மௌனங்கள் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

ரூபியின் மீது கோபம் எனக்கு‌. அவளின் அவசரம் அவளுக்கே ஆபத்தாய் முடியலாம். உலக மக்களை கொல்பவனுக்கு இவளின் ஒரு உயிர் கண்டு என்ன பயம் என்று நினைக்கலாம் நீங்கள். ஆனால் இவள் எனக்கு தங்கையை போல. அவள் மரணத்திற்காக தத்து தரப்பட்டவள். அதனால் அவளின் மரணம் அவளை பாதிக்காது. அவளின் மீது கொஞ்சமாக பாசம் கொண்டு விட்டேன் நான். அதனால் எனக்கு நிச்சயம் வலி இருக்கும்.

இறந்தவனை பரிதாபத்தோடு பார்த்தேன்.

"இது அவனோட கிளப்.. வெளியே அவனோட ஆட்கள் நிற்கிறாங்க.. காலை வரைக்கும் யாரும் தொல்லை பண்ண மாட்டாங்க.. ஆனாலும் நான் கிளம்பறேன்.. இங்கே இருப்பது டேஞ்சர்.." என்றவள் எழுந்து நின்றாள்.

"நான் என் ஹவுஸ்க்கு போனதும் கால் பண்றேன் பாஸ்.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

நான் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி கூரையை பார்த்தேன். அவள் பத்திரமாக தப்பிப்பாளா என்று கவலையாக இருந்தது.

காத்திருந்தேன். மதிய வேளையில் போன் செய்தாள் ரூபி. "வீட்டுல இருக்கேன் பாஸ்.." என்றாள்.

"இனி இப்படி கிறுக்குத்தனம் செய்யாதே.." என்றேன். சரியென்று விட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டாள்.

மாலை வேளையில் கீழ் வீட்டுக்கு சென்றேன். குழலி வரும் முன் அவளுக்காக எந்த வேலையாவது செய்து வைக்கலாம் என்று தோன்றியது. வெகு நேரம் யோசித்துவிட்டு தொலைக்காட்சியை மட்டும் துடைத்து வைத்தேன். அதுவே பெரிய வேலையாக இருந்தது.

மணி ஆறை தாண்டியபோது குழலி வந்தாள்.

"ஹாய்.." என்றாள் புன்னகையோடு.

அவளின் முகம் பார்க்கும் வேளைகளில் தனி உலகில் வாழ்வது போல இருந்தது எனக்கு. ஆழ கடலில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.

அன்று இரவு என் நெஞ்சில் தலை சாய்த்தபடி உறங்க முயன்றவள் உறக்கம் வராமல் என்னை பார்த்தாள். "நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.." என்றாள்.

"என்ன.?" என்றேன்.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.?" என்றாள்.

அவளை பார்த்தேன். என் சட்டையில்லாத நெஞ்சில் பதிந்திருந்த அவளின் முகம் என்னை ஏக்கமாக பார்த்தது. அவளின் முகம் புதைவதற்காக இந்த நெஞ்சம் உருவாகியுள்ளது போல இருந்தது.

"ஏன்.? என்ன அவசரம்.?" என்றேன்.

முகத்திலிருந்து பார்வையை இறக்கியவள் என் கழுத்தை பார்த்தாள்.

"சும்மாதான்.. ஆசையா இருந்தது.. உங்களுக்கு பிடிக்கலன்னா வேணாம்.." என்றாள்.

அவளை அணைத்திருந்த கையை இறுக்கினேன். அவளை என்னுள் புதைக்க வேண்டும் போல வெறியாக இருந்தது.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.." என்றேன்.

இந்த நாட்டில் எனக்கு தந்திருக்கும் வேலை முடிந்ததும் இவளை கடத்திக் கொண்டு தனியொரு காட்டிற்கு போக போகிறேன் நான். தங்சேயா என்னை புரிந்துக் கொள்வார் என்றுதான் நம்புகிறேன். இவள் இல்லாமல் வாழ முடியாது போல் தோன்றுகிறது. இவளை ஒவ்வொரு நொடியிலும் சுவாசிக்க வேண்டும் நான். தினம் கார் இருளில் இவளின் பாதத்தில் படுத்துறங்க வேண்டும் நான். விடியல் இவளின் கருவிழிகளில். என் உறக்கம் இவளின் இதய துடிப்பின் ஓசையில். இவளின்றி நான் இல்லை.

அவளை அணைத்தபடியே உறங்கினேன் நான்.

இந்த வீட்டிற்கு நான் குடி வந்து மூன்றே மாதங்கள் முடிந்து விட்டது. தனசேகர் எங்கோ விலகி போய் விட்டான். என்னை நோக்கி வரும் பாதையிலிருந்து தொலைந்து போய் விட்டான். அவனை திசை திருப்பியது அவனின் உடன் இருந்தவர்கள்தான்.

வெளிநாடுகளில் இருந்து சந்தேகத்திற்கு உரிய வகையில் யாருக்கெல்லாம் பணம் வந்திருக்கிறது என்றும், யாருடைய வங்கி கணக்கில் இருந்து அதிகளவு பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் சோதித்துக் கொண்டிருந்தான் அவன்.

எனக்கு எதற்கு பணம்.? இந்த நாட்டில் இவ்வளவு உயிர்பலி வாங்க சொன்னவன் வேற்று நாட்டான். அவனிடமிருந்து தங்சேயா நேரடியாகவே பணத்தை வாங்கிக் கொண்டு விட்டார். கால் தடமே பதிக்காமல் இந்த மொத்த நாட்டையும் சூறையாட முடியும் என்னால். நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கும் நாய்களால் கூட என்னை மோப்பம் பிடிக்க இயலாது.

காலையில் தம்பி போன் செய்தான். "அண்ணா இனி நீ ஆக்டிவ்வா இருக்கலாம்.. நாட்டை அழிக்க சொன்னவன் மறுபடியும் வந்து எக்ஸ்ட்ரா மணி வந்துட்டு போயிருக்கான். அந்த நாட்டோட வருங்கால தூணை அழிக்கறதுதான் இவங்களோட ப்ளான்.. அந்த நாட்டோட வளர்ச்சியை அடுத்த முப்பது வருசத்துக்கு பின்நோக்கி கொண்டு போகணும்ன்னா அதுக்கு இளைஞர்களைதான் அழிக்கணும்ன்னு நினைக்கிறான். அவனுக்காக இனி நீ அந்த நாட்டு இளைஞர்களை மட்டும்தான் இனி குறி வைக்கணும்னு தங்சேயா சொல்லி இருக்காரு.. குழந்தைகளையும் கூட.. நீ இனி உன் ப்ளேனை கரெக்டா பண்ணியாகணும்.." என்றவன் போனை வைத்து விட்டான்.

நான் ஏற்கனவே தீட்டிய அதே திட்டம்தான். தங்சேயா இப்போதுதான் முழு உத்தரவு தந்திருக்கிறார். இனி அழிக்க போகிறேன்.

அடுத்த நாளே நாட்டின் மேற்கு மாகாணம் ஒன்றின் மிகப்பெரிய பள்ளியில் குண்டு வெடித்தது. அடுத்த நிமிடத்தில் அதன் அருகே இருந்த கல்லூரியிலும் குண்டு வெடித்தது. நிமிடங்கள் ஒவ்வொன்றாய் கடக்க கடக்க அடுத்தடுத்து பத்து கல்வி நிலையங்கள் தரை மட்டமாகியது. அனைத்தும் வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவை. அன்றைய ஒரே நாளில் மட்டும் மாணவர்கள் எட்டாயிரம் பேர் பலி. இதை வெறும் எண்ணிக்கையாக பார்த்தால் அது உங்கள் முட்டாள்தனம். இந்த எட்டாயிரம் வருங்காலத்தில் இதே நாட்டை வலுப்படுத்தும் கைகள். நேரடியாய் யாரும் அரசாங்கத்திற்கே வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை‌. அவன் சமூகத்திற்காக ஒற்றை மரம் நட்டால் கூட போதும். ஒரு மனிதன் இருந்தால் போதும். அதுவே ஒரு நாட்டின் பலம்தான்.

மாணவர்கள் இறப்பிற்கு நாடு அழுதது. மீண்டும் நாட்டின் அனைத்து பள்ளிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டது. நான் வீட்டில் அமர்ந்தபடியேதான் இந்த வேலையை முடித்தேன். எனக்காக பணி செய்ய உங்களுக்குள் ஆயிரம் பேர் உண்டு. அதில் சிலர்தான் இந்த வேலையை இப்போது செய்தார்கள்.

குழந்தை இறந்த தாய்மார்கள் தொலைக்காட்சி செய்திகளில் தோன்றி "நீங்க யாருன்னு சரியா தெரியல.. தயவு செஞ்சி எங்க நாட்டை விட்டு போயிடுங்க.. ப்ளீஸ்.." என்று கதறியழுதார்கள்.

குண்டுகள் வெடித்த மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளிவர கூடாது என்று எச்சரிக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையானது. நாடு தந்த அடையாள அட்டை இல்லாமல் யாரும் எங்கேயும் செல்ல கூடாது என்று போலிஸ் அதிகாரிகள் செய்திகளில் சொன்னார்கள். என்னிடம் அடையாள அட்டை இருந்தது. லஞ்சமும் போலியும் தலைவிரித்தாடும் உங்கள் நாட்டில் நான் நினைத்தால் உங்களை ஆளும் பதவிக்கே கூட சுலபமாக செல்ல முடியும். இதுதான் உண்மை. இதை சொன்னால் உங்களுக்கு கோபம் மட்டும்தான் வரும். ஏனெனில் உண்மையை யாருக்கும் பிடிக்காது.

அன்று இரவு குழலி அதிகம் அழுதாள். நாட்டுக்காக அழுதாள். தன் உடன்பிறப்புகள் இறந்ததற்காக அழுதாள்.

"ஏன் சாகணும்.? எத்தனை கனவுகளோடு வாழ்ந்திருப்பாங்க.? சின்ன சின்ன குழந்தைகளை கொன்னவன் மனிதனே இல்லை.. அரசாங்கம் சுத்த தண்டம்.." என்றாள். அவளுக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை. அரசாங்கம் உதவியென கேட்டால் உயிரை கூட தருவாள். ஆனால் இப்போது தன்னாலும் கையாளாக நிலை அவளுக்கு. நாடு என்றும் நாடு அல்ல. அது மனிதர்களின் கூட்டு என்று நம்புகிறாள் அவள். அரசாங்கம் தோற்கும்போது அவளும் தோற்கிறாள். அரசாங்கத்திற்கு எதிராய் ஒரு சதி‌ நடந்தால் அதில் இவளும் பாதிக்கப்படுகிறாள். இவளுக்கும் அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் இவளை போன்ற அனைவரும் சேர்ந்ததுதான் அரசாங்கம் என்று நினைக்கிறாள்.

வெகுநேரம் அழுதாள். இவளுக்கு அழுக சலிக்கவில்லை என்பதை இன்றுதான் அறிந்தேன் நான். அது கண்களா இல்லை காவிரியா என்று சந்தேகித்தேன்.

"குண்டு வைக்கிறவங்க மட்டும் என் கையில கிடைச்சாங்கன்னா அவங்களை நானே என் கையால கொல்லணும்.. அப்ப கூட ஆத்திரம் தீராது.." என்றாள் அழுகையின் இடையே.

"சரி அழாதே.. முடிஞ்சதை பேசி என்ன பண்ண போற.?" என்றேன்.

அழுகையோடு என்னை நிமிர்ந்து பார்த்தாள். "உங்களுக்கு கோபம் வரலையா.? அவங்க நம்ம நாட்டுலதான் குண்டு வச்சிட்டு இருக்காங்க.. இங்கே சாகிறது நம்ம சொந்த பந்தம்.." என்றாள்.

எனக்கும் கோபம்தான், பசியின் கொடுமை தாளாமல் வீடு வீடாக படியேறி உணவு கேட்ட எனக்கும் என் தம்பிக்கும் ஒரு வேளை உணவிடாமல் துரத்திய அத்தனை மனிதர்கள் மீதும் கோபம்தான். இவள் இன்று சொல்கிறாள் இறந்தவர்கள் அனைவரும் என் சொந்த பந்தம் என்று. பொய்.. பசியால் உணவு இல்லாமல் வயிறு வாடி தினம் தினம் இறக்கும் குழந்தைகள் இவள் கண்களுக்கு தெரியவில்லையா என்ன.? அவள் இவர்களின் சொந்த பந்தம் இல்லையா.? இவள் நினைத்தால் பசியால் தவிக்கும் இருவருக்கு வாரம் இரு வேளையாவது உணவிடலாம். செய்ய மாட்டாள். கடவுளிடம் சென்று 'அனைவரையும் காப்பாற்று..' என்பதோடு இவளின் அக்கறை முடிந்து விடும்.

"அழுதா செத்தவங்க உயிரோடு வந்துடுவாங்களா.? குண்டு வச்சவனுக்கு அவனுக்கு என்ன காரணமோ.?" என்றேன்.

சப்பென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. கன்னத்தை பிடித்தபடி சந்தேகத்தோடு அவளை திரும்பி பார்த்தேன். அழுது வீங்கிய முகத்தோடு என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"அந்த ***பசங்களுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.." என்றாள்.

கெட்ட வார்த்தை.. இவள் கெட்ட வார்த்தையெல்லாம் பேசுகிறாள். சிரிப்பாக வந்தது எனக்கு. பூ போன்ற கையால் அறைந்து விட்டாள். அணுக்குண்டுகளின் வெடிப்புக்களுக்கு இடையே ஒரு பூவிடம் இருந்து முத்தம் போல ஒரு அறை. அந்த கரங்களுக்கு முத்தமிட தோன்றியது. ஆனால் நெருப்பாக முறைத்துக் கொண்டிருந்தாள் என்னை. கோபத்தில் கண்கள் சிவந்து போயிருந்தது.

"சரி விடு.." என்றேன். அவளிடம் கோபப்பட தோன்றவில்லை. அனுபவத்தில் இவள் ஒரு குழந்தையை போல. சமுதாயத்தின் நிலவரம் கூட சரியாக தெரியாது இவளுக்கு. இவளின் ஆசையெல்லாம் பூக்களின் வண்ணமும், தோழிகளுடனான சிரிப்புதான்.

யாரையும் நம்புகிறவள் இந்த சமுதாயத்திற்கு உகந்தவள் அல்ல. நாட்டையே கொளுத்திக் கொண்டிருக்கும் என்னை கண்டு நீங்கள் கூட பயந்து போயுள்ளீர்கள். ஆனால் இவள் அருகில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

அருகில் இருப்போரின் பசியழுகையை கூட கண்டுக் கொள்ளாமல் அந்நியரை கண்மூடித்தனமாக நம்புவது உங்களுக்கு கை வந்த கலைதான். அது எனக்கும் நன்றாக தெரியும்.

இரவில் மணல்வெளியில் அமர்ந்து நட்சத்திரங்களை ரசிப்பீர்கள். நிலவின் அழகை ரசிப்பீர்கள். ஆனால் நீங்கள் வாழ காரணமான இந்த பூமியின் சிறப்பை பற்றி கண்டுக் கொள்ள மாட்டீர்கள்.

அன்று இரவு உணவை உண்ணாமல் உறங்க சென்று விட்டாள் அவள். உணவை தட்டில் பரிமாறிய எனக்கு உண்ண ஒப்பவில்லை. நான்தான் காரணமென்று அறிந்தால் என்னையும் கொல்வாளா என்று சந்தேகம் வந்தது. உதடுகளில் சிரிப்புதான் வந்தது. ஆனால் உள்ளத்தில் பதற்றமாக இருந்தது.

காதல் வயப்பட்டதை போல மோசமான ஒரு தவறை நான் செய்ததே இல்லை. இந்த தவறு இன்னும் எவ்வளவு மோசமாக போகுமோ என்றும் தெரியவில்லை.

இரண்டு நாட்கள் கழிந்தது. நான் குடியிருக்கும் இடத்திலிருந்து இரு கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த வீடியோ கேம் அரங்கம் அது. பள்ளி கல்லூரி விடுமுறையால் இளைஞர்கள் பலரும் அங்கேதான் கூடியிருந்தார்கள். குண்டு வைக்கதான் வந்திருந்தேன். ஆனால் இந்த குண்டு வைப்பு எனக்கே எதிரியாய் மாற போகிறது என்பதை அப்போது அறியவில்லை நான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN