மௌனங்கள் 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனசேகரன் POV

இதற்கு முன்னால் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் தரவு சேகரித்து கணக்கிட்டு பார்த்திருக்கிறேன். என் கணக்கின் படி தீவிரவாதி ஒற்றை மனிதன். ஐந்தாறு பேராக இருந்தால் நிச்சயம் அவர்களின் குண்டு வெடிப்பு முறை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் இந்த முறை நடந்த குண்டு வெடிப்பு என்னை குழப்பி விட்டது.

ஒரே நேரத்தில் நான்கு பேர் தற்கொலை படைகளாக உருவெடுத்து உள்ளார்கள். வெடித்த குண்டில் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட முக்கால்வாசி பேர் பலி. நாட்டில் நடந்த மற்ற குண்டு வெடிப்புகளை விட அதிக உயிர் பலி வாங்கிய குண்டுவெடிப்பு இதுதான் என்று வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

இவனுக்கு யாரோ உதவுகிறார்கள். ஒரு கூட்டமே உதவுவது போல தோன்றுகிறது எனக்கு. என் நாட்டில் எங்களுக்கு எதிராக துரோகிகள் இருக்கிறார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை என்னால். கண்ட இடத்தில் சுட்டு விடுவேன் அவர்களை. அவ்வளவு கோபம் அவர்கள் மீது.

கடைசி குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பற்றி எனது குழு சோதனை செய்ய ஆரம்பித்தது. நிகழ்ச்சி நடந்த இடத்தை சுற்றி ஐந்து கிலோ மீட்டர் வட்டார எல்லைக்குள் இருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கேட்டிருந்தேன் நான். நிகழ்ச்சியை நேரலையில் ஒளிப்பரப்பிய தொலைக்காட்சிகளிடம் அனைத்து வீடியோக்களையும் அனுப்ப சொல்லி இருந்தேன். ஊடக நண்பர்களும் சிலர் இறந்து விட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கும் கஷ்டம்தான்.

வெடிக்குண்டை கட்டி வந்த உடல்களின் ரத்த துளிகள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு சிதைந்து எரிந்து விட்டது அவர்களின் உடல்கள். ஆனால் வெடிக்கும் முன்பு அவர்களின் முகங்கள் ஏதாவது ஒரு கேமராவில் பதிவாகி இருக்கும் என்று நம்புகிறேன் நான்.

புவின் POV

விடிந்து விட்டிருந்தது. மூடியிருந்த ஜன்னல் சூரிய ஒளியில் பளிச்சிட்டது. கண்களை கசக்கியபடி திரும்பினேன். என்னை ஒட்டிப் படுத்திருந்த உருவம் நெளிந்தது. திடுக்கிட்டு அந்த உருவத்தை பார்த்தேன். குழலி என்னையும் ஒற்றை பெட்ஷீட்டையும் ஆடையாக உடுத்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள். கலைந்திருந்த கூந்தல் முகத்தில் பாதியை மறைத்திருந்தது. பெட்ஷீட் நழுவிய தோளில் நக தடம் சிவந்துப் போய் காட்சியளித்தது.

நொந்துப் போய் மீண்டும் கூரை பார்த்து படுத்தேன். குழலி தூக்கத்தில் என்னை ஒட்டிப் படுத்தாள்.

தவறு மேல் தவறுகளை செய்துக் கொண்டிருக்கிறேன் நான். நேற்றை விட இப்போது அதிகம் விரும்பினேன் அவளை. முன்பை விட அதிகம் இறுகியது போலிருந்தது எங்களுக்கு இடையேயான உறவு பாலம். காமத்தை விட காதலின் அளவு அதிகரித்து விட்டது போலிருந்தது. நான் தங்சேயாவுக்காக உயிர் தர வேண்டியவன். இவளுக்கு அந்த உயிரை தந்து விடுவேனோ என்று பயமாக இருந்தது.

அந்த பக்கம் பார்த்து உறங்கிக் கொண்டிருந்தவள் இந்த பக்கம் திரும்பினாள். என் தோளில் முகத்தை அழுத்தமாக பதித்தாள். அவள் இப்படியே உறங்கினால் அவளின் மூக்கு சப்பாத்தி கள்ளியாய் ஆகி விடும். ஓர கண்ணால் அவளின் அழகை ரசித்தேன். மூளையின் எச்சரிக்கை எதுவும் மனதில் பதியவே இல்லை. தட்டில் விழுந்த ஒற்றை ரூபாயை ஆவலோடு பார்க்கும் யாசகனாய் பார்த்தேன் இவளை.

சிறிது நேரங்கள் நெளிந்தவள் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து கண்களை விழித்தாள். அழகான கண்கள். ஆழ படு குழியை நினைவுப்படுத்தும் கண்கள். இமைகளை சிமிட்டி என்னை பார்த்தாள். பின்னர் புன்னகைத்தாள். என்னை அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கும் என்னை பிடித்திருந்தது. அதுதான் எனது பயமே.

மணி ஒன்பதை நெருங்கிய நேரத்தில் இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவை உண்டோம். குளித்துவிட்டு வந்து அமர்ந்திருந்தவள் புது பூவாக தெரிந்தாள் என் கண்களுக்கு.

திருமணம் செய்துக் கொள்ள சொல்வாளோ என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அதை பற்றி இதுவரை பேசவில்லை அவள். இனி கேட்பாளோ என்று பயமாக இருந்தது. அது இந்த காதலை விடவும் பெரிய சிக்கல். மாட்டிக் கொண்டிருக்கும் சிலந்தி வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் இருக்கும் நான் எப்படி மீனின் வலையில் மாட்ட முடியும்.?

"உங்க பேரண்ட்ஸ் எங்கே இருக்காங்க புவின்‌.?" என்னை பற்றி அறிந்துக் கொள்ள ஆசைப்படுகிறாள். என்னோடு நெருங்க நினைக்கிறாள்.

"பேரண்ட்ஸ் இல்ல.. தம்பி மட்டும் இருக்கான். அவனும் இங்கே இல்ல.. நான் மட்டும் தனியாதான் இருக்கேன்.." என்றேன்.

என்னை பரிதாபமாக பார்த்தாள். நான் ஒன்றும் அனாதை இல்லை. எனக்கும் தங்சேயா எல்லாமுமாக இருக்கிறார். ஆனால் இவளிடம் அவரை பற்றி எப்படி சொல்ல இயலும்.?

ஒரு வாரமாக வீட்டிலேயேதான் இருந்தேன். என்னை உளவு பார்த்துக் கொண்டிருந்த தனசேகர் என்னை நோக்கி நெருங்கி வருவதாக சொன்னார்கள் என் நலம் விரும்பிகள். வரட்டும் அவன். நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் காட்டுகிறேன் நான்.

போன வாரம் நடந்தது மாபெரும் குண்டு வெடிப்பு என்பதால் நாடே அச்சத்தில் உறைந்திருந்தது. துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தது. டிவியில் எப்போதும் ஒப்பாரி பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பாம் கட்டி அனுப்பியவர்களின் உறவினர்கள் 'இந்த குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை..' என்று அழுதபடி சொன்னார்கள். நெருங்கிய உறவினர்களை தனி சிறையில் வைத்து விசாரித்துக் கொண்டிருப்பதாக அதே டிவிக்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு அமைதியாக இருக்கும்படி தங்சேயா கட்டளையிட்டிருந்தார். அதனால் அமைதியாக இருந்தேன் நான்.

எப்போதும் குழலியின் அருகில் இருந்தேன். அதிகம் நெருங்கி விட்டிருந்தோம் இருவரும். முத்தங்களை சாதாரணமாக பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம். ஒன்றாய் சேர்ந்து குளியலறைக்குள் புகுந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்.

மேல் வீட்டுக்கு எப்போதாவது சென்றேன் நான். கீழ் வீடு சொந்த வீடு போல் இருந்தது. அவள் சமையல் செய்கையில் வெங்காயம் வெட்டி தந்தேன் நான். அவள் தலையணைகளுக்கு உறைகளை போட்டுக் கொண்டிருந்தால் நான் போர்வைகளை மடித்து வைத்தேன்.

அவளின் போனை முழுதாய் சலித்தேன் நான். எதுவும் பெரியதாக இல்லை. வால்பேப்பரில் நிஷாவின் புகைப்படத்தையும் மதியின் புகைப்படத்தையும் வைத்திருந்தாள். ஆண்கள் பெயரில் அதிக எண்கள் சேமிக்கப்படவில்லை. சேமிக்கப்பட்ட மத்த எண்களும் அவளின் பூக்கடைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அவள் கடந்த இரண்டு வாரங்களாகவே பூக்கடையை திறக்கவில்லை.

இடையில் ஒருநாள் நிஷாவின் சின்ன தம்பி வந்தான் சிவ பூஜையில் கரடியாக. என்னை விலக்கி தள்ளி விட்டு சென்று கதவை திறந்தாள் அவள். பூக்கடை சம்பந்தப்பட்ட கணக்கு நோட் தங்கள் வீட்டில் இருந்ததாக சொல்லி இவளிடம் தந்தான். என்னை பார்த்து வியந்தான். பிறகு ஆச்சரியத்தோடு குழலியை பார்த்தான். குழலி வெட்க முகத்தோடு அவனிடம் என்னை காதலன் என்று சொன்னாள்.

"ஸ்ரீ.." என்று கை குலுக்கினான். "புவின்.." என்றேன்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றான் அவன்.

குழலி எனக்காக ரவா லட்டு செய்து தந்தாள். ருசித்தது. ஆனால் அவள் அளவுக்கு அல்ல.

தற்கொலை படையாகி குண்டு வெடித்து இறந்த நால்வரின் குடும்பத்தையும் போலிஸ் அதிகம் விசாரித்தது. விசாரணையில் இரண்டு ஆண்களும் ஐந்து பெண்களும் இறந்து போனார்கள். இந்த நாட்டில் விசாரணைகள் எப்போதும் இப்படிதான். தவறு செய்தவனை விட அவனை சார்ந்தோர் அதிகம் தண்டனை பெறுவார்கள். பாசம் நேசம்தான் இந்த தண்டனையின் இணைப்பு கோடு என்றாலும் என்னால் இத்தகைய இறப்புகளை நியாயம் என்று சொல்ல முடியவில்லை. சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது அல்லவா நான் சொல்வதை கேட்டு. எனக்கும் அப்படித்தான் உள்ளது. எல்லாம் புது நேசத்தால் வந்த பிரச்சனை.

என்னை தேடுபவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். பதுங்கு குழி சிறுத்தையாக காத்திருந்தேன் நான்.

தனசேகரன் POV

கட்சி கூட்டத்தில் வெடிக்குண்டு வெடிக்க காரணமானவர்களின் குடும்பத்தை எவ்வளவோ அலசி பார்த்தாகி விட்டது. ஒரு தகவலை கூட திரட்ட முடியவில்லை எங்களால்‌. என் குழுவில் இருந்தவர்கள் அடுத்த குண்டை வெடிக்காமல் தடுத்து விட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்கள். அதன் விளைவாய் விசாரணை அறையிலேயே ஏழு பேர் இறந்து விட்டார்கள். அது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. விசாரணை குழுவை மாற்ற வேண்டும் என்றார்கள் எதிர் கட்சிகள். ஆளும் கட்சிகளோ விசாரணை செய்த போலிசார் அனைவரும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் என்றார்கள்.

மாபெரும் சண்டை இந்த கட்சிகளின் சண்டை. நான்கு நாட்களில் கண்டுபிடிக்க வேண்டிய தீவிரவாதிகளை நானூறு நாட்கள் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம் இவர்கள். ஆனால் என் தலைமை அதிகாரிகள் தனி ரகம். ஆயிரம் தடைகள் வந்தாலும் நாட்டுக்காக உழைப்பார்கள். எனது குழுவில் இருந்தவர்களுக்கு அதிரடியாக அறிவுரையும் மிரட்டலும் வந்தது அவர்களிடமிருந்து. இனி இப்படி ஒரு தவறு நடந்தால் தாங்களே நேரில் வந்து உங்களை சுடுவோம் என்றார்கள். என் குழுவில் இருந்தவர்கள் மன்னிப்பு கேட்டார்கள்.

நாங்கள் விசாரணைக்கு வைத்திருந்த மற்ற அனைவரையும் விடுதலை செய்து விட்டோம். அவர்களை வைத்திருப்பதில் ஒரு உபயோகமும் இல்லை. அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதை நான் முதல் நாளே சொன்னேன். ஆனால் என் குழுவில் இருந்தவர்கள் விசாரணையை தொடர்ந்தார்கள். தீவிரவாதியை தேடி சுடுவதற்கு பதில் இவர்களை சுட்டு விட்டால் எனது முதல் பிரச்சனை தீர்ந்து விடும் போல தோன்றியது எனக்கு.

இரண்டு வாரங்கள் ஐந்தாயிரம் வீடியோக்களை தேடி சலித்தோம். ஒன்றுமே உருப்படியாக கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்தவர்களின் பட்டியலை எடுத்து அதில் ஏதாவது கிடைக்குமா என்று தேடினோம். அதிலும் கூட முழு வெற்றி கிடைக்கவில்லை எனலாம். டூரிஸ்ட் விசாவில் வந்திருந்த அனைவருமே திரும்பி சென்றிருந்தார்கள். பணி நிமித்தமாகவோ படிப்புக்காகவோ வெளிநாடு சென்று திரும்பியவர்களின் பட்டியல் சற்று பெரியது. ஆனாலும் அவர்களின் முகவரிக்கு சென்று ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும் என்று வேலையை முடுக்கி விட்டேன் நான்.

நாட்டில் சந்தேகப்படும்படியான மனிதர்களின் நடமாட்டம் உள்ளதா என்று அந்தந்த காவல் நிலையத்திற்கு தகவலை அனுப்பினேன். கடலில் குண்டூசி தேடுவது போலதான் என் நிலையும்.

நிலமை இப்படி சென்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் "இந்த குண்டு வெடிப்பிற்கு நாங்கள்தான் காரணம், அரசாங்கம் ஐநூறு கோடி பணத்தை தரவில்லை என்றால் குண்டு வெடிப்புகள் மேலும் தொடரும்.." என்று ஒரு தீவிரவாத அமைப்பு வீடியோ செய்தி வெளியிட்டது.

முகத்தை கூட மறைக்காமல் வீடியோ வெளியிட்டு இருந்தவனை ஏற்கனவே தெரியும் எனக்கு. கிழக்கு மாநிலங்களில் சில துப்பாக்கி சூட்டுகளை நிகழ்த்தியுள்ளது இவர்களின் குழு. இதுவரை பதினைந்து பலிகள் வாங்கி உள்ள இந்த குழு ஆயிர கணக்கான மக்களை குண்டு வைத்துக் கொல்லும் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை.

மேலதிரிகளோடு நடந்த வீடியோ வழி கான்பரன்ஸ் காலில் என் சந்தேகத்தை சொன்னேன் நான். "இந்த வெடிகுண்டு மேட்டரை வச்சி பணம் பறிக்க பார்க்கறாங்க சார் இவங்க.. உண்மையான தீவிரவாதி வேற யாரோ.. நான் அவனை கண்டிப்பா கண்டுப்பிடிப்பேன்.." என்றேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN