காதல் கடன்காரா 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவில் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றின் கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்திருந்தாள் அபிராமி. வீட்டின் பின்பக்க சுவரில் பதித்திருந்த மஞ்சள் குண்டு பல்ப் அரை வெளிச்சத்தை தந்துக் கொண்டிருந்தது. காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. வானத்தின் கரு மேகங்கள் அழகாக இருந்தன. அபிராமி பெருமூச்சு விட்டாள். உடல் லேசாக வலித்தது. மனம் அதை விட அதிகமாக வலித்தது.

எத்தனை கனவுகள்.. எத்தனை ஆசைகள்.. எத்தனை எதிர்ப்பார்ப்புகள்.. அத்தனையையும் எவ்வளவு சுலபமாக உடைத்து விட்டான் இவன். அவன் உடைக்கவும் காரணம் தான்தான் என்று அபிராமிக்கு தெரியும்.

எதை அவளால் மீட்க முடியும்.? முதல் நொடியில் விழுந்ததுதான் மாபெரும் தவறு. விழுந்தும் எழ முடியாமல் போனால் முழுதாய் நின்று விளையாடி விட வேண்டும். ஊராரின் மத்தியில் சென்ற குடும்ப மானம், அவன் முதல் முறை தாலி கட்டுகையிலேயே உடைந்து விட்ட மனம், அண்ணன் தந்த அடிக்கும் தங்கையையே பழி வாங்க வேண்டும் என்ற கார்த்திக்கின் தர்மம். நினைக்க நினைக்க பற்றி எரிந்தது இதயம்.

மணி பதினொன்றை தாண்டி இருந்தது. பாத்ரூமிற்கு செல்ல எழுந்த வந்த புவனா இவளை கண்டதும் முதலில் பயந்து விட்டாள். பிறகு அது அபிராமிதான் என்று புரிந்து அருகே வந்தாள்.

"நைட் டைம்ல ஏன் இங்கே உட்கார்ந்திருக்க.? இது டேஞ்சர்.." என்றாள்.

"உன் அண்ணனை விடவா.?" கேலியாக கேட்டபடி கிணற்றின் கைப்பிடியில் இருந்து கீழே இறங்கினாள்.

புவனாவின் முகம் வாடி விட்டது அவள் சொன்னது கேட்டு.

"என் அண்ணன் உன்னை லவ் பண்றான்.." என்றாள் தயக்கமாக. தயங்கிதான் சொன்னாள். ஏனெனில் அந்த காதலில் அவளுக்கே நம்பிக்கை இல்லை.

"காதலா.? உன் அண்ணன் என் மனசை லவ் பண்ணல.. என் உடம்பைதான் லவ் பண்றான்.." என்றவளை முறைத்தாள் புவனா. ஆயிரம் ஆனாலும் கூட தன் அண்ணனை காமுகனாக எண்ண மனம் வரவில்லை அவளுக்கு.

"இவ்வளவு சீப்பா இருக்காத.. என் அண்ணன் உன் கழுத்துல கட்டாய தாலிதான் கட்டினான். ஆனா உன்னை ரொம்ப லவ் பண்றான்.." என்றவளை கிண்டலாக பார்த்த அபிராமி சிரித்தாள். சிரிப்பின் பின்னால் நொந்து போயிருந்த சோகம் இருந்தது.

"உனக்கு ஏன் நான் நிரூபிக்கணும்.? உன் அண்ணன் யோக்கியவான்.. போதுமா.?" என்றவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவளின் கையை பற்றினாள் புவனா. "உன் அண்ணனை பார்த்தேன் நான்.." என்றாள்.

தன் கையை விடுவித்துக் கொண்டவள் "ஓகோ.." என்று விட்டு அடுத்த அடியை எடுத்து வைத்து நடந்தாள்.

"அவரை பத்தி எதுவும் கேட்க மாட்டியா நீ.? அவர் உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காரு.." என்றவளை கோபத்தோடு திரும்பி பார்த்த அபிராமி "என் அண்ணன் பாசத்தை பத்தி நீ சொல்லாத.. அவனை பத்தியோ என் குடும்பத்தை பத்தியோ இந்த வீட்டுல இருக்கும் நீங்க யாரும் பேசாதிங்க. என் சொந்தத்தை நீங்க நினைச்சா கூட அது எங்களுக்கு பாவமா வந்து சேர்ந்துடும்ன்னு நினைக்கிறேன் நான்.." என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு சென்றாள்.

திடீரென்று ஏன் காளியானாள் என்று புவனாவிற்கு புரியவில்லை. அண்ணன் மீது இருக்கும் கோபத்தில் எல்லோரையும் வெறுக்கிறாள் என்று எண்ணினாள் அவள்.

அபிராமி அறைக்கு வந்தபோது அவள் எப்படி பார்த்துச் சென்றாலோ அதே மாதிரி உறங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவனை வெறுப்போடு பார்த்தாள். அவனுக்கு வலியில் மாபெரும் வலியை தர வேண்டும் போல இருந்தது.

காலை நேரம். ஹாலை ஒட்டி இருந்த மல்லிகை செடியிலிருந்த மலர்கள் காய்ந்து போய் ஜன்னல் வழி வீசிய காற்றோடு உள்ளே வந்து தரையை குப்பையாக்கிக் கொண்டிருந்தன.

ஜன்னலின் அருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த முத்தமிழ் அந்த செடியில் பூத்திருந்த இன்றைக்கான மலர்களை வெறித்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு அடுக்கு மல்லி வேணும்.. நேத்து சிந்து ஸ்கூலுக்கு வச்சிட்டு வந்தா.. எனக்கும் அதே மாதிரி பெரிய பூவா மல்லிகை வேணும்.." என்று பள்ளி பருவதில் அபிராமி ஒரு நாள் காலை நேரத்தில் சிணுங்கியதும் அன்றைய நாளே கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர்களில் தேடி திரிந்து கொண்டு வந்து குண்டு மல்லியையும் மைசூர் மல்லியையும் நட்டு வைத்தான் முத்தமிழ். பள்ளி முடிந்து வந்து பார்த்தவள் "சூப்பர் அண்ணா.." என்று இவனின் கழுத்தை கட்டிக் கொண்டு துள்ளினாள்.

அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளோடும் அபிராமியின் நினைவுகள் கலந்திருந்தது. நொடிகள் அனைத்தும் தங்கையின் நினைவே அவனுக்கு.

இருவருமே சிவில் இஞ்சினியர்கள். முத்தமிழ் எம்.இ முடித்திருந்தான். அபிராமி வரும் வருடத்தில் எம்.இ படிக்கலாம் என்று இருந்தாள். "அவ கரியர்ல நான் தலையிட மாட்டேன்.." என்று ஈஸ்வர் சொன்னதால்தான் திருமணத்திற்கு தேதி குறித்தார்கள் அபிராமியின் வீட்டில். ஆனால் இப்போது கார்த்திக்கால் தன் தங்கையின் படிப்பும் கெட்டு வாழ்க்கையும் கெட்டுப் போனதே என்று நினைத்த முத்தமிழ் அமைதியாக அமர்ந்திருக்க பிடிக்கவே இல்லை.

தங்கையின் கடிதத்தை எத்தனை ஆயிரம் முறை படித்தான் என்றே நினைவில்லை. அந்த கடிதத்தின் தாள் இவனின் கை பட்டே நிறம் மாறி விட்டது. 'அவனை விரும்புவதாக ஏன் சொன்னாள்?' என்று பல முறை நினைத்து பார்த்தான். தனது விடுதலைக்காக அவள் தன்னையே தியாகம் செய்துக் கொண்டாளா என்று யோசித்தான். தங்கை சிறிது பயந்தவள் எனினும் கூட அவளின் குணாதிசியம் என்னவென்று அறிந்திருந்தவனுக்கு அவளை எண்ணி அவ்வளவாக பயம் இல்லைதான். ஆனால் இந்த பிரிவு, அவள் படும் துயரங்களை நினைத்து கவலையாக இருந்தது.

கார்த்திக்கை நண்பனாக நினைத்ததற்காக தன்னையே திட்டிக் கொண்டான். நட்பென்று விஷ பாம்பை நம்பியிருந்தது தன் தவறே என்று புரிந்துக் கொண்டான்.

கார்த்திக் நாற்காலி ஒன்றில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ஓரக்கண்ணால் அபிராமியைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பளம் செய்வது எப்படி என்று யமுனா அவளுக்கு சொல்லித் தந்துக் கொண்டிருந்தாள்.

"நான் ஏதாவது உதவி செய்யட்டுமா.?" என்றான் கார்த்திக்.

"வேணாம் கார்த்தி.. நான் செஞ்சி தரேன். சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு.." என்றாள் அபிராமி அப்பளத்தை திரட்டிக் கொண்டு.

முதல் முறையாக சாதாரண உரையாடல். கார்த்திக்கிற்கு வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் பிடித்திருந்தது.

அபிராமி புன்னகைக்க ஆரம்பித்தாள். அதுவும் கார்த்திக்கை பார்த்து. புன்னகையெனும் ஆயுதத்தின் சக்தி என்னவென்று அவளுக்கு தெரியும்.

கார்த்திக்கிற்கு அரை கரண்டி சாதம் அதிகம் பரிமாறினாள். முன்பெல்லாம் குளியலறைக்கு மூர்த்திதான் தம்பியை அழைத்துச் செல்வான். இப்போது அபிராமியே அனைத்து பணிவிடைகளையும் செய்ய ஆரம்பித்தாள். அவனின் நடை சரியாக வேண்டுமென்று அவன் நடைப்பயண பயிற்சி செல்லுகையில் எல்லாம் இவளும் துணைக்கு சென்றாள். அவன் கொஞ்சமாக சாய்ந்தாலும் ஓடிப் போய் தாங்கி பிடித்தாள். "பார்த்து நட.." என்று கடிந்துக் கொண்டாள்.

அவன் தந்த முத்தங்களை விட இவள் அதிகம் தர ஆரம்பித்தாள்.

அதிகாலை குளிரில் வாசல் பெருக்க செல்கையில் அவனின் ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

அவனின் அடிப்பட்ட காலுக்கு தேய்க்க சொல்லி எண்ணெயை தந்திருந்தார் ஒரு சித்த மருத்துவர். அதை அவனின் காலுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் அபிராமி.

"நீ என்னை தொடும் ஒவ்வொரு முறையும் ஜிவ்வுன்னு இருக்கு.." என்றான் அவன் தன் போனை நோண்டியபடி.

அபிராமி அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள். அவனின் காலுக்கு எண்ணையை தேய்த்து முடித்தவள் பாட்டிலை கொண்டுச் சென்று பத்திரப்படுத்தி விட்டு வந்தாள். அவனின் தோளில் தலை வைத்து சாய்ந்தாள். அவன் போனில் பார்த்துக் கொண்டிருந்ததை இவளும் பார்க்க ஆரம்பித்தாள். ஏதோ ஒரு கவர்ச்சி நடிகையின் சமூக வலைத்தள பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் புகைப்படங்களுக்கு ஹார்டினை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அதை கண்டதும் அபிராமி முகம் வாடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளின் விலகல் வெறுமையாக இருந்தது கார்த்திக்கிற்கு. திரும்பி பார்த்தான். "ஏன் அபிராமி.?" என்றான்.

"என்னை விட அவ அழகா இருக்கா.." என்றாள் ஒரு மாதிரி குரலில்.

குழம்பியவன் சந்தேகத்தோடு அவளை தன் பக்கம் திருப்பினான். கலங்கியிருந்தது விழிகள் இரண்டும்.

"ஏன் அழற.?" என்றான். அவளின் கண்ணீர் கஷ்டத்தை தந்தது.

"அவ அழகா இருக்கா.." என்றாள் மீண்டும் அபிராமி. கலங்கிய விழிகளில் இருந்து இரு துளி கண்ணீர் உருண்டு வந்தது. தன்னை மறந்து அவளை அணைத்துக் கொண்டான் கார்த்திக்.

"சாரி.." என்றான் வருத்தமாக. அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டான். இறுக்கமாக இருந்தது அவனது அணைப்பு. அவனின் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் லேசாக விம்மினாள். அப்படியே உறங்கிப் போனாள்.

வாரங்கள் கடந்தது. கார்த்திக்கின் கால்கள் ஓரளவிற்கு சரியாகி விட்டது. பைக் ஓட்டினான். ஓடுவதில் மட்டும் சிறு சிரமம் இருந்தது. அதிக படிகளை ஏறினால் அடிபட்ட கால் வலித்தது.

அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் பைனான்ஸ் டிபார்மெண்டில் பணி. நிறுவனத்தை நடத்தியவர் முருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால்தான் இத்தனை மாத விடுமுறைக்கு பிறகும் கார்த்திக்கை வேலைக்கு வர அனுமதித்திருந்தார்.

அந்த வருடம் காடுகளில் அறுப்பு வேலை முடிந்ததும் கல் உடைப்போரை கருங்கல் காட்டுக்கு வர சொன்னாள் அபிராமி. அந்த இடத்தில் இருக்கும் கற்களை என்ன சைஸிற்கு வேண்டுமானாலும் அவர்கள் உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். அவர்களும் ஐந்தாறு இடங்களில் ஆழ துளையிட்டுப் பார்த்துவிட்டு கொஞ்சம் பணத்தை அட்வான்ஸாக தந்தார்கள். லாரிகள், கிரேன்கள் வந்துச் செல்ல சுற்றி இருந்த காடுகளை பயன்படுத்திக் கொள்ள அவர்களிடம் ஏற்கனவே கேட்டு வைத்திருந்தாள். "அறுப்பு முடிஞ்ச காட்டுல வண்டி போனா என்னம்மா.?" என்று விட்டார்கள் மூன்று பக்கத்து வயல்காரர்களுமே.

அதே போல் கருங்கல் காடாகவே இருந்த இன்னொரு இடத்தையும் கல் உடைப்போருக்கு தர நினைத்தாள். ஆனால் அது ஒரு அடியும் இரு அடியுமாக மட்டும் உள்ள குண்டு கற்கள் என்று பரிசோதித்து விட்டு சொன்னார்கள் கல்லை வாங்க வந்தவர்கள். அவற்றை தோண்டி எடுத்து வயலின் ஒரு ஓரத்தில் குவிக்க சொல்லி ஜெசிபிகாரர் ஒருவரிடம் சொன்னாள் அபிராமி.

கல்லை வாங்குபவன் தந்த பணத்தை கொண்டு வந்து ''பரம்பரை வயலில் இருந்து வந்த முதல் பணம்'' என்று சொல்லி யமுனாவிடம் தந்தாள் அபிராமி.

"உனக்கு சுத்தி இருக்கற காட்டுக்காரங்களை பத்தி தெரியல.. அவங்க அரை தூத்தல் வந்தாலும் காட்டை ஓட்டி எதையாவது விதைச்சி விட்டுடுவாங்க.." என்றான் மூர்த்தி.

"அப்ப பார்த்துக்கலாம்.." என்றாள் அபிராமி.

"கல்லு இருபதடிக்கு இருக்குன்னு சொல்ற.. அப்புறம் எப்படி விவசாயம் செய்ய முடியும். அதுக்கும் கீழே செட்டான மண்ணுதான் இருக்கும்.." என்றார் முருகன்.

விவசாயத்திற்கு உதவவில்லை என்றாலும் மழை நீரை சேகரிக்கவாவது உதவும் அந்த இடம். அந்த இடத்தை வீண் என்று நினைக்க முடியவில்லை அபிராமியால்.

பாறைகள் தோட்டா வைத்து தகர்க்கப்பட்டது. ஆட்கள் விடிய விடிய மெஷினை வைத்து கற்களை அறுத்தார்கள். லாரி லாரியாக கற்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. அரை தூறல் விழுந்தாலும் பயந்தாள் அபிராமி. ஆனால் மழை முழுதாய் வரும் முன்னே கல்லை அறுக்கும் கம்பெனிக்காரர் முதல் தவணை தொகையை தந்து விட்டார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN