காதல் கடன்காரா 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல் விற்றதில் வந்த முதல் தவணை தொகையை வீட்டில் காட்டினாள் அபிராமி.

"இந்த காசை வச்சி பக்கத்து காட்டை வாங்க முடியுமா.?" கேலியாக கேட்டான் மூர்த்தி.

பணத்தில் பாதியை எடுத்துக் காட்டிய அபிராமி "இது போதும்.." என்றாள்.

கார்த்திக் குழப்பமாக பார்த்தான்.

"பக்கத்து காடு நமக்கு எதுக்கு.? நமக்கு தேவை ரோடுதானே.? பதினைஞ்சி அடி ரோட்டை பக்கத்து காட்டுக்காரங்க நிலத்து ஓரமா கேட்டிருக்கேன். அவங்களும் தரேன்னு சொல்லிட்டாங்க.." என்றாள் அபிராமி.

"ஆனா நாங்க எத்தனையோ முறை கேட்டும் தர மாட்டேன்னு சொன்னாங்களேம்மா.." முருகன் குழப்பத்தோடு சொன்னார்.

"நான் கேட்டேன், தந்தாங்க மாமா.." என்றவள் தன்னை விசித்திரமாக பார்த்தவர்களின் பார்வையை கண்டுக் கொள்ளவில்லை.

"என் குடும்பத்து மேல உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை.?" தனியாக இருந்த வேளையில் சந்தேகத்தோடு கேட்டான் கார்த்திக்.

அபிராமி தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள்.

"உங்க வீட்டு நிலமை சீராகும் வரை நான் உன் தங்கை துணியைதானே ஓசி வாங்கி போட்டாகணும்.? அதுக்காகவாவது இந்த வீட்டு நிலமை உயர்ந்தாகணும் இல்ல.?" என்றாள்.

கார்த்திக் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். சீமாட்டியாக வாழ்ந்தவள் இப்போது கறுத்து போன கவரிங் கம்மலோடும், தன் தங்கையின் பழைய தாவணியோடும் இருப்பது லேசாக உறுத்தியது. இதே முன்பாக இருந்திருந்தால் 'பணக்கார திமிர்.. அதனால்தான் எங்களை இளக்காரமாக பார்க்கிறாய்..' என்று திட்டியிருப்பான். இப்போதோ அவனின் நெஞ்சின் நேசம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை தட்டி முளைப்பு விட்டிருந்தது.

அடுத்த நாள் வேலை முடிந்து வருகையில் நான்கு புடவைகள் எடுத்து வந்தான். ஒரு புடவை இருநூறு என்று வாங்கி வந்திருந்தான்.

புடவை கவரை அபிராமியிடம் தந்தான். புடவைகளை பார்த்தவள் "தேங்க்ஸ்.." என்றாள்.

புடவைகளில் ஒன்றை எடுத்து தோளின் மீது போட்டுக் கொண்டாள். "இந்த கலர் எனக்கு நல்லா இருக்கா.?" என்றாள் அவனிடம்.

"சூப்பர்.." என்று விரல்களில் முத்திரை காட்டினான்.

"ஜாக்கெட் தைக்கணும் இதுக்கு.." என்றாள்.

முன்னூறு ரூபாயை எடுத்து தந்தவன் "இனி உனக்கு ஏதாவது வேணும்ன்னா தயங்காம என்னை கேளு.." என்றான்.

அபிராமி புன்னகையோடு சரியென்று தலையசைத்தாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திக்.

கல் விற்றதின் இரண்டாம் தவணை வந்தது. பெய்த மழைக்கு சுற்றியிருந்தோர் காடு விதைத்தார்கள். அபிராமியும் மூன்றாவது இரண்டாவது காடுகளை டிராக்டர் விட்டு உழுது விதைத்தாள்.

"எங்க காட்டு மேல் உனக்கு ரொம்ப அக்கறை அபிராமி.. ஆனா இதெல்லாம் என்ன வருமானத்தை தந்துட போகுது.? நீ மூணு மாசம் உழைக்கிறதுக்கு பதிலா நான் அதை ஒரு மாசத்துலயே சம்பளமா சம்பாதிச்சி கொண்டு வந்துட போறேன்.." என்றான் கார்த்திக்.

"இருக்கட்டும் கார்த்திக். வெட்டியா இருக்கற என்னால ஒரு வருமானம்.. அதுவும் இல்லாம அந்த கல் வித்த காசு கடன் அடைக்க உதவுச்சி இல்லையா.?" என்றாள்.

தன் சொத்தை மதிப்பவன் அதன் வருமானம் ஒரு ரூபாய்தானே என்று பார்க்க மாட்டான். அதற்கு பதிலாய் சொத்தின் மதிப்பிற்கு கிடைக்கும் கொசுறு தொகையாகதான் அதை பார்ப்பான்.

அபிராமிக்கு கார்த்திக் வீட்டு ஆட்களை சுத்தமாக பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். சின்ன சின்ன முடிவுகளை கூட எடுக்க தயங்கினார்கள். இவர்களின் அருகே தனது நேர்மறை எண்ணமும் அழிந்து விடுமோ என்று பயந்தாள் அவள்.

வயலில் கணுக்கால் உயரத்திற்கு வளர்ந்திருந்தன வரகு பயிர்கள். அழிந்துக் கொண்டிருக்கும் தானியங்களை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாள் அபிராமி.

வயலின் ஒரு ஓரத்தில் குவிந்து கிடந்தது குண்டு குண்டான பாறைகள். இரண்டாய் நான்காய் உடைத்தால் விற்று விடலாம். இந்த முறை விளைச்சல் முடிந்ததும் அதை உடைத்து விற்று விடலாம் என்று நினைத்தாள்.

பச்சை பசேலென இருந்த பயிர்களை கரையின் ஓரத்தில் நின்று ரசித்து பார்த்தாள். இளம் பயிரின் வாசம் நுரையீரலில் நிரம்பியது.

வெகுநேரம் அந்த வயலை பார்த்துக் கொண்டிருந்தவள் வீட்டிற்கு திரும்பலாம் என நினைத்து திரும்பி நடந்தாள்.

தார்சாலையின் இருபுறமும் பச்சை வயல்கள். மேற்கிலிருந்த தூரத்து மலையின் முகட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது மாலை சூரியன். சில்லென்று வீசிய காற்றுக்கு முந்தானை பறந்தது. முடிந்திருந்த கூந்தலில் இருந்து தப்பிய சில கூந்தல் முடிகளும் பறந்தது.

சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அது வயல்காடுகளோடு ஒட்டிய சாலை. அதனால் வாகனங்கள் அதிகம் செல்லாது. ஆனால் தூரத்தில் மரத்தடியில் ஒரு பைக் நின்றுக் கொண்டிருந்தது.

யாரோ என்று முதல் நொடி நினைத்த அபிராமி அடுத்த நொடியே திகைத்து போனாள். சைட் ஸ்டேன்ட் போட்டு நிறுத்தியிருந்த பைக்கின் மீது சாய்ந்தபடி நின்றுக் கொண்டிருந்தான் முத்தமிழ்.

அபிராமியின் நடையின் வேகம் குறைந்தது. மெதுவாய் நடந்து அண்ணனை நெருங்கினாள். வயல் பார்த்து நின்றிருந்தவன் பெருமூச்சோடு இவள் பக்கம் திரும்பினான்.

அவளின் அழகிற்கு சிறிதும் ஒட்டாத அந்த பாலியஸ்டர் புடவையும், கறுத்து போன கம்மலும் அவனுக்கு தந்த வருத்தத்தை விட அவளின் பொலிவிழந்த முகம் அதிக கவலையை தந்தது. அவளின்‌ உதடுகள் சிரிப்பை மறந்து விட்டது போல இருந்தது. அவளின் அழகே சிதைந்து போனது போல இருந்தது. கவலையில் உடல் கரைந்து விட்டவள் போல காணப்பட்டாள்.

"சாரி.." என்றான் அவளை பார்த்து.

"ஏன்.?" என்றவளுக்கு இதயம் இரு மடங்கு வேகத்தோடு துடித்தது. தவிப்பாக இருந்தது அவனை பார்க்கையில்.

"உன் பேச்சை மீறி அவனை அன்னைக்கு நான் அடிச்சிட்டேன். என் தப்புதான். அதனால்தான் இன்னைக்கு உனக்கு இந்த நிலை.." என்றான்.

இல்லையென தலையசைத்தவள் "அவனுக்கு நான் வேணும்.. அதுக்கு ஒரு காரணம் நீ அடிச்சது.. நீ அடிக்கலன்னாலும் அவன் வேறு எதையாவது பிளான் பண்ணி இருப்பான்.. அதுவும் இல்லாம உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அவனை அடிச்சி கொன்னிருப்பேன். தங்கச்சியை கடத்தி போனா யார்தான் அடிக்க மாட்டாங்க.?" என்றாள்.

காற்றின் காரணமாக மரத்திலிருந்து விழுந்த இலை ஒன்று அபிராமியின் தலையில் விழுந்தது. அந்த இலையை எடுத்து கீழே எறிந்தவன் "வந்துடு.." என்றான்.

"இல்ல.. விதிப்படி என்னவோ நடக்கட்டும்.. நீ இது எதையும் நினைச்சி பீல் பண்ணாத‌‌.." என்றாள். அவளை சந்தேகமாக பார்த்தான் முத்தமிழ். மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டான்.

"உன் இஷ்டம்.." என்றான்.

"ஏதாவது உதவி வேணும்ன்னா கேளு.." என்றவன் பைக்கில் ஏற திரும்பினான்.

அபிராமி அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள். குழப்பத்தோடு திரும்பியவனின் அருகே சென்றவள் அவனின் நெஞ்சில் தலை சாய்த்தபடி அவனை அணைத்துக் கொண்டாள். அழுகையாக வந்தது. ஆனால் ஒரு துளி கண்ணீரை கூட சிந்தவில்லை.

தான் உடைந்து விழுவதை போலிருந்தது முத்தமிழுக்கு. தன் செல்ல சிங்கார பூங்கொடியை இப்படி சாலையில் அணைத்து அன்பை வெளிக்காட்ட வேண்டி வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவன்.

அவளின் தோளோடு அணைத்தவன் "ஐ மிஸ் யூ.." என்றான்.

"சாரி அண்ணா.." என்றாள் உடைந்த குரலில்.

"இல்ல.. நீ எது செஞ்சாலும் கரெக்டாதான் இருக்கும்.. நீ ஏன் சாரி கேட்கற.?" என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

முன்பு ரோசாத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட கண்ணீர் இப்போது பாசத்தால் கலங்கியது அபிராமிக்கு.

அவனை விட்டு விலகி நின்றாள். கண்களை துடைத்துக் கொண்டாள். முத்தமிழ் அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு பைக்கில் ஏறி கிளம்பினான்.

பைக் பார்வையை விட்டு மறையும் வரை அதே இடத்தில் நின்றிருந்தாள் அபிராமி.

அவள் வீட்டிற்கு வந்தபோது கார்த்திக் வேலை முடிந்து வந்திருந்தான்.

"எங்கே போன?" என்றான் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி.

யமுனா வீட்டுக்குள்ளிருந்து எட்டி பார்த்து மகனை முறைத்தாள். "அதுதான் அவ வயலுக்கு போயிருக்கான்னு முன்னாடியே சொன்னேனேடா.." என்றாள்.

"வயலுக்கு போய் ரொம்ப நேரம். ஏன் லேட்டு.?" என்றான்.

ஹாலில் அமர்ந்து கல்லூரி பாடம் எழுதிக் கொண்டிருந்த புவனாவிற்கு அண்ணன் மீது கோபமாக வந்தது. எதற்காக இப்படி அவளை இம்சிக்கிறான் என்று நினைத்தாள்.

"என் அண்ணனை வழியில பார்த்தேன்.. அவனோடு பேசிட்டு வர கொஞ்சம் லேட்டாகிட்டுச்சி.." என்று கலங்கிய கண்களும், அழுகை குரலுமாக சொன்னவள் முகத்தை திருப்பி கண்களை துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

யமுனா மருமகளை வருத்தமாக பார்த்தாள். "அவளை அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டி போய்ட்டு வாடா.." என்றாள்.

கார்த்திக் எழுந்து தன் அறைக்கு வந்தான். அபிராமி ஒரு மூலையில் நின்றபடி கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் கண்ணீரை தடுக்க முயன்றாள். ஆனாலும் கன்னம் தாண்டி கோடு போட்டது கண்ணீர்.

"உன் வீட்டை ரொம்ப மிஸ் பண்றியா.?" என்றான் கார்த்திக்.

இல்லையென தலையசைத்தாள் அபிராமி.

தன் மனநிலையை தன்னிடம் காட்டாமல் மறைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் "நாளைக்கு உங்க வீட்டுக்கு போகலாம்.." என்றான்.

அபிராமி ஆச்சரியத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். "இல்ல வேணாம்.. அவங்க உன்னையும் இந்த வீட்டையும் சீப்பா பார்ப்பாங்க.. அவங்க வீட்டுக்கு நான் வரல.." என்றாள்.

கார்த்திக் அவள் சொன்னதை யோசித்து பார்த்தான். உண்மைதான். பணம் இல்லாதவன் என்றாலும் முத்தமிழ் வேண்டுமானால் நண்பனாய் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவளின் தாய் தந்தை தாத்தா பாட்டி இவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே.!

"அவங்க அளவுக்கு அந்தஸ்துல உயரும் வரை நாம அவங்க வீட்டுக்கு போக வேணாம் கார்த்திக்.." என்றாள் தரை பார்த்து.

அவளின் இச்சொல் உண்மையிலேயே அவனின் நெஞ்சை தொட்டு விட்டது எனலாம். இதுவரை இருந்த சிறு சிறு தயக்கம் கூட முழுதாய் மறைந்து விட்டது இப்போது. அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "சரி.." என்றான்.

கல் விற்ற பணம் மூன்றாம் நான்காம் தவணை வந்தது. முருகன் கடனில் பாதியை கட்டி விட்டார். இனி வட்டி பாதி கட்ட தேவையில்லை என்று நினைத்து சந்தோசம் கொண்டார்.

அன்று பார்த்த அதே கோவில் மண்டபத்தில் இன்றும் முத்தமிழை பார்த்தாள் புவனா. அவனருகே சென்று அமர்ந்தாள்.

"உங்களுக்கு என் அண்ணன் மேல கோபம்ன்னு தெரியும்.. ஆனா அவன் அபிராமியை ரொம்ப லவ் பண்றான்.." என்றாள்.

முத்தமிழ் அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

"ஒரு டவுட் கேட்கட்டுமா.?" என்றாள் சிறிது நேரம் கழித்து.

முத்தமிழ் என்னவெனும் விதமாக திரும்பி பார்த்தான்.

"ஏன் நீங்க எங்க அண்ணனோட வழியை வச்சே அவனை பழி வாங்கல.. நீங்க நினைச்சிருந்தா என்னை கடத்தி வச்சிட்டு கூட அபிராமியை திருப்பி கூட்டி போயிருக்கலாமே.!" என்றாள்.

முத்தமிழ் எச்சில் விழுங்கிய படி தூரத்தில் இருந்த புவனாவின் வீட்டை பார்த்தான்.

"எனக்கு நேர்மைன்னா என்னன்னு தெரியும். நான் பழி வாங்க ஆசைப்பட்டா உங்க அண்ணனைதான் மீண்டும் அடிப்பேன்.. அவன் வீட்டு பெண்களை பணய கைதியா பிடிக்க மாட்டேன்.." என்றான்.

அவனை பிடித்திருந்தது புவனாவிற்கு. முன்பை விட அதிகம் பிடித்திருந்தது. பத்து நிமிடங்கள் பொறுத்திருந்தவள் "நான் உங்களை லவ் பண்றேன்.." என்றாள்.

அவளின் முகம் பார்த்தவன் "சாரி.. என்னால ஏத்துக்க முடியாது.. உன் அண்ணனை எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்காது. உன்னை நான் லவ் பண்ணா உன் வாழ்க்கைதான் வீணாகும். உன் லைப்பை அழிக்க நினைக்கல நான்.. என்னை விட்டுடு.." என்றவன் எழுந்து அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN