காதல் கடன்காரா 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக்கின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்துக் கொண்டிருந்தாள் அபிராமி.

அன்று நீதிமன்றத்தில் ஈஸ்வருக்கு விசாரணை நடந்தது. சாட்சி சொல்ல சென்றான் கார்த்திக். அவனுக்கு துணையாக அபிராமியும் முருகனும் சென்றார்கள்.

"என்னால கை காலை கூட அசைக்க முடியல.. அவ்வளவு அடிப்பட்டு படுத்திருந்தேன்.. ஈஸ்வர்தான் எனக்கு விஷம் தந்தான்.." என்றான் விசாரணை கூண்டில் நின்று சாட்சி சொன்னான் கார்த்திக்.

"கார்த்திக் ரொம்ப சீரியஸா இருந்ததுக்கான ரிப்போர்ட் இது.. மிஸ்டர் ஈஸ்வர் இவரை பார்க்க வந்தது பதிவான சிசிடிவி காட்சி ரிப்போர்ட், மற்றும் அவர் விஷம் தருகையில் மிரட்டியதுக்கான ஆடியோ ரெக்கார்ட்.." என்று அனைத்தையும் நீதிபதியிடம் தந்தார் கார்த்திக்கின் வக்கில்.

ஈஸ்வரின் வக்கில் தன் இருக்கையிலிருந்து எழுந்தார்.

"அது அத்தனையும் ஜோடிக்கப்பட்டவை யுவர்ஆனர். கார்த்திக்கையும் இந்த ரிப்போர்ட் எழுதிய மருத்துவரை நான் விசாரிக்க அனுமதி கொடுங்கள் யுவர்ஆனர்.." என்றார் அவர்.

"விசாரிக்கலாம்.." நீதிபதி அனுமதி தந்த சில நொடிகளில் எங்கிருந்தோ வந்தார் மருத்துவர். சாட்சி கூண்டில் ஏறி நின்றார்.

"கார்த்திக் எதனால் உங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்து அட்மிட் ஆனார்ன்னு சொல்றிங்களா.?" விசாரணையை தொடங்கினார் எதிர்க்கட்சி வக்கீல்.

மற்றொரு கூண்டில் நின்றிருந்த கார்த்திக் வக்கீலை முறைத்தான்.

"லாரியில் விழுந்து அடிப்பட்டுட்டாருன்னு சொன்னாரு.." என்றார் மருத்துவர்.

"இன்ஸ்பெக்டர் மூர்த்தி அவர்களையும் விசாரணைக்கு வரும்படி அழைக்கிறேன் யுவர்ஆனர்.." எதிர்க்கட்சி வக்கீலுக்கு நீதிபதி அனுமதி தந்தபிறகு மருத்துவரின் அருகே வந்து நின்றான் மூர்த்தி.

"சம்பவம் நடந்த இடம் உங்க ஸ்டேசன் கட்டுப்பாட்டுக்குள்ளதானே வருது.?" என கேட்ட வக்கீலிடம் ஆமென தலையசைத்தான் மூர்த்தி.

"அப்ப ஏன் இந்த வழக்கை நீங்க பதிவு செய்யல.? லாரி ஆக்ஸிடென்ட் பத்தி நீங்க கம்ப்ளைண்ட் பதிவு பண்ணாததுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா.?" என்றார் அவர். அந்த ஸ்டேசனில் வேலை பார்க்கும் கான்ஸ்டபிளின் உதவியால்தான் இந்த விசயத்தை அறிந்திருந்தார் அவர்.

"நான் கேஸ் எழுதியிருக்கேன்.." என்ற மூர்த்தி எங்கோ பார்த்து கண் சைகை காட்டினான். எதிர்க்கட்சி வக்கீல் குழப்பத்தோடு திரும்பி பார்த்தார். அவருக்கு உதவி செய்த அதே கான்ஸ்டபிள் எப்.ஐ.ஆர் நோட்டை நீதிபதியிடம் தந்தார்.

"அடையாளம் தெரியாத வாகனத்தால் இவர் அடிப்பட்டாருன்னு முதல் தகவல் அறிக்கையை பதிவு பண்ணிட்டேன் நான்.." என்றான் மூர்த்தி.

"அது பொய் யுவர் ஆனர். இந்த கார்த்திக்கிற்கு எங்கேயும் அடிப்படல.. என் கட்சிக்காரர் ஈஸ்வரோடு அவங்களுக்கு ஏற்கனவே முன்விரோதம். அதுக்காக அவங்களை பொய் கேஸ்ல மாட்டி விடணும்ன்னுதான் இந்த திட்டத்தையே அவங்க தீட்டி இருக்காங்க.. அதுக்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் உடந்தையா இருந்திருக்காரு.. எந்த அடியும் படாமலேயே இவர் பொய்யா போய் ஹாஸ்பிட்டல் சேர்ந்திருக்காரு.. அடிப்பட்டவரை நலம் விசாரிக்க போயிருக்கார் எங்க கட்சிக்காரர். அதை பயன்படுத்தி அவர் மேல பொய் பழி போட்டிருக்காங்க இவங்க.." என்றார்.

"எதிர்க்கட்சி வக்கீல் தன் அனுமானத்தை மட்டுமே சொல்லி கேஸை திசை திருப்ப முயல்கிறார் யுவர்ஆனர்.." என்றார் கார்த்திக்கின் வக்கில்.

"அனுமானம் இல்லை யுவர்ஆனர்.. என்னிடம் ஆதாரங்கள் உண்டு. மிஸ்டர் கார்த்திக் தன் பெரியப்பா குடும்பத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே தூவேசமாகதான் இருந்து வந்துள்ளார். ஈஸ்வரின் திருமணத்தை நிறுத்தி அவருக்கு பார்த்திருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி வந்துள்ளார் கார்த்திக். அதன்பிறகே ஈஸ்வரை மேலும் பழி வாங்க வேண்டும் என முடிவெடுத்து இந்த விபத்தையும், விஷம் குடித்த சம்பவத்தையும் ஜோடித்துள்ளார்.." என்றவர் மேலும் சொல்லும் முன் "இல்லை.. நீங்க பொய் சொல்றிங்க.." என்று சொல்லியபடி எழுந்து நின்றாள் அபிராமி.

நின்றிருந்து இடத்திலிருந்து ஓடி வந்தவள் "நான் என் சாட்சியை சொல்ல அனுமதி கொடுங்க.." என்றாள் நீதிபதியை பார்த்து. அவர் சரியென்றதும் கார்த்திக் நின்றிருந்த கூண்டிலேயே ஏறி நின்றாள்.

"வக்கீல் சார் சொல்ற எல்லாமே பொய் யுவர்ஆனர்.. நானும் கார்த்திக்கும் கடந்த அஞ்சி வருசமா லவ் பண்றோம்.. என் விருப்பம் இல்லாமதான் எங்க வீட்டுல திருமண ஏற்பாடு செஞ்சாங்க.. அதனாலதான் நான் கார்த்திக்கோடு கிளம்பி வந்துட்டேன்.. ஆனா எங்களோட காதலை எதிர்க்கட்சி வக்கீல் கொச்சைபடுத்துறாரு.." என்றவள் கண்களை கசக்கியபடி கீழே இறங்கினாள்.

நீதிபதிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

"இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கிறேன்.." என்றார் அவர்.

வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்படுவது ஈஸ்வருக்கும் அவனது வக்கீலுக்கும் நிம்மதியை தந்தது.

"ஈஸ்வரோட வக்கீல் ரொம்ப மோசம்.. சம்பந்தமே இல்லாம நிறைய விசயத்தை இழுக்குறான்.." என்றான் மூர்த்தி வீட்டிற்கு வந்த பிறகு.

"ஆமா.. தேவையில்லாம கேஸை தள்ளி போடுறாங்க.." என்று கார்த்திக்கும் எரிச்சலானான்.

"இதுக்குதான் முதல்லயே சொன்னேன் நான்.. கேஸும் வேணாம்.. கோர்ட்டும் வேணாம்ன்னு.. யார் கேட்டிங்க.. இதெல்லாம் தேவையில்லாதது.. அவங்க தப்பு செஞ்சாங்கன்னா அவங்களை கடவுள் பார்த்துப்பாரு.." என்றார் முருகன்.

கார்த்திக் தந்தையை முறைத்தான். "இரண்டு தலைமுறையா கண்டுக்காத கடவுள் இனி அவங்களை பார்த்தாதான் என்ன பார்க்கலன்னாதான் என்ன.?" எரிச்சலோடு கேட்டவன் அண்ணன் பக்கம் பார்த்தான். "நாம இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கான திட்டமா போட்டிருக்கணும்ன்னு நினைக்கிறேன்.." என்றான்.

மூர்த்தி எழுந்து நின்றான். "நாம இல்ல நான்னு உன்னை மட்டும் சொல்லு.." என்றவன் "உன்னால எனக்கும் இப்ப ரிஸ்க்.. தேவையில்லாம என் வொர்க்கையெல்லாம் நோண்டுறான் அவன்.." என்று திட்டிவிட்டு தந்தையின் அறைக்குள் புகுந்தான்.

"இந்த அடிப்பட்ட காலோட தழும்பை பார்த்தும் கூட இதை பொய்யுன்னு சொல்லிட்டானே அந்த வக்கீல்.. என்ன தைரியத்துல வாதாடுறாங்க இவங்க.. சாட்சி கண் முன் இருந்தா கூட அதை பொய்யுன்னு சொல்லி வாதாட இந்த மாதிரியான சில வக்கீல்களால் மட்டும்தான் முடியும் போல.." என்று சலித்துக் கொண்டவன் தனது அறையை நோக்கி நடந்தான்.

"இவனை பெத்ததுக்கு பதிலா சாமியாரா போயிருக்கலாம் நான்.." என முனகிய முருகன் மனைவி கிச்சனில் தனியாக அமர்ந்து முருங்கை கீரை ஆய்வதை கண்டு அவளுக்காவது உதவி செய்யலாம் என நினைத்து எழுந்து சென்றார்.

கார்த்திக்கின் போனில் பாடலை கேட்டுக் கொண்டிருந்தாள் அபிராமி. கட்டிலின் ஒரு ஓரமாக படுத்திருந்தவளின் அருகே வந்து அமர்ந்த கார்த்திக் "அந்த வக்கீல் சரியான திமிர் பிடிச்சவன் அபிராமி.. உன்னையும் தேவையில்லாம இழுத்துட்டான்.." என்றான்.

அபிராமி பாடலை நிறுத்திவிட்டு எழுந்து அமர்ந்தாள். "எனக்கும் அவர் மேல கோபம்தான்.." என்றவளின் முகம் பற்றி திருப்பினான்.

"நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ண.?" என்றான்.

அபிராமி அவனை அணைத்துக் கொண்டாள். "என் புருசனை நான் எப்படி விட்டு தர முடியும்.? என்னை பிடிச்சிருக்குன்னு நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நான் உன்னை பிடிச்சிருக்குன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.. இதுல அவங்களுக்கு என்ன இடையில வேலை.?" என்றாள்.

அபிராமியை தன்னிடமிருந்து விலக்கியவன் அவளின் கன்னங்கள் இரண்டையும் பற்றினான். "உனக்கு என்னை பிடிச்சிருக்கா.?" என்றான். அவளின் பதிலை எதிர்பார்த்து அவனின் கண்கள் ஆவலாக மின்னியது.

சிரிப்போடு அவனின் தோளில் அடித்தாள் அபிராமி. "லூசு மாதிரி கேள்வி கேட்கற.. பிடிக்காமலா இத்தனை மாசம் உன்னோடு வாழ்வேன்.? உண்மையை சொல்லணும்ன்னா ஹாஸ்பிட்டலேயே உன்னை எனக்கு பிடிச்சிருச்சி.. ஆனா சின்ன கோபம்.. அதனால உடனே சொல்ல முடியல. அப்ப சொல்லியிருந்தாலும் நீ என்னை நம்பியிருக்க மாட்டியே.!" என்றாள்.

அவளின் கண்ணின் மணிகளை பார்த்தான் கார்த்திக். இவனையே அழுத்தமாக பார்த்தன அவை. அவள் இமையை அசைக்கும் பொழுதுகளில் அவனது இதயம் துள்ளியது. வழவழப்பாக இருந்தது அவளின் மூக்கு. மூக்கின் மீது விரலை வைத்து கோடு இழுத்தான். இதழின் மீது வந்து நின்றது விரல். மென்மை.. பூவிதழை போன்று மென்மை. அழுத்தி தொட்டால் காயம் பட்டு விடுமோ என்று பயந்தது அவனது கை விரல்கள்.

"அழகி நீ..!" என்றவன் அவளின் இதழில் அழுத்தமாக தன் உதடுகளை பதித்தான்.

இப்படியே இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அவளை தினம் பூஜிக்க வேண்டும் போல இருந்தது. அவளின் மேனியை தினம் கொண்டாட வேண்டும் போலிருந்தது.

அவன் அவளை விட்டு விலகிய போது அபிராமி கண்களை மூடியிருந்தாள். பக்தனுக்கு வரம் அளிக்கும் சாமியை நினைவுப்படுத்தினாள். தன்னை மீறி மீண்டும் முத்தம் பதித்தான் கார்த்திக்.

ஊரை விட்டு ஒதுங்கி இருந்த தங்களது விவசாய களத்தில் நின்று வேலைக்காரர்கள் தானியங்களை போரடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்‌. முத்தமிழ் அவனோடு பேச நினைத்து அங்கே வந்தான். அவனை பார்த்து புன்னகைத்தான் ஈஸ்வர்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஈஸ்வர்.." என்று அழைத்தான் முத்தமிழ்.

"அந்த பக்கம் போகலாம் தமிழ்.. இங்கே உமி பறக்குது.." என்ற ஈஸ்வர் அவனை அழைத்துக் கொண்டு தூரமாக வந்தான்.

"சொல்லு தமிழ்.." என்றவனை கோபத்தோடு பார்த்தவன் "உங்க சண்டையில் என் தங்கையை இழுக்காத.. உன் கேஸ்ல நீ ஜெயிக்க வேற எது வேணாலும் செய்.. நான் குறுக்க வர மாட்டேன்.. ஆனா எப்போதும் என் பாப்பாவோட பேரை கூட யூஸ் பண்ணாதே.." என்றான் எச்சரிக்கும் குரலில்.

ஈஸ்வரின் முகம் கறுத்து விட்டது. "நீதான் தங்கச்சின்னு உயிரை விடுற.. ஆனா அவ உங்க எல்லோரையும் தூக்கி போட்டுட்டா.. அவனை அஞ்சி வருசமா காதலிச்சதா வந்து சாட்சி சொல்றா.. இது உங்க குடும்பத்துக்கு எவ்வளவு கேவலம் தெரியுமா‌.? இதே அவ என் தங்கச்சியா இருந்திருந்தா அவளை அங்கேயே வெட்டி புதைச்சிருப்பேன்.." என்றான் ஆத்திரத்தோடு.

தன் பொறுமை அத்தனையையும் பயன்படுத்தி அமைதி காத்தான் முத்தமிழ். "என் பேமிலி மேட்டர்ல தலையிடாதே ஈஸ்வர்.! என் தங்கச்சியை வேற யாருக்காவது கல்யாணம் பண்ண பேசியிருந்தா எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.. இத்தனை பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளியே உன் கூட சம்பந்தம் பேசியதுதான்.! சொத்துக்காக சித்தப்பன் மகனுக்கு விஷம் தந்த நீ மறுபடியும் அதே சொத்தை காப்பாத்திக்க சூழ்நிலை வந்தா மனைவின்னு கூட பார்க்காம என் தங்கையையும் கூட கொன்னிருப்ப.. இதுவே லாஸ்ட் வார்னிங்.. இனி என் பாப்பா பேரை எங்காவது யூஸ் பண்ணனும் சேதி வந்ததுன்னா உன் சமாதிக்கு அடுத்த நாளே பால் ஊத்த வேண்டி வரும். கவனம்..!" என்று எச்சரித்து விட்டு நகர்ந்தான்.

ஈஸ்வருக்கு அவமானத்தில் முகம் கறுத்துப் போனது. கார்த்திக்கையும் மூர்த்தியையும் தவிர வேறு யாரும் இவனின் நேர் நின்று இப்படி அதட்டலாக பேசியதே இல்லை. இப்போது அந்த பட்டியலில் முத்தமிழும் சேர்ந்திருந்தான்.

கல் வெட்டிய வயலில் இருபதடி ஆழம் இருந்தது. அதில் சரிவான மண் பாதையை உருவாக்கி இருந்தாள் அபிராமி. அந்த வருடத்தின் மழை காலத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சுற்றி இருந்த வயல்காரர்களின் வயலில் நிரம்பி வழிந்த மழை முழுதும் இந்த பள்ளத்தில் வந்துதான் நின்றது.

"ரொம்ப நன்றிம்மா.. இவ்வளவு மழை பெய்யுது.. பயிர் அழுகிடுமோன்னு நினைச்சோம் நாங்க.. உங்க பள்ளத்தால்தான் எங்க வயல் தப்பிச்சது‌.." என்று அபிராமியிடம் நன்றி தெரிவித்தார்கள் அவர்கள்.

அவளுக்கு அந்த வயல்காரர்களின் பயிரை பற்றி கவலையில்லை. அவள் எதிர்பார்த்தது போலவே அந்த குழியில் செம்மண் இரண்டடிக்கு நின்றிருந்தது. அடித்து வந்த மழையில் வந்து சேர்ந்த மண் அது. சுற்றி இருந்த குழியின் சுவர்களை ஒட்டி ஏற்கனவே உடைத்த பெருங்கற்களின் வேஸ்ட் கற்களை வைத்து சுவர் எழுப்பி இருந்ததால் சுவர்கள் மட்டும் விழாமல் இருந்தன.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN