என்னைத் துரத்தும் உன் நினைவுகள்...3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 3

மகேஷ் மற்றும் யாழினிக்கு இடையிலான வம்புதும்புகள் கைவரிசையில் ஆரம்பித்து பேச்சில் ஒருவர் காலை ஒருவர் வாருவதில் வளர்ந்து இன்று பந்தயம் கட்டுவதில் வந்து நின்றது.

இப்படிப்பட்ட அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான அவனுடைய தங்கக்கட்டியான தங்கை எவ்வளவு அழுதும் பிடிவாதம் பிடித்தும் கேட்காமல் தங்கள் வீட்டை விட்டு மற்றும் அவர்கள் எல்லோரையும் விட்டு வெளியேறிவிட்டான் மகேஷ். அதனால் வந்த கோபம் இன்று வரை அவன் தங்கத்திற்கு இருக்கத்தான் செய்தது.

இவர்களுக்குள் பேச்சும் சிரிப்புமாய் இருக்க அதேநேரம் “என்னபா எல்லோரும் இங்கேயே நிற்கிறீங்க? ஏன்பா மகேஷ், வாயும்வயிறுமா இருக்க பொண்ண இப்டியா பட்டினியா நிற்கவைக்கறது? போ… போ… போய் சாப்பிட கூட்டிட்டுப் போப்பா”என்று நந்துவின் அப்பா அவனுக்கு எடுத்துச்சொல்ல,

“இதோ போறேன் அங்கிள்…” என்ற அவன் வார்த்தையை முடிப்பதற்குள் “அண்ணி எங்கே மாமா பட்டினியா இருக்காங்க?அவங்க மாமியார்தான் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை ஜூசைக் கொடுத்து, குடிக்கமாட்டேனு சொல்றவங்களை குடித்தேத்தான் ஆகணும்னு நல்லா டிரில் மாஸ்டர் மாதிரி அவங்களை டிரில் வாங்கிட்டு இல்ல இருக்காங்க!

இதுல இந்த அண்ணன் வேற என்ன சொல்லி மிரட்டி வைத்திருக்கானோ தெரியல.. பாவம்! அவங்க இங்க வந்ததிலிருந்து கூண்டுக்குள்ளே மாட்டின மான் மாதிரி முழிச்சிட்டு இருக்காங்க. என்னடா நான் சொன்னது சரிதானே..” எனயாழினி மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போகவும்

தன் பிடியில் இருந் தமனைவியின் கையை நந்து சிறு அழுத்தம் கொடுக்க குறிப்பு உணர்ந்து தன் பேச்சை நிறுத்தி அவள் அவன் முகம் பார்க்க “உனக்கு மரியாதையாகவே பேசத் தெரியாதா? அதுவும் இல்லாம அப்பா உன்னை ஏதாவது கேட்டாரா? எதுக்கு இப்போ இப்படி லொடலொடக்கிற?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் எச்சரிக்க கப்சிப் என்று மாறிப்போனாள் யாழினி, அதுவும் மனமே இல்லாமல்தான்.

இதுதான் நம் நாயகி கீதயாழனி மற்றும் நாயகன் சுவேஷ்நந்தன். அதுக்காக இருவருக்குள்ளும் எட்டாம் பொருத்தம் என்பது எல்லாம் இல்லை. மனிதர்கள் என்றால் கருத்து வேறுபாடு வரத்தானே செய்யும். அதிலும் அவர்கள் சிறுவயதிலிருந்து ஆண்பெண் நட்பு என்ற வட்டத்தில் வளர்ந்தவர்களுக்கு சொல்லவா வேண்டும்? அப்போ அதை நீங்களே உங்கள் கற்பனையில் எடுத்துக்கொள்ளுங்கள். எப்படியோ பார்க்கும்போது எல்லாம் இருவரும் வெட்டுகுத்தில் நிற்கும் எதிரியாக மாறாமல் போனார்கள். ஆனால் இனி? சரி குணத்தில்தான் இப்படி வேறுபாடு ஆகிப்போனார்கள் என்றால் உருவத்தில் எப்படிச்சொல்வது?

எல்லோரும் விலகிவிட நந்துவுக்கும் போன் வர சற்றுத் தள்ளி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் அவன். இதுவரை தன் ஆசைக்காதலனாக இருத்தவனை இன்றுமுதல் தன் ஆருயிர் கணவனாக மாறியவனைத் தன் கண்களுக்குள் படம் பிடித்துக்கொண்டிருந்தாள் அவன் தலைவி.

ஆறடிக்கும் சற்று குறைவாக ஐந்தேமுக்கால் அடி உயரம். இன்றைய கால இளைஞர்களிடம் உள்ளதுபோல் சிக்ஸ்பேக் இல்லை என்றாலும் அளவான ஜிம்பாடி மற்றும் எண்பதுகளில் வரும் ஹீரோக்களைப் போல கைக்குள் அடங்கமறுத்து அவளிடம் (மனைவியிடம்) திமிர்கொண்டு திரிபவனைப் போல் நெற்றியில் புரளும் அலைஅலையான கேசம். எப்போதும் தன் யோசனையை வெளியே காட்டாத சுழித்த புருவங்கள். தீர்க்கமான கண்கள். முன்கோபத்தை உணர்த்தும் கூர்மையான மூக்கு. விரிந்த புன்னகையை இப்போது நான் சிரிக்கவா வேண்டாமா என்று யோசிக்கும் உதடுகள். அதிலும் தன்னை மீறி சிரிக்கும்போது இடது கண்ணத்தில் விழும் குழி என்று இவை அனைத்தையும் விட தன்னவனின் முகத்திற்கு அழகுடன் கம்பீரத்தைச் சேர்க்கும் மீசை.

கூடவே அகன்ற நெற்றியில் இடது ஓரத்தில் இருந்த தழும்பு என தன்னவன் கருமைநிறத்திற்கு மேலும் அழகு கூட்டுவதாக உணர்ந்தாள். அதிலும் ஏதாவது யோசனையின்போது அந்த தழும்பை இடதுகையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் ஒருசேர வருடுவது அவனுடைய மேனரிசமாகிப் போனது. இப்போது கூட போனில் பேசிக்கொண்டே அப்படி அவன் வருட அதில் எப்போதும்போல் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள்.

தன் கணவனை அணுஅணுவாக அவள் ரசித்துக் கொண்டிருந்தநேரம் “என்னக்கா நம்ப அம்மா எதிர்த்தும் ஏன்…. மாமாவே இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்லியும் எப்படியோ பிடிவாதமா இருந்து இந்த திருமணத்தை முடிச்சிட்ட. ஆனா அதற்கு பிறகு நடக்கப் போகிறதை நீயோசிச்சியா இல்லையா?” என்று யாழினியின் தங்கை அஞ்சலி அவளிடம் சிறு கவலை மேலிடும் குரலில் கேட்கவும் “இதில் யோசிக்க என்னடி இருக்கு?” என்ற மிகவும் சகஜமான பதிலை இவள் தரவும்

“என்னக்கா இப்படி கேட்டுட்ட! அம்மாவாது இந்த கல்யாணத்தை ஏற்றுகிட்டாங்க. ஆனா மாமா அன்னைக்கு வீடு தேடிவந்து இந்த திருமணத்தை நிறுத்தச் சொல்லி உன்கிட்ட அவ்வளவு பேசிட்டுப் போனாங்க. நீயும் சரிசரினு தலையை ஆட்டி சூடம் ஏற்றி அணைக்காத குறையா அவருக்கு இந்த கல்யாணம் நடக்காதுனு வாக்கு கொடுத்து அனுப்பின. ஆனா இன்று நீ சொன்ன எதையுமே செய்யல.. எல்லாத்திலேயும் உனக்கு விளையாட்டு தான்கா…” என்று வருந்தி மேற்கொண்டு தொடரப்போன தங்கையின் பேச்சைத் தன் கை உயர்த்தித் தடுத்தவள்

”உன் மாமா கோபம் எல்லாம் எவ்வளவு தூரத்துக்கு நிலைக்கும்னு எனக்குத் தெரியாதா? அதுக்காக நான் செய்தது தப்பு இல்லைனு சொல்ல வரலை. தப்புதான்! ஆனா அதை எப்படி சரி பண்ணணும்னு எனக்குத் தெரியும். அதனால என்னைப் பற்றி கவலைப்படாதே எலிக்குட்டி!” என்று அவள் தங்கையைச் சீண்டியபடி உறுதி அளிக்க

“நீ எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்குவேக்கா. அது எனக்குத் தெரியும். ஆனா ஒரு பெண் புகுந்தவீட்டுல நிம்மதியா வாழணும்னா அதற்கு முதல்ல கணவனோட ஆதரவு வேணும். ஆனா உனக்கு..” என்று இப்போது தான் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அனிமேஷன் துறை சார்ந்த படிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கும் அஞ்சலி உலக எதார்த்தத்தை எடுத்துக்கூற, அவளுக்குப் பதில் சொல்ல நினைத்து இவள் வாயைத் திறக்க இருந்த நேரம்

நந்து தன் பேச்சை முடித்துக்கொண்டு வர அதேநேரம் ஈஸ்வரி அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்குச் செல்லவும் அங்கே பணத்தின் மிளிர்வுடனும் ஒருவித கர்வத்துடனும் வேதநாயகி அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அவருக்கு வசதி செய்வதற்காக அவர் பக்கத்தில் ஒரு டேபிள்ஃபேன் ஓடிகொண்டிருந்தது. வேதநாயகிக்கு சொந்தஊர் தூத்துக்குடி கோவில்பட்டி பக்கம். கணவர் வேதநாயகம் ரிட்டையர்ட் ஐகோர்ட் ஜட்ஜ். இப்போது அவர் உயிருடன் இல்லை. கணவன் மனைவி இருவரும் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரே மகன் டாக்டர் உத்திராபதி பெரும் புகழ்பெற்ற நியூரோலாஜிக் டாக்டர். அவனுக்குத்தான் ஈஸ்வரியை மணமுடித்து இருக்கிறார்கள். மகனின் தொழிலை முன்னிறுத்தி இப்போது சென்னையில் செட்டிலாகி உள்ளனர்.

அவர் சாப்பிட்டு முடித்துக் கை கழுவவும் அதேநேரம் உள்ளே தன் மனைவியுடன் வந்த நந்து அத்தை எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சொல்லி மனைவியுடன் அவர் காலில் விழ அவர்களை ஆசீர்வதித்தவர் பின் தன் பக்கத்தில் நின்றிருந்த மருமகளிடம் அவர் எதையோ கேட்க உடனே அங்கு பையிலிருந்த இரண்டு மோதிரத்தை எடுத்து அவள் மாமியாரிடம் கொடுக்க ‘ஜி’ என்று எழுதியிருந்த மோதிரத்தை யாழினியிடமும் ‘எஸ்’ என்று எழுதியிருந்த மோதிரத்தை நந்துவிடமும் கொடுத்து வேதநாயகி போடச் சொல்ல விலையுயர்ந்த பிளாட்டினத்துடன் கூடிய எழுத்து வடிவத்தை நிரப்பிய சிறுசிறு வைரங்கள் அதன் பெருமதிப்பை நந்துவுக்கு உணர்த்த தங்கள் தகுதிக்கு மீறிய அந்த பொருளை மனைவிக்குப் போட அவன் தயங்கவும்…

“என்ன நந்தா இவ்வளவு தயங்குற? யாழினி என் பொண்ணு மாதிரி. இந்த வேதநாயகி தன் மகளுக்கும் மருமகனுக்கும் செய்யறது இது. அதனாலே தயங்காம வாங்கிக்கோ. உன் மாமன் வந்த பிறகு உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டுத் தனியா விருந்து வைத்துச் சீர் செய்வான்” என்று அவனின் தயக்கத்தை உணர்ந்து பாசத்துடன் சொல்லவும்

அவனோ தன் அக்காவை ஒரு பார்வை பார்க்க அவள் கண்ணாலேயே சம்மதம் சொல்லவும் பின் எந்த தயக்கமும் இல்லாமல் தன் மனைவியின் வெண்பஞ்சு விரலில் மோதிரத்தைப் போட அவளும் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கணவன் விரலுக்கு அணிவித்தாள்.

“உங்கள் வாழ்க்கைத்துணைவரின் பெயர்களின் முதல் எழுத்து எப்படி உங்கள் கைகளுக்குள் அடங்கியதோ அப்படியே அன்பு பாசம் அரவணைப்பு என்னும் இல்லறத்தால் நீங்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கவேண்டும் ”என்று வேதநாயகி வாழ்த்தி முடிக்க

“அண்ணா எப்போ வருவாங்க அண்ணி?” என்று ஈஸ்வரியைப் பார்த்து யாழினி கேட்க,

“ஒருவாரம் கான்ஃபிரன்ஸ் சொன்னாரு யாழினி. அவர் கிளம்பி மூன்றுநாள் ஆகிடுச்சு. இன்னும் நான்கு நாளில் வந்துடுவார்” என்று ஈஸ்வரி பதில்தர அவளிடம் மறுபடியும் ஏதோ கேட்கவந் தமனைவியை “க்கும்” என்ற தொண்டைக் கனைப்பில் தன்னைத் திருப்பிப் பார்க்க வைத்து அவள் பார்த்ததும் தன் விழியின் அசைவில் மறுபடியும் வளவளனு எதுவும் ஆரம்பிக்காதேனு அவன் கண்ணாலையே எச்சரிக்கவும் மனதிற்குள் சுணங்கியவள் ‘ஆமா, இவரும் பேசமாட்டாரு என்னையும் பேசவிடமாட்டாரு என்னமோ கடவுள் சாப்பிடத்தான் வாயைப் படைத்தான் என்பதுபோல் அதற்கு மட்டும்தான் இவர் வாயைத் திறப்பாரு. கூடவே என்னையும் அதற்கு மட்டும்தான் திறக்கச் சொல்லுவார் போல..’ என அவள் மனதால் கேள்விகளை அடுக்கிய நேரம் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றாள் ஈஸ்வரி.

காலையிலிருந்து வெறும் ஒரு டம்ளர் பாலை மட்டும் குடித்துவிட்டிருந்த யாழினிக்கு யார் எப்போது சாப்பிட அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்தவள் பந்தி போடப்பட்ட இடத்திற்குச் செல்ல அந்த பசிமயக்கத்திலும் அங்கு வேலையாய் இருந்த தன் மூன்றாவது அண்ணனான ராம்பிரகாஷை நெருங்கி அவன் வலதுகையோடு தன் இடதுகையைக் கோர்த்தவள் அவனைத் தன் பக்கதிலேயே ஒரு இருக்கையில் விடாப்பிடியாக அமரவைத்தாள்.

“இன்னும் என்ன அண்ணா வேலைவேலைனு செய்துட்டு இருக்க? சாப்பிட்டு கூட இருக்கமாட்ட.. காலையில் எங்ககூட கோவில்குள்ள நுழையும்போது பார்த்ததுதான், பிறகு நீ அவருக்கு மச்சான் சடங்கு செய்யும்போது பார்த்தேன். பிறகு உன்னை ஆளயே காணோம். என்கூடவே உட்கார்ந்து ஒழுங்கா சாப்பிடுண்ணா” என்றவள் அவனுக்கு வேண்டியதைப் பார்த்துப்பார்த்து அங்கு பரிமாறுபவர்களிடம் சொல்ல “ஐயோ! இவ்வளவு வேணாம்டா எனக்கு, இதுவே போதும்” என்று அவன் சிறுகுரலில் தடுக்க தடுக்க அனைத்தையும் வைக்கச் சொன்னவள் “அப்பாவுக்கு ரெஸ்ட் வேணும்தான், அதற்காக எல்லா வேலையும் நீயே இழுத்துப் போட்டுக்குவியா?” என்று அவள் கோபப்பட

“நான் எங்க குட்டிமா செய்தேன்? எல்லா வேலைக்கும்தான் ஆள் இருந்தாங்க நான் சும்மா மேற்பார்வைதானே பார்த்தேன்” என்று அவன் சேர்ந்தார்போல் நாலு வார்த்தைப் பேசவும் “அப்…. பா…! இவ்வளவு வார்த்தை பேசிட்டியேண்ணா! இன்னைக்கு நிச்சயம் மழை வரப்போகுது” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவள், மனதிற்குள்ளேயே ‘எங்க எல்லோர் மாதிரி இல்லாமல் இந்த அண்ணா மட்டும் ஏன் அமைதியின் சிகரமாக பிறந்தாரு?’ என்று லட்சத்தி எட்டாவது முறையாக என்றும் போல் யோசித்தாள் யாழினி.

யாழினி சொல்வதுபோல் ராம் அமைதியே தவிர கோழையோ பயந்தவனோ கிடையாது. நண்பர்களுடன் அவன் ஆரம்பித்த இரண்டு தொழிலும் நஷ்டத்தில் போகவும் ஓட்டுக்குள் சுருங்கும் நத்தையென சுருங்கிப் போனான் அவன். முதல் இரண்டு அண்ணன்களுக்கு யாழினி உயிர் என்றால் ராமுவுக்கோ உயிரினும் உயிர்.. அதனாலேயே தங்கை திருமணத்திற்குப் பிறகுதான் தன் திருமணம் என்ற பிடிவாதத்தில் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறான்.

அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அஞ்சலி “அடடா! என்னப்பா இது அநியாயம்! சாப்பிடும்போது மாப்பிள்ளை பொண்ணுக்கான விளையாட்டு எதுவும் இல்லாம நீங்க பாட்டுக்கு சாப்பிட்டு இருக்கீங்க.. எங்கே இந்த போட்டோகிராபர்?” என்று அவள் கிரீச்சிட..

‘அடடே! ஆமா.. இதை எப்படி நாம மறந்தோம்?’ என்று யாழினியும் அடுத்தது ‘இதுவேறயா?’ என்று நந்துவும் நினைக்க “சாரி..சாரி.. நீங்க வர லேட் ஆகும்னு சொல்லவோ நாங்க சாப்பிட உட்கார்ந்துட்டோம். இப்போ போட்டோ எடுக்கிறேன்” என்று சொல்லியபடி போட்டோகிராபர் வந்து நின்று அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிடச் சொல்லவும் முதலில் வேண்டாம் என்று சொல்ல நினைத்த நந்துவுக்கு ஒருயோசனை தோன்ற தன் இலையில் இருந்த வடையை எடுக்கப் போகவும்

“டேய்! முதல்முறையா பொண்டாட்டிக்கு ஊட்டுற, இனிப்பை எடுத்து ஊட்டுடா” என்று ஈஸ்வரி அதட்ட உடனே ஜிலேபியை எடுத்து பாதி கடித்தவனோ மீதியை மனைவிக்கு ஊட்ட அதை முகம் விகாசிக்க வாங்கிக்கொண்டாள் யாழினி. இருக்காதா பின்னே? அவளுக்குப் பிடித்த ஜிலேபியைக் கணவன் கொடுத்திருக்கிறான். அதிலும் தன்னவன் கடித்துக் கொடுத்தது தேவாமிர்தமாய் தொண்டைக்குள் இறங்கியது அவளுக்கு.

பின் அதேமாதிரியே தான் பாதி கடித்த ஜிலேபியை அவனுக்கு ஊட்ட வரவும் அப்போது யாரும் பார்த்து கண்டுபிடிக்காதபடி மிகவும் எதார்த்தமாக நந்து அவள் கையைத் தட்டிவிட யாழினி கையிலிருந்த ஜிலேபி கணவனின் உதட்டுக்குப் போகும் முன்பே கீழே விழுந்து சிதறியது. உடனே அவளுக்கு ஏமாற்றத்தோடு நெஞ்சே அடைக்கக் கூடவே கண்கலங்கிவிட்டது. சிறுவயதில் இவள் காக்கா கடி கடித்துத் தரும் எதையும் அவன் சாப்பிடுவான். ஆனால் அவன் கடித்துத்தரும் பண்டத்தை எதையும் இவள் சாப்பிடமாட்டாள். ஆனால் இன்று….. எத்தனையோ முறை குந்தாணி நீ என்ன பெரிய இவளாடி என்று அவன் பல்லைக் கடித்ததும் உண்டு. அதனால் இன்றும் அவள் வாங்கமாட்டாள் என்று இவன் நினைத்திருக்க இங்கு அவள் நடந்துகொண்டதோ வேறு.

பிறகு வேறு ஒரு ஜலேபி எடுத்து வந்து கொடுக்கவும் அதை ஊட்டிவிட்டாள். இருந்தாலும் முதல்முறை தான் கொடுத்ததை கணவன் வாங்கவில்லையே என்ற கோபத்தில் தன் பக்கத்திலிருந்த அவன் காலை யாரும் அறியாத வண்ணம் அவள் ஓங்கி மிதிக்க அவள் நோக்கமறிந்து தன் காலை நந்து விலக்கிக் கொள்ளவும் தொம்மென்று தன் காலை பூமியில் புதைத்தவள் புதுசாக போட்ட மெட்டியால் அவளுக்கு விரலில் வலி ஏற்படவும் அவள் தன் முகத்தை சற்றே சுருக்கிய நேரம் “ஏன்டி குந்தாணி! சின்ன வயசிலிருந்து உன்னைய பார்க்கிறேன். நீ அடுத்து என்ன செய்வேனு எனக்குத் தெரியாதா? ஏதோ இந்த கல்யாண விஷயத்துல தான்டி ஏமாந்துட்டேன். அதனால எப்போதும் அப்படியே இருப்பேனு நினைக்காதே” என்று சிரித்த முகமாக அவள் காதோரம் அவன் கிசுகிசுக்க அந்த நிலையிலும் தன்னவனின் அருகாமையில் தன்னை மறந்தாள் பெண்ணவள்.

பின் அனைவரும் கிளம்ப டிரைவருடன் சந்தியா, ஈஸ்வரி, நந்து மற்றும் யாழினி என்று ஒரு காரில் கிளம்ப அப்போது ஈஸ்வரிக்கு அவள் கணவனிடமிருந்து போன் வரவும் அதை எடுத்தவள் “சொல்லுங்க.. சாப்டீங்களா? ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. வீட்டுக்குப் போய்ட்டு இருக்கோம். ம்ம்ம்.. நான் சாப்பிட்டேன். இதோ நந்துகிட்ட தரேன் இருங்க” என்றவள் முன்சீட்டில் இருந்தபடியே மொபைலை அவள் தம்பியிடம் நீட்ட

அதை வாங்கியவனோ “சொல்லுங்க மாமா! தாங்க்ஸ் மாமா.. ம்ம்ம்.. ஆமா மாமா, காலையிலிருந்து இந்த சடங்கு சம்பிரதாயம்னு கொஞ்சம் டயர்டாதான் இருக்கு. என்ன மாமா இந்த கான்பிரன்ஸ் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியாதா? அதனாலே நீங்க உங்க வேலை எல்லாம் முடிச்சிட்டே வாங்க. இதோ அக்காகிட்ட தரேன் மாமா” என்று போன் கை மாறியதும்,

“ஹலோ! இன்னும் இரண்டு நாளில் வந்துடுவீங்களா? ம்ம்ம்… சரிசரி அப்போ நீங்க வரும்போது கார் அனுப்புங்க, நான்வந்திடுறேன்.. ம்ம்ம்.. ஏன்? பரவாயில்ல எவ்வளவு நேரம் ஆனாலும் நான் முழிச்சிட்டு இருக்கேன். சரிசரி நான் தூங்கறேன். ஆனா நைட் நீங்க போன் பண்ணுங்க. இல்லஇல்ல… நான் பார்த்து மெதுவா எழுந்துக்கிறேன்..” என்று சில வார்த்தைகளைப் பேசி அவள் போனை வைத்துவிட

“என்னங்க அண்ணி அண்ணா சீக்கிரம் வராங்களா?” என்று யாழினி கேட்க ஈஸ்வரி தலையாட்டியபடி ஒரு சிரிப்பைச் சிந்தவும்

“இந்த அண்ணா ரெண்டுநாள் கழித்து வர்றது இன்னைக்கே வரக்கூடாதா? நான் அவர்மேல் கோபமா இருக்கேன். யாருமே தன் மனைவிக்குனா உருகிடுறாங்கபா..” என்று கணவனைப் பார்த்துக்கொண்டே “நீங்களும்தான் இருக்கீங்களே” என்ற ரீதியில் அவள் குறைபடவும், திரும்பி அவளை ஒரு முறைமுறைத்தவன் “இப்போ நீ பேசாம வரமாட்ட?” என்று அவன் எரிச்சலில் முணுமுணுக்கவும்

அதற்கெல்லாம் அசருபவளா நம் நாயகி? வேண்டும்என்றே “சந்தியா அக்கா, நீங்க டீச்சர்தானே? அதனாலே நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லுறீங்களானு பார்ப்போம்” என்று இவள் வினவ

“என்ன யாழினி? கேளு” என்று சந்தியா சொல்ல

“மகாபாரத போரில் இந்த உலகத்தையே காக்கும் கிருஷ்ணர் ஏன் அர்சுனனுக்குத் தேர் ஓட்டினார் தெரியுமா?” என்று இவள் படு சீரியசாகக் கேட்கவும் சந்தியாவுடன் சேர்ந்து கூட இருந்தவர்கள் அனைவரும் தெரியலையே என்று உதட்டைப் பிதுக்க “அது…..ஏன்…னாஅர்ச்சுனனோட டிரைவரான தேரோட்டி அன்று லீவ் போட்டுட்டார். அதனால்தான் கிருஷ்ணர் ஓட்டினார்” அவள் சிரிக்காமல் சொல்லவும் அங்கிருந்த வயதான டிரைவர் முதற்கொண்டு அனைவரும் ஐயோ என்று சிரித்துவிட்டார்கள்.

ஆனால் கணவன் நந்துவோ ‘இதெல்லாம் ஜோக்குனு மொக்க போடறா பாரு.. இதுக்கு நான் வேற சிரிக்கிறனானு என் முகத்தைப் பார்க்கிறதைப் பாரு..’ என்று மனதிற்குள் கடுப்பானவன் அவள் வாயை அடைக்கும் வழிபோல்

“டிரைவர் அண்ணா ஏதாவது ஒரு பாட்ட போடுங்க” என்று அவன் சொல்ல அவர் ஆன் செய்ததும்

“ம்.... ஆ.....

என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக
மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக
சீர்சனத்தியோட வந்து சீமையில கேட்டாக
அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக
நம்ம சின்னமருவூரிலும் கேட்டாக
அத எல்லாம் உன்னால வேணாமின்னு சொன்னேன் கண்ணால

எம் மச்சான் உம்மேல ஆசப்பட்டு வந்தேன் முன்னால”

என்று ஜானகிஅம்மா பாடவும் கண்ணில் சிரிப்புடன் கணவனைப் பார்த்துக்கொண்டே யாழினியும் அந்த வரிகளை முணுமுணுக்கவும்

‘இவ வாயை மூடத்தான் பாட்டே போடச் சொன்னேன். இப்போ அதுவே இவளுக்கு அவலா போச்சே!’ என்று கடுப்பானவன் “அண்ணா நல்ல இதமா தூங்கறமாதிரி பாட்டு போடுங்கண்ணா, எனக்குத் தூக்கம் வருது” என்று சொன்னவன் அதனால் இனி நீயும் எதுவும் பேசாதே என்ற மறைமுக வார்த்தையை அவன் மனைவிக்கு வைக்கவும், சரிதான் போடா கட்டதுரை என்ற தலைசிலுப்பலை அவனுக்குத் தந்தாள்யாழினி.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி ஆரத்தி எடுக்க உள்ளே வந்த நந்துவும் யாழினியும் பூஜை படங்கள் உள்ள அலமாரியின் அருகில் சென்று விளக்கு ஏற்றியபின் சந்தியா பால்பழம் கொடுத்தவள்

“யாழினி! அந்த ரூம்ல உனக்கான டிரஸ் பேக் இருக்கு. போய் டிரஸ் மாற்றிட்டு பின்கட்டு வழியா போய் முகம் கழுவி வந்தா உனக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும். தம்பி நீங்களும் தான்” என்று சந்தியா யாழினியிடம் ஆரம்பித்து நந்துவிடம் முடிக்க சடாரென மனைவிக்கு முன்பே உள்ளே சென்று பூட்டிக்கொண்ட கணவனை நினைத்து ‘இவர் தானே என்னைய அழைச்சிட்டுப் போய் இது என் ரூம், இங்கே உனக்கு என்ன தேவையோ என்கிட்ட கேளுனு சொல்லணும்? இன்றே இப்படினா மீதி நாட்கள் எப்படியோ?..’ என்று அவள் யோசிக்க ‘சரிவிடு யாழினி! எல்லாம் தெரிந்து தானே கட்டிக்கிட்ட?’ என்று இன்னோர் மனம் அவளுக்கு சமாதானம் சொல்லும் நேரம் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் நந்து. பிறகு இவள் சென்று ஆடை மாற்றி வரவும் “விஜி! சின்னஅண்ணிக்கு கிணற்றிலிருந்து தண்ணி எடுத்துக்கொடு” என்று சந்தியா சொல்ல

சரி என்று விஜி யாழினியை அழைத்துச் செல்லும் நேரம் “இது என்னடி கதையா இருக்கு! கிணற்றுல தண்ணி எடுக்கிறது என்ன அவ்வளவு கஷ்டமா? இந்த வீட்டு நிலவரம் எல்லாம் தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா இந்த சீமாட்டி? பிறகு என்ன ஒருத்தவங்க தண்ணீர் எடுத்துக் கொடுக்கணும்”என்று சுந்தரி நொடிக்கும் நேரம்,

நந்து பின்கட்டிலிருந்து முகம் கழுவி வரவும் சரியாக இருந்தது. சுந்தரி பேசின பேச்சுக்கு நந்து என்ன சொல்வானோ என்று எல்லோரும் அவன் முகத்தையே பார்க்க அதைக் காதிலேயே வாங்காதவன் மாதிரி “விஜி! ரூம்ல என் டவல் இருக்கும், எடுத்துட்டு வாம்மா” என்று அவன் சொல்லவும்

‘ஏன்? அதை என்கிட்ட எடுத்து வரச் சொல்லமாட்டாரா?’ என்று யாழினி மனதால் சுணங்கும் நேரம் விஜி அவன் கேட்டதை எடுத்து வந்து கொடுக்கவும் வாங்கி முகம் துடைத்தவன் பின்புறக் கொடியில் அதைக் காயவைத்து கூடவே அதில் அவன் கிளிப்பிட்டு வரவும்

“இவன் வாயைத் திறக்க மாட்டான்” என்று நினைத்த பாட்டி “ஏன்டி சுந்தரி! முதல்நாளும் அதுவுமா அந்த பொண்ணு எப்படி செய்யும்? எல்லாம் போகப்போக கத்துக்கும். நீ கூட்டிட்டுப் போ விஜி!” என்று அவர் எடுத்துச் சொல்வது என்ற பெயரில் அதட்டல் போடவும் அவரவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தனர்

அங்கு கூடத்தில் ஓரிடத்தில் ஈஸ்வரி கால் நீட்டி அமர்ந்திருக்க, அவள் மடியில் தலைவைத்து நந்து படுத்த நேரம் “டேய்.. அவளே முடியாம அமர்ந்திருக்கா. நீ உள்ள போய் படுடா” என்று இப்பவும் பாட்டி அதட்ட,

“அட போ பாட்டி! அவளே ரொம்ப டயர்டா இருக்கா. புது இடம் வேற. நானும் ரூமில் இருந்தா அவ சரியா தூங்கமாட்டா” என்று இவன் அவனின் குந்தாணிக்காக கரிசனமாகப் பேச

‘அடப் போடா போக்கத்தவனே.. எப்படி இருந்தாலும் இரவு ஒரே அறையில தானேடா தூங்கணும்?’ என்று மனதிற்குள் பேரனுக்குப் பதில் தந்தார் பாட்டி. பின் அவன் கூடத்திலே தரையில் படுத்துத் தூங்கிவிட யாழினி உள்ளே அறையில் தூங்கினாள்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN