காதல் கடன்காரா 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழின் பைக் அங்கிருந்து கிளம்பி சென்றது. புவனா வெகுநேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முத்தமிழின் மீது கொண்ட நேசம் வளர்ந்துக் கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்த தங்களது அறையில் நின்றபடி அபிராமி கார்த்திக்கின் சட்டையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவனது சட்டையையும் அவனையும் ஒன்றாய் சேர்த்து நெருப்பில் எரிக்க வேண்டும் போல இருந்தது.

அதே நேரத்தில் "அபிராமி.." என்று சிணுங்கல் குரலோடு வீட்டுக்குள் வந்தான் கார்த்திக்.

அதற்குள் வேலை முடிந்து விட்டதா என நினைத்தவள் கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அலமாரியை சாத்திவிட்டு திரும்பியவள் கார்த்திக்கை புன்னகையோடு பார்த்தாள்.

"மிஸ் யூ.." என்றபடி சென்று அவனின் தோளில் சாய்ந்தாள். அவனின் கழுத்து பகுதியில் வியர்த்திருந்தது. தன் புடவை முந்தானை எடுத்து துடைத்து விட்டாள்.

"பைக்ல வரும் போது ஏன் வேர்க்குது.?" என்றாள்.

"பைக் பஞ்சர்.. ஊர் எல்லையிலிருந்து தள்ளிட்டு வந்தேன்.." என்றவன் அவளின் இதழில் தன் இதழை பதித்தான்.

"நீ மட்டும் எப்பவும் பிரெஸா இருக்க.." என்றான் கொஞ்சலாக.

அபிராமி வெட்கத்தோடு முகம் சிவந்தாள். "கதவை சாத்தல.. வேற யாராவது பார்த்துட போறாங்க.. தள்ளு.." என்றாள்.

"ஸ்வீட்.." என்றவன் அவளின் கன்னம் கிள்ளி உதட்டில் முத்தமிட்டான்.

அன்று இரவில் வெகுநேரம் தூங்காமல் அந்த புறமும் இந்த புறமும் திரும்பிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் நெளிந்துக் கொண்டிருந்ததால் அபிராமிக்கு உறக்கம் வரவில்லை. "என்ன ஆச்சி.?" என்றாள் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு.

"சின்ன டவுட்.." என்றவனை இரவு விளக்கொளியில் சந்தேகமாக பார்த்தவள் "என்ன.?" என்றாள்.

"உனக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா.?" என்றான் அவன் இவளின் விழிகளை பார்த்து.

பல நாட்களுக்கு முன்பே கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது என நினைத்த அபிராமி "ஏன் பிடிக்காம.?" என்றாள்.

"உன் விருப்பம் இல்லாம தாலி கட்டிட்டேன்னு உனக்கு என் மேல் கோபம் இருந்தது.. அது போயிடுச்சா.?" என்றான்.

அபிராமி அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள். சில நொடிகளுக்கு பிறகு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"முதல்ல கோபமாகதான் இருந்தது. ஆனா இப்ப இல்ல.. நீ என் விருப்பம் இல்லாமதான் தாலி கட்டின.. ஆனா நீ என்னை ரொம்ப லவ் பண்ற.. உன்னை போல ஒருத்தன் எனக்கு எங்கே தேடினாலும் கிடைச்சிருக்க மாட்டான்‌. என் அண்ணன் உன்னை அடிச்சும்‌ கூட அவனை திரும்பி பழி வாங்காம என்னை உன்னோடு வர வைக்க விஷம் குடிச்ச.. யார் எனக்காக இந்த ரிஸ்க் எடுப்பாங்க.? நான் மத்த பொண்ணுங்களை போல பெமினிசம் பேச மாட்டேன்.. எனக்கு லவ் மேலயும் அது செய்ற மேஜிக் மேலயும் நம்பிக்கை அதிகம். எனக்காக ஒருத்தன் இருக்கான்.. இதுவே பெரிய விசயம். அதிலும் அவன் எனக்காக எந்த ரிஸ்க் வேணாலும் எடுப்பான்னு தெரிஞ்ச பிறகு நான் ஏன் உன்னை வெறுக்கணும்.. நீ என் அண்ணனை விட அதிகமாக பாசம் காட்டுற.. என் வீட்டுல இருந்திருந்தா கூட எனக்கு இந்த பாசமும் காதலும் கிடைச்சிருக்காது. பணம் எல்லா இடத்திலும்தான் இருக்கு. ஆனா காதல் உன்கிட்டதானே இருக்கு.?" என்று கேட்டவள் மீண்டும் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

கார்த்திக் குழம்பி போனான். அவளை அதிகம் பிடித்திருந்தது. ஆனால் நம்புவதற்கு உறுத்தலாக இருந்தது. காதல் என்று அவள் சொன்னதும் அதிகம் குழம்பி விட்டான் அவன்.

தான் அவள் மேல் வைத்துள்ளது காதல்தானா என்று யோசித்தான்‌. சரியாக தெரியவில்லை‌. அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அப்படியே உறங்கி போனான்.

கற்கள் விற்றதன் கடைசி தவணை தொகையும் வந்தது. முருகன் முக்கால்வாசி கடனை அடைத்து விட்டார்.

"அந்த இடத்துல இருக்கும் கல் இவ்வளவு விலைக்கு விற்கும்ன்னு நாங்க எதிர் பார்க்கவேயில்ல அபிராமி.." என்றான் மூர்த்தி.

அந்த முறை இவர்களது இரு காட்டிலுமே வெள்ளாமை நன்றாக விளைந்திருந்தது. கதிர்களை மெஷினில் அறுத்து, மெஷினில் பிரித்து ஆட்களை வைத்து மூட்டை பிடிக்க வைத்து அவற்றை சந்தைக்கு ஏற்றி விட்டாள். வந்த பணத்தையும் கொண்டு வந்து முருகனிடமே தந்தாள்.

"இவ்வளவு பணமா.? இந்த அளவுக்கு வருமானம் வந்திருந்தா நான் எப்பவோ கடனை எல்லாம் அடைச்சி வீட்டை கூட பிரிச்சி கட்டியிருப்பேனே.." என்றார் முருகன்.

அன்று இரவு ஊரின் தெருவீதியில் நடந்துச் சென்ற குடுகுடுப்பைக்காரன் கார்த்திக்கின் வீட்டு முன்னால் நின்றான்.

"மகாலட்சுமி வந்திருக்கா சாமி.. இந்த வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கா.. இனி அவ தொட்டதெல்லாம் துலங்க போகுது.. அவ கை பட்டதெல்லாம் தங்கமா மாற போகுது.." என்று குடுகுடுப்பை அடித்தபடி சொல்லிவிட்டு கடந்துச் சென்றான்.

நடுஇரவில் கண்விழித்து விட்ட கார்த்திக்கின் குடும்பம் அந்த விசயத்தை கேட்டு ஆச்சரியப்பட்டது. அந்த மகாலட்சுமி அபிராமிதான் என்று அனைவருமே புரிந்துக் கொண்டார்கள்.

யமுனாவிற்கு அபிராமியின் மீது புது அபிப்பிராயம் வந்திருந்தது. இப்போதெல்லாம் சமையல் பொருள் தீரவில்லை. அதுவே அவளுக்கு போதுமென்றிருந்தது. கடன் அடைக்க உதவியாக இருந்தது அபிராமிதான் என்பதால் முருகனுக்கும் அபிராமியை பற்றி நினைக்கையில் மனம் பூரித்தது.

மறுநாள் அபிராமி வேலையாக வெளியே சென்றிருந்த போது மொத்த குடும்பமும் அவளை பற்றி பேசியது.

"நீ செஞ்சது தப்புன்னு இப்போதாவது புரியுதா கார்த்திக்.?" என்றார் அப்பா.

அம்மா கணவரை முறைத்தாள். "எதுக்கு என் பையன் மேல குறை சொல்றிங்க.? அபிராமிக்கும் இப்ப இவனை பிடிச்சிருக்கு.." என்றாள்.

கார்த்திக் வெட்கத்தோடு தரை பார்த்தான்.

"சாரியாவது கேளு கார்த்திக்.." என்றான் மூர்த்தி.

கார்த்திக் சரியென்று தலையசைத்தான்.

அன்று இரவு "அபிராமி சாரி.." என்றான்.

"எதுக்கு.?"

"என்ன இருந்தாலும் நான் செஞ்சது தப்பு.? இப்ப திருந்திட்டேன்.. உன் விருப்பம் இல்லாம தாலி கட்டியிருக்க கூடாது.. சாரி.." என்றான்.

அபிராமி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள். "நமக்கு பிடிச்ச விசயத்தை அடைய எது வேணாலும் செய்யலாம்.. அதனால உன்னை நான் தப்பு சொல்ல மாட்டேன்.." என்றாள்.

அவள் மீது கொண்ட நேசம் உடல் முழுக்க பரவுவது போலிருந்தது அவனுக்கு.

ஒரு வாரம் சென்றது. யமுனா வீட்டில் இல்லாத ஒரு மாலை வேளையில் இந்த வீட்டிற்கு வந்தான் ஈஸ்வர்.

ஈஸ்வரும் அபிராமியும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த அதே நேரத்திற்கு கார்த்திக் அங்கே வந்து சேர்ந்தான்.

கார்த்திக்கை கண்டதும் அங்கிருந்து கிளம்பிய ஈஸ்வர் "போய்ட்டு வரேன் ராமி.. அப்புறம் பார்க்கலாம்.." என்று புன்னகையோடு கையசைத்துவிட்டு சென்றான்.

அபிராமியும் அதே புன்னகையோடு கையசைத்தாள்.

வீட்டை தாண்டி சென்ற ஈஸ்வரை முறைத்தபடியே வாசலுக்கு வந்த கார்த்திக் "உனக்கு அவனோடு என்ன பேச்சு.?" என்றான் கோபத்தோடு.

"நான்.." அவள் சொல்லும் முன்பே அவளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டான் கார்த்திக்.

"அதென்ன சிரிப்பு.. அவனை பார்த்து ஏன் சிரிக்கற.?" என்றான் ஆத்திரம் குறையாமல்.

கண்ணீர் தளும்ப வீட்டின் வாசல்படி மேல் நின்றிருந்தவள் "சாரி.." என்றாள்.

கார்த்திக் அவளை முறைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனின் பின்னால் ஓடி வந்தாள் அபிராமி. "கோச்சிக்காத கார்த்திக்.. சத்தியமா நான் அவர்கிட்ட தப்பா எதுவும் பேசல.." என்று அழுகை குரலோடு சொன்னவள் தன் உள்ளங்கையை அவனிடம் நீட்டினாள். மோதிரம் ஒன்று இருந்தது.

"நிச்சயத்தார்த்த மோதிரம் கேட்டு வந்தார் அவர்‌‌.. நான் கழட்டி என் பிறந்த வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னதும் அவருக்கு நான் போட்டு விட்டத்தை திருப்பி தந்துட்டு போனாரு.. சத்தியமா நான் வேற எதையும் பேசல.." என்றவளின் கண்களில் இருந்து துளி துளியாக கொட்டியது கண்ணீர்.

அவளை சிறிது நேரம் பார்த்து நின்றான் கார்த்திக். அபிராமி ஈஸ்வருக்கு மோதிரம் அணிவித்த காட்சி யோசனையில் வந்தது. கோபம்தான் அதிகரித்தது.

அவளின் கையில் இருந்த மோதிரத்தை எடுத்தவன் ஜன்னல் வழியே தூக்கி வீசினான். இதை அபிராமி எதிர்பார்க்கவில்லை. தன் அதிர்ச்சியை அவள் வெளிக்காட்டவும் இல்லை.

"அந்த நாயோடு இனி எப்பவும் பேசாதே.." என்றவன் அவளின் கன்னங்களை துடைத்து விட்டான். அபிராமி விம்மலோடு அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

அவன் நினைத்திருந்தால் தன் வீரத்தை இவளிடம் காட்டாமல் நேரடியாக ஈஸ்வரின் சட்டையை பற்றி அவனை அடித்து உதைத்திருக்கலாம் என்று அபிராமிக்கும் நன்றாக தெரியும். அவன் அறைந்த கன்னம் எரிந்தது.

நாட்கள் ஓடியது. புவனா முத்தமிழை தேடி போய் சந்தித்தாள். ஆனால் அவன்தான் இவளோடு நெருங்க மறுத்தான்.

"உங்களுக்கு ஏன் எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது.? எப்படி நான் உங்களை லவ் பண்றது.? நீங்க கார்த்தியோட தங்கை. அவன் மேல கொலைவெறியில இருக்கேன் நான்.. உங்களை லவ்வோடு என்னால பார்க்கவே முடியாது. அதையும் மீறி லவ் வந்தா அடுத்து என்ன செய்றது.? உங்களை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டி போக முடியுமா.? எங்க வீட்டுல இருக்கும் எல்லாரும் உங்க அண்ணனை வெறுக்கறாங்க.. அவங்க உன்னை ஏத்துக்கவே மாட்டாங்க.. அதையும் மீறி ஏத்துக்கிட்டாலும் லைப் நார்மலா போகவே போகாது நமக்கு. சின்ன சண்டை வந்து நான் ஏதாவது சொன்னாலும் அது நான் உங்களை பழி வாங்கற மாதிரிதான் உங்களுக்கு தோணும்.. உங்களுக்கு ஏதாவது கோபம் இருந்தா அப்போது எங்க அம்மா ஏதாவது சொன்னாலும் அது உங்களை பழி வாங்கற மாதிரிதான் இருக்கும். ரியாலிட்டி என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. கற்பனை உலகத்துல இல்லாம போய் உங்க வேலையை பாருங்க.‌." என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தான் அவன். இதனால்தான் அவளுக்கு பிடித்திருந்தது. அவன் நேர்மையாக இருந்தான். தன் அண்ணனை போல இல்லாமல் உண்மையாக இருந்தான். புவனாவிற்கு அவன் மீதான காதல் மலை சிகரம் போல வளர்ந்தது. ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்ளாததால் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.

ஒருநாள் வீட்டிலிருந்த மின்சார ஸ்விட்ச் ஒன்றை சரி செய்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அருகே நின்று அவன் ஏறி நின்ற ஸ்டூலை பிடித்துக் கொண்டிருந்தாள் புவனா. வேலை முடியும் முன்பே மின்சாரம் கார்த்திக்கை தாக்கியது.

"அம்மா.." என்று பதறியபடி கையை விலக்கிக் கொண்டான். அவனின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் அபிராமி.

"என்ன ஆச்சி.?" என்றாள் பதட்டத்தோடு.

ஸ்டூலில் இருந்து கீழே குதித்தவன் கையை உதறிக் கொண்டான்.

"ஷாக் அடிச்சிருச்சி.." என்று விளக்கினாள் புவனா.

பதறியபடி அவனருகே ஓடி வந்தவள் "ஷாக்கா.?" என்றபடி அவனின் கையை பார்த்தாள். நன்றாகத்தான் இருந்தான்.

"ஏன் கார்த்திக் இப்படி பண்ற‌.? உனக்கு ஒரு வேலை தெரியலன்னா அமைதியா இரேன்‌.. ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கற.?" என்று கண்களை கசக்கியவள் "நான் பயந்து போனேன் தெரியுமா.?" என்றாள்.

"இவனுக்கு ஒன்னும் ஆகாது.. நீ அழாதே.." என்றாள் புவனா.

தங்கையை முறைத்த கார்த்திக் அபிராமியின் கையை பற்றினான். "எனக்கு ஒன்னும் ஆகல.." என்றான்.

அவனின் சந்தேகம் மனதுக்குள் அப்படியேதான் இருந்தது. ஆனால் இவள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் அந்த சந்தேகத்தின் மீது மெழுகு பூசி மறைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN