குறிப்பேடு 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த மாளிகை எப்போதெல்லாம் உறை நிலையிலிருந்து விலகுகிறதோ அப்போதெல்லாம் இயற்கை காற்று பட்டு பிணங்கள் உருவிழக்க ஆரம்பித்தன. அதன் நாற்றத்தை கூட இளவரசர்களால் அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களின் அறிவை அந்த அளவிற்கு மயக்கி வைத்திருந்தார் கோமண சாமியார்.

சிவா நகர்ந்து நின்றான். கோமண சாமியாரை குழப்பத்தோடு பார்த்தான்.

"ஆனா ஏன்.?" என்றான்.

கோமண சாமியார் அந்த அறையில் நிரம்பிக் கிடக்கும் பூக்களை பார்த்தார்.

"இவங்களை இத்தனை வருசமா உறை நிலையில் வச்சிருக்கேன். ஏனா சாந்தவி கையாலேயே இவங்க எல்லோரையும் கொல்லதான்.." என்றார்.

"அப்படின்னா யாழினிதான் சாந்தவியா.?" அதிர்ச்சியோடு கேட்டார் சதாசிவம்.

கண்கட்டி வித்தை உண்மையாகுவது கண்டு அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

"ஆமா.. சாந்தவியின் மறுபிறப்புக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் நான்.." என்றார் அவர்.

"ஆனா ஏன்.?" என்ற சிவாவிற்கு உண்மையிலேயே இதன் காரணம் புரியவில்லை.

"அவதான் கொல்லணும் இவங்களை.. இவங்க எல்லோரும் சாத்தான்கள்.. சாகடிக்கப்பட வேண்டியவர்கள்.. சாந்தவியின் கையால் இறந்தால்தான் சாந்தவிக்கு நிம்மதி கிடைக்கும். இத்தனை வருடங்களாக காத்திருந்த எனக்கும் நிம்மதி கிடைக்கும்.." என்றார்.

"அவளோட சாவுக்கு காரணமான எல்லோரும் சாகணும்.. அதுவும் அவ கையாலயே.." என்றவர் எதிரே இருந்த சுவரை நோக்கி நடந்தார்.

அந்த சுவரில் கை பதித்து எதையோ உள்ளே இழுத்தார். கதவு ஒன்று திறந்தது. "வாங்க போகலாம்.." என்றார் இவர்களை திரும்பி பார்த்து.

சதாசிவமும் மற்ற இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

"இவரை நம்பி போக வேணாம்.." என்றான் சிவா.

"ஆனா இந்த ரூமை விட்டு போய்தான் ஆகணும் நாம.. மறுபடியும் பழைய பிணங்கள் வந்துட்டா என்ன செய்றது.?" என கேட்ட சதாசிவம் முன்னால் நடந்தார். முஸ்தபாவும் சிவாவும் பின்னால் நடந்தார்கள்.

கூடத்தின் நடுவே இளவரசர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

"மகாராணியே வந்து என் அருகே அமரு.." என்றான் தினேஷ் ஒரு அலங்கார நாற்காலியில் அமர்ந்தபடி.

யாழினி நடுங்கியபடி தன் தந்தையை பார்த்தாள். "இங்கிருந்து தப்பிப்போமா.?" என்றாள் கவலையோடு.

"திருமணம் கோலாகலமாக நடக்கிறதா.?" என கேட்டபடி வந்த கோமண சாமியாரை பார்த்த இளவரசர்கள் தலைவணங்கி வணக்கத்தை தெரிவித்தனர்.

"உங்களது அருளாசி இருந்தால்தான் திருமணம் நல்லபடியாய் நடக்கும் குருவே.." என்றார்கள் அவர்கள்.

"நடக்கட்டும் நடக்கட்டும்.." என்றவர் கேலி சிரிப்போடு முன்னால் நடந்தார்.

"சாந்தவி.." என்றார் அழுத்தமாக.

யாழினி அவரை பார்த்தாள். "என் அருகே வா மகளே.." என்றார் அவர்.

யாழினிக்கு குழப்பமாக இருந்தது.

"அவர்தான் உன் தந்தை சாந்தவி.." என்றான் இரண்டாம் இளவரசன்.

"உன்னை இவர்கள் கொன்றார்கள்.. அதனால்தான் இத்தனையும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. உனக்காகவே அனைத்தும். உன்னாலேயே அனைத்தும்.." என்றவர் கண்களை மூடி கையை அசைத்தார். அந்த மாளிகை உறை நிலைக்கு சென்றது.

நிகழ்கால மனிதர்கள் மட்டுமே நினைவோடு இருந்தார்கள். இளவரசர்கள் நால்வரும் உறைந்து போய் நின்றார்கள்.

"உன்னை இவங்க கொன்னுட்டாங்க சாந்தவி.. இவங்களை நீயே கொல்லணும்ன்னுதான் இவங்களோட உயிரை இத்தனை வருசமா உறை நிலையிலேயே வச்சிருந்தேன் நான்.." என்றார்.

யாழினிக்கு சட்டென்று எதுவும் விளங்கவில்லை. "இந்த இடத்துலே இருந்து எங்களை வெளியே அனுப்புங்க.." என்றாள்.

"நீ இந்த நாலு பேரையும் கொல்லாம நான் இந்த கட்டை உடைக்க மாட்டேன் சாந்தவி.. ரொம்ப வருசமா நான் காத்திருக்கேன் உனக்காக. இத்தனை வருசம் கழிச்சி இப்பதான் மறு பிறவி எடுத்திருக்க நீ.! அதுவும் கேவலமான இந்த மரகதனை காதலிச்சிருக்க.." என்றார் கோபமாக.

யாழினி பயந்து போய் தன் தந்தையை பார்த்தாள்.

"நான் செய்ய வேண்டிய வேலையை இந்த முறை நீயே முடித்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது சங்கீதவரா.!" என்றவரை கலவரமாக பார்த்த வசந்தன் "எங்களை வெளியே அனுப்பிடுங்க.." என்றார்.

"முடியாது.." கோமண சாமியாரின் கர்ஜனையில் அந்த மாளிகையே குலுங்கியது.

"சிறு கோபம், பெரு நெருப்பு.. என்பதை இவர்கள்தான் அறியவில்லை. நீங்களுமா என்னை புரிந்துக் கொள்ளவில்லை.? இவர்கள் சாந்தவியின் கையால்தான் சாக வேண்டும்! அப்போதுதான் எனக்கு மன திருப்தி.!" என்றவர் கீழே இருந்த ஒரு வாள் ஒன்றை எடுத்தார்.

"இதை பிடி.‌." என்று யாழினியிடம் வீசினார்.

குறுக்கு வந்து வாளை பிடித்தான் தினேஷ்.

"ஏமாற்றம்.! உன்னை நம்பியது என் சகோதரர்களின் தவறு.!" என்றவன் கோமண சாமியாரை நோக்கி கத்தியோடு பாய்ந்தான். கோமண சாமியாரின் நடு நெஞ்சில் பாய்ந்தது கத்தி.

"ஹா.. ஹா.." என சிரித்தவர் காற்றோடு கரைந்து மறைந்து போனார். சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியோடு அவரை தேடினார்கள்.

"ஓர் ஆன்மாவை அழிக்க உன்னால் முடியுமா பிண மனிதனே.?" என்ற குரல் ஒன்று அந்த மாளிகையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.

"இவர் செத்துட்டாரா‌.?" சிவா சந்தேகத்தோடு திரும்பி சதாசிவத்திடம் கேட்டான்‌.

"எனக்கும் தெரியல.." என்றார் அவர்.

யாழினி திடீரென்று அலறினாள். வசந்தன் மகளை திரும்பி பார்த்தார். யாழினி இருந்த இடத்தில் இல்லை.

"சாந்தவி.." என்று தினேஷும், "யாழினி.." என்று சிவாவும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.

"என் மகாராணி சாந்தவி எங்கே‌.?" என கேட்டு சுற்றும் முற்றும் பார்த்த தினேஷ் உறை நிலையிலிருந்த இளவரசர்களிடம் ஓடினான். "அண்ணன்களே எழுந்திருங்கள்.. என் காதலானவளை கண்டுபிடித்து தாருங்கள்.‌." என்றான் அவர்களை உலுக்கியபடி.

யாழினி கூசும் தன் கண்களை கசக்கியபடி தான் இருக்கும் இடத்தை பார்த்தாள். அது ஒரு அழகிய நந்தவனம். கல் கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலை சுற்றி பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

"இது உன் இஷ்ட தெய்வம் சாந்தவி.. அதனால்தான் இத்தனை வருடங்களாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.." என்று சொன்னபடி அந்த கோவிலின் பின்னால் இருந்து வந்தார் கோமண சாமியார்.

"உனக்காக எதையும் செய்வேன் நான்.. உன் மகிழ்ச்சிக்காக இந்த பிரபஞ்சத்தை கூட வளைப்பேன்.. உன் இஷ்டம் கடவுள்தான்.. உன் காதல் கடவுள்தான். அது எனக்கு தெரியும் சாந்தவி. அதனால்தான் அன்று உன்னை மயக்க பார்த்த அமுதனை கூட கொன்றேன் நான்.‌." என்றார் அவர்.

யாழினிக்கு உடல் சிலிர்த்தது. பயத்தில் வார்த்தைகள் வர மறுத்தது. அமுதன் இறந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒரு முறை நினைவில் கொண்டு வந்து பார்த்தாள்.

இந்த கோமண சாமியாரின் மீது கோபமாக வந்தது‌. அன்று அவர் அமுதனை கொல்லாமல் இருந்திருந்தால் இவள் சிறை சென்றிருக்க மாட்டாள்‌. இவளால் தந்தையும் சிறை பிடிக்கப்பட்டிருக்க மாட்டார். இவளும் அந்தபுரத்தில் மரகதனின் கத்தியால் உயிர் விட்டிருக்க மாட்டாள். இந்த கிழவன் செய்த தவறால்தான் அன்று தான் இறந்தோம் என்று புரிந்துக் கொண்டவளுக்கு ஆத்திரமாக வந்தது.

"என்னை என் அப்பாக்கிட்டயே கொண்டு போய் விடுங்க.." என்றாள்.

"நான்தான் உன் தந்தை சாந்தவி.. நீ என் செல்வம்.! நீ என் உலகம்.!" என்றவர் அவளுக்கு முன்னால் வந்து நின்றார். அந்த கோவிலின் படிகளில் ஏறினார். அவளின் பார்வைக்கு நேராக வந்ததும் படிகளில் அமர்ந்தார்.

யாழினியை ஆர்வத்தோடு பார்த்தவர் "மறுபிறவியில் கூட நீ உன் தாயை போலவே உள்ளாய்.!" என்றார்.

யாழினிக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது.

"உனக்கு எதுவும் நினைவில்லையா.? அந்த குறிப்பேட்டை உனக்காகத்தான் உருவாக்கினேன் நான்.! இருந்தாலும் வா நான் உன்னை மறுபடியும் அதே போன்று வாழ வைக்கிறேன்.." என்றவர் எதையோ முணு முணுத்தார்.

யாழினி கதறினாள். அழுகையின் கண்ணீர் கன்னங்களை நனைத்தது. அவள் மீண்டும் கண் திறந்தபோது அந்த கோமண சாமியார் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

அவள் சாந்தியின் வாழ்வை இந்த நொடி நேரத்தில் வாழ்ந்து விட்டு வந்திருந்தாள். இறப்பின் வலி தாங்காமல்தான் கதறினாள் அவள்.

"உண்மையில் நீ சாமியார்தானா.?" என்றாள் கோபத்தோடு.

இல்லையென தலையசைத்தார் அவர்.

"நான் ஒரு ஆன்மா.. உயிரோடு இருக்கையிலும் கூட நான் சாமியார் கிடையாது.. நான் என் பாதையை விட்டு விலகி பல வருடங்கள் ஆகி விட்டது. பழி வாங்கும் எண்ணம் கொண்டவன் கடவுளின் கால் பாதத்தை கூட சரணையடைய முடியாது. ஆனால் எனக்கு தேவை கடவுளின் ஆசி அல்ல, என் மகளின் சந்தோசம்தான்.!" என்றவரை பயத்தோடு பார்த்தாள் யாழினி.

'சைக்கோ.. மெண்டல் கேஸ்..' என்று நினைத்தாள். அவரை பார்க்கையில் அப்படிதான் நினைக்க தோன்றியது அவளுக்கு‌.

"எனக்கு ஏதும் வேணாம்.. எங்க அப்பாக்கிட்ட கூட்டிப்போய் விடுங்க.." என்றவளை பார்த்து பேய் போல சிரித்தவர் "அவர்களை கொல்ல இறந்த ஆன்மாக்களை ஏவிவிட்டு வந்திருக்கிறேன் நான்.. இன்னேரம் இறந்திருப்பார்கள்.." என்றார்.

யாழினி திடுக்கிடலோடு அவரை பார்த்தாள். "சாத்தானே.!" என்று திட்டியவள் அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினாள். எதிர் திசையில் ஓடினாள்.

அவள் எங்கே ஓடினாலும் எவ்வளவு நேரம் ஓடினாலும் அதே பூந்தோட்டத்திற்குள்தான் சுற்றி வந்தாள். ஓடி களைத்தவளுக்கு சலிப்பாக இருந்தது.

"இங்கிருந்து வெளியே போனாதான் யாழினியை கண்டுப்பிடிக்க முடியும்.!" என்றான் சிவா.

"ஆமா.. இந்த மாளிகையின் கதவை திறக்க முயற்சி செய்யலாம்.." என்று சொன்ன சதாசிவம் முன்னால் நடந்தார். அவருக்கு முன்னால் வந்து நின்றான் தினேஷ்.

"அவள் என் சாந்தவி‌.!" என்றான் பெரும் குரலில்.

சிவா தரையில் கிடந்த கத்தியை எடுத்து அவனின் நெஞ்சில் குத்தினான். தினேஷ் கோபத்தோடு அவனை பார்த்தான்.

"நீ செத்துட்ட தினேஷ்.. இப்ப கூட பார்த்தியா கத்தி இறங்கியும் உனக்கு ஒன்னும் ஆகல.. நீ செத்துட்ட.. அவ யாழினி, சாந்தவி கிடையாது.. தயவுசெஞ்சி எங்க வழியில எங்களை போக விடு.." என்றான்.

அதே நேரத்தில் சிவாவின் பாதத்தை என்னவோ தீண்டியது. குனிந்து பார்த்தான். பூக்கள் மீதுதான் நின்றுக் கொண்டிருந்தான். பூச்சிகள் ஏதாவது இருக்கிறதோ என்னவோ என நினைத்து காலை பின்னுக்கு இழுத்தான். பூச்சி எதுவும் இல்லை. ஆனாலும் இம்முறையும் பாதம் நெருடலை உணர்ந்தது. பூக்களின் மீது காலை வைத்து தேய்த்தான்‌.

அவனின் பாதத்தில் ஊசி போல என்னவோ குத்தியது. அவனின் காலிலிருந்து வெளிவந்த ஒரு புகை உருவம் மேலெழும்பியது. பார்த்துக் கொண்டிருந்த சிவாவிற்கு பயத்தில் இதயம் நடுங்கியது. அவனின் இடப்பக்கமிருந்து ஒரு புகையும் வலப்பக்கத்திலிருந்து ஒரு புகையும் சுழன்று வந்தது. புகை அனைத்தும் உருவம்‌. அந்த உருவங்கள் அனைத்தும் மனிதர்களின் வடிவம்.

சிவாவின் காதோரம் வந்து உரசிய ஒரு புகை உருவம் "பலி வேண்டும்.. பல வருடம் பட்டினி நாங்கள்.. உன் உயிர் வேண்டும்.!" என்று கிசுகிசுத்தது.

சிவா கையை உதறி காதை தட்டினான். "தூர போங்க‌‌.." என்றான் கோபமாக.

"உன்னை உயிர்ப்பலி வாங்காமல் செல்ல மாட்டோம்‌‌.." என்று மறுகாதில் வந்து சொன்னது மற்றொரு உருவம்.

அவனின் உடம்பில் புகுந்தன ஆன்மாக்கள். அதை அவனால் உணர முடிந்தது. வலித்தது ஆன்மாக்கள் நுழைந்த இடங்கள். அவனின் இதயத்தின் மீது யாரோ கை வைத்து அழுத்துவது போல் இருந்தது‌. அந்த அழுத்தம் சற்று நேரத்தில் மாறியது. அவனின் இதயத்தை யாரோ கசக்கி பிழிந்து போல இருந்தது. வலி தாளாமல் தரையில் மண்டியிட்டான்‌.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN