குறிப்பேடு 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோமண சாமியார் சிவாவை ரகசிய சிரிப்போடு பார்த்தார்.

"நீங்க நல்லவர்தானே.. நீங்களாவது எங்களுக்கு உதவி செய்ங்க.." என்றார் முஸ்தபா.

"தாராளமா.." என்றவர் மேஜையின் மீதிருந்த கொய்யா பழம் ஒன்றை எடுத்து கடித்தார்.

"பல நூறு வருடங்கள் தாண்டிடுச்சி.. ஆனாலும் இளவரசர்கள் உயிரோடுதான் இருக்காங்க. அதுக்கு காரணம் இந்த பிரேத மாளிகைதான்.." என்றவர் தன் முதுகின் பின்னால் மறைத்து வைத்திருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அவர்களின் முன்னால் காட்டினார்.

"இதான் அந்த டைரி.. எங்களை இந்த இடத்துல மாட்டி விட்ட டைரி.." என்றான் சிவா.

"இந்த குறிப்பேட்டை நான்தான் உருவாக்கினேன்.." என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தார் சதாசிவம்.

"ஏன்.?" என்றார்.

"சிலருக்கு நினைவுப்படுத்த.." என்றவர் "இதை நீங்க பாதிதான் படிச்சிருப்பிங்க.. மீதியை படிக்க நினைச்சா என் பக்கத்துல வந்து படிங்க.." என்றார்.

சதாசிவமும் மற்ற இருவரும் தயக்கத்தோடு அவரருகே வந்தனர். "என்ன தொட்டபடி இதை பாருங்க.." என்றார்.

சுருங்கிய தோலோடு இருந்தவரை தொட்டனர் மூவரும்.

மனைவி இறந்த சோகத்தில் இருந்த கோமண சாமியார் மகளை சங்கீதவரனுக்கு தந்து விட்ட பிறகு பழி வாங்குவதற்கான யோசனைகளில் இறங்கினார். கடவுளை வணங்குவதை நிறுத்தினார். சாத்தான்களை வழிப்பட தொடங்கினார். அனாதை ஆன்மாக்களை தன் வசப்படுத்தினார். ஆன்மாக்களோடு பேசி நிறைய விசயங்களை தெரிந்துக் கொண்டார்.

பல வருடங்கள் கழித்து நாட்டுக்குள் வந்தார் அவர். வேல் விழியான் அவரை வரவேற்றார். முனிவர், தவசீலர் தன்னை மன்னித்திருப்பார் என்று நம்பினார். அவர் நினைத்தது போலவேதான் கோமண சாமியாரும் மன்னரின் நலனை விசாரித்தார். நாட்டில் நலனுக்காக பாடுபடுவதை போல காட்டிக் கொண்டார்.

உயிரை கொல்லும் விஷத்தை வேல்விழியானின் உணவில் கலந்தவர் இளவரசர்கள் மனதை கலைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களை தனி தனியே பிரித்து தனித்திருக்கையில் அவர்களை கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

அவர் நினைத்தது போலவே மன்னரும் விஷத்தால் கடுந்துயர் பட்டு இறந்து போனார். அவரின் உடலை அறுத்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இதயம் முதல் குடல் வரை அனைத்துமே வெந்து போயிருந்ததை. அவ்வளவு கொடூர விஷம் அது.

இளவரசர்களின் மனதில் நஞ்சை விதைத்தார் கோமண சாமியார். ஒருவனுக்கு கீழ் ஒருவன் அடிமையாக இருப்பதை காட்டிலும் தனி தனியே நாடு ஆண்டால் அனைவருமே ராஜாக்கள்தான் என்று புரிய வைத்தார். இந்த பிரிவுக்கு மரகதன் மட்டும் ஒத்து வரவில்லை. அதனால் மூத்த இளவரசர்கள் நால்வரும் நாட்டை நான்காக பிரித்துக் கொண்டார்கள்.

மகளின் மீது உயிராய் இருந்தார் கோமண சாமியார். தன்னை போல் அல்லாது அவளாவது கடவுளுக்காக சேவை செய்யட்டும் என்று நினைத்தார். அப்போதுதான் ஒருநாள் அமுதனோடு நெருங்கி பழகுவதை அறிந்தார். அவருக்கு சாந்தவி மீது கோபம் இல்லை. அமுதன்தான் அவளின் மனதை கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினார்.

அதே போலவே மரகதன் மீதும் ஆத்திரமாக இருந்தார் அவர். இவனுக்கு புத்தி புகட்டி விட்டு அவனிடம் செல்லலாம் என்று நினைத்திருந்தார்

சாந்தவி அமுதனை ஒருநாள் மாலை வேளையில் சந்திக்க போவது அறிந்து அவளுக்கும் முன்னால் அமுதனிடன் சென்றார் அவர். அமுதன் திரும்பிய அதே நேரத்தில் அவனின் நெஞ்சில் கத்தியை குத்தினார். அமுதன் நொடியில் நிகழ்ந்ததை மனதில் கூட பதிய வைக்காமல் இறந்து போனான் அப்போதே.

"என் மகள் கடவுளை விரும்புகிறாள். அவளுக்கு அந்த கடவுளை விட சிறந்த துணையாக யாரும் இருக்க முடியாது.." என்றார் இறந்தவனின் உடலை வெறித்து பார்த்து.

தன் இறப்பை முன்றாம் முறையாக அனுபவித்த சிவா அதிர்ச்சியோடு விலகி நின்றான்.

"நீதான் என்னை கொலை செஞ்சியா.?" என்றான் ஆத்திரத்தோடு. அவனை போலவே நின்றிருந்த சதாசிவம் சோகத்தோடு தலை கவிழ்ந்து நின்றிருந்தார்.

"கொலைகள் அல்ல.. அவை தண்டனைகள்.." என்றவர் அடுத்து நிகழ்ந்ததை அறிய ஆசை இல்லையா.?" என்றார்.

மூவரும் மீண்டும் அவரை நெருங்கி வந்து நின்று டைரியை பார்த்தனர். சிவா அவரை கொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அமுதன் இறந்த பழியை சாந்தவியின் மீது சாற்றி அவளை தன் அறையில் தனி சிறை வைத்தான் மரகதன்.

மரகதனை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார் கோமண சாமியார். ஆனால் அவரே எதிர்பாராத விதமாக சாந்தவி இறந்து போனாள். அது அவரின் கடைசி சொட்டு பொறுமையையும் துடைத்து எறிந்து விட்டது.

மனைவியை இழந்தது போலவே மகளையும் இழந்தது அவருக்கு கடும் வேதனையை தந்து விட்டது.

சாந்தவியின் இறப்பால் மரகதன் பித்து பிடித்து போனான்.

நான்கு இளவரசர்களையும் அழைத்த கோமண சாமியார் "உங்கள் தந்தை இறந்தது உங்களுக்கு பயத்தை தரவில்லையா.?" என்றார்.

குழப்பத்தோடு பார்த்த இளவரசர்களிடம் "ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் இறந்து போகாமல் இருக்க எனக்கு வழி தெரியும்.." என்றார்.

"என்ன வழி முனிவரே.?" என கேட்டான் மூத்த இளவரசன்.

"அதற்கு ஆயிரக்கணக்கான பிணங்கள் வேண்டும்.." என்றவரை அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

"பிணங்களால் கோட்டை கட்டி அந்த கோட்டைக்கு அந்த பிணங்களின் ஆன்மாவை காவல் வைத்தால் எந்த இறப்பும் உங்களை நெருங்காது.." என்றார் இவர்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. தந்தையின் இறப்பை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மரணம் கொடூரமானது என்ற எண்ணம் மனதில் பதிந்திருந்தது. மரணத்தை கண்டு பயந்திருந்தவர்களுக்கு மரணமில்லா வாழ்க்கை ஆசையை தந்தது.

"ஆனால் ஆயிர கணக்கான பிணங்களுக்கு நாங்கள் எங்கே போவோம் முனிவரே.?" என்றார்கள்.

"நீங்கள் நாட்டை நான்காய் பிரித்து ஆண்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் நாட்டில் போரை உண்டாக்கி ஆயிரக்கணக்கான பிணங்களையும் ஆன்மாக்களையும் சேகரிக்கலாம்.." என்றார் கோமண சாமியார்.

நான்காம் இளவரசனுக்கு என்னவோ உறுத்தியது. அண்ணன்களை அழைத்துக் கொண்டு தனியே சென்றான்.

"அவர் பொண்ணு சமீபத்தில்தான் இறந்து போனாள். இவர் நம்மை பழி வாங்க நினைக்கிறார்.." என்றான்.

முதலாமவன் மறுப்பாக தலையசைத்தான். "முனிவர் சொந்த பந்த பாசம் நேசம் துறந்தவர். இப்போது அவர் இந்த யோசனை சொல்ல காரணம் கூட நாடாளும் மன்னர்கள் மரணமடையாமல் இருக்க வேண்டும் என்றுதான்.." என்றான்.

அவனுக்கு இறப்பில்லாத வாழ்வின் மீது ஆசை வந்து விட்டது. அதற்காகதான் தம்பியின் மனதை மாற்றும்படி சொன்னான் அதை. மரணமில்லாத வாழ்வை தந்து எப்படி பழி வாங்க முடியும் என்று நினைத்தான் அவன்.

மாளிகை கட்ட சம்மதம் என்று கோமண சாமியாரிடம் வந்து சொன்னார்கள் இளவரசர்கள் நால்வரும்.

இளவரசர்களின் கத்திக்களை வாங்கிய இவர் ஆன்மாக்களின் நிழலை அதில் பூசினார்.

"இந்த கத்திகளால் நீங்கள் யாரை கொன்றாலும் அவர்களின் ஆன்மாக்கள் உங்களுக்கு அடிமை ஆகும்.. அவர்களின் பிணத்தை சேகரித்து நாம் மாளிகை கட்டிக் கொல்லலாம்.." என்றார்.

நான்கு இளவரசர்களும் ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்தனர். நாடு நான்காய் பிரிந்தபோதே வேதனையில் மூழ்கி விட்ட மக்களுக்கு இந்த போர் மன கஷ்டத்தை தந்து விட்டது. அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்கள். எப்படி அவர்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முடியும்.?

'போருக்கு வராதவர்களின் வீட்டு பெண்கள் சிறையில் தள்ளப்படுவார்கள்' என்று புது சட்டத்தை இயற்றினார்கள் நான்கு இளவரசர்களும்.

அதன் பிறகு அனைத்து ஆண்களும் கத்தி எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டார்கள்.

கோமண சாமியார் நாடு அழிவதை கண்டு சந்தோசம் கொண்டார். தன் மனைவி மகளை கொன்ற நாடு சிறுக சிறுக அழிவதை கண்டு ஆனந்தம் கொண்டார்.

போருக்கு வந்த வீரர்களும் எதிரில் நிற்கும் சொந்தங்களை கண்டு தயங்கினர். நான்கு நாட்கள் சண்டை நடந்தும் கூட ஒருவர் கூட இறக்கவில்லை.

வீரர்கள் குடிக்கும் தண்ணீரில் போதை செடியின் வேர்களை அரைத்து கலந்து விட்டார் கோமண சாமியார். அவர் நினைத்தது போலவே நடந்தது சண்டை. போதையில் இருந்த வீரர்கள் எதிரில் இருப்பது யாரென்று கூட உணராமல் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். எதிர் நாடே இல்லை. அனைவரும் தங்களின் நாட்டு வீரர்களையே குத்தி கொன்றார்கள்.

எதிர்ப்பார்த்தது நடந்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த இளவரசர்கள் தங்களின் வாட்களோடு களம் இறங்கினர். கண்ணில் பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். ஆன்மாக்கள் தங்களின் பின்னால் வருவதை நால்வருமே உணர்ந்தனர்.

நாட்டின் நிலவரம் உணர்ந்த பெண்கள் அதை நிறுத்த முயன்றனர். இளவரசர்களிடம் சென்று போரை நிறுத்த சொல்லி கெஞ்சினர்.

"நீங்கள் பயம் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. எங்களின் அந்தபுரத்தில் உங்கள் அனைவருக்கும் இடம் உண்டு.." என்றான் இரண்டாம் இளவரசன்.

நீதி கேட்டு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று உணர்ந்த பெண்கள் பக்கத்து நாட்டு மன்னனிடம் சென்று முறையிட இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் நாட்டின் எல்லையை கூட தாண்டவில்லை. ஏனெனில் வீரர்களின் குடி தண்ணீரில் போதை வேரை கலந்த கோமண சாமியார் இவர்கள் குடித்த தண்ணீரில் விஷ இலையையே அரைத்து கலந்து விட்டிருந்தார்.

அந்த நாடே அழிந்தது. குழந்தைகளும் பெண்களும் வீட்டில் இறந்து கிடந்தார்கள். வீரர்கள் அனைவரும் போர் களத்தில் இறந்து கிடந்தார்கள்.

பெண்கள் குழந்தைகளின் உடலை அஸ்திவாரத்தில் கொட்டி வீரர்களின் உடலை வைத்து மாளிகை எழுப்பப்பட்டது. அந்த மாளிகையை எழுப்பியது வீரர்களின் ஆன்மாக்கள்தான். அந்த ஆன்மாக்கள் எவ்வளவு அழுதன என்று கோமண சாமியாருக்கு மட்டும்தான் தெரியும். தன் மனைவி மக்கள் பிணத்தை தரையில் புதைத்து தன் பிணத்தையே எடுத்து சுவராய் கட்டின அந்த ஆன்மாக்கள். அவைகளின் கண்ணீர் அந்த மாளிகையின் சுவர்களிலும் தரையிலும் சிந்தியது.

தன் மனைவி மகள் இறந்த போது தான் என்ன வேதனை பட்டோமோ அதே வேதனையை அந்த மொத்த நாட்டு மக்களையும் பட வைத்தார் கோமண சாமியார்.

இந்த போரை பற்றியோ இந்த மாளிகையை பற்றியோ பக்கத்தில் இருந்த எந்த நாடுகளுக்கும் தெரியவே இல்லை. தூரத்தில் இருந்தது மற்ற நாடுகள். இந்த வழியில் பயணம் வந்த யாருக்குமே இங்கிருந்த வீடுகளோ மாளிகையோ பிணங்களோ பார்வைக்கு தெரியவில்லை. அத்தனையும் கோமண சாமியாரின் வேலை.

புது மாளிகைக்குள் புகுந்தனர் இளவரசர்கள் நால்வரும். அங்கே நடு உத்திரத்தில் தொங்கி கொண்டிருந்தான் மரகதன்.

"பித்து பிடித்து இறந்து விட்டான் இவன். அதனால்தான் உடலை மட்டும் கொண்டு வந்து தொங்க விட்டிருக்கின்றன மற்ற ஆன்மாக்கள்.." என்று விளக்கினார் கோமண சாமியார்.

இறந்த சகோதரனுக்காக வருத்தப்பட்டனர் நால்வரும். வெளி உலகிலிருந்து மறைக்கப்பட்ட அந்த மாளிகைக்குள் நேரம் காலம் செயல்படவில்லை. அது இந்த சகோதரர்களுக்கு புரியவில்லை. எப்போதெல்லாம் ஆன்மாக்கள் அந்த கோட்டையின் அனைத்து வாசல்கள் ஜன்னல்களை மூடுகின்றனவோ அப்போதே அந்த மாளிகை உறை நிலைக்கு சென்று விடுவதை உணர வில்லை அவர்கள். உறை நிலையில் அவர்கள் கண்ட கனவுகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். மாளிகைக்குள் தினம் ஒரு பெண்ணோடு சல்லாபிப்பதும் தங்களின் முன்னால் கை கட்டி நிற்கும் ஆன்மாக்களுக்கு கட்டளையிடுவதுமாக இருந்தது அவர்களின் கனவுகள்.

இருபது வருடங்களுக்கு ஒரு முறை அந்த மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டன. கனவுகளில் இருந்து கண் விழித்து ஆன்மாக்களை துணைக்கு அழைத்துக் கொண்டு இளவரசர்கள் நால்வரும் வெளியே சென்று உலாவி வந்தார்கள். இந்த சில நாட்கள்தான் மாளிகையின் சாபம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் உறைநிலையில் இருந்ததுதான் சாபம் என்று உணரவில்லை அவர்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN