காதல் கடன்காரா 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குழி காட்டில் தண்ணீர் வற்றியதும் டிராக்டர் விட்டு உழுது விதைத்தாள் அபிராமி. இயற்கை அவளுக்கு துணை புரிந்தது எனலாம். ஏனெனில் அவள் அந்த காட்டில் விதைத்த பிறகு பெரும் மழை வரவில்லை. அவ்வப்போது சிறு தூறல் மட்டும் வந்தது. அந்த வெள்ளாமையையும் வெற்றிகரமாக விற்று லாபம் காட்டினாள் அபிராமி.

முருகனுக்கு தன்னை நினைத்து கோபம் வந்தது. தன் சொத்தை தான் நம்பாமல் போய்விட்டோமே என்று கவலை கொண்டார்.

"நன்றி அபிராமி.. நீ இல்லன்னா இந்த குடும்பம் இன்னும் ரொம்ப மோசமாகியிருக்கும்.. இந்த பன்னாடை விஷம் குடிச்சி இழுத்து விட்ட கேஸாலயே எங்க குடும்பம் அழிஞ்சிருக்கும்.. நீ செஞ்ச உதவியாலதான் கடன் முழுசா கட்டியிருக்கேன்.." என்றார் மருமகளிடம்.

அபிராமி புன்னகையை தவிர வேறு பதில் தரவில்லை.

கார்த்திக் அதிகம் கொஞ்சினான் அவளை. இவளும் அவனுக்கு சமமாக அவனை கொஞ்சினாள்.

வழக்கு மீண்டும் இழுத்தடித்தது. 'ஈஸ்வர்தான் விஷம் தந்தான்..!' என்பதற்கான ஆதாரத்தையும் இவர்கள் சமர்ப்பித்தார்கள். அதே வேளையில் ஈஸ்வர் தன் குடும்பத்தின் மீது கார்த்திக் கொண்டுள்ள வன்மத்தை பற்றிய ஆதாரங்களையும் சமர்ப்பித்தான்.

யார் குற்றவாளி என்று நிர்ணயிப்பதில் நீதிபதிக்கு தயக்கம் இருந்தது. விஷ பாட்டிலிலும் யாரின் கை ரேகையும் இல்லை. வழக்கை மீண்டும் மீண்டும் ஒத்திப்போட்டார் அவர்.

ஈஸ்வருக்கு உடலில் என்னவோ பிரச்சனை உருவானது. கட்டுமஸ்து உடம்போடு கம்பீரமாக இருந்தவனின் உடல் கரைய ஆரம்பித்தது. இரண்டு மூன்று மாதங்கள் கடந்ததும் அரை உடம்பாய் இளைத்து போனான். அடிக்கடி காய்ச்சல் வந்தது. தினமும் உணவு உண்டதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தான். வயிற்றுப் போக்கும் நிற்கவில்லை அவனுக்கு.

டாக்டர்கள் பலரிடமும் சென்று சோதித்து பார்த்தாகி விட்டது. ஊசியாய் குத்தி குத்தி உடல்தான் புண்ணானதே தவிர உடம்பு குணமாகவில்லை. மருத்துவர்களும் மாத்திரைகளையும் மருந்துகளையும் எழுதி தந்தார்களே ஒழிய என்ன பிரச்சனை என்று அவர்களாலும் கண்டறிய முடியவில்லை.

கன்னங்களில் இருந்த சதை தீர்ந்து எலும்புகள் பளிச்சென்று தெரிந்தன. ஈஸ்வருக்கு தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே பயமாக இருந்தது.

"எயிட்ஸ் வந்துடுச்சா.?" என்றுக் கேட்டார்கள் அவனின் நண்பர்கள் சிலர்.

ஈஸ்வர் தன் வீட்டை விட்டே வெளிவரவில்லை. சுற்றுபுறம் அவனை சந்தேகத்தோடு பார்த்தது.

நாட்டு மருத்துவர்கள் சிலரை வீட்டுக்கே அழைத்து வந்து மகனின் உடலை பரிசோதிக்க சொன்னார் ஈஸ்வரின் தந்தை.‌

"பிரச்சனை என்னன்னு கண்டுபிடிக்க முடியல.. பையன் முகத்தை பார்த்தா இது வேற என்னவோன்னு தோணுது.. சாமியாரை பாருங்க.." என்றார் கடைசியாக வந்து பார்த்த நாட்டு வைத்தியர்.

யோசித்து பார்த்துவிட்டு அந்த ஊரிலிருந்த சாமியாரை வீட்டுக்கு அழைத்தார் ஈஸ்வரின் அப்பா.

"என் பையனுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க சாமி.‌." என்றாள் அவளின் அம்மா.

சாமியார் ஈஸ்வரை உற்று பார்த்தார். என்னவோ முனகினார். திடீரென்று சாமி வந்து ஆடினார்.

"முன்னோரின் பகையும் குலதெய்வ குறையும் உன் பையனை பிடிச்சிருக்கு.. நீ செஞ்ச தப்பையெல்லாம் சரி செய்யலன்னா இந்த குடும்பத்துக்கு வாரிசே இல்லாம போயிடும்.." என்றார்.

ஈஸ்வரின் அப்பா குழம்பினார்.

"முன்னோரோடு எந்த பகையும் இல்லையே சாமி.." என்றவரிடம் "இருக்கு.. உன் முப்பாட்டன் சம்பாதிச்சதை அவர் வாரிசுகளுக்கு தராம ஒருத்தனே அனுபவிக்கிற நீ.. நீ உன் தப்பை சரிகட்டலன்னா உன் குடும்பத்துக்கு வாரிசே இருக்காது.." என்றார்.

ஈஸ்வரின் அம்மாவும் அப்பாவும் இவர் சொன்னதை நம்பவில்லை. சாமியாரை நம்ப கூடாது என்று சொல்லிக் கொண்டவர்கள் மீண்டும் மருத்துவர்களையே அணுகினர். வெளிநாடுகளுக்கு கூட அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தார்கள்.

நாளாக நாளாக ஈஸ்வரின் உடம்பு இன்னும் மோசமாகி கொண்டே சென்றது.

கார்த்திக்கின் குடும்ப கடன் முழுதும் தீர்ந்து விட்ட காரணத்தால் மூன்று ஆண்களின் சம்பாதியமும் வீட்டில் சேமிப்பாக நிற்க ஆரம்பித்தது.

"மகாலட்சுமி வந்த நேரம்.." என்று அபிராமியின் காதுபடவே கணவனிடம் புகழ ஆரம்பித்தாள் யமுனா.

புவனாவின் படிப்பில் இருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்தாள் அபிராமி. "புத்திசாலி அண்ணி.." என்றாள் அவள். முன்பு போல பெயர் சொல்லி அழைக்காமல் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தாள்.

மூர்த்தியிடமும் நல்ல நட்பு இருந்தது அபிராமிக்கு.

"என் தம்பி மேல் இருக்கற கோபத்தை மறந்துட்டு நீயும் அவனும் நல்லா வாழணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன்.." என்றான் மூர்த்தி.

"என்ன இருந்தாலும் என் புருசன்தானே.? மஞ்ச கயிறுக்குன்னு ஒரு சக்தி இருக்கு இல்லையா.?" என்றவள் வெட்கத்தோடு தலைகுனிந்து "அதுவும் இல்லாம உங்க தம்பியோட காதலை முழுசா புரிஞ்சிட்ட பிறகும் யார்தான் அவரை வெறுப்பாங்க.?" என்றாள்.

மூர்த்தி மகிழ்ந்தான் அவளின் பதில் கேட்டு.

கார்த்திக் அவளை சினிமாவுக்கு அழைத்துச் சென்றான். இருவரும் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று உணவு உண்டார்கள். கோவில்களின் படிகளை ஏறுகையில் இருவரும் கையை கோர்த்துக் கொண்டே நடந்தனர்.

"பேபி, செல்லம், அம்மு, அழகு, குட்டி.." என்று செல்ல பெயர்கள் பலவற்றையும் பயன்படுத்தி ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டனர்.

ஒருநாள் இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தண்ணீர் தாகமெடுத்து எழுந்தாள் அபிராமி. மூக்கை கசக்கியபடியே தண்ணீர் குடிக்க சமையலறைக்கு நடந்தவள் பாதியிலேயே நின்றாள்.

மூச்சை இழுத்து விட்டாள். "அத்தை.. மாமா.. புவனா.. கார்த்திக்.." என்று உடனே அலற ஆரம்பித்தாள்.

அபிராமியின் குரல் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். ஹாலின் விளக்கை ஒளிர விட்டான் கார்த்திக். ஆளாளும் மூக்கை கசக்கினார். மூச்சுக்காற்றை இழுத்து விட்டனர்.

"கேஸ் வாசம்.." என்ற யமுனா கிச்சனை நோக்கி ஓடினாள்.

மூர்த்தியும் கார்த்தியும் வீட்டின் ஜன்னல்களையும் கதவையும் திறந்து வைத்தார்கள்.

கிச்சனின் ஜன்னலருகேதான் இருந்தது அவர்களின் கேஸ் அடுப்பு. ஆனால் அவ்வளவு சுலபத்தில் வெளியே இருக்கும் யாருக்கும் எட்டாது. ஆனால் இன்று யாரோ அதன் டியூப்பை வெளியிலிருந்து அறுத்து விட்டிருந்தார்கள். திறந்திருந்த ஜன்னலின் வெளியே யாரோ நிற்பதும் அரை இருளில் தெரிந்தது. அவர்கள் தீக்குச்சியை தீப்பெட்டியோடு உரசுவதும் இருளில் தெரிந்தது. யமுனாவின் பின்னால் வந்த அபிராமிதான் அந்த மர்ம மனிதனை பார்த்தாள்‌.

"எல்லாம் வெளியே போங்க.. யாரோ நெருப்பு வைக்கிறாங்க.." என்றவள் யமுனாவை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

பதட்டத்தில் இருந்தது மொத்த குடும்பமும். மொத்த பேரும் வெளியே வந்த அதே நேரத்தில் அந்த வீட்டின் சமையலைறையிலும் மத்த அறைகளிலும் நெருப்பு பரவியது.

சிலிண்டர் வெடித்த நேரத்தில் வாசலுக்குதான் வந்திருந்தனர் அனைவரும். மற்ற யாருக்கும் பாதிப்பு இல்லைதான். அனைவரும் வாசலிலிருந்து சாலைக்கு வருவதற்குள் அபிராமியின் சேலை முந்தானையில் நெருப்பு பற்றி விட்டிருந்தது.

"அம்மா.." என்று கத்தியவளை கண்டதும் பயந்து விட்டனர் அனைவரும்.

"அபிராமி.." என்று பதறினான் கார்த்திக்.

எரிந்த வீட்டை யாரும் கவனிக்கவில்லை. முண்டாசு கட்டியபடி வீட்டின் பின்பக்கத்தில் ஒருவன் ஓடுவதையும் யாரும் கவனிக்கவில்லை.

"அபிராமி பயப்படாம இரு.." என்ற மூர்த்தி தண்ணீர் தேடி ஓடினான். கார்த்திக் தன் சட்டையை அவசரமாக கழட்டி அபிராமியின் புடவை முந்தானையில் இருந்த நெருப்பை அணைக்க முயன்றான். நல்லவேளையாக அவள் துள்ளிக் குதிக்காமல் நின்றாள்.

நெருப்பு அணைய மறுத்தது. வெகுவாக அவன் போராடிக் கொண்டிருந்த நேரத்திலேயே முருகன் ஒரு வாளி தண்ணீரை கொண்டு வந்து அபிராமியின் மீது ஊற்றினார். நெருப்பு அணைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்தான் கார்த்திக்.

அபிராமி உடல் நடுங்கியபடி அழுதுக் கொண்டிருந்தாள். கார்த்திக்கிற்கு அவளை பார்த்து பரிதாபமாக இருந்தது. பெற்றோர் சுற்றியிருப்பதை கூட கண்டுக் கொள்ளாமல் அவளை அணைத்துக் கொண்டான்.

"ஒன்னும் ஆகல.. அழாதே‌‌.." என்றான் கொஞ்சல் குரலில் அவளின் செவியோரம்.

இவர்களின் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் தூக்கம் தெளிந்து எழுந்து வந்தனர். இரு பக்கமுமே வீடுகள் எதுவும் ஒட்டியில்லாததால் நெருப்பு எங்கும் பரவவில்லை.

"கார்த்திக் வீடு நெருப்பு பிடிச்சிருக்கு.." என்ற யாரோ ஒருவர் தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தார்கள்.

அடுத்த நாள் ஊரே பரபரப்பாக இருந்தது. தீயணைப்பு வண்டி ஒன்று கார்த்திக்கின் வீட்டிலிருந்த நெருப்பை இரவோடு இரவாகவே அணைத்துவிட்டு சென்றிருந்தது.

கார்த்திக்கின் குடும்பம் மொத்தமும் தங்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தது. கவலையில் இருந்தது அவர்களின் முகம்.

அந்த வீடு பல இடங்களில் கரியாய் போய் இருந்தது. சமையலறை மொத்தமும் சேதம். கார்த்திக்கின் அறையிலும் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்திருந்தது.

அபிராமி நடுங்கியபடி வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தாள். குளித்திருந்தாள். யமுனாவின் புடவையை அணிந்திருந்தாள். அவளும் கார்த்திக்கும் இருந்த அறையில் சுவர் இடிந்து விழுந்திருந்ததால் அவளால் தன் உடையை கூட எடுக்க முடியவில்லை.

கண்கள் இரண்டிலும் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது அபிராமிக்கு.

மூர்த்தியும் கார்த்தியும் சென்று ஸ்டேசனில் புகார் தந்து வந்தனர். மூர்த்தி அன்று வேலைக்கு செல்லவில்லை. புகார் தந்து வந்ததும் அபிராமியின் அருகே வந்து அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டான் கார்த்திக்.

அபிராமி அவனின் அருகாமையில் இன்னும் அதிகமாக அழுதாள். "ரொம்ப பயந்துட்டேன்.." என்று அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கண்ணீர் வீட்டாள்.

"நானும்தான்.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவனின் கைகள் இரண்டும் சிவந்து போயிருந்தது. அதை கவனித்த அபிராமி அழுகையை நிறுத்திவி ட்டு அவனின் கையை பற்றினாள்.

"என்ன ஆச்சி.?" என்றாள்.

"புடவையில் பிடிச்சிருந்த நெருப்பை அணைக்கையில் கை சுட்டுடுச்சி.." என்றான் அவன். அபிராமியை இழந்து விடுவோமோ என்று பயந்து விட்டிருந்தான் அவன். அந்த நொடி வரையிலுமே காதலை பற்றி முழுதாக அறியவில்லை அவன். ஆனால் அபிராமியின் புடவையில் நெருப்பை கண்ட கணத்தில் தன் உயிரையே இழந்தது போலாகி விட்டான் அவன்.

அவனின் கையை கண்டு அதற்கும் அழுதாள் அபிராமி.

பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் உணவு சமைத்து கொண்டு வந்து இவர்களின் வீட்டு திண்ணையில் வைத்தனர்.

"தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சேன்னு நினைங்க.. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்காம இருந்திருந்தா நீங்க மொத்த பேருமே நெருப்புல வெந்திருப்பிங்க.. வீடு போனா போகுது.. பொருள் போனா போகுது.. நாளைக்கு சம்பாதிச்சி வாங்கிக்கலாம்.. அதனால தைரியமா இருங்க.." என்று சொன்னார்கள் பலரும்.

யமுனா அபிராமியை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்.

"எந்த சாமி புண்ணியமோ நீ எங்க வீட்டுக்கு வந்தது.. நீ மட்டும் எழுந்து பார்க்காம இருந்திருந்தா இன்னேரம் இந்த குடும்பமே மொத்தமா அழிஞ்சிருக்கும்.. நல்லாருக்கணும் நீ.." என்றாள்.

அபிராமி தன் கடைகண்ணில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். "நம்மை அழிக்க நினைச்சவங்களை சும்மாவே விட கூடாது அத்தை.." என்றாள் கோபத்தோடு.

"எல்லாம் எங்க பெரியப்பா வேலையாதான் இருக்கும்.. கேஸ் தந்துட்டு வந்திருக்கோம்.. அந்த குடும்பத்துல இருக்கற மூணு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பினாதான் நாம நிம்மதியா தூங்க முடியும் போல.." என்றான் கார்த்திக்.

ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்தார் ஈஸ்வரின் அப்பா.

"சொத்து முழுசையும் சரி பாதியா கணக்கு போட்டிருக்கேன் முருகா.. பணமும் நகைகளும் இதுல இருக்கு.. நிலங்களை பட்டா பண்ண நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்துடு.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN