காதல் கடன்காரா 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமி தனக்கு முத்தமிட்டவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். இவன் மனிதனா என்று யோசித்தாள்.

பிரிய மனமில்லாதவன் போல அவளின் இதழ்களின் மீது பதிந்திருந்த தன் உதடுகளை விலக்கினான். "ஸ்வீட்.." என்றான். அபிராமியின் நாக்கு கெட்ட வார்த்தையை பேச துடித்தது. அந்த அளவிற்கு அவன் மீது வெறுப்பு கொண்டிருந்தாள்.

"என்னை லவ் பண்றிங்களா.?" என்றாள். இந்த கேள்வியை கேட்கும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

இல்லையென தலையசைத்தவன் "இதோடு மூணாவது முறையா கேட்கற.. எதுக்காக கேட்கற.?" என்றான்.

அவளுக்கு தெரிந்து காதலிப்போர்தான் முத்தமிட்டுக் கொள்வார்கள். ஆனால் இவன் எதற்காய் முத்தம் தருகிறான் என்றே தெரியவில்லை. 'ரேப்பிஸ்டா இவன்.?' என்று தனக்குள் கேட்டாள்.

அன்று மாலையில் அவளை தங்களது காட்டிற்கு அழைத்துச் சென்றான் மூர்த்தி. "ஆமா எதுக்காக இதை பார்க்கணும்ன்னு சொன்ன.?" என்றான்.

"சும்மாதான்.." என்றவள் அந்த காட்டை கவனித்தாள். ஒன்று அல்லது ஒன்றரை ஏக்கர் இருக்கும். முழுதும் கருங்கல் பாறைகளால் நிரம்பி இருந்தது. "கல்லை ஏன் நீங்க விற்க கூடாது.?" என்றாள் அவனிடம்.

"ரோடு இல்லையே..அந்த பக்கம் இருப்பது என் பெரியப்பா காடு.. அவர் காட்டை பிரிச்சி விட்டுட்டு ரோட்டை தராம விட்டுட்டாரு. இந்த பக்க காட்டுக்காரங்க பைக் போக மட்டும்தான் ரோடு விட்டிருக்காங்க. எங்களால இந்த காட்டை யூஸ் பண்ண முடியாது.." என்றான்.

அபிராமி இடது வலது பக்க காடுகளை பார்த்தாள். அனைத்துமே பசுமையாக இருந்தது. இவர்கள் வந்தது ஒரு சோள காட்டின் வழி. அதுவும் பசுமையில்தான் செழித்திருந்தது. ஈஸ்வர் அவர்களின் காடு தோப்பாக இருந்தது. பாக்கு மரங்கள் வைத்திருந்தார்கள். அந்த தோப்புதான் மொத்த ஊருக்கும் காற்றை தருவது போல காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது அங்கே. மொத்த இடத்திலும் ஒரு கரும்புள்ளி போல இருந்தது அவள் நின்றிருந்த காடு.

இடது வலது பக்க காடுகளை அருகே சென்று நோட்டமிட்டாள். "இதோ இந்த பக்கத்து காடு கம்மியாதானே இருக்கு. கால் ஏக்கர்தான் இருக்கும். நீங்க இதை வாங்கினா மெயின் ரோட்டுக்கு போகலாமே.." என்றாள்.

"எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல அபிராமி. ஏகப்பட்ட கடன் இருக்கு எங்களுக்கு.. அதை அடைக்கவே பல நாட்கள் ஆகும். இந்த கருங்கல் பூமியை நம்பி காசு செலவு பண்ண மனம் வரல.. இந்த கருங்கல்லை உடைச்சி வித்தா சில லட்சம்தான் கிடைக்கும். ஆனா பக்கத்து காடு பல லட்சம்.." என்றான்.

"உங்ககிட்ட இருக்கற பூமியை நீங்க நம்பாத போது இந்த பூமி மட்டும் என்ன செய்யும். முயற்சி இருந்தா மாடி தோட்டத்துல கூட கோடீஸ்வரர் ஆகலாம். ஆனா இவ்வளவு இடத்தை வச்சிக்கிட்டு சும்மா இருக்கிங்க நீங்க.." என்றாள் கடுப்போடு. பணமுடையவர்களை பார்த்து எரிச்சலாகும் அதே சமயத்தில் அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு சிறு முயற்சியாவது எடுத்திருக்கலாம் இவர்கள் என்று கோபத்தோடு நினைத்தாள்.

"ரிஸ்க் எடுக்கற அளவுக்கு எங்க வீட்டு நிலமை இல்ல அபிராமி.." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். விஷம் அருந்தி ரிஸ்க் எடுக்கும் அளவிற்கு தைரியம் உள்ளவர்கள் தங்களின் நிலை உயர்த்த ரிஸ்க் எடுக்க மாட்டார்களா என்று எரிச்சலானாள் அவள்.

கார்த்திக்கின் எண்ணம் எந்த அளவிற்கு தவறு என்று அவனுக்கு நிரூபிக்க நினைத்தாள் அபிராமி. அதனால்தான் அவளே அந்த குடும்பத்திற்கு பதிலாக செயலில் இறங்கினாள்.

அன்று இரவில் அவளின் அருகே படுத்திருந்த கார்த்திக் அவளின் கழுத்தில் கை பதித்தான். தினமும் அணைத்தபடி அமைதியாக உறங்குபவன் இன்று புதிதாக தீண்ட ஆரம்பிக்கவும் இவன் வேறு எதற்கோ அடிப்போடுகிறான் என்று புரிந்துக் கொண்டு கோபமாக எழுந்து அமர்ந்தாள் அபிராமி.

"மரியாதையா தூங்கிடு.. இந்த கையை தொடுறது.. கழுத்தை தொடுறதுன்னு இருந்தா தாலியை கழட்டி எறிஞ்சிட்டு போயிடுவேன் நான்.." என்றாள் கோபத்தோடு.

கார்த்திக் வியந்துப் போய் எழுந்து அமர்ந்தான். "ஏன்.?" என்றான்.

"என் பொறுமைக்கும் லிமிட் இருக்கு கார்த்தி.. என் அண்ணன் இப்ப வெளியே இருக்கான்.. நான் கிளம்பினா உன்னால எதுவும் பண்ண முடியாது.." என்றாள்.

அவளை கண்கள் சாய்த்து பார்த்தவன் "உன் அண்ணன் என்னை அடிச்சி போட்டானே.. அந்த கேஸை நான் ரீ ஓபன் பண்ணுவேன்.." என்றான்.

"அப்படின்னா நான் மாமியார் கொடுமை, மச்சான் கொடுமைன்னு கேஸ் தருவேன். கட்டாய தாலி கட்டினான்னு சொன்னா நீ என்ன பப்பாவான்னு கேட்பாங்க.. ஆனா அதே புருசன் என் விருப்பம் இல்லாம என்னை தொட டிரை பண்றான்னு நான் கேஸ் தந்தா உன்னை கை காலை முறிப்பாங்க.." என்றாள் கடுப்போடு.

அவளை யோசனையோடு பார்த்தவன் "இப்ப என்ன சொல்ல வர.." என்றான்.

"என்னை தொடாதே.. என் லைப்பை பத்தி நான் பண்ணி வச்சிருந்த அத்தனை கற்பனையையும் உடைச்சிட்ட நீ.. தயவு செஞ்சி என்னை நிம்மதியாவாவது விடு.." என்றாள்.

கார்த்திக் உதட்டை பிதுக்கி விட்டு இந்த பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டான். அவனை உதைத்து கீழே உருட்டி தள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

அன்றைய இரவு நிம்மதியாக உறங்கினாள் அபிராமி.

மறுநாள் காலை நேரத்திலேயே இவர்களின் வீட்டிற்கு வந்தார் ஈஸ்வரின் அப்பா. "மேற்கு பக்க காட்டுல இரண்டு ஏக்கர் பிரிச்சி தரேன்.. அதை வச்சிக்கிட்டு இந்த கேஸை வாபஸ் வாங்கு.." என்றார் முருகனிடம்.

முருகன் மகன்களை பார்த்தார். 'விஷத்தை குடிச்சி செத்து பிழைச்சி வந்திருக்கேன் நான்.. வெறும் இரண்டு ஏக்கரா.?' என்று கோபம் கொண்ட கார்த்திக் "இதுவரை பிரிக்காத அத்தனை சொத்தையும் பிரிக்கணும்.. இதுக்கு முன்னாடி பிரிச்ச காடுகளையும் மறுபடியும் சமமா பிரிக்கணும்.. இல்லன்னா நாங்க கேஸை வாபஸ் வாங்க மாட்டோம்.." என்றான்.

அவனின் பெரியப்பா கோபத்தோடு அவனை பார்த்தார். "இத்தனை வருசமா நான் கட்டி காப்பாத்தி வச்சிருக்கேன்.." என்றார் வழக்கம் போல.

"என்னத்துக்கு நீங்க கட்டி காப்பாத்துறிங்க.? எங்க அப்பாவுக்கு பதினெட்டு வயசான உடனே எல்லாத்தையும் பிரிச்சி விட வேண்டியதுதானே. இல்லன்னா எங்க தாத்தா பெரியவரான போதே பிரிச்சி விட வேண்டியதுதானே.. இத்தனை வருசமா காட்டுல விளையறதை முழுசா நீங்கதானே அனுபவிக்கிறிங்க.?" என்று கோபத்தோடு கேட்டாள் புவனா.

"புவிம்மா நீ அமைதியா இரு.." என்றார் அப்பா.

"நீங்க சும்மா இருங்கப்பா.. கட்டி காப்பாத்தினோம்ன்னே இத்தனை வருசத்தை ஓட்டிட்டாரு இவரு.. அப்பவே தாத்தா காலத்துல பிரிக்காம போனதுதான் நம்ம தப்பு.." என்றான் மூர்த்தி.

"அப்ப உங்க தாத்தன் ஊமையா இருந்தான்.. அப்புறம் உங்க அப்பன் ஊமையா இருந்தான்.. நாங்க உருண்டு பெரண்டு எல்லாத்தையும் சரி பண்ணி வளர்ந்த உடனே இப்ப நீங்க வந்து பங்கு கேட்பிங்க.. அப்படிதானே.?" என்றார் பெரியப்பா.

அபிராமிக்கு தப்பு முழுக்க கார்த்திக் குடும்பத்தின் மீதுதான் என்று தோன்றியது. இரண்டு தலைமுறையாக கண்டுக் கொள்ளாத சொத்தை இப்போது கேட்டால் யார்தான் தருவார்கள். தம்பி மறந்து விட்டான், நாம் அனுபவிக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். கலி காலத்தில் பரதனை எதிர்பார்ப்பதை போல முட்டாள்தனம் எதுவுமில்லை என்று நினைத்தாள்.

"உங்களால சொத்தை பிரிக்க முடியாதுன்னா எங்களாலும் கேஸை வாபஸ் வாங்க முடியாது.." என்றான் கார்த்திக்.

பெரியப்பா எழுந்து நின்றார். "என் மகனை நான் வெளியே கொண்டு வந்துக்கிறேன்.." என்றார் வீராப்போடு.

"டேய் கார்த்திக்.. உன் திமிருக்கு நீ நல்லா அனுபவிப்படா.." என்று விட்டு வெளியே நடந்தார்.

'கண்டிப்பா..' என்றது அபிராமியின் மனம்.

ஈஸ்வரை வெளியே கொண்டு வர நிறைய வழியில் முயன்றார் அவனின் அப்பா. அந்த ஆடியோ ரெக்கார்டிங்கை பொய் என்று நிரூபிக்கவும், ஈஸ்வர் அந்த நேரத்தில் ஊரிலேயே இல்லை என்று நிரூபிக்கவும் நிறைய போராடினார்கள் வக்கீல்கள். அவர்களின் போராட்டமும் முழுதாக வீண் போகவில்லை. மூர்த்தி போலிஸாக இருந்தும் கூட அவனால் ஈஸ்வரை நிரந்தரமாக சிறையில் தள்ள இயலவில்லை. நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு சுலபமாக வெளி வந்து விட்டான் ஈஸ்வர்.

ஜாமினில் வெளி வந்தான் ஈஸ்வர். வழக்கை பல வருடங்களுக்கு இழுத்தடித்து கார்த்திக்கின் குடும்பத்தை கடனில் மூழ்க வைத்து கொல்ல முடிவெடுத்தார் ஈஸ்வரின் அப்பா.

அபிராமி தினம் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அதற்கும் தங்களது தூக்கம் கெடுகிறது என்று திட்டினார்கள் அனைவரும்.

"நான் வேணா கிளம்பிடட்டுமா.?" என்றாள் ஒருநாள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில். கார்த்திக்கும் அன்றேதான் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

"ஏன்.?" என்றான் கார்த்திக் குழப்பமாக.

"உனக்கு நான் உன் பக்கத்துல நிழல் போலவே இருக்கணும். உன் அம்மாவுக்கு வீட்டு வேலைகளை எல்லாத்தையும் செய்யணும் நான்.. ரூமை விட்டு வெளியே வந்தா உனக்கு குத்தம். ரூம்க்குள்ளயே இருந்தா உங்க அம்மாவுக்கு குத்தம்.. நான் என்னதான் செய்யட்டும்.?" என்றாள்.

முருகன் மனைவியை முறைத்தார். "அவ பொய் சொல்றா.." என்றாள் யமுனா.

"பொய்க்காரின்னு சொல்லாதிங்க.. நீங்கதான் அது.." என்றவளை முறைத்தான் கார்த்திக்.

தனது அறைக்கு வந்த பிறகு அபிராமியிடம் "பெரியவங்களுக்கு மரியாதை தரணும்ன்னு உங்க வீட்டுல சொல்லி தரலையா.?" என்றான்.

"அப்படின்னா நீ என்னை விடு.. வீட்டு வேலையை செய்ய எனக்கு டைம் இருந்தா நான் ஏன் பிரச்சனையில் மாட்டுறேன்.." என்றாள் கோபத்தோடு.

"தப்பு என் மேலங்கறியா.?" என்றவனிடம் ஆமென தலையசைத்தவள் "என்னை இந்த அறையிலேயே பூட்டி வைக்க ஆசைப்பட்டா உன் குடும்பத்தை வெளியே அனுப்பிடு.. இல்லன்னா என்னை வெளியே விடு.." என்றாள்.

கார்த்திக் "சரி.." என்றான்.

புரியாமல் பார்த்தவளிடம் "என்னமோ செய்.." என்றான். அன்றிலிருந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் அபிராமி. ஆரம்பத்தில் முறைத்தாள் யமுனா. பிறகு அவளையும் தன் மகளாக ஏற்றுக் கொண்டாள்.

கார்த்திக் குடும்பத்திற்கு ஈஸ்வர் குடும்பத்தின் மீது உள்ள வெறுப்பு அபிராமிக்கும் புரிந்தது.

"உங்க காடுகளை நான் கையாளலாமா.?" என்றாள் ஒருநாள் கார்த்திக்கிடம்.

"எதுக்கு.?" என்றவனிடம் "வீட்டுல இருக்க போரடிக்குது.." என்றாள்.

"அதுக்கு பதிலா உன்னை கொடுப்பியா.?" என்றான் அவன்.

அபிராமியின் முகம் வெறுப்பால் நிரம்பியது. கார்த்திக்கை அடியோடு வெறுத்தாள் அவள்.

"ஓகே.." என்றாள் மனமே இல்லாமல்.

யுகமாக காத்திருந்தவன் போல அவளின் அருகே வந்து அவளின் தோளை பற்றினான். சிலையாக நின்றிருந்தவளின் நெற்றியிலிருந்து முத்தத்தை ஆரம்பித்தான்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் புவனா. அவளின் வீட்டிலிருந்து தூரமாக இருந்த ஒரு கோவில் மண்டபத்தின் கீழே அமர்ந்திருந்த முத்தமிழை பார்த்தாள். அவர்களின் வீட்டையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன். கார்த்திக்கின் திருமண நாளில் பார்த்ததை விட இரண்டு சுற்றுகள் இளைத்திருந்தான். முகத்தில் தாடி வளர்ந்திருந்தது.

புவனா அவனின் அருகே சென்றாள்.

"ம்ம்.. ஹாய்.." என்ற புவனாவை வெற்று பார்வை பார்த்தான்.

"இங்கே‌ ஏன் உட்கார்ந்திருக்கிங்க.? வீட்டுக்கு வாங்க.." என்றாள்.

அமைதியாக எழுந்தவன் அருகே இருந்த தன் பைக்கில் ஏறி அமர்ந்தான். அவள் குழப்பமாக பார்த்திருந்த போதே அங்கிருந்து சென்று விட்டான். புவனாவிற்கு கஷ்டமாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN