரம், தன் வயிற்றில் இருக்கும் ஐந்துமாத கருவை சுமந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க சற்றே வேகநடையுடன் வெளியே வந்த மகள் பரமேஸ்வரியைப் பார்த்து

“மெதுவா வாடா,” என்றவர், ஒரே எட்டில் மகளை நெருங்கி, அவள் கையைப் பிடித்து “நீ இரட்டை குழந்தையை சுமந்துகிட்டிருக்க ஈஸ்வரி! உன் மாமியார் பார்த்தாங்கனா.. இந்த கல்யாணத்துல நீ கலந்துக்கவே வேணாம்னு உன்னைக் கூட்டிட்டுப்போய்டு வாங்க” என்று சற்றே தாழ்ந்த குரலில் எச்சரிக்க, தன் வழக்கமான புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி,“நான் மெதுவாதான் வந்தேன்பா. நீங்க ஒன்னும் பயப்படாதிங்க” என்று கூற, அப்போதும் தந்தையின் முகம் தெளியாததைக் கண்டவள் “சரிசரி.. கோவிலுக்கு வந்ததும் அங்க ஒரு இடமா சேர் போட்டு உட்கார்ந்துடுவேனாம்.. பிறகு கல்யாணம் முடிஞ்சி நீங்க சாப்பிடவாம்மானு என்னை அழைக்கும் போதுதான் எழுந்து வருவேனாம்.. போதுமா?” என்று தன் தந்தையை சமாதானப்படுத்த“ம்ம்ம்… அதை செய். கூடவே உன் மாமியார் எங்க உட்கார்ந்து இருக்காங்கனு பார்த்து அவங்க பக்கத்துலயே உட்கார்மா” என்று அவர் வழி சொல்ல “ம்ம்ம்..” என்ற சொல்லுடன்,அவள் வேனில் ஏற கால் வைக்கும் நேரத்தில், தூரத்தில் நின்று தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நம் கதையின் நாயகனும் இன்று திருமணம் நடக்கயிருக்கும் மாப்பிள்ளையுமான நந்தனோ, தன் தந்தையை நெருங்கி,“இப்போ எதுக்கு அக்காவுக்கு சிரமம் கொடுக்கிறிங்க?, இன்று என்ன நடக்க…” என்று ஏதோ உண்மையைச் சொல்ல வந்தவன், கடைசி நிமிடத்தில் சுதாரித்து, “இந்த மாதிரி நேரத்துல, அக்காவ, அங்கே இங்கேனு அலையவச்சி, உடம்புக்கு எதாவது வந்தா, யார் பதில் சொல்வதுபா,” என்று தந்தையைக் கடிந்தவன் ‘நடக்கப் போறது எனக்கு வேணும்னா பெருசா இல்லாம இருக்கலாம். ஆனா மத்தவங்களுக்கு அப்படி இல்லையே! அதனால அக்காவுக்கு எதாவது மனஉளைச்சல் ஏற்பட்டா என்ன செய்றது?’ என்று தன் மனதிற்குள்ளேயே போராட“நான்தான் அங்கு வந்து ஒரு இடமா உட்கார்ந்திடுறேனு அப்பாகிட்ட சொன்னனே.. இப்போ நீ வேற ஆரம்பிச்சிடியாடா?” என்று தன் தம்பியின் எண்ணம் அறியாமல், ஈஸ்வரி சலித்துக்கொள்ள, அவனின் தந்தையோ,“வீட்டுல,நடக்கற சுபகாரியத்துக்கு ஈஸ்வரி வராம இருந்தா நல்லா இருக்குமா, இல்ல அவங்க மாமியார் வீட்டுலதான் அவளுக்கு மதிப்பு இருக்குமா?” என அவன் வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டர். பிறகு ஈஸ்வரி வண்டியில் ஏறப் போகும் நேரம்,“இருஇரு.. நான் வரேன்கா” என்று தன் அக்காவை நெருங்கி அவளைத் தன் கைகளில் தூக்க நினைக்க, அதைப் பார்த்து

“டேய் டேய்.. என்னடா பண்ற?” என்று அவன் அப்பாவும், அக்காவும் பதறியபடி கேட்க“நான், உங்களைத் தூக்கிட்டு போய், வேன் உள்ளே, உட்கார வைக்கிறேன்கா” என்று இவன் சொல்ல, அதற்கு தமக்கையோ செல்லக் கோபத்துடன்,“நந்துஊஊஊ! இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. இந்த வேன்ல ஒருத்தர் ஏறினாலே, இடிச்சிக்கிட்டுதான் போகணும். இதுல என்னையத் தூக்கிட்டு ஏறுவியா?” என்று வினவ,

அதற்கும் “இல்லக்கா.. நான் பேலன்ஸ் பண்ணி உங்களைத் தூக்கிட்டுப் போறேன்”,என்றவனை

“டேய் நந்தா! வேணாம்டா.. அவளாகவே ஏறட்டும்” என்று தன் மகனை அதட்டியவரோ, “நீயே ஏறுமா” என்று மகளிடம் சொல்ல, அதற்கு சம்மதித்துத் தன் அக்கா ஏற, கை கொடுத்து உதவ ஈஸ்வரி ஏறி உட்கார்ந்ததும்“நந்துகுட்டி இங்க வாடா” என்று அவள் அழைக்க, எப்போதும் அந்த குட்டியில் உருகுபவன், இப்போதும் உருகி, உடனே வண்டியில் ஏறி தமக்கைப்பக்கத்தில் அமர்ந்து,“என்னம்மா?” என்று பாசமாக கேட்க, தன்னைவிட இரண்டு வயதே சிறியவனான தன் தம்பி, அடிக்கடி தன்னை அக்கா என்றும் அம்மா என்றும் மாற்றி மாற்றி அழைத்துப் பாசத்தில் உருகுவதைக் கண்டவள், வாஞ்சையுடன் அவன் முகம் வருடி தலையைக் கோதிவிடஅதைப் பார்த்து “என்ன ஈஸ்வரி கல்யாணத்துக்குக் கிளம்பி நிற்கற பிள்ளையோட தலையை இப்படி கலைத்து விட்டுட்ட?” என்று சந்தியா, ஈஸ்வரியைப் பொய்யாகக் கோபித்தபடியே தலையைசீவிவிட“நான் அப்படிதான் செய்வேன்” என்ற ஈஸ்வரி தமையனின் தலைமுடியை மறுபடியும் கலைத்து விளையாட இப்போது சந்தியா மறுபடியும் அவனுக்குத் தலைசீவிவிட“போதும் போதும் உங்க பிள்ளைய நீங்க ரெண்டு பேரும் கொஞ்சினது. இன்னைக்கு அவனுக்குக் கல்யாணம் ஆகப்போகுது. அதற்குப் பிறகு அவனுக்குத் தலைகலைத்து விளையாடுற வேலை எல்லாம் அந்த யாழினி பொண்ணு பார்த்துப்பா. அதனால நீங்க ரெண்டு பேரும் இப்பவே கொஞ்சம் வழிவிட்டு விலகி இருங்க” என்று வரப்போகும் பெண்ணுக்காக கிருஷ்ணா பேச“அதனாலதான் இப்பவே இதை செய்கிறோம்” என்று சிரித்த முகமாகவே சொல்லியவர்கள், அவன் தலையைக் கலைப்பதும் சீவுவதுமான தங்கள் வேலையைச் செவ்வனவே செய்ய, இவர்கள் இருவரையும் தடுக்காமல் இருவரின் முகம் பார்த்து அவர்களின் செயலுக்கு இடம் விட்டு குழந்தை என அமர்ந்திருந்த நந்துவின் மனதிலோ முள் ஒன்று சுருக்கென குத்தியது. ‘இந்த சந்தோஷம் எல்லாம் சில மணி நேரம்தான்.. அதுக்கப்புறம் இவர்கள் மனநிலை எல்லாம் என்ன மாதிரி இருக்கப்போகிறதோ?!’ என்றுதான் நினைத்தான் அவன்.இவர்களின் சேட்டைகளைப் பார்த்த கிருஷ்ணா

“டேய் நந்தா! இங்கிருந்து எழுந்து போடா. என் பொண்டாட்டியும் என் தங்கையும் பண்ற அளப்பரையப் பார்த்தா இன்று நடக்க இருக்கிற உன் கல்யாணத்துக்குப் பதில் உனக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடத்த விடுவாங்கபோல” என சிரித்த முகமாக அவர்களின் செயலுக்குத் தடை செய்தவன் “ஏழு கழுதை வயசு ஆகுது இன்னும் இவனை குழந்தையாவே நினைக்கிறிங்க நீங்க ரெண்டு பேரும்” என்று குறைபட, அதில் அவன் மனைவி சந்தியாவோ

“ஓ அப்படியா ராசா? அப்போ, இனிமே எப்போதும் நந்துதான் என் முதல் பிள்ளைனு நீங்க சொல்லுங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு!” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும்படி அவன் விலாவில் இடித்து எச்சரிக்க, அதைக் கேட்டு அசடுவழிந்தான் கிருஷ்ணா.அண்ணன் சொன்னதைக் கேட்ட நந்தா, மௌனமாக வேனிலிருந்து வெளியே வர, இதையெல்லாம் பார்த்த அவர்களின் தந்தைக்கு, தன் மக்களை நினைத்து பெருமையாவும், அதேசமயம் பயமாவும் இருந்தது. ‘வரப்போற பொண்ணும் இதே மாதிரி எங்களுடன் இருக்குமா இல்லை பெரிய இடம் என்பதால் நந்துவைத் தனியே கூட்டிட்டுப் போய்டுமான்னு தெரியல.. கடவுளே என் புள்ளைங்க யாரும் பிரியாம என்னைக்கும் இதேமாதிரி ஒத்துமையா இருக்க, நீதான்பா அருள்புரியணும்’ என்று மனதுக்குள் வேண்டியவர், ‘அப்படி நந்துவே விலகியே போனாலும், எங்க இருந்தாலும் அவன் நல்லா இருந்தா போதும்’ என்று நினைத்தது தந்தையின் மனம்.அதேநேரம், இவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து வயிறு எரிந்த பக்கத்து வீட்டுக்காரனான வரதன்,“என்ன பச்சை, உன் மகன் நந்தனுக்குக் கல்யாணமா? கல்யாணமே ஆகாதுனு இருந்தவனுக்கு ஆண்டவன் புண்ணியத்தில் நல்லது நடந்தா சந்தோஷம்தான்!” என்று கிண்டலாகச் சொன்னவர்,“ஆமாம் பச்சை,.. இவன் விஷயம் தெரிஞ்சிதானே அந்த பொண்ணு இவனைக் கட்டிக்குது,? ஏன்னா இப்போ மறைச்சி, நாளைக்கு உண்மை தெரிய வந்தா பிரச்சினை பாரு..” என்று வம்பு இழுத்தவர், பக்கத்திலிருந்த நந்துவைப் பார்த்து,“மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறதானே?” என்று விசாரிக்க, அவனோ அவருக்கு பதில் சொல்லாமல் கைகளை இறுக்க மூடி தன் கோபத்தை அடக்குவதைப் பார்த்த நந்துவின் தந்தை,

‘ஐயோ! இந்த ஆளுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன். வீணா வாயைக் கொடுத்து மாட்டுறானே..”என்று மனதுக்குள் நொந்தவர்“முகூர்த்தத்துக்கு நேரம் ஆகிடுச்சி பாருங்க.. ஏம்பா டிரைவர்! வண்டி எடு. டேய் நந்தா! மாப்பிள்ளை நீயே லேட்டா போனா எப்படிடா? பிரவீன் இவனைச் சீக்கிரம் கோவிலுக்குக் கூட்டிப்போப்பா என்று அங்கிருந்த அனைவருக்கும் மற்றும் நந்துவின் நண்பனுக்கு கடகடவென கட்டளையிட, அப்போதும் பிள்ளைகள் முதல் மருமகள் வரை எல்லோருடைய முகமும் கோபத்திலேயே இருக்க,“ம்ம் ஆகட்டும்…. சீக்கிரம் போங்கம்மா எல்லோரும். நான் அம்மாவையும் விஜியையும் அழைச்சிட்டு வரேன்” என்று அவர்களை விரட்டாத குறையாக அனுப்பி வைத்து விட்டு வந்தவரோ,“வரதா! நான்தான் நந்துவுக்கு கல்யாணம்னு ரெண்டுநாள் முன்பே உன் வீட்டுல வந்து உன்கிட்ட சொன்னனே? பிறகு ஏன் கிளம்புற நேரத்துல இப்படி பேசுற? உனக்குதான் அவனைப் பத்தி தெரியும் இல்ல?” என்று அந்த வம்புக்காரனுக்குப் பதில் தந்தபடி மேற்கொண்டு அங்கு நிற்காமல் வீட்டுக்கு வந்தவர்

“விஜிமா! இன்னும் என்னடா பண்ற?” என்று கூடத்திலிருந்து கேட்க

“அப்பா! அம்மாவுக்கு சேலை மாற்றிட்டு இருக்கேன். இதோ முடிச்சிட்டேன்.. வரேன்பா” என்று சொல்லிக் கொண்டே, தன் தாய் அமர்ந்திருந்த வீல்சேரைத் தள்ளிக் கொண்டு வந்தாள் விஜி என்கிற விஜயலட்சுமி.வீல்சேரிலிருந்த தன் மனைவி காந்திமதியைப் பார்த்தவர் ‘எப்படி இருந்தவ! நந்துவோட வாழ்க்கையை நினைத்து நினைத்தே இந்த நிலைக்கு வந்துட்டா..’ என்று மனதுக்குள் மருகியவர்“மதி! நீ எப்படி எல்லாம் ஓடியடி நம் மகனுக்கு கல்யாணம் செய்யணும்னு நினைச்ச?..” என்று கலங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்த நேரம் நந்து தன் தாயைப் பார்க்க உள்ளே வர“அப்பா! அண்ணா வராங்க” என்று மகள் எச்சரிக்கவும், உடனே தன் பேச்சை நிறுத்தி தன் மகனைத் திரும்பிப் பார்த்து, “நீ இன்னும் கிளம்பலையாடா?” என்று கேட்க, தந்தை கூறியதை, காதிலேயே வாங்காமல் தாயை நெருங்கி அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன்,“உனக்காக தான்மா இந்த திருமணத்துக்கே சம்மதிச்சேன்” என்றவன் பாதிக்கப்படாத அவர் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்தியபடி “சீக்கிரமே நீங்க குணமாகி வரணும்மா!” என்று வேண்டுதல் வைத்தவன், மனமோ, ‘இறைவா இன்று யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்காம, முக்கியமா என் அம்மாவுக்கு எதுவும் நடக்காம நான் நினைத்தபடியே நடந்து, எல்லோரையும் நல்லபடியா வீடு கொண்டு வந்து சேர்த்துடுப்பா!’ என்று வேண்டஅதைக் கலைப்பது போல், அவன் தாயோ, பேசமுடியாத நிலைமையிலும், கண்கள் பனிக்க, மகனின் தலை தொட்டு ஆசிர்வாதம் செய்தார்.அப்போது வெளிவாசலில் கார் வந்து நிற்க, அதைப் பார்த்த அவனின் தந்தை, “கார் வந்திடுச்சி பாரு. சீக்கிரம் வாங்க.. நாமும் கிளம்பலாம்” என்று அவசரப்படுத்தவும், தன் தாயை, காரில் அமர உதவி செய்தவனைப் பார்த்த, பச்சையப்பன் ஞாபகம் வந்தவராக“டேய் நந்தா! அதான் கார் இருக்கே.. நீயும் எங்ககூட வந்திடுப்பா. பிரவீன் வண்டியில வரட்டும்” எனவும்“சரிப்பா.. உங்க கூடவே வந்திடுறேன்”என்றபடி, அவன் காரில் அமரவும் அனைவரையும் சுமந்தபடி கார் கோவில் நோக்கி விரைந்தது.அங்கே கோவிலில், மணவறை மேடை பக்கத்திலேயே சேரில் பச்சையப்பனின் அம்மா ருக்மணி அமர்ந்து கொண்டு எல்லாம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்க, பச்சையப்பனின் தந்தை நந்தகோபாலோ வழக்கம் போல் தன் சகாக்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். பச்சையப்பனின் தங்கை சுந்தரியோ இந்த கல்யாணம் பிடிக்காததால் என்ன குறை சொல்லாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிக்கொண்டிருந்தாள். நந்துவின் தம்பி பாலாஜி தன் நண்பர்களுடன் திருமணத்திற்கு வருபவர்களை, வரவேற்பிலிருந்து, பந்தி வரை அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். இப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த திருமணத்தில் சந்தோஷமாக பங்கெடுத்துக் கொண்டிருக்கமாப்பிள்ளை நந்தனோ, வியர்க்க விறுவிறுக்க ஒருவித படபடப்புடன் தன் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு அந்த நல்ல சேதி எப்போதுடா கேட்போம் என்ற பரபரப்புடன் அமர்ந்திருக்க“டேய் நந்தா! என்னடா டென்ஷனா இருக்க? இப்படி இருந்தா உனக்கு தான்டா கஷ்டம்..” என்று அவன் நண்பன் பிரவீன் எடுத்துச் சொல்லதன் நிலை உணர்ந்து “அப்படி ஒன்றும் இல்லடா” என்று சமாளித்துத் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன். நொடிக்கு ஒரு முறை தன் கையிலிருந்த கடிகாரத்தையே பார்க்க…“என்னடா இப்படி வாட்ச்சைப் பார்த்துட்டு இருக்க? எப்போ யாழினியைப் பார்த்துத் தாலி கட்டி உரிமையா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோம்னு நினைக்கிறியா இல்ல நேரடியா ஹனிமூனுக்குக் கூட்டிட்டுப் போறதைப்பற்றி நினைச்சிட்டு இருக்கியா?” என்று இன்னொரு வம்புக்கார நண்பன், நந்துவை வம்பிழுக்க‘இவன் வேற ஒருத்தன்.. நேரம் காலம் தெரியாம..’ என்று உள்ளுக்குள் கடுகடுத்தவன் ‘இன்னும் என்ன செய்றா இந்த யாழினி? என்கிட்ட சொன்ன மாதிரி செய்துட்டாளா, இல்ல, தீனிக்கு ஆசைப்பட்டு நல்ல மூக்கு முட்டத்தின்னுகிட்டு இருக்காளா இந்த குந்தாணி?’ என்று தன் வருங்கால மனைவியை மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருக்க

அதேநேரம் ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வரச்சொல்ல ‘என்ன இது ஐயர்கூட கூப்டுட்டாரு.. இன்னும் இவ என்ன பண்றா?’என்ற கடுப்புடன், அவளிடமே கேட்க நினைத்தவன், தன் போனை எடுத்து யாழினிக்கு அழைக்க நினைத்த நேரம், அவன் அறைக்கு வந்த கிருஷ்ணாவோ“என்னடா இப்பகூட போன நோண்டிட்டு இருக்க? ஐயர் கூப்பிடுறது கேட்கல? கிளம்புடா” என்றவன் பட்டென்று நந்துவின் கையிலிருந்த போனைப் பிடிங்கிக் கொள்ள“அண்ணா! ஒரே ஒரு போன்கால்தான்.. பிளீஸ்ண்ணா!” என்றுஇவன் கெஞ்ச

“அதெல்லாம் கல்யாணம் முடிந்த பிறகு பேசிக்கலாம். இப்போ நீ கிளம்பு. அதுவரை போன் என்கிட்டேயே இருக்கட்டும்” என்று கிருஷ்ணா பிடிவாதம் பிடிக்க வேறுவழியில்லாமல் சோர்ந்த முகத்துடனே யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், இறுக்கத்துடனே வந்தவன், ஐயர் சொன்னதைச் செய்து, மணமகனுக்கான ஆடையை பெற்றுக் கொண்டு சென்றான்.பின்னர் ஐயர் மணமகளை வரச் சொல்ல, தன் அறைக்கு செல்லவிருந்த நந்தனின் காதில் இந்த வார்த்தைகள் விழுந்துவிட, அவன் கால்கள், ஒரு நிமிடம் தயங்கி அப்படியே நின்றது. தான் கேட்கத் துடிக்கும் விஷயத்தை முன்பே கேட்டு மனம் நிறைந்திருக்க வேண்டியவன், இப்போதாவது அந்த வார்த்தை கேட்காதா, என்ற அற்ப ஆசையில் அப்படியே நின்றுவிட, ஆனால் அவன் ஆசைப்பட்ட விஷயம்தான் நடக்கவில்லை.ஐயர், நான்கைந்து முறை மணமகளை அழைத்துவிட, நின்ற இடத்திலேயே தன் தம்பி மந்திரித்துவிட்ட ஆடுபோல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவும், ‘இவனுக்கு என்ன ஆனது?’ என்ற எண்ணத்துடன் கிருஷ்ணா, சட்டென தம்பியின் கைப்பிடித்து அவனுக்கான அறைக்கு அழைத்துச் சென்றான்.மணமகள்,அவளுக்கான ஆடையை வாங்கிச் செல்லவும்.அதைக் கேள்விப்பட்ட நந்துவின் மனதில் இவ்வளவு நேரம் இருந்த நிம்மதி காணாமல் போய் இருந்தது.‘என்னை ஏமாற்ற நினைக்கிறாளா? கடைசியில அவ புத்திய காட்டிடுவாளோ?’ என்று மனதுக்குள் கேள்வி எழுப்ப இன்னோர் மனமோ, ‘ச்சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது. இத்தனை பேர் முன்னாள் தன்னை அவள் அசிங்கப்படுத்தமாட்டா’ என்று வக்காலத்து வாங்கியது.அதேநேரம் ஐயர் மறுபடியும் அழைக்க, மணவறைக்கு வந்து, ஐயர் சொன்ன சடங்குகளை, எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் செய்தவனின் உடல், யாழினியை ஐயர் அழைக்கும் போது, விரைத்து நிமிர்ந்தது. சின்ன வயதில் இருந்தே, யாழினி மேல், அடங்காப்பிடாரி என்ற எண்ணத்தை வளர்த்து வந்தவன், மனதில் இன்றைய அவளின் செயல் நம்பிக்கை துரோகி என்ற எண்ணத்தை அவனுக்குள் ஆழப்புதைத்தது. அவளும், அவன் பக்கத்தில்அமர்ந்து, ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருந்தாள்.என்னதான் ஐயர் சொன்னதை யாழினி செய்தாலும் நொடிக்கு ஒரு முறை தன் கடைக்கண்ணால் யாருக்கும் தெரியாத மாதிரி நந்தனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். எதையும் காட்டாமல் ஒரு ரோபோ போல் சொல்லச்சொல்ல சகலமும் செய்து கொண்டிருந்தவனின் முகமோ, நேரம் செல்லச்செல்ல தன் கோபத்தை அடக்க பற்களைக் கடித்தபடி தாடை இறுகத் தன்னுள் போராடுவதைப் பக்கவாட்டில் இருந்து பார்த்தாள்.சிறுவயதில் கோபத்தை அடக்கும் போது அவனையும் மீறி அவன் வலது காது துடிக்கும். இன்றும் அதேபோல் துடிப்பதைப் பார்த்தவளின் உள்ளுக்குள் பயம் பரவ, இந்த திருமணம் வேண்டாம் என்று எழுந்து போய்விடுவானோ என்று பயந்து இருந்தவள், இப்போது அவனின் உடம்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் தன் இஷ்டதெய்வமான பெருமாளைத் துணைக்கு அழைத்தவள்,‘நாராயணா! பெருமாளே! ஏடுகொண்டலவாடா! எந்த பிரச்சனையும் இல்லாம இந்த கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடு, திருப்பதிக்கு ஜோடியாக வந்து, அவருக்கு மொட்டை போடறேன்’ என்று நந்துவின் முடிக்கு வேட்டு வைக்கும் வேண்டுதலை வைத்தாள் அவள்.

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN